சனி, 19 ஜூலை, 2014

திரையுலக மார்கண்டேயன் சிவக்குமார்

கோயம்புத்தூர் அருகே உள்ளது காசிகவுண்டன்புதூரில் ராக்கிய கவுண்டர், பழனியம்மாள் தம்பதிக்கு 1941ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி பிறந்தவர் நடிகர் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி.  

சிறு வயதில் தந்தையை இழந்து படிக்க கஷ்டப்பட்ட இவரது படிப்புச் செலவுக்காகப் பட்ட கடனை அடைக்க வேண்டுமே என்பதற்காக இவரது அம்மா ஏழு ஆண்டுகள் வெறும் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாராம்

கஷ்டமான குடும்பத்தில் இருந்து கொண்டு சினிமா படம் பார்க்க முடியுமா? அதனால், சிவகுமார் தனது இளமைக்காலத்தில் பார்த்த சினிமாக்கள் மிக மிகக் குறைவு. தன்னுடைய ஏழாவது வயதில் இவர் பார்த்த முதல் படம் சந்திரலேகா.

எஸ்எஸ்எல்சி முடிக்கும் வரைக்கும் இவர் பார்த்த படங்கள் 14. இளம் வயதில் சினிமா பார்ப்பது என்பது இவரைப் பொறுத்தவரையில் எட்டாத கனியாகவே இருந்தது.

வறுமை காரணமாக சினிமா பார்க்கும் வாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு முறையே கிடைக்கும் என்பதால் திருச்சி ரோட்டில் இரண்டு மரக்கட்டைகளில் தொங்கும் சினிமா தட்டிகளில் சிவாஜியின் பராசக்தி போஸ்டர்களையும், மனோகரா போஸ்டர்களையும், தேவதாஸில் தாடியுடன் காட்சியளிக்கும் நாகேஸ்வரராவ் போஸ்டர்களையும், ஆசை தீரப்  பார்த்து பொங்கியெழும் தனது சினிமா ஆசையை அடக்கிக் கொள்வாராம் சிவக்குமார்.

ஒண்ணாங் கிளாசில் அ , , எழுதிப் பழகும் போதே பூனை, மாடு, ரயில் என்றெலலாம் வரைந்த இவர் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது முதுகுத் தண்டை வரைந்த வேகத்தைப் பார்த்து வகுப்பே ஆச்சரியப்பட்டது. ஐந்து நிமிடத்தில் தண்டு வடத்திலுள்ள அத்தனை எலும்புகளையும் வரைந்து முடித்தபோது  தான்  கொஞ்சம்  வித்தியாசமான ஆள்தான் என்ற எண்ணம் இவருக்குள் ஏற்பட்டதாம்

சென்னைக்கு வந்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்த சிவகுமார் ஆறு ஆண்டுகள் அந்தக்  கல்லூரியில் படித்துத் தேர்ந்தார். 

நடிகர் திலகத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சிவகுமார் அவரது பல படங்களின் காட்சிகளைத் தத்ரூபமாக வரைந்து ஒரு முறை ராயப்பேட்டையிலுள்ள சிவாஜிகணேசனின் வீட்டுக்குக் கொண்டு சென்று காட்டினார். அதை மெய்சிலிர்த்துப் பார்த்துப் பாராட்டிய நடிகர் திலகம் இவரது ஓவியத் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பாசமலர் படத்தைத் தயாரித்த இருவரில் ஒருவரான மோகன் என்பரின் மோகன் ஆர்ட்ஸ்  விளம்பர நிறுவனத்தில் சிவகுமாரைச் சேர்த்துவிட்டார்.

ஸ்ரீதர் இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திற்காக புதுமுகங்கள் தேவையென விளம்பரம் வெளியாகி இருந்தது. சிவக்குமாரும் புகைப்படங்களுடன் விண்ணப்பித்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.

சிவகுமாருடைய மாமா மகன் ரத்தினம் என்பவர் ஒரு மகிழ்ச்சியான சேதியைச் சொன்னார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடிப்பில் “சித்ரா பௌர்ணமி” என்கிற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதைப் பிரபல இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இயக்குகிறார்கள். இதில் விஜயகுமாரியின் தம்பி வேடத்தில் நீ நடிக்க வேண்டும் என்று கூறினார்.

சிவக்குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எதை நோக்கி செல்கிறோமோ, அதற்கான முயற்சிகள் நடப்பதாக நினைத்தார். ஆனால், சித்ரா பௌர்ணமி எதிர்பார்த்த நேரத்தில் வரவில்லை.

இந்த நேரத்தில் காக்கும் கரங்கள் என்ற படத்தை திருலோகசந்தர் இயக்கத்தில் தயாரிக்க ஏவி.எம் நிறுவனம் முடிவு செய்தது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி ஜோடியாக நடித்த இந்தப் படத்திற்கு ஒரு புதுமுகம் தேவைப்படவே சிவகுமாரைப் பற்றி ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த இயக்குநர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இருவரும் சிவகுமாரை ஏவி.எம்-மிடம் சிபாரிசு செய்தனர்.

அதையேற்று “காக்கும் கரங்கள்“ படத்தில் இரண்டாவது கதாநாயகனாக சிவகுமார் ஒப்பந்தமானார். சிவகுமாரின் இயற்பெயர் பழனிச்சாமி. அதை சிவகுமார் என்று திருலோகசந்தர் அவர்களும் ஏவி.எம்.சகோதரர்களும் மாற்றி வைத்தனர்.

காக்கும் கரங்கள் படத்தில் ரேவது என்கிற நடிகையுடன் சிவக்குமார் நடித்த சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் படத்தின் நீளத்தை குறைக்கும் போது துண்டிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சிவக்குமார், வெற்றிகரமாக ஓடும் படத்தில் நமக்கு பெரிதாக வாய்ப்பில்லையே என்று வருந்தி இருக்கிறார்.

“காக்கும் கரங்கள்“ வெளியாகின ஒரு வாரத்தில் எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி நிறுவனத்திலிருந்து “மோட்டார் சுந்தரம் பிள்ளை” படத்தில் சிவாஜிகணேசனின் மூத்த மருமகனாக, காஞ்சனாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சிவகுமாருக்கு கிடைத்தது.

அன்றைய பிரபல நடிகர், நடிகைகள் பலர் நடித்த தாயே உனக்காக படத்தில் சிவக்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சிவாஜிகணேசனின் படமென நம்பிச் சென்ற ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக இருந்ததனால் அப்படம் தோல்வியடைந்தது.

இந்நிலையில் கந்தன் கருணை படத்தில் முருகனாக நடிக்க நடிகர்களைத் தேடிக்கொண்டிருந்தார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். சுமார் 50 நடிகர்களை வரவழைத்துப் பார்த்தும் எவருமே அவருக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றி ஏவி.எம்-மில் சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் சிவகுமார் என்றொரு பையன் எங்கள் ‘காக்கும் கரங்கள்’ படத்தில் நடித்துள்ளான். அவன் முருகன் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருப்பான். மேக்கப் டெஸ்ட் எடுத்துப்பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

சிவக்குமாரை வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்த ஏ.பி.நாகராஜன், எதிர்ப்பார்த்த மாதிரியே திருப்தியாக இருந்ததால், கந்தன் கருணை படத்தில் வீரபாகுவாக சிவகுமாரையும், வள்ளியாக ஜெயலலிதாவையும்,, தெய்வானையாக கே.ஆர்.விஜயாவையும் நடிக்க வைத்தார்.

கந்தன் கருணைப் படத்தில் சிவகுமாரின் தோற்றமும் நடிப்பும் சிறப்பாக அமையவே தான் இயக்கிய  சரஸ்வதி சபதம் படத்திலும் சிவக்குமாரை நடிக்க வைத்தார், இயக்குநர் ஏ..பி.நாகராஜன். இதில் சிவக்குமார் மஹாவிஷ்ணுவாக நடிக்க, சிவாஜிகணேசன் நாரதர் வேடத்தில் நடித்தார்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் “கண் கண்ட தெய்வம்” என்ற படத்தில் நம்பியாரின் மகனாக லெட்சுமியுடன் ஜோடியாக நடித்தார். அப்படமும் பெரும் வெற்றிப்படமானது. இப்படத்தில் சிவகுமார் தென்னை மரத்தில் ஏறி இருந்து கொண்டு லட்சுமியைப் பார்த்து பாடும் “ தென்ன மரத்தில் குடியிருப்பது சின்ன பாப்பா” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.

1966-இல் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஒரேயொரு நாள் நடித்தார் சிவக்குமார்.  அப்போது தான் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார்.  அதன் பிறகு, 1967-இல்  எம்.ஜி.ஆர் சிகிட்சை முடிந்து திரும்பிய பின் 1967-இல் மீண்டும் காவல்காரன் வளர்ந்தது. அப்படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.

1968-இல் உயர்ந்த மனிதனிலும் ஜீவனாம்சம் படத்திலும் நடித்தார். கண் கண்ட தெய்வம் படத்தில் சிவகுமார்-லட்சுமி இணைந்ததோடு தொடர்ந்து ஜீவனாம்சம் படத்தில் இணைந்த இந்த ஜோடிகள் 12 படங்களில் தொடர்ச்சியாக நடித்தனர். இதற்கு முன் நடித்த படங்களில் பெரும்பாலும் சிவகுமாரை விட மூத்த நடிகைகளான தேவிகா, காஞ்சனா, புஷ்பலதா போன்றோர்தான் ஜோடியாக நடித்திருந்தனர். அவர் வயதிற்கும் தோற்றத்திற்கும் ஏற்ற இளம்பெண்ணாக முதன்முதலில் நடித்தவர் லட்சுமி தான். இந்த ஜோடிகளுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பிருந்தது. இதையடுத்து ஜெயகாந்தன் எழுதிய காவல் தெய்வம் படத்திலும் இருவரும் இணைந்தே நடித்தனர்.

அன்னக்கிளி, பத்ரகாளி, புவனா ஒரு கேள்விக்குறி, ஆட்டுக்கார அலமேலு, ஏணிப்படிகள், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி, பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள், மறுப்பக்கம், பொறந்த வீடா புகுந்த வீடா, பசும்பொன் உட்பட 190 தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சிவக்குமார், மலையாளத்தில் பூஜாபுஷ்பம் என்ற படத்திலும், தெலுங்கில் பால பாரதம் என்ற படத்திலும் நடித்துள்ளார்

ஆரம்பத்தில் எம்.ஜி‌.ஆர்., சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தது போல ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜீத், விஜய், விக்ரம்போன்ற எல்லா முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

அவன் அவள் அது, அக்னி சாட்சி, ஆகிய  படங்களில் சிறப்பாக நடித்ததற்காக  தமிழக அரசின் சிறந்த நடிகராக 1979ஆம் ஆண்டிலும் 1982ஆம் ஆண்டிலும் விருது பெற்ற சிவக்குமார், 1979ஆம் ஆண்டில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்திற்காகவும் 1980ல் வண்டிச் சக்கரம் படத்திற்காகவும் பிலிம் ஃபேர் விருதுகள் பெற்றிருக்கிறார்

கையளவு மனசு தொடங்கி, சித்தி, அண்ணாமலை என பத்தி மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள சிவக்குமார், ‘இது ராஜபாட்டை அல்ல’ என்கிற நூல் உட்பட பல நூல்களை எழுதி உள்ளார். இதில் இவர் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற நூல் இலயோலா கல்லூரியில் 1991-92களில் துணைப் பாடமாக வைக்கப்பட்டது

ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் பற்றியும் பல சமூக பிரச்சினகள்  குறித்தும் இடைவிடாது இரண்டு மணி நேரத்திற்கு மேல் பேசக் கூடிய மிகச் சிறந்த பேச்சாளராக இவர் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தால் சமூகத்தில்  மிகப் பெரிய அந்தஸ்தைப் பெற்றிருப்பது இவரது இன்னொரு சாதனை.

ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெரும் முதல் மூன்று மாணவச் செல்வங்களுக்கு பரிசு தொகை வழங்கி உற்சாகப் படுத்துகின்ற உன்னதமான பணியினைப் பல ஆண்டுகளாக செய்து வந்தார், சிவக்குமார். அவர் செய்து வந்த கல்வி உதவியை விரிவாக்கி 2006-ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற முனைப்போடு அகரம் பவுண்டேஷன் என்கிற அமைப்பை தொடங்கி பல்வேறு மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகள் செய்து வருகின்றனர், அவரது மகன்கள் சூர்யாவும், கார்த்தியும்.

சிவகுமாரின் மனைவி பெயர் லட்சுமி 1974ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சூர்யா, கார்த்தி என்கிற இரு மகன்களும் பிருந்தா என்கிற மகளும் உள்ளனர். மூவருக்குமே  திருமணம் ஆகி பேரப் பிள்ளைகள் பிறந்து தோற்றத்தால் யாரும் இவருக்குத்  தர முடியாத தாத்தா பட்டத்தை உறவு முறையால் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்

இன்று தமிழக ரசிகர்கள் கொண்டாடும் இரண்டு கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி ஆகிய இரு மகன்களின் மாபெரும் வெற்றிகளை மனதுக்குள் ரசித்தாலும் இந்த வெற்றிகளால் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதுதான் பழனிச்சாமி என்ற சிவகுமாரின் தனி அடையாளம்

வியாழன், 17 ஜூலை, 2014

திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ்



1980- களின் திரைக்கதை மன்னன் என்று திரையுலகினரால் போற்றப்படும் கே.பாக்யராஜ் 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எழாம் தேதி கோவையில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் கிருஷ்ணசாமி நாயுடு. தாயார் அமராவதி அம்மாள்.

1978-ஆம் ஆண்டு பதினாறு வயதினிலே படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கிய போது, அதில் உதவியாளராக சேர்ந்த பாக்யராஜ். பாரதிராஜாவின் இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்தில்  கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்தவர், அப்படத்திற்கு வசனமும் எழுதினார். தனது நான்காவது படமான 'புதிய வார்ப்புகள்' படத்தில் பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.

கதாநாயகனாக வெற்றி பெற்ற பின்னர் சுதாகர், சுமதி நடித்த 'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ் அதில் ஒரு குணச்சித்திரப் பாத்திரத்திலும் நடித்திருந்தார். பாக்யராஜை இயக்குனராக அறிமுகப் படுத்தியவர் பிரபல தயாரிப்பாளரான கே ஆர் ஜி அவர்களின் சகோதரர் கோபிநாத்

ராஜேஷ் அறிமுகமான  'கன்னிப்பருவத்திலே' படத்திற்கு  திரைக்கதை வசனம் எழுதி அப்படத்தில்  வில்லன் வேடத்திலும் நடித்த இவர், ஒரு கை ஓசைஎன்கிற படத்தின் மூலம் தயரிப்பாளராகவும் உயர்ந்தார். இவரே இயக்கிய இந்தத் திரைப்படத்தில் ஊமையாக நடித்து தன்  நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்

அடுத்து இவர் இயக்கிய 'மௌன கீதங்கள்' 'இன்று போய் நாளை வா', படங்கள், மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.  

விடியும் வரை காத்திரு,  அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு பேச்சு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு என இவரது படங்கள் அனைத்தும்  வெற்றிப் படங்களாக அமைந்தன.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர் அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது குருனாதர் பாரதிராஜாவுடன் இணைந்து   இவர் பணியாற்றிய  படம் ஒரு கைதியின் டைரி  கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த அந்தப் படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது

ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் கதானாயகனாக நடிக்க அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பை பாக்யராஜ் ஏற்றார்.  ஆக்ரி ராஸ்தா என்ற பெயரில் வெளியான அந்தப் படம்தான் பாக்யாராஜ் இயக்கிய முதல் இந்திப் படம்.

பாக்யராஜின் எண்ணற்ற வெற்றிப் படங்கள் இந்தி மொழியில் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஒரியா என்று பல மொழிகளில் இவரது கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் தன் முத்திரையைப் பதித்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக பாக்யா வார இதழின் ஆசிரியராக இருந்து வருகிறார்.  வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம் என்கிற சிறந்த புத்தகத்தை எழுதிய இவரது கைவண்ணத்தில் நீங்க நெனச்சா சாதிக்கலாம், உங்கள் பாக்யராஜின் கேள்வி - பதில்  என பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன  

புதிய வார்ப்புகள் படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், 'ஒரு கை ஓசை' படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின்  விருதினைப் பெற்றார்.

பிலிம்பேர் மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளைப்  பலமுறை பெற்றுள்ள கலைஞர் இவர்.

தமிழ்த் திரையின் கதனாயகர்கள் ஆக்ரோஷமாக நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில்  அடுத்த வீட்டு வாலிபன் போன்ற தோற்றத்தில்  தனது இயல்பான நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் இவர்

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து பாதியில் நின்று போன திரைப் படமான  அண்ணா நீ என் தெய்வம் திரைப்படத்தில்            எம்.ஜி. ஆர். நடித்திருந்த காட்சிகளை வைத்துக் கொண்டு அதற்கு புதிய  திரைக்கதை எழுதி "அவசர போலீஸ் - 100" என்ற பெயரில் அந்த படத்தை வெளியிட்டது  பாக்யராஜின்  தனித் திறமை

இவர் உதவி இயக்குனராக இருந்த போது இவருக்கு உதவியவர் பிரவீணா என்ற நடிகை. அப்போது முதலே இவர்கள் இருவருக்குமிடையே காதல் இருந்தது. கதாசிரியராக அறிமுகமாகி இயக்குனராக உயர்ந்து வெற்றிகரமான கதானாயகன் என்ற இடத்தைப் பிடித்த பிறகு,  1981 ஆம் ஆண்டில் பிரவீணாவை மணந்து காதலுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்தவர் இவர்.

"இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" போன்ற பலபடங்களில் இவருடன் நடித்த பிரவீணா, மஞ்சள் காமாலை நோய் காரணமாக 1983ஆம் ஆண்டில் மறைந்தார்.

இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து நண்பர்கள் வற்புறுத்தியதைத் தட்ட முடியாமல் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்த  பாக்யராஜ், அப்போது  முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவரும் இவரோடு டார்லிங் டார்லிங் திரைப்படத்தில் நாயகியாக நடித்தவருமான பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

தனது மகள் சரண்யாவை பாரிஜாதம் என்ற திரைப்படத்தில் தன் இயக்கத்திலேயே கதானாயகியாக  இவர் அறிமுகம் செய்தார். சரண்யா பாரிஜாதம் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை.

சாந்தனு "சக்கரக்கட்டி" படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.

திரையுலக நியதிக்கேற்ப கதானாயகன் என்ற நிலையிலிருந்து ஒரு கால கட்டத்தில் குணச்சித்திர வேடங்களுக்கு மாறிய இவர், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், உத்தம புத்திரன், வாகை சூட வா என எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 

இப்போது துணை முதல்வர் என்ற படத்திற்கு கதை வசனம் எழுதி முக்கிய பாத்திரத்தில் நடிக்கும்  இவர், சாதாரண உதவி இயக்குனராக வாழ்க்கையைத் துவங்கி தமிழ்த் திரையின் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரு அற்புதமான கலைஞர்.