ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

நஷ்டத்தை ஏற்படுத்தாத இயக்குநர். கே.எஸ்.ரவிக்குமார்.



இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் 1958 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி திருவண்ணாமலை கே.சுப்பிரமணி, ருக்மணி அம்மாள் தமபதியருக்கு மகனாக பிறந்தவர். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னை மந்தைவெளியில்.

ரவிக்குமாரின் தந்தை பெரிய தொழிலதிபராக இருந்ததால் உதவி இயக்குனராக இருந்த காலத்தில், அப்போது இருந்த மற்ற உதவி இயக்குனர்கள் போல பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கவில்லை இவர். பைக்கில்தான் படப்பிடிப்புக்கு செல்வார்.

இவர் முதலில் உதவி இயக்குநராக வேலை செய்த பல படங்கள் வெளியாகவில்லை.  அதன் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரியின் நட்பு கிடைக்க, அவர் தயாரித்த ’புதுவசந்தம்’ படத்தில் இயக்குநர் விக்ரமனிடம் இணை இயக்குனராக வேலைப் பார்த்தார். புது வசந்தம் படத்தின் வெற்றி இயக்குநர், பட நிறுவனம் என அனைவருக்குமான வெற்றியாக அமைந்தது.

ஒரு கன்னட படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, இவரை அதற்கு தமிழில் திரைக்கதை எழுதச் சொல்லியிருக்கிறார். இவரும் ஆர்வத்துடன் எழுதி கொடுக்க, படத்தையும் இவரையே இயக்க சொல்லியிருக்கிறார் சௌத்ரி. அதுதான் இவரது முதல் படமான புரியாத புதிர்.

அந்தப் படத்தின் மூலம் திரில் படங்கள் ஒரு சிறு பிரிவையே கவரும் என்பதை உணர்ந்த இவர், ஒரு படம் வெற்றியடைய வேண்டுமென்றால் பெருவாரியான மக்களை சென்றடைய வேண்டும். அனைவரையும் கவர வேண்டும் என்றால் நகைச்சுவையும் செண்டிமெண்டும் அவசியம் என்று முடிவு செய்தார்.

சரத்குமார் முதன் முறையாக கதாநாயகனாக நடிக்க, ‘சேரன் பாண்டியன்’ படத்தை இயக்கினார். அதில் ஆரம்பித்த இவரது வெற்றி பயணம், கிராமத்து படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்தார்.

இவருடைய பத்தாவது படமான நாட்டாமை அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றி, இவருக்கு ரஜினியை வைத்து முத்து படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. முத்து, இவரை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக ஆக்கியதோடு மட்டுமில்லாமல், ரஜினியையும் ஜப்பான் வரை கொண்டு சென்றது.

ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவதையே வாழ்நாள் சாதனையாக எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர்கள் மத்தியில், ரஜினியை வைத்து மூன்று படங்கள் இயக்கியது மட்டுமில்லாமல், அவருடைய நெருங்கிய நண்பராகவும் ஆனார், ரவிக்குமார்.

அவ்வை சண்முகியில் ஆரம்பித்து தசாவதாரம் வரை நான்கு படங்கள் கமலை வைத்து இயக்கியிருக்கிறார் இவர். தசாவதாரம் வெற்றியில் கமல் பிரமாண்டமாக முன்னணியில் இருந்தாலும், பின்னணியில் ரவிக்குமாரின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.
படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் வெற்றியின் மேல் பெரும்பாலோர் வைத்திருந்த நம்பிக்கைக்கு காரணம், ரவிக்குமார். இந்த படத்தை இதை விட குறைவாக ரவிக்குமாரை தவிர வேறு யாராலும் எடுக்க முடியாது என்று படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதுதான் ரவிக்குமாரின் பலம்.

ரஜினிக்கு நண்பர் என்றால், கமலுக்கு இவர் சகோதரன்.

நடிகர் சரத்குமாரும் இவரும் சினிமாவில் ஒன்றாக வளர்ந்தவர்கள். அதனாலயோ என்னவோ, இவர்களது காம்பினேஷன் நன்றாக ஒர்க அவுட் ஆகும்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என இரு தலைமுறையின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் இவர். நடிக்கும் நடிகரை சரியாக, முழுமையாக பயன்படுத்துவார். நன்றாக வேலை வாங்குவார். அஜித் நடித்த வில்லன், வரலாறு, இரண்டு படங்களிலுமே அவரை வித்தியாசமான வேடத்தில் நடிக்க வைத்திருந்தார்.

இவர் ஆரம்பக்காலத்தில் எடுத்த படங்களில் பஞ்சாயத்து, தண்டனை, மாலை பறந்து வந்து நாயகன் மேல் விழுவது, தாலி பறந்து சென்று நாயகி மேல் விழுவது போல செண்டிமெண்டாக அமைந்திருந்த காட்சிகள், பெண்களை பெரிதும் கவர்ந்தது.

இவர் கதை எழுதுவது இல்லை. மற்றவர்களின் கதையை ஒரு குழு வைத்து விவாதித்து படம்மாக்குவார். ஒரு படத்தில் தேவா, இன்னொரு படத்தில் வித்யாசாகர், இன்னொன்றில் ரஹ்மான், மற்றொன்றில் யுவன், என இளையராஜாவில் இருந்து யுவன் வரை, பல இசையமைப்பளர்கள் இசையிலும் படம் இயக்கி இருக்கிறார்.

அதேப் போல் ஆரம்பத்தில் கவுண்டமணி, பின்பு, வடிவேலு, விவேக் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. ரமேஷ் கண்ணா கண்டிப்பாக அவரது படத்தில் இருப்பார்.

காட்சி ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காக மோதிர கையால் குட்ட மாட்டார். கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்து விடுவார். சிவாஜி, ரஜினி என்று இரு இமயங்களை ஒன்றாக வைத்து படையப்பா படத்தை இயக்கியது அவரது வாழ்நாள் சாதனை.

ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர் என்று சொல்வார்கள். அதற்கு, ரவிக்குமார் ஒரு உதாரணம். பிரச்சினைகளின் போது முன்னால் நிற்பவர்களில் ஒருவர் அவர். சமுத்திரம் படத்தின் மைசூர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பிரச்சினையின் போது முன்னால் நின்று அனைவரையும் வண்டியேற்றி விட்டு, கடைசியாக அந்த இடத்தில் இருந்து வந்தவர் இவர்.

இவரது வளர்ச்சி படிப்படியானது. சிறு கதாநாயகர்களை வைத்து இயக்கத்தை ஆரம்பித்தவர், தமிழின் உச்ச நடிகர்களை சிறப்பாக கையாளுபவர் என்று பெயரெடுக்கும் அளவுக்கு திரையுலகில் முன்னேற்றத்தை கண்டவர்.

இளைஞர்களுக்கு நகைச்சுவை, பெண்களுக்கு செண்டிமெண்ட் என்று வெற்றி படங்களாக, தவறும் பட்சத்தில், ஆவரேஜ் படங்கள் என கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத இயக்குநராக இருந்திருக்கிறார்.

நாட்டாமை படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றுருக்கிறார் இவர்.

இவருடைய மனைவி பெயர் கற்பகம். இவர்களுக்கு ஜனனி, மாளிகா, ஜஸ்வந்தி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.