செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நடிகை சுஜாதா வாழ்க்கை வரலாறு

100-க்கும் மேற்பட்ட படங்களின் நாயகி; 200-க்கும் அதிகமான படங்களில் மனதில் நிற்கும் பலவித துணை கதாபத்திரங்கள், திரையில் பல சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடி. சிறந்த நடிகைக்கான பல மொழி விருதுகள். நல்ல நடிகை என்கிற சிறப்பான புகழ் என்று வாழ்ந்த நடிகை சுஜாதா, 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி தென்இலங்கையின் தெல்லிப்பழையில் சங்கரன் மேனன் – சரஸ்வதி தம்பதிக்கு மகளாக பிறந்தவர்.  

1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் சுஜாதாவின் தந்தை சங்கர மேனனும் ஒருவர். சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்த சங்கரமேனன், 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்பித்தார். பிறகு காலிக்கு சென்றார்.

காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில் ஆரம்ப கல்வியைக் கற்ற சுஜாதான் 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் அங்கு எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார்.

ஜோசி பிரகாஷ் என்கிற நடிகர் சுஜாதாவை முதன் முதலாக மேடை நாடகமான போலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல,  திரையுலகத்திற்கும் தபாஸ்வினி என்ற படத்தில் அறிமுகப்படுத்த உதவினார். பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த அந்த மலையாளப் படத்தை கிருஷ்ணன் நாயர் இயக்கினார். 1971 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது.

அதன் பிறகு மலையாளத்தில் பல படங்களில் நடித்தவரை தமிழுக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். மலையாளத்தில் ‘ஏர்ணாம்குளம் ஜங்ஷன்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த போதுதான் கே.பாலச்சந்தரின் கண்களில் பட்டார், சுஜாதா.  

1974ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர் கதை படம் சுஜாதாவைச் ஒரு சிறந்த நடிகையாகத் தமிழ் திரையுலகில் கவனிக்க வைத்தது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளியான அந்தப் படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்பமுடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு பிரமிக்க வைத்தது.

1976ல் ஆயிரத்தில் ஒருத்தி, மயங்குகிறாள் ஒரு மாது, ஒரு ஊதாப்பு கண் சிமிட்டுகிறது ஆகிய படங்களுக்கு பிறகு வெளியான அன்னக்கிளி படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்தப் படத்தில் இளையராஜாவின் பாடலும், சிவக்குமார், சுஜாதாவின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. `மச்சானைப் பார்த்தீங்களா' எனக் கிராமத்துப் பெண் அன்னமாக வாழைத் தோப்புக்குள்ளும், மலை மேடுகளிலும் ஆடிப்பாடிப் பட்டித்தொட்டி எங்கும் புகழ்பெற்றார்.

1977-ல் மீண்டும் கே.பாலசந்தரின் இயக்கத்தில் 'அவர்கள்' படத்தில் நடிக்கிறார். அந்த அனுபமா, வெளிப்படையானவள். அதனால் உண்டாகும் இல்லறப் பிரிவும் இறுதியில் ரயில் பயணத்தின் போது துடிக்கும் தாய் மனத் தவிப்பும் இவரை இன்னும் தேர்ந்த நடிகையாக அடையாளப்படுத்தியது.

சுஜாதா தமிழ் திரைக்கு அறிமுகமாகும்போது தோற்றத்தில் மெச்சூரிட்டி இருந்தது. குடும்பத்தலைவி, வக்கீல், டாக்டர், பழிவாங்கத் துடிக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண், குணச்சித்திர வேடங்கள் அவருக்கு ரொம்பவும் கை கொடுத்தன.

தொழில் அலட்சியம் என்பது சுஜாதாவின் அகராதியில் இல்லாத வார்த்தை. உணர்ச்சிகரமான காட்சிகளில் நீண்ட தமிழ் வசனங்களை சுத்தமான உச்சரிப்புடன் பொரிந்து தள்ளுவதில் வல்லவர்.

சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜனிகாந்த் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது.

சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோயில், தீபம், அந்தமான் காதலி, விஸ்வரூபம், வா கண்ணா வா, பரிச்சைக்கு நேரமாச்சு, தியாகி, தீர்ப்பு, திருப்பம், சந்திப்பு, நீதிபதி, நேர்மை, சுமங்கலி, மாடி வீட்டு ஏழை, மண்ணுக்குள் வைரம் என பல படங்களில் நடித்தவர், ரஜினியுடன் அன்புக்கு நான் அடிமை, துடிக்கும் கரங்கள், மாவீரன், கொடி பறக்குது, உழைப்பாளி, பாபா, கமலுடன் உயர்ந்தவர்கள், கடல் மீன்கள், ஜெமினியுடன் உறவுக்கு கை கொடுப்போம், ராஜேசுடன் ஆலயதீபம், உத்தமி, நல்ல காலம் பொறக்குது, முத்துராமனுடன் மயங்குகிறாள் ஒரு மாது, சிவக்குமாருடன் அன்னக்கிளி, அவர்கள், பூந்தளிர், விஜயகாந்துடன் தர்மம் வெல்லும், சத்யராஜுடன் விடிஞ்சா கல்யாணம், அமைதிப்படை, பிரபுவுடன் செந்தமிழ் செல்வன், செந்தமிழ் பாட்டு, ராஜகுமாரன், சிவசக்தி, மோகனுடன் விதி, சரத்குமாருடன் நட்புக்காக, பாட்டாளி, சரத்பாபுவுடன் நூல்வேலி, அஜித்துடன் அவள் வருவாளா, வில்லன், அட்டகாசம், வரலாறு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சுஜாதா, நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்ற தெலுங்கு நடிகர்களுடன் நடித்தவர்

ஆரம்ப கால படங்களில் கதாநாயகியாக நடித்த சுஜாதா, அதன் பிறகு அம்மா, அக்கா என்று துனைக் கதாபாத்திரங்களில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

இவர் நடித்த கடல் மீன்கள், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த ஸ்ரீ ராமதாசு என்பதாகும். தமிழில் கடைசி படமாக அஜித்தின் வரலாறு படத்தில் அம்மாவாக நடித்திருந்தார்.

டப்பிங் பேசும் போது திரையில் வரும் தன் உருவத்தைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டே குரல் கொடுக்கும் அளவுக்கு ரொம்ப எமோசனல் ரகம். நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் படங்களில் நடித்திருந்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு தமிழில் டப்பிங் பேசி இருக்கும் சுஜாதா, தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேச தெரிந்தவர்.

நடிகை சுஜாதா பாசத்துடனும் நட்புடனும் களங்கம் இல்லாமல் பழகுவார். தவறி மரியாதை குறைவாக யாரேனும் எதுவும் செய்தால் பெரிய மனிதராக இருந்தாலும் நேருக்கு நேர் பொங்கி வெடித்துவிடுவார்.

நடிப்பு ஒரு தொழில். அது வணிகத் தேடலுக்கானது. ஆனால், குடும்பம், குழந்தைகளே நிஜ வாழ்க்கையின் அர்த்தங்கள். இதனைத் தானும் உணர்ந்திருந்தார், சுஜாதா.

சுஜாதாவுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார். திருமணத்திற்குப் பின்னும் வற்றாத நடிப்புத் திறனால் தனக்கென்று ஓர் இடத்தை நிலைநிறுத்திய சாமர்த்தியசாலி சுஜாதா.

துணைவி, பரிச்சைக்கு நேரமாச்சு ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதுகள் பெற்றுள்ள சுஜாதா, தமிழக அரசின் கலைமாமணி விருந்தும், ஆந்திர அரசின் நந்தி விருதும் பெற்றிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக விளங்கிய சுஜாதா, இருதய நோயால் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


நடிகர் எஸ்.வி.ரங்காராவ் வாழ்க்கை வரலாறு

நூற்றாண்டு கடந்த தென்னிந்தியத் திரைவானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், சிலர் மட்டும் காலம் கடந்தும் ரசிகர்கள் மனத்தில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய ஒப்பனை மாற்றங்கள் எவையுமின்றி ஒரு மகாநடிகராக ரசிகர்கள் மனங்களில் மறையாத நிலைபெற்றுவிட்ட எஸ்.வி.ரங்காராவ், ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 3ஆம் தேதி கோடீஸ்வர ராவ் – லட்சுமி நரசாயியம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர். எஸ்.வி.ரங்காராவின் முழு பெயர், சாமர்லா வெங்கட ரங்காராவ்.

மூன்று சகோதரர்கள், ஏழு சகோதரிகளுடன் பெரிய குடும்பத்தில் வளர்ந்த ரங்காராவ், தௌலேஸ்வரத்தில் தொடக்கக் கல்வி பயின்றார்.

மருத்துவராகப் பணியாற்றிய தாத்தா சாமர்ல கோட்டைய ராவின் மறைவுக்குப் பிறகு ரங்கா ராவின் பெற்றோர் சென்னையில் குடியேறினர். அப்போது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலுல் படித்த ரங்காராவ், பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் குட்டி மந்திரவாதி வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.

பின்னர், விசாகப்பட்டினத்தில் ஏ.வி.என் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், காக்கிநாடா பி.ஆர். அரசுக் கல்லூரியில் இளங்கலை அறிவியலும் முடித்து தீயணைப்புத் துறையில் வேலையில் அமர்ந்தார். படிப்புக்கு நடுவே நாடக வசனங்களை நன்றாகப் பேசுவதற்காகப் பேச்சுப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்வதுடன் நாடகங்களிலும் தொடர்ந்து நடித்தும் வந்தார்.

பல பெரும் கலைஞர்களை உருவாக்கிய ‘காக்கி நாடா இளைஞர் நாடகக் குழு’வில் தன்னை இணைத்துக்கொண்டு அந்த நாடகக்குழு நடத்திய நாடகமொன்றில் 22 வயதில் 65 வயது முதியவர் வேடம் போட்டுப் பெயர் வாங்கினார்.

அந்த குழுவின் புகழ்பெற்ற ஆங்கில நாடகங்களான ‘அலாவுதீன் கில்ஜி’யில் மாலிக் கபூர், ஷேக்ஸ்பியரின் ‘ஆண்டனி அண்ட் கிளியோபாட்ரா’ நாடகத்தில் சீஸர், ஷைலாக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் பெற்றார். அங்கு, அவருக்கு பி.எஸ்.சுப்பாராவ், ரேலங்கி, அஞ்சலிதேவி, அஞ்சலிதேவியின் கணவர் ஆதி நாராயணராவ் ஆகியோரின் நட்பு கிடைத்ததது.

ரங்காராவின் உறவினரான பி.வி.ராமானந்தம் ‘வரோதினி’ என்கிற தெலுங்கு படத்தை இயக்கிய போது அதில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை ரங்காராவுக்கு வழங்கினார். அதில் கிருஷ்ண தேவராயுடு, பிரவராயுக்குடு வேடங்களில் நடித்தார். 1947-ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகை அன்று வெளியான ‘வரோதினி’ படம் வணிகரீதியில் தோல்வியடைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால், மனமுடைந்து ரங்காராவ், வேலைக்கு செல்லவும், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து ஊருக்கு திரும்பினார்.

1947 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ஏலூரில் பத்தெட்டி வெங்கட்ராமையா – கோடேஸ்வரம்மா தம்பதியின் மகளான லீலாவதியை மணமுடித்து ஜாம்ஷெட்பூரில் டாட்டா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நடிப்பு அவரை விடுவதாக இல்லை. திரும்பவும் ராஜினாமா, திரும்பவும் ஸ்டுடியோ எனத் தென்னகம் வந்தவருக்கு ‘மன தேசம்’,  ‘பல்லெட்டூரி பில்லா’ ஆகிய படங்கள் அஞ்சலி தேவி, எல்.வி.பிரசாத்தின் உதவியில் கிடைத்தன.

அதன் பிறகு அவர் ‘சுன்னப்ப ரங்குடு’ என்ற ரௌடிக் கதாபாத்திரத்தில் ‘சௌகார்’ படத்தில் நடித்ததார். அந்தப் படம் அவருக்கு சின்ன திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

எஸ்.வி.ரங்காராவ் என்ற ஆற்றல் மிக்க அற்புதமான நடிகரை ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரை உலகிற்கும் அடையாளம் காட்டிய திரைப்படமாக ‘பாதாள பைரவி’ அமைந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

‘பாதாள பைரவி’யைத் தொடர்ந்து ‘பெல்லி சேசி சூடு’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரான இரு மொழிப் படத்தில் ஒரு ஜமீன்தாரின் வேடத்தில் நடித்தார் எஸ்.வி.ரங்காராவ். அந்தப் பாத்திரத்தில் அவரது நடிப்பும், உடல் மொழியும் படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.

நாகி ரெட்டியும், சக்ரபாணியும் இணைந்து தயாரித்த ‘பாதாள பைரவி’, ‘பெல்லி சேசி சூடு’ ஆகிய இரு படங்களில் நடித்த பிறகு ரங்காராவின் திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது. அடுத்த தயாரிப்பான ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் ஜமுனாவின் தந்தையாக ரங்காராவ் நடித்திருந்தார். அதுவரை அப்பாவாக மட்டும் இருந்த எஸ்.வி.ரங்காராவ் அந்தப் படத்திற்குப் பிறகுதான் ‘அன்புள்ள அப்பா’வாக மாறினார் என்று சொல்லலாம்.

1947-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான ரங்கராவிற்கு திருப்பு முனை ஆண்டாக 1957-ம் ஆண்டு அமைந்தது. அந்த ஆண்டில்தான் ரங்காராவ் கடோத்கஜனாக நடித்த ‘மாயா பஜார்’ திரைப்படம் வெளிவந்தது. இன்றைய தலைமுறையினருக்கும் அறிமுகமான நடிகராக ரங்காராவ் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் அந்தப் படத்திலே அவர் ஏற்றிருந்த கடோத்கஜன் வேடம்தான்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவி தான் எஸ்.வி.ரங்காராவின் மகளாக அதிகமான படங்களில் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் ‘சபாஷ் மீனா’.

அவர்கள் இருவரும் தந்தையும் மகளுமாக நடித்த படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’. தன்னுடைய மகள் மீது அளவில்லா பாசத்தைக் காட்டும் தந்தையாக அந்தப் படத்திலே வாழ்ந்திருந்தார் ரங்காராவ். விஜயா வாகினி தயாரிப்புகளில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அந்தப் படம் அமைந்தது.

ஒரு கட்டத்தில் தமிழ், தெலுங்குக் கதாநாயகர்களைவிட அதிக சம்பளமும் பெற்று நடித்த ஒரே குணச்சித்திர நடிகராகத் திரையுலகம் இவரை உயர்த்தியது. இவரின் வளர்ச்சியில் விஜயா வாகினி ஸ்டுடியோவின் அதிபர் நாகி ரெட்டிக்குப் பெரும் பங்கு உண்டு.

தந்தை வேடமென்றாலும் அதில்தான் எத்தனை வகைகள்! பாசமிகு தந்தையாக, பணக்காரத் தந்தையாக, ஏழைத் தந்தையாக, நகைச்சுவை உணர்வுமிக்க தந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறார். தந்தை கதாபாத்திரங்களுக்கு அப்பால், மந்திரவாதியாக, ஜமீன்தாராக, அக்பர் பாதுஷாவாக, உக்கிர சேனனாக, எமதர்மனாக, ஹிரண்யகசிபுவாக, நரகாசுரனாக, ராஜா அரிச்சந்திரனாக, நரசிம்ம வர்ம மன்னனாக, கீசகனாக, துரியோதனனாக, பலராமனாக, போஜராஜனாக, கடோத்கஜனாக, கம்சனாக, பாதிரியாராக, பீஷ்மராக, ராவணனாக, தக்ஷனாக, வழக்கறிஞராக என இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் தனித்த, பிரதி செய்ய முடியாத நவரச நடிப்பால் உயர்ந்து ஒளிர்ந்திருக்கிறார்.

கீசகன், ஹிரண்யகசிபு போன்ற சில புராணக் கதாபாத்திரங்களைக் கறுப்பு வெள்ளைப் படங்களின் காலத்தில் முதல்முறையாகவும். அதே கதாபாத்திரங்களை வண்ணப் படக்காலம் வந்தபிறகு வேறு பரிமாணங்களிலும் தனது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார்.

ஒத்திகையில் செய்ததைத் தவிர, படப்பிடிப்பின்போது டேக்கில் வேறு ஏதாவது கூடுதலாகச் செய்து பெயர் வாங்குவதில் சாவித்திரியைப் போலவே இவரும் பெரிய கில்லாடி.

‘படிக்காத மேதை’ படத்தில் செல்வந்தர் சந்திரசேகராகச் செல்வச்செழிப்பின் உச்சத்தைத் தனது உடல்மொழியிலும் வசன உச்சரிப்பிலும் கொண்டுவந்த ரங்கா ராவ், பங்குச்சந்தையில் சரிவால் நொடித்துப்போன பிந்தைய நிலையை அத்தனை நம்பகமாகத் தனது நடிப்பில் ஒரு கதாபாத்திரத்தில் இரு பரிமாணங்களைக் கொண்டுவந்து காட்டியவர். செல்வந்தர்கள் வீட்டில் போடும் ஹவுஸ் கோட்டுக்குக் கம்பீரம் சேர்த்ததும் இவரே.

ஆறே நிமிடங்கள் வந்தாலும் ‘சர்வர் சுந்தரம்’ படத்திலும், ‘அப்பாவிக் கணவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் தெலுங்கு பேசும் இயக்குநராகவும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார்.

சிறந்த குணச்சித்திர நடிகரான எஸ்.வி.ரங்காராவிடம் இருந்த மிகப் பெரிய பலவீனம் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு செல்லாததுதான். என்ன காரணத்தாலோ அந்தப்  பழக்கத்தை அவரால் மாற்றிக் கொள்ளவே  முடியவில்லை.

‘நானும் ஒரு பெண்’ படத்தில் கதாநாயகன் எஸ்.எஸ்,ராஜேந்திரனுக்குத் தந்தையாக நடித்தார் எஸ்.வி.ரங்காராவ். அந்தப் படத்தின் உச்சக்கட்டக் காட்சி படமாக்கப்பட்டபோது அந்தக் காட்சியில் பங்கு பெற வேண்டிய அனைத்து நட்சத்திரங்களும் வந்த பிறகும் எஸ்.வி.ரங்காராவ் வரவில்லை.

படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செட்டிற்கு வந்துவிட்ட ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா படப்பிடிப்பு தொடங்காததால் நேரம் ஆக ஆக பொறுமையை இழக்கின்ற நிலைக்கு ஆளானார். அப்போது செட்டிற்குள் நுழைந்தார் எஸ்.வி.ரங்காராவ்.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவதை எப்போதுமே தனது வழக்கமாக வைத்துக் கொள்ளாத எம்.ஆர்.ராதா, ரங்காராவ் செட்டிற்குள் நுழைந்தவுடன் “கெட்டவனா நடிக்கிறவன் எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்கா நேரத்தில வர்றான். நல்லவனா நடிக்கிறவன் ஒரு ஒழுங்கு இல்லாம என்ன பாடுபடுத்தறான் பாரு” என்று ரங்காராவின் காதில் விழுகின்ற மாதிரி உரக்க தன்னுடைய கருத்தைச சொன்னார்.

அப்படி அவர் வெளிப்படையாக தனது கருத்தைச் சொன்னதால் ரங்காராவ் கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவாரோ என்று படக் குழுவினர் அனைவரும் பயந்தனர். ஆனால், அதற்கு மாறாக ராதா அப்படிப் பேசியதால் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்மை விளைந்தது. காலையில் படப்படிப்புக்கு வந்த ரங்காராவ் அந்தக் காட்சியை மொத்தமாக நடித்து முடித்துவிட்டுத்தான்  அன்றிரவு  வீட்டுக்குப் போனாராம்.

படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகின்ற பழக்கம் காரணமாக ஸ்ரீதரின் ‘கலைக் கோவில்’ உட்பட பல பட வாய்ப்புகளை இழந்துள்ளார், எஸ்.வி.ரங்கராவ்.

தன் மேல் தவறு இருந்தால் அதை ஒப்புக் கொள்கின்ற நேர்மையான குணத்துக்கு சொந்தக்காரரான எஸ்.வி.ரங்காராவ், யாராவது தன்னைப் பற்றி தவறாக குற்றம் சாட்டினால் அதை எதிர்கொள்ளவும்  தயங்க மாட்டார்.

ஆறடிக்கும் மேலான தோற்றம், சரித்திர வேடங்களைத் தாங்கும் கம்பீரம், பேசும் கண்கள், யாரையும் பின்பற்றாத பாணி, நாடகத்திலிருந்தது வந்தாலும் இயல்பான நடிப்பு, நவரசங்களிலும் வெளிப்பட்ட திறமை என்பவை ரங்காராவின் சிறப்புகள்.

தன் 25 ஆண்டு திரை வாழ்க்கையில் 53 தமிழ்ப் படங்கள், 109 தெலுங்குப் படங்கள் என அவர் 163 படங்களில் நடித்திருக்கிறார்.  இரண்டு படங்களை இயக்கியவர், நான்கு படங்களை தயாரித்திருக்கிறார்.

உலகமே சிவாஜியின் நடிப்பை வியந்துகொண்டிருந்த காலத்தில், ரங்காராவின் நடிப்புக்கு ரசிகனாகியிருந்தார் சிவாஜி.

ஒரு பத்திரிகைக் கேள்வி பதிலில் சிவாஜி கணேசனுக்குப் பெரிய விருதுகள் கிடைக்காமல் போனது பற்றிய கேள்விக்குப் பதிலாக “அவர் சிரிக்கும்போது நாம் சிரித்தோம்.. அவர் குரல் உடைந்து அழத் தொடங்கும் முன்னரே நாம் அழுதோம். இதைவிட என்ன விருது வேண்டும். மக்களின் மனங்களை ஜெயிப்பதுதான் ஒரு கலைஞனுக் கான விருது” என ரங்கராவ் கூறினார். இதே பதிலை நாம் அவருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

சிறந்த இயக்குநருக்கான பிரிவின் கீழ் ‘சதுரங்கம்’ படத்துக்கு ‘நந்தி விருது’ பெற்றவர். ‘விஸ்வ நட சக்கரவர்த்தி’, ‘நட சிம்ஹா’, ‘நட சர்வபூமா’ ஆகிய பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து ‘அன்னை’, ‘சாரதா’, ‘நானும் ஒரு பெண்’, ‘கற்பகம்’, ‘நர்த்தனசாலா’ ஆகிய படங்களுக்குக் குடியரசுத் தலைவர் விருதும், ‘பந்தவயலு’ படத்துக்குச் சிறந்த நடிகர் விருதும் பெற்றவர். இந்திய அரசு எஸ். வி. ரங்காராவை கௌரவப்படுத்தும் விதத்தில் அவரது அஞ்சல் தலையை 2013இல் வெளியிட்டது

மேலும், 2018-ல் இவரின் நூற்றாண்டு விழாவை ஹைதராபாத்தில் ஒரு வாரத்துக்கு ஆந்திர திரையுலகம் கொண்டாடியது. ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச் சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

எஸ்.வி.ரங்காராவ் – லீலாவதி தம்பதிக்கு விஜயா, பிரமிளா என இரு மகள்களும், கோடீஸ்வர ராவ் என்கிற ஒரு மகனும் உள்ளனர். நீண்ட நெடுங்காலம் முதியவராக நடித்த ஒருவர், தன் வாழ்நாளில் 60 வயதைப் பார்த்ததேயில்லை என்பதுதான் அவருடைய வாழ்வின் அபத்தம். 1974-ம் ஆண்டு, ஜூலை மாதம் 18-ம் தேதி ரங்காராவ் மறைந்தபோது அவருக்கு வயது 56.

‘நர்த்தனசாலா’ என்ற  படத்தில் கீசகனாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பட்டத்தை இந்தோனேஷியாவில் நடைபெற்ற பட விழாவில் பெற்ற ரங்காராவைப் பாராட்டிய தெலுங்கு நடிகர் ‘கும்மிடி’ ரங்காராவ், “இந்தியாவில் பிறந்தது நாம் செய்த அதிர்ஷ்டம். ஆனல் அவரைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய துரதிருஷ்டம். மேற்கத்திய நாடுகளில் அவர் பிறந்திருந்தால் உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக அவர் புகழ் பெற்றிருப்பார்” என்று  குறிப்பட்டிருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்