வியாழன், 26 மே, 2022

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் வாழக்கை வரலாறு

ஏ.சி.திருலோகசந்தர் 

திருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு. தந்தை பெயர் ஏ.செங்கல்வராயன். சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவர். 1930ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி பிறந்த ஏ.சி.திருலோகசந்தர்... சென்னை புரசைவாக்கத்தில் ஈ.எல்.எம். பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

சிறுவயதில் இருந்தே கதை கேட்கும் ஆர்வம் திருலோகசந்தருக்கு இருந்தது. அவரது அம்மா புராண கதைகளை அவரிடம் சொல்வார். அதை ஆர்வத்துடன் கேட்டு மகிழும் திருலோகசந்தர், அதை நண்பர்களிடம் சொல்லி மகிழ்வாராம். பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்கள் படிக்கிற ஆர்வம் அவருக்கு இருந்தது. பல எழுத்தாளர்களின் படைப்புகள் அவரை உயர்த்தின. இதே மாதிரி நாமும் எழுத  வேண்டும் என்று கதைகள் எழுத தொடங்கினார். அந்த கதைகளை தனது கையெழுத்துப் பத்திரிகையில் வெளியிட்டார். நாடகங்களையும் எழுதி சக மாணவர்களுடன் சேர்ந்து நடித்தார்.

காலம் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ‘எம்.ஏ’ படிக்க அழைத்து சென்றது. அங்கு படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பல பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். அந்த கதைகளை மிஸ் சந்திரா எம்.ஏ, திருசந்தர், திருலோகசந்தர் என்ற பெயர்களில் எழுதினர். அதே நேரத்தில் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் நடித்தார்.

கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களிலும் தனது பங்கை திறம்பட செய்வார், திருலோகசந்தர். ஆனால், திருலோகசந்தரின் தந்தைக்கு நாடகம், சினிமா என்றாலே பிடிக்காது. எப்படியாவது ‘ஐ.ஏ.எஸ்” எழுதச்செய்து, கலெக்டர் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

21 வயது ஆன பிறகுதான் ஐ.ஏ.எஸ்’ பரீட்சை எழுதமுடியும். ஆனால், 19-வது வயதிலேயே எம்.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டார், திருலோகசந்தர். அதனால், ஒரு வருடம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திருலோகசந்தரின் கல்லூரி தோழனான ராஜகோபால், தனது தந்தையான இயக்குநர் பத்மநாபனிடம் திருலோகசந்தருக்கு உள்ள கதை எழுதும் ஆற்றலைத் தெரிவித்து, அவரது படங்களில் பணிபுரிய சிபாரிசு செய்திருக்கிறார்.

மகனின் சிபாரிசை ஏற்று திருலோகசந்தரை ஒரு நாள் கதை விவாதத்திற்கு இயக்குநர் பத்மநாபன் அழைத்தார். அதுவே, திரைப்பட துறைக்குள் திருலோகசந்தர் நுழைய வாசலாக அமைந்தது.

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்-ஸ்ரீரஞ்சனி நடித்த ‘குமாரி’ படத்தை பத்மநாபன் இயக்கினார். அந்த படத்திற்கு உதவி இயக்குனராக திருலோகசந்தர் பணியாற்றினார். தொடர்ந்து ‘எல்லாம் இன்பமயம்’ என்ற படத்திற்கும் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்த அனுபவங்கள் காரணமாக, நண்பன் அபிபுல்லா மூலமாக ஜுபிடர் பிக்சர்ஸ் படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு திருலோகசந்தருக்கு கிடைத்தது.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும்-நடிகராக வேண்டும் என்ற ஆர்வமும், கதை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் திருலோக்சந்தருக்கு இருந்தது. அதனால், அதிக ஆர்வத்துடன் தான் வேலை செய்த படங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால், படங்களில் நடித்தால் மகன் கெட்டு விடுவான் என்று அவரது அப்பா நினைத்தார். அதனால், நடிக்கவே கூடாது என்று அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்.

1950-ம் ஆண்டு திரையுலகிற்குள் உதவி இயக்குனராக நுழைந்த திருலோகசந்தருக்கு பத்து ஆண்டுகள் கழித்து 1960-ம் ஆண்டு சிட்டாடல் பிலிம் கார்பரேஷன் தயாரித்த ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ஜோசப் தளியத் இயக்கிய ‘விஜயபுரி வீரன்’ படத்தில் சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்த நடிகர் அசோகன், திருலோகசந்தரின் நெருங்கிய நண்பரானார். இருவரும் தங்களின் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசிய போது, அடுத்த இரு படங்களின் கதைகளை அசோகனிடம் கூறி இருக்கிறார், திருலோகசந்தர்.

அந்த இரு கதைகளும் அசோகனுக்கு பிடித்துவிட்டது. இந்த கதைகளுக்கு நல்ல தயாரிப்பாளரை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று தெரிவித்த நடிகர் அசோகன், பிறகு ஏவி.எம். நிறுவனத்தில் கதை சொல்ல ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்பு ஏ.சி.திருலோகசந்தர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்ட காரணமாக அமைந்தது.

ஆமாம். ஏவி.எம்.நிறுவனத்தில் தன்னிடமிருந்த இரண்டு கதைகளை ஏவி.எம்.சரவணனிடம் கூறினார், திருலோகசந்தர். அதில் ஒரு கதையை ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘பார்த்தால் பசி தீரும்’ என்கிற பெயரில் தயாரித்த ஏவி.எம்.நிறுவனம், இன்னொரு கதையை திருலோகசந்தர் இயக்கத்தில் ‘வீரத்திருமகன்’ என்கிற பெயரில் தயாரித்தது.

சி.எல்.ஆனந்தன் காதானாயகனாக அறிமுகமான ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு கதை எழுதி கதாசிரியராக அறிமுகமான திருலோகசந்தர், சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக நடித்த ‘வீரத்திருமகன்’ படத்திற்கு கதை கொடுத்து ஏவி.எம் நிறுவனம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

ராஜா ராணிக் கதையில் நவீனத்தைப் புகுத்தி திருலோகசந்தர் இயக்கிய சி.எல்.ஆனந்தனுக்கு ஜோடியாக சச்சு கதாநாயகியாக அறிமுகமானார். அவர்களுடன் ஈ.வி.சரோஜா, அசோகன் உட்பட பலர் நடிக்க, விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஒன்பது பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார்.

அதில் ஸ்ரீநிவாஸ், பி.சுசிலா பாடிய “ரோஜா மலரே ராஜகுமாரி” பாடல் அனைவரையும் கவர்ந்தது. பெரிய தடாகத்தில் தாமரை மலர்கள் விரிந்திருக்க அதில் நங்கையர் நின்றபடி நடனம் ஆடும் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

கதாசிரியராக ‘பாரத்தால் பசி தீரும்’ படம் பொங்கலுக்கும், இயக்குனராக ‘வீரத்திருமகன்’ படம் மே மாத தொழிலாளர் தினத்திலும் 1962 ஆம் ஆண்டு வெளியாகி திருலோகசந்தருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து 1963ஆம் ஆண்டு ஏவி.எம். நிறுவனத்துக்காக எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த ‘நானும் ஒரு பெண்’ படத்தை இயக்கிய திருலோகசந்தர், அந்தப் படத்தின் இந்திப் பதிப்பையும் இயக்கினார். ‘மைன் பி லட்கி ஹூன்’ என்கிற பெயரில் உருவான இந்திப் படத்தில் தர்மேந்திரா, மீனாகுமாரி நடித்தனர்,

அதன் பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த ‘கக்கும் கரங்கள்’ படத்தை இயக்கினார். 1965ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் சிவக்குமார் முருகன் வேடத்தில் நடித்து அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஞாயிறு என்பது கண்ணாக” பாடல் இன்றளவும் பேசப்படும் பாடலாக அமைந்தது. இந்தப் பாடல் மூலம் பாடலைப் படம் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயர் திருலோகசந்தருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திருலோகசந்தர் இயக்கிய படம், ‘நாடி ஆட ஜன்மே’. தெலுங்கு மொழியில் எஸ்.வி.ரங்காராவ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடித்த அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

தமிழிலும், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிப் படம் கொடுக்கும் இயக்குநர் என்று பெயர் எடுத்த ஏ.சி.திருலோகசந்தர், ஆங்கிலத்தில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ‘கம் செப்டம்பர்’ என்கிற படத்தைப் பார்த்து அசந்து போனார். அதன் தாக்கத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு கதையை எழுதி அதற்கு ‘அன்பே வா’ என்று பெயர் வைத்தார்.

அந்தக் கதையை கேட்ட தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், ஜெய்சங்கர் அல்லது ரவிச்சந்திரன் நடிக்க கருப்பு வெள்ளைப் படமாகத் தயாரிக்கலாம் என்று கூறியவர், பிறகு வண்ணப்படமாக எடுத்தால் எம்.ஜி.ஆரை வைத்து தயாரிக்கலாம் என்று தனது தந்தை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் சென்று ‘அன்பே வா’ கதையைச் சொல்ல வைத்தார்.

கதையைக்கேட்ட மெய்யப்ப செட்டியார், ‘இதுல லேடீஸ் சென்டிமென்ட் ஒண்ணும் இல்லே. எம்.ஜி.ஆர்னா அம்மா, தங்கச்சி யாராவது ஒருத்தர் வேணும். இதுவரைக்கும் நாம பேமிலி எலிமென்ட் ஸோட தான் படம் எடுத்திருக்கோம். இந்தக் கதையில அப்படி ஒண்ணும் இல்லே. ஆனா கேக்குறதுக்கு நல்லாருக்கு. எதுக்கும் எம்.ஜி.ஆர். கிட்டே சொல்லிப்பாருங்க. அவருக்குப் பிடிச்சிருந்தா கலர்லயே எடுக்கலாம்’ என்று கூறி இருக்கிறார்.

நடிகர் அசோகன் மூலமாக எம்.ஜி.ஆரிடம் சென்று கதையை சொன்னார், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர்., ‘இது என்னுடைய சம்பிரதாய முறைகள்ளேருந்து மாறுபட்ட ஒரு கதை. இந்தப்படத்தோட வெற்றி டைரக்டரைப் பொறுத்தது. அவர் என்னை எப்படிக் கையாளப்போறாரோ அதை வைத்துத்தான் படம் அமையும். நான் நடிக்கிற படங்கள்ளே என்னோட டைரக்டர் இருப்பாரு. ஆனா இந்தப்படத்துல டைரக்டரோட நான் இருக்கணும். சரி. ஒங்க விருப்பப்படி நான் நடிக்கிறேன். அவ்வளவுதான்’ என்று கூறினார்.

அதன் பிறகு ‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கின. கதாநாயகியாக பி.சரோஜாதேவியும், இசை அமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதனும், பாடலாசிரியராக கவிஞர் வாலியும், வசனம் எழுத ஆரூர் தாசும் ஒப்பந்தமானார்கள். கலை இயக்குனர் ஏ.கே.சேகரின் கற்பனையில் தோன்றிய பணக்கார ஜெபியின் மாளிகையின் கண்கவர் கூடமும், அதனைச் சார்ந்த படுக்கை அறையும், மற்றும் மேன்மாடமும் அதிகப்பொருட் செலவில் அசலாக ஒரு அரங்கு அமைத்து அதில் உருவாக்கி இருந்தனர்.

முதலில் பாடல்களின் காட்சிகளுக்காக ஊட்டி மற்றும், சிம்லா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பிய படக்குழு, பிறகு எட்டாவதாக கட்டப்பட்ட அரங்கில் மாளிகை காட்சிகளை படமாக்கினார்கள்.

படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகப்பாடலான ‘புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது’ பாடலில் தொடங்கி, ‘‘அன்பே வா... அன்பே வா’’,  ‘லவ் பேர்ட்ஸ்... லவ் பேர்ட்ஸ்’, ‘வெட்கமில்லை நாணமில்லை’, ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’, ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ என படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பதிவு செய்யப்பட்ட போதே பெரும் புகழ்பெற்ற பாடல்களாக அமையப் போகிறது என்று பேசப்பட்டது. அதே போல பாடல்கள வெளியாகி இனிக்கும் இனிய கற்கண்டுப் பாடல்களாக அமைந்து இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், பாடலாசிரியர் கவிஞர் வாலிக்கும் மேலும் புகழ் சேர்த்தன.

அனைத்துப் பாடல்களும் அடங்கிய ‘‘அன்பே வா’’ பாட்டுப்புத்தகம் வட்ட வடிவமாக ஓர் இசைத்தட்டுபோல அழகாக அச்சிடப்பெற்று தியேட்டர்களில் விற்கப்பட்டன.

அன்பே வா படத்தை முப்பத்து மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று தமிழ்ப்பட விநியோக விற்பனையில் புதிய சாதனை புரிந்தார், தயாரிப்பாளர், ஏவி.மெய்யப்ப செட்டியார்.

1966 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ‘‘நான் ஆணையிட்டால்’’ படம் வெளியிட அனுமதி அளித்திருந்த எம்.ஜி.ஆர்., ஏவி.எம்.நிறுவனத்துக்காக பொங்கலுக்கு ‘அன்பே வா’ படத்தை வெளியிட ஒப்புக் கொண்டார். அதன்படி 1966 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் ‘அன்பே வா’ படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தரை நட்சத்திர இயக்குநர் உயரத்திற்குக் கொண்டு சென்றது.

அதன் பிறகு ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘ராமு’, சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘தங்கை’ ஆகிய படங்கள் வெளிவந்தது. சிவாஜி படம் என்றால் அதுவரையில் சோகம் மட்டுமே அதிகமாக இருக்கும். சிவாஜிக்கு ஸ்டைல் நடிப்பு வரும் என்பதை உணர்ந்து கொண்டு அதனை அதிகமாக ‘தங்கை’ படத்தில் வெளிப்படச் செய்தார், திருலோகசந்தர்.

ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ‘அதே கண்கள்’ என்கிற சஸ்பென்ஸ் திரிலர் படத்தை தமிழிலும், கிருஷ்ணா, காஞ்சனா நடிப்பில் ‘அவே கல்லு’  என்கிற பெயரில் தெலுங்கு மொழியிலும் ஏவி.எம். நிறுவனத்துக்காக இயக்கிய திருலோகசந்தர், அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ‘இருமலர்கள்’ என்கிற படத்தை இயக்கினார். சிவாஜி கணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த இந்தப் படம் 1967 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடியதுடன், தமிழக அரசின் சிறந்த கதாசிரியருக்கான விருது ஏ.சி.திருலோக்சந்தருக்கும், சிறந்த நடிகைக்கான விருது கே.ஆர்.விஜயாவுக்கும் பெற்று தந்தது. 

இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் ஜெமினி கணேசன் நடிப்பில் இயக்கிய ‘ராமு’ படத்தை அதே பெயரில் தெலுங்கு மொழியில் இயக்கினார். என்.டி.ராமாராவ் நடித்த அந்தப் படம் ஆந்திராவில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து கே.பாலாஜி தயாரிப்பில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி நடிப்பில் ‘என் தம்பி’ படத்தை இயக்கியவர், தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் ‘அன்பளிப்பு’, ‘தெய்வமகன்’, ‘திருடன்’, ‘எங்க மாமா’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘பாபு’, ‘தர்மம் எங்கே’, ‘பாரத விலாஸ்’, ‘அவன்தான் மனிதன்’, ‘அன்பே ஆருயிரே’, ‘டாக்டர் சிவா’, ‘பைலட் பிரேம்நாத்’, ‘விஸ்வரூபம்’,  ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’, ‘வசந்தத்தில் ஓர் நாள்’, ‘அன்புள்ள அப்பா’, ‘குடும்பம் ஒரு கோயில்’ என சிவாஜி கணேசன் நடித்த பதினெட்டு படங்களை இயக்கினார்.

இடையில் ஏவி.எம்.ராஜன் நடித்த ‘அவள்’, முத்துராமன் நடித்த’ இதோ எந்தன் தெய்வம்’, ‘சொந்தம்’, ‘ராதா’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘பெண் ஜென்மம்’, சிவக்குமார் நடித்த ‘பத்ரகாளி’, ‘நீ இன்றி நானில்லை’, விஜயகுமார், ரஜினிகாந்த் நடித்த ‘வணக்குத்துக்குரிய காதலியே’ போன்ற படங்களை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், ‘பாவ்ரி’, ‘தெரி கசம்’, ‘டோ திலோன் கி தாஸ்தான்’, ‘பாபு’, ‘சுக்கிரியா’ ஆகிய இந்திப் படங்களையும் இயக்கினார்.

‘தெய்வமகன்’ படத்தில் சிவாஜியை மூன்று வேடங்களில் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்தார். தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் ‘தெய்வமகன்’ திரைப்படம்தான்!

திருலோகசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவையும் அதன் நாயகர்களையும் நவீனப்படுத்திக் காட்டியுள்ளன. தமிழ் திரையுலகத்தை மற்றொரு புதிய பாணிக்குத் திருப்பியிருக்கின்றன.

திருலோகசந்தர் வேண்டாம் என்று கூறியும் நடிகர் ஏவிஎம் ராஜன் வற்புறுத்தல் பேரில் அவர் சொந்தமாகத் தயாரித்த ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவை இயக்க நேர்ந்தது. சிவாஜி கணேசன் நடித்திருந்தும் படம் தோல்வி அடைந்தது. தெலுங்கு வாடையுடன் இருந்ததால் படத்தை தமிழ் ரசிர்கள் ஏற்காமல் போயினர்.

திருலோகசந்தர் திறமைசாலி. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட நினைத்த சிவாஜி கணேசன், ‘அன்புள்ள அப்பா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். படம் வெற்றி பெற்றது என்றாலும் அதற்கு மேலும் திரைப்படங்களை இயக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கு அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதே காரணமாக அமந்தது.

திருலோகசந்தர் இயக்கிய ‘பத்ரகாளி’ திரைப்படத்தின் கதாநாயகி ராணி சந்திரா கலைநிகழ்ச்சிக்காக வெளிநாட்டு சென்ற போது விமான விபத்தில் இறந்து போனார். அதனால், கதாநாயகி இல்லாமல் மீதிப் படத்தை முடிக்க முடியாது என்று என்கிற நிலை உருவானது. இந்த நிலையில் ராணி சந்திரா சாயலில் உள்ள ஒரு நடன பெண்ணை அழைத்து வந்து, ராணி சந்திரா இல்லையே என்கிற குறை தெரியத அளவுக்கு கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி அந்தப் பெண்ணை நடிக்க வைத்து படமாக்கினார், திருலோகசந்தர். அதற்கு நாயகன் சிவக்குமார் உதவியாக இருந்தார். 

பாடல்களும், படமும் வெற்றி அடைந்து தெலுங்கு மொழியில் முரளி மோகன், ஜெயபிரதா நடிக்க திருலோகசந்தர் இயக்க அங்கும் பத்ரகாளி என்கிற பெயரில் வெளியாகி வெற்றியை பெற்றது.   

'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை கொடுத்து, குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பவர் என்று பெயர் பெற்றவர் ஏ.சி.திருலோகசந்தர்.

1969ல்  சிவாஜி நடித்து இவர் இயக்கிய ‘இருமலர்கள்’ படமும், ஸ்ரீதர் இயக்கி சிவாஜி நடித்த ‘ஊட்டி வரை உறவு’ படமும் ஒரேநாளில் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றன. அதேபோல 1970ல் சிவாஜி நடித்து இவர் இயக்கிய ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும், டி.ஆர்.ராமண்ணா இயக்கி சிவாஜி நடித்த ‘சொர்க்கம்’ படமும் ஒன்றாக வெளியாகி மாபெரும் வெற்றிப் படங்களாயின. 1975ல் சிவாஜி நடித்த ‘டாக்டர் சிவா’ படமும், ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ‘வைரநெஞ்சம்’ படமும் வெளியானது. மூன்று முறை இவர் இயக்கிய சிவாஜி படங்கள் வேறு ஒருவர் இயக்கிய சிவாஜி படத்துடன் வெளியாகி வெற்றிப் பெற்றது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தின.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 50 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கும் ஏ.சி.திருலோகசந்தர், தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின் ராஜா சாண்டோ விருது ஆகிய கௌரவங்களை பெற்றவர்.

சில தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்கவில்லை என்றதும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் புத்தகங்களுடன் பொழுதை கழித்தார். அவருக்கு பெரும் உதவியாக இருந்த அவரது மனைவி பாரதியை காலம் முதலில் எடுத்துக் கொண்டதுடன், இரண்டாவதாக அவரது மூத்த மகன் பிரேம் திரிலோக்கை அமெரிக்காவில் காலம் எடுத்துக் கொண்டது.

சில காலம் உடல்நலம் பாதிப்பில் நினைவு தவறியிருந்த ஏ.சி.திருலோகசந்தருக்கு, அவரது இரண்டாவது மகன் ராஜ்சந்தர், மகள் மல்லி சீனிவாசன் ஆகியோர் உதவியாக இருந்தார்கள். ஆனால், 2016 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதி தனது 86-வது வயதில் இயற்கையுடன் கலந்து தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தனது படைப்புகளை சாட்சியாக கொடுத்து நம்முடன் நல்ல படைப்புகளுடன் வாழ்கிறார். அந்த மகத்தான கலைஞனின் நினைவை போற்றுவோம்....

தொகுப்பு : ஜி.பாலன்

நடிகை ராஜஸ்ரீ‌ வாழ்க்கை வரலாறு

ஆந்திராவில் மேற்கு கோதாவரியில் உள்ள ஏலூர் கிராமத்தில் வசித்த சூரியநாராயண ரெட்டி, லலிதா தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பிறந்தவர், ராஜஸ்ரீ. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர், குசுமா குமாரி. ராஜஸ்ரீக்கும் அவரது அக்காவுக்கும் இடையே நீண்ட வயது வித்தியாசம் இருந்தது. இதனால், இவர் வயதில் அக்காவுக்கு குழந்தைகள் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

அக்காவின் திருமணத்திற்கு பிறகு அக்காவை  பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்த ராஜஸ்ரீ, ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த தந்தையின் மறைவுக்கு பிறகு சென்னையில் அக்காள் வீட்டில் தங்கி படிக்கும் சூழ்நிலையை காலம் உருவாக்கியது.

சென்னை தி.நகரில் அக்காள் தங்கி இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது. அவர்கள் வீடுகளில் நடக்கும் கொலு போன்ற பண்டிகை விஷேச நாட்களில் சிறுமியாக இருந்த ராஜஸ்ரீயும் கலந்து கொள்வார். இப்படியாக சினிமா நடிகர்களின் அறிமுகமும், சினிமா பற்றிய புரிதலும் ராஜஸ்ரீக்கு ஏற்பட்டது.

ராஜகுமாரி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்தால் அந்தப் படம் குறித்து நீண்ட நேரம் பேசுவாராம். நடனம் குறித்து விவாதிப்பாராம். இதனால், அவருக்கு நடனம் கற்றுக் கொடுக்கலாம் என்று திரைப்படங்களுக்கு நடனம் அமைத்து வந்த பிரபல நடனக் கலைஞர் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையிடம் நடனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார், அவரது அக்காள். பள்ளி நாடகங்களில் கிருஷ்ணன், மேனகை வேடங்களை ஏற்று நடனமாடிய அனுபவமும் சிறு வயதிலேயே ராஜஸ்ரீக்கு கிடைத்தது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த ராஜஸ்ரீயின் உறவினர்கள் சினிமா நடிகர்களையும், சினிமா படப்பிடிப்பையும் பார்க்க விரும்பினார்கள். இதற்காக ராஜஸ்ரீயின் நடன குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் சிபாரிசு கடிதம் பெற்றுக்கொண்டு ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு அவர்களை அழைத்து சென்றார், ராஜஸ்ரீயின் அக்காள். அவர்களுடன் ராஜஸ்ரீயும் சென்றார். 

சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போன ராஜஸ்ரீக்கு அங்கு எல்லாமே அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தன. அவர் கண்ட பிரமாண்ட தேவலோக அரங்குகள், மன்னர் காலத்து உடைகளுடன் வலம் வந்த அபிமான நடிகர்களைப் பார்த்து வியந்தார். படப்பிடிப்பை வியந்து ராஜஸ்ரீ பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிறுமி ராஜஸ்ரீயின் அழகிய உருவத்தையும், அவரது அழகான கண்களையும் பார்த்தார், ஸ்டுடியோ அதிபரும், தயாரிப்பாளருமான ஏவி.மெய்யப்ப செட்டியார்.

அப்போது ஏவி.மெய்யப்ப செட்டியார் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்க இருந்த நாகதேவதை படத்தில் கதாநாயகி ஜமுனாவின் சிறுவயது வேடத்தில் நடிக்க சிறுமி ஒருவர் தேவையாக இருந்தார். ராஜஸ்ரீயை கண்டதும், இவர் ஜமுனாவின் சிறுவயது பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கணக்குப் போட்டார்.

பிறகு ராஜஸ்ரீயின் தாயாரை அணுகி ராஜஸ்ரீ நடிப்பது குறித்து கேட்டிருக்கிறார். முதலில் சற்று தயங்கிய ராஜஸ்ரீயின் தாயார் லலிதா, பிறகு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு ஏவி.எம்.நிறுவனம் தயாரிப்பில் சித்ரபு நாராயணராவ் இயக்கத்தில் தமிழில் ‘நாகதேவதை’, தெலுங்கு மொழியில் ‘நகுல சவிதி’ என்கிற பெயரில் உருவான படத்தில் ஜமுனாவின் சிறுவயது பாத்திரத்தில் நடித்து சிறுமியாக 1956 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார், ராஜஸ்ரீ. ஒரே பாடலில் சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி அது. அதில் முக அபிநயம், மற்றும் நடன அசைவுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி பார்த்தவர்களின் பாராட்டினைப் பெற்றார். 

அதன்பிறகு சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக  நடித்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சிறுமியாக நடித்து வந்தார். பிறகு தங்கை மற்றும் சிறிய வேடங்களிலும் நடித்தார்.

பணம் பந்தியிலே, நீயா நானா, தென்றல் வீசும், செங்கமல தீவு, குபேர தீவு, நிச்சய தாம்ப்பூலம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்படி தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் துணைக் கதாபத்திரங்களில் நடித்து வந்த ராஜஸ்ரீ, 1960 ஆம் ஆண்டு ‘நித்யா கல்யாணம் பச்ச தோரணம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் மற்றொரு அறிமுக ஹீரோ ராமகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.                                                                                                                                                                                                                                                                                                                                                           

அதன் பிறகு அவருக்கு கதாநாயகி அந்தஸ்த்து கொடுத்து அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை அமைய காரணமாக அமைந்த படம், மலையாளத்தில் உருவான பாரியா. அந்தப் படத்திற்காக கிரேசி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு 1962 ஆம் ஆண்டு முதல் கதாநாயகியாக அறிமுகமான ராஜஸ்ரீ, தொடர்ந்து கடலம்மா, ரெபேக்கா, பழஸ்ஸி ராஜா, சகுந்தலா என பல மலையாளப் படங்களில் நடித்தார்.

தமிழில் அவருக்கு எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கலையரசி படத்தில் கிடைத்தது. அந்தப் படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ராஜஸ்ரீ, பூம்புகார் திரைப்படத்தில் மாதவியாக நடித்து, அதில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடனங்களில் தனது முத்திரையை பதிக்கவும் செய்தார்.

அதன் பிறகு, தமிழில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதில் அறிமுக நாயகன் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்த ராஜஸ்ரீ, நடிப்பு மற்றும் பாடல் காட்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் புகழ்ப் பெற்ற பாடல்களாக அமைந்தாலும், ராஜஸ்ரீ தோன்றிய ‘நாலாம் நாலாம் திருநாளாம்’, ‘அனுபவம் புதுமை’ பாடல்கள் ராஜஸ்ரீயின் திரை வாழ்க்கை பயணத்தில் முதன்மை பாடல்களாக அமைந்து.

தமிழில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும், இந்தி மொழியிலும் ‘காதலிக்க நேரமில்லை’ படம் உருவான போது அங்கும் தமிழில் நடித்த அதே பாத்திரத்தின் மூலம் நடித்து புகழ் பெற்றார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்த ராஜஸ்ரீ, தொடர்ந்து மூன்று இந்திப் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பும் அவருக்கு கிடைத்து அந்தப் படங்களில் நடித்தார்.

தெலுங்கு மொழியில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கப் பெற்றன. என்.டி.ராமாராவ், காந்தாராவ் போன்றோர்களின் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ராஜஸ்ரீ, இந்தப் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் கிடைத்த நல்ல வாய்ப்புகள் எல்லாவற்றிலும் நடிக்கவே செய்தார்.

தமிழில் அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘கலையரசி’, ‘குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’, ‘நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்த ராஜஸ்ரீ, சிவாஜி கணேசனுடன் இணைந்து ‘நிச்சய தாம்பூலம்’, ‘நீலவானம்’, ‘சொர்க்கம்’ போன்ற படங்களில் நடித்தார். ஜெமினி கணேசனுடன் இணைந்து ‘பூவா தலையா’, ‘’பத்தாம் பசலி, ‘ஸ்கூல மாஸ்டர்’, ‘சுவாமி ஐயப்பன்’ போன்ற படங்களிலும் நடித்தவர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் போன்ற அடுத்தக் கட்ட நடிகரோடும் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, மலையாளத்தில் சத்யன், பிரேம் நஸீர், கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார் என அனைவருடனும் இணைந்து நடித்தவர்.

‘பாமாவிஜயம்’, ‘பூவா தலையா’, ‘அனுபவிராஜா அனுபவி’, ‘நீயும் நானும்’, ‘டெல்லி மாப்பிள்ளை’ போன்ற நகைச்சுவை படங்களில் முற்றிலும் மாறுபட்ட தனது நடிப்பை வழங்கி இருப்பார். தமிழைவிட தெலுங்கு மொழியில் அதிகப்பட வாய்ப்புகள் கிடைத்தால் அங்கு பிசியாக நடித்து வந்த ராஜஸ்ரீ, அதற்காக நல்ல தமிழ்ப் பட வாய்ப்புகளை, முன்னணி நடிகர்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறார். தமிழில் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராஜஸ்ரீ, கடைசியாக தமிழில் நடித்த படம் ‘இரவு 12 மணி’. எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படத்தில் இடம்பெற்ற “நாளை நமதே’ என்கிற பாடலிலுடன் அவரது படபிடிப்பு நிறைவடைந்ததாம்.

கன்னடத்தில் அவரது முதல் படம் ‘கந்தரேடு நோடு’. பண்டரிபாய் தயாரித்த ‘தேஜஸ்வினி’ என்ற கன்னட படம் ராஜஸ்ரீயை கன்னட திரையுலகில் பிரபலமாக்கியது. ஸ்வர்ண கௌரி, ரத்ன மஞ்சரி, கருனேயே குடும்படா கண்ணு மற்றும் சந்திர குமாரா போன்ற கன்னட படங்களில் இரண்டாவது முக்கிய துணை வேடங்களில் நடித்தார். காதலிக்க நேரம் இல்லை படத்தின் வெற்றிக்கு பிறகு, 1964 ஆம் ஆண்டு முதல் கன்னடத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்தார். கன்னடத்தில் ராஜ்குமாருடன் மட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் 14 படங்களில் நடித்த ராஜஸ்ரீ, கன்னடத்தில் 30 படங்களில் நடித்தார், கன்னடத்தில் அவரது கடைசி படம் தேவதாசி.

3௦௦ படங்களுக்கு மேல் நடித்துள்ள ராஜஸ்ரீ, தெலுங்கு மொழில் மட்டும் 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை தெலுங்கு மொழியில் ஓய்வில்லாமல் நடித்த ராஜஸ்ரீ, ஒரு பிறந்த நாள் விழாவில் ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் தோட்டா பாஞ்சஜன்யம் அவர்களை சந்தித்தார். அவருக்கு ராஜஸ்ரீயை பாரத்ததுமே மிகவும் பிடித்துப் போனது.

இதனால், ராஜஸ்ரீயை முறைப்படி வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார். ராஜஸ்ரீயின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க, 1978 ஆம் ஆண்டு தோட்டா பாஞ்சஜன்யம் அவர்களை திருமணம் செய்து கொண்டார் ராஜஸ்ரீ. ராஜஸ்ரீயின் கணவர் தோட்டா பாஞ்சஜன்யம் அவர்கள், வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர் என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு கணவரின் விருப்பபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார், ராஜஸ்ரீ,

1979 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஆண் மகன் பிறந்தார். சினிமாவை மறந்து கணவன், மகன் என்று வாழ்ந்த ராஜஸ்ரீயின் வாழ்க்கையில் திடீர் என்று 1983-ஆம் ஆண்டு பெரும் துயர சம்பவம் நிகழ்ந்தது. அவரது கணவர் தோட்டா பாஞ்சஜன்யம் திடீர் என்று மறைந்தார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனம் என்று இடம்பெயர்ந்தவர், 1991-ஆம் ஆண்டு தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்தும் பத்து ஆண்டுகள் யாருடனும் பேசியதில்லை. பழகியதில்லை. எங்கேயும் சென்றதுமில்லை. சென்னையில் நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.

அதன் பிறகு 2009-இல் இவரது மகனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் அழைத்திருக்கிறார். அப்போது ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். அந்த விழாவில் நீண்ட நேரம் இருந்து மணவிழா நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு ராஜஸ்ரீயின் மகனை வாழ்த்திவிட்டு சென்றுள்ள ஜெயலலிதா, “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க வலியுறுத்தியுள்ளார்.

கணவரின் விருப்பபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்தி, அவரின் மறைவுக்குப் பிறகும் அவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பற்ற சினிமா துறைக்கு வராமல் 30 ஆண்டுகளாக திரைத்துரையைவிட்டு ஒதுங்கி இருந்த ராஜஸ்ரீ, தனது பேட்டியின் மூலம் மக்களை சந்தித்தார். அதன் பிறகுதான் ராஜஸ்ரீ இருப்பதே வெளிஉலகுக்கு தெரிய வந்தது.

தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள ராஜஸ்ரீ, தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருதும் பெற்றுள்ளார். சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வரும் ராஜஸ்ரீ, நேரம் கிடைக்கும் போது தென்னிந்திய மொழிகளில் வரும் நல்ல படங்களை விரும்பி பார்க்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்