செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நடிகர் முரளி வாழ்க்கை வரலாறு

நடிகர் முரளியின் அப்பா பெயர் சித்தலிங்கையா. நவஜோதி ஸ்டுடியோவின் அலுவலக உதவியாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர், இயக்குநர் சங்கர் சிங்கிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, திரைப்படங்களில் சிறிய கதாபத்திரங்களில் நடித்து, 1969 ஆம் ஆண்டில் ராஜ்குமார் நடித்த மேயர் முத்தண்ணா கன்னடப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து இருபத்தி மூன்று படங்களை இயக்கியவர். பல படங்களை தயாரித்தவர்.

கன்னட மொழிப் பேசும் சித்தலிங்கையா, தமிழ்நாட்டில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது முதலியார் வகுப்பை சேர்ந்த தனலட்சுமி என்கிற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முரளி, சுரேஷ் என இரு மகன்களும், சாந்தி என்கிற மகளும் பிறந்தனர்.

1964 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி பிறந்த முரளி, ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்து வளர்ந்தார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தவர், அதன் பிறகு தந்தை இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். 


தனது தந்தையைப் போல பிரபல நடிகர் நடிக்கும் படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் முரளியின் கனவாக இருந்தது. ஆனால், அவரது கருப்பும் அழகும் கவர்ந்த இயக்குநர் ஏறங்கி சர்மா, நீ கதாநாயகனாக நடிக்கலாம் வா என்று அவரை அழைத்தார். ‘கெலுவினா ஹெஜ்ஜே’ என்கிற  அந்தப் படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் தயாரித்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான கெலுவினா ஹெஜ்ஜே எதிரப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை.

இதனால், முரளியின் தந்தை சித்தலிங்கையா பிரபல நாவலாசிரியர் பி.எல்.வேணு கதை வசனத்தில் ‘பிரேமா பர்வா’ என்கிற படத்தை முரளியின் நடிப்பில் தொடங்கினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், தமிழில் அந்தப் படத்தின் உரிமையை வாங்கி தனது கவிதாலயா நிறுவனத்தின் பெயரில் பூவிலாங்கு என்கிற பெயரில் தயாரித்து தனது உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் கதாநாயகனாக முரளி, கதாநாயகியாக குயிலி ஆகியோரை அறிமுகப்படுத்தினார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இதில் இளையராஜா பாடிய ‘ஆத்தாடி காத்தாடி பாவடை’ என்கிற பாடலும், ஜானகி பாடிய ‘போட்டானே பூவிலங்கு’ என்கிற பாடலும் யேசுதாஸ் பாடிய ‘கண்னில் எதோ மின்னல்’ என்கிற பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. 1982 ஆம் ஆண்டு படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழில் முரளியின் முதல் வாய்ப்பு.   

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதே முரளி, அமீர்ஜான் கூட்டணியில் புதியவன் என்கிற படத்தையும் தயாரித்தார், கே.பாலசந்தர். அடுத்து மணிவண்ணன் இயக்கத்தில் இங்கேயும் ஒரு கங்கை படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் பகல் நிலவு படத்திலும் ஒப்பந்தமானார் முரளி.

இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு படம் அவருக்கு அடுத்த வெற்றியை கொடுத்து நம்பிக்கையூட்டியது. பாரதிராஜாவின் மைத்துனரும், அவரது உதவியாளருமான மனோஜ்குமார் இயக்குனராக அறிமுகமான மண்ணுக்குள் வைரம் படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து சிவாஜியுடன் குடும்பம் ஒரு கோவில் படத்திலும் நடித்தார், முரளி.

அமீர்ஜான் இயக்கத்தில் கார்த்திக்குடன் வண்ணக் கனவுகள், ராமநாராயணன் இயக்கத்தில் எஸ்.வி.சேகருடன்  தங்கமணி ரங்கமணி, பிரபுவுடன் நினைவு சின்னம் போன்ற படங்களில் நடித்து வந்தவருக்கு, கார்வண்ணன் இயக்கிய பாலம் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்ததது. அந்தப் படத்தில் இருந்து புரட்சி நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

அடுத்து புரட்சிகரமான கருத்தை கொண்ட காதல் படமான புது வசந்தம் படத்தில் நடித்து இயக்குநர் விக்ரமன் உட்பட படக் குழுவினர் அனைவரும்  வெற்றிபெற உதவியாக இருந்தார், முரளி.

அடுத்து மணிவாசகம் இயக்கிய ‘நம்ம ஊரு பூவாத்தா’ படமும், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘சாமி போட்ட முடிச்சு’ படமும் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. கதிர் இயக்குனராக அறிமுகமான இதயம் படத்தில் காதலை சொல்ல முடியாமல் தவித்த முரளியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், முரளி.

மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’, விக்ரமனின் முதல் படமான ‘புது வசந்தம்’, கதிரின் முதல்படமான ‘இதயம்’ என்று முரளி ஹீரோவான படங்களின் வெற்றி அவரை புது இயக்குநர்களின் தனிப்பெரும் ஹீரோவாகக் கருத வைத்தது. ‘முரளியின் முதல் படத்தை இயக்கும் இயக்குநர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வருவார்கள்’ என்ற சென்டிமென்ட்படி, அந்தக் காலகட்டத்தில் படம் இயக்க வந்தவர்களின் முதல் ஹீரோ சாய்ஸ் முரளியாகத்தான் இருந்தார்.

முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் முரளி. 1992 முதல் 1994 வரை ஒரு பெரிய வெற்றிப் படம் கிடைக்காத என்று காத்திருந்த அவருக்கு விக்ரமன் எழுதி இயக்கிய பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சி என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அதன் பிறகு பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், தினம்தோறும் என தொடர்ந்து பல பேசப்படும் படங்களில் நடித்து அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணித்தார்.

பொற்காலம் படத்தில் மண்பானை செய்யும் தொழிலாளியாக அன்பான அண்ணனாக நடித்து ரசிகர்களை கலங்க செய்திருப்பார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடலே அவருக்காகதான் உருவாக்கப்பட்டது. சேரன் இயக்கத்தில் பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிக்கட்டு ஆகிய மூன்று படங்களிலும் முரளி நடித்துள்ளார்.

இதயம் படத்தில் காதல், பொற்காலம் படத்தில் பாசம், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நகைச்சுவை, அதர்மம் படத்தில் ஆக்‌ஷன் என்று அனைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற சிறந்த நடிகராக விளங்கினார்  முரளி. பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். இதனால், 2001ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது முரளிக்கு கிடைத்தது. அதே போல தமிழக் அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ள முரளி, கலைஞரின் கதை வசனத்தில் பாசக்கிளிகள் படத்திலும் நடித்திருக்கிறார்.

சிவாஜியுடன் மண்ணுக்குள் வைரம், குடும்பம் ஒரு கோவில், என் ஆச ராசாவே, விஜயகாந்த்துடன் என் ஆசை மச்சான், பிரபுவுடன் நினைவுச் சின்னம், பாசக்கிளிகள், சத்யராசுடன் பகல் நிலவு, பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம், சூர்யாவுடன் காதலே நிம்மதி, பார்த்திபனுடன் வெற்றிக் கொடிகட்டு, சரத்குமாருடன் சமுத்திரம், மம்முட்டியுடன் ஆனந்தம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் என்பத்தி ஒன்னு, கன்னடத்தில் ஒன்பது என தொண்ணூறு படங்களில் நடித்து முடித்த முரளி தனது தொன்னூற்றி ஓராவது படமாக, தனது மகன் அதர்வா கதாநாயகனான அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

த மகன் அதர்வாவை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முரளி ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அதனால் சினிமாவுக்கு தேவையான அடிப்படையான விஷயங்கள் எழ்துவும் அவருக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

தான் நடித்த படங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் நடித்த படங்களுக்கும் மகன் அதர்வாவை அழைத்து சென்றிருக்கிறார், முரளி. அதில் அவர் நடித்த `வாட்டாக்குடி இரணியன்’ படம் பார்த்த போது கிளைமாக்ஸ் காட்சியில் முரளி கதாப்பாத்திரம் இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அப்போது முரளியின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த அதர்வா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்திருக்கிறார்.

குனிந்து அதர்வா முகத்தைப் பார்த்த முரளி, `என் மடியிலதான்டா நீ உட்காந்திருக்க. நான் சாகளைடா” என்று சொல்லி அவரது அழுகையை நிறுத்தி இருக்கிறார்.

அப்படி கதையோடு ஒன்றிப் போன மகனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முரளி நினைக்காமல் இருந்ததற்கு காரணம், இயக்குனராக வரவேண்டும். உதவி இயக்குனராக என்னை சேர்த்து விடுங்கள் என்று அதர்வா கூறியதுதானாம். தனது தந்தையை போல, தன்னைப் போல இயக்குனராகவே முதலில் விரும்புகிறான் என்று நினைத்த முரளி, படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தாராம்.

ஆனால், சத்யஜோதி நிறுவனம் மூலம் பாணா காத்தாடி படத்தில் நடிக்கிற வாய்ப்பை காலம் வழங்கியது. தனக்கு இதயம் படம் மூலம் மக்களின் இதயங்களுக்கு கொண்டு சென்ற நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் மகனின் வாழ்க்கை துவங்குகிறது என்று மகிழ்ந்தார் முரளி.

படம் முடிந்து படத்தின் விளம்பர நிகழ்ஹ்ச்சிகளுக்கும் சென்று படத்தைப் பற்றியும், மகனின் நடிப்பு பற்றியும் பெருமையாக பேசி வந்தார் முரளி. ஆனால், மகன் நடித்த முதல் படமே தனக்கு கடைசிப் படமாக பதிவாகும் நிலையை 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி உருவாக்கியது.  

46 வயதில் திடீர் மாரடைப்பால் அவர் காலமானது அவரது குடும்பத்தை மட்டுமல்ல தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்தது.

நடிகர் முரளி, ஷோபா என்பவரை காதலித்து மணந்தவர். அவருக்கு அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மகள் காவ்யாவுக்கு மலேஷியாவில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருக்கும் ஆதித்யா என்பவருக்கு திருமணம் பேசி முடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார், முரளி. ஆனால், மகளின் திருமணத்தை நடத்திப் பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது. 

ஒரு நடிகன் என்றால் நல்ல நிறம், அழகு, உயரம் என்று கூறப்படும் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களும் இல்லாதவர், முரளி.

கறுப்பு, சாதாரண உயரம், மிகமிக எளிமையான தோற்றம் இதுதான் முரளி. ஆனால் அதுதான் அவரின் சிறப்பு.

முரளியின் படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, விரசமான காட்சிகளோ பார்க்க முடியாது. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படங்களில் தான் நடித்திருப்பார். அவருக்கு அதிகம் பிடித்த பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் அவருக்கு சலிக்காதாம்.

உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு என்று சொல்லும் அவர், இரண்டாவது மகன் ஆகாஷை சிங்கப்பூரில் எம்பிஏ படிக்க அனுப்பினார். சிங்கப்பூரில் தன்னுடன் படித்த சினேகா என்பவரை காதலித்தார், ஆகாஷ்.

விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திற்கு நிதி உதவி செய்து விஜய்யின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருக்கும்  விஜய்யின் மாமா... அதாவது அத்தையின் கணவர்தான் சேவியர் பிரிட்டோ. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்த்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அவரது மகள்தான் சினேகா.

ஆரம்பத்தில் ஆகாஷ், சினேகா காதலுக்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்ததாம். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. முரளியின் மகன் ஆகாஷ், தனது மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். அதனால், முரளியின் இரண்டாவது மகனும் திரையுலகிற்கு வருகிறார் என்று சொல்லும் போது முரளியின் மருமகளான சினேகா, எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு விளையாட்டு இரண்டாம் பாகத்தை இயக்கிய இருக்கிறார் என்பது இன்னொரு செய்தி அல்லவா...

தாத்தாவைப் போல படத்தயாரிப்பிலும் இறங்கிய அதர்வா இப்போது தனது பதினைந்தாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முரளியின் அப்பா சித்தலிங்கையா, முரளி, ஆகாஷ், சினேகா என முரளியின் குடும்பம் கலைக்குடும்பமாக திகழ்கிறது.

தொகுப்பு : ஜி.பாலன் 


முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி

தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் கலைஞர் மு. கருணாநிதி

திருவாரூர் அருகே உள்ள திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்டவர். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.

பதினைந்து வயதில் அவர் எழுதிய முதல் நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்த அன்று பெரும் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை அடைக்க நாகப்பட்டினம் சென்று கோபால் என்பவரிடம் நூறு ரூபாய்க்கு நாடகத்தை விற்று கடனை அடித்திருக்கிறார்.

அந்த பழனியப்பன் நாடகம், சாந்தா, `நச்சுக்கோப்பை' என்ற பெயரில் தமிழகத்தில் பல இடங்களில் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. பெரியாரின் எழுத்து, அண்ணாவின் எழுத்து கலைஞரை பெரியாரின் குடியரசு பத்திரிகையில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கு துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கலைஞரின் உறவினர் சிதம்பரம்.எஸ்.ஜெயராமன் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த உதயணன் என்ற திரைப்படத்துக்கு இசையமையக்க ஒப்பந்தமானார். அது தொடர்பாக அடிக்கடி ஜுபிடர் பிக்சர்ஸ் பட நிறுவனத்துக்கு சென்ற போது கதையாசிரியர் எஸ்..சாமியுன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவரிடம், கலைஞரின் திறமையைக் கூறி, சந்தர்ப்பம் வரும்போது அவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதை மனதில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, தனக்கு ராஜகுமாரி படத்தை இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்ததும், தன்னுடன் இணைந்து வேலை செய்ய கலைஞருக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே பல  நாடகங்களை எழுதிய அனுபவம் இருந்ததால் ஏ.எஸ்..சாமி சொன்னன காட்சிகளுக்கு உடனுக்குடன் வசனம் எழுதிக் கொடுத்தார், கலைஞர். வசனம் எழுதுவதில் கலைஞருக்குள்ள வேகத்தையும் ஆற்றலைப் பார்த்து அசந்து போன ஏ.எஸ்..சாமி முழு திரைப்படத்திற்கும் அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சும்; கலைஞரின் வசன வீச்சுமாக மக்கள் மனதில் நின்றது. ஆனால், படத்தின் டைட்டிலில் வசன உதவி கருணாநிதி என்றே வந்தது.

ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘அபிமன்யூ’ என்கிற புதிய படத்தை தொடங்கினார்கள். அதிலும் எம்.ஜி.ஆர்தான் கதாநாயகன். வசனம் எழுதும் பொறுப்பு கலைஞருக்கு வழங்கப்பட்டது. இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமி.

அந்தப் புராண கதைக்கு புதிய கோணத்தில் இலக்கிய நயத்தோடு வசன மழை பொழிந்தார் கலைஞர். இந்த முறையும் கலைஞருக்கு உரிய கௌரவம் வந்து சேரவில்லை! இயக்குனரே வசன உரிமையை எடுத்துக்கொண்டார். கொதித்துப் போன கலைஞர், பட முதலாளியிடம் காரணம் கேட்டபோது, “உன் பெயர் பிரபலமாகட்டும்; அதுவரை பொறுமையாக இரு!” எனச் சொல்லவே; கலக்கத்துடன் அந்த கம்பெனியை விட்டு வெளியேறி, ஊர் திரும்பினார், கலைஞர்.

படத்திற்கு எழுதுவது நின்று போனாலும், பத்திரிகையில் எழுதுவது, நாடகம் எழுதுவது என்று என்று எழுத்துப் பணியை தொடர்ந்தார், இந்த நிலையில் உடனே வரும் படி எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு தந்தி வந்திருந்தது.

‘ராஜகுமாரி’, ‘அபிமன்யு’ படங்களின் போதே எம்.ஜி.ஆர் –  கலைஞர் இடையே நல்ல நட்பு இருந்தது! அந்த நட்பை மனதில் வைத்து, நண்பரை கை கொடுத்து தூக்கி விடும் நோக்கத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்திற்கு கலைஞரை  சிபாரிசு செய்திருந்தார், எம்.ஜி.ஆர்.

முத்துசாமி என்பவர் தயாரிப்பில் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி ஜோடியாக நடித்தப் படம் ‘மருதநாட்டு இளவரசி’.  இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதினர் கலைஞர். இந்தப் படத்தின் டைட்டிலில் கதை – வசனம் மு.கருணாநிதி என்று தனியாக வந்தது. விளம்பரங்களிலும் கதை வசனம் கருணாநிதி என்று வெளியிட்டார்கள். படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தேவி நாடக சபைக்கு குண்டலகேசியை அடிப்படையாக வைத்து மந்திரிகுமாரி என்ற நாடகத்தை எழுதினர், கலைஞர். கும்பகோணத்தில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

மார்டன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாட்டு எழுதும் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞர் கா.மு.ஷெரிப், மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்துவிட்டு, அந்த நாடகம் பற்றியும், கலைஞரின் எழுத்துப் பற்றியும் பட அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கும்பகோணம் சென்று மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்த டி.ஆர்.சுந்தரம், நாடகம் பிடித்துவிட அந்த நாடகத்தை படமாக்கும் முயற்சியை எடுத்தார். ஏற்கனவே ஜூபிடர் பிக்சர்சில் இரண்டு படங்களில் பணிபுரிந்து காயம்பட்டிருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்று கொள்வது குறித்து கலைஞர் தயங்கினார்.

இந்த வாய்ப்பு மிக அரிய வாய்ப்பு. உங்களுக்கு உரிய மரியாதை, உரிமை கிடைக்க நான் உதவுகிறேன் என்று கலைஞரை வற்புறுத்தி சேலம் அழைத்து சென்ற கவிஞர் கா.மு.ஷெரிப், மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக கலைஞரை அமர்த்தினார்.

கதை முடிவாகி, கதாநாயகனைப் பற்றிய பேச்சு எழுந்தது.

கலைஞர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று மருதநாட்டு இளவரசி படத்திற்கு கலைஞரை கதை வசனம் எழுத சிபாரிசு செய்தார் எம்ஜி.ஆர். இப்போது மந்திரிகுமாரி படத்தில் வீர மோகன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக எம்.ஜி.ஆர். இருப்பார்” என எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு செய்தார், கலைஞர்.

சதிலீலாவதிபடத்தில் எம்ஜிஆரை அறிமுகப்படுத்திய மட்டுமின்றி தொடர்ந்து தனது படங்கள் பலவற்றில் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புத் கொடுத்த எல்லிஸ் ஆர் டங்கன், இந்தப் படத்தில் எம்ஜிஆவைக்க விரும்பவில்லை. எம்ஜிஆரின் தாடையில் ஒரு சிறு குழி இருக்கும். அதனால், அவர் கதாநாயகனாக நடித்தால் சரியாக வராது என்றார்.

 ஆனால் கலைஞரோ எம்ஜிஆர் தான் இந்தப் படத்திலே கதாநாயகன் என்பதில் உறுதியாக இருந்தார். கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் ஆரம்பத்திலேயே தகராறு என்றால் சரியாக இருக்காதே என்று  எண்ணிய தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், ஒரு சிறு தாடியை ஒட்டி சரி செய்துவிடலாம் என்று கூற அவரது யோசனையை அனை வரும் ஏற்றுக் கொண்டதையடுத்து எம்ஜிஆர் அந்தப்படத்திலே கதானாயகன் ஆனார்.

மந்திரிகுமாரி படம் அபாரமான வெற்றியைப் பெற்று, எம்.ஜி.ஆர் - கலைஞரை முன்வரிசைக்கு கொண்டு போனது! மந்திரிகுமாரி படத்தை பார்த்துவிட்டு மறுநாளே கலைஞரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த என்.எஸ்.கிருஷ்ணன், அடுத்து தான் இயக்க இருக்கும் மணமகள் படத்திற்கு நீ தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறி இருக்கிறார். சொன்னது போலவே கலைஞர் வசனம் எழுதி கொடுத்திருக்கிறார்.

அடுத்து என்.என்.கண்ணப்பா, வி.என்.ஜானகி நடித்த தேவகி படத்திற்கு கதை, வசனம் எழுதிய கலைஞர், ஏவி.எம். நிறுவனத்தில் இருந்து அழைப்பு வர சென்னைக்கு சென்றார். அங்கு நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணன், பஞ்சு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  அறிமுகமான பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு.

முதலில் இந்தப் படத்திற்கு இயக்குனராக ஏ.எஸ்.ஏ.சாமியையும், வசனகர்த்தாவாக ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் திருவாரூர் தங்கராசுவையும், நியமித்த தாயாரிப்பாளர், திடீர் என இயக்குனரையும், வசனகர்த்தாவையும் மாற்றி களம் இறங்கினார்.

‘பராசக்தி’யில் கலைஞரின் நெருப்பு வசனங்களை, சிம்மக் குரலெடுத்து சிவாஜி கணேசன் பேசிய வசன வீச்சு; குறிப்பாக நீதி மன்ற காட்சியில் குமுறும் எரிமலையாய் - கொந்தளிக்கும் கடலாய்... உணர்ச்சிப் பிரவாகமாக  பொங்கி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது!

கலைஞரின் வசனத்தில் ‘அனல்’ தெறித்தது! ‘வசனப் புரட்சி’ செய்த கலைஞருக்கு தமிழ் திரையுலகம் தனி சிம்மாசனம் தந்தது. ‘இனிமேல், பக்தி, புராண இதிகாசம், ராஜா - ராணி கதைகள் போணியாகாது! ‘பராசக்தி’ மாதிரி சமுதாய விழிப்புணர்வுக் கதைகளை அழகுத் தமிழில் அடுக்குமொழி வசனத்தோடு சொன்னால் தான் படம் ஓடும்!’ என்கிற ட்ரெண்ரை உருவாக்கித் தந்தது கலைஞரின் வசன வீச்சு!

‘பராசக்தி’ படத்தின் மூலமாக சிவாஜிகணேசனும்; கலைஞரும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்கள். சிவாஜிக்கு நிறைய புதுப் படங்கள் ஒப்பந்தமாகின! ‘கலைஞர் எழுதினாலே அந்தப் படத்துக்கு வெற்றி உறுதி!’ என திரையுலகத்தில் பேச்சு எழுந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன் தயாரிப்பில் இரண்டாவது முறையாக, சிவாஜி கணேசன் நடிப்பில் இரண்டாவது முறையாக பணம் படத்திற்கு வசனம் எழுதினர் கலைஞர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த நாம், சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார், சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’,  எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன், சிவாஜி கணேசன் நடித்த ரங்கோன் ராதா, ராஜாராணி, புதையல், எம்.ஜி.ஆர். நடித்த புதுமைப்பித்தன், சிவாஜி கணேசன் நடித்த குறவஞ்சி, எம்.ஜி.ஆர். நடித்த அரசிளங்குமாரி சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம், எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சி தலைவன் என மாறி மாறி எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் வழுதி வந்தார்.

எம்.ஜி.ஆர். – சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற தன் தலைமுறைக் கலைஞர்களோடு வெற்றிகரமாக பயணம் செய்த கலைஞர், ஜெய்சங்கர், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற அடுத்த தலைமுறைக் கலைஞர்களோடும், பிறகு வந்த பிரசாந்த், பா.விஜய் போன்ற இளம் தலைமுறைக் கலைஞர்களோடும் தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

‘ராஜகுமாரி’ படம் தொடங்கி, ‘பொன்னர் சங்கர்’ வரை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என கிட்டத்தட்ட 69 படங்களில் கலைச்சேவை செய்திருக்கிறார். இதில் ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தில் அவரது மகன் மு.க.முத்துவும், ‘ஒரே ரத்தம்’ படத்தில் மு.க.ஸ்டாலினும் நடித்துள்ளனர்.

கலைஞரின் 6 படங்கள் தெலுங்கில் வெளியாகியுள்ளது. தனது நாடக, திரைத்துறை பயணத்தில் 21 நாடகங்களிலும், 69 படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கருணாநிதி கதை, வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 9. சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 8. இவற்றில் ‘பராசக்தி’ ‘மனோகரா’ இரண்டும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட படைப்புகள்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், 'இராமானுஜர்' - மதத்தில் புரட்சி செய்த ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி வெளிவந்த இந்தத் தொடர் வசனமும் தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்றது. இந்தப் பணியில் அவர் ஈடுபட்ட போது அவருக்கு வயது 92.

‘தூக்கு மேடை’ நாடகத்துக்காக எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்று பட்டம் பெற்றார் கருணாநிதி. அதுமுதல், தலைவர்கள் மட்டுமல்லாமல் தொண்டர்கள் வரை அனைவராலும் ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. 

கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும், 21 நாடகங்களையும், ஒரு பயண நூலையும் எழுதியிருக்கிறார்.

1924 ஜூன் மாதம் மூன்றாம் தேதி பிறந்த கலைஞர் அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி காலமானார். இந்த கானொளியில் அவருடைய திரையுலக தகவல்களை மட்டும் சுருக்கி தந்திருக்கிறோம். அரசியல், குடும்பம் குறித்த தகவல்களை வேறொரு தொகுப்பில் பேசுவோம்.

தொகுப்பு : ஜி.பாலன்


'நவரச நாயகன்' கார்த்திக் வாழ்க்கை வரலாறு

பிரபல நடிகர் முத்துராமன் - சுலோச்சனா தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 தேதி பிறந்தவர் கார்த்திக். இவரது இயற்பெயர் முரளி கார்த்திகேயன். சென்னை ராயப்பெட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் படித்தவர்.

தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற இயக்குநர் பாரதிராஜா, கார்த்திக்கை பார்த்ததும், காரை நிறுத்த சொல்லி சிறிது நேரம் பார்த்திருக்கிறார். 

அப்போது பாரதிராஜா இயக்க இருந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவைப்பட்டனர். எழும்பூரில் உள்ள ‘டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து கதாநாயகனையும், நான்கு நண்பர்களையும் தேர்வு செய்து வைத்திருந்தவர், கார்த்திக்கை பார்த்ததும் இவனை கதாநாயகனாக நடிக்க வைக்கலாமே. பளிச்சென்று இருக்கிறன் என்று நினைத்தவர், எதிரே முத்துராமனின் வீடு இருந்ததால், இவன் முத்துராமனின் மகனாக இருக்க வேண்டும் என்று நினைத்தவாறு கார்த்திக்கை அழைத்தார்.

கார்த்திக் அருகே சென்று ‘என்ன அங்கிள்’ என்று கேட்டதற்கு, ‘அப்பா இருக்காரா?’ என்று பாரதிராஜா கூறி இருக்கிறார்.

அப்பா ’ஃபுட்பால் மேட்ச் பார்க்கப் போயிருக்கார் அங்கிள்’ என்று சொன்ன கார்த்திக், வாங்க அங்கிள் என்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார். 

வீட்டுக்குள் சென்றதும், ‘நீ நடிக்கிறியா என்று பாரதிராஜா கேட்க, ‘ஐ டோ நோ அங்கிள்.... டாடி...டாடிகிட்ட கேக்கணும்’ என்று கார்த்திக் பதில் சொல்லி இருக்கிறார்.

உனக்கு இன்ரஸ்ட் இருக்கா என்று கேட்டவர், பதில் எதுவும் சொல்லாமல் நோன்ற கார்த்திக்கை பார்த்து, பிறகு போட்டோ எதுவும் வச்சிருக்கியா என்று கேட்டிருக்கிறார்.

மாங்கனியை கடிப்பது போன்ற ஒரு போட்டோவை கொண்டு வந்து கார்த்திக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை பார்த்த பாரதிராஜா, இது தவிர வேற போட்டோ எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்.

கார்த்திக் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் பதில் சொல்லமுடியாமல் திகைத்து நின்றிருக்கிறார். பிறகு, அப்பா வந்ததும் பாரதிராஜா வந்தேன். விசாரித்தேன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், பாரதிராஜா.

பாரதிராஜா வந்து சென்ற தகவலும், நடிக்கிறாயா என்று கேட்ட தகவலும் தெரிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்த முத்துராமன், உடனே பாரதிராஜாவை தொடர்பு கொண்டார்.

என்ன பாரதி... என்னால நம்பவே முடியல.... உங்க புது படத்துக்கு பையன் வேணும்னா...  தாராளமா கூட்டிட்டு போங்க... அது உங்க புள்ள... என்று கூறியவர், கார்த்திக்கின் பலம், பலவீனம் என எல்லாவற்றையும் தெரிவித்திருக்கிறார்.

நாகர்கோயில் அருகே உள்ள ஒரு கோவிலில் பூஜை போட்டு கார்த்திக், ராதா இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து ஒரு ஷாட் எடுத்தார் பாரதிராஜா.

அதன் பிறகு ஜேப்பியார் பிறந்த ஊரான முட்டம் பகுதியில் முதல் நாள் படப்பிடிப்பு. புழுதி மண்ணும், நீல வானமும், கடலும் மேகக் கூட்டங்களும் பாறைகளை மோதிச்செல்லும் கடல் அலைகளும் உள்ள அழகான அந்த அந்த இடத்தில் ‘’புத்தம் புது காலை’ என்கிற அற்புதமான பாடலை கண்ணன் ஒளிப்பதிவில் படமாக்கினார், இயக்குநர் பாரதிராஜா.

நிழல்கள் படத்தின் தோல்வியால் பாரதிராஜா அவ்வளவுதான் என்று பேசிய வாய்களுக்கு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்று சொல்லும் விதமாக இளையராஜாவின் இசையில் அவரது அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில் மணிவண்ணன் கதையில் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது.

விச்சு என்கிற கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருந்தார், கார்த்திக். முதல் வாய்ப்பு, முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவரிடம் இயக்குநர் பாரதிராஜா வேலை வாங்கி இருப்பார். ரசிகர்கள் அவரை பாராட்டினார்கள். தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவித்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருது பெற்று மகிழ்ந்தார் கார்த்திக்.

அலைகள் ஓய்வதில்லை படம் தெலுங்கு மொழியிலும் உருவானது. பாரதிராஜா இயக்கிய அந்தப் படத்திலும் கார்த்திக் கதாநாயகனாக தெலுங்கு மொழியில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக அருணா நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருதும், மத்திய அரசி சிறந்த மாநில மொழி படத்திற்கான தேசிய விருதும் வழங்கி கௌரவித்தது.

அடுத்து ராமநாராயணன் இயக்கத்தில் ராதாவுடன் இளஞ்ஜோடிகள்,  அதன் பிறகு நேரம் வந்தாச்சு படத்தில் ராதாவுடன் என தொடர்ந்து படங்கள் குவிந்தன.

எம்ஜிஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி, கமல் - ஸ்ரீதேவி ஜோடி போல, கார்த்திக் - ராதா ஜோடி கொண்டாடப்பட்டது.

ஆனாலும் கார்த்திக் - ரேவதி, கார்த்திக் - அம்பிகா, கார்த்திக் - பானுப்ரியா, கார்த்திக் - ஜீஜீ, கார்த்திக் - குஷ்பு, கார்த்திக் - சுஹாசினி, கார்த்திக் - சசிகலா, கார்த்திக் - ரம்பா, கார்த்திக் - நக்மா, கார்த்திக் - நிரோஷா, கார்த்திக் - ஜீவிதா... என எல்லா ஜோடியும் பேசப்பட்டது.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போவார் கார்த்திக். எந்த கதாநாயகியாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

ஸ்ரீதரின் ‘நினைவெல்லாம் நித்யா’ எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் அத்தனை பாடல்களாலும் நம் மனக்கண்ணில் கார்த்திக் நின்று கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப் பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம். ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை தந்த இயக்குநர் மணிரத்னம்.

தேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ மோகன். படத்தில் வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் கார்த்திக் படம் முழுவதும் ஆக்ரமித்தது மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். துள்ளலும் துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார்.

படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர் சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.

‘ஊமைவிழிகள்’ படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ‘மாமரத்துப்பூவெடுத்து’ பாடலையும் கார்த்திக்கையும் அப்படி ரசித்தார்கள். ‘கோபுர வாசலிலே’ படத்தில் காதலுக்கு தவிக்கும் கதாபாத்திரத்தையும் நண்பர்களின் துரோகத்தால் புழுங்கி தவிப்பதையும் அட்டகாசமாக செய்திருப்பார், கார்த்திக்.

திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில் கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன. உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில் பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும் இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார்.

ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக் குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். ராஜாதி ராஜனிந்த ராஜா' பாடலுக்கு கார்த்திக்கின் துள்ளான் நடனம் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பார்க்க வைத்தது.

கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு குடும்பமும் நினைக்க வைத்த படம் 'வருசம் 16'. பாசில் இயக்கிய அந்தப் படத்தில் குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின் மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக்.

சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர் நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.

'கிழக்கு வாசல்' படத்தில் கார்த்திக் ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தை மற்ற முடியுமா? தன் அம்மாவின் மரணத்துக்கு குஷ்புவின் அப்பாதான் காரணம் என்பதை அறிந்ததும் கொள்ளிவைத்த கையோடு அழுகையும் ஆத்திரமுமாய் அவரிடம் சென்று தன் பக்க நியாயத்தைக் கூறும் காட்சியில் நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக தமிழ அரசு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்து கௌரவித்தது.

காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின் சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' படம் பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப் பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக். இந்தப் படத்தில் 'வெத்தல போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர் கார்த்திக்.

ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராமின் கேமராவில் அதிகம் சிக்கியவர் கார்த்திக்தான். 'மெளன ராகம்'. 'அக்னி நட்சத்திரம்', 'அமரன்', 'கோபுர வாசலிலே', 'இதயத் தாமரை' என அவரின் ஒளிப்பதிவில் ஐந்து படங்களின் ஹீரோ இவர்.

சில படங்களில் தோல்விகளுக்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம் அது. கார்த்திக், கவுண்டமணி கூட்டணி தொடர்ந்து 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக', என்று வெற்றிப்படங்களைத் தந்தன.

இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’ கார்த்திக்கின் வேற லெவல் நடிப்பு. விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ அநாயச நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அள்ளிக்கொண்டார்.

கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்‌ஷன்... இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கார்த்திக்கின் திரைவாழ்வு சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் வெற்றிகளை அவர் தருவார். ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்க முடியும். அது மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா, பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி, அர்ஜீனுடன் நன்றி, அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், விஜயகாந்துடன் ஊமை விழிகள், தேவன் என நடித்திருந்தார். கார்த்திக்கின் திரைப் பயணத்தில்... ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள்.

பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பது போலவே இவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றி இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ள கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி ஆகிய படங்களுக்காக தமிழக அரசுன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ள கார்த்திக், தனது குரலில் எட்டு பாடல்களையும் பாடி இருக்கிறார்.

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்த கார்த்திக், அதன் பிறகு நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தீவிர அரசியிலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.

1988ஆம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவர்களுக்கு கவுதம் கார்த்திக், கயன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரன் கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

இதில் கெளதம் கார்த்திக் மனிரத்ணம் இயக்கிய கடல் படத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவுடன் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்