ஈ.வி.சரோஜா |
ஈ.வி.சரோஜாவின் சொந்த ஊர் திருவாரூரை அடுத்த, எண்கண் கிராமமாகும். தந்தையார்
வேணு பிள்ளை இசைக்கலைஞர், தாயார் ஜானகியும் அப்படியே.
சரோஜாவுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். ஒருவர் அண்ணன், மற்ற
இருவரும் தம்பிகள். சரோஜாவின் ஏழாவது வயதில் தந்தையார் காலமானார். பிறந்தது
கலைக்குடும்பம் என்பதால் இயல்பாகவே கலைகளின் மீதான ஆர்வம் அவரது ரத்தத்திலேயே
கலந்திருந்தது.
தாயாரும் மகளின் மனதை அறிந்தவராக நடனம் கற்பிக்க
முடிவெடுத்தார். காலில் கட்டிய சலங்கைகளின் வழியாக மிகச் சரியாகவே தன் தீராத
கலையார்வத்தைப் பேசிற்று அந்தக் குழந்தை.
அதே தஞ்சை மாவட்டத்துக்காரரான வழுவூர்
ராமையாப்பிள்ளை நடனக்கலையில் மேதாவிலாசம் நிரம்பப் பெற்றவர். அந்த காலக்
கட்டத்தில் பிரபல திரைக்கலைஞர்கள் பலருக்கும் அவரே குருவாகவும் இருந்து நாட்டியம்
பயிற்றுவித்து வந்தார். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற நடன ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
வைஜெயந்திமாலா, குமாரி கமலா என பல புகழ் பெற்ற
நாட்டியத்தாரகைகள் இவரால் மெருகேற்றப்பட்டவர்கள். அவ்வளவு பேரும் புகழும் பெற்ற
கலைஞர், அந்தச் சமயத்தில் திருவாரூர் சென்றிருந்தார். ஒரு
வகையில் அவர் சரோஜாவின் உறவினரும் கூட.
ராமையாப் பிள்ளை திருவாரூர் வந்திருப்பதை அறிந்த
சரோஜாவின் தாயார் ஜானகி அம்மாள், தன் மகள் சரோஜாவை
அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். மகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து,
‘என் மகளுக்கு நீங்களே குருவாக இருந்து அவளுக்கு நடனம் பயிற்றுவிக்க
வேண்டும்’ என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டார்.
குழந்தை சரோஜாவின் துறுதுறுப்பான முகமும்
அலைபாயும் கண்களும் ‘இந்தச் சிறுமி எதிர்காலத்தில் நல்ல நாட்டிய மங்கையாகப்
பிரகாசிப்பாள்’ என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.
தாயாரின் ஆசியுடனும் குருவுடனும் சென்னைக்குப்
பயணமானார் சரோஜா. குருகுல வாசமாகவே அவருக்கு நாட்டியம் சொல்லித் தரப்பட்டது. மிக
விரைவாகப் பயிற்சி பெற்றுத் தேறியதுடன், மிக இளம் வயதிலேயே நன்றாக ஆடக்
கூடியவர் என்ற பெயரையும் குருவிடமிருந்து பெற்றார்.
அங்கு நாட்டியப் பயிற்சி பெறுவதற்காக வரும் மற்ற
இளம் பெண்களுக்கு நாட்டியத்தைக் கற்றுத் தரும் இளம் ஆசிரியராகவும்
பயிற்சியாளராகவும் அவரை உருமாற்றினார் குரு வழுவூர் ராமையாப்பிள்ளை.
மிக விரைவில் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் 1951
ஆம் ஆண்டு, அப்போதைய பிரபல நீதியரசர் ஏ.எஸ்.பி.அய்யர்
முன்னிலையில் அரங்கேற்றம் அமோகமாக நடைபெற்றது. 15 வயது சிறுமி மிகச் சிறப்பாக ஆடி
அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டார். அந்தக் காலத்தின் அரங்கேற்றம் நிகழும்
சபாக்கள் மூலமாகவும் திரைப்படங்களுக்கு நட்சத்திரங்களையும் நாட்டியத் தாரகைகளையும்
தேடும் படலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மற்ற ஊர்களைக் காட்டிலும் சென்னை மாநகரம்
அதற்கான களமாகவும் இருந்தது.
அப்படி ‘என் தங்கை’ படத்தின் பிரதான பாத்திரமான
தங்கை மீனாவாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்தான் ஈ.வி. சரோஜா.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, ‘என் தங்கை’ என்ற படத்தைத் தயாரிப்பதில் ‘அசோகா பிக்சர்ஸ்’
நிறுவனம் அப்போது மும்முரமாகக் களமிறங்கி இருந்தது. கதாநாயகி இல்லாமல், தனித்த நாயகனாக எம்.ஜி.ஆர். நடிக்க அவருக்கு தம்பியும் தங்கையுமாக நரசிம்ம
பாரதியும், ஈ.வி.சரோஜாவும் நடிப்பதென்று முடிவானது.
வழக்கமான எம்.ஜி.ஆர். பட பாணியிலிருந்து
முற்றிலும் விலகி, குடும்பத்தின் மூத்த மகனாக,
குடும்பச்சுமையைத் தன் தோள்களில் தாங்கும் பொறுப்புள்ள மூத்த
சகோதரனாக எம்.ஜி.ஆர்.
கண் பார்வையற்ற தங்கை மீனாவாக, சோக ரசம் சொட்டச் சொட்ட அறிமுகப் படத்திலேயே தன் நடிப்பால்
அனைவரையும் கண் கலங்க வைத்தார் ஈ.வி.சரோஜா. அவரைச் சுற்றியே படத்தின் கதையும்
பின்னப்பட்டிருந்தது.
கண் பார்வையில்லாமல் ஒரு பெண் இந்த உலகில்
வாழ்வது எவ்வளவு கடினம் என்பதைக் கதை விவரித்தது.
‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத்தாரா…’ ‘குல்லா
போட்ட நவாப்பு…. செல்லாது உங்க ஜவாப்பு…’ வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப்
பாத்துப் போங்க…’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்…’ ‘அழகைப் பார்… நீ பழகிப் பார், எனதன்பே என்னைப் பார்’ என எத்தனை பாடல்கள், அதற்கான நளினம் மிகு நடனங்கள்.
அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப்
படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில் குமாரி கமலாவுடன்
இணைந்து நடித்தார், ஈ.வி.சரோஜா. தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’
படத்திலும், எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர்
நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த
‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.
‘மதுரை வீரன்’ படத்தில் மானைத் துரத்தி வரும்
வேடனாக எம்.ஜி.ஆர். பெண்களின் அந்தப்புர நந்தவனத்துக்குள் நுழைந்துவிட, அவரிடம் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்வதில் ஆரம்பித்து,
கேலியும் கிண்டலுமாகத் தொடரும் ‘வாங்க மச்சான் வாங்க…. வந்த வழியப்
பார்த்துப் போங்க….’ பாடலில் தரையிலிருந்து இரண்டடி உயரத்துக்கு மேலாக அவர்
துள்ளிக் குதிப்பது, மான் துள்ளலாகவே இருக்கும்.
பட்டணமும் பட்டிக்காடும் கிராமத்திலிருந்து
பட்டணத்துக்குப் பிழைக்க வரும் ஒருவனின் பட்டண வாசம் பற்றிய கற்பனைகளுக்கு
கிராமத்துப் பெண்ணொருத்தி பதிலடி கொடுப்பதாக அமைந்த எவர்க்ரீன் பாடல், ‘பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணங்காசு
தேடலாமடி’ ரேடியோ காலத்திலிருந்து இன்றைய யூடியூப் காலம் வரை அனைவராலும் ஏற்றுக்
கொள்ளப்பட்ட பாடல்.
நாடோடிகளாகத் தெருவில் ஆடிப் பாடிப் பிழைக்கும்
ஒரு ஜோடி பாடுவதாக அமைந்த இப்பாடல் ‘எங்க வீட்டு மகாலட்சுமி’ படத்தில் இடம்பெற்று
பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அந்தப் பாடலில் இடம்பெற்ற ‘ஒலகம் தெரிஞ்ச
பொம்மனாட்டி, நான் ஒன்னுமே தெரியா கம்மனாட்டி’ என்ற
வரிகள் வெகு பிரபலம், அந்த ஆண் குறிப்பிடும் ‘ஒலகம் தெரிஞ்ச
பொம்மனாட்டி’ ஈ.வி.சரோஜாவே தான். இந்தப் படத்தில் இந்த ஒரு பாடல் காட்சியில்
மட்டுமே அவர் தோன்றினார். நமக்கு மட்டும் நாயகி சொன்ன ரகசியம்
ஈ.வி.சரோஜாவுக்கென்றே ராமண்ணா தயாரித்த படம்
‘மணப்பந்தல்’, ஆனால், இந்தப் படத்தை
அவர் இயக்கவில்லை. ஈ.வி.சரோஜா, சரோஜா தேவி என இரு
கதாநாயகிகள் என்றாலும் இருவருக்கும் சமமான பங்களிப்பு வழங்கப்பட்டது.
ஈ.வி.சரோஜாவுக்கு நடிப்பதற்கான அற்புதமான வாய்ப்பையும் இப்படம் வழங்கியது.
அந்தக் கால இளம் பெண்களின் ‘காதல் தேசிய
கீதங்கள்’ பலவற்றில் ஒன்றான ‘உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்.
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே’ ஈ.வி.சரோஜாவுக்குக் கிடைத்த அற்புதமான
பாடல்களில் ஒன்று. எத்தனை பெண்கள் தங்கள் காதலனுக்கு இந்தப் பாடல் வழியாக
தூதனுப்பியிருக்கிறார்கள்…. சேதிகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம்
ரசமானவை….
‘படிக்காத மேதை’ படத்தில் பணக்காரக்
குடும்பத்துச் செல்லப் பெண்ணாக ஆரம்பிக்கும் வாழ்க்கை, தந்தை வியாபாரத்தில் நொடித்துப் போய், மரணமடைய
குடும்பம் ஆட்டம் காண்கிறது. பொறுப்பற்ற அண்ணன்கள் விலகிக் கொள்ள தாயைக் காப்பாற்ற
வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாவாள் அந்தச் செல்லப்பெண். பொழுதுபோக்காகக்
கற்றுக் கொண்ட, தனக்குத் தெரிந்த நாட்டியத்தையே முதலீடாக்கி
அம்மாவுடன் வாழ்க்கையை நகர்த்துவார். அந்தச் செல்லப் பெண் பாத்திரம்
ஈ.வி.சரோஜாவுக்கு இயல்பாய் அமைந்தது. அதே குடும்பத்தில் வளர்ப்பு மகனாக, வேலைக்காரனாக நடித்த சிவாஜி தங்கை மீது அன்பும் அக்கறையும் கொண்டவராகவும்,
அதே நேரத்தில் திருமணத்துக்குக் காத்திருக்கும் தங்கையை மாப்பிள்ளை
வீட்டார் பெண் பார்த்து விட்டுப் போக, அவளைக் கேலி செய்து
பாடும் ‘சீவி முடிச்சு சிங்காரிச்சு, சிவந்த நெத்தியில்
பொட்டும் வச்சு…’ பாடலும் திருமண வீடுகளில் அந்நாட்களில் போடப்படும்
ரெக்கார்டுகளில் முதன்மை பெற்ற ஒன்று.
ஈ.வி.சரோஜாவின் திரைப் பாத்திரங்களில் சற்றே
வித்தியாசமானது ‘வீரத்திருமகன்’ படத்தில் ஏற்ற வீரமங்கை பாத்திரம். கொடுங்கோலாட்சி
நடக்கும் மன்னராட்சியில், அதை எதிர்த்து நிற்கும்
புரட்சிகரக் குழுவில் ஒருத்தியாகவும், அதே நேரத்தில் தளபதி
ரவீந்திரன் மீது ஒருதலையாகக் காதல் கொள்பவளாகவும் நடித்திருப்பார். ரவீந்திரனாக
நடித்த ஆனந்தன், தன் காதலி தான் மறைவில் நிற்கிறாள்
என்றெண்ணி ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்’ என அவளை நினைத்துப் பாட, பாடலின் இறுதியில்தான் இவள் தன் காதலியல்ல வேறொருத்தி என்பதை உணர்வார்.
சித்ரா வேடமேற்ற ஈ.வி.சரோஜாவும் இவன் உண்மையில் தன்னைக் காதலிக்கவில்லை என்ற
யதார்த்தத்தைப் புரிந்து கொள்வார்.
எக்காலத்திலும் எல்லோர் மனதையும் மயக்கும்
‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடல் காட்சியில்
ஈ.வி.சரோஜாவும் தோன்றுவார். ‘பாக்கியலட்சுமி’ படத்தின் இரண்டு நாயகிகளில்
சரோஜாவும் ஒருவர். பால்ய விவாகத்தின் கொடுமையைச் சொல்லும் இப்படத்தில் இடம்பெறும்
இப்பாடல் சௌகார் ஜானகி பாடுவதாகவும், ஈ.வி.சரோஜா பாடுவதாகவும்
இருமுறை இடம் பெற்றாலும், அதற்கான மொத்தக் குத்தகையையும்
ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டவர் சௌகார் ஜானகி. இப்பாடல் நிலைத்து இருக்கும் காலம்
வரை இவர்கள் இருவருமே நினைக்கப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும்
அவருக்கு இணையாக நடித்த ஒரே படம் ‘கொடுத்து வைத்தவள்’. இந்தப் படத்தைத்
தயாரித்தவர் சரோஜாவின் சகோதரர் ஈ.வி.ராஜன். சொந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின்
நாயகியாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தன் நாட்டிய வகுப்புத் தோழியான
எல்.விஜயலட்சுமிக்கு இரண்டாவது நாயகி வாய்ப்பையும் அளித்தார். எம்ஜிஆரை
சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட
நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது
மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே
கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.
எம்.ஜி.ஆரின் தங்கையாக என் தங்கை படத்தில் அறிமுகமானவர்
அவருக்கு ஜோடியாக ‘கொடுத்து வைத்தவள்’ படத்தில் நடித்து படவுலகை விட்டும்
ஒதுங்கினார்.
‘கொடுத்து வைத்தவள்’ படத்திற்கு பிறகு சகோதரர் ஈ.வி.ராஜனுடன்
இணைந்து ‘தங்கச் சுரங்கம்’ என்கிற படத்தை 1969ல் தயாரித்தார்.
தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா,
1974ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடமிருந்து
கலைமாமணி விருது பெற்றவர், 2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய
செல்வி’ என்ற விருதையும், திரைத்துறையில் நிகழ்த்திய
வாழ்நாள் சாதனைக்காக 2002 ஆம் ஆண்டுக்கான ‘எம்.ஜி.ஆர். விருது’ 2004 ஆம் ஆண்டு
தமிழக அரசிடமிருந்தும் பெற்றார்.
இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவை மனது கொண்ட ஈ.வி.சரோஜாவுக்கு
நளினி என்கிற மகள் இருக்கிறார். அவர் தனது தாயார் பற்றி என்ன சொல்கிறார் என்பதை
கேட்போமா...
இயல் இசை நாடக மன்றத்தின் திருவாடுதுறை
ராஜரத்தினம் அரங்கில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குச் ஆண்டு தோறும் அங்கு
வைக்கப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களில் ஈ.வி.சரோஜாவின் படம்
கண்களையும் மனதையும் ஒரு சேரக் கவர்ந்திழுக்கக் கூடியது.
தமிழ்த் திரையில் பல நடிகைகள் நடனமணிகளாக
இருந்தாலும், சரோஜாவின் நடனத்தில் துள்ளல், நளினம் இரண்டுமே கவனத்தை ஈர்க்கக் கூடியவை. அவர் நடித்த பல படங்களில் இடம்
பெற்ற நடனக் காட்சிகளைப் பார்க்கும்போது அது தனித்தன்மையுடன் இருப்பதை உணர
முடியும்.
மான் குட்டியைப் போல் துள்ளிக் குதிப்பதில்
ஆகட்டும், கால் தரையில் படாமல் அந்தரத்தில் மிதப்பது
போல் மிக வேகமாகக் கால்களை மாற்றி சில நடனங்களை அவரால் எளிதாக ஆடிக் காண்பிக்க
முடிந்திருக்கிறது.
மிக இளம் பெண்ணாக மெலிந்த தோற்றத்தில்
ஆரம்பகாலப் படங்களில் அவர் தோன்றினாலும் அவரின் நடிப்பும் நடனமும் சற்றும்
சளைத்தவையல்ல. முதன்மைக் கதாநாயகி அந்தஸ்தைப் பெற முடியாவிட்டாலும், ஒருபோதும் நடிப்பில் சோடை போய் விடவில்லை.
இரண்டாவது நாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை பொங்கும் நடிப்பு என
அனைத்து வகையாகவும் அவரால் திரையில் மிளிர முடிந்தது.
நடிகர்கள் சந்திரபாபு, கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் என்று நகைச்சுவை
நடிகர்களுக்கும் இணையாக நடித்தவர். அதிலும் குறிப்பாக சந்திரபாபுவுடன், அவரின் வேகமெடுக்கும் பாடல்களுக்கு ஏற்ப அதே துரித கதியில் ஆடுவதும்
அசாத்தியமானதுதான்.
‘புதுமைப்பித்தன்’ படத்தில் அரண்மனை
அடிமைப்பெண்களில் ஒருத்தியான அபராஜிதாவாக ஆடிய ஆட்டங்கள் நினைவில் நிற்பவை.
அதிலும், ‘தில்லானா பாட்டுப் பாடி குள்ளத் தாரா’
என்று சந்திரபாபு பாடும் பாடலுக்கு ஆடி அனைவராலும் ரசிக்கப்பட்டவர்.
கலைகளின் பிறப்பிடத்தில் மலர்ந்த நாட்டியத் தாரா
ஈ.வி.சரோஜா, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக சென்னை
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, தனது 70 வது வயதில்
காலமானார்.
நடிப்பு, நடனம் இரண்டிலும் திறம்பட உயர்ந்து
ஒளிர்ந்த ஈ.வி.சரோஜா, அற்புதமான இயற்கையான முக அழகுக்கு சொந்தக்காரர். ’இவர் போல்
அழகியுண்டா’ என்பார் நடிகர் சிவக்குமார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக