செவ்வாய், 21 ஏப்ரல், 2015

புது வசந்தம் விக்ரமன்

தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்களால் போற்றப்படும் இயக்குனர் விக்ரமன் இயக்கிய முதற் படம் முதல் வசந்தம் . 1989 ஆம் ஆண்டு வெளியான இப் படம் படத்தை இயக்கிய இவருக்கு மட்டுமின்றி படத் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி பட நாயகன் முரளி இசையமைப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் ஆகிய அனைவருக்குமே திரையுலகில் ஒரு வசந்தகாலத்தை அமைத்துத் தந்தது

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தேற்குமேடு என்னும் கிராமத்தில் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் தேதி பிறந்த இவர் ஒரு பிகாம் பட்டதாரி. திரைப்படங்கள் மீது உள்ள காதலால் இயக்குனர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர் பணியாற்றிய முதல் திரைப்படம் குவா குவா வாத்துக்கள்

அடுத்து பார்த்திபன் புதியபாதை திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான போது அந்தப் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார்  புதிய பாதை படம் வெளியான நான்காவது நாள் அதிர்ஷ்ட தேவதை ஆர் பி சவுத்ரி என்ற தயாரிப்பாளரின் வடிவில் இவரை அணைத்துக் கொண்டாள்

புது வசந்தம் என்ற பெயரில் தயாரான அந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவைத் தர தயாரிப்பாளர் தயாராக இருந்த போதும் இவரது விருப்பம் எஸ் ஏ ராஜ்குமாராக இருந்தது அதற்குக் காரணம் எஸ் ஏ ராஜ்குமார் இசையில்  மனசுக்குள் மத்தாப்பு படத்தில் இடம் பெற்றிருந்த சின்னப் பூவே மெல்ல பேசு என்ற பாடல்

தீவிர சினிமா ரசிகரான இவருக்கு பிடித்த இயக்குனர்களின் பெயர்களைக் கேட்டால் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது அகிரா குருசோவா மஜீத் என்று உலக இயக்குனர்கள் பெயர்களில் ஆரம்பித்து சத்யஜித்ரே குருதத் ராஜ்கபூர் கே விஸ்வநாத் கே பால சந்தர் ஸ்ரீதர் பாரதிராஜா மகேந்திரன் பாக்யராஜ் பாலு மகேந்திரா ஷங்கர் என்று சொல்லிக் கொண்டே போகும் இவர்  பிடித்த நடிகையின் பெயரைக் கேட்டால் மட்டும் ஒரே பெயரைச் சொல்கிறார் அது ஜெயபிரதா

எல்லா மொழிப் படங்களையும் ரசித்து பார்க்கக் கூடிய இவர் தீவிரமான வாசகரும் கூட .

பூவே வசந்தம் படத்தைத் தொடர்ந்த பெரும் புள்ளி கோகுலம் நான் பேச நினைப்பதெல்லாம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இவரது பூவே உனக்காக திரைப்படம்தான் இன்று தமிழ்த்திரையுலகில் முதல் வரிசைக் கதாநாயகனாக இருக்கும் விஜய்க்கு புதிய அடையாளத்தைத் தந்தது  இன்னும் சரியாகச் சொல்வதென்றால் விஜய்யை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றி விட்ட முதல் படமாக அப்படம் அமைந்தது  

அதைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் சரத் குமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சூர்யவம்சம் திரைப்படம் வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்தது மட்டுமின்றி மிகப் பெரிய பாராட்டையும் இவருக்குப் பெற்றுத் தந்தது இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் வெங்கடேஷும் கன்னடப் பதிப்பில் விஷ்ணுவர்த்தனும்  இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சனும் நடித்தனர்

சூர்யவம்சத்தைத் தொடர்ந்து கார்த்திக் கதாநாயகனாக நடிக்க இவர் இயக்கத்தில் வெளிவந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் வெள்ளி விழாப் படமாக அமைந்தது மட்டுமின்றி சூர்யவம்சம் போலவே தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாரானது

அடுத்து விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த வானத்தைப்போல என்ற படத்தை இயக்கினார் இவர். மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம் என்ற பிரிவில் தேசிய விருதினைப் பெற்ற இப்படத்தில் பிரபு தேவா லிவிங்ஸ்டன்  மீனா கவுசல்யா ஆகியோர் நடித்திருந்தனர் இப்படமும் பல மொழிகளில் பின்னர் தயாரானது

சூர்யா நடித்த முதல் வெள்ளிவிழாப் படத்தைத் தந்த இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த உன்னை நினைத்து படத்தில் சினேகா லைலா என இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர்

மாதவன் நடித்த பிரியமான தோழி என்ற படத்தை ஏவிஎம் நிறுவனத்துக்காக இயக்கிய இவரே அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பான வசந்தம் படத்தையும் இயக்கினார் தெலுங்கில் இவர் இயக்கிய முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது அதைத் தொடர்ந்து உன்னை நினைத்து திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பையும் இயக்கினார்

தமிழில் இவரது பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர் எஸ் ஏ ராஜ்குமார்  ஆஸ்கர் விருது பெற்ற ஏ ஆர் ரகுமானோடு புதிய மன்னர்கள் படத்தில் பணியாற்றியுள்ள இவர் தமிழில் விஜயகாந்த் கார்த்திக் சரத் குமார் சூர்யா  முரளி மாதவன் பரத் என்று பல கதானயகர்களோடு பணியாற்றி இருக்கிறார்

இவரது பல படங்கள் மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றுள்ளன

ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோருடன் தொடர்ந்து பல் படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே எஸ் ரவிகுமார் மற்றும் ராஜ குமாரன் போன்ற பல இயக்குனர்கள் இவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவரது படங்களின்  பாடல்கள் எப்போதும் மிகச் சிறப்பாக அமையும் 

தமிழில் பதினான்கு திரைப்படங்களையும் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ள இவர் இப்போது தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார்

இவரது மனைவியின் பெயர் ஜெயபிரியா இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் மகன் பெயர் கனிஷ்கா மகள் பெயர் பூஜா. மகனை திரைப்படக் கலைஞனாக ஆக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கிருக்கிறது 

நிலை உயரும் பொது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளதால்   எல்லோராலும் விரும்பப்படும் இயக்குனராக இவர் உள்ளார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக