அக்காவின் திருமணத்திற்கு பிறகு அக்காவை பார்க்க அடிக்கடி சென்னைக்கு வந்த ராஜஸ்ரீ, ஸ்டேஷன்
மாஸ்டராக இருந்த தந்தையின் மறைவுக்கு பிறகு சென்னையில் அக்காள் வீட்டில் தங்கி
படிக்கும் சூழ்நிலையை காலம் உருவாக்கியது.
சென்னை தி.நகரில் அக்காள் தங்கி இருந்த தெருவில்
தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி என தெலுங்கு
நடிகர்கள் வீடும் இருந்தது. அவர்கள் வீடுகளில் நடக்கும் கொலு போன்ற பண்டிகை விஷேச
நாட்களில் சிறுமியாக இருந்த ராஜஸ்ரீயும் கலந்து கொள்வார். இப்படியாக சினிமா
நடிகர்களின் அறிமுகமும், சினிமா பற்றிய புரிதலும் ராஜஸ்ரீக்கு ஏற்பட்டது.
ராஜகுமாரி திரையரங்கில் படம் பார்த்துவிட்டு
வந்தால் அந்தப் படம் குறித்து நீண்ட நேரம் பேசுவாராம். நடனம் குறித்து
விவாதிப்பாராம். இதனால், அவருக்கு நடனம் கற்றுக் கொடுக்கலாம் என்று திரைப்படங்களுக்கு
நடனம் அமைத்து வந்த பிரபல நடனக் கலைஞர் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையிடம் நடனம் ஏற்பாடு
செய்து கொடுத்துள்ளார், அவரது அக்காள். பள்ளி நாடகங்களில் கிருஷ்ணன், மேனகை வேடங்களை ஏற்று நடனமாடிய அனுபவமும் சிறு வயதிலேயே ராஜஸ்ரீக்கு
கிடைத்தது.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு
வந்த ராஜஸ்ரீயின் உறவினர்கள் சினிமா நடிகர்களையும், சினிமா படப்பிடிப்பையும்
பார்க்க விரும்பினார்கள். இதற்காக ராஜஸ்ரீயின் நடன குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம்
சிபாரிசு கடிதம் பெற்றுக்கொண்டு ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு அவர்களை அழைத்து சென்றார்,
ராஜஸ்ரீயின் அக்காள். அவர்களுடன் ராஜஸ்ரீயும் சென்றார்.
சினிமா சூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போன ராஜஸ்ரீக்கு
அங்கு எல்லாமே அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தன. அவர் கண்ட பிரமாண்ட தேவலோக
அரங்குகள், மன்னர் காலத்து உடைகளுடன் வலம் வந்த அபிமான நடிகர்களைப் பார்த்து வியந்தார்.
படப்பிடிப்பை வியந்து ராஜஸ்ரீ பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சிறுமி ராஜஸ்ரீயின்
அழகிய உருவத்தையும், அவரது அழகான கண்களையும் பார்த்தார், ஸ்டுடியோ அதிபரும், தயாரிப்பாளருமான
ஏவி.மெய்யப்ப செட்டியார்.
அப்போது ஏவி.மெய்யப்ப செட்டியார் தமிழ்,
தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்க இருந்த நாகதேவதை படத்தில் கதாநாயகி ஜமுனாவின்
சிறுவயது வேடத்தில் நடிக்க சிறுமி ஒருவர் தேவையாக இருந்தார். ராஜஸ்ரீயை கண்டதும்,
இவர் ஜமுனாவின் சிறுவயது பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று கணக்குப்
போட்டார்.
பிறகு ராஜஸ்ரீயின் தாயாரை அணுகி ராஜஸ்ரீ நடிப்பது
குறித்து கேட்டிருக்கிறார். முதலில் சற்று தயங்கிய ராஜஸ்ரீயின் தாயார் லலிதா,
பிறகு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதன் பிறகு ஏவி.எம்.நிறுவனம் தயாரிப்பில் சித்ரபு
நாராயணராவ் இயக்கத்தில் தமிழில் ‘நாகதேவதை’, தெலுங்கு மொழியில் ‘நகுல சவிதி’
என்கிற பெயரில் உருவான படத்தில் ஜமுனாவின் சிறுவயது பாத்திரத்தில் நடித்து
சிறுமியாக 1956 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார்,
ராஜஸ்ரீ. ஒரே பாடலில் சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி
அது. அதில் முக அபிநயம், மற்றும் நடன அசைவுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி
பார்த்தவர்களின் பாராட்டினைப் பெற்றார்.
அதன்பிறகு சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’
என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு
ஜூனியராக நடித்தார். தொடர்ந்து தமிழ்
மற்றும் தெலுங்கு படங்களில் சிறுமியாக நடித்து வந்தார். பிறகு தங்கை மற்றும் சிறிய
வேடங்களிலும் நடித்தார்.
பணம் பந்தியிலே, நீயா நானா, தென்றல் வீசும், செங்கமல
தீவு, குபேர தீவு, நிச்சய தாம்ப்பூலம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து
வந்தார். இப்படி தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் துணைக் கதாபத்திரங்களில்
நடித்து வந்த ராஜஸ்ரீ, 1960 ஆம் ஆண்டு ‘நித்யா கல்யாணம் பச்ச தோரணம்’ என்ற
தெலுங்கு திரைப்படத்தில் மற்றொரு அறிமுக ஹீரோ ராமகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
அதன் பிறகு அவருக்கு கதாநாயகி அந்தஸ்த்து
கொடுத்து அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை அமைய காரணமாக அமைந்த படம்,
மலையாளத்தில் உருவான பாரியா. அந்தப் படத்திற்காக கிரேசி என்று தனது பெயரை மாற்றிக்
கொண்டு 1962 ஆம் ஆண்டு முதல் கதாநாயகியாக அறிமுகமான ராஜஸ்ரீ, தொடர்ந்து கடலம்மா, ரெபேக்கா, பழஸ்ஸி ராஜா, சகுந்தலா என பல
மலையாளப் படங்களில் நடித்தார்.
தமிழில் அவருக்கு எம்.ஜி.ஆருடன் நடிக்கும்
வாய்ப்பு கலையரசி படத்தில் கிடைத்தது. அந்தப் படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக
நடித்த ராஜஸ்ரீ, பூம்புகார் திரைப்படத்தில் மாதவியாக நடித்து, அதில் தன்னுடைய
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடனங்களில் தனது முத்திரையை பதிக்கவும் செய்தார்.
அதன் பிறகு, தமிழில் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான
‘காதலிக்க நேரமில்லை’ படம் அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அதில்
அறிமுக நாயகன் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்த ராஜஸ்ரீ, நடிப்பு மற்றும் பாடல்
காட்சிகள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அந்தப்
படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் புகழ்ப் பெற்ற பாடல்களாக அமைந்தாலும், ராஜஸ்ரீ
தோன்றிய ‘நாலாம் நாலாம் திருநாளாம்’, ‘அனுபவம் புதுமை’ பாடல்கள் ராஜஸ்ரீயின் திரை
வாழ்க்கை பயணத்தில் முதன்மை பாடல்களாக அமைந்து.
தமிழில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் வெற்றியை
தொடர்ந்து தெலுங்கு மொழியிலும், இந்தி மொழியிலும் ‘காதலிக்க நேரமில்லை’ படம்
உருவான போது அங்கும் தமிழில் நடித்த அதே பாத்திரத்தின் மூலம் நடித்து புகழ்
பெற்றார். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகும் வாய்ப்பு
கிடைத்த ராஜஸ்ரீ, தொடர்ந்து மூன்று இந்திப் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பும்
அவருக்கு கிடைத்து அந்தப் படங்களில் நடித்தார்.
தெலுங்கு மொழியில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’
படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கப்
பெற்றன. என்.டி.ராமாராவ், காந்தாராவ் போன்றோர்களின் படங்களில் நடித்தார். தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ராஜஸ்ரீ,
இந்தப் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் கிடைத்த நல்ல வாய்ப்புகள்
எல்லாவற்றிலும் நடிக்கவே செய்தார்.
தமிழில் அன்றைய முன்னணி கதாநாயகர்களான
எம்.ஜி.ஆருடன் இணைந்து ‘கலையரசி’, ‘குடியிருந்த கோயில்’, ‘அடிமைப்பெண்’, ‘பட்டிக்காட்டுப்
பொன்னையா’, ‘நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்த ராஜஸ்ரீ, சிவாஜி கணேசனுடன் இணைந்து
‘நிச்சய தாம்பூலம்’, ‘நீலவானம்’, ‘சொர்க்கம்’ போன்ற படங்களில் நடித்தார். ஜெமினி
கணேசனுடன் இணைந்து ‘பூவா தலையா’, ‘’பத்தாம் பசலி, ‘ஸ்கூல மாஸ்டர்’, ‘சுவாமி
ஐயப்பன்’ போன்ற படங்களிலும் நடித்தவர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர்,
முத்துராமன், ரவிச்சந்திரன் போன்ற அடுத்தக் கட்ட நடிகரோடும் தொடர்ந்து படங்களில்
நடித்தார்.
தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, மலையாளத்தில் சத்யன், பிரேம் நஸீர், கன்னடத்தில் ராஜ்குமார், உதயகுமார் என அனைவருடனும்
இணைந்து நடித்தவர்.
‘பாமாவிஜயம்’, ‘பூவா தலையா’, ‘அனுபவிராஜா அனுபவி’,
‘நீயும் நானும்’, ‘டெல்லி மாப்பிள்ளை’ போன்ற நகைச்சுவை படங்களில் முற்றிலும்
மாறுபட்ட தனது நடிப்பை வழங்கி இருப்பார். தமிழைவிட தெலுங்கு மொழியில் அதிகப்பட
வாய்ப்புகள் கிடைத்தால் அங்கு பிசியாக நடித்து வந்த ராஜஸ்ரீ, அதற்காக நல்ல தமிழ்ப்
பட வாய்ப்புகளை, முன்னணி நடிகர்களின் வாய்ப்புகளை இழந்திருக்கிறார். தமிழில் 60
படங்களுக்கு மேல் நடித்துள்ள ராஜஸ்ரீ, கடைசியாக தமிழில் நடித்த படம் ‘இரவு 12 மணி’.
எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படத்தில் இடம்பெற்ற “நாளை நமதே’ என்கிற பாடலிலுடன்
அவரது படபிடிப்பு நிறைவடைந்ததாம்.
கன்னடத்தில் அவரது முதல் படம் ‘கந்தரேடு நோடு’.
பண்டரிபாய் தயாரித்த ‘தேஜஸ்வினி’ என்ற கன்னட படம் ராஜஸ்ரீயை கன்னட திரையுலகில்
பிரபலமாக்கியது. ஸ்வர்ண கௌரி, ரத்ன மஞ்சரி, கருனேயே குடும்படா கண்ணு மற்றும் சந்திர குமாரா போன்ற கன்னட படங்களில்
இரண்டாவது முக்கிய துணை வேடங்களில் நடித்தார். காதலிக்க நேரம் இல்லை படத்தின்
வெற்றிக்கு பிறகு, 1964 ஆம் ஆண்டு முதல் கன்னடத்தில் மட்டும்
கதாநாயகியாக நடிக்க முடிவு செய்தார். கன்னடத்தில் ராஜ்குமாருடன் மட்டும் முக்கிய
கதாபாத்திரத்தில் 14 படங்களில் நடித்த ராஜஸ்ரீ, கன்னடத்தில் 30 படங்களில்
நடித்தார், கன்னடத்தில் அவரது கடைசி படம் தேவதாசி.
3௦௦ படங்களுக்கு மேல் நடித்துள்ள ராஜஸ்ரீ,
தெலுங்கு மொழில் மட்டும் 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 1965 ஆம் ஆண்டு முதல்
1975ஆம் ஆண்டு வரை தெலுங்கு மொழியில் ஓய்வில்லாமல் நடித்த ராஜஸ்ரீ, ஒரு பிறந்த
நாள் விழாவில் ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் தோட்டா பாஞ்சஜன்யம் அவர்களை
சந்தித்தார். அவருக்கு ராஜஸ்ரீயை பாரத்ததுமே மிகவும் பிடித்துப் போனது.
இதனால், ராஜஸ்ரீயை முறைப்படி வீட்டுக்கு சென்று
பெண் கேட்டிருக்கிறார். ராஜஸ்ரீயின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க, 1978 ஆம் ஆண்டு தோட்டா பாஞ்சஜன்யம் அவர்களை திருமணம் செய்து
கொண்டார் ராஜஸ்ரீ. ராஜஸ்ரீயின் கணவர் தோட்டா பாஞ்சஜன்யம் அவர்கள், வெங்கல்ராவ்
முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். பின்னர் என்.டி.ராமராவ்
ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். திருமணத்துக்கு
பிறகு கணவரின் விருப்பபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார், ராஜஸ்ரீ,
1979 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஆண் மகன்
பிறந்தார். சினிமாவை மறந்து கணவன், மகன் என்று வாழ்ந்த ராஜஸ்ரீயின் வாழ்க்கையில்
திடீர் என்று 1983-ஆம் ஆண்டு பெரும் துயர சம்பவம்
நிகழ்ந்தது. அவரது கணவர் தோட்டா பாஞ்சஜன்யம் திடீர் என்று மறைந்தார். அதன் பிறகு
ஹைதராபாத், விசாகப்பட்டனம் என்று இடம்பெயர்ந்தவர், 1991-ஆம்
ஆண்டு தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்தும் பத்து ஆண்டுகள் யாருடனும்
பேசியதில்லை. பழகியதில்லை. எங்கேயும் சென்றதுமில்லை. சென்னையில் நிறைய பேருக்கு
ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட
கண்டுபிடிப்பதில்லை.
அதன் பிறகு 2009-இல் இவரது மகனுக்கு திருமணம்
செய்துள்ளார். அப்போது எல்லாரையும் அழைத்திருக்கிறார். அப்போது ஜெயலலிதாவும்
சென்றிருக்கிறார். அந்த விழாவில் நீண்ட நேரம் இருந்து மணவிழா நிகழ்ச்சிகளைப்
பார்த்துட்டு ராஜஸ்ரீயின் மகனை வாழ்த்திவிட்டு சென்றுள்ள ஜெயலலிதா, “திரும்பிப்
பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்க வலியுறுத்தியுள்ளார்.
கணவரின் விருப்பபடி சினிமாவில் நடிப்பதை
நிறுத்தி, அவரின் மறைவுக்குப் பிறகும் அவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பற்ற
சினிமா துறைக்கு வராமல் 30 ஆண்டுகளாக திரைத்துரையைவிட்டு ஒதுங்கி இருந்த ராஜஸ்ரீ,
தனது பேட்டியின் மூலம் மக்களை சந்தித்தார். அதன் பிறகுதான் ராஜஸ்ரீ இருப்பதே வெளிஉலகுக்கு
தெரிய வந்தது.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ள
ராஜஸ்ரீ, தமிழக அரசின் எம்.ஜி.ஆர். விருதும் பெற்றுள்ளார். சென்னை தியாகராயநகரில், போரூர் சோமசுந்தரம் தெருவில் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து
வரும் ராஜஸ்ரீ, நேரம் கிடைக்கும் போது தென்னிந்திய மொழிகளில் வரும் நல்ல படங்களை
விரும்பி பார்க்கிறார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக