தேனாம்பேட்டை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற இயக்குநர் பாரதிராஜா, கார்த்திக்கை பார்த்ததும், காரை நிறுத்த சொல்லி சிறிது நேரம் பார்த்திருக்கிறார்.
அப்போது பாரதிராஜா இயக்க இருந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவைப்பட்டனர். எழும்பூரில் உள்ள ‘டான் பாஸ்கோ பள்ளியில் இருந்து கதாநாயகனையும், நான்கு நண்பர்களையும் தேர்வு செய்து வைத்திருந்தவர், கார்த்திக்கை பார்த்ததும் இவனை கதாநாயகனாக நடிக்க வைக்கலாமே. பளிச்சென்று இருக்கிறன் என்று நினைத்தவர், எதிரே முத்துராமனின் வீடு இருந்ததால், இவன் முத்துராமனின் மகனாக இருக்க வேண்டும் என்று நினைத்தவாறு கார்த்திக்கை அழைத்தார்.
கார்த்திக் அருகே சென்று ‘என்ன அங்கிள்’ என்று
கேட்டதற்கு, ‘அப்பா இருக்காரா?’ என்று பாரதிராஜா கூறி
இருக்கிறார்.
அப்பா ’ஃபுட்பால் மேட்ச் பார்க்கப் போயிருக்கார்
அங்கிள்’ என்று சொன்ன கார்த்திக், வாங்க அங்கிள் என்று வீட்டுக்கு
அழைத்திருக்கிறார்.
வீட்டுக்குள் சென்றதும், ‘நீ நடிக்கிறியா என்று பாரதிராஜா
கேட்க, ‘ஐ டோ நோ அங்கிள்.... டாடி...டாடிகிட்ட கேக்கணும்’ என்று கார்த்திக் பதில்
சொல்லி இருக்கிறார்.
உனக்கு இன்ரஸ்ட் இருக்கா என்று கேட்டவர், பதில்
எதுவும் சொல்லாமல் நோன்ற கார்த்திக்கை பார்த்து, பிறகு போட்டோ எதுவும்
வச்சிருக்கியா என்று கேட்டிருக்கிறார்.
மாங்கனியை கடிப்பது போன்ற ஒரு போட்டோவை கொண்டு
வந்து கார்த்திக் கொடுத்திருக்கிறார். அந்தப் படத்தை பார்த்த பாரதிராஜா, இது தவிர
வேற போட்டோ எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்.
கார்த்திக் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில்
பதில் சொல்லமுடியாமல் திகைத்து நின்றிருக்கிறார். பிறகு, அப்பா வந்ததும் பாரதிராஜா
வந்தேன். விசாரித்தேன்னு சொல்லு என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார், பாரதிராஜா.
பாரதிராஜா வந்து சென்ற தகவலும், நடிக்கிறாயா
என்று கேட்ட தகவலும் தெரிந்ததும், இன்ப அதிர்ச்சி அடைந்த முத்துராமன், உடனே
பாரதிராஜாவை தொடர்பு கொண்டார்.
என்ன பாரதி... என்னால நம்பவே முடியல.... உங்க
புது படத்துக்கு பையன் வேணும்னா... தாராளமா
கூட்டிட்டு போங்க... அது உங்க புள்ள... என்று கூறியவர், கார்த்திக்கின் பலம்,
பலவீனம் என எல்லாவற்றையும் தெரிவித்திருக்கிறார்.
நாகர்கோயில் அருகே உள்ள ஒரு கோவிலில் பூஜை
போட்டு கார்த்திக், ராதா இருவரையும் நெருக்கமாக நிற்க வைத்து ஒரு ஷாட் எடுத்தார்
பாரதிராஜா.
அதன் பிறகு ஜேப்பியார் பிறந்த ஊரான முட்டம்
பகுதியில் முதல் நாள் படப்பிடிப்பு. புழுதி மண்ணும், நீல வானமும், கடலும் மேகக்
கூட்டங்களும் பாறைகளை மோதிச்செல்லும் கடல் அலைகளும் உள்ள அழகான அந்த அந்த இடத்தில்
‘’புத்தம் புது காலை’ என்கிற அற்புதமான பாடலை கண்ணன் ஒளிப்பதிவில் படமாக்கினார்,
இயக்குநர் பாரதிராஜா.
நிழல்கள் படத்தின் தோல்வியால் பாரதிராஜா
அவ்வளவுதான் என்று பேசிய வாய்களுக்கு பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்று
சொல்லும் விதமாக இளையராஜாவின் இசையில் அவரது அண்ணன் பாஸ்கரின் தயாரிப்பில்
மணிவண்ணன் கதையில் அலைகள் ஓய்வதில்லை படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து
வசூலில் சாதனை படைத்தது.
விச்சு என்கிற கதாப்பாத்திரத்தில்
வாழ்ந்திருந்தார், கார்த்திக். முதல் வாய்ப்பு, முதல் படம் என்று சொல்ல முடியாத
அளவுக்கு அவரிடம் இயக்குநர் பாரதிராஜா வேலை வாங்கி இருப்பார். ரசிகர்கள் அவரை
பாராட்டினார்கள். தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி கௌரவித்தது. முதல்
படத்திலேயே சிறந்த நடிகருக்கான விருது பெற்று மகிழ்ந்தார் கார்த்திக்.
அலைகள் ஓய்வதில்லை படம் தெலுங்கு மொழியிலும்
உருவானது. பாரதிராஜா இயக்கிய அந்தப் படத்திலும் கார்த்திக் கதாநாயகனாக தெலுங்கு
மொழியில் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகியாக அருணா நடித்திருந்தார். இந்தப்
படத்திற்கு ஆந்திர அரசு நந்தி விருதும், மத்திய அரசி சிறந்த மாநில மொழி
படத்திற்கான தேசிய விருதும் வழங்கி கௌரவித்தது.
அடுத்து ராமநாராயணன் இயக்கத்தில் ராதாவுடன்
இளஞ்ஜோடிகள், அதன் பிறகு நேரம் வந்தாச்சு
படத்தில் ராதாவுடன் என தொடர்ந்து படங்கள் குவிந்தன.
எம்ஜிஆர் - சரோஜாதேவி, சிவாஜி - பத்மினி, கமல் - ஸ்ரீதேவி ஜோடி
போல, கார்த்திக் - ராதா ஜோடி கொண்டாடப்பட்டது.
ஆனாலும் கார்த்திக் - ரேவதி, கார்த்திக் - அம்பிகா, கார்த்திக் -
பானுப்ரியா, கார்த்திக் - ஜீஜீ, கார்த்திக்
- குஷ்பு, கார்த்திக் - சுஹாசினி, கார்த்திக்
- சசிகலா, கார்த்திக் - ரம்பா, கார்த்திக்
- நக்மா, கார்த்திக் - நிரோஷா, கார்த்திக்
- ஜீவிதா... என எல்லா ஜோடியும் பேசப்பட்டது.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும்
பொருந்திப்போவார் கார்த்திக். எந்த கதாநாயகியாக இருந்தாலும் பொருத்தமான ஜோடி என்று
கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
ஸ்ரீதரின் ‘நினைவெல்லாம் நித்யா’ எதிர்ப்பார்த்த
வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் அத்தனை பாடல்களாலும் நம் மனக்கண்ணில் கார்த்திக்
நின்று கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் ஜாம்பவான் இயக்குநர்கள் அத்தனைப்
பேர் கையினாலும் மோதிரக் குட்டு வாங்கிய திறமைசாலி நடிகர் என்று இவரைச் சொல்லலாம்.
ஆரம்பத்தில் விடலைத்தனமான கேரக்டர்களிலேயே நடித்து வந்தாலும் இவருக்கான திருப்புமுனை
தந்த இயக்குநர் மணிரத்னம்.
தேசியவிருது பெற்ற 'மெளன ராகம்' படத்தின் ஹீரோ மோகன். படத்தில்
வெறும் அரைமணி நேரம் மட்டுமே வரும் கார்த்திக் படம் முழுவதும் ஆக்ரமித்தது
மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்றார். துள்ளலும்
துடிப்பும் நிறைந்த கேரக்டர் என்றாலே நடிகர் கார்த்திக்தான் என்று அப்போதைய
இளசுகளின் மனதில் அசையா இடம் பெற்றிருந்தார்.
படத்தில் வரும் 'சந்திரமெளலி...மிஸ்டர்
சந்திரமெளலி' வசனம் அப்போதைய ட்ரெண்ட்.
‘ஊமைவிழிகள்’ படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ‘மாமரத்துப்பூவெடுத்து’
பாடலையும் கார்த்திக்கையும் அப்படி ரசித்தார்கள். ‘கோபுர வாசலிலே’ படத்தில் காதலுக்கு
தவிக்கும் கதாபாத்திரத்தையும் நண்பர்களின் துரோகத்தால் புழுங்கி தவிப்பதையும்
அட்டகாசமாக செய்திருப்பார், கார்த்திக்.
திரையில் தோன்றியதுமே பார்வையாளர்கள் மனதில்
கரன்ட் பாய்ச்சுவதில் கார்த்திக்கின் உடல் மொழியும் நடிப்பும் இருந்தன.
உதாரணத்துக்கு 'அக்னிநட்சத்திரம்' படத்தில்
பிரபுவும் ஒரு ஹீரோ என்றாலும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப ரொமான்ஸையும்
இறுக்கமாகத்தான் வெளிப்படுத்துவார்.
ஆனால் கார்த்திக்கோ அவரின் வயதுக்கேற்ப
நண்பர்களுடன் ஜாலி அரட்டை, திருட்டுத்தனமாக நிரோஷா வீட்டு
நீச்சல் குளத்துக்குள் வந்து ஐ லவ் யூ சொல்வது என்று படத்தின் அக்னி வெப்பத்தைக்
குறைக்கும் காட்சிகளில் பட்டையைக் கிளப்பியிருப்பார். ராஜாதி ராஜனிந்த ராஜா'
பாடலுக்கு கார்த்திக்கின் துள்ளான் நடனம் அனைவரையும் மகிழ்ச்சியுடன்
பார்க்க வைத்தது.
கார்த்திக்கை தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஒவ்வொரு
குடும்பமும் நினைக்க வைத்த படம் 'வருசம் 16'.
பாசில் இயக்கிய அந்தப் படத்தில் குடும்பத்தின் மீதான பாசம், குஷ்புவின்
மீதான காதல் என்று எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருப்பார் கார்த்திக்.
சிட்டியில் மட்டுமின்றி கிராமத்து ஹீரோவாய் இவர்
நடித்த படங்களின் வெற்றி அனைத்து சென்டர்களிலும் இவரை நெருக்கமான ஸ்டாராக
மாற்றியது. 'பாண்டி நாட்டுத் தங்கம்', 'பெரிய வீட்டுப் பண்ணக்காரன்', 'பொன்னுமணி' போன்ற படங்கள் உதாரணம்.
'கிழக்கு வாசல்' படத்தில்
கார்த்திக் ஏற்று நடித்த பொன்னுரங்கம் கதாபாத்திரத்தை மற்ற முடியுமா? தன்
அம்மாவின் மரணத்துக்கு குஷ்புவின் அப்பாதான் காரணம் என்பதை அறிந்ததும் கொள்ளிவைத்த
கையோடு அழுகையும் ஆத்திரமுமாய் அவரிடம் சென்று தன் பக்க நியாயத்தைக் கூறும்
காட்சியில் நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக
தமிழ அரசு சிறந்த நடிகருக்கான விருது கொடுத்து கௌரவித்தது.
காதல் நாயகனாகவே கலக்கி வந்த கார்த்திக்கின்
சினிமா வரலாற்றில் அவரின் 'அமரன்' படம்
பெரும் திருப்புமுனை. படம் முழுதும் மிக ஸ்டைலிஷான டானாகப்
பிரமாதப்படுத்தியிருப்பார் கார்த்திக். இந்தப் படத்தில் 'வெத்தல
போட்ட ஷோக்குல' பாடல் முலம் பாடகராகவும் அறியப்பட்டவர்
கார்த்திக்.
ஒளிப்பதிவாளர் பி.சி ஶ்ரீராமின் கேமராவில்
அதிகம் சிக்கியவர் கார்த்திக்தான். 'மெளன ராகம்'. 'அக்னி நட்சத்திரம்', 'அமரன்', 'கோபுர வாசலிலே', 'இதயத் தாமரை' என அவரின் ஒளிப்பதிவில் ஐந்து படங்களின் ஹீரோ இவர்.
சில படங்களில் தோல்விகளுக்குப் பிறகு இரண்டாவது
இன்னிங்ஸாக தன் வெற்றிப் பயணத்தைத் தொடர காரணமாக அமைந்தது சுந்தர். சி இயக்கத்தில்
வெளிவந்த 'உள்ளத்தை அள்ளித்தா'. காமெடி கலகலப்பில் வெள்ளிவிழா கொண்டாடியது படம் அது. கார்த்திக்,
கவுண்டமணி கூட்டணி தொடர்ந்து 'மேட்டுக்குடி'. 'உனக்காக எல்லாம் உனக்காக', என்று வெற்றிப்படங்களைத்
தந்தன.
இயக்குநர் அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’
கார்த்திக்கின் வேற லெவல் நடிப்பு. விக்ரமனின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’
அநாயச நடிப்பால் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் அள்ளிக்கொண்டார்.
கார்த்திக்கின் நடை, பேசுகிற பாவனை, முகத்தில் படபடவென
விழுந்து கொண்டே இருக்கும் ரியாக்ஷன்... இவை எல்லாமே கார்த்திக்கை தனித்துவம்
மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை கார்த்திக்கின் திரைவாழ்வு
சற்று வித்தியாசமானது. பொதுவாக அவரது எல்லாப் படங்களுமே பார்க்க கூடியதாக
இருந்தாலும் திடீர் திடீரென்று மாபெரும் வெற்றிகளை அவர் தருவார். ஒவ்வொரு
இரண்டாண்டுகளிலும் அவரது ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை பார்க்க முடியும். அது
மட்டுமின்றி இமேஜ் பாராமல் பல படங்களில் இரண்டு நாயகர்களுடன் இணைந்தும்
நடித்திருக்கிறார்.
ரஜினியுடன் நல்லவனுக்கு நல்லவன், ராகவேந்திரா, பிரபுவுடன் இரும்பு பூக்கள், உரிமை கீதம், அக்கினி நட்சத்திரம், தை பொறந்தாச்சு, குஸ்தி, அர்ஜீனுடன் நன்றி, அஜித்துடன்
ஆனந்த பூங்காற்றே, உன்னை நினைத்து, உன்னிடத்தில் என்னை
கொடுத்தேன், விஜயகாந்துடன் ஊமை விழிகள், தேவன் என நடித்திருந்தார்.
கார்த்திக்கின் திரைப் பயணத்தில்... ஏகப்பட்ட வெற்றிப் படங்கள். நூறுநாள் படங்கள்.
வெள்ளிவிழாப் படங்கள்.
பெரும்பாலான கலைஞர்களுக்கு இருப்பது போலவே
இவருக்கும் சில பலவீனங்கள் இருந்தன. ஆனால் அவற்றை விட்டு மீளமுடியாமல் போனது
அவரைவிட தமிழ் சினிமாவுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றி இருபத்தி
ஐந்து படங்களுக்கு மேல் நடித்துள்ள கார்த்திக், அலைகள் ஓய்வதில்லை, அக்னி
நட்சத்திரம், கிழக்கு வாசல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி ஆகிய
படங்களுக்காக தமிழக அரசுன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார். தமிழக அரசு
வழங்கிய கலைமாமணி விருதும் பெற்றுள்ள கார்த்திக், தனது குரலில் எட்டு பாடல்களையும்
பாடி இருக்கிறார்.
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்’ கட்சியின்
தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று அரசியலில் நுழைந்த கார்த்திக், அதன் பிறகு
நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். பின்பு அந்தக் கட்சியைக் கலைத்துவிட்டு `மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய
கட்சியைத் தொடங்கினார். தீவிர அரசியிலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
1988ஆம் ஆண்டு சோலைக்குயில் படத்தில் தன்னுடன்
இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவர்களுக்கு கவுதம்
கார்த்திக், கயன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் மனைவி ராகினியின்
சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரன் கார்த்திக்
என்ற மகன் உள்ளார்.
இதில் கெளதம் கார்த்திக் மனிரத்ணம் இயக்கிய கடல்
படத்தில் ராதாவின் மகள் கார்த்திகாவுடன் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல
படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக