இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்க்கை வரலாறு
====================================
தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர்.
தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்.... அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மிகப் பெரியது. திரையுலகில் அவரது பயணம் நீண்ட பயணம்.... அந்த மகாகலைஞனின் வாழ்க்கையில் இருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள். 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.
படிக்கும் போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்தது. நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர், நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினர். சுகாதார ஆய்வாளராக வேலை கிடைத்தது. ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்கிற வேலை.
அப்படி ஒரு முறை பண்ணைபுரம் சென்ற போது அங்கு இசை வாசிக்கும் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் ஆனார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்றவர்கள், பாரதிராஜாவின் நாடகத்திற்கு இசை வாசிக்க மதுரை சென்றார்கள்.
பாரதிராஜா இயக்கிய 'ஊர் சிரிக்கிறது', 'சும்மா ஒரு கதை' போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவர்களின் நாடக ஆர்வத்தை பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் அண்ணன் மகன் 'அன்னக்கிளி' செல்வராஜ், இவர்களுடன் நட்பு கொண்டார்.
சினிமாவுக்கு சென்றால் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்று கருத்துக்கள் பகிர்ந்து கொண்டார்கள். முதலில் 'அன்னக்கிளி' செல்வராஜ் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். அதன் பிறகு பாரதிராஜா வந்தார். சினிமாவில் உடனே வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது.
இந்த நிலையில் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்கள். சங்கிலிமுருகன் நடத்திய நாடகங்களுக்கு இசை அமைத்தார்கள். இசை கச்சேரி நடத்தவும் சென்றார்கள். இசை கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அவர்கள் நட்பு வட்டத்தில் சேர்ந்தார்.
திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம் கிடைக்க அவரிடம் கிட்டார் வாசிக்க சென்றார், இளையராஜா. இளையராஜா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக கங்கைஅமரனை சேர்ந்துவிட்ட ஜி.கே.வெங்கடேஷ், இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் பாரதிராஜாவை உதவியாளராக சேர்த்துவிட்டார்.
புட்டண்ணா கனகலிடம் 'இருளும் ஒளியும்' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'தலைபிரசவம்' படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய 'அதிர்ஷ்டம் அழைக்கிறது' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
தனது படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கே.ஆர்.ஜி. அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, வி.குமார் இசையமைப்பாளர் என்று முடிவாகி படத்திற்கு 'சொந்த வீடு' என்று பெயர் சூட்டப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்ததால் அந்தப் படம் டிராப் ஆனது.
அதன் பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த போது 'மயிலு' என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதற்கு '16 வயதினிலே' என்று பெயர் வைத்து கமல், ரஜினி, சத்யஜித், ஸ்ரீதேவி, காந்திமதி நடிப்பில் நிவாஸ் ஒளிப்பதிவில் படமாக்க முடிவு செய்தார்.
இவர்களின் நட்பு வட்டத்தில் இருந்த 'அன்னக்கிளி' செல்வராஜ், கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக இருந்து, அவர் தயாரித்த 'அன்னக்கிளி' படத்திற்கு இளையராஜாவை அறிமுகம் செய்து இசையமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
தேவராஜ் - மோகன் இயக்கத்தில் 'அன்னக்கிளி' படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை '16 வயதினிலே' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார், பாரதிராஜா.
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான '16 வயதினிலே' படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலி சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.
மீண்டும் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் சுதாகர், ராதிகாவை அறிமுகப்படுத்தி 'கிழக்கே போகும் ரயில்' படத்தை இயக்கிய பாரதிராஜா, அடுத்து தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தை இயக்கினார்.
தனது உதவியாளர் கே.பாக்யராஜ் நடிப்பில், தனது தயாரிப்பில் 'புதிய வார்ப்புகள்' படத்தை இயக்கிய பாரதிராஜா, இன்னொரு உதவியாளரான கே.விஜயன், சுதாகர், ராதிகா நடிப்பில் 'நிறம் மாறாத பூக்கள்' படத்தை இயக்கினார். இதில் கே.விஜயனுக்கு அவரே டப்பிங் பேசி இருந்தார்.
அடுத்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார். அவரது படங்களின் ஒளிப்பதிவார் நிவாஸ் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அருணா, விஜயசாந்தி இருவரையும் கதாநாயகிகளாக அறிமுகம் செய்தார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தை தெலுங்கு மொழியில் 'கொத்த ஜீவித்தலு' என்கிற பெயரிலும், இந்தி மொழியில் 'ரெட் ரோஸ்' என்கிற பெயரிலும் இயக்கிய பாரதிராஜா, அடுத்து தனது உதவியாளர் மணிவண்ணன் கதையில் 'நிழல்' என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மீண்டும் தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையில் 'அலைகள் ஓய்வதில்லை' என்கிற படத்தை தனது நண்பனும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் இயக்கினார். அந்தப் படத்தில் கார்த்திக் நாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும், தியாகராஜன் வில்லனாகவும் அறிமுகமானார்கள். இந்தப் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார்.
மேலும், டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், டிக்டிக்டிக், என்னுயிர் தோழன், கடல் பூக்கள், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்கள், கொத்த ஜீவித்தலு தெலுங்கு படம், சொல்வ சவான், ரெட் ரோஸ் ஆகிய இந்திப் படங்கள் என 12 படங்களுக்கு கதை எழுதியவர், கே.பாக்யராஜ், மணிவண்ணன், கலைமணி, 'அன்னக்கிளி' செல்வராஜ், பஞ்சு அருணாசலம், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் கதைகளிலும் படம் இயக்கி இருக்கிறார்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இருபது படங்களில் நடித்திருக்கிறார்.
கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர், மகன் மனோஜ் கே.பாரதியை ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர், ‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.
இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார்.
பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண செலவு முழுவதையும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. ஏற்றுக் கொண்டார்.
பாரதிராஜா - சந்திர லீலா தம்பதிக்கு மனோஜ் என்கிற மகனும், ஜனனி என்கிற மகளும் பிறந்தனர். மலேசியாவை சேர்ந்த ராஜகுமார் தம்பிராஜாவுக்கு மகள் ஜனனியை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 15க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரது காதல் மனைவி நடிகை நந்தனா. சக்ஸஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
விருதுகளும் கௌரவிப்பும்
- 2004 - பத்மஸ்ரீ இந்திய அரசிடமிருந்து தேசிய திரைப்பட விருதுகள்
- 1982 - சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது- சீதாகொகா சிலுகா (இயக்குநர்)
- 1986 - தேசிய திரைப்பட சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது- முதல் மரியாதை (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்)
- 1988 - பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது- வேதம் புதிது (இயக்குநர்)
- 1995 - கருத்தம்மாவுக்கு (இயக்குநர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது
- 1996 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை (இயக்குநர்)
- 2001 - தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் (இயக்குநர் & எழுத்து
பிலிம்பேர் விருதுகள் தெற்கு
- 1978 - சிறந்த தமிழ் இயக்குநர்- சிகப்பு ரோஜாக்கள்
- 1987 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- வேதம் புதிது
- 1987 - சிறந்த தமிழ் இயக்குநர்- வேதம் புதிது
- 1994 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- கருத்தம்மா
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
- 1977 - சிறந்த இயக்குநர் விருது- 16 வயதினிலே
- 1979- சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - இரண்டாம் பரிசு - புதிய வார்ப்புகள்
- 1981 - சிறந்த இயக்குநர் விருது- அலைகள் ஓய்வதில்லை
- 1994 - நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா
- 2001 - தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது - 2001 இல் அறிஞர் அண்ணா விருது
- 2003 - முதல் இடத்தில் சிறந்த படம்- ஈர நிலம்
நந்தி விருதுகள்
- 1981 - சிறந்த இயக்குநர் நந்தி விருது- சீதாகொகா சிலுகா
விஜய் விருதுகள்
- 2012 - தமிழ் சினிமாவுக்கு பங்களிப்பு
- 2013 - சிறந்த துணை நடிகருக்கான பாண்டிய நாடு
பிற விருதுகள்
- 1980 - தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள்: கல்லுக்குள் ஈரம் படத்துக்காக சிறந்த தொழில்நுட்ப விருது
- 2005 - சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் ( டி.லிட் )
- 1995 - கருத்தம்மாவுக்கு (இயக்குநர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது
- 1996 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை (இயக்குநர்)
- 2001 - தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் (இயக்குநர் & எழுத்து)
பிலிம்பேர் விருதுகள் தெற்கு
- 1978 - சிறந்த தமிழ் இயக்குநர்- சிகப்பு ரோஜாக்கள்
- 1987 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- வேதம் புதிது
- 1987 - சிறந்த தமிழ் இயக்குநர்- வேதம் புதிது
- 1994 - சிறந்த தமிழ்த் திரைப்படம்- கருத்தம்மா
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
- 1977 - சிறந்த இயக்குநர் விருது- 16 வயதினிலே
- 1979- சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது - இரண்டாம் பரிசு - புதிய வார்ப்புகள்
- 1981 - சிறந்த இயக்குநர் விருது- அலைகள் ஓய்வதில்லை
- 1994 - நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா
- 2001 - தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது - 2001 இல் அறிஞர் அண்ணா விருது
- 2003 - முதல் இடத்தில் சிறந்த படம்- ஈர நிலம்
நந்தி விருதுகள்
- 1981 - சிறந்த இயக்குநர் நந்தி விருது- சீதாகொகா சிலுகா
விஜய் விருதுகள்
- 2012 - தமிழ் சினிமாவுக்கு பங்களிப்பு
- 2013 - சிறந்த துணை நடிகருக்கான பாண்டிய நாடு
பிற விருதுகள்
- 1980 - தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப வல்லுநர்கள்: கல்லுக்குள் ஈரம் படத்துக்காக சிறந்த தொழில்நுட்ப விருது
- 2005 - சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் ( டி.லிட் )
