ஞாயிறு, 12 ஜூலை, 2015

பிரமாண்ட பட இயக்குனர் ஷங்கர்



தமிழில் மிக பிரமாண்டமான படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கர், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை பெயர் சண்முகம். தாயார் பெயர் முத்துலட்சுமி. இவரது தயார் சிவாஜியின் ரசிகையாக இருந்தவர். இவர் பிறந்த போது சிவாஜி நடித்த ஒரு படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் சங்கர் என்று இருந்ததால், அதையே இவருக்கு பெயராக வைத்திருக்கிறார்.

பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர் இவர். நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் நாடகங்களில் ஈடுபட ஆரம்பித்தார். தில்லைராஜனின் நாடகங்களில் நடித்தும் வசனம் எழுதியும் வந்தவர், இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் அறிமுகம் கிடைக்க அவரிடம் வசன எழுத்தாளராக சேர்ந்தார். 1987 முதல் 1990 வரை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ஆறு தமிழ்ப் படங்கள், இரண்டு இந்திப் படங்கள் என எட்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர்ன் இயக்கிய நீதிக்கு தண்டனை படத்தில் ஒரு காட்சியில் பத்திரிகையாளராக நடித்த இவர், சீதா படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசெகரிடம் உதவியாளராக இருந்த பவித்ரன், வெளியில் சென்று வசந்தகால பறவை, சூரியன் போன்ற  படங்களை இயக்கினார். அப்போது அவருக்கு அசோசியேட்டக அந்தப் படங்களில் இணைந்தார் ஷங்கர்.

சில தயாரிப்பளர்களிடம் படவாய்ப்பு கேட்டு கதை சொன்னார் இவர். ஜெண்டில்மேன் கதையும், பிரமாண்டமும் கேட்டு  அதிசயத்த தயாரிப்பாளர்கள் பட்ஜெட்டுக்குள் படம் இல்லை என்று ஒதுங்கி கொண்டனர்.

இந்த நிலையில் இயக்குனர் பவித்திரனுக்கும் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டதால், பவித்திரனிடம் இருந்த ஷங்கரிடம் கதை கேட்டு அவருக்கு ஜேண்டில்மேன் பட வாய்ப்பை கொடுத்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். ஜீவாவின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமான் இசை, அர்ஜுனின் ஆக்‌ஷன் நடிப்பு, அதிரடியான படம் என வெளியாகி ஜெண்டில்மேன் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகு பிரபுதேவாவை கதாநாயகனான அறிமுகப் படுத்தி காதலன் படத்தை இயக்கினார் இவர். இந்தப் படமும் இவருக்கு பெரும் வெற்றியை கொடுத்து, தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருது பெற்று தந்தது.

அடுத்து கமல் இரு வேடங்களில் நடித்த இந்தியன் படத்தை இயக்கினார். இந்தப் படமும் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு பிரஷாந்த் நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் படத்தை இயக்கினார். அதில் ஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் காட்டி ரசிகர்களை வியக்க வைத்தவர் இவர், தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்கிற ரத்தம் பாய்ச்சிய இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பிகசர்ஸ் என்கிற பட நிறுவனத்தை துவங்கி அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தை இயக்கி, தயாரிப்பாளராகவும் வெற்றிப் பெற்றார் இவர். இந்தப் படத்தை நாயக் என்கிற பெயரில் படமாக்கி, இந்தியில் இயக்குனராக அறிமுகமானார்.

பிரபலங்களை வைத்து பிரமாண்ட படங்களை கொடுத்த இவர், நகுல், பரத், தமன், மணிகண்டன், ஜெனிலியா ஆகிய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி பாய்ஸ் என்கிற படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கினார். இந்தப் படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றது.

விக்ரம் நடித்த அன்னியன் த்ரிலர் படம் அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் அப்படம் பெற்று தந்தது.

ரஜினி நடித்த சிவாஜி படம் அவருக்கு பெரும் புகழையும், நூறு கோடிக்கு மேல் தயாரான எந்திரன் படம் பெரும் வியாபார உயரத்தையும் இவருக்கு ஏற்படுத்தி தந்தது.

ராஜ்குமார் ஹிராணி இயக்கிய த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்கிற பெயரில் விஜய் நடிக்க இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து விக்ரம் நடிப்பில் மிக பிரமாண்ட படமாக ஐ படத்தை இயக்கினார். இந்தப் படம் இந்தியில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியானதோடு ஜப்பான், சீனா நாடுகள் வரை சென்று பேச வைத்தது.

இவருடைய உதவியாளர்கள் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் காதல், கல்லூரி, வசந்தபாலன் இயக்கத்தில் வெயில், அறிவழகன் இயக்கத்தில் ஈரம் போன்ற படங்களை தயாரித்த இவர், சேரன் உதவியாளர் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள்,  பாலசந்தர், பாரதிராஜா நடித்த ரெட்டச்சுழி, பேய் படமான அனந்தபுரத்து வீடு போன்ற பட்ஜெட் படங்களையும் தயாரித்தார். 

பர்பெக்ஷன் என்றால் ஷங்கர் என்று சொல்லும் அளவுக்கு பெயரை மாற்றிக்காட்டியவர் இவர். சினிமா என்பது கூட்டு முயற்சி என்பதை உணர்ந்த காரணத்தால், திறமையானவர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு ஒவ்வோரு முறையும் களம் கண்டு ஜெயித்தவர்.

பாலகுமாரன், சுஜாதா, சுபா போன்ற எழுத்தாளர்களை தனது படங்களுக்கு வசனம் எழுத வைத்தார். அதே போல ஜீவா, கேவி ஆனந்த், ரத்தினவேல், பி.சி.ஸ்ரீராம் என படத்துக்கு படம் ஒளிப்பதிவாளர்களையும் மாற்றிக்கொண்டு வேலை வாங்கினார்.

கமல் யார் படத்தில் நடித்தாலும் அது கமல் படமாக மாறி விடும். ஆனால் இந்தியன் மட்டுமே ஷங்கர் படமாக இருந்தது. அதற்கு காரணம் ஷங்கரின் தீவிர உழைப்பு.

எஆர்.ரகுமானோடு கரம் கோர்த்து வெற்றிப்படியில் ஏறியவர். அதே போல அவர் அமைக்கும் மெட்டுக்கு திரையில் பிரமாண்டத்தில் உயிர் கொடுத்தார்.

சிஜி என்ற தொழில் நுட்பத்தை கோடம்பாக்கத்தில் இருந்து பட்டி தொட்டி வரை பேசவைத்தவர் இவர்.

ஜெண்டில்மேன், காதலன், அந்நியன் போன்ற படங்களுக்காக சிறந்த இயக்குனர் என்கிற விருதை தமிழக அரிசிடம் மூன்று முறை பெற்றவர், பலமுறை பிலிம்பேர் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார் இவர். பல அமைப்புகளைடம் விருது மற்றும் பாராட்டு பரிசுகள், கேடயங்கள் பெற்றிருக்கிறார். எம்.ஜி.ஆர்.பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு ஈஸ்வரி என்கிற மனைவியும், இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஷங்கர் என்றால் படங்களில் தொழில் நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்ற கருத்துக்கள் நினைவுக்கு வரும். இவருடை படங்களே அதிகம் பேசின. இவரோ அதிகம் பேசாத ஜெண்டில்மேன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக