செவ்வாய், 21 ஏப்ரல், 2015

நகைச்சுவை நடிகை சச்சு

நகைச்சுவை நடிகை சச்சுவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள புதுப்பாடி. இவரது தாத்தா ராமநாத அய்யர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.

இவரது தந்தை சுந்தரேசன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர். சென்னை மண்ணடியில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவர் சச்சு. இவருக்கு சரஸ்வதி என்று பெயர் வைத்தனர். சச்சு என்று பெயரை சுருக்கி அழைத்ததால்  அதுவே நிரந்தர பெயராகி விட்டது.

சச்சுவின் அக்காள் லட்சுமியை, சென்னை மைலாப்பூரில் வசித்து வந்த அவரது பாட்டி எடுத்து வளர்த்தார். சச்சுவிற்கு நான்கு வயது ஆனதும், அவரையும் மைலாப்பூருக்கு அழைத்துச் சென்று வளர்த்தார் பாட்டி.

சச்சுவின் பாட்டி வீட்டில், பரத நாட்டிய கலைஞர் தண்டாயுதபாணி பிள்ளை வாடகைக்கு குடியிருந்தார். அவர் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தண்டாயுதபாணி பிள்ளையிடம் சச்சுவின் சகோதரி 'மாடி' லட்சுமியும் பரத நாட்டியம் கற்று கொண்டார். அங்கு பலரும் நாட்டியம் ஆடுவதை பார்க்க செல்வார் சச்சு. அவர்கள் ஆடுவது போலவே இவரும் ஆடுவார். அவரின் ஆர்வத்தைப் பார்த்த தண்டாயுதபாணி பிள்ளை, சச்சுவுக்கும் நடனம் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.

கோவை சென்டிரல் ஸ்டூடியோவில் ஜுபிடர் பிக்சர்சார் 'விஜயகுமாரி' என்ற படத்தை எடுத்தனர். கே.ஆர்.ராமசாமி - டி.ஆர்.ராஜகுமாரி நடித்த இப்படத்தை .எஸ்..சாமி இயக்கினார். 1950-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் சச்சுவின் அக்காள் மாடி லட்சுமி ஒரு பாடலுக்கு நாட்டியமாட வாய்ப்பு கிடைத்தது. படப்பிடிப்புக்கு, மாடி லட்சுமியுடன் அவரது பாட்டி சச்சு ஆகியோரும் செல்வது வழக்கம்.

1952-ம் ஆண்டு ஜுபிடர் பிக்சர்சார் `ராணி' என்கிற படத்தை எடுக்க திட்டமிட்டனர். படத்தின் கதாநாயகி பானுமதி. அவருடைய குழந்தைப்பருவ வேடத்திற்கு, ஒரு குழந்தை நட்சத்திரத்தைத் தேர்வு செய்து இருந்தார் இயக்குனர் எல்.வி.பிரசாத்.

அந்த குழந்தைக்கு படப்பிடிப்பின் போது உடல் நிலை சரியில்லாமல் போனதால், அப்போது சச்சுவை பார்த்த இயக்குனர் எல்.வி.பிரசாத், அவரை அந்த வேடத்தில் நடிக்க வைத்தார்.

சச்சுவின் தாயார் ஜெயா இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகத்திற்கும் செல்வது உண்டு. அவருக்கு கலைகள் மீது பெரும் மரியாதை உண்டு. ஆனால், இவரது தந்தைக்கு பிடிக்காது. முதலில் அக்காள் மாடி லட்சுமி நடிக்க சென்ற போது எதிர்த்தார். நடனம் தெரிந்தவர். நடனக் காட்சிகள் என்பதால் பிறகு ஒத்துக் கொண்டார்.

'ராணி' படத்தில் சச்சுவை நடிக்க அழைத்த போதும் அதே போல எதிர்த்தார். அம்மா ஜெயா, அவரை சமாதனப் படுத்தி நடிக்க சம்மதம் வாங்கினார். குழந்தை நட்சத்திரமாக ராணி படத்தில் நடித்த சச்சுவின் திறமையை வியந்து குடும்பத்தினர் அனைவரும் பாராடினார்கள். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க சம்மதித்தனர். இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. வீட்டில் டியூசன் வைத்து இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் சொல்லிக் கொடுத்தார்கள். கர்நாடக சங்கீதமும் கற்றுக்கொண்டார்.

அவருக்கு புகழ் தேடித் தந்த படம் 'தேவதாஸ்.' 1953-ல் வெளியான இப்படத்தில், சிறு வயது சாவித்திரியாக சச்சு நடித்தார். '... தேவதாஸ்' என்று சச்சுவும், '... பார்வதி' என்று மாஸ்டர் சுதாகரும் நடித்த காட்சி, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

தொடர்ந்து, ஜெமினியின் 'அவ்வையார்' படத்தில், பால அவ்வையாராக நடித்தார். பின்னர் 1954-ல் பேரறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி கே.ஆர்.ராமசாமியும், பத்மினியும் ஜோடியாக நடித்த 'சொர்க்க வாசல்' படத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

பின்னர் 'மருமகள்', 'எதிர்பாராதது', 'சியாமளா', ஜெமினியின் இந்தி பாலநாகம்மா, மாயாபஜார் முதலிய படங்களில் நடித்தார். 12 வயது ஆன பிறகு 'கோடீஸ்வரன்' படத்தில் சிவாஜியின் தங்கையாகவும், 'கலையரசி' படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாகவும் நடித்த இவர், சிவாஜி - பத்மினி நடித்த 'மரகதம்' படத்தில், ஒரு நடனக் காட்சியில் ஆடினார்.

குழந்தை நட்சத்திரமாகவும், தங்கை வேடங்களிலும் நடித்து வந்த சச்சு, 1962-ல் 'வீரத்திருமகன்' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். .சி.திருலோகசந்தர் இயக்கிய இப்படம், இஅவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. 'ரோஜா மலரே ராஜகுமாரி' என்ற புகழ் பெற்ற பாடல் இவருக்கு பெருமை சேர்த்தது.

அன்னை இல்லம்' படத்தில் இவர் முத்துராமனுக்கு ஜோடியாக நடித்தவர், 1964-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கிய "காதலிக்க நேரமில்லை'' படம் இவரை நகைச்சுவை நடிகையாக புகழ் பெற வைத்தது.

தொடர்ந்து, ஊட்டி வரை உறவு, சிவந்த மண், உரிமைக்குரல், பொம்மலாட்டம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, கலாட்டா கல்யாணம், பூவா தலையா' உள்பட பல படங்களில் சச்சு நடித்தார். அதில் பூவா தலையா படத்தின் வேடம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. "மாட்டுக்கார வேலன்'' படத்தில், பெண் "சி..டி''யாக நடித்தார்.

1970-ம் ஆண்டு, "நீரோட்டம்'' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து தேவியர் இருவர், மெழுகு பொம்மைகள், தோப்பில் தென்னை மரம், சக்கரம் சுழல்கிறது, முதியோர் இல்லம் உள்பட பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தினேஷ் - கணேஷ், மேல்மாடி காலி, காஸ்ட்லி மாப்பிள்ளை, மாண்புமிகு மாமியார், இப்படிக்கு தென்றல் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கியவர்
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, என்.எஸ்.கே. விருது, எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். தியாக பிரம்மா கானா சபா விருதினை எம். எஸ். சுப்புலட்சுமியிடமும், ஸ்ரீ கிருஷ்ணா கானா சபாவின் நாடக சூடாமணி விருதும் பெற்றவர்.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதிஅண்ணா இப்படி ஐந்து முதல்வர்களுடன் பனியாற்றிய சிறப்பு உடையவர் குமாரி சச்சு.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளராக பதவி வகித்தவர் இவர்.


அந்தக் காலத்தில், நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் அதிகம். இவர் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். 60 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் இவர் குடும்பப் பொறுப்பு காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது குடும்பம் பெரியது. அதைப் போலவே இவரது மனமும் பெரியது