புதன், 10 ஆகஸ்ட், 2016

பஞ்சு அருணாசலம் வாழ்க்கை வரலாறு

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர். 1941 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.

பல வெற்றிப் படங்களை தமிழ்த் திரையுலகிற்கு தந்த படஅதிபர் ஏ.எல்.சீனிவாசன், புகழ்ப் பெற்ற பல பாடல்களை தந்து தமிழ்த் திரையுலகின் முன்னோடியாக விளங்கும் கவிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரும் இவரது சித்தப்பாக்கள்.

பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை விரும்பிப் படிப்பது, பாடல்களை ரசித்துப் பாடுவது என கலைகளில் ஆர்வம் உள்ளவராக இருந்த இவர்,  பியூசி முடித்தவுடன் சென்னைக்கு வந்தார்.

பெரிய சித்தப்பாவான பட அதிபர் ஏ.எல்.சீனிவாசனிடம், தனது கதை எழுதும் ஆர்வத்தை சொல்லி, பத்திரிகையில் சேர விரும்புவதை தெரிவித்திருக்கிறார். முதலில் நமது ஸ்டுடியோவில் வேலை பார். பிறகு கதை எழுத போகலாம் என்று, அப்போது அவர் குத்தகைக்கு நடத்தி வந்த பரணி ஸ்டூடியோவுக்கு இவரை அனுப்பி வைத்தார்.

இவரின் திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடப்பட்டது அங்குதான்.
பெரிய சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த பஞ்சு அருணாசலம், சின்ன சித்தப்பா கண்ணதாசன் நடத்தி வந்த 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் சென்றார்.
இலக்கிய ஆர்வமும், கதை எழுதும் தாகமும் கொண்ட இவருக்கு அந்த பத்திரிகை சூழ்நிலை பிடித்திருந்தது. சித்தப்பா கண்ணதாசனிடம் தனது ஆர்வத்தை சொல்ல, இவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார், கண்ணதாசன்.

அதன் பிறகு கண்ணதாசன் எழுதிய பல பாடல்களுக்கு உதவியாளராக இருந்தார்.  பனிரெண்டு ஆண்டுகள் அவரிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலம், 1962-ல் வெளியான 'சாரதா' படத்துக்கு பாடல் எழுதினார். 'மணமகளே மருமகளே வா வா' என்ற பாடல் இவருக்கு பெரிய புகழைப் பெற்று தந்தது. அதன் பிறகு கண்ணதாசனின் வாழ்த்துக்களுடன் பாடல்கள் எழுதினார்.

பட அதிபர் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்தி தயாரித்த 'ஹலோ பார்ட்னர்' என்கிற படத்திற்கு கதை எழுதினார். கதாநாயகனாக நாகேஷ் நடித்தார். மீண்டும் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்தி தயாரித்த 'கல்யாணமாம் கல்யாணம்.' படத்திற்கும் கதை எழுதினார். நகைச்சுவைப் படமான இதில் கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், 'சோ' முதலானோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது.

'பிலிமாலயா' ராமச்சந்திரனும், பஞ்சு அருணாசலமும் சேர்ந்து, 'உறவு சொல்ல ஒருவன்' என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை தயாரித்தார்கள். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 'மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை எழுதினார்.

இவரிடம் உதவியாளராக இருந்த செல்வராஜ் எழுதிய கதைக்கு இவர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார். அன்னக்கிளி என்கிற பெயரில் வெளியான இந்தப் படம், பெரும் வெற்றிப் பெற்று இருநாட்கள் ஓடியது. சிவக்குமார், சுஜாதா நடிக்க தேவராஜ் மோகன் இயக்கிய அந்தப் படத்தில் இசைஞானி இளையாராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

ரஜினிகாந்த் நடித்த ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா, கமல் ஹாசன் நடித்த கல்யாணராமன், ஜப்பானில் கல்யாண்ராமன், மைக்கேல் மதன காமராஜன், பாக்யராஜ் இயக்கி நடித்த ராசுக்குட்டி, சரத்குமார் நடித்த ரிஷி, விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர், சிவக்குமார் நடித்த ஆனந்தராகம், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார், சேரன் கதாநாயகனாக அறிமுகமான சொல்ல மறந்த கதை, ரகுமான் நடித்த தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களை தனது பி.ஏ.ஆர்ட்ஸ் பட நிறுவனம் மூலம் தயாரித்தார் இவர்.

சிவாஜி நடித்த கவரிமான் படத்திற்கு கதை, பாடல்கள் எழுதிய இவர், சிவாஜி நடித்த வாழ்க்கை, அவன்தான் மனிதன், ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, தம்பிக்கு எந்த ஊரு, பாயும் புலி, எங்கேயோ கேட்டக் குரல், முரட்டுக்காளை, கமல் நடித்த சிங்காரவேலன், உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே, சகலகலா வல்லவன், மீண்டும் கோகிலா, உல்லாசப் பறவைகள், எல்லாம் இன்ப மயம், விஜயகாந்த் நடித்த எங்கிட்ட மோதாதே என முப்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதினார். சில படங்களுக்கு கதை, சிலப் படங்களுக்கு வசனமும் எழுதினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ள இவர், புதுப்பாட்டு, கலிக்காலம், தம்பிப் பொண்டாட்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் கதை வசனம் எழுதிய தயாரித்த எங்கேயோ கேட்டக் குரல் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான முதல் பரிசும், தங்கப் பதக்கமும் கிடைத்தது. அதே போல பாண்டியன் படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான விருது பெற்றார் இவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ள இவர், இன்று காலமானார். இவருக்கு வயது 75.

இவருக்கு மீனா என்கிற மனைவியும், சண்முகம், சுப்பிரமணியம் என்கிற இரு மகன்களும், கீதா, சித்ரா என்கிற இருமகள்களும் உள்ளனர். இதில் சுப்பு என்கிற சுப்பிரமனியன், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணனாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

-     தொகுப்பு : ஜி.பாலன்