வெள்ளி, 13 மே, 2022

இயக்குநர் எல்.வி.பிரசாத் வாழ்க்கை வரலாறு

ஆந்திர மாநிலத்தில் ஏலூரு தாலுக்காவில் அமைந்துள்ள சொமவார்ப்புடு என்ற சிறிய கிராமத்தில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அக்கினேனி ஸ்ரீராமுலு, பசவம்மா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் எல்.வி.பிரசாத். அவரது இயற் பெயர் லட்சுமி வரபிரசாத்.

பள்ளியில் படிக்கும் போதே நாடகங்களை பார்த்து நாடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்குள் எழுந்தது. முயற்சி செய்தார். சின்ன சின்ன வேஷங்கள் கொடுத்து நடிக்க வைத்தார்கள். அதன் பிறகு எங்கு நாடகம் போட்டாலும் நடிக்க சென்று விடுவா, பிரசாத்.

இப்படி நடிப்பு நடிப்பு என்று திரிகிறானே, அவனுக்கு காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை செய்து வைத்தால் குடும்பம், குழந்தை என்று மாறிவிடுவான் என்று கணக்கு போட்ட பெற்றோர், பிரசாத்துக்கு பதினேழு வயதில் சவுந்தர்யா மனோகரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

பெற்றோர் நினைத்தது போலவே வீட்டில் தங்கினார் பிரசாத். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த அதிர்ஷ்டம் நாம் சினிமா நடிகராகிவிடலாம் என்று கணக்குப் போட்டார், பிரசாத். சினிமாவில் நடிக்க பம்பாய்க்கு போகிறேன் என்று கூறினால் அனுப்ப மாட்டார்கள். அதனால் பம்பாய்க்கு சென்று நடித்து புகழ் பெற்று ஊருக்கு திரும்ப வேண்டும் என்று சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டார்.

பம்பாய் சென்றார். கோகினூர் ஸ்டுடியோ அருகே உள்ள லாட்ஜில் அறை  எடுத்தார். இந்தி மொழி புரியவில்லை. யாரிடம் வேலை கேட்பது என்று தெரியவில்லை. ஸ்டுடியோவுக்குள் நுழைவது எளிதாக இல்லை. அதனால், இரண்டு நாள் ஸ்டுடியோவை சுற்றி வந்து வேடிக்கைப் பார்த்தவர், மூன்றாம் நாள், ஸ்டுடியோவுக்கு எதிரே இருந்த தையல் கடைக்காரர் அழைத்து, எத்தனை நாளைக்கு ஓட்டை வழியாக சூட்டிங்கை வேடிக்கை பார்ப்பாய். உள்ளே போய் பார்க்க வேண்டாமா என்று கேட்டவர், பிரசாத்தின் நிலை அறிந்து கொஞ்ச நாள் தன்னிடம் வேலை செய்யுமாறு கூறி இருக்கிறார்.  

தையல் கடையில் கொஞ்ச நாள் வேலை பார்த்த பிரசாத், பிறகு வீனஸ் திரைப்பட நிறுவனத்திலும், அதன் பிறகு இந்தியா பிகசர்ஸ் என்ற நிறுவனத்திலும் அலுவலக உதவியாளராக வேலை செய்திருக்கிறார். இந்தியா பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஸ்டார் ஆப் தி ஈஸ்ட்’ என்கிற மௌனப் படத்தை தயாரித்த போது அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிற வாய்ப்பு பிரசாத்துக்கு கிடைத்தது. ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை.

பிரசாத்துக்கு அங்கு தாரிலால் என்கிற நண்பர் கிடைத்திருந்தார். அவரது உதவியால் இம்பீரியல் பட நிறுவனத்தின் சார்பில் தயாரான இந்தியாவின் முதல் பேசும் படமான “ஆலம் ஆரா” படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரசாத்துக்கு கிடைத்தது. அந்தப் படத்தில் பண்டிதர், வேலைக்காரர் என்று பல வேடங்களில் நடித்தார் பிரசாத்.

அந்தப் படத்தில் நடித்த போது அங்கு உதவி இயக்குனராக பணிபுரிந்த எச்.எம.ரெட்டியின் அறிமுகம் பிரசாத்துக்கு கிடைத்தது. நெருக்கமான நண்பர்களானார்கள். அடுத்து தமிழில் தயாரான முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தை இயக்குகின்ற வாய்ப்பு எச்.எம்.ரெட்டிக்கு கிடைத்த போது, அதில் பூசாரி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரசாத்துக்கு வழங்கினார்.

காளிதாஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘பக்த பிரகலாதா’ என்ற பெயரில் முதல் தெலுங்கு பேசும் படத்தை இயக்கிய எச்.எம் ரெட்டி அந்தப் படத்திலும் எல்.வி.பிரசாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார்.

சினிமாவில் நடித்துவிட்ட மகிழ்ஹ்சியுடன் சொந்த ஊருக்கு திரும்பிய பிரசாத், அங்கு அவரது மகள் இறந்த செய்தி அறிந்து அதிர்ந்து போனார். இனிமேல் ஊரோடு உன் மனைவியோடு இரு. இல்லை என்றால் நீ எங்கு செல்கிறாயோ அங்கு உன் மனைவியையும் அழைத்து செல் என்று அவருடைய சினிமா கனவுகளுக்கு தடை போட பார்த்தார்கள். இல்லை என் மனைவியை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன் என்று அவரை அழைத்துக் கொண்டு பம்பாய் சென்ற பிரசாத், அங்கு இம்பீரியல் பிலிம் கம்பெனி தயாரித்த கமர்-அல்-சமான் என்ற படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

சில மாதங்களில் அங்கு வேலை இழந்த பிரசாத், மனைவியை காப்பாற்ற, எந்த வேலை கிடைத்தாலும் சரி என்று கிருஷ்ணா தியேட்டரில் காவலாளி வேலைக்கு சேர்ந்தார்.  

பிரசாத்தின் நண்பர் எச்.எம்.ரெட்டி "சீதா சுயம்வர்" என்ற இந்திப் படத்தை இயக்க தொடங்கிய போது அந்தப் படத்திலே எல்.வி.பிரசாத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தின் போது பிரசாத்து வேலையில் இருந்த ஈடுபாட்டை கண்ட அந்த நிறுவனத்தினர், அந்த நிறுவனத்தின் நிர்வாகியாக அவருக்கு பதவி உயர்வு அளித்தனர்.

காலம் அந்த கம்பெனியையும் இழுத்து மூடியது. சரியான வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்பட்டார். வறுமை வீட்டில் தாண்டவ மாடினாலும், அதை மறைக்க மகன்கள் ஆனந்த் பாபு, ரமேஷ் பிரசாத் என்று இரு செல்வங்கள் இருந்தனர்.

ஸ்ரீ என்கிற இந்திப் படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தார். உதவி இயக்குநர், உதவி ஒளிப்பதிவாளர், தயாரிப்பு நிர்வாகி, நடிகர் என, எட்டு ஆண்டுகளில் ஏராளமான அனுபவங்கள் அவருக்கு கிடைத்தது. இதனால், படத் தயாரிப்பில் ஈடுபடாலாம் என்று முடிவு செய்தார்.

சொந்த ஊருக்கு சென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் பணம் திரட்ட முயன்றார். அவரை நம்பிய மக்கள், சினிமாவை நம்பவில்லை. அதனால் அவரது எண்ணம் தோல்வியில் முடிந்தந்தை எண்ணி வருந்திய போது, மீண்டும் இயக்குநர் எச்.எம்.ரெட்டி அழைத்து உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டதுடன் அவர் இயக்கிய “தெனாலி ராமகிருஷ்ணா” படத்தில் மகா மந்திரி திம்மராசுவின் பாத்திரத்திலே நடிக்கின்ற வாய்ப்பையும் வழங்கினார். அந்தப் படம், சென்னையில் உருவானது. அதன் பிறகு “கரானா தொங்கா” என்ற படத்திலும் அவரை பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் உலகப்போரின் தீவிரம் காரணமாக பலர் சென்னையை காலி செய்ய, எல்.வி.பிரசாத்தும் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார்.

பிறகு பம்பாய்க்கு சென்று ‘கஷ்ட ஜீவி’ என்கிற படத்தில் உதவி இயக்குனராகவும், தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றிய பிரசாத், அந்தப் படம் பாதியில் நின்றதும் “சவால், லேடி டாக்டர், டர்பன்” போன்ற சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியாற்றியதுடன், “தேவர்” என்ற படத்துக்கு கதை எழுதினார்.

“ஆலம் ஆரா” படத்தில் நடித்த போது அதன் நாயகன் பிருத்விராஜ் கபூருடன் அப்போது பழக்கம் இருந்ததால் அவரை மீண்டும் சந்தித்து, அவருடைய பிருத்வி தியேட்டர்ஸில் சகுந்தலா, தீவார் போன்ற நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

1930 ஆம் ஆண்டு மௌனப் பட காலத்தில் சினிமாவுக்குள் நுழைந்த எல்.வி.பிரசாத்துக்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1943 ஆம் ஆண்டு பணிபுரிந்த ‘கிரஹ பிரவேசம்’ படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் அவர் ஒரு உதவி இயக்குநராகத்தான் முதலில் இணைந்தார். பின்னர் ஒரு கால கட்டத்தில் அவரே அந்த படத்தை இயக்குகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு அந்தப் படத்திற்கு அவரே கதானயகனானர். மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த அந்தப்படம் நாற்பதுகளில் வெளியான மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. அதற்குப் பிறகு எல்.வி.பிரசாத்தின் வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

எல்.வி.பிரசாத் இயக்கத்தில் அடுத்து வெளியான ‘பல்நாட்டி யுத்தம்’ மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கிலே உருவான முதல் சரித்திரப்படமான அந்தப் படத்தில் கதாநாயகனாக ஏ.நாகேஸ்வரராவ் நடித்திருந்தார். முதலில் அந்தப் படத்தை இயக்கிய பத்திரிகையாளரான ராமபிரம்மம் இறந்து விடவே அப்படத்தை இயக்குகின்ற பொறுப்பு பிரசாத்தை வந்தடைந்தது. அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரசாத் அதை மிவும் வெற்றிகரமாக செய்து முடித்தார்.பிரபல குணச்சித்திர  நடிகையான எஸ்.வரலட்சுமி பாடகியாக  அறிமுகமான முதல் படமாகவும் ‘பல்நாட்டி  யுத்தம்’ படம் அமைந்தது.

அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வசந்த மாளிகை படத்தை இயக்கிய கே.எஸ்.பிரகாஷ்ராவ், ‘துரோகி’ என்ற தெலுங்கு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை பிரசாத்துக்கு வழங்கினார். ஜி.வரலட்சுமியும், பிரகாஷ் ராவும் முக்கிய பாத்திரங்களில் நடித்த அந்தப் படத்திலே சிறு வேடம் ஒன்றிலும் பிரசாத் நடித்திருந்தார்.

விஜயவாடாவில் 1946ஆம் ஆண்டு சேசின பாபம் என்கிற நாடகத்தை பார்த்த எல்.வி.பிரசாத், அதில் நடித்த என்.டி.ராமாராவின் தோற்றத்தையும் நடிப்புத் திறமையையும் கண்டு வியந்ததுடன், அடுத்து அவர் இயக்கிய “மன தேசம்” படத்தில் ஒரு போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்தவர், 1949ஆம் ஆண்டு இயக்கிய சவுகாரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். அந்தப் படம் 1950 ஆம் ஆண்டு வெளியாகி விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

மீண்டும் அதே ஆண்டில் என்.டி.ராமாராவ் நடிப்பில் சம்சாரம் படத்தை இயக்கிய வெற்றிப் படமாக கொடுத்த எல்.வி.பிரசாத், அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான படங்களை இயக்கினார். தெலுங்கு மொழில் என்.டி .ராமராவ் கதாநாயகனாக நடிக்க ‘பெல்லி சேசி சூடு’ என்கிற பெயரிலும், தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க ‘கல்யாணம் பண்ணிப் பார்’ என்கிற பெயரிலும் வெளியான அந்தப் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இரு மொழிகளிலும் அந்தப் படத்தின் வெற்றி பிரசாத்தை இன்னும் உச்சத்துக்கு கொண்டு சென்றது. அடுத்து தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் உருவான ராணி படத்தை இயக்கினார். அடுத்து அந்தப் படத்தில் வீணை எஸ்.பாலசந்தர், பானுமதி முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அதன் பிறகு அஞ்சலிதேவி நடித்து தயாரித்த பரதேசி படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் நாகேஸ்வரராவ் நாயகனாக நடிக்க, சிவாஜி கணேசன் சிறிய வேடத்தில் நடித்தார். அந்தப் படம் தமிழில் பூங்கோதை என்கிற பெயரில் வெளியானது.

அடுத்து எல்.வி.பிரசாத் இயக்கிய தமிழ்ப் படம் மனோகரா. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நாயகனாக நடிக்க அந்தப் படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உருவான மிஸ்ஸியம்மா என்கிற படத்தை இயக்கினார். தமிழில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் ஜோடியாக நடிக்க, தெலுங்கு மொழியில் என்.டி.ராமராவும் சாவித்திரியும் ஜோடியாக நடித்தனர். இந்தப் படத்தின் வெற்றி அந்தப் படத்தை இந்தியிலும் பிரசாத்தை இயக்க வைத்தது. இந்தியில் ஜெமினிகணேசன், மீனாகுமாரி நடிப்பில் மிஸ் மேரி என்கிற பெயரில் இயக்கி வெளியிட்டார், பிரசாத்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியான வெற்றிகரமான இயக்குனராக புகழ் பெற்றிருந்த எல்.வி.பிரசாத், மிஸ் மேரி படத்தின் வெற்றியின் மூலம் இந்தி மொழியிலும் புகழ் பெற்ற இயக்குனராக உயர்ந்தார்.

சினிமாவில் கிடைத்த புகழையும் வருமானத்தையும் சினிமாவுக்கே திருப்பி கொடுக்க முடிவு செய்த எல்வி.பிரசாத், ரங்கநாததாஸ் என்பவரிடம் நிலத்தை வாங்கி சொந்தமாக ஒரு ஸ்டுடியோவைக் கட்ட ஆரம்பித்தார்.

தனது பெயரான லட்சுமி வரபிரசாத் என்கிற பெயரில் உள்ள லட்சுமி என்கிற பெயரில் ஒரு படநிறுவனத்தை தொடங்கி, தன்னிடம் உதவியாளராக இருந்த டி.யோகானந்த் இயக்கத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாக நடிக்க ‘இளவேல்பு’ என்ற படத்தையும் தயாரித்தார். தமிழில் ஸ்ரீதர் கதை வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த எதிரபாராதது படத்தின் கதையான அந்தப் படம் தெலுங்கு மொழியில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அடுத்து தனது இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் ‘மங்கையர் திலகம்’, பாக்யவதி என இரண்டு படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத், 1956ஆம் ஆண்டில் பிரசாத் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, “ஷாரதா” என்கிற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார்.   ராஜ்கபூர், மீனா குமாரி நடித்த அந்தப் படத்தின் கதை இலவேல்பு படத்தின் கதை.

அடுத்து தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எல்.வி.பிரசாத் இயக்கிய படத்தை நாகிரெட்டியின் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. தமிழில் ஜெமினி கணேசன், சாவித்திரி நடிக்க, ‘கடன் வாங்கிக் கல்யாணம்’ என்கிற பெயரிலும், தெலுங்கு மொழியில் என்.டி.ராமாராவ், சாவித்திரி நடிக்க “அப்பு சேசி பப்பு கூடு” என்கிற பெயரிலும் வெளியானது. இந்தப் படங்கள் மிஸ்ஸியம்மா பெற்ற வெற்றியை பெறவில்லை.

மனோகரா படத்தின் வசனகர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதியுடன் எல்.வி.பிரசாத் மீண்டும் இணைந்த படம், ‘தாயில்லா பிள்ளை’. கல்யாண்குமார்-எல்.விஜயலட்சுமி நடித்த இந்தப் படத்தை தனது பிரசாத் மூவீஸ் பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியிருந்தார் எல்வி.பிரசாத்.

தெலுங்கு மொழியில் வெற்றி பெற்ற “பார்யா பார்த்தலு” படத்தின் தமிழ், மற்றும் இந்தி மொழிக்கான உரிமையை பெற்ற எல்.வி.பிரசாத், தமிழில் சிவாஜி கணேசன் நடிப்பில் இருவர் உள்ளம் என்கிற பெயரில் தானே தயாரித்து இயக்கியவர், இந்தியில் ராஜேந்திரகுமார் நடிப்பில் டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் தயாரித்தார்.

அதன் பிறகு இந்தி, வங்காளம், ஒரியா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்கள் தயாரித்தார்.

“இருவர் உள்ளம்” படத்திற்குப் பிறகு 1977ஆம் ஆண்டு வரை சில இந்திப் படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத் அதற்குப் பிறகு முழு நேர தயாரிப்பா ளராக மாறினார். அப்படி அவர் தயாரித்த படங்களில் மிகவும் முக்கியமான ஒரு படம் சஞ்சீவ்குமாரும் மும்தாஜும் ஜோடியாக நடித்த “கிலோனா”. அந்தப் படம்தான் சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் ஜோடியாக நடிக்க தமிழிலே “எங்கிருந்தோ வந்தாள்” என்ற பெயரில் கே.பாலாஜியின் தயாரிப்பில் உருவானது.

“இருவர் உள்ளம்” வெளியாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரவிச்சந்திரன்-கே.ஆர்.விஜயா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க “இதயக் கமலம்”என்ற படத்தைத் தயாரித்த எல்.வி.பிரசாத் அதற்குப் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு “பிரியா விடை” என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். முத்துராமனும், பிரமீளாவும் ஜோடியாக நடித்த அந்தப் படமே பிரசாத் தயாரித்த கடைசி தமிழ் திரைப்படம்.

கே.பாலச்சந்தர் இயக்கத்திலே கமல்ஹாசன் நாயகனாக நடிக்க சரிதா கதாநாயகியாக அறிமுகமான மரோசரித்ரா படத்தைத் தயாரித்தார் அரங்கண்ணல். அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து மகிழ்ந்த பிரசாத், மரோ சரித்ரா படத்தை இந்தியிலே பாலச்சந்தரின் இயக்கத்திலேயே படமாக்க முடிவு செய்தார்.

மரோ சரித்ரா மூலம் தெலுங்கிலே கமல்ஹாசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பாலச்சந்தர் அதன் இந்திப் பதிப்பிலே கமல்ஹாசனை கதாநாயகனாக்க விரும்பினார். அவருடைய அந்த விருப்பத்தை எல்.வி.பிரசாத் ஏற்றுக்கொண்டதும் தெலுங்குப் பெண்ணைக் காதலிக்கும் தமிழ்ப் பையனின் கதையாக இருந்த மரோசரித்ராவின் கதை இந்திப் பெண்ணைக் காதலிக்கும் தமிழ் பையனின் கதையாக மாற்றி, ஏக் தூஜே கேலியே என்ற பெயரிலே தயரித்தார். அந்தப் படம் தான் கே.பாலச்சந்தரும்  கமல்ஹாசனும்  இந்தியிலே அறிமுகமான முதல் படம். அவர்கள் மட்டுமின்றி ரதி, மாதவி, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கும் அதுதான் முதல் படம்

1981ஆம் ஆண்டு ஜுன் மாதம்  5ஆம் தேதியன்று வெளியான “ஏக் தூஜே கேலியே” இந்திப் படம் பத்து கோடி ரூபாய் வசூலித்து இந்திப்பட உலகில் மிகப் பெரிய வசூல் சாதனையைப் புரிந்தது.  அந்தப் படத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்துத்தான் பிரசாத் 70 எம்.எம் என்ற பெயரிலே ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றைக் கட்டினார் எல்.வி.பிரசாத்

திரைப்படங்களில் நடிப்பதை 1953ஆம் ஆண்டு  வெளியான “பெம்புடு கொடுக்கு” என்ற படத்தோடு நிறுத்திவிட்ட எல்.வி.பிரசாத்தை இருபத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வைத்த பெருமை கமலஹாசனுக்கு சொந்தமானது.  கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தார், எல்.வி.பிரசாத்.

மக்கள் தங்களுடைய கண்களின் வழியாக சினிமாவைப் பார்த்ததால்தானே தன்னால்  சினிமாவின் மூலம் புகழையும் பணத்தையும் சம்பாதிக்க முடிந்தது என்று  எண்ணிய எல்.வி.பிரசாத் ஹைதராபாத்தில்  கண் மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்காக தனக்கு சொந்தமான நிலத்தை இலவசமாக கொடுத்தது மட்டுமின்றி அந்த மருத்துவமனை அமைய பெரும் தொகை ஒன்றையும் வழங்கினார்.

எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனை என்ற பெயரிலே இயங்கும் அந்த மருத்துவ மனை இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவ மனைகளில் ஒன்றாக உள்ளது.

எண்ணற்ற திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ள எல்.வி.பிரசாத்தின் கலைச் சேவையைப் பாராட்டி திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப் படுகின்ற உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை இந்திய அரசாங்கம்  1982ஆம் ஆண்டில் எல்.வி.பிரசாத்துக்கு வழங்கியது.

சிறிது காலம் உடல் நலக் கோளாறினால் அவதிப்பட்ட எல்.விபிரசாத் தனது 86 வது வயதில்  1994ஆம் ஆண்டு ஜுன் மாதம் 22ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் பம்பாய்க்கு ரயில் ஏறிச் சென்று அதற்குப் பிறகு எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு பிரசாத் என்ற பெயரிலே திரைத்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவி அந்தப்  பெயரை  இந்தியா முழுவதும் அறியச் செய்த எல்.வி.பிரசாத்,  இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று சினிமாத்துறையில் பல பிரிவுகளிலும் சாதனை புரிந்திருந்தாலும் சினிமாவில் அவருக்கு மிகவும்  பிடித்தமாக இருந்தது நடிப்புதான்.

தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்தவர்கள் பலர். சகாப்தமானவர்கள் சிலர். அந்த சிலரில் எல்வி பிரசாத் ஒருவர்.

தொகுப்பு : ஜி.பாலன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக