சனி, 1 ஆகஸ்ட், 2015

’சகலகலா வல்லவர்’ டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்
சகலகலா வல்லவர் என்று திரைத்துறையில் அழைக்கப்படும் டி.ராஜேந்தர் 1955 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள மாயவரம் அருகே உள்ளளையனூர் என்கிற கிராமத்தில் தேசிங்கு ராஜா உடையார், ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர். 

உடன் பிறந்தவர்கள் வாசு, பாண்டியன் என இரு சகோதரர்கள்... ஒரு சகோதரி. டி.ராஜேந்தரின் தந்தை தேசிங்கு உடையார் பாலம், ஆறு மதில் சுவர் கட்டுவதில் ஒப்பந்தக்காரராக இருந்தவர். இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அவரது கையால் சிறந்த ஒப்பந்ததாரர் என்கிற இரண்டாவது பரிசு பெற்றவர்.

டி,.ராஜேந்தர் இளையனூர் மற்றும் வானூரில் வளர்த்துள்ளார். மயிலாடுதுறை விசி கல்லூரியில் பி.., சிதம்பரம் அண்ணாமலை யுனிவர் சிட்டியில் எம்.. வரலாறு பிடித்தார்.

இவரது முதல் படம் ஒருதலை ராகம். முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருந்த அப்படம் வியாபாரம் ஆகாமல் பெரும் வலியோடு 1980 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அப்படத்தை ரசிகர்கள் வரவேற்று மாபெரும் வெற்றி படமாக்கி வசூலில் சரித்திர சாதனை படைக்க வைத்தனர். 

மேஜையில் தளம் போட்டு பாட்டுப் பாடி பட வாய்ப்பை பெற்ற திறமைக்கு சொந்தக்காரர் இவர். இப்படத்தில் இவர் எழுதி இசை அமைத்த அத்தனை பாடல்களும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது எழுதிய பாடல்கள்

அடுத்து இவர் இயக்கிய வசந்த அழைப்புகள் படத்தை ஜெப்பியார் தயாரித்தார். இந்தப் படத்தை அடுத்து வெளியான ரயில் பயணங்களில் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 

தொடர்ந்து காதல் கதைகளை படமாக தந்தவர் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து தங்கைகோர் கீதம் என்கிற படத்தை இயக்கினார். இந்தப் படமும் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இசையும் பாடல்களும் பெரிதும் வரவேற்பை பெற்றன. இதில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். 

அடுத்து இயக்கிய உயிருள்ள வரை உஷா, உறவைக் காத்த கிளி போன்ற படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. இப்படங்களில் நடிகராகவும் வலம் வந்தார். இப்படங்களின் பாடல்களுக்கு செட் அமைதிதிருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. 

அதன் பிறகு இவர் இயக்கிய படங்களில் அவரது மகன் சில்ம்பரசனுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி கதைகளை அமைத்தார். தாய் தங்கை பாசம், ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், காதல் அழிவதில்லை என்று வரிசையாக படங்களை கொடுத்தார். இந்தப் படங்களும் அவருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 

அவருடன் புதுமுகங்களை வைத்து சொன்னால் தான் காதலா,   மோனிசா என் மோனலிசா, வீராச்சாமி போன்ற பாடங்களையும் இயக்கினார்.

அவரது அறிமுகங்களான அமலா, நளினி, ஜோதி, ஜீவிதா, மும்தாஜ் போன்ற நடிகைகள் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றனர். 

இவரது படங்களில் குடிப்பது, புகைப்பது, வன்முறையை துண்டுவது போன்ற காட்சிகள் இருக்காது. எப்போதும் சமூகத்துக்கு தவறான கருத்துக்களை சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்

இவரது பாடல்களையும், இசையையும் ரசித்து ஒரு ரசிகராக இவரை பூக்களை பறிக்காதீர்கள் படத்திற்கு இசையமைக்க வைத்தார் தயாரிப்பாளர் தரங்கை சண்முகம். புதுமுகங்கள் நடித்த அப்படம் இவரது இசைக்காகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்கிறார் அவர். 

இவர் நடிக்காத சில படங்களுக்கும் இசையாமதிருக்கிறார் இவர். இவரது மகன் சிலம்பரசன் நடித்த வல்லவன் படத்தில் அம்மாடி ஆத்தாடி, ஒஸ்தி படத்தில் கலாசலா போன்ற பாடல்களையும் பாடி இருக்கிறார். 

நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர், கலை இயக்குனர், நடன இயக்குனர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், என பன்முக கலைஞர் இவர்.
இவரது திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும். என்பதுகளில் இவரது வசனத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது. படம் வெளியான பிறகு கதை வசன புத்தங்களே தனியாக விற்பனையானது . 

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 

2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக் கொண்டுள்ளார். 

டி.ராஜேந்தர், உஷா இருவருக்கும் காதல் தோல்வி இருந்ததாகவும், அந்த தோல்வியின் வலியை இருவரும் பகிர்ந்து கொண்ட போது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு அன்பு உருவாகி அதுதான் திருமணத்தில் முடிந்தது என்கிறார்கள் மூத்த சினிமா நிருபர்கள்.

இவர்களுக்கு சிலம்பரசன், குரளரசன் என்கிற இரு மகன்களும் இலக்கிய என்கிற ஒரு மகளும் உள்ளனர். மகள் இலக்கியாவை, ஆந்திராவைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவரின் மூத்த மகன் சிலம்பரசன் தமிழில் புகழ்பெற்ற முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இளைய மகன் குரளரசன், சிலம்பரசன் நடிக்கும் இது நம்ம ஆளு படத்தி மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் 

34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கிய வர், இப்போது ஒரு தலைக் காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார். அதீத  தன்னபிக்கையும் பலவகைத் திறனும்  கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர்

தன் தனித்தனி திறமைகளால் அந்தத் துறைகளில் மட்டும் முன்னுக்கு வந்தவரை விட அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்தவர் வர்.

"ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்பது ஒரு பழமொழி. இது இவருக்கு அப்படியே பொருந்தும்.

பின்னணி பாடகி பி.சுசீலா



இசை ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர் பின்னணி பாடகி பி.சுசீலா. இவர் ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம் – ஷேசாவதாரம் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர். இவருக்கு ஐந்து சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர்.

பள்ளியில் படிக்கும் பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய துவாரம் வேங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசைப் பயின்றார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’ சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற இவர், ‘ஆந்திரா பல்கலைக் கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில் ‘டிப்ளமோ’ முடித்தார்.

சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கிய இவரின் இசைத் திறமையைக் கண்டவர்  பண்டியாலா நாகேஸ்வர ராவ். இயக்குனர் கே.எஸ் பிரகாஷ்ராவ், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பாட வைத்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற எதுக்கு அழைத்தாய் என்கிற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார்.

பிறகு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் சிறிது காலம் பாடிய இவர், லஷ்மிநாராயணம் என்பவரிடம் தமிழ் கற்று 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்கிற படத்தில் ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்களை பாடினார். இந்தப் பாடல்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 

அதே ஆண்டில் எஸ்.வி பிரசாத் இயக்கிய மிஸ்ஸியம்மா படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.

‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன.

தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தின. ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும் அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்தது.

நாகேஸ்வரராவ், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் எனப் பல இந்திய மொழிகளில் அறுபது ஆண்டுகளாக 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இருக்கிறார் இவர். டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து 727பாடல்கள், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து 257 பாடல்கள் என பாடியுள்ளார் இவர்.

ஐந்து முறை தேசிய விருதுகள், ஆறு முறை ஆந்திர அரசின் விருதுகள், மூன்று முறை தமிழக அரசின் விருதுகள், இரண்டு முறை கேரள அரசின் விருதுகள் என பல விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதும் கிடைத்தது. ஆந்திர மாநில அரசால் ரகுபதி பெங்கையா விருது, தமிழக அரசால் கலைமாமணி விருது என பல கௌரவ விருதுகளையும் பெற்றவர் இவர். பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இவரது ரசிகையாக கௌசல்யா நடித்திருப்பர். அந்த ரசிகையை பார்க்க வரும் பாடகியாக நடித்திருக்கிறார் இவர்.

தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.

1957 ஆம் ஆண்டில் டாக்டர் மோகன்ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

மறக்க தெரிந்த மனதிலும் நினைக்க தெரிந்த பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர். தனது தேன் குரலால் பல இதயங்களை கொள்ளை கொண்ட இவர், நம் தமிழுக்கு கிடைத்த பெரும் வரம்.

’காதல் கோட்டை’ தேவயானி



நடிகை தேவயானி  1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர்.  இவரது தந்தை ஜெயதேவ் தாயார் லட்சுமி இவருக்கு வைத்த பெயர் சுஷ்மா.  கொங்கினி வகுப்பை சேர்ந்த  இவருக்கு நகுல், மயூர் என இரு தம்பிகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே பாடவும் நடிக்கவும் ஆர்வம் கொண்ட இவருக்கு இந்தியில் கோயல் என்கிற பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் பாதியிலேயே நின்றுவிட பிறகு வங்களா மொழியில் சாத் பென்சொமி என்கிற படத்தில் 1993 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு மலையாளத்தில் உருவான ’கின்னாரி புழையோரம்’ படத்தில் நடித்தார்.  இவர் மூன்றாவதாக நடித்த படம் ’தொட்டா சிணுங்கி’. தமிழில் உருவான இந்தப் படத்தை கே.எஸ்.அதியமான் இயக்கி இருந்தார். அதன் பிறகு இந்தியில் ஒரு படம், மலையாளத்தில் இரண்டு படங்கள் என நடித்து வந்தவரை பிரசாந்த் நடித்த கல்லூரி வாசல், அஜித் நடித்த காதல் கோட்டை ஆகிய இரு படங்களும் இவரை தமிழில் நிரந்தர நடிகையாக்கியது.

காதல் கோட்டை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இவருக்கும் நல்ல மரியாதையை ஏற்படுத்தி தந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினையும் பெற்று தந்தது. அதன் பிறகு கமலுடன் தெனாலி, பஞ்சதந்திரம், சரத்குமாருடன் சூரியவம்சம், பட்டாளி,  சத்யராஜுடன் என்னம்மா கண்ணு, செமரகளை, முரளியுடன்  பூமணி,  கிழக்கும் மேற்கும், பார்த்திபனுடன் சொர்ணமுகி, புதுமைப்பித்தன், அஜித்துடன் காதல் கோட்டை, நீ வருவாய் என, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ், விக்ரமுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என  எழுபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி ஆகிய ஆறு மொழிகளிலும் நடித்துள்ள இவர், சின்னத்திரையிலும் அழுத்தமான முத்திரைப் பதித்திருக்கிறார்.

காதல் கோட்டை, சூர்யவம்சம், பாரதி ஆகிய படங்களுக்காக மூன்று முறை தமிழக அரசின்  சிறந்த நடிகைக்கான விருது பெற்றவர், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வாங்கி இருக்கிறார். இவரது நடிப்பு திறமை  பாராட்டி பல அமைப்புகள் பரிசு கேடயங்கள் அளித்து கௌரவித்திருக்கின்றன.

நீ வருவாயன படத்தை இயக்கிய இயக்குனர் ராஜகுமாரன், தன்னை காதலிப்பதை அறிந்ததும், அவரை காதலித்தார். இந்த காதலுக்கு அவரது தாயார் லட்சுமி சம்மதிக்காததால், நண்பர்கள் முன்னிலையில் திருத்தனியில் 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இப்போது இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவர், கணவரின் இயக்கத்தில் காதலுடன், திருமதி தமிழ் ஆகிய இரு படங்களை தயாரித்தார். தனக்கு பெயர் வாங்கி கொடுத்த காதல் கோட்டை படத்தின் கமலி வேடத்தின் பெயரை தனது வீட்டுக்கு ’கமலி இல்லம்’ என வைத்திருக்கும் இவர்,  மகள் இனியா பெயரில் டப்பிங், ரெக்காடிங் ஸ்டுடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
ஆசிரியை வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பிய இவர் முறைப்படி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார். இப்போது சென்னையில் உள்ள ஒரு பள்ளியில்  45 குழந்தைகளுக்கு  ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நடிப்பும் படிப்பும் இந்த தேவயானிக்கு பிடித்த தொழில். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது நம்மிடமே இருக்கிறது என்கிறார் இவர்