இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர். இவருக்கு அலெக்ஸாண்டர் என பெயர் வைத்தனர்.
இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ''
பொருளாதாரம் படித்தார்.
கல்லூரி காலங்களில் ஒட்டப் பந்தய்ங்களில் கலந்து
கொண்டார். சீனியர் விளையாட்டு வீரராக ஜொலித்த எல்.மகேந்திரனால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார் மகேந்திரன்.
1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த
விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில்
மகேந்திரன் பேசினார்.
"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள்.
பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சினிமாவில் காதலியோடு
பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்று பெசினார்.
இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து,
நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க
தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி
கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார். கல்லூரியில் படிக்கும் போதே கையெழுத்து
பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு
கொள்வார்.
சட்டக் கல்லூரியில் படிக்க சென்னை வந்தவர், இனமுழக்கம் பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலைக்கு சேர்ந்தார்.
அதில் சினிமா விமர்சனமும் எழுதினார்.
"இன்பக்கனவு'' நாடகத்தில்
நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.
அந்தக் கூட்டத்துக்கு இனமுழக்கம் பத்திரிகை நிருபராக
மகேந்திரன் சென்றுருந்தார். அவரைப் பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.
"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள்.
உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.
மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு
சென்றார். மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்து
கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை திரைக்கதை
எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர். மாத சம்பளம் வாங்கிக் கொண்டு பொன்னியின் செல்வன் நாவலை
திரைக்கதைக்கு மாற்றி எழுதினார் மகேந்திரன்.
ஒரு கட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தை படமாக்கும்
திட்டம் தள்ளிப் போனதால் தனது நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி
மகேந்திரனிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.
"அனாதைகள்'' என்ற
நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார். அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்து கதாநாயகியாக சவித்திரியையும்
ஒப்பந்தம் செய்தார், எம்.ஜி.ஆர். அந்தப் படத்தின் பைனான்சியர் இறந்ததால் படம்
பாதியில் நின்றுவிட்டது.
இந்த நிலையில் தான் நடித்த "காஞ்சித்
தலைவன்'' படத்தில் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி
இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்.
நடித்த படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த மகேந்திரனுக்கு, 1966-ம் ஆண்டு
ஜெய்சங்கர் நடித்த "நாம் மூவர்'' படத்திற்கு கதை எழுதும்
வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றி அதே நிறுவன தயாரிப்பில் உருவான "சபாஷ்
தம்பி'', "பணக்காரப்பிள்ளை'' ஆகிய
படங்களுக்கும் கதை எழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
காலம் அவரது திறமையை பார்க்க வைத்தது. நடிகர்
திலகம் சிவாஜி கணேசன் நடித்த "நிறைகுடம்'' படத்திற்கும்
கதை எழுதினார். அந்தப் படம் நிறைவடைந்ததும், "துக்ளக்''
பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்தார்.
துக்ளக் பத்திரிகை அலுவலகத்திற்கு ஆசிரியர் "சோ''வை சந்திக்க வந்த நடிகர் செந்தாமரையும், சிவாஜி நாடக மன்ற இயக்குனருமான எஸ்.ஏ.கண்ணனும் மகேந்திரனிடம் ஒரு நாடகம் எழுதித்தரும்படி கேட்டுக்
கொண்டனர்.
மிகவும் கண்டிப்பான போலீஸ் அதிகாரிக்கு ஒரு
அயோக்கியன் மகனாக இருக்கிறான் என்று "இரண்டில் ஒன்று'' என்கிற பெயரில் ஐந்து நாட்களில் ஒரு நாடகத்தை எழுதி கொடுத்தார்,
மகேந்திரன். அந்த நாடகம் அரங்கேற்றமானது. எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் செந்தாமரை
நடித்தார்.
"இரண்டில் ஒன்று’ நாடகத்தை பார்க்க வந்த
சிவாஜி, "சிவாஜி நாடக மன்றம் மூலம் இந்த
நாடகத்தை நடத்தலாம், அதில் எஸ்.பி.சவுத்ரியாக நான்
நடிக்கிறேன்'' என்று கூறினார். "இரண்டில் ஒன்று''
என்ற பெயர் "தங்கப்பதக்கம்'' என்று
மாற்றப்பட்டது. சிவாஜிகணேசன், எஸ்.பி.சவுத்ரியாக நடிக்க,
மியுசிக் அகாடமியில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. 100-வது நாளாக நாடகம் நடந்தபோது, மகேந்திரனுக்கு சிவாஜிகணேசன் மோதிரம் அணிவித்தார்.
"தங்கப்பதக்கம்'' நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. கதை-வசனம்
மகேந்திரனுடையது. பி.மாதவன் இயக்கினார். எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து
காட்டினார். படம் மகத்தான வெற்றி பெற்றது. இந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் படமானது
அதனைத் தொடர்ந்து "திருடி'' என்ற படத்திற்கு கதையும், "மோகம்
முப்பது வருஷம்'' படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதினார்
மகேந்திரன்.
ஆடுபுலி ஆட்டம், வாழ்ந்து
காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷிமூலம்,
தையல்காரன், காளி,
அவளுக்கு ஆயிரம் கண்கள், சக்கரவர்த்தி, சொந்தமடி சொந்தம், நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய
படங்களுக்கு கதை, வசனமும், நாங்கள்,
அழகிய பூவே ஆகிய படங்களுக்கு திரைக்கதை வசனமும், பருவமழை, பகலில் ஒரு இரவு, கள்ளழகர்,
கங்கா, ஹிட்லர் உமாநாத், தெலுங்கு மொழியில் சேலஞ்ச் ராமு ஆகிய படங்களுக்கு கதையும் எழுதினார்,
மகேந்திரன்.
தொடர்ந்து கதை எழுதி வந்த அவருக்கு படம்
இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. இதனால், ஊருக்கு திரும்பி செல்ல முடிவு செய்தார்.
இதை அவரது நண்பர் கமலஹாசன் ஏற்கவில்லை. அப்போது அவர் நடித்திருந்த மலையாளப் படம்
ஒன்றின் தமிழ் மொழிமாற்றத்துக்கு வசனம் எழுத வைத்தவர், அடுத்து தான் நாயகனாக
நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கிற நம்பிக்கையை தந்தார்.
அதே போல ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார்
தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்த கமல்ஹாசன், அந்தப் படத்தில்
நடிக்க முடியாவிட்டாலும் படத் தயாரிப்பிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் உதவி
இருக்கிறார்.
அண்ணன், தங்கை சென்டிமெண்டை மையமாக
வைத்து, உமா சந்திரன் எழுதிய நாவலை "முள்ளும் மலரும்”
என்கிற பெயரில் ரஜினி, ஷோபா நடிப்பில் இயக்கினார் மகேந்திரன். இந்தப் படத்திற்கு தனது
ரசனைக்கேற்ற ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் மகேந்திரன் அலைந்த போது, பாலுமகேந்திராவை
ஒளிபதிவாளராக சிபாரிசு செய்து, உதவி இருக்கிறார், கமல்ஹாசன்.
ரஜினி, ஷோபா, சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி உட்பட பலர் நடிப்பில் பாலு மகேந்திரா
ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் வெளியான "முள்ளும் மலரும்'' படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. கதை-வசன கர்த்தாவாக இருந்த மகேந்திரன்,
இந்த ஒரே படத்தின் மூலம் மிகச்சிறந்த இயக்குனர் என்று புகழ்
பெற்றார்.
அதன் பிறகு, பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன்
எழுதிய "சிற்றன்னை'' என்கிற குறுநாவலை
"உதிரிப்பூக்கள்.'' என்கிற படமாக இயக்கினார். சிறந்த
கலைப்படைப்பாக பாராட்டுகளை குவித்த "உதிரிப்பூக்கள்'', வசூலையும்
அள்ளிக் குவித்தது. படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா
கொண்டாடியது.
"உதிரிப்பூக்கள்'' படத்தைத் தொடர்ந்து, மகேந்திரன்
திரைக்கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்த
படம் "பூட்டாத பூட்டுக்கள்.''. அதன் பிறகு மோகன்
-சுகாசினி அறிமுகமான "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படத்கை
இயக்கினார். 1980-ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று சென்னையில்,
தொடர்ந்து ஒரு வருடம் ஓடியது.
"நெஞ்சத்தைக் கிள்ளாதே'' 1980-ம் ஆண்டின் சிறந்த மாநில மொழித் திரைப் படத்திற்கான
தேசிய விருதைப் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது
அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது
"பிரசாத்'' ஸ்டூடியோ எஸ்.ராமநாதனுக்கும் கிடைத்தது.
1982-ல் மாஸ்கோவில் நடந்த இந்திய கலாசார
விழாவிலும், "நெஞ்சத்தைக் கிள்ளாதே'' படம் திரையிடப்பட்டது. ரஷியா அரசாங்கம் இந்த படத்தை வாங்கி அந்த நாட்டின்
தியேட்டர்களில் திரையிட்டது.
தொடர்ந்து மெட்டி, நண்டு,
கண்ணுக்கு மை எழுது, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து ஆகிய படங்களுக்கு திரைக்கதை, வசனம்
எழுதி இயக்கினார் மகேந்திரன்.
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி
நடித்து 1980ல் வெளியான "ஜானி.'' படம் பெரும் வெற்றி
படமாக அமைந்தது. அதன் பிறகு கை கொடுக்கும் கை படத்தை எடுத்தார். மத்திய அரசின் தேசிய
திரைப்பட வளர்ச்சி கழகத்தின் நிதி உதவியில் "சாசனம்'' என்ற
படம், மகேந்திரனின், இயக்கத்தில்
உருவானது. செட்டிநாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில் அரவிந்தசாமி,
கவுதமி, ரஞ்சிதா, ஆகியோர்
நடித்திருந்தனர்.
மகேந்திரன் போல ஒரு இயக்குநர் மிக அபூர்வம். மிகவும்
வெற்றிகரமான இயக்குநராக செயல்பட்ட காலத்தில் அவர் நினைத்திருந்தால் ஏராளமான படங்களை
இயக்கி இருக்கலாம். ஆனால், தரமான படங்களை தருவது மட்டுமே அவரின்
கோட்பாடாக இருந்தது. சமரசம் இல்லாத சினிமா காதலர் மகேந்திரன்.
தான் கதை எழுதும் திறமை கொண்டிருந்தாலும், பிறரது
கதைகளைப் படமாக்குவதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும்
பாலமாக இருந்தவர் மகேந்திரன்.
மகேந்திரனின் முதல் படம் முள்ளும் மலரும் துவங்கி, அவரது பல படங்களில் சரத்பாபு இடம் பெற்றார். தமிழில் ஒளிப்பதிவாளராக
பாலுமகேந்திரா அறிமுகமான படம் முள்ளும் மலரும்.
கன்னட நடிகை அஸ்வினியைத் தமிழில் உதிரிப்பூக்கள்
படத்தில் அறிமுகம் செய்தவர் மகேந்திரன். அதே போல பேபி அஞ்சுவும் மகேந்திரனின் அறிமுகமே.
கமலஹாசனின் சகோதரர் சாருஹாசனைத் திரையுலகுக்கு உதிரிப் பூக்கள் படத்தின் வாயிலாக அறிமுகம்
செய்தவர்.
விஜயனை அறிமுகம் செய்தது இயக்குநர் பாரதிராஜா எனினும், அவருக்கு மறக்க இயலாத ஒரு வேடத்தை உதிரிப் பூக்களில் அளித்து,
திரையுலகில் அவரைக் கதாநாயகனாக உயர்த்தியவர் மகேந்திரன். இதைத் தொடர்ந்து,
பல படங்களில் விஜயன் கதாநாயகனாக நடித்தார்.
மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தில்
அறிமுகமானவர் சுஹாசினி.
கால ஓட்டத்தில் அவரது மகன் ஜான் திரையுலகில்
அடியெடுத்து வைத்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடித்த சச்சின் படத்தை
இயக்கினார். அதன் பிறகு அவருக்கும் சரியாக வாய்ப்பு அமையவில்லை. இந்த நிலையில்
விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று இலங்கை சென்ற மகேந்திரன்,
அங்கு தமிழ் இளைஞர்களுக்கு மூன்று மாதங்கள் திரைப்பட பயிற்சி அளித்துள்ளார். அப்போது
கிடைத்த அனுபவத்தை வைத்து பனிச்சமரம் என்கிற குறும்படத்தையும் இயக்கினார்
மகேந்திரன். அந்தப் படம் முழுக்க முழுக்க புலிகளைப் பற்றிய படம். அது அவருடைய
மாஸ்டர் பீஸ் வொர்க் என்றே சொல்லலாம். அதன் பிறகு பிரபாகரன் தயாரிப்பில் மகேந்திரனின்
மகன் ஜான் மகேந்திரன் ஆணிவேர் என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம்
வெளிநாடுகளில் மட்டும் வெளியானது.
மகனுக்கு விஜய் நடிப்பில் சச்சின் படத்தை
இயக்கும் வாய்ப்பை கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு, திடீர் என அழைத்து விஜய் நடிப்பில்
அட்லி இயக்கத்தில் உருவாகும் தெறி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்ட
போது திகைத்து நின்றவர், பிறகு அன்புக்கு கட்டுப்பட்டு நடித்தார்.
மகேந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்ற
வேண்டும் என்று விரும்பியவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷன். ஆனால், அந்த வாய்ப்பு
அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. பிறகு தான் இயக்கிய நிமிர் படத்தில் மகேந்திரனை ஒரு
பாத்திரத்தில் நடிக்க வைத்து இணை வசன கர்த்தாவாக பணிபுரிய வைத்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து சீதக்காதி, பேட்ட, காமராஜ், மிஸ்டர்
சந்திரமௌலி, பூமராங், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களிலும் நடித்து வந்த மகேந்திரன்,
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு
காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று
காலமானார்.
தனது வாழ்க்கையின் நன்றிக்கு உரியவர்களாக
எம்.ஜி.ஆர், சிவாஜி, சின்னப்பா
தேவர், சோ ஆகியவர்களைக்
குறிப்பிடும் மகேந்திரன், 'என்னை இது வரையில் நடத்தி வந்தது
என் மனைவி ஜாஸ்மின்‘ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுவார்!.
மகேந்திரன் – ஜாஸ்மின் தம்பதிக்கு ஜான் என்கிற மகனும்,
டிம்பிள், அனுரீட்டா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.
தமிழ் திரையுலகில். ஏராளமான வெற்றி படங்கள் வெளிவந்து
இருந்தாலும் திருப்புமுனை திரைப்படங்கள் அல்லது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள்
சில மட்டுமே. அதில் எப்போதும் மகேந்திரனின் படங்களும் உயிர் துடிப்புடன் இருக்கின்றன.
நல்ல சினிமாவிற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டதே அவரது மனசாட்சியாக உயர்ந்து ஒளிவீசிக்
கொண்டிருக்கின்றன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக