வெள்ளி, 13 மே, 2022

இயக்குநர், ஒளிப்பதிவார் கே.வி.ஆனந்த் வாழ்க்கை வரலாறு

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்த் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி சென்னை அருகே உள்ள பழவேற்காட்டில் கரிமனல் முணுசாமி வெங்கடேசன், அனசூயா தம்பதிக்கு மகனாக பிறந்தவர்.

பழவேற்காட்டில் பள்ளி படிப்பை முடித்த ஆனந்த், பட்டப் படிப்பை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் முடித்தார். பிறகு சென்னை லோயலோ கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் துறையில் மாஸ்டர் டிகிரி பெற்றார்.

ஒருநாள் உறவினர் ஒருவர் இல்ல திருமண விழாவுக்கு சென்ற போது அந்த விழாவில் புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு கிடைத்த மரியாதையை கண்டு வியந்தவர், உடனே ஒரு புகைப்பட கேமிராவை வாங்கி படம் எடுக்க கற்றுக் கொண்டார்.

கல்லூரியின் வருடாந்திர இறுதி நாட்களில் இமயமலையில் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்று தனது புகைப்படம் எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு, அவரது ஆய்வுப் பயணங்கள் புகைப்படம் எடுப்பதில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டின.

கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றார். அவரது காட்சி படங்கள் அவருக்கு ஏராளமான புகைப்பட விருதுகளைப் பெற்றன.

முன்னணி பத்திரிகைகளான இந்தியா டுடே, டைம்ஸ் ஆப் இந்தியா, கல்கி ஆகிய பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய கே.வி.ஆனந்த், திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அறிமுகம் கிடைக்க அவரிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த ‘கோபுர வாசலிலே’, ‘மீரா’, ‘தேவர் மகன்’, ‘அமரன்’, ‘திருடா திருடா’ போன்ற பல படங்கள் கே.வி.ஆனந்தின் திறமையை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.

தனது உதவியாளர் கே.வி.ஆனந்தின் திறமையை நன்கு அறிந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தனக்கு வந்த  ‘தேன்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாள திரைப்படத்தின் வாய்ப்பை கே.வி.ஆனந்துக்கு பரிந்துரை செய்தார்.

மோகன்லால், ஷோபனா நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள திரைப்படம் கே.வி.ஆனந்தின் திறமையை பயன்படுத்திக் கொண்டு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற பெருமையை பெற்று தந்தது.

தன்னை நம்பி ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்துக்கு சிபாரிசு செய்த குருநாதர் பி.சி.ஸ்ரீராமுக்கு, அந்தப் படம் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை பெற்று வந்து நன்றியினை சமர்பித்தார், கே.வி.ஆனந்த்.  

1994-ம் ஆண்டு வெளியான ‘தேன்மாவின் கொம்பத்து’ மலையாள திரைப்படம், அவருக்கு மலையாளத்தில் இன்னொரு வாய்ப்பினையும் பெற்று தந்தது.  அந்தப் படத்திலும் மோகன்லால், ஷோபனா ஜோடியாக நடிக்க தன்னை ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்த பிரியதர்ஷனே இயக்கினார்.

அந்தப் படத்தை தொடர்ந்து தெலுங்கு மொழியில் மோகன்பாபு, மீனா நடிப்பில் கோதண்டராமி ரெட்டி இயக்கிய ‘புண்ணிய பூமி நா தேசம்’ என்கிற படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ்நாட்டில் பிறந்து மலையாளத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அப்படியே தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்தை தமிழுக்கு அழைத்து வந்தவர், இயக்குநர் கதிர். அவர் இயக்கிய ‘காதல் தேசம்’ படமே கே.வி.ஆனந்துக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது.

மீண்டும் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கிய ‘சந்திரலேகா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், தமிழில் மணிரத்னம் தயாரிப்பில் விஜய், சூர்யா நடிப்பில் வசந்த் இயக்கிய ‘நேருக்கு நேர்’ படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

‘நேருக்கு நேர்’ படம் சூர்யாவுக்கு முதல் படம். தன்னை படமெடுத்த கே.வி.ஆனந்த்  பற்றி சூர்யா கூறும்போது “நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில் தான், சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன்.

மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் அந்த இரண்டு மணிநேரம், ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போலவே உணர்ந்தேன். ‘நேருக்கு நேர்’ திரைப்படத்துக்காக நீங்கள் என்னை எடுத்த அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம் தான், இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும், என்மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தைவிட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும், நடிகனாக என்னை படம்பிடித்ததும் நீங்கள்தான்.

முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பும், வழிகாட்டலும் மறக்கமுடியாதது. உன் வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழி நடத்துகின்றன” என்கிறார் சூர்யா.

அடுத்து பிரியதர்ஷன் இயக்கிய ‘டோலி சஜா கே ரக்னா’ இந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இந்தியில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தமிழில் ஷங்கர் தயாரித்து, இயக்கிய ‘முதல்வன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.

மணிரத்னத்தின் உதவியாளர் சுசி கணேசன் இயக்குனராக அறிமுகமான ‘விரும்புகிறேன்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், அதன் பிறகு ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோஸ்’, அணில் கபூர் நடித்த ‘நாயக்’, அஜய் தேவ்கான் நடித்த ‘த லெஜன்ட் ஆஃப் பகத்சிங்’, அமிதாபச்சன், அக்சய்குமார் நடித்த ‘காக்கே’ ஆகிய இந்திப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

ஷங்கரின் உதவியாளர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக அறிமுகமான ‘செல்லமே’ படத்திகு ஒளிப்பதிவு செய்த கே.வி.ஆனந்த், அடுத்து ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனிடையே தனது திறமையை ஒளிப்பதிவுடன் நிறுத்திக்கொள்ளாமல் ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த ‘கனா கண்டேன்’ என்கிற படத்தை இயக்கி, இயக்குனராக 2005-ம் ஆண்டு அறிமுகமானார், கே.வி.ஆனந்த்.

‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் மலையாள நடிகர் ப்ரித்விராஜை தமிழுக்கு அழைத்து வந்தவர், கே.வி.ஆனந்த். கதை முடிவாகி ப்ரித்விராஜை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த கே.வி.ஆனந்த், ப்ரித்விராஜின் செல்நம்பருக்கு அழைத்த போது, நான் டிரைவிங்கில் இருக்கிறேன். பிறகு கூப்பிடுகிறேன் என்று பதில் சொன்ன ப்ரித்விராஜ், கே.வி.ஆனந்த் பற்றி சிலரிடம் விசாரித்து தெரிந்து கொண்டு உடனே கே.வி.ஆனந்தை அழைத்து பேசி இருக்கிறார்.

அதன் பிறகு அவரை சென்னைக்கு வர வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து ‘கனா கண்டேன்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த், கோபிகா, ப்ரித்விராஜ் நடித்த கனா கண்டேன் படத்தை பி.எல்.தேனப்பன் தயாரிக்க, வித்யாசாகர் இசையமைக்க திரில்லர் படமாக உருவாக்கி வெளியிட்டார்.

அடுத்து சூர்யா நடிப்பில் ‘அயன்’ என்கிற பெரும் வெற்றிப் படத்தை ஏவி.எம்.நிறுவனத்துக்கு இயக்கிய கே.வி.ஆனந்த், அதன் பிறகு ஜீவா நடிப்பில் ‘கோ’, சூர்யா நடிப்பில் ‘மாற்றான்’, தனுஷ் நடிப்பில் ‘அனேகன்’, விஜய்சேதுபதி நடிப்பில் ‘கவண்’,  சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ போன்ற படங்களை தொடர்ந்து இயக்கினார்.

தேர்தல் அரசியலின் பின்னணியில் நிகழும் ஒரு காதல் கதையை கபிலன் வைரமுத்துவுடன் ஓராண்டு காலமாக விவாதித்து எழுதிமுடித்த கே.வி.ஆனந்த், 'கோ', 'கவண்' போன்ற படங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வைப் போல இந்தப் படமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்பினார்.

பட உருவாக்கத்திற்காக அவர் தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை தொடங்கியிருந்த நிலையில் 29-4-2021 அன்று நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அவரே தன்னுடைய காரை ஓட்டிச் சென்று  மருத்துவமனையில் சேர்ந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கே.வி.ஆனந்த் மறுநாள் 30-04-2021 அதிகாலை 3:00 மணி அளவில் மாரடைப்பால் மறைந்தார்.

நடிகர் விவேக்கின் மறைவு ஏற்படுத்தியே வேதனையே விலகாத நிலையில் கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்துக்கு சசிக்கலா என்கிற மனைவியும், சினேகா, சாதனா என இரு மகள்களும் உள்ளனர்.

நாம்.... ஒரு சிறந்த இயக்குநரை - ஒப்பனையற்ற மனிதரை இழந்து ஓராண்டாகிவிட்டது. அவருடைய திரைப்படங்களால் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக