செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

'கலைஞானி' கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு

திரையுலகில் பன்முகத் திறமையாளராக தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட கமலஹாசன் அவர்கள்  1954ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வழக்கறிஞர் சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதிக்கு கடைக்குட்டி மகனாக பிறந்தார், கமஹாசன். கமலுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும்  

பரமக்குடியில் ஆரம்பக்கல்வி கற்ற கமல், சகோதரர்களின் உயர்கல்விக்காக குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தவுடன், கமலும் சென்னைக்கு வந்தார்.

கமலின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட போது, அவருக்கு சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாரதா. அவருக்கு கமலை ரொம்ப பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போது அவர் தன் கூடவே கமலையும் அழைத்து செல்வார். அப்படி ஒரு முறை அழைத்து சென்ற போது, ஏவி.எம்.மெய்யப்ப செட்டியாரின் மனைவி ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்க செல்ல வேண்டிய சூழ்நிலை. அங்கு கமலையும் அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவர் சாரதாவுடன் டவுசர் சட்டையோடு தனது ஸ்டுடியோ பங்களாவுக்கு வந்த சிறுவன் கமல்ஹாசனை பார்த்த மெய்யப்ப செட்டியார், அங்குள்ளவர்களின் கேள்விகளுக்கு கமலின் பதிலும், பேச்சும் அவரையும் கவர்ந்தது.

பையன் என்னம்மா துறுதுறுன்னு இருக்கான் என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டதையும் கவனித்தார். பிறகு கமலை அழைத்த மெய்யப்ப செட்டியார்,  டேபிள் லேம்ப் வெளிச்சத்தை, அப்படியே அந்தப் பையனின் பக்கம் திருப்பினார். முகம் பார்த்தார். அருகில் இருப்பவரிடம் படத்திலிருந்து டெய்ஸி ராணியை எடுத்துவிட்டு, இந்தப் பையனை நடிக்க வைக்கலாம் என்றார்.

மருத்துவர் சாரதா மூலமாக கமலின் பெற்றோரிடம் அனுமதி பெற்று களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைத்திருக்கிறார், ஏவி.மெய்யப்ப செட்டியார்.

கமல் தேர்வு ஆவதற்கு முன்பு வேறு ஒரு குழந்தை நட்சத்திரத்தை முடிவு செய்து அவனுக்கு முன்பணமும் கொடுத்திருந்தார், மெய்யப்ப செட்டியார்.  களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ என்கிற பாடலில் அனைவரின் பரிவையும் சம்பாதித்து கவனிக்க வைத்தார், கமல்.


1960ம் ஆண்டு ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து அறிமுக படத்திலேயே குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றார் கமல்.

அடுத்து சிவாஜியுடன் ‘பார்த்தால் பசி தீரும்’, மீண்டும் ஜெமினியுடன் ‘பாதகாணிக்கை’, எஸ்.எஸ்.ஆருடன் ‘வானம்பாடி’, எம்ஜிஆருடன் ‘ஆனந்த ஜோதி’ என்று தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக ஆறு படங்களில் நடித்தார்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பு முக்கியமானதக் இருக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப்பள்ளியிளும், புரசைவாக்கத்திலுள்ள எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படிப்பை தொடர்ந்த கமல் எட்டவதுக்கு மேல் நடிப்பு மீது தீவிர கவனம் செலுத்த ஆசைப்பட்டார்.

சாருஹாசன், சந்திரஹாசன் போல கமலும் உயர் படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், அப்பா சீனிவாசன். ஆனால், கமல் அப்பாவின் ஆசை என்கிற நாடகத்தில் நடிக்க சென்றார். `டி.கே.எஸ்’ என்ற நாடகக் குழுவில் சேர்ந்து அவர்களின் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த கமல், பிறகு, `சிவாலயா' என்ற நடனக்குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கியவர் சில மாதங்கள் அதில் செயல்பட்டார்.

நடிப்புக்கு நடனமும் முக்கியம் என்பதால் நடனம் கற்றுக் கொள்ள பரதம், கதகளி, குச்சுப்புடி போன்றவற்றை முறைப்படி கற்றார்.

பதினாறாவது வயதில் மாணவன் படத்தில் ஒரு பாடலுக்கு குட்டி பத்மினியுடன் இணைந்து நடனம் ஆடும் கமலுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜெய்சங்க்கர், முத்துராமன், லட்சுமி உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை எம்.ஏ.திருமுகம் இயக்கினார்.

அதன் பிறகு அன்னை வேளாங்கண்ணி, குறத்தி மகன், அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பருவகாலம், குமாஸ்தாவின் மகள், நான் அவனில்லை ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார், கமல்.  

திரையுலகில் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள கமல் ரொம்பவே பாடுபட வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் நாயகன், நாயகி போன்றோர் இப்போது இருப்பது போல் ஒல்லியாக இருக்க மாட்டார்கள். சற்று பூசிய உடல்வாகுடன் பார்ப்பதற்கே பக்குவமான ஆளாக இருந்தால் தான் நாயகனாக இருக்க முடியும்.

ஆனால், கமலோ ஒல்லியாக சிறு பையன் போன்ற தோற்றத்தில் இருந்ததால் அவர் சந்தித்த பரிகாசங்கள் ஏராளம். ஆனால் தன்னைப் பற்றிய மற்றவர்களின் கணிப்பு தவறு என தன் வெற்றிகளால் நிரூபித்துக் காட்டினார் கமல்.

படங்களில் நடிக்கும் போதே, தான் நடனம் கற்ற தங்கப்பன் என்பவரிடம் சில படங்களுக்கு துணை நடன ஆசிரியராக பணியாற்றினார். `நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும் `சவாலே சமாளி’ படத்தில் சிவாஜிக்கும் `அன்புத்தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறார் கமல்.

ஒரு நாள் வீட்டுக்கு கஸ்தூரி ரங்கன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த இயக்குநர் கே.பாலசந்தர், கமலஹாசனைப் பார்த்ததும், அவர் அடிக்கடி அலுவலகத்திற்கு வந்து வாய்ப்பு கேட்பது ஞாபகத்திற்கு வர, காரை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். அருகில் இருந்த தயாரிப்பாளர், ராம அரங்க்கன்னளிடம், அந்த விகடகவி பாடலுக்கு இந்த பையன் சரியா இருப்பானா என்று கேட்டிருக்கிறார்.

அவர் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்த கமலஹாசனை பார்த்த ராம அரங்கண்ணல், உங்க தேர்வு சரியாத்தான் இருக்கும். ஏற்கனவே அந்த வேடத்திற்கு ஒரு வாத்தியாரை தேர்வு செய்து வச்சிருக்கீங்களே... என்று சொன்னதும், அவர் கொஞ்சம் முதிர்ச்சியா இருப்பார். இவன் கரைக்டா இருப்பான். அவருக்கு அடுத்தப் படத்துல் நல்ல வாய்ப்பா கொடுத்துக்கலாம் என்று பாலசந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போது கமலஹாசன் காரை கடந்து சென்று கொண்டிருந்தாராம்.

கமலை அழைத்த பாலசந்தர், அன்று மாலை ஆண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நேரில் வரசொல்லிவிட்டு சென்றிருக்கிறார். கே.பாலசந்தரின் அழைப்பில் மகிழ்ந்த கமலஹாசன் அன்று மாலையே பாலசந்தரை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு அவள் ஒரு தொடர்கதை படத்தில் கடவள் அமைத்து வைத்த மேடை பாடலை பாடும் விகடகவி வேடம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்தப் படம் வெளியானதும் கமலுக்கு பெரும் புகழும் விளம்பரமும் சினிமா உலகில் கிடைத்தது.

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் மலையாளத்தில் கண்ணும் கரலும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், கமல். அந்தப் படம் நூறு நாட்களை தாண்டி ஓடிய படம். அதே கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் மலையாளத்தில் கமல் கதாநாயகனாக ‘கன்னியாகுமரி’ படத்தில் அறிமுகமானார். 1974 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அந்தப் படம் வெளியானது. இதுதான் அவருக்கு கிடைத்த முதல் கதாநாயகன் வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் பத்துப் படங்களில் நடித்தார், கமல். எல்லாம் துணைக் கதாபாத்திரங்கள்தான்.

நாயகனாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் துணைக் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி துணிந்து நடித்தார், கமல். நாகேஷ், சௌகார் ஜானகி என மூத்த நடிகர்களை வைத்து படம் கொடுத்துக் கொண்டிருந்த பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகன் ஆனார் கமல். பாலச்சந்தரின் இயக்கத்தில் மட்டும் சுமார் 23 படங்களில் நடித்துள்ளார், கமல். ரஜினி சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ படமே தமிழில் கமல் நாயகனாக அறிமுகமான முதல் படம். அந்தப் படம் நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

கமலின் நடிப்பு பயணத்தில் மாபெரும் திருப்புமுனையைத் தந்தது பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’ படம்.

மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் என ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்குமே தனித்தனியே பெரிய ரசிகர் வட்டம் உருவாகி விட்டதை உணர்ந்து, இனி சேர்ந்து நடிக்க வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர்.

1960ல் தொடங்கிய கமலின் ஓட்டம் தொடர்ந்து இன்றளவும் இளம் நாயகர்களுக்கு போட்டியாக காதல், ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என எல்லா தளங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர் என்ற இடத்திலேயே நீடித்திருக்கிறார்.

தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் படத்திற்காக தமிழுக்கான முதல் ஃபிலிம்பேர் விருது பெற்ற கமல், பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை, மணிரத்னம் இயக்கிய ’நாயகன்’, ஷங்கர் இயக்கிய ’இந்தியன்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.

1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கமல் அந்த தேசிய விருது பெற்றார். 1979 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1990ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கி கமலைக் கௌரவித்தது. 2016 இல் செவாலியே விருது பெற்றார் கமல்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் என ஆறு இந்திய மொழிகளில் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், கமல்,

சில படங்கள் கமலைத் தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது என்றளவில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களே பாராட்டும் வகையில் கதாபாத்திரத்திற்காக தன்னை அப்படியே மாற்றிக் கொள்ளக் கூடியவர் கமல்.

குணா படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக, அவ்வை சண்முகியில் பெண் கதாபாத்திரமாக, தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்கள் என ஒவ்வொரு படத்திலும் தனது அர்ப்பணிப்பான நடிப்பால் ரசிகர்களை அசர வைத்தவர்.  

27 படங்களை தயாரித்துள்ள கமல், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். பல்வேறு திரைப்படங்களில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் 2017-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை நான்கு சீஸனாக வெளிவந்த `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக