வைஜெயந்தி மாலா |
தற்போதைய சென்னையில், அப்போதைய மெட்ராஸில், திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த M.D.
ராமன் - வசுந்தராதேவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் வைஜெயந்திமாலா.
தாயார் வசுந்தராதேவியோ, பிரபலமான நடிகை. தலைசிறந்த நாட்டியத் தாரகை. சாஸ்திரீய
சங்கீதத்தின் சங்கதிகளை அறிந்த சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர். 1941-ம் ஆண்டு
வெளியான 'ரிஷ்யசிருங்கர்' திரைப்படம்
மூலம் அறிமுகம் ஆனார். 1943-ம் ஆண்டு வெளிவந்த 'மங்கம்மா
சபதம்' திரைப்படம், வசுந்தராதேவிக்கு
வான் எட்டும் புகழ் தந்தது.
1933-ம் ஆண்டு பிறந்த வைஜெயந்தி மாலாவின்
பள்ளிப்பருவம் சென்னை 'Sacred Heart' பள்ளியிலும்,
பின்பு சர்ச் பார்க் கான்வென்ட்டிலும் அமைந்தது.
சிறு வயது முதலே, நடனத்தின்
மீது அதிக நாட்டம் கொண்ட வைஜெயந்திமாலா, வழுவூர் ராமையா
பிள்ளையிடம் முறைப்படி நடனம் பயின்றார். மேலும், மனக்கல்
சிவராஜா ஐயர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்று தேர்ச்சி பெற்றார்.
வைஜெயந்தி மாலா |
மெய்யப்பச் செட்டியாரிடம் இணை இயக்குநராகப்
பணிபுரிந்த எம்.வி. ராமன், விக்டோரியா பப்ளிக் ஹாலில்
நடிகை வசுந்தராவின் மகள் வைஜெயந்திமாலா நடனம் ஆடுவதாகவும், அதைப்
போய் பார்க்கலாம் என்றும் அழைத்தார்.
மெய்யப்பச் செட்டியாரும் சென்று அந்த நடனத்தைப் பார்த்தார். வைஜெயந்திமாலாவின் நடனம், வாழ்க்கை பட கதாபாத்திரத்திற்கு
வைஜெயந்திமாலாதான் சிறந்தவர் என்று முடிவெடுக்க வைத்தது. மாதம் 2 ஆயிரத்து 350
ரூபாய் சம்பளம் என மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், வைஜெயந்திமாலா. டி.ஆர்.ராமச்சந்திரன்தான்
ஹீரோ.
படம் வெளியாகும் முன்பே படத்தில்
இடம்பெற்றிருந்த 'உன் கண் உன்னை ஏமாற்றினால்'
பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது. படமும் வெளியாகி தமிழ்நாடு,
கேரளா, மைசூர் எங்கும் 50 நகரங்களில் அமோக
வெற்றியுடன் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.
ஜீவிதம் என்கிற பெயரில் தெலுங்கு மொழியிலும் உருவாகி
வெற்றி பெற்ற வாழ்க்கை படம், இந்தி மொழிக்கும் 1951-ம் ஆண்டு சென்றது. 'பஹார்’ என்கிற பெயரில் உருவான இந்திப் படத்திற்கு இந்தியில் பேசி
நடிக்க இந்திக் கற்றுக் கொண்டு நடித்தார், வைஜெயந்தி மாலா.
வேகமான கால் அசைவுகள், கை முத்திரைகள், முகபாவங்கள் கொண்ட
பரதநாட்டியத்தை வட இந்தியாவில் அன்றைக்கு அதிகம் பேர் பார்த்தது இல்லை. எனவே,
அவர்களுக்கு அந்த நடனம் எல்லாம் புதுமையாக இருந்தது. அதனால், வட இந்தியாவிலும்
நல்ல வரவேற்பைப் பெற்று இந்தியிலும் ஒரு நிலையான வாழ்க்கை வாழ வாழ்க்கைப் படம்
வைஜெயந்தி மாலாவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.
அடுத்து இந்தியில் வைஜெயந்தி மாலா நடித்த லட்கி
படம் தமிழில் பெண், தெலுங்கு மொழியில் சங்கம் என்கிற பெயரில் உருவாகி நல்ல
வரவேற்பை பெற்றது. இந்தியில் கிஷோர் குமார் நடித்த வேடத்தில், தமிழில் ஜெமினி
கணேசன், தெலுங்கு மொழியில் என்.டி.ராமாராவ் நடித்திருந்தனர்.
1954-ம் ஆண்டு, பிரதீப்
குமாருடன் 'நாகின்' படத்தில் நடிக்க
தொடங்கியவர் தொடர்ந்து 'மதுமதி', 'தேவதாஸ்',
'Naya Daur', 'சங்கம்', 'சூரஜ்', 'கங்கா ஜமுனா' 'Jewel Thief', 'Zindagi', 'Bahar' ஆகிய
திரைப்படங்கள் வைஜெயந்திமாலாவின் புகழை, வானம்வரை கொண்டு
சென்றன.
வைஜெயந்திமாலா, ராஜ்கபூர்
மற்றும் ராஜேந்திர கபூருடன் இணைந்து நடித்த 'சங்கம்' திரைப்படம், அவருக்கு பெரும் புகழ் தந்தது. முக்கோணக்
காதல் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில், முக்கியத்துவம்
வாய்ந்த பாத்திரத்தில் நடித்து, வைஜெயந்திமாலா தனது
நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.
தேவானந்த்துடன் இணைந்து நடித்த 'Jewel Thief' படத்தில், ஷாலினி என்ற
கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருந்தார் வைஜெயந்திமாலா. S.D.
பர்மன் இசையில் உருவான எல்லா பாடல்களும் உள்ளத்தை உருக்கின.
கணவருடன் வைஜெயந்தி மாலா |
பரதநாட்டியம் நன்றாக ஆடக்கூடிய திறமை பெற்ற இரு
நடிகைகளிடையே 'ஜுகல்பந்தி’ மாதிரி காட்சியை, இதுவரை எந்தப் படத்திலும் வராத மாதிரி எடுக்கவேண்டும் என்பது வாசனின்
ஐடியா. அந்த நடனப் போட்டிக் காட்சியை பிரபல டான்ஸ் மாஸ்டர் ஹீராலால்தான் அமைத்துக்
கொடுத்தார்.
வைஜெயந்தி மாலா நடனமாடும் காட்சிகளை இரண்டு
நாட்கள் தனியாகப் படமாக்கினார்கள். பத்மினி நடனமாடும் காட்சிகளை இரண்டு நாட்கள்
படமாக்கினார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடனமாடியதை மேலும் இரண்டு நாட்கள்
படமாக்கினார்கள். பத்மினிக்கும் சரி... வைஜெயந்தி மாலாவுக்கும் சரி, அவர்களின் பரத நாட்டியத் திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டுவர
அற்புதமான வாய்ப்பாக அந்தக் காட்சி அமைந்தது. அந்தப் படம் 1958-ம் ஆண்டு வெளிவந்து
மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில்
பத்மினியின் பெயரும், வடக்கில் அதன் இந்திப் பதிப்பான
‘ராஜ்திலக்’ கில் வைஜெயந்தியின் பெயரும்
டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.
எம்.ஜி.ஆருடன் கல்கியின் பொன்னியின் செல்வன்
படத்தில் குந்தவையாக நடிக்க இருந்தவர், அதன் பிறகு எம்.ஜி.ஆருடன் 'பாக்தாத் திருடன்’ படத்தில் ஜரினாவாக நடித்தார். சிவாஜியுடன் 'சித்தூர் ராணி பத்மினி’யில் ராணி பத்மினியாக நடித்தவர், 'இரும்புத்திரை’ படம் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான போது தமிழில்
சிவாஜியுடனும், இந்தியில் திலீப்குமாருடன் நடித்தார். தமிழில் 'இரும்புத்திரை’ வெளியான அதே நாளில் இந்தியில் 'பைகாம்’
என்ற பெயரில் வெளியாகி இரு படங்களும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்தியில்
ஓர் ஆண்டுக்கு மேல் ஓடிய படம், தமிழில் ஆறு மாதங்கள் ஓடியது. இந்தப் படங்களை
ஜெமினி நிறுவனம் தயாரித்தது. இரும்புத்திரையின் இன்னொரு சிறப்பு. வைஜெயந்தி
மாலாவின் தாயார் வசுந்தரா தேவி, எஸ்.வி. ரங்காராவின் மனைவியாகவும், வைஜெயந்தி மாலாவின் அன்னையாகவும் இடம் பெற்றார்.
பத்மினியுடன் வைஜெயந்தி மாலா |
ஆனால், அந்த ஏரியில் இருந்த அழுக்குத் தண்ணீரை வைஜெயந்திமாலா
நிறையக் குடித்துவிட்டார். இதனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பம்பாய்க்கு
அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அங்கு ஒரு மாதம் சிகிச்சை மற்றும்
ஓய்வில் இருந்தார். அப்போது அவருக்கு மருத்துவராக இருந்தவர் பாலி. அவர்தான்
பிற்காலத்தில் வைஜெயயந்தி மாலாவின் வாழ்க்கைத் துணையாக ஆகப் போகிறார் என்று
அப்போது அவருக்குத் தெரியாது.
1961-ம் ஆண்டு, இளமை
இயக்குநர் ஸ்ரீதரின் தயாரிப்பு இயக்கத்தில் வெளிவந்த 'தேன்நிலவு'
திரைப்படம், ரசிர்களுக்குத் தேன்நிலவாய்
இனித்தது.
இந்தியில் 'திலீப்குமார்,
அசோக்குமார், மனோஜ்குமார், ராஜேந்திரகுமார், கிஷோர்குமார் என எல்லா
குமார்களுடன் வைஜெயந்தி மாலா நடித்துவிட்டார்.
திலீப்குமாருடன் அவர் நடித்து வெளியான எல்லாப்
படங்களுமே பெரிய வெற்றி படங்கள். அதில் 'கங்கா ஜமுனா’ அவர் மிகவும்
சிரமப்பட்டு நடித்த படமாகும். அந்தப் படம் வைஜெயந்தி மாலாவுக்கு மிகவும்
பிடித்தமான படம்.
ராஜ்கபூர், ராஜேந்திரகுமார் இரு
ஹீரோக்களுடன் நடித்த 'சங்கம்’ படம், பல
வகைகளில் சாதனை புரிந்தது. முதல் டெக்னிக் கலர் படம் அதுதான். அப்போது இந்தியாவில்
கலர் லேப்கள் இல்லை என்பதால், லண்டனில் பிராசஸிங்
செய்தார்கள். மூன்று மணி நேரத்துக்கு மேல் ஓடும் படம். முதல்முறையாக ஒரு
படத்துக்கு இரண்டு இடைவேளை. முதல் முறை வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்திய
இந்தியப் படமும் 'சங்கம்’தான். பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டாம், வெனிஸ்,
ஆல்ப்ஸ் மலைகள் எனப் பல இடங்களில் ஷூட்டிங் நடந்தது. இந்தியின்
மிகப் பெரிய ஷோமேன் என்று அழைக்கப்படும் ராஜ்கபூர்தான் படத்தை இயக்கினார். பெண்
உரிமைக்குக் குரல் கொடுத்த படம். இந்திய திரைப்பட வரலாற்றில் 'சங்கம்’ ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்
ஆனது!
ஐக்கிய நாடுகள் சபையில் பரத நாட்டிய நிகழ்ச்சி
அளித்த முதல் டான்ஸர் என்ற பெருமை வைஜெயந்தி மாலாவுக்கு உண்டு. மனித உரிமை
தினத்தின் இருபதாவது ஆண்டு விழாவை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நியூயார்க்கில் அவர்
அளித்த பரத நாட்டிய நிகழ்ச்சியை உலகின் 130 நாடுகளின் பிரதிநிதிகள் பார்த்து
மெய்ம்மறந்து, வியந்து ரசித்தார்கள். அனைவரும் எழுந்து
நின்று கை தட்டித் தங்களின் பாராட்டுதலைத் தெரிவித்தது மறக்கமுடியாத ஒரு நிகழ்வு.
65 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும்
வைஜெயந்தி மாலா, நடிப்பில் பிசியாக இருந்த போது 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம்
தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள அவரது பங்களாவில்
டாக்டர் பாலியை தென்னிந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பஞ்சாப்பைப் பூர்வீகமாகக் கொண்டவர் சமன்லால்
பாலி. சாமர்த்தியங்கள் கை வரப் பெற்ற அனுபவசாலி! மும்பையில் ராஜ் கபூர் முதலான
உச்ச நட்சத்திரங்களின் குடும்ப டாக்டர். திருமணமாகி மூன்று குழந்தைகளின்
தகப்பனார். முதல் மனைவியோடு விலகி இருந்த சூழலில் வைஜெயந்தி மாலாவை சந்தித்தார்.
நோயாளியாக தன்னிடம் வந்த வைஜெயந்தி மாலாவிடம்
அவர் காட்டிய கனிவும், பிணி தீர்க்கச் செலுத்திய
அக்கறையும், வைஜெயந்தி மாலா மீது கொண்ட தனிப்பட்ட
ஈடுபாடும்... அவரையே வாழ்க்கைத் துணைவராக ஏற்கும் நிலையை வைஜெயந்திமாலாவுக்கு ஏற்படுத்தியது.
அன்று அரும்பிய அன்பு.... நிறம் மாறாமல்... இறுதி வரையில் நிரந்தரமாக நீடிக்க...
திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதற்காக ஏழு ஆண்டுகள் காத்திருந்து
திருமணம் செய்து கொண்டனர்.
வசுந்தரா தேவி |
திருமணத்துக்குப் பிறகு வைஜெயந்திமாலா நடிப்பதை
நிறுத்திக் கொண்டார். இந்தியிலும் தமிழிலும் தொடர்ந்து படங்கள் இருந்தன. என்றாலும்
விலகினார்.
திருமணத்திற்கு பிறகு புதுப்படங்களை ஒப்புக்
கொள்ளாத வைஜெயந்தி மாலா, கணவரின் தூண்டுதலால் கோல்ஃப் ஆட்டத்தில் ஆர்வம் காட்ட
ஆரம்பித்தார். கோல்ஃப் ஆட்டத்தில் பல போட்டிகளில் வென்று நிறைய பரிசுகள்
பெற்றிருக்கிறார். டெல்லியில் ஏஷியன் கேம்ஸ் நடந்தபோது, இந்திய கோல்ஃப் அணியில் இடம்பெற்றதோடு, தொடக்க
விழாவில் இந்திய குழுவினருக்கு முதல்வராக அணிவகுப்பிலும் கலந்துகொண்டார்.
இந்திய சினிமாவில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய
வைஜெயந்தி மாலாவுக்கு 1968 ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் பரிசு மூன்று முறை, பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியன வைஜெயந்தியால்
கவுரவம் பெற்றவை.
பரதம், சினிமா, நாட்டியப்பள்ளி,
நடன ஆராய்ச்சி, ஆடல் கலை குறித்த இசை
ஆல்பங்கள் என்று சலிக்காமல் உழைத்த சாதனைப் பெண்மணியின் அடுத்த கட்டம் அரசியல்.
புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மஹிளா
காங்கிரஸ் மாநாட்டில் 45 நிமிடங்கள் நடன நிகழ்ச்சி நடத்தி.... இந்திராகாந்தியின்
வாழ்த்தை பெற்ற வைஜெயந்தி மாலா, நூறாண்டு காங்கிரஸின் சரித்திரத்தை 'ஏக்தா’ என்ற 100 நிமிட நாட்டிய நாடகமாகத் தயாரித்து அளித்த
போது ராஜீவ் காந்தின் பாராட்டை பெற்றார்.
1984 மற்றும் 1989 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில்
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை பெற்ற வைஜெயந்தி மாலா, இரு முறையும்
தென் சென்னை மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வைஜெயந்திமாலாவின் ஒரே மகன் சுசீந்திர பாலி.
மாடலிங், சினிமா என்று தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
வைஜெயந்தி மாலா பணமே குறியாக வாழ்ந்தவர் அல்ல. பரதத்தில் அவர் காட்டிய அக்கறை, ஆர்வம், இன்பம், ஈடுபாடு, உத்வேகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, ஏற்றம், எல்லாமே ஐயமின்றி அவரை ஒப்பற்ற ஓர் நாட்டியத் தாரகையாக்கி நிரந்தரமாக ஒளி வீசச் செய்தன.
வடக்கின் உச்ச நட்சத்திரமாக இந்துஸ்தானியின் கலை பிரம்மாக்களுடன் அரிதாரம் பூசி நடித்த போதும் சென்னை மேடைகளை அவர் மறந்தது கிடையாது. கலையை அந்தளவுக்கு நேசித்தவர். அவரது தாத்தா ஸ்ரீநிவாசன், ஸ்ரீமதி பரிணயம், மைனர் ராஜாமணி, விஷ்ணு லீலா, அதிர்ஷ்டம், பாலாமணி போன்ற படங்களில் நடித்தவர்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக