செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி

தமிழ்த் திரையுலகில் பல அடுக்கு மொழி வசனங்களாலும், அதிரடியான வார்த்தைகளாலும் பல வெற்றிப் படங்களை தனது கதை வசனத்தில் வெளிக் கொணர்ந்தவர் கலைஞர் மு. கருணாநிதி

திருவாரூர் அருகே உள்ள திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, சிறுவயது முதலே மொழிப்பற்று அதிகம் கொண்டவர். கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி, தனது எழுத்துத் திறமையை வளர்த்து வந்தார். அதனை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசென்ற அவர், நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.

பதினைந்து வயதில் அவர் எழுதிய முதல் நாடகம், ‘பழனியப்பன்’. திருவாரூரில் அந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்த அன்று பெரும் மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை அடைக்க நாகப்பட்டினம் சென்று கோபால் என்பவரிடம் நூறு ரூபாய்க்கு நாடகத்தை விற்று கடனை அடித்திருக்கிறார்.

அந்த பழனியப்பன் நாடகம், சாந்தா, `நச்சுக்கோப்பை' என்ற பெயரில் தமிழகத்தில் பல இடங்களில் திராவிடர் கழக மேடைகளில் நடத்தப்பட்டது. பெரியாரின் எழுத்து, அண்ணாவின் எழுத்து கலைஞரை பெரியாரின் குடியரசு பத்திரிகையில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கு துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கலைஞரின் உறவினர் சிதம்பரம்.எஸ்.ஜெயராமன் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த உதயணன் என்ற திரைப்படத்துக்கு இசையமையக்க ஒப்பந்தமானார். அது தொடர்பாக அடிக்கடி ஜுபிடர் பிக்சர்ஸ் பட நிறுவனத்துக்கு சென்ற போது கதையாசிரியர் எஸ்..சாமியுன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அவரிடம், கலைஞரின் திறமையைக் கூறி, சந்தர்ப்பம் வரும்போது அவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். அதை மனதில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, தனக்கு ராஜகுமாரி படத்தை இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்ததும், தன்னுடன் இணைந்து வேலை செய்ய கலைஞருக்கு அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே பல  நாடகங்களை எழுதிய அனுபவம் இருந்ததால் ஏ.எஸ்..சாமி சொன்னன காட்சிகளுக்கு உடனுக்குடன் வசனம் எழுதிக் கொடுத்தார், கலைஞர். வசனம் எழுதுவதில் கலைஞருக்குள்ள வேகத்தையும் ஆற்றலைப் பார்த்து அசந்து போன ஏ.எஸ்..சாமி முழு திரைப்படத்திற்கும் அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமான ராஜகுமாரி படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சும்; கலைஞரின் வசன வீச்சுமாக மக்கள் மனதில் நின்றது. ஆனால், படத்தின் டைட்டிலில் வசன உதவி கருணாநிதி என்றே வந்தது.

ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘அபிமன்யூ’ என்கிற புதிய படத்தை தொடங்கினார்கள். அதிலும் எம்.ஜி.ஆர்தான் கதாநாயகன். வசனம் எழுதும் பொறுப்பு கலைஞருக்கு வழங்கப்பட்டது. இயக்குனர், ஏ.எஸ்.ஏ.சாமி.

அந்தப் புராண கதைக்கு புதிய கோணத்தில் இலக்கிய நயத்தோடு வசன மழை பொழிந்தார் கலைஞர். இந்த முறையும் கலைஞருக்கு உரிய கௌரவம் வந்து சேரவில்லை! இயக்குனரே வசன உரிமையை எடுத்துக்கொண்டார். கொதித்துப் போன கலைஞர், பட முதலாளியிடம் காரணம் கேட்டபோது, “உன் பெயர் பிரபலமாகட்டும்; அதுவரை பொறுமையாக இரு!” எனச் சொல்லவே; கலக்கத்துடன் அந்த கம்பெனியை விட்டு வெளியேறி, ஊர் திரும்பினார், கலைஞர்.

படத்திற்கு எழுதுவது நின்று போனாலும், பத்திரிகையில் எழுதுவது, நாடகம் எழுதுவது என்று என்று எழுத்துப் பணியை தொடர்ந்தார், இந்த நிலையில் உடனே வரும் படி எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு தந்தி வந்திருந்தது.

‘ராஜகுமாரி’, ‘அபிமன்யு’ படங்களின் போதே எம்.ஜி.ஆர் –  கலைஞர் இடையே நல்ல நட்பு இருந்தது! அந்த நட்பை மனதில் வைத்து, நண்பரை கை கொடுத்து தூக்கி விடும் நோக்கத்தில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்திற்கு கலைஞரை  சிபாரிசு செய்திருந்தார், எம்.ஜி.ஆர்.

முத்துசாமி என்பவர் தயாரிப்பில் ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி ஜோடியாக நடித்தப் படம் ‘மருதநாட்டு இளவரசி’.  இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதினர் கலைஞர். இந்தப் படத்தின் டைட்டிலில் கதை – வசனம் மு.கருணாநிதி என்று தனியாக வந்தது. விளம்பரங்களிலும் கதை வசனம் கருணாநிதி என்று வெளியிட்டார்கள். படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தேவி நாடக சபைக்கு குண்டலகேசியை அடிப்படையாக வைத்து மந்திரிகுமாரி என்ற நாடகத்தை எழுதினர், கலைஞர். கும்பகோணத்தில் அரங்கேற்றப்பட்ட அந்த நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

மார்டன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பாட்டு எழுதும் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞர் கா.மு.ஷெரிப், மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்துவிட்டு, அந்த நாடகம் பற்றியும், கலைஞரின் எழுத்துப் பற்றியும் பட அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் தெரிவித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எல்லீஸ் ஆர்.டங்கனுடன் கும்பகோணம் சென்று மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்த டி.ஆர்.சுந்தரம், நாடகம் பிடித்துவிட அந்த நாடகத்தை படமாக்கும் முயற்சியை எடுத்தார். ஏற்கனவே ஜூபிடர் பிக்சர்சில் இரண்டு படங்களில் பணிபுரிந்து காயம்பட்டிருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்று கொள்வது குறித்து கலைஞர் தயங்கினார்.

இந்த வாய்ப்பு மிக அரிய வாய்ப்பு. உங்களுக்கு உரிய மரியாதை, உரிமை கிடைக்க நான் உதவுகிறேன் என்று கலைஞரை வற்புறுத்தி சேலம் அழைத்து சென்ற கவிஞர் கா.மு.ஷெரிப், மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக கலைஞரை அமர்த்தினார்.

கதை முடிவாகி, கதாநாயகனைப் பற்றிய பேச்சு எழுந்தது.

கலைஞர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று மருதநாட்டு இளவரசி படத்திற்கு கலைஞரை கதை வசனம் எழுத சிபாரிசு செய்தார் எம்ஜி.ஆர். இப்போது மந்திரிகுமாரி படத்தில் வீர மோகன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக எம்.ஜி.ஆர். இருப்பார்” என எம்.ஜி.ஆருக்கு சிபாரிசு செய்தார், கலைஞர்.

சதிலீலாவதிபடத்தில் எம்ஜிஆரை அறிமுகப்படுத்திய மட்டுமின்றி தொடர்ந்து தனது படங்கள் பலவற்றில் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்புத் கொடுத்த எல்லிஸ் ஆர் டங்கன், இந்தப் படத்தில் எம்ஜிஆவைக்க விரும்பவில்லை. எம்ஜிஆரின் தாடையில் ஒரு சிறு குழி இருக்கும். அதனால், அவர் கதாநாயகனாக நடித்தால் சரியாக வராது என்றார்.

 ஆனால் கலைஞரோ எம்ஜிஆர் தான் இந்தப் படத்திலே கதாநாயகன் என்பதில் உறுதியாக இருந்தார். கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் ஆரம்பத்திலேயே தகராறு என்றால் சரியாக இருக்காதே என்று  எண்ணிய தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், ஒரு சிறு தாடியை ஒட்டி சரி செய்துவிடலாம் என்று கூற அவரது யோசனையை அனை வரும் ஏற்றுக் கொண்டதையடுத்து எம்ஜிஆர் அந்தப்படத்திலே கதானாயகன் ஆனார்.

மந்திரிகுமாரி படம் அபாரமான வெற்றியைப் பெற்று, எம்.ஜி.ஆர் - கலைஞரை முன்வரிசைக்கு கொண்டு போனது! மந்திரிகுமாரி படத்தை பார்த்துவிட்டு மறுநாளே கலைஞரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த என்.எஸ்.கிருஷ்ணன், அடுத்து தான் இயக்க இருக்கும் மணமகள் படத்திற்கு நீ தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறி இருக்கிறார். சொன்னது போலவே கலைஞர் வசனம் எழுதி கொடுத்திருக்கிறார்.

அடுத்து என்.என்.கண்ணப்பா, வி.என்.ஜானகி நடித்த தேவகி படத்திற்கு கதை, வசனம் எழுதிய கலைஞர், ஏவி.எம். நிறுவனத்தில் இருந்து அழைப்பு வர சென்னைக்கு சென்றார். அங்கு நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணன், பஞ்சு இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  அறிமுகமான பராசக்தி படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு.

முதலில் இந்தப் படத்திற்கு இயக்குனராக ஏ.எஸ்.ஏ.சாமியையும், வசனகர்த்தாவாக ‘ரத்தக் கண்ணீர்’ புகழ் திருவாரூர் தங்கராசுவையும், நியமித்த தாயாரிப்பாளர், திடீர் என இயக்குனரையும், வசனகர்த்தாவையும் மாற்றி களம் இறங்கினார்.

‘பராசக்தி’யில் கலைஞரின் நெருப்பு வசனங்களை, சிம்மக் குரலெடுத்து சிவாஜி கணேசன் பேசிய வசன வீச்சு; குறிப்பாக நீதி மன்ற காட்சியில் குமுறும் எரிமலையாய் - கொந்தளிக்கும் கடலாய்... உணர்ச்சிப் பிரவாகமாக  பொங்கி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது!

கலைஞரின் வசனத்தில் ‘அனல்’ தெறித்தது! ‘வசனப் புரட்சி’ செய்த கலைஞருக்கு தமிழ் திரையுலகம் தனி சிம்மாசனம் தந்தது. ‘இனிமேல், பக்தி, புராண இதிகாசம், ராஜா - ராணி கதைகள் போணியாகாது! ‘பராசக்தி’ மாதிரி சமுதாய விழிப்புணர்வுக் கதைகளை அழகுத் தமிழில் அடுக்குமொழி வசனத்தோடு சொன்னால் தான் படம் ஓடும்!’ என்கிற ட்ரெண்ரை உருவாக்கித் தந்தது கலைஞரின் வசன வீச்சு!

‘பராசக்தி’ படத்தின் மூலமாக சிவாஜிகணேசனும்; கலைஞரும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்கள். சிவாஜிக்கு நிறைய புதுப் படங்கள் ஒப்பந்தமாகின! ‘கலைஞர் எழுதினாலே அந்தப் படத்துக்கு வெற்றி உறுதி!’ என திரையுலகத்தில் பேச்சு எழுந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன் தயாரிப்பில் இரண்டாவது முறையாக, சிவாஜி கணேசன் நடிப்பில் இரண்டாவது முறையாக பணம் படத்திற்கு வசனம் எழுதினர் கலைஞர்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த நாம், சிவாஜி கணேசன் நடித்த திரும்பிப்பார், சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’,  எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன், சிவாஜி கணேசன் நடித்த ரங்கோன் ராதா, ராஜாராணி, புதையல், எம்.ஜி.ஆர். நடித்த புதுமைப்பித்தன், சிவாஜி கணேசன் நடித்த குறவஞ்சி, எம்.ஜி.ஆர். நடித்த அரசிளங்குமாரி சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம், எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சி தலைவன் என மாறி மாறி எம்.ஜி.ஆர். படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் வழுதி வந்தார்.

எம்.ஜி.ஆர். – சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற தன் தலைமுறைக் கலைஞர்களோடு வெற்றிகரமாக பயணம் செய்த கலைஞர், ஜெய்சங்கர், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற அடுத்த தலைமுறைக் கலைஞர்களோடும், பிறகு வந்த பிரசாந்த், பா.விஜய் போன்ற இளம் தலைமுறைக் கலைஞர்களோடும் தனது திரைப் பயணத்தைத் தொடர்ந்தார்.

‘ராஜகுமாரி’ படம் தொடங்கி, ‘பொன்னர் சங்கர்’ வரை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு என கிட்டத்தட்ட 69 படங்களில் கலைச்சேவை செய்திருக்கிறார். இதில் ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தில் அவரது மகன் மு.க.முத்துவும், ‘ஒரே ரத்தம்’ படத்தில் மு.க.ஸ்டாலினும் நடித்துள்ளனர்.

கலைஞரின் 6 படங்கள் தெலுங்கில் வெளியாகியுள்ளது. தனது நாடக, திரைத்துறை பயணத்தில் 21 நாடகங்களிலும், 69 படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவற்றில் கருணாநிதி கதை, வசனம் எழுதி எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 9. சிவாஜி கணேசன் நடித்த படங்கள் 8. இவற்றில் ‘பராசக்தி’ ‘மனோகரா’ இரண்டும் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட படைப்புகள்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், 'இராமானுஜர்' - மதத்தில் புரட்சி செய்த ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி வெளிவந்த இந்தத் தொடர் வசனமும் தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்றது. இந்தப் பணியில் அவர் ஈடுபட்ட போது அவருக்கு வயது 92.

‘தூக்கு மேடை’ நாடகத்துக்காக எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்று பட்டம் பெற்றார் கருணாநிதி. அதுமுதல், தலைவர்கள் மட்டுமல்லாமல் தொண்டர்கள் வரை அனைவராலும் ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. 

கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும், 21 நாடகங்களையும், ஒரு பயண நூலையும் எழுதியிருக்கிறார்.

1924 ஜூன் மாதம் மூன்றாம் தேதி பிறந்த கலைஞர் அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி காலமானார். இந்த கானொளியில் அவருடைய திரையுலக தகவல்களை மட்டும் சுருக்கி தந்திருக்கிறோம். அரசியல், குடும்பம் குறித்த தகவல்களை வேறொரு தொகுப்பில் பேசுவோம்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக