செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

நடிகர் முரளி வாழ்க்கை வரலாறு

நடிகர் முரளியின் அப்பா பெயர் சித்தலிங்கையா. நவஜோதி ஸ்டுடியோவின் அலுவலக உதவியாளராக இருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர், இயக்குநர் சங்கர் சிங்கிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, திரைப்படங்களில் சிறிய கதாபத்திரங்களில் நடித்து, 1969 ஆம் ஆண்டில் ராஜ்குமார் நடித்த மேயர் முத்தண்ணா கன்னடப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து இருபத்தி மூன்று படங்களை இயக்கியவர். பல படங்களை தயாரித்தவர்.

கன்னட மொழிப் பேசும் சித்தலிங்கையா, தமிழ்நாட்டில் திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது முதலியார் வகுப்பை சேர்ந்த தனலட்சுமி என்கிற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முரளி, சுரேஷ் என இரு மகன்களும், சாந்தி என்கிற மகளும் பிறந்தனர்.

1964 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி பிறந்த முரளி, ஐந்தாம் வகுப்பு வரை சென்னையில் படித்து வளர்ந்தார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பெங்களூரில் படித்தவர், அதன் பிறகு தந்தை இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். 


தனது தந்தையைப் போல பிரபல நடிகர் நடிக்கும் படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் முரளியின் கனவாக இருந்தது. ஆனால், அவரது கருப்பும் அழகும் கவர்ந்த இயக்குநர் ஏறங்கி சர்மா, நீ கதாநாயகனாக நடிக்கலாம் வா என்று அவரை அழைத்தார். ‘கெலுவினா ஹெஜ்ஜே’ என்கிற  அந்தப் படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் தயாரித்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான கெலுவினா ஹெஜ்ஜே எதிரப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை.

இதனால், முரளியின் தந்தை சித்தலிங்கையா பிரபல நாவலாசிரியர் பி.எல்.வேணு கதை வசனத்தில் ‘பிரேமா பர்வா’ என்கிற படத்தை முரளியின் நடிப்பில் தொடங்கினார். அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் கே.பாலசந்தர், தமிழில் அந்தப் படத்தின் உரிமையை வாங்கி தனது கவிதாலயா நிறுவனத்தின் பெயரில் பூவிலாங்கு என்கிற பெயரில் தயாரித்து தனது உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் கதாநாயகனாக முரளி, கதாநாயகியாக குயிலி ஆகியோரை அறிமுகப்படுத்தினார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத இசைஞானி இளையராஜா இசையமைத்தார். இதில் இளையராஜா பாடிய ‘ஆத்தாடி காத்தாடி பாவடை’ என்கிற பாடலும், ஜானகி பாடிய ‘போட்டானே பூவிலங்கு’ என்கிற பாடலும் யேசுதாஸ் பாடிய ‘கண்னில் எதோ மின்னல்’ என்கிற பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது. 1982 ஆம் ஆண்டு படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழில் முரளியின் முதல் வாய்ப்பு.   

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதே முரளி, அமீர்ஜான் கூட்டணியில் புதியவன் என்கிற படத்தையும் தயாரித்தார், கே.பாலசந்தர். அடுத்து மணிவண்ணன் இயக்கத்தில் இங்கேயும் ஒரு கங்கை படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் பகல் நிலவு படத்திலும் ஒப்பந்தமானார் முரளி.

இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பகல் நிலவு படம் அவருக்கு அடுத்த வெற்றியை கொடுத்து நம்பிக்கையூட்டியது. பாரதிராஜாவின் மைத்துனரும், அவரது உதவியாளருமான மனோஜ்குமார் இயக்குனராக அறிமுகமான மண்ணுக்குள் வைரம் படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து சிவாஜியுடன் குடும்பம் ஒரு கோவில் படத்திலும் நடித்தார், முரளி.

அமீர்ஜான் இயக்கத்தில் கார்த்திக்குடன் வண்ணக் கனவுகள், ராமநாராயணன் இயக்கத்தில் எஸ்.வி.சேகருடன்  தங்கமணி ரங்கமணி, பிரபுவுடன் நினைவு சின்னம் போன்ற படங்களில் நடித்து வந்தவருக்கு, கார்வண்ணன் இயக்கிய பாலம் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்ததது. அந்தப் படத்தில் இருந்து புரட்சி நாயகன் என்று அழைக்கப்பட்டார்.

அடுத்து புரட்சிகரமான கருத்தை கொண்ட காதல் படமான புது வசந்தம் படத்தில் நடித்து இயக்குநர் விக்ரமன் உட்பட படக் குழுவினர் அனைவரும்  வெற்றிபெற உதவியாக இருந்தார், முரளி.

அடுத்து மணிவாசகம் இயக்கிய ‘நம்ம ஊரு பூவாத்தா’ படமும், ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘சாமி போட்ட முடிச்சு’ படமும் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. கதிர் இயக்குனராக அறிமுகமான இதயம் படத்தில் காதலை சொல்ல முடியாமல் தவித்த முரளியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார், முரளி.

மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’, விக்ரமனின் முதல் படமான ‘புது வசந்தம்’, கதிரின் முதல்படமான ‘இதயம்’ என்று முரளி ஹீரோவான படங்களின் வெற்றி அவரை புது இயக்குநர்களின் தனிப்பெரும் ஹீரோவாகக் கருத வைத்தது. ‘முரளியின் முதல் படத்தை இயக்கும் இயக்குநர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வருவார்கள்’ என்ற சென்டிமென்ட்படி, அந்தக் காலகட்டத்தில் படம் இயக்க வந்தவர்களின் முதல் ஹீரோ சாய்ஸ் முரளியாகத்தான் இருந்தார்.

முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக ஆண்டுக்கு 5 அல்லது 6 படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் முரளி. 1992 முதல் 1994 வரை ஒரு பெரிய வெற்றிப் படம் கிடைக்காத என்று காத்திருந்த அவருக்கு விக்ரமன் எழுதி இயக்கிய பூவே உனக்காக படத்தில் மச்சினிச்சி என்கிற ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அதன் பிறகு பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், தினம்தோறும் என தொடர்ந்து பல பேசப்படும் படங்களில் நடித்து அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணித்தார்.

பொற்காலம் படத்தில் மண்பானை செய்யும் தொழிலாளியாக அன்பான அண்ணனாக நடித்து ரசிகர்களை கலங்க செய்திருப்பார். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது. ‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என்ற பாடலே அவருக்காகதான் உருவாக்கப்பட்டது. சேரன் இயக்கத்தில் பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடிக்கட்டு ஆகிய மூன்று படங்களிலும் முரளி நடித்துள்ளார்.

இதயம் படத்தில் காதல், பொற்காலம் படத்தில் பாசம், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நகைச்சுவை, அதர்மம் படத்தில் ஆக்‌ஷன் என்று அனைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற சிறந்த நடிகராக விளங்கினார்  முரளி. பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தார். இதனால், 2001ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகருக்கான விருது முரளிக்கு கிடைத்தது. அதே போல தமிழக் அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ள முரளி, கலைஞரின் கதை வசனத்தில் பாசக்கிளிகள் படத்திலும் நடித்திருக்கிறார்.

சிவாஜியுடன் மண்ணுக்குள் வைரம், குடும்பம் ஒரு கோவில், என் ஆச ராசாவே, விஜயகாந்த்துடன் என் ஆசை மச்சான், பிரபுவுடன் நினைவுச் சின்னம், பாசக்கிளிகள், சத்யராசுடன் பகல் நிலவு, பிரபுதேவாவுடன் அள்ளித்தந்த வானம், சூர்யாவுடன் காதலே நிம்மதி, பார்த்திபனுடன் வெற்றிக் கொடிகட்டு, சரத்குமாருடன் சமுத்திரம், மம்முட்டியுடன் ஆனந்தம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் என்பத்தி ஒன்னு, கன்னடத்தில் ஒன்பது என தொண்ணூறு படங்களில் நடித்து முடித்த முரளி தனது தொன்னூற்றி ஓராவது படமாக, தனது மகன் அதர்வா கதாநாயகனான அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

த மகன் அதர்வாவை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முரளி ஆரம்பத்தில் நினைக்கவில்லை. அதனால் சினிமாவுக்கு தேவையான அடிப்படையான விஷயங்கள் எழ்துவும் அவருக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

தான் நடித்த படங்கள் மட்டுமல்லாமல் மற்றவர்கள் நடித்த படங்களுக்கும் மகன் அதர்வாவை அழைத்து சென்றிருக்கிறார், முரளி. அதில் அவர் நடித்த `வாட்டாக்குடி இரணியன்’ படம் பார்த்த போது கிளைமாக்ஸ் காட்சியில் முரளி கதாப்பாத்திரம் இறந்து விடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அப்போது முரளியின் மடியில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த அதர்வா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்திருக்கிறார்.

குனிந்து அதர்வா முகத்தைப் பார்த்த முரளி, `என் மடியிலதான்டா நீ உட்காந்திருக்க. நான் சாகளைடா” என்று சொல்லி அவரது அழுகையை நிறுத்தி இருக்கிறார்.

அப்படி கதையோடு ஒன்றிப் போன மகனை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று முரளி நினைக்காமல் இருந்ததற்கு காரணம், இயக்குனராக வரவேண்டும். உதவி இயக்குனராக என்னை சேர்த்து விடுங்கள் என்று அதர்வா கூறியதுதானாம். தனது தந்தையை போல, தன்னைப் போல இயக்குனராகவே முதலில் விரும்புகிறான் என்று நினைத்த முரளி, படிப்பு முடியட்டும் என்று காத்திருந்தாராம்.

ஆனால், சத்யஜோதி நிறுவனம் மூலம் பாணா காத்தாடி படத்தில் நடிக்கிற வாய்ப்பை காலம் வழங்கியது. தனக்கு இதயம் படம் மூலம் மக்களின் இதயங்களுக்கு கொண்டு சென்ற நிறுவனம் தயாரிக்கும் படம் மூலம் மகனின் வாழ்க்கை துவங்குகிறது என்று மகிழ்ந்தார் முரளி.

படம் முடிந்து படத்தின் விளம்பர நிகழ்ஹ்ச்சிகளுக்கும் சென்று படத்தைப் பற்றியும், மகனின் நடிப்பு பற்றியும் பெருமையாக பேசி வந்தார் முரளி. ஆனால், மகன் நடித்த முதல் படமே தனக்கு கடைசிப் படமாக பதிவாகும் நிலையை 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி உருவாக்கியது.  

46 வயதில் திடீர் மாரடைப்பால் அவர் காலமானது அவரது குடும்பத்தை மட்டுமல்ல தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியடைய வைத்தது.

நடிகர் முரளி, ஷோபா என்பவரை காதலித்து மணந்தவர். அவருக்கு அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மகள் காவ்யாவுக்கு மலேஷியாவில் சாப்ட்வேர் எஞ்சினியராக இருக்கும் ஆதித்யா என்பவருக்கு திருமணம் பேசி முடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார், முரளி. ஆனால், மகளின் திருமணத்தை நடத்திப் பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது. 

ஒரு நடிகன் என்றால் நல்ல நிறம், அழகு, உயரம் என்று கூறப்படும் எந்த ஒரு மிகைப்படுத்தப்பட்ட அடையாளங்களும் இல்லாதவர், முரளி.

கறுப்பு, சாதாரண உயரம், மிகமிக எளிமையான தோற்றம் இதுதான் முரளி. ஆனால் அதுதான் அவரின் சிறப்பு.

முரளியின் படங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, விரசமான காட்சிகளோ பார்க்க முடியாது. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படங்களில் தான் நடித்திருப்பார். அவருக்கு அதிகம் பிடித்த பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் அவருக்கு சலிக்காதாம்.

உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு என்று சொல்லும் அவர், இரண்டாவது மகன் ஆகாஷை சிங்கப்பூரில் எம்பிஏ படிக்க அனுப்பினார். சிங்கப்பூரில் தன்னுடன் படித்த சினேகா என்பவரை காதலித்தார், ஆகாஷ்.

விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு படத்திற்கு நிதி உதவி செய்து விஜய்யின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருக்கும்  விஜய்யின் மாமா... அதாவது அத்தையின் கணவர்தான் சேவியர் பிரிட்டோ. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்த்தின் தயாரிப்பாளரும் அவர்தான். அவரது மகள்தான் சினேகா.

ஆரம்பத்தில் ஆகாஷ், சினேகா காதலுக்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்ததாம். பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. முரளியின் மகன் ஆகாஷ், தனது மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளார். அதனால், முரளியின் இரண்டாவது மகனும் திரையுலகிற்கு வருகிறார் என்று சொல்லும் போது முரளியின் மருமகளான சினேகா, எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு விளையாட்டு இரண்டாம் பாகத்தை இயக்கிய இருக்கிறார் என்பது இன்னொரு செய்தி அல்லவா...

தாத்தாவைப் போல படத்தயாரிப்பிலும் இறங்கிய அதர்வா இப்போது தனது பதினைந்தாவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முரளியின் அப்பா சித்தலிங்கையா, முரளி, ஆகாஷ், சினேகா என முரளியின் குடும்பம் கலைக்குடும்பமாக திகழ்கிறது.

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக