ஞாயிறு, 12 ஜூலை, 2015

நடிகை ராதிகா வாழ்க்கை வரலாறு

1963ஆம் ஆண்டு  ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி  நடிகவேள் எம்.ஆர்.ராதா, கீதா தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் ராதிகா. இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் பள்ளி படிப்பையும், லண்டனில் பட்டப் படிப்பையும் முடித்தவர் இவர்.


ராதிகாவின் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு பெ
ண்ணை தனது படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் பாரதிராஜா பார்க்க சென்றிருந்த போது, அவர்கள காட்டிய குரூப் போட்டோவில் ராதிகாவை பார்த்துவிட்டு, இந்தப் பெண் யார் என்று விசாரிக்க, பக்கத்து வீட்டு பெண் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

பாரதிராஜா பக்கத்து வீட்டுக்கு நடந்து சென்ற போது, அங்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாராம்  ராதிகா. அவரிடம் பாரதிராஜா விசாரிக்க முயன்ற போது, அவர் பயந்து போய் அங்கிருந்து ஓடி இருக்கிறார். ஏற்கனவே அந்த பகுதியில் கொலை நடந்திருந்ததால், புதியவர்களை கண்டால் ராதிகாவுக்கு பயம்.

ராதிகாவின் அம்மா, கீதா வெளியில் வந்து பார்த்து, பாரதிராஜாவிடம் விசாரிக்க, அவர்தான் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் பதினாறு வயனிலே படத்தின் இயக்குனர் என்று தெரிந்திருக்கிறது. பிறகு உள்ளே அழைத்து சென்று பெசி இருக்கிறார்.

தனது கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வெகுளியான ஒரு பெண் தேவை என்றும், அதற்காக ஒரு புதுமுகம் தேடுவதையும், அதற்கு ராதிகா பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார் பாரதிராஜா. 


எம்.ஆர்.ராதா மகள்தான் ராதிகா என்று பாரதிராஜாவுக்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது. இந்த விஷயத்தை எம்.ஆர்.ராதாவிடம் தெரிவித்த போது சிரித்துக் கொண்டாராம். அவரை பொருத்தவரை நடனத்திலும் பாடுவதிலும் ஆர்வமாக இருக்கும் ராதிகாவின் தங்கை நிரோஷாதான் சினிமாவுக்கு வருவார் என்று நினைத்தாராம். இப்போது படிப்பில் மட்டுமே ஆர்வமாக இருக்கும் ராதிகாவை நடிக்க கேட்டதும் நம்பவில்லையாம். பிறகு தேடி வந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம். ஒரு படம் நடி என்று தெரிவித்தாராம் எம்.ஆர்.ராதா. முதலில் நடிக்க தெரியாதே என்று சொன்னவரை, நான் சொல்லித் தருகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்து நடிக்க வைத்திருக்கிறார், பாரதிராஜா.

லண்டனில் படித்து வளர்ந்த ராதிகாவை பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா.  1978ல் வெளியான இந்தப் படம் மாபெறும் வெற்றி பெற்று அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தந்தது.

நிறம் மாறாத பூக்கள், இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, மூன்று முகம், ரெட்டை வால் குருவி, பூந்தோட்ட காவல்காரன், ஊர்க்காவலன், கிழக்குச் சீமையிலே, சிப்பிக்குள் முத்து, நல்லவனுக்கு நல்லவன், தாவணி கனவுகள், பசும் பொன், தூங்காதே தம்பி தூங்காதே, கேளடி கண்மணி என  எழுபத்தி ஐந்து தமிழ்ப் படங்கள், ஐம்பத்தி ஐந்து தெலுங்கு படங்கள், நான்கு கன்னட படங்கள், மூன்று மலையாள படங்கள், பதினோரு இந்திப் படங்கள் என மொத்தம்  148 படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

ஜித்தன், தலைமகன், கண்ணாமூச்சி ஏனடா, சென்னையில் ஒருநாள், புலிவால், சண்டமாருதம் என ஆறு படங்களை தயாரித்திருக்கும் இவர், தற்போது தனுஷ் நடித்துள்ள மாரி, விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம், பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி என சின்னத்திரையிலும் நடிப்பு, தயாரிப்பு என தனது அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கும் இவர், பூந்தோட்ட காவல்காரன், நினைவு சின்னம் ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது இரு முறையும், தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறந்த சிறப்பு விருதுகளை ராணி மகாராணி, பசும்பொன் ஆகிய படங்களுக்காக இரு முறை பெற்றார். ஆந்திர அரசின் நந்தி விருது  பிரேம கதா படத்திற்காக பெற்ற இவர், பத்திரிகைகள், ஊடகங்கள், தனியார் அமைப்புகள் பாராட்டி அளித்துள்ள ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர்.

சினிமாவுக்கு விளையாட்டுதனமாக வந்துவிட்டேன் என்று சொல்லும் இவர் நடிக்க வந்த பிறகு ஒரே மாதிரி தெரியக் கூடாது என்று  புதிதாக மற்றிக் கொண்டு பர்பெக்டாக இருக்க வேண்டும் நடிப்பாராம். நடிக்க விருப்பம் இல்லாத இவர் ஒவ்வொரு படத்தை ஒப்புக் கொள்ளும் போதும்  இதுதான் கடைசி படம் என்று தாயாரிடம் சொல்லி ஒப்புக்கொள்வாராம்.

தெலுங்கு பட உலகில் இவரது திறமைக்கு சரியான படங்கள் அமைந்தன. மொழி தெரியாமல் சென்றாலும் அந்த கதாப்பாத்திரங்கள் இவருக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தன என்கிறார் இவர். தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது, இவருக்கு வந்த சில வாய்ப்புகளை தனது தோழி சுகாசினிக்கு சிபாரிசு செய்திருக்கிறார். 

முதன் முதலாக நடிப்புக்காக கை கொடுத்த தெய்வம் படத்தை ஆர்வத்துடன் பார்த்த போது, அதில் நடிகை சாவித்ரியின் அர்ப்பணிப்பான நடிப்பை கண்டு வியந்திருக்கிறார். அதனால், இவருக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்டால், சாவித்திரி. என்பார்.

நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தனை முதலில் திருமணம் செய்து கொண்டவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.  இனிமேல் சினிமாக்காரரை திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்று முடிவெடுத்தவர், பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மகள் ரயான் பிறந்த போது, கிழக்கு சீமையிலே என்று படம் எடுக்கிறேன். அதில் நீதான் தங்கையாக நடிக்க வேண்டும் என்று மீண்டும் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் இவரது குருநாதர் பாரதிராஜா.

ரிச்சார்டு ஹார்டியுடனான மனமுறிவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை என்று தனது திறமையை அழுத்தமாக முத்திரைப் பதித்தவர்,  கார்க்கில் போர் நடந்த காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் நிதி திரட்டி உதவ அரவிந்தசாமி, சரத்குமார் போன்ற முன்னணி கலைஞர்களோடு இணைந்து மதுரையில் நட்சத்திர கலை நிகழ்ச்சி, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்று முன்னின்று நடத்தினார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக நடிகர் சரத்குமார் இவரை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார், விளையாட்டுக்கு கேட்கிறார் என்று எடுத்துக் கொண்டார் இவர். ஆனால், இவரின் அம்மா கீதாவை அனுகி தனது எண்ணத்தை சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

படிப்பு, நடிப்பு என்று எல்லாவற்றிற்கும் முடிவெடுத்து ஊற்சாகப்படுத்தும் அம்மா, மீண்டும் திருமணம் பற்றி முடிவு எடுத்ததால், தனது பிடிவாதத்தை தளர்த்தி அம்மாவின் நல்ல முடிவை ஏற்றுக் கொண்டு நடிகரான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு ராகுல் என்கிற மகன் இருக்கிறார். 

உலகம் போற்றும் இத்தனை பெரிய புகழுக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருப்பவர் என் குருநாதர் பார்திராஜா என்று வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நன்றி உணர்ச்சியோடு சொல்லி வருபவர் இவர். உனக்கு திறமை இருக்கு என்று நம்பிக்கை கொடுத்தவர் என் குருநாதர் பாரதிராஜா. அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று தன் குருவுக்கு முதல் மரியாதை கொடுப்பவர் இவர்.

முதல் மரியாதை படத்தில் நடிகை ராதா ஏற்ற வேடத்திற்கு இவர்தான் டப்பிங் பேசி இருந்தார். படத்தின் துவக்கத்தில் இவருக்கு நன்றி தெரிவித்து முதல் மரியாதை செய்திருந்தார் இவரது குருநாதர் பாரதிராஜா.

இப்படி நட்புக்கும், மரியாதைக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் சொந்தகாரரான இவர், எப்போதும் ஜாலியாக சிரித்துப் பேசக் கூடிய சுபாவம் உள்ளவர். வெளிப்படையாக பேசக் கூடியவர், தைரியமான பெண் என்று சக நடிகர், நடிகைகளால் கொண்டாடப்படுபவர்.

தொகுப்பு : ஜி.பாலன் 


பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர்



தமிழில் மிக பிரமாண்டமான படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை பெயர் சண்முகம். தாயார் பெயர் முத்துலட்சுமி. இவரது தயார் சிவாஜியின் ரசிகையாக இருந்தவர். இவர் பிறந்த போது சிவாஜி நடித்த ஒரு படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் சங்கர் என்று இருந்ததால், அதையே இவருக்கு பெயராக வைத்திருக்கிறார்.

பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர் இவர். நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நாடகங்களில் ஈடுபட ஆரம்பித்தார். தில்லைராஜனின் நாடகங்களில் நடித்தும் வசனம் எழுதியும் வந்தவர், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் அறிமுகம் கிடைக்க அவரிடம் வசன எழுத்தாளராக சேர்ந்தார். 1987 முதல் 1990 வரை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ஆறு தமிழ்ப் படங்கள், இரண்டு இந்திப் படங்கள் என எட்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர்ன் இயக்கிய நீதிக்கு தண்டனை படத்தில் ஒரு காட்சியில் பத்திரிகையாளராக நடித்த இவர், சீதா படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசெகரிடம் உதவியாளராக இருந்த பவித்ரன், வெளியில் சென்று வசந்தகால பறவை, சூரியன் போன்ற  படங்களை இயக்கினார். அப்போது அவருக்கு அசோசியேட்டக அந்தப் படங்களில் இணைந்தார் ஷங்கர்.

சில தயாரிப்பளர்களிடம் படவாய்ப்பு கேட்டு கதை சொன்னார் இவர். ஜெண்டில்மேன் கதையும், பிரமாண்டமும் கேட்டு  அதிசயத்த தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டுக்குள் படம் இல்லை என்று ஒதுங்கி கொண்டனர்.

இந்த நிலையில் இயக்குனர் பவித்திரனுக்கும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதால், பவித்திரனிடம் இருந்த ஷங்கரிடம் கதை கேட்டு அவருக்கு ஜேண்டில்மேன் பட வாய்ப்பை கொடுத்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். ஜீவாவின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமான் இசை, அர்ஜுனின் ஆக்‌ஷன் நடிப்பு, அதிரடியான படம் என வெளியாகி ஜெண்டில்மேன் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகு பிரபுதேவாவை கதாநாயகனான அறிமுகப் படுத்தி காதலன் படத்தை இயக்கினார் இவர். இந்தப் படமும் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்து, தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்று தந்தது.

அடுத்து கமல் இரு வேடங்களில் நடித்த இந்தியன் படத்தை இயக்கினார். இந்தப் படமும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு பிரஷாந்த் நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் படத்தை இயக்கினார். அதில் ஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் காட்டி ரசிகர்களை வியக்க வைத்தவர் இவர், தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்கிற ரத்தம் பாய்ச்சிய இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பிகசர்ஸ் என்கிற பட நிறுவனத்தை துவங்கி அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இயக்கி, தயாரிப்பாளராகவும் வெற்றிப் பெற்றார் இவர். இந்தப் படத்தை நாயக் என்கிற பெயரில் படமாக்கி, இந்தியில் இயக்குனராக அறிமுகமானார்.

பிரபலங்களை வைத்து பிரமாண்ட படங்களை கொடுத்த இவர், நகுல், பரத், தமன், மணிகண்டன், ஜெனிலியா ஆகிய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி பாய்ஸ் என்கிற படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கினார். இந்தப் படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றது.

விக்ரம் நடித்த அன்னியன் த்ரிலர் படம் அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் அப்படம் பெற்று தந்தது.

ரஜினி நடித்த சிவாஜி படம் அவருக்கு பெரும் புகழையும், நூறு கோடிக்கு மேல் தயாரான எந்திரன் படம் பெரும் வியாபார உயரத்தையும் இவருக்கு ஏற்படுத்தி தந்தது.

ராஜ்குமார் ஹிராணி இயக்கிய த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்கிற பெயரில் விஜய் நடிக்க இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து விக்ரம் நடிப்பில் மிக பிரமாண்ட படமாக ஐ படத்தை இயக்கினார். இந்தப் படம் இந்தியில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியானதோடு ஜப்பான், சீனா நாடுகள் வரை சென்று பேச வைத்தது.

இவருடைய உதவியாளர்கள் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல், கல்லூரி, வசந்தபாலன் இயக்கத்தில் வெயில், அறிவழகன் இயக்கத்தில் ஈரம் போன்ற படங்களை தயாரித்த இவர், சேரன் உதவியாளர் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள்,  பாலசந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டச்சுழி, பேய் படமான அனந்தபுரத்து வீடு போன்ற பட்ஜெட் படங்களையும் தயாரித்தார். 

பர்பெக்ஷன் என்றால் ஷங்கர் என்று சொல்லும் அளவுக்கு பெயரை மாற்றிக்காட்டியவர் இவர். சினிமா என்பது கூட்டு முயற்சி என்பதை உணர்ந்த காரணத்தால், திறமையானவர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு ஒவ்வோரு முறையும் களம் கண்டு ஜெயித்தவர்.

பாலகுமாரன், சுஜாதா, சுபா போன்ற எழுத்தாளர்களை தனது படங்களுக்கு வசனம் எழுத வைத்தார். அதே போல ஜீவா, கேவி ஆனந்த், ரத்தினவேல், பி.சி.ஸ்ரீராம் என படத்துக்கு படம் ஒளிப்பதிவாளர்களையும் மாற்றிக்கொண்டு வேலை வாங்கினார்.

கமல் யார் படத்தில் நடித்தாலும் அது கமல் படமாக மாறி விடும். ஆனால் இந்தியன் மட்டுமே ஷங்கர் படமாக இருந்தது. அதற்கு காரணம் ஷங்கரின் தீவிர உழைப்பு.

எஆர்.ரகுமானோடு கரம் கோர்த்து வெற்றிப்படியில் ஏறியவர். அதே போல அவர் அமைக்கும் மெட்டுக்கு திரையில் பிரமாண்டத்தில் உயிர் கொடுத்தார்.

சிஜி என்ற தொழில் நுட்பத்தை கோடம்பாக்கத்தில் இருந்து பட்டி தொட்டி வரை பேசவைத்தவர் இவர்.

ஜெண்டில்மேன், காதலன், அந்நியன் போன்ற படங்களுக்காக சிறந்த இயக்குனர் என்கிற விருதை தமிழக அரிசிடம் மூன்று முறை பெற்றவர், பலமுறை பிலிம்பேர் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இவர். பல அமைப்புகளைடம் விருது மற்றும் பாராட்டு பரிசுகள், கேடயங்கள் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு ஈஸ்வரி என்கிற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஷங்கர் என்றால் படங்களில் தொழில் நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்கள் நினைவுக்கு வரும். இவருடை படங்களே அதிகம் பேசின. இவரோ அதிகம் பேசாத ஜெண்டில்மேன்.





‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா



தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா, கேரளா மாநிலம் திருச்சூரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்தவர். தந்தை ராமச்சந்திர ராவ் ஆந்திராவைச் சேர்ந்தவர். தாயார் கல்யாணி கேரளாவைச் சேர்ந்தவர். தந்தையும், தாயின் சகோதரரும் ராணுவத்தில் பணியாற்றியதால் மொழி பார்க்காமல் திருமணம் செய்து வைத்தார்களாம். இவர்களுக்கு மூத்த மகளாக பிறந்தவர் கே.ஆர்.விஜயா. இவருக்கு பெற்றொர்கள் வைத்த பெயர் ‘தெய்வநாயகி’.

அந்திரா, கேரளா என இரண்டு இடங்களிலும் மாறி மாறி பெற்றோர்கள் வசித்ததால் படிப்பு பாதியிலேயே நின்றது. தந்தைக்கு நாடகத்தில் நடிக்கிற ஆர்வம் இருந்ததால், அவர் மேடை ஏற பழனிக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அவரோடு இவரும் பதினோரு வயதிலிருந்தே நாடகங்களில் நடிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.

அப்போதே பாசமலர், பாவமன்னிப்பு போன்ற படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்குத்தான் பெரும்பாலும் அவரை ஆட வைப்பார்களாம்.  காசநோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நாடகம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வர அதன் மூலம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நடிக்க சென்றிருக்கிறார். சென்னையில் நடந்த பொருட் காட்சியில் அவரை பர்த்த மற்ற நாடக கலைஞர்கள் அவரை அமெச்சூர் நாடகங்களிலும் நடிக்க அழைத்திருக்கின்றனர். அப்படி பிரபலமானவர், சிம்சன் பிஸ்கட் அண்ட் சாக்லேட் விளம்பரத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஜெமினிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் கற்பகம் படத்தை துவங்கிய இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சரோஜாதேவி பிசியாக இருந்ததால், அவருக்கு பதில் புதுமுகத்தை தேடியவர் கே. ஆர். விஜயாவின் விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அது பிடித்துப் போக நேரில் வரவழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

தெய்வநாயகியாக இருந்த கே.ஆர்.விஜயாவை 1963 ஆம் ஆண்டு கற்பகம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.   அதனைத் தொடர்ந்து, நிறைய படவாய்ப்புகள் வரத்தொடங்கின.

‘கற்பகம்’, ‘கந்தன் கருணை’, ‘சரஸ்வதி சபதம்’, ‘இதயக்கமலம்’, ‘நம்ம வீட்டு தெய்வம்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘கல்தூண்’, ‘மிருதங்க சக்ரவர்த்தி’, ‘வாயாடி’, ‘திருடி’, ‘ரோஷக்காரி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘கந்தன் கருணை’ போன்ற படங்கள் அவரது நடிப்பில் முத்திரைப் பதித்த திரைப் படங்களாகும். தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி என்னும் இரண்டு ஜாம்பவான்களுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தப் பெருமை இவருக்கு உண்டு.

50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ஊஞ்சலோக் என்ற ஒரு இந்திப் படத்திலும் நடித்திருக்கிறார். 

தொழிலதிபர் வேலாயுதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட கே.ஆர்.விஜயாவுக்கு, ஹேமா என்கிற ஒரு மகள் இருக்கிறார். அவருக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு பேர பையன்களில். மூத்த பேரன் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் பணியாற்ற, இளைய பேரன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு பரோடாவில் பணியாற்றுகிறார்.

கே. ஆர். விஜயாவின் வசீகரப் புன்னகை, ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் கவர்ந்திழுக்கும் தன்மையுடையது. எழுபதுகளின் மத்தியில் திருச்சியில் நடந்த விழாவில் ரசிகர்கள் அவருக்கு புன்னகை அரசி என்கிற பட்டம் வழங்கினார்கள். அண்ணா முதல்வராக இருந்தபோது அவர் கையால் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பெருமை அவருக்கு உண்டு
.

பத்மஸ்ரீ மனோரமா

பத்மஸ்ரீ மனோரமா அவர்களின் இயற்பெயர் கோபிசாந்தா. 1943 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜமன்னார்குடியில் பிறந்தார். தந்தையார் பெயர் காசி கிளார்க்குடையார். தாயார் பெயர் ராமாமிர்தம்மாள்.

மனோரமாவின் அப்பா காசி கிளார்க்குடையார் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். பல வருடம் ஆகியும் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று, தனது தங்கையை கணவருக்கு இரண்டாவது மனைவியாக்கினார், ராமாமிர்தம் அம்மாள்.

தங்கை தாயாகும் முன்பே தானே தாயானார். ஆனால், புது மனைவியின் மீது கொண்ட மோகத்தால், தன்னை கணவன் இரண்டாம் நிலைக்கு தள்ளியதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இருவருக்கும் சண்டை நீடித்தது. இருந்தாலும் வயிற்றில் வளரும் குழந்தைக்காக எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டார்.

அம்மாவுடன் மனோரமா 
மனோரமா பிறந்தார். சொத்து பிரச்சினை வந்துவிடும் என்று தங்கையும் தனக்கு எதிராக இருப்பதை அறிந்து மனம் உடைந்த மனோரமாவின் அம்மா,  எத்தனை நாளைக்குத்தான் போராடுவது என்று வீட்டு உத்திரத்தில் கயிற்றை கட்டி தூக்கு போட்டார். 

அம்மா தொட்டில் கட்டுகிறாரோ என்று பார்த்துக் கொண்டிருந்த மனோரமா, அம்மா கால்களை உதைத்து உயிரை போக்கிக் கொள்ள போராடுவதைக் கண்டதும் வீரிட்டு கத்தி அழ ஆரம்பித்தார். தெருவில் சென்ற பெண்மணி ஒருவர், குழந்தையை கத்தவிட்டு இந்த ராமாமிர்தம் என்ன பண்றா என்று அருகே வந்து எட்டிப் பார்க்க, ராமாமிர்தம் தூக்கில் தொங்குவதைக் கண்டு கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒடி வந்தார்கள். ராமாமிர்தத்தை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி, காப்பாற்றினார்கள். குழந்தையை காட்டி புத்திமதி சொன்னார்கள்.

ராமாமிர்தம் அம்மாளின் மனம் அமைதியாகவில்லை. ஊரைக் கூட்டி தன்னைக் காப்பாற்றிய மகள் மனோரமாவை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தார். வாழ்க்கையை வெறுத்து இந்த திடீர் முடிவு எடுக்க காரணமான தனது கணவனையும், தங்கையையும் நினைத்து வேதனைப்பட்ட அவர், இனி இந்த ஊரில் இவர்களுக்கு முன்னாள் இருக்க கூடாது என்று முடிவு செய்தார். கைக் குழந்தையை தூக்கிக் கொண்டு அன்று இரவே மன்னார்குடியைவிட்டு வெளியேறினார்.

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் பலகார கடை வைத்து தனது பிழைப்பை தொடங்கினார் ராமாமிர்தம் அம்மாள். மனோரமாவையும் பள்ளிக்கு அனுப்பினார்.

மனோரமாவின் கணவர் ராமநாதன் 
எப்போதாவது அங்குள்ள டெண்ட் சினிமா கொட்டகையில் இரண்டாவது ஆட்டம் எப்போதாவது படத்துக்கு போவாராம், ராமாமிர்தம். அப்போது மனோரமாவும் கொட்ட விழித்திருந்து படம் பார்ப்பாராம். படத்தில் வரும் பாடல்களை பாடல்களை மறுநாள் பாடவும் செய்வாராம், மனோரமா.

மனோரமாவை அங்குள்ளவர்கள் பாப்பா என்று அழைப்பார்களாம். நேத்து என்ன படம் பார்த்தே. இந்தப் படத்தில் என்ன பாடல் என்று அவரை பாப்பா பாடு, பாடு என்று பாடச் சொல்லி கேட்பார்களாம். இப்படி அவர் மற்றவர்களுக்காகவும் பாடி பாடி அது பயிற்சியாக அமைந்து விட, பிறகு ஊரில் யார் வீட்டில் என்ன விசேஷ நிகழ்ச்சி நடந்தாலும், அங்கே அவரை அழைத்து சென்று பாட வைப்பார்களாம். பள்ளி விழாக்களிலும் பாடி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார், மனோரமா.

பலகார கடையில் அடுப்பு அனலில் நேரம் காலம் பார்க்காமல் பலகாரம் சுட்டு வெந்து நொந்த ராமாமிர்தம் அம்மாள், ஒழுங்காக வயிற்றுக்கு சாப்பிடுவது கிடையாது. இதனால் குடல் புண்ணும், ரத்தப்போக்கும் ஏற்பட்டு பல மாதங்கள் மருத்துவ மனையில் கிடந்தார். அம்மாவுக்கு உதவியாக மனோரமாவும் மருத்துவமனையிலேயே இருந்தார். இதனால், அவரது பள்ளி படிப்பு பாலானது.

மறுபடியும் அடுப்பில் வேகக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து அனுப்பியதால், அம்மாவுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஒரு பண்ணையார் வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குச் சேர்ந்தார், மனோரமா. அங்கு அவர்கள் நடத்தும் விதம் மனோரமாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அம்மாவுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டார். ஒரு சின்ன தவறுக்காக மகளை அடிப்பதை நேரில் பார்த்துவிட்ட அம்மா, இனி இங்கு நீ வேலைப் பார்க்க வேண்டாம் என்று வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

மகன், மருமகள், பேரனுடன் ஆச்சி  
அருகே உள்ள கோட்டையூரில் நடந்த 'ஏகாதசி' நாள் விழாவில் அந்த ஊரின் செட்டியார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'அந்தமான் காதலி' என்ற நாடகத்தை நடத்தினார்கள். அதில் பெண் வேடம் போட்டவருக்கு சரியாக பாடவரவில்லை என, அவருக்காகப் பாடவும் நாடகத்தில் இடையிடையே நடனமாடவும் ஒரு பெண்ணைத் தேடியிருக்கிறார்கள். அப்போது "யாரோ" மனோரமாவை பற்றி சொல்ல, அவர்கள் வந்து அழைத்து சென்று நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அந்த நாடகத்தில் அவரது பாடலையும் குரல் இனிமையையும் நடனத்தையும் பார்த்து எல்லோரும் வெகுவாகப் பாராட்ட, அதில் பணியாற்றிய இயக்குனர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடமும், ஆர்மோனியம் வாசித்த தியாகராசன் என்பவரும் அவரை பாராட்டி ஆசி கூறியதுடன், கோபிசாந்தா என்கிற அவரது பெயரை மனோரமா என்று வைத்துகொள்ளும் படி ஆலோசனை தெரிவித்தனர்

அந்த நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக இருந்த பால்ராஜ், புதுக்கோட்டையில் நடந்த 'வீதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். இதையடுத்து 'யார் மகன்?' என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அந்த நாடகத்தை எழுதித் தயாரித்து அரங்கேற்றியவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ். பிறகு தொடர்ந்து நாடக வாய்ப்புகள் வரத் தொடங்கின.

தனது பன்னிரெண்டாவது வயதில் நாடக துறைக்குள் "பள்ளத்தூர் பாப்பா" மனோரமா என்று நுழைந்த மனோரமா, பல நாடகங்களில் நடிக்கத் தொடத்து ‘நாடக உலக ராணி’ என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார்.

அதன் பிறகு முத்துராமனுடன் 'புயலுக்குப்பின்', நடகத்தில் பொள்ளாச்சியில் நடித்தவர், மணிமகுடம் என்கிற நாடகத்தில் நடிக்க சென்னை வந்திருக்கிறார். சென்னையில் சில நாடகங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்பொழுது, ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து, தான் “இன்ப வாழ்வு” என்னும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிக்க நாயகியாக நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார்.  இன்ப வாழ்வு படம் பாதியிலேயே நின்றுவிட்டது.

குடும்பத்தினருடன்.... 
அதன் பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படமும் ஆரம்பத்திலேயே நின்று விடவே, மிகவும் மனமுடைந்து போனார், மனோரமா. நாடகத்தில் பெரிய பெயர், புகழ் பெற்றுவிட்டோம். சினிமாவில் நாயகியாக நடிக்க முடியவில்லையே என்று கலங்கினார்.

நாடகத்தில் நடிக்க மதுரை பக்கமே சென்றுவிடலாம் என்று முடிவு செய்த போது, மறுபடியும் கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து அழைப்பு வந்தது. 'மாலையிட்ட மங்கை' படத்தை தொடங்குகிறேன். அதில் நீ நடிக்க வேண்டும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியாக இல்லை. நகைச்சுவை நடிகையாக என்று கூறி இருக்கிறார்.

முதலில் கதாநாயகி வேடம் இல்லை என்றதும் வருத்தப்பட்டவர், பிறகு கிடைக்கிற வாய்ப்பில் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்று அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார். டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மைனாவதி உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை ஜி.ஆர். நாதன் இயக்கினார். இதில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கவிஞர் கண்ணதாசன் பதினைந்துக்கும் பாடல்கள் எழுதி தயாரித்திருந்தார். இந்தப் படம் வெற்றி பெறவே தொடர்ந்து  பல படங்களில் நடித்து வந்த மனோரமா, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". இந்த திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது.

அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முக்கிய திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.  அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

முன்னாள் முதல் ஜெயலலிதாவுடன் 
சுமார் 50 அண்டு காலம், 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும் மேற்பட்ட திரைப் படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார், மனோரமா. மிகச்சிறந்த நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்திறமைகள் அவரை சுமார் அரை நூற்றாண்டுகாலம் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக வைத்திருந்தது.

தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.

ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதொரு துறையாக வர்ணிக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறையில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அசைக்கமுடியாத நடிகையாக நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் மனோரமா.

ஆச்சி மனோரமாவுடன் ஜி.பாலன் 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார் மனோரமா. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதே போல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருடன் திரைப் படங்களில் நடித்திருக்கிறார். என். டி. ராமராவ் நடித்த படங்களிலும் நடித்திருக்கிறார். ஐந்து முதல்வர்களுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர். 

கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ விருது’ தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’, மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’, கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’, ‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’ மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நாடகக் குழுவில் நடித்து கொண்டிருந்த பொழுது, அந்த நாடகக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ். எம். ராமநாதன் என்பவர், மனோரமாவைக் காதலித்தார். அதன் பிறகு, அவருடைய காதலை மனோரமா ஏற்றுக்கொண்டதால், திருச்செந்தூரிலுள்ள முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

ஒரு சாதாரண மேடை நடிகையாக தன்னுடைய கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்தவர். அவர் இறந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.