1926 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், "டான்டுவான்" என்கிற சிறிய படத்தை முதல் பேசும்
படமாக தயாரித்தது. பயிற்சியின் முயற்சியாக விளைந்த அந்த குறும் படத்தின் வெற்றி,
அடுத்த ஆண்டே "தி ஜாஸ் சிங்கர்" என்ற படத்தை தயாரிக்க
வைத்தது.
முதல் முழு நீளப் பேசும் படமான "தி ஜாஸ்
சிங்கர்", 1927 அக்டோபர் 5 ஆம் தேதி திரையிடப்பட்டது.
திரையில் நட்சத்திரங்கள் ஆடுவதையும், பாடுவதையும், பேசுவதையும் கண்டு ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள். இந்த படத்தின்
வெற்றியைத் தொடர்ந்து ஒலி-ஒளி படங்கள் பல தயாராக தொடங்கின. ஊமை படங்களை திரையிட்டு
வந்த திரையரங்குகள் பேசும் படங்களை திரையிட தங்களைத் தயார் படுத்திக் கொண்டன.
ஹாலிவுட்டில் யுனிவர்சல் ஸ்டுடியோவில்
தயாரிக்கப்பட்ட ‘மெலொடி ஆஃப் லவ்’ எனும் படம் 1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
கல்கத்தாவில் இருந்த எல்வின்ஸ்டன் பிக்சர்ஸ் பேலஸில் திரையிடப்பட்டது. இந்த
திரையரங்கின் உரிமையாளர் ஜெ.ஜெ.மதன், பேசும் படம் தயாரிக்கும் பணியை
கல்கத்தாவில் தொடங்கினார். ஆனால், அவருக்கு முன்பே
இந்தியாவின் முதல் பேசும் படம் பம்பாயில் தயாராகிக் கொண்டிருந்தது.
ஸ்டார் பிலிம் கம்பெனி, மெஜஸ்டிக் பிலிம் கம்பெனி, ராயல் ஆர்ட்
ஸ்டுடியோ, இம்பீரியல் பிலிம் கம்பெனி சார்பாக 130 படங்களை
தயாரித்தவர், அர்த்ஷிர் எம்.இரானி. இவர் 1929 ஆம் ஆண்டில்
பம்பாய் திரையரங்கு ஒன்றில் ‘ஷோ போட்’ என்கிற பேசும் படத்தை கண்டார். உடனே அவருக்கு
பேசும் படம் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது.
அவரே உரையாடல் எழுதி, பாடலுக்கு மெட்டு அமைத்தார். ஆர்மோனியம், தபேலா, வயலின் இந்த மூன்று இசைக் கருவிகள் மட்டுமே
வாசிக்கப்பட்டன. படப்பிடிப்பின் போது இந்த இசைக் குழுவினர் ஒவ்வொரு
ஷாட்டிற்கும் வாசித்தனர். படம் பிடிக்க 6
விளக்குகள் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டன. நடிகர்கள் உருது மற்றும் இந்தி
மொழிகளில் பேசினார்கள். 40 ஆயிரம் ரூபாய் செலவில் உருவான அந்தப் படத்திற்கு ‘ஆலம் ஆரா’ என்று பெயர் வைத்து
இந்தியாவின் முதல் பேசும் திரைப்படமாக 1931ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி தனது
சொந்த திரையரங்கமான மெஜஸ்டிக் சினிமாவில் திரையிட்டார்.
இந்த படத்தில் மொத்தம் பதின்மூன்று பாடல்கள்
இடம்பெற்றிருந்தன. பேசும் படம் பார்க்கும் ஆவலில் மக்கள் அலை அலையாக வந்து
குவிந்தனர். நான்கு அணா டிக்கெட் பிளாக் மார்க்கெட்டில் நான்கு ரூபாய்க்கு விற்றது.
படம் வெற்றிகரமாக எட்டு வாரங்கள் ஓடியது.
உடனே அவர் ‘நூர்ஜகான்’ எனும் படத்தை இந்தி, ஆங்கிலம் இரு மொழிகளில் எடுத்தார். இந்தியாவில் தயாரான முதல்
ஆங்கில படம் இதுவாகும். இந்தியாவிற்கு இந்தி, ஆங்கிலம் முதல்
பேசும் படங்கள் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு,
குஜராத்தி, மராத்தி, பர்மிஸ்,
புஷ்டு, பார்சியன் ஆகிய மொழிகளிலும் முதல்
பேசும் படம் தந்த பெருமையை பெற்றவர், அர்த்ஷிர் எம்.இரானி.
‘ஆலம் ஆரா’ படம் வெளியான சில வாரங்களில் 1931
ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ‘ஜமாய் ஷஸ்டி’ என்கிற முதல் வங்காள படத்தை
மதன் தயாரித்தார். மேலும் ஒரு இந்திப் படத்தையும், நான்கு
வங்காளப் படத்தையும் தயாரித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக