சனி, 26 ஜூலை, 2014

எம்.ஜி.ஆர் பாராட்டிய கோவை சரளா

தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்பத்தூரில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி பிறந்தவர் கோவை சரளா. இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். அவரது இயற்பெயர் சரளா. இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் கோவையில் இருந்து நடிக்க வந்ததால், அவரை கோவை சரளா என்று பத்திரிகையாளர்கள் அழைத்ததால் அவருக்கு கோவை சரளா என்ற பெயரே நிலைத்தது.

சிறுவயதிலேயே மிகவும் பேசும் திறமை உடையவராக திகழ்ந்தார் கோவை சரளா. கோவையில் உள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோவை மாவட்டத்திற்கு சுற்றுபயணமாக சென்றிருந்த எம்.ஜி.ஆரிடம், பேசுகிற வாய்ப்பு கிடைத்தும், தன்னுடைய பேச்சு திறமையை எம்.ஜி.ஆரிடம் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார், சரளா.

சிறு வயதில் சுறுசுறுப்பாகவும், நன்கு பேசும் திறமையும் உடைய கோவை சரளாவின் திறமையை கண்ட எம்.ஜி.ஆர்., "உனக்கு நிறைய திறமை இருக்குநல்லா படிக்கணும்" என்று கூறி வாழ்த்தியதுடன், அவர் படிப்பதற்கு உதவி தொகையும்  வழங்கி இருக்கிறார். அந்த  நிகழ்வுதான் சரளாவின் வாழ்வில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

அன்றுமுதல் எம்ஜிஆரின் படங்களை ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்திருக்கிறார், சரளா. தொடர்ந்து படங்கள் பார்க்கிற அனுபவம் அவருக்குள் நடிப்பு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாகி, அந்த உணர்வை வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கும் சரளாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர் அவரது அக்காள். பிறகு அவரும், அக்காளுமாக அப்பாவிடம் தொடர் வேண்டுகோள் வைத்து, அவருடைய ஆதரவு கிடைத்ததும், கோவையில் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டார்.

இருபது நாடகங்களுக்கு மேல் நடித்து அனுபவம் கிடைத்ததும் அக்காள், மற்றும் அப்பாவுடன் சென்னைக்கு வந்து தங்கி வாய்ப்புகள் தேடி அலைந்தார். பல முயற்சிகளுக்கு பிறகு பாக்யராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.  

சரளாவின் பேச்சால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பாக்யராஜ்.  தான்  இயக்கி,  நடித்த 'முந்தானை முடிச்சு' படத்தில் ஒரு சிறிய கர்ப்பிணிப் பெண் கதாப்பாத்திரத்தில் நடிகிற வாய்ப்பை வழங்கினார்.

முந்தானை முடிச்சு படத்தின் வெற்றியும் அவரது கர்ப்பிணி பெண் வேடமும் பெரிய அளவில் பேசப்பட்டதால் வரிசையாக பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. அடுத்த ஆண்டே 'வைதேகி காத்திருந்தால்', 'தம்பிக்கு எந்த ஊரு',  'மண்ணுக்கேத்த பொண்ணு' என வரிசையாக மூன்று படங்களில் நடித்தார், கோவை சரளா.

அதன் பிறகு அவருக்கு அழுத்தமான வேடம் என்றால் அது பாக்யராஜின் அம்மாவாக சின்ன வீடு படம்தான். அந்தப் படத்தில் நடிக்க இரவு பனிரெண்டு மணிக்கு சென்று அழைத்திருக்கிறார், அந்தப் படத்தின் மேனேஜர் நாராயணன். இந்நேரத்துக்கு அழைக்கிறார்களே என்று தயக்கத்துடன் அப்பாவை அழைத்துக் கொண்டு பாக்யராஜின் அலுவலத்துக்கு சென்றால், அங்கு அலுவலகமே பகல் மாதிரி விழா கொண்டாட்டத்தில் இருந்திருக்கிறது.

பல பெண்கள் வயதான தோற்றத்தில் பெண்கள் மேக்கப்புடன் அமர்ந்திருக்க, அவர்களை பார்த்துக் கொண்டே சென்ற கோவைசரளாவுக்கு பாக்யராஜிடம் இருந்து, இவுங்களுக்கும் ஓல்டு கெட்டப் போட்டு அழைச்சிட்டு வாங்க என்கிற ஆணை பிறக்க அதிர்ந்து போயிருக்கிறார், கோவை சரளா.

எனக்கு வயதான வேடமா? அதுவும் பாக்யராஜுக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமா? இதற்காக இந்நேரத்துக்கு அவரசர அவசரமாக அழைத்து வந்தார்கள் என்று என்று ஆதங்கப்பட்டு, அம்மா வேடத்திலா முடியவே முடியாது என்று மறுப்பதற்குள், மேக்கப், விக், உடை என்று ஆள்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள்.

மேக்கப் டெஸ்ட் போட்டுக் கொண்டு பாக்யராஜிடம் சென்றார், கோவை சரளா. பாக்யறேஆசுக்கு பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் இந்த அம்மா வேடத்தில் நடி. அதன் பிறகு பாரு. உனக்கு நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று பாக்யராஜ் சொன்னதும், ஒரு சீனியர், அனுபவம் உள்ளவர், முதல் வாய்ப்பு கொடுத்தவர் சொல்கிறாரே என்று நடிக்க ஒப்புக் கொண்டார், கோவை சரளா.

பாக்யராஜ் சொன்னது போலவே முந்தனை முடிச்சு படத்தில் நடித்த பிறகு நல்ல பெயர் கிடைத்தது.  அதன் பிறகு எல்லா ஹீரோவுக்கும் அம்மாதான். ஜப்பானில்  கல்யாணராமன் படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்த பிறகு தொடர்ந்து கவுண்டமணி, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன் என ஏராளமான படங்களில் அவர்களின் கொட்டனியில் நகைச்சுவை நடிகையாக மிளிர்ந்தார் கோவை சரளா. அதிலும் கரகாட்டகாரன் படத்தில் கரகட்டகாரியாக அவர் நடித்து பேசிய வசனமும், படத்தின் வெற்றியும் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.

அதன் பிறகு வடிவேலு, விவேக் என பல முன்னணி நகைச்சுவை கலைஞர்களுடன் பல படங்களில் நடித்தார். கோவை சரளாவின் கொங்கு தமிழும்வடிவேலுடன் இவர் இணைந்து நடிக்கும் காதாபாத்திரங்களும் மக்களை இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

வி.சேகரின் இயக்கத்தில் உருவான பொண்டாட்டி சொன்னா  கேட்கணும்வரவு எட்டணா  செலவு பத்தணா, பொறந்த வீடா புகுந்த வீடா, பொங்கலோ பொங்கல், காலம் மாறி போச்சுவிரலுக்கேத்த வீக்கம் என பல படங்கள் அவருடைய நடிப்பு திறமையை நன்கு வெளிபடுத்திய படங்கள். அதே போல டி.பி. கஜேந்திரனின் பட்ஜெட் பத்மநாபன், இராமநாராயணனின் கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வநாதன் ராமமூர்த்தி என பல படங்கள் அவருக்கு நல்ல வாய்ப்பை தந்தன.

கமல் தயாரித்த மகளீர்க்காக படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், கமல் ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்து பாராட்டினை பெற்றார். முதலில் கமலின் மனைவியாக சதிலீலாவதி படத்தில் நடிக்க வைக்க அந்தப் படத்தின் இயக்குநர் பாலு மகேந்திரா ஒத்துக் கொள்ளவே இல்லையாம். கமல்தான் இந்த பிடிவாதமாக இருந்து கோவை சரளா நடிக்க காரணமாக இருந்தாராம்.

தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவர் நடித்த படங்கள் தெலுங்கு மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், நேரடி தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்து வந்தார் கோவை சரளா.

1983 இலிருந்து 2008ஆம் ஆண்டு வரை இருபத்தி ஐந்து ஆண்டுகள் சினிமாவில் அசத்திய கோவை சரளா,  2008 ஆம் ஆண்டிலிருந்து சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மீண்டும் 2011 ல் முனி படத்தில் தொடங்கிய அவரது நடிப்பு பயணம், காஞ்சனா, கண்ணா லட்டு திங்க ஆசையா, தில்லு முள்ளு, அரண்மனை என தொடர்கிறது.

‘என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்’ என்று பேசிய இவர் கரகாட்டக்காரன் படத்தில் பேசிய வசனம், ’சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’ என்று ஷாஜஹான் படத்தில் பேசிய வசனமும் ரசிகர்களிடையே பிரபலம், அதேபோல அவர் வடிவேலுவை அடித்த காட்சிகள், ஜப்பனுக்கு கவுண்டமனியுடன் சென்ற காட்சிகள் என பல படங்களில் பல காட்சிகள் கோவை சரளா என்றாளே ஞாபகத்து வருகின்றன்.

நடிப்பை  தவிர்த்து சினிமாத்துறையில்   "சிறையில் பூத்த சின்ன மலர்" மற்றும் "வில்லு" போன்ற படங்களில் இவர் பாடியுள்ளார். "உழைத்து வாழ வேண்டும்"  என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னக மொழிகளில் இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கோவை சரளா, சிறந்த நகைச்சுவை நடிகைகான தமிழக அரசின் விருது ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்திற்காக பெற்றவர், ஆந்திர அரசின் நந்தி விருது, ராயலசீமா ராமண்ணா சௌத்ரி, ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ ஆகிய இரு படங்களுக்காக, சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான விருதினை இருமுறை பெற்றிருக்கிறார்.

பிரபல பத்திரிகைகள், ஊடகங்கள், தனியார் அமைப்புகள் வழங்கிய ஏராளமான பரிசு கேடயங்களையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கும் கோவை சரளா, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன் பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

நகைச்சுவை திறன் என்பது அனைவருக்குமே  அமைந்துவிடாது. அது ஒரு தனித்துவமான திறன். ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண் நகைச்சுவை நடிகைகள் குறைவாகவே உள்ளனர். அப்படி இருந்தாலும் தனது கொங்கு தமிழாலும், அபாரமான நடிப்பு திறமையாலும் காமெடியில் தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தவர்தான் கோவை சரளா. ஆச்சி மனோரம்மாவிற்கு அடுத்து நகைச்சுவையில் கலக்கியவர் என்றால் அது கோவை சரளா தான்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. 1935 ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி பிறந்தவர். இவருடைய தந்தை இராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்துராமனுக்கு செல்வமணி, சுவாமிநாதன், சுப.வீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு.

எஸ்.பி.முத்துராமனின் தந்தை இராம.சுப்பையா, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். இதனால் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். கல்லக்குடி போராட்டத்தில் கருணாநிதியுடன் கைதாகி சிறை சென்றவர். அவர் செட்டிநாட்டில் திராவிட இயக்கம் வளரக் காரணமாக இருந்தவர் என்று கருணாநிதியே கூறி உள்ளார்.

இராம.சுப்பையா 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். இராம.சுப்பையா மனைவி விசாலாட்சியும் அந்த காலத்திலேயே மேடைகளில் ஏறி சுயமரியாதை இயக்க கருத்துக்களை பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.முத்துராமன் அவர்களுடன் பாலன்
தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும் போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார். அவரது கலை ஆர்வத்திற்கு பாதிரியார் மச்சோடோ ஊக்கமளித்தார்.

காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

1952-ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜிகணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்துராமன், "இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்'' என்று முடிவு செய்தார். அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் சென்னை புறப்பட்டார், முத்துராமன். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்துவிட்டார். பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.
இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக்கொடுத்தனர். மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார்.

தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் - சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது.
 
ரஜினி நடித்த புவனா ஒரு கேள்விக்குறி, ஆடு புலி ஆட்டம், ப்ரியா, ஆறிலிருந்து அறுபது வரை, முரட்டுக்காளை, நெற்றிக்கண், கழுகு, ராணுவ வீரன், போக்கிரிராஜா, பாயும்புலி, புதுக்கவிதை, அடுத்த வாரிசு, நல்லவனுக்கு நல்லாவன், ஸ்ரீ ராகவேந்தர், மிஸ்டர் பாரத், மனிதன், வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், ராஜா சின்ன ரோஜா, அதிசய பிறவி, பாண்டியன் என ரஜினி நடித்த 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

அதே போல கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானவர் கமல் நடித்த மோகம் முப்பது வருஷம் படத்தை இயக்கினார். அதன் பிறகு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நடித்த சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, எனக்குள் ஒருவன், உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை

விஜயகாந்த் நடித்த தர்ம தேவதை, நல்லவன், சத்யராஜ் நடித்த உலகம் பிறந்தது எனக்காக, விக்ரம் நடித்த காவல் கீதம் என 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.

1977 ஆம் ஆண்டு ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, 1978 ஆம் ஆண்டு  புவனா ஒரு கேள்விக்குறி படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருதுகள் பெற்றார். 1980 ஆம் ஆண்டு  ஆறிலிருந்து அறுபது வரை படத்துக்கு தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்றார்.

தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர். துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜனிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. .



இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் மனைவி பெயர் கமலா. இவர்களுக்கு சுப்பைய்யா என்கிற மகனும, மீனா நாச்சியப்பன், விசாலாட்சி முத்தையா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.

நடிகர் கவுண்டமணி

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம் எனும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி  பிறந்தவர் க்வுண்டமணி. இவரது இயர் பெயர் சுப்பிரமணி. தந்தை பெயர் கருப்பையா. தாயார் பெயர் அன்னாம்மாள் என்கிற் காளியம்மாள். இவக்கு மயிலாத்தாள் என்கிற சகோதரி உள்ளார்.

வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். அவரை அவரது தந்தை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடம் போகாமல் நாடகம் பார்க்கவே ஆசைப் படுவாராம். அதனால் அவரது விருப்பப் படியே விட்டுவிட்டாராம் தந்தை.

இப்போது சினிமாவில் இத்தனை வாய் பேசும் கவுண்டமணி, சிறு வயதில் அதிர்ந்து பேச மாட்டாராம். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவாராம். ஒரு முறை அக்ரஹாரத்தில் நடந்த ஒரு நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடித்தாராம் கவுண்டமணி. நாடகம் முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்று பாராடினாராம். அன்றிலிருந்துதான் ‘கவுண்டமணி’யானார் இவர்.

15 வயதில் ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் அவரது சகோதரி அவரை சென்னைக்கு அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டாராம். பிறகு எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்து, பாரதி ராஜா இயக்கிய 16 வயதினில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து பெரும் வெற்றி கண்டார். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, முறை மாமன், சூரியன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் என பல படங்களில் அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’போன்ற சில படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்

கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.  இவர் மட்டும் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்மை மற்றும் 49ஓ படங்களில் நடித்து வருகிறார். கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.

திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற இவர், நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

கவுண்டமணிக்கு புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு கூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர். 

ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் பார்த்து விடுவார். படத்தைப் பற்றி நண்பர்களுடன் பேசுவார். ஆனால், தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார். அதே போல பேட்டி என்றால் அட போங்கப்பா என்று நாம என்ன செய்துவிட்டோம் என்று அன்பாக மறுத்து விடுவார்.

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

தமிழ்த் திரையுலகின் பிதாமகர் என்று தென்னிந்தியத் திரையுலகினர் அனைவராலும் கொண்டாடப் படும் கே.பாலசந்தர்  தஞ்சாவூர் மாவட்டம் நன்னீலம் அருகே உள்ள நல்ல மாங்குடி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் கைலாசம். தாயார் பெயர் காமாட்சி அம்மாள் இவருடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரரும், நான்கு சகோதரிகளும்.

இவரது மனைவி பெயர் ராஜம்., இவரது மூத்த மகன் கைலாசம் சின்னத்திரை தயாரிப்பில் பல சாதனைகள் புரிந்தவர். இப்போது புதிய தலை முறை செய்தித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றி வருகிறார் .இளைய மகன் பிரசன்னா திரைத்துறையில் ஈடு .படாமல் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்

இவரது ஒரே மகளான புஷ்பா கந்தசாமி திரைத் துறையில் பிரபலமான தயாரிப்பாளராக உள்ளது மட்டுமின்றி பல திரைத்துறை சார்ந்த அமைப்புகளில் பொறுப்பிலும் இருந்துள்ளார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி ஜுவாலஜி படித்த இவர் முத்துப்பேட்டை பள்ளியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு சென்னையில் உள்ள அக்கவுண்ட் சென்ட்ரல் அலுவலகத்தில் சூப்ரெண்ட் அதிகாரியாக வேலை பார்த்தார். அப்போது முதல் நாடகம் மற்றும் கலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இவர் இயக்கிய மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற மேடை நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு  கிடைத்தது.

இவரது திறமையை பார்த்து எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை இயக்குனர்  பி.மாதவன், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியஇருவரும்வழங்கினார்கள்.

இவர் 1965ஆம் ஆண்டு நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், தில்லுமுல்லு, புன்னகை மன்னன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றுமுடிச்சு, அவர்கள், உன்0னால் முடியும் தம்பி என்று எண்ணற்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இவருடைய பெரும்பாலான படங்களில் மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் கருப் பொருளாக விளங்கின.

இன்று சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தை திரை உலகிற்கு தனது அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தி அவரது திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன் இவர்தான்

அதே போன்று தனது திறமைக் கேற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனை செதுக்கிய பெருமைக்கு சொந்தக்காரரும் இவரே

ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், விஜயகுமார், ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ், முரளி, குயிலி, படாபட் ஜெயலட்சுமி, எனப் பல நடிகர் நடிகைகளை தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்திய இவர்தான் வேற்று மொழிகளில் இருந்து சுஜாதா, ஷோபா, சரிதா, சரத்பாபு எனப் பல நட்சத்திரங்களை தமிழுக்கு அழைத்து வந்தவர்

மௌலி, விசு, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி‌.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், காத்தாடி ராமமூர்த்தி என சினிமாவுக்கு இவர் அழைத்து வந்த நாடகக் கலைஞர்கள் பட்டியல் நீளமானது

கோமல் சுவாமிநாதன் எழுதிய தண்ணீர் தண்ணீர் நாடகத்தை அதன் சாரம், காரம் எதுவுமே குறையாமல் படமாக்கி அப்படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் பல தரப்பட்ட கதைகள் மூலம் திரை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வலுவானது

ரஜினிக்கு தில்லு முல்லு  என்ற நகைச்சுவை படத்தின் மூலம் புதிய பரிமாணத்தைத் தந்த இவர்தான் சுகாசினிக்கு சிந்துபைரவி படம் மூலம் தேசிய விருது பெற்றுத் தந்தார். அதில் இசை சாம்ராஜியம் நடத்திய இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கவும் இவரே காரணம்

இவர் இயக்கிய ஏக் துஜே கேலியே இந்தியில் வசூலில் சாதனை புரிந்த படம். இப்படத்தின் மூலம் தான் கமல்ஹாசன் இந்திப் பட உலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்த இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது போன்ற உயர் விருதுகளை வழங்கி கௌரவித்தது.

தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு வழங்கிய விருதுகளை எண்ணற்ற முறை பெற்ற இவர் வெளிநாடுகள் பல வற்றில் கணக்கிலடங்காத விழாக்களில் பாராட்டப்பட்டுள்ளார்

பிற இயக்குனர்களுக்கும் தனது கவிதாலயா நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு அளித்த இவர். சின்னத்திரை உலகிலும் தனது கம்பீரமான முத்திரையை அழுத்தமாகப்பதித்தவர்,

திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, போன்ற பல முக்கியமான திரைத் துறை அமைப்புகளில் தலைவராக பதவி வகித்த பெருமையும் இவருக்குண்டு

இயக்குனர் மகேந்திரன் வாழ்க்கை வரலாறு

இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.

இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.

கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார். அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.

"இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு இனமுழக்கம் பத்திரிகை நிருபராக மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.

"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். மாத சம்பளம் வாங்கிக் கொண்டு பொன்னியின் செல்வன் நாவலை திரைக்கதைக்கு மாற்றி எழுதினார் மகேந்திரன்.

ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும் திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

"அனாதைகள்'' என்ற நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும் ஒப்பந்தம் செய்தார், எம்.ஜி.ஆர். அந்தப் படத்தின் பைனான்சியர் இறந்ததால் படம் பாதியில் நின்றுவிட்டது.

இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த மகேந்திரனுக்கு, 1966-ம் ஆண்டு ஜெய்சங்கர் நடித்த "நாம் மூவர்'' படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றி அதே நிறுவன தயாரிப்பில் உருவான "சபாஷ் தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய படங்களுக்கும் கதை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

காலம் அவரது திறமையை பார்க்க வைத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும் கதை எழுதினார். அந்தப் படம் நிறைவடைந்ததும், "துக்ளக்'' பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார்.

துக்ளக் பத்திரிகை அலுவலகத்திற்கு ஆசிரியர் "சோ''வை சந்திக்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும்  மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டுக் கொண்டனர்.

மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று "இரண்டில் ஒன்று'' என்கிற பெயரில் ஐந்து நாட்களில் ஒரு நாடகத்தை எழுதி கொடுத்தார், மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை நடித்தார்.      

"இரண்டில் ஒன்று’ நாடகத்தை பார்க்க வந்த சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான் நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று'' என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க, மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது.  100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.

"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம் மகேந்திரனுடையது. பி.மாதவன் இயக்கினார். எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படமானது

அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம் முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார் மகேந்திரன்.

ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம், தையல்காரன், காளி, அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள், அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர், கங்கா, ஹிட்லர் உமாநாத், தெலுங்கு மொழியில் சேலஞ்ச் ராமு ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார், மகேந்திரன்.

தொடர்ந்து கதை எழுதி வந்த அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. இதனால், ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்தார். இதை அவரது நண்பர் கமலஹாசன் ஏற்கவில்லை. அப்போது அவர் நடித்திருந்த மலையாளப் படம் ஒன்றின் தமிழ் மொழிமாற்றத்துக்கு வசனம் எழுத வைத்தவர், அடுத்து தான் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கிற நம்பிக்கையை தந்தார்.

அதே போல ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்த கமல்ஹாசன், அந்தப் படத்தில் நடிக்க முடியாவிட்டாலும் படத் தயாரிப்பிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் உதவி இருக்கிறார்.

அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவலை "முள்ளும் மலரும்” என்கிற பெயரில் ரஜினி, ஷோபா நடிப்பில் இயக்கினார் மகேந்திரன். இந்தப் படத்திற்கு தனது ரசனைக்கேற்ற ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் மகேந்திரன் அலைந்த போது, பாலுமகேந்திராவை ஒளிபதிவாளராக சிபாரிசு செய்து, உதவி இருக்கிறார், கமல்ஹாசன்.

ரஜினி, ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உட்பட பலர் நடிப்பில் பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் வெளியான "முள்ளும் மலரும்'' படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன், இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ் பெற்றார்.

அதன் பிறகு, பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை "உதிரிப்பூக்கள்.'' என்கிற படமாக இயக்கினார். சிறந்த கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும் அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன் -சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்கை இயக்கினார். 1980-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று சென்னையில், தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.

"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது "பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.

1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின் தியேட்டர்களில் திரையிட்டது.

தொடர்ந்து மெட்டி, நண்டு, கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார் மகேந்திரன்.

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை படத்தை எடுத்தார். மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற படம், மகேந்திரனின், இயக்கத்தில் உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி, கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர் நடித்திருந்தனர்.

மகேந்திரன் போல ஒரு இயக்குநர் மிக அபூர்வம். மிகவும் வெற்றிகரமான இயக்குநராக செயல்பட்ட காலத்தில் அவர் நினைத்திருந்தால் ஏராளமான படங்களை இயக்கி இருக்கலாம். ஆனால், தரமான படங்களை தருவது மட்டுமே அவரின் கோட்பாடாக இருந்தது. சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்.

தான் கதை எழுதும் திறமை கொண்டிருந்தாலும், பிறரது கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பாலமாக இருந்தவர் மகேந்திரன்.

மகேந்திரனின் முதல் படம் முள்ளும் மலரும் துவங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார். தமிழில் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா அறிமுகமான படம் முள்ளும் மலரும்.

கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழில் உதிரிப்பூக்கள் படத்தில் அறிமுகம் செய்தவர் மகேந்திரன். அதே போல பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே. கமலஹாசனின் சகோதரர் சாருஹாசனைத் திரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம் செய்தவர்.

விஜயனை அறிமுகம் செய்தது இயக்குநர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து, திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து, பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.

மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில் அறிமுகமானவர் சுஹாசினி.

கால ஓட்டத்தில் அவரது மகன் ஜான் திரையுலகில் அடியெடுத்து வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கினார். அதன் பிறகு அவருக்கும் சரியாக வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில் விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று இலங்கை சென்ற மகேந்திரன், அங்கு தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்பட பயிற்சி அளித்துள்ளார். அப்போது கிடைத்த அனுபவத்தை வைத்து பனிச்சமரம் என்கிற குறும்படத்தையும் இயக்கினார் மகேந்திரன். அந்தப் படம் முழுக்க முழுக்க புலிகளைப் பற்றிய படம். அது அவருடைய மாஸ்டர் பீஸ் வொர்க் என்றே சொல்லலாம். அதன் பிறகு பிரபாகரன் தயாரிப்பில் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் ஆணிவேர் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் வெளிநாடுகளில் மட்டும் வெளியானது.

மகனுக்கு விஜய் நடிப்பில் சச்சின் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு, திடீர் என அழைத்து விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகும் தெறி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்ட போது திகைத்து நின்றவர், பிறகு அன்புக்கு கட்டுப்பட்டு நடித்தார்.

மகேந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று விரும்பியவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன். ஆனால், அந்த வாய்ப்பு அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. பிறகு தான் இயக்கிய நிமிர் படத்தில் மகேந்திரனை ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்து இணை வசன கர்த்தாவாக பணிபுரிய வைத்து மகிழ்ந்தார்.

தொடர்ந்து சீதக்காதி, பேட்ட, காமராஜ், மிஸ்டர் சந்திரமௌலி, பூமராங், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களிலும் நடித்து வந்த மகேந்திரன், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று காலமானார்.

தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா தேவர்,  சோ ஆகியவர்களைக் குறிப்பிடும் மகேந்திரன், 'என்னை இது வரையில் நடத்தி வந்தது என் மனைவி ஜாஸ்மின்‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!.

மகேந்திரன் – ஜாஸ்மின் தம்பதிக்கு ஜான் என்கிற மகனும், டிம்பிள், அனுரீட்டா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

தமிழ் திரையுலகில். ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்து இருந்தாலும் திருப்புமுனை திரைப்படங்கள் அல்லது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் சில மட்டுமே. அதில் எப்போதும் மகேந்திரனின் படங்களும் உயிர் துடிப்புடன் இருக்கின்றன. நல்ல சினிமாவிற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டதே அவரது மனசாட்சியாக உயர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன...