வெள்ளி, 13 மே, 2022

நடிகை சௌந்தர்யா வாழ்க்கை வரலாறு

நடிகை சௌந்தர்யா கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகல் என்கிற கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தை பெயர் கே.எஸ் சத்யநாராணா. தயார் பெயர் மஞ்சுளா. கூட பிறந்தவர் அமர்நாத் என்கிற அண்ணன்.

சௌந்தர்யாவுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சௌம்யா. ஆனால், அவரை முன்னா என்றே செல்ல பெயர் வைத்து அழைத்தனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சௌந்தர்யா, பழகுவதில் கூட பார்த்து பார்த்து பழகுவாராம். தோழிகள் எப்படி அவருக்கு குறைவோ, அதே போல தேர்வு மதிப்பெண்ணும் குறைவாக இருக்குமாம். அதற்காக அண்ணனிடம் அடி வாங்குவாராம்.

ஆனால், அவருக்கு டாக்டருக்கு படிக்கக் வேண்டும் என்று ஆசை. காரணம், சிறுவயதில் மருத்துவமனைக்கு சென்ற போது டாக்டரை கண்டதும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டதாம். டாக்டரை பார்க்க வித்தியாசமாக இருக்கிறார். காயத்தை குணமாக்குகிறார். ஜுரத்தை நிறுத்துகிறார். உயிரை காப்பாற்றுகிறார். அவரை கையெடுத்து கும்பிடுகிறார்கள். அவர் மாதிரி வரவேண்டும் என்று அவருக்குள் ஆசை.

தோழிகளுடன் சேர்ந்து விளையாடும் போது கூட அப்பாவின் வெள்ளை சட்டையை அணிந்து கொண்டு டாக்டராக ஊசி போடுவது போல விளையாடுவாராம்.

சௌந்தர்யாவின் அப்பா கே.எஸ்.சத்யநாராயணா, கன்னடத் திரையுலகில் எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். இதனால் சினிமா பட விழாக்களுக்கு அப்பாவுடன் செல்லும் வாய்ப்பு சௌந்தர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. 

ஒருமுறை அப்பாவின் நண்பர் அம்சலேகா இசையமைத்த கந்தர்வா படத்தின் பாடல்பதிவு நடந்த போது, அந்த ரெக்காடிங் தியேட்டருக்கு அப்பாவுடன் சென்றிருக்கிறார் சௌந்தர்யா. அங்கு சௌந்தர்யாவை பார்த்த அம்சலேகா, இந்தப் படத்தில் நடிக்கிறாயா என்று சௌந்தர்யாவிடம் கேட்டிருக்கிறார். அப்போது. எனக்கு நடிக்க தெரியாது என்று சொந்தர்யா பதில் சொல்லி இருக்கிறார்.

நடிக்கிறது எப்படின்னு நாங்க சொல்லிக் கொடுக்கிறோம். டிரைப்பண்ணி பார்க்கலாம். நம்ம படம் தான். பத்து நாள் நடி.... ஸ்கூல் லீவுதானே என்று கூறி சௌந்தர்யாவையும், அவரது தந்தையையும் சம்மதிக்க வைத்திருக்கிறார், அம்சலேகா.

அம்சலேகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்த ‘கந்தர்வா’ படத்தை ராம்நாத் ருக்வேதி, ராஜசேகர் இரண்டு பேரும் இயக்க, நாயகனாக சசிகுமார், நாயகிகளாக பிருந்தா, ஸ்ரீலலிதா, ஆஷாலதா, சத்தியபாமா ஆகியோர் நடிக்க, ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார் சௌந்தர்யா.

அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அம்சலேகா இசையமைத்த இன்னொரு படமான நன்னா தாங்கி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் சௌந்தர்யாவுக்கு கிடைத்தது. அதில் தேவராஜ், அஞ்சனாவுடன் சேர்ந்து நடித்தார், சௌந்தர்யா.

இந்த இரண்டு படங்கள் நடித்து முடித்ததும் கல்லூரிக்கு சென்றார், சௌந்தர்யா. ஆனால், நடிப்பு வாய்ப்பு அவரை படிக்கவிடவில்லை. தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் சித்தலிங்கையா இயக்கிய ‘பா நன்னா ப்ரீத்திசு’, விஷ்ணுவர்த்தன், ரூபிணி நடிப்பில் பார்கவா இயக்கிய ‘ராஜாதிராஜா’ போன்ற கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படங்களில் நடிக்க சில சமயம் கல்லூரிக்கே வந்து அவரை படப்பிடிப்புக்கு அழைத்து செல்லும் சம்பவங்களும் நடந்ததுண்டு.

இந்த நான்கு படங்களும் 1992 ஆம் ஆண்டு வெளியாகி சௌந்தர்யாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்ததுடன், தோற்றத்தில் நடிகை சாவித்திரி போல இருக்கிறார், என்று பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.  

திரிபுரனேனி ஸ்ரீபிரசாத் என்ற வரபிரசாத் இயக்கிய ‘ரைத்து பாரதம்’ படத்தின் மூலம் கிருஷ்ணாவுடன் தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க சென்றவர், தொடர்ந்து தெலுங்கு மொழியில் பத்து படங்களில் ஒப்பந்தமானதுடன், தமிழில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் ‘பொன்னுமணி’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இதனால் நடிப்புக்காக ஒன்பது மாதத்துடன் தனது கல்லூரி முதலாமாண்டு படிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகிவிட்டது.

தமிழில், முதல் படமான ‘பொன்னுமணி’ படத்தில் கார்த்திக் மற்றும் சிவகுமாருடன் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற சௌந்தர்யா, தெலுங்கு மொழியில் எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி இயக்கிய ‘ராஜேந்திருடு கஜேந்திருடு’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

பிறகு நாகார்ஜுனா மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்த ‘ஹலோ பிரதர்’ படத்தின் மூலம் உயர்ந்த சௌந்தர்யா, கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அம்மோரு’ படத்தில் சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடிக்க, அதில் அம்மோரு தேவியின் பக்தரான பவானி வேடத்தில் நடித்தார். ‘அம்மோரு’, ‘பவித்ரா பந்தம்’ படங்களின் வெற்றி அவரை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக நிலைநிறுத்தியது.

தொடர்ந்து ‘பெல்லி சேசுகுண்டம்’, ‘அம்மா டொங்கா’, ‘மா ஆயனா பங்காரம்’, ‘ஒசி நா மரதாலா’ மற்றும் ‘ஆரோ பிராணம்’ போன்ற படங்களின் வெற்றி அவரது மேலும் பேச வைத்தது. .

கார்த்திக்குடன் தமிழில் ‘பொன்னுமணி’ படத்தில் இணைந்தவர், மீண்டும் கார்த்திக்குடன் ‘முத்துக்காளை’ படத்தில் நடித்தார். அதன் பிறகு ரகுமான், சிவக்குமாருடன் இணைந்து ‘டியர் சன் மருது’ படத்தில் நடித்தவர், சத்யராஜுடன் ‘சேனாதிபதி’ படத்தில் நடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’ படத்தில் முதல் முறையாக இணைந்த சௌந்தர்யா, மீண்டும் ரஜினியுடன் ‘படையப்பா’, கமலுடன் ‘காதலா காதலா’, அர்ஜுனுடன் ‘மன்னவரு சின்னவரு’, பார்த்திபனுடன் ‘இவன்’, விஜயகாந்துடன் ‘தவசி’, ‘சொக்க தங்கம்’ என தமிழிலும் தொடர்ந்தார்.  

தெலுங்கு மொழியில் குணசேகரின் இயக்கத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த சூடாலனி வூண்டியின் வெற்றி அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ‘பெல்லி பீடலு’, ‘ஸ்ரீ ராமுலய்யா’, ‘நின்னே பிரேமிஸ்தா’ ‘டோனி சாகலி’ ஆகிய படங்களின் வணிக ரீதியிலான வெற்றி கனன்டம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அவரது புகழை மேலும் உயர்த்தின.

கிருஷ்ண வம்சி இயக்கிய ‘அந்தப்புரம்’, சௌந்தர்யாவின் தொழில் வாழ்க்கையின் மிகச்சிறந்த நடிப்பில் ஒன்றாக ஒளிவீசியது. வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்த ‘ராஜா’ மற்றொரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ‘ஆசாத்’ மற்றும் ‘பிரேமகு வேலையா’, ‘பிரேமகு ஸ்வாகதம்’ மற்றும் ‘அருந்ததி’ ஆகியவை அவரது நிலையை மேலும் உறுதிப்படுத்தின. அதே ஆண்டில், அவர் அமிதாப் பச்சனுடன் ‘சூரியவன்ஷம்’ என்ற ஹிந்தித் திரைப்படத்திலும் நடித்தார்.

2000 ஆம் ஆண்டில், அவர் ‘அன்னய்யா’, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘ஜெயம் மனதேரா’ மற்றும் ‘தேவி புத்ருடு’, வெங்கடேஷுக்கு ஜோடியாக ‘நின்னே பிரேமிஸ்தா’, ‘எதிரிலேனி மனிஷி மற்றும் ஸ்ரீ மஞ்சுநாதா படங்கள் அவரது நடிப்புத் திறனை இன்னும் வெளிப்படுத்தின.

தாசரி நாராயண ராவ், கே. ராகவேந்திர ராவ், சிங்கீதம் சீனிவாச ராவ், ஏ.கோதண்டராமி ரெட்டி, பிரியதர்ஷன், கிரீஷ் காசரவல்லி, எஸ்.வி.கிருஷ்ணாரெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கிருஷ்ணவம்சி, கோடி ராமகிருஷ்ணா, ஈ.வி.வி.சத்தியநாராயணா, முத்தியாலா சுப்பையா, குணசேகர், பி.வாசு, முப்பலனேனி சிவா, சுந்தர்.சி. போன்ற பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் சௌந்தர்யா நடித்திருக்கிறார்.

கிருஷ்ணாவுடன் ஐந்து படங்கள், சிரஞ்சீவியுடன் நான்கு படங்கள், நாகார்ஜுனா ஐந்து படங்கள், வெங்கடேஷுடன் ஒன்பது படங்கள், ஜெகபதி பாபுவுடன் ஏழு படங்கள், மோகன் பாபுவுடன் ஐந்து படங்கள், ராஜசேகருடன் ஐந்து படங்கள், சுமனுடன் மூன்று படங்கள், ஹரிகிருஷ்ணாவுடன் இரண்டு படங்கள், ஸ்ரீகாந்த்துடன் ஐந்து படங்கள், சாய்குமாருடன் ஐந்து படங்கள், ராஜேந்திர பிரசாத்துடன் நான்கு படங்கள், நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம்,  மோகன்லாலுடன் ஒரு படம், வினோத் குமார், நரேஷ், சுரேஷ், ஹரிஷ், அப்பாஸ், வினீத், வட்டே நவீன், ரமேஷ் பாபு, அவினாஷ், பானு சந்தர், ஜே.டி.சக்ரவர்த்தி¸ விசுனுவர்தன், ஆனந்த் நாக், ரவிச்சந்திரன், சஷிகுமார், ரமேஷ் அரவிந்த், அவினாஷ் என பலருடன் நடித்திருக்கிறார், சௌந்தர்யா.

போன்ற பல ஹீரோக்களுடன் ஒரு படம் என தென்னிந்திய மொழிகளில் 12 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், சௌந்தர்யா.

மலையாளத்தில் நடித்த ‘ஸ்வேதா நாகு’ படம் சௌந்தர்யாவின் 100 வது படமாகும். தமிழில் அவர் கடைசியாக அப்பாஸுடன் ‘மதுமதி’ என்கிற படத்தில் நடித்தார். தெலுங்கு மொழியில் பாலகிருஷ்ணாவின் ஒரு ரீமேக் படத்தில் திரௌபதியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரது மரணத்தைத் தொடர்ந்து அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது.

நடிகை சௌந்தர்யாவின் அப்பா கே.எஸ்.சத்யநாராயணா, 1995 ஆம் ஆண்டு காலமானார். இதனால், அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை சௌந்தர்யாவின் அண்ணன் அமர்நாத் கவனித்துக் கொண்டார். அப்பாவின் சினிமா எண்ணங்களை நாம் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று அண்ணனை தயாரிப்பாளராகவும், தன்னை நடிகையாகவும் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டார், சௌந்தர்யா.

2002 ஆம் ஆண்டு ‘ஸ்வீபா’ என்கிற சொந்தப் படத்தை கன்னடத்தில் தயாரித்தார்கள். நா டிசோசாவின் த்வீபாவை அடிப்படையாகக் கொண்ட அந்த கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கினார் கிரீஷ் காசரவள்ளி. சௌந்தர்யாவுடன் அவினாஷ், எம்.வி.வாசுதேவ ராவ், ஹரிஷ் ராஜ் உட்பட பலர் நடித்துள்ள அந்தப் படத்திற்கு எச்.எம்.ராமச்சந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி இசையமைத்திருந்தார்.

அந்தப் படம் 2002 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், 49வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது  தயாரிப்பாளருக்கான சௌந்தர்யாவுக்கு கிடைத்தது. மேலும் அந்தப் படத்திற்கு  ஒளிப்பதிவு செய்த - எச்.எம். ராமச்சந்திராவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

கர்நாடக மாநில திரைப்பட விருது விழாவில் சிறந்த படமாவும், சிறந்த நடிகையாகவும் இரு விருதுகளை அந்தப் படத்திற்காக சௌந்தர்யா பெற்றார். இயக்குனர்  கிரிஷ் காசரவள்ளி சிறந்த இயக்குனராகவும், எச்.எம். ராமச்சந்திரா சிறந்த ஒளிப்பதிவாளராகவும் கர்நாடக அரசால் அவரது படத்திற்காக கௌரவுக்கப்பட்டார்கள்.  

நியூயார்க்கில் நடந்த மனித உரிமைகள் கண்காணிப்பு சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவின் 33வது சர்வதேச திரைப்பட விழா, ஜப்பானில் நடந்த ஃபுகுவோகா திரைப்பட விழா, டர்பன் சர்வதேச திரைப்பட விழா, ரோட்டர்டாமின் சர்வதேச திரைப்பட விழா, சினிமா விண்டேஜ் திட்டம், ஐசோலா சினிமா, கினோஓடோக், மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா என பல திரைப்பட விழாக்களில் சௌந்தர்யா நடித்து தயாரித்த ‘ஸ்வீபா’ திரைப்படம் திரையிடப்பட்டது.

ஏற்கனவே ‘பவித்ரா பந்தம்’, ‘அந்தப்புரம்’ படங்களுக்காக ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான நந்தி விருதுகள் பெற்ற சௌந்தர்யா, கர்நாடக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ‘டோனி சாகலி’, ‘த்வீபா’ படங்களுக்காவும் பெற்றிருக்கிறார். சிறந்த நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுக்காக  ஒன்பது முறை தேர்வான சௌந்தர்யா, மக்களின் பாராட்டும், அவர்கள் தங்கள் வீட்டு பெண்ணாக கொண்டாடுவதையுமே பெருமையாக கருதினார்.

படங்களில் நடிக்கும் போது ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் அனுபவங்கள் சௌந்தர்யாவின் திரை அறிவை மேம்படுத்தின. தனது தந்தையைப் போல ஒரு கதாஆசிரியராக தன்னை உருவாக்கிக் கொள்ளவும், வாய்ப்பு கிடைக்கும் போது படம் இயக்கவும் எண்ணி இருந்தார், சௌந்தர்யா.

தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் தங்கி விட்டதால் கர்நாடகாவுக்கு எப்போதாவது படப்பிடிப்புக்கு சென்று வருகிற நிலையில்தான் இருந்தார், சௌந்தர்யா. ஒருமுறை சொந்த ஊருக்கு சென்ற போது அம்மா வழி உறவினர் ஜி.எஸ்.ரகுவை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய சிறு வயதில் அவரை பார்த்திருக்கிறார். இப்போது எஞ்சினியர் படித்து பெங்களூரில் சொந்த கம்பெனி வைத்திருக்கிறார் என்பதை அறிந்தார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று அப்போது கூட அவர் நினைக்கவில்லை.

ஆனால், அவரது அம்மா மஞ்சுளாவின் மனதில் இருந்தது. ஒருமுறை பேசும் போது அம்மாவே இது குறித்து இருவரிடமும் பேசினார். அம்மாவின் ஆசைப்படி 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ரகுவை திருமணம் செய்து கொண்டார், சௌந்தர்யா.  

குடும்பம், கணவன் என்று தனக்கான வாழ்க்கையில் பயணித்தாலும், தன்னை நேசிக்கும் மக்களுக்காக நாம் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார், சௌந்தர்யா. தனது தந்தை கே.எஸ்.சத்யநாராயணா பெயரில் பெங்களூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மூன்று பள்ளிகளை திறந்தார்.

அவருடைய அப்பா கே.எஸ்.சத்யநாராயணா ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக இருந்தவர். நாட்டின் கலாசாரம், பண்பாடு என்று எல்லாவற்றிலும் அக்கறை உள்ளவர். அப்படியேத்தான் சௌந்த்ரயாவின் மனதிலும் எண்ணங்களை வளர்த்தார்.

அவரது மறைவுக்கு பிறகு தன்னை நேசிக்கும் மக்களுக்கு நாம் இன்னும் நிறைய பாடுபட வேண்டும். கர்நாடகாவில் பிறந்தாலும் ஆந்திராவில் கொண்டாடப்படுகிறோம். ஆந்திரா மக்கள் பத்து ஆண்டுகளாக தன்னை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாட்ட கடனை நாம் தீர்க்கவே முடியாது. அதானால், நமக்கு கிடைத்த இந்த புகழை வைத்துக்கொண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்த எதையாவது திரும்ப செய்ய வேண்டும் என்று சௌந்தர்யா நினைத்தார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாத்தையும் நம்மால் செயய முடியாது என்றாலும், தன்னால் முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட சௌந்தர்யா, அரசு உதவி இருந்தால் தான் அதை செய்ய முடியும். அதனால் ஒரு அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்று நினைத்தார். அதனால், பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பதற்காக 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, சௌந்தர்யா தனது சகோதரர் அமர்நாத்துடன் பெங்களூரில் இருந்து கரீம்நகருக்குச் அக்னி ஏரோஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான செஸ்னா 180 என்ற விமானம் மூலம் காலை 11:05 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

மேற்கு நோக்கித் திரும்பிய விமானம், பின்னர் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் காந்தி கிருஷி விக்யான் கேந்திரா வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிழம்புகளாக வெடித்து சிதறுவதை கண்ட பல்கலைக்கழகத்தின் சோதனைத் துறைகளில் பணிபுரியும் கணபதி என்பவர் விரைந்து ஒடி இருக்கிறார்.

அவரால் காப்பாற்ற முடியவில்லை. நம் நெஞ்சை நொறுங்க வைக்கும் துயர செய்தியை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.  

நடிகை சௌந்தர்யா மறைந்த போது அவருக்கு வயது வெறும் 31 தான். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் நினைவாக அவரது தயார் மஞ்சுளா, பெங்களூரில் "அமர்சௌந்தர்யா வித்யாலயா" என்ற பெயரில் பள்ளிகள், மற்றும் அனாதை இல்லங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக