படிப்பதில் அவருக்கு அதிக ஆர்வம். ஆனால், தன்னுடைய தந்தையாருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதால், அவருக்கு உதவியாக தொழிலில் ஈடுபட எட்டாம் வகுப்புடன் தன் பள்ளி படிப்பை நிறுத்திக் கொண்டார். தந்தையின் ஏவி அண்ட் சன்ஸ் என்ற கடையில் வேலை பார்த்தாலும், ஆங்கில பத்திரிகையை படித்து தனது ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டார்.
அவரது கடையில் கார் மற்றும் சைக்கிளின் உதிரிபாகங்கள் விற்கப்பட்டன. மேலும் கிராமப்புறங்களில் மிகவும் அரிதாக கிடைக்கும் ஹார்லிக்ஸ், புகைப்பட பிலிம் ரோல்கள், கிராமபோன் ரெக்கார்டுகள், சாக்லேட்டுகள், மருந்துகள் போன்ற பொருட்களையும் விற்பனை செய்தார். காரைக்குடியில் முதல் முறையாக டியூப் லைட்டை அறிமுகப்படுத்திய வரும் அவரே. இந்த பொருட்களை விற்பனைக்காக சென்னையிலிருந்து கொள்முதல் செய்தார். தொழிலை விரிவுப்படுத்துவது தொடர்பாக அந்த நாளிலேயே அவர் மெட்ராஸ் கல்கத்தா பம்பாய் போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு அங்கே கண்ணில் படும் அல்லது புதிதாக அறிமுகமாகும் பொருட்களை உடனே காரைக்குடிக்கு கொன்டு வந்து அறிமுகம் செய்வார்.
கிராமபோன் ரெக்கார்டுகளின் தென்னிந்திய விற்பனை உரிமையை பெற்ற மெய்யப்ப செட்டியார், அதன் பின்னர் சென்னை மவுண்ட் ரோட்டில் 1932 ஆண்டு செப்டம்பரில் `சரஸ்வதி ஸ்டோர் ரெக்கார்டிங் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கர்நாடக சங்கீத உரிமைகளைப் பெற்று இசைத்தட்டுகளை வெளியிட்டார். அந்த முயற்சி வெற்றித் தேடித்தர திரைப்படம் எடுக்கும் தொழிலில் ஈடுபட விரும்பினார்.
அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவில் திரைப்படம் எடுப்பதற்குரிய ஸ்டூடியோவோ, வசதிகளோ இல்லை. பம்பாய், கல்கத்தா சென்று படம் எடுக்க வேண்டியதாக இருந்தது. மெய்யப்ப செட்டியார் கல்கத்தா சென்று அங்கு நீயூ தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் படபிடிப்பு தளம் ஒன்றை வாடகைக்கு எடுத்து செட்டு போட்டு அதில் கே.எஸ்.அனந்த நாராயணன், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.பவானி பாய் உட்பட பலர் நடிப்பில் அல்லி அர்ஜுனா என்கிற ஒரு படத்தை தயாரித்து, இயக்கினார். 1935ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. உடனே எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.ரத்னப்பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் நடிப்பில் ரத்னாவளி என்கிற படத்தை தயாரித்தார். புரபுல்லா கோஷ் இயக்கிய அந்தப் படமும் நஷ்டத்தை கொடுத்தது.
அதன் பிறகு கல்கத்தாவிலிருந்து சென்னை திரும்பியவர் நாமே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன என்ற முடிவில், இரு நண்பர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு சென்னை சாந்தோமில் விஜயநகர பேலஸில் பிரகதி ஸ்டுடியோவைத் தொடங்கினார். அங்கு சிறுவயது டி.ஆர்.மகாலிங்கத்தை அறிமுகப்படுத்தி மேலும் டி.பி.ராஜலட்சுமி, சி.வி.வி.பந்துலு நடிப்பில் நந்தகுமார் படத்தை தயாரித்தார். அதன் பிறகு டி.ஆர்.ராமச்சந்திரன், மாதுரிதேவி நடிப்பில் வாயாடி, டி.ஆர்.ராமச்சந்திரன், செருகளத்தூர் சாமா நடிப்பில் திருவள்ளுவர், டி.ஆர். ராமச்சந்திரன், ஆர்.பத்மா நடிபில் சபாபதி போன்ற படங்களை தொடர்ந்து தயாரித்தார். ஆனால், அந்த நிறுவனத்தின் வெற்றிப் படைப்பாக வெளிவந்த படம் சபாபதி மட்டுமே.
அதன் பிறகு சுப்பையா நாயுடு, நாகேந்திர ராவ் நடிப்பில் தெலுங்கு மொழியில் பூகைலாஷ், கன்னட மொழியில் வசந்த சேனா படங்களை தயாரித்தவர், சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் நாகர்கோவில் மகாதேவன் ஹீரோவாகவும், ஆர்.பத்மா ஹீரோயினியாகவும் மற்றும் கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம் நடிப்பில் என் மனைவி என்கிற படத்தை தமிழில் தயாரித்தார்.
அடுத்து மீண்டும் படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஸ்ரீவள்ளி என்கிற படத்தின் கதை எழுதி டி ஆர் மகாலிங்கம் முருகனாகவும், குமாரி ருக்மணி... அதாவது நடிகை லட்சுமியின் தாயார் வள்ளியாகவும் நடிக்க, மேலும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், டி.ஆர். ராமச்சந்திரன், டி.ஏ.மதுரம் நடிப்பில் சுதர்சனம் இசையில் இயக்கினார். டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி சொந்த குரலில் பாடல்களை பாடி இருந்தனர். படம் முழுவதையும் பார்த்த போது படத்தில் ருக்மணியின் பாடல்கள் எடுப்பாக இல்லை என்று பிரபல பாடகி பி. ஏ. பெரியநாயகியுடன் டி. ஆர். மகாலிங்கத்தை மீண்டும் இணைந்து பாட வைத்து ருக்மணி பாடல்களுக்கு பெரியநாயகியின் குரலை பயன்படுத்தி படத்தை வெளியிட்டார். அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலிலும் சாதனைப் படைத்ததது.
அப்போது நடந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் கடுமை இந்தியாவையும் வெகுவாக பாதித்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக மின்சாரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. ஓரளவு மின்சாரம் வழங்கப்பட்டது. ஆறு மணிக்கு மேல் எங்குமே மின்சாரம் இல்லை என்ற நிலைமையாயிற்று. இதனால், சினிமா தயாரிப்பது முதற்கொண்டு எல்லா தொழில்களும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் பிரகதி பிக்சர்ஸில் பங்குதாரர்களாக இருந்த மெய்யப்ப செட்டியாரின் நண்பர்கள் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டார்கள். இதனால் படக் கம்பெனியின் லாபக் கணக்கு என்ன என்பதை தங்களுக்கு தெரிவித்து அதை பிரித்து கொடுக்க வேண்டும் என்று நெருக்கினார்கள். அதனால், பங்குதாரர்களின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிடடார், மெய்யப்ப செட்டியார்.
காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கு இடையில் உள்ள ஒரு சிறிய கிராமம் தேவகோட்டை ரஸ்தா. ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் அங்கு தகரத்தாள் கூரை வேய்ந்த ஒரு நாடகக் கொட்டகையை அமைத்திருந்தார். அதில் ஸ்டுடியோ அமைத்து திரைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்த செட்டியார், அதை வாடகைக்கு எடுத்து ஏவி.எம். ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அங்கே நாம் இருவர் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் கதாநாயகனாக நடித்தார். ஜெயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமானார். வி.கே.ராமசாமி அப்பா கதாபாத்திரத்தில் அறிமுகமானார். படம் முடிந்தபோது இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்த மகிழ்ச்சியை நாம் இருவர் படத்தில் வெளிப்படுத்த நினைத்த செட்டியார், ஆடுவோமே பல்லு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று என்ற பாடலை டி.கே.பட்டம்மாள் பாட, குமாரி கமலா ஆடுவது போல் படம் பிடித்தவர், வெற்றி எட்டுத்திக்கும் என்று கொட்டுமுரசே என்ற பாரதியாரின் பாடலையும் டி.கே. பட்டம்மாள் பாட, முரசுகளின் மேலே நின்று கொண்டு இரண்டு பெண்கள் ஆடுவது போல படமாக்கினார். மேலும் மகாத்மா காந்தியின் புகழைப் பாடும் விதமாக காந்தி மகான் என்ற பாடலை எம்.எஸ். ராஜேஸ்வரி பாட குமாரி கமலா நடனம் ஆட படமாக்கி படத்தில் இணைத்து வெளியிட்டார்.
சுதந்திரம் அடைந்த மகிழ்ச்சியில் இருந்த மக்களின் மனநிலையை எதிரொலிப்பதாகவே இந்த பாடல்கள் அமைந்திருந்ததால் படம் பிரமாண்டமான வெற்றி பெற்றது. அதன் பிறகு வேதாள உலகம் என்ற படத்தை தேவகோட்டை ரஸ்தாவிலேயே படமாக்கி வெளியிட்டார். இந்த படமும் நன்றாக ஓடியது.
இந்தியில் வெளியாகி வெற்றிப் பெற்ற ராமராஜ்யம் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். முதல்முறையாக டப்பிங் செய்யப் பட்ட அந்தப் படத்தின் வசனங்களை தேவ நாராயணன் எழுதி இருந்தார். மகாத்மா காந்தி பார்த்து பாராட்டிய அந்தப் படம் தமிழிலும் நன்றாக ஓடியது.
சுதந்திர இந்தியாவில் முன்போல் கெடுபிடிகள் இல்லாமல் இயங்கும் சகஜ நிலை நிலவியது. அதனால், சென்னைக்கு திரும்பி வந்து ஏவிஎம் ஸ்டுடியோவை நிறுவி படம் எடுக்கலாம் என்று முடிவு செய்த செட்டியார், வடபழனியில் குதிரைலாயம் வைத்திருந்த ஒருவரிடம் இடம் வாங்கி காடாக கிடந்த நிலப்பகுதியை சீரமைத்து ஏவிஎம் ஸ்டுடியோவை தொடங்கினார். தற்போது கோடம்பாக்கம் பகுதியில் ரயில்வே பாதையின் மேல் உள்ள மேம்பாலம் அப்போது இல்லை. அங்கே ஒரு ரயில்வே கேட்டு அமைக்கப்பட்டிருக்கும். அந்த கேட்டை தாண்டினால் ஒரே காடாகத்தான் இருக்கும். அந்த காட்டின் நடுவே ஒரு வண்டி பாதை இருக்கும். அவ்வளவுதான். அந்த ரயில்வே கிராசிங் தாண்டி சென்றால் அங்குள்ள இடங்களை கோடம்பாக்கம் என்று தான் சொல்வார்கள். சாலிகிராமம், விருகம்பாக்கம் என்றெல்லாம் அப்போது இல்லை. அப்படி காடாக இருந்த இடத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவை கட்டி அங்கு வாழ்க்கை படத்தை தயாரித்து, இயக்கினார். அந்தப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாகவும், வைஜெயந்தி மாலா நாயகியாகவும் நடித்தனர்.
வாழ்க்கை படத்தின் வெற்றி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் நூறு படங்களுக்குமேல் தயாரித்தார். அகில இந்திய அளவில் ஏவிஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரபலமானது. எந்தமொழியில் படம் எடுத்தாலும் அந்த மொழி கலைஞர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் தங்கி பணிபுரிய வைத்தார். அது போல மற்ற படங்களின் படப்பிடிப்புக்கு ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள அரங்குகள் வாடகைக்கு விடப்பட்டன. அமெரிக்காவின் ஈஸ்ட்மென்ட் கலர் பிலிம் வாங்க வேண்டுமென்றால் அதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. டாலர் இல்லாமல் படம் எடுக்க முடியாத நிலை இருந்தது. அப்போது கிழக்கு ஜெர்மனி ஆர்வோ என்னும் கலர் பிலிமை அறிமுகப்படுத்தி அதற்கு இந்தியாவின் ஏஜெண்டாக மெய்யப்ப செட்டியாரை நியமித்தது. இதனால், கருப்பு வெள்ளை படங்களை தயாரித்த நிறுவனங்கள் வண்ண படங்கள் தொடர்ந்து எடுக்கும் வாய்ப்பினை பெற்றன.
தென்னிந்திய சினிமாவை உலக அளவுக்கு கொண்டு சென்ற ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார், தான் தயாரித்த படங்கள் மூலமாக ஏழு முறை ஜனாதிபதி விருது பெற்றிருக்கிறார். 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி அவர் மறைந்தாலும் அவருக்கு பிறகு அவரது மகன்கள் முருகன், குமரன், சரவணன், பாலசுப்பிரமணியம் ஆகிய நால்வரும் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டனர். இப்போது அவரது பேரன்கள், கொள்ளு பேத்திகள் என அவர் போட்டு கொடுத்த அந்த பாதையில் நீண்ட பயணமாக தொடர்கிறார்கள்....