புதன், 2 மார்ச், 2022

நடிகை எம்.என்.ராஜம் வாழ்க்கை வரலாறு

வில்லி, கதாநாயகி, நகைச்சுவை வேடம் என எந்த வேடம் கிடைத்தாலும் அந்த வேடத்தில் சிறப்பாக நடித்து அந்த வேடத்திற்கு பெருமை சேர்த்தவர் என்கிற பெயரை பெற்றவர் நடிகை எம்.என்.ராஜம். மதுரையில் 1940 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர், எம்.என்.ராஜம். அவருடைய தந்தை நரசிம்மன் ஆங்கிலேயர் ஆட்சியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர். திடீர் என உடல்நிலை சரியில்லாமல் போய், அவருடைய கண் ஊனமாகிவிட்டது. இதனால் அவருக்கு வேலை போனது.

வருமானம் இல்லாமல் எப்படி குடும்பத்தையும் மூன்று குழந்தைகளையும் காப்பற்ற முடியும். விஷயத்தை கேள்விப்பட்ட கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் அவருக்கு நம்பிக்கை தந்தார்கள். எங்களுடைய நாடகக் குழுவில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அழைத்துக் கொண்டார்கள்.

சப் இன்ஸ்பெக்டராக நெஞ்சை நிமிர்த்தி நடந்த நரசிம்மன், மேடையில் பபூனாக கூனி குறுகி நடித்தார். காரணம் குடும்பத்தின் சூழ்நிலை. காலம் மதுரையை தொடர்ந்து திருச்சி, சென்னை என்று அழைத்து வந்தது.

சென்னையில் எம்.கே.ராதாவை சந்தித்த போது அவர் மூலமாக பெண்ணை நடிக்க வைக்கலாமே என்று அவர் கடிதம் எழுதி கொடுக்க, அவருடைய சிபாரிசு கடிதம் மூலமாக மதுரை மங்கள கான சபாவில் எம்.என்.ராஜம் ஏழு வயதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடத்திய கம்பெனி அது. அங்கு அவரைப் போலவே நிறைய பெண்கள் இருந்துள்ளனர். ராமாயணம் நாடகத்தில் குரங்குக் குட்டி, கிருஷண லீலா நாடகத்தில் கிருஷ்ணனுக்கு தோழன் என சின்ன சின்ன வேஷங்கள் எம்.என்.ராஜத்துக்கு நடிக்க கிடைத்தது. அதே நேரத்தில் பாட்டு பாட, நடனம் ஆட, வசனம் பேச என்று நாடகத்திற்கு தேவையான எல்லா பயிற்சிகளும் அங்கு அவருக்கு கிடைத்தன. அது ஒரு குருகுலம் மாதிரி. காலை ஐந்து மணிக்கு எழுப்பி விடுவார்கள். பாடம் தொடர்ந்து நடக்கும். ஒழுங்காக நடனம் வரவில்லை என்றால் அடிதான்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக்குழுவை தொடர்ந்து டி.கே.சண்முகம் நாடகக் குழுவிலும் நடித்து வந்தார், எம்.என்.ராஜம். அதில் கல்கி எழுதிய ‘கள்வனின் காதலி’ நாடகத்தில் கதாநாயகனின் தங்கை அபிராமியாக ஆடி பாடி நடித்திருக்கிறார். ஒரு முறை அந்த நாடகத்தை பார்க்க வந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.என்.ராஜத்தின் நடிப்பையும், பாட்டின் போது உள்ள குரல் இனிமையையும் பாராட்டி பேசி இருக்கிறார். இது எம்.என்.ராஜத்துக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

எம்.என்.ராஜத்தின் நடிப்பும், குரலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் பிடிக்கும். அவருடைய நாடகத்தில் மட்டுமல்லாது அவர் தயாரிப்பில் அறிஞர் அண்ணா எழுதிய ‘நல்லதம்பி’ திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பையும் வழங்கினார். அந்தப் படத்தில் டி.ஏ.மதுரத்துடன் இணைந்து “எட்டு எழு ஆறு” என்கிற பாடலை சி.ஆர்.சுப்பராமன் இசையில் பாடி எம்.என்.ராஜத்துடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அதன் பிறகு நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவிலும் தொடர்ந்து நடித்தார். அவர் நடித்த இரண்டாவது படம் ‘மங்கையர்கரசி’. பி.யூ.சின்னபா  நாயகனாக நடித்த அந்தப் படத்தில் பரலோக கன்னியாக நடித்தார். அடுத்து எம்.ஜி.ஆர். நடித்த ‘என் தங்கை’ படத்தில் அழகியாக சிறிய வேடம் ஒன்றில் நடித்தவர், சிவாஜி நடித்த ‘பராசக்தி’ படத்தில் பண்டரிபாய் நடித்த வேடத்தில் நடிக்க அழைத்து, கலைஞர் மு.கருணாநிதி எழுதிய வசனங்களை பேச வைத்து பார்த்தார்கள். எம்.என்.ராஜம் பேசும் வசனங்கள் ஏற்ற இறக்கத்துடன் அருமையாக இருந்தது. ஆனால், சிறுமியாக இருக்கிறாரே என்று அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதன் பிறகு சிவாஜியுடன் ‘மனிதனும் மிருகமும்’ படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்த எம்.என்.ராஜம், டி.ஆர்.ரகுநாத் இயக்கத்தில் டி.ஆர்.ராமசந்திரன் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் நர்சாக நடித்தார். டி.கே.சண்முகம் நடித்த ‘பெண்மனம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவரை, ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் நாயகியாக நடிக்க அழைத்த போது, கொஞ்சம் அதிர்ந்தே தான் போனாராம்.

எம்.ஆர்.ராதா நடித்து புகழ்பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் திரைப்படமாக எடுக்க முடிவான போது, அதில் காந்தாவாக நடிக்க பிரபலமாக இருந்த பல நடிகைகளை கேட்டனர். அந்த வேடம் வில்லி வேடம், விலை மாது வேடம், அதுவும் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்க பயம் என்று பலர் ஒதுங்கினர்.

இந்த தகவலை என்.எஸ்.கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்த இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இருவரிடமும், பேசாமல் புதுமுகத்தை நடிக்க வையுங்கள். அல்லது நம்ம ராஜத்தை நடிக்க வையுங்கள் என்று என்.எஸ்.கிருஷ்ணன் ஆலோசனை கூறி இருக்கிறார்.

ஏற்கனவே ‘பராசக்தி’ படத்திற்கு அழைத்து பார்த்து வசனம் பேச வைத்து பார்த்த போது “உருவம் தெரியவில்லை. சத்தம் மட்டும் தான் கேட்கிறது. ஒல்லியாக இருக்கிறாரே” என்று ஒதுக்கிய எம்.என்.ராஜம் நினைவுக்கு வர, என்.எஸ்.கிருஷ்ணன் ஆலோசனை சரியாகத்தான் இருக்கும் என்று எம்.என்.ராஜத்தை அழைத்து பேசினார்கள்.

அப்போது எம்.என்.ராஜத்துக்கு பதினான்கு வயது. முதலில் நடிக்கப் போகும் பெரிய வாய்ப்பு என்பதால் உடனே ஒப்புக் கொண்டார். முதல் நாள் சந்திரபாபுவுடன் “ஆளை ஆளைப் பார்க்கிறார்” என்கிற பாடலுக்கு வாயசைத்து ஆடிப்பாட வேண்டும். இருவருக்கும் தண்டபாணி பிள்ளை நடனம் ஆட சொல்லிக் கொடுத்துள்ளார்.

அந்தப் படத்தில் நடிக்கும் போது எம்.ஆர்.ராதா “நீ இப்படி பேசு, அப்படி நடி” என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். “நீ சரியாக நடிக்கவில்லை என்றால் நான் மட்டும் நடித்து பிரயோசனம் இல்லை” என்று ஒவ்வொரு காட்சியிலும் நடிக்க உதவி செய்து உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

எம்.ஆர்.ராதாவை படிக்கட்டில் எட்டி உதைக்கும் காட்சியில் ஒரு உயர்ந்த மனிதர், சீனியர் நடிகர். அவரை எட்டி உதைப்பதா என்று அந்த காட்சியில் நடிக்க மறுத்த ராஜத்திடம், நீங்கள் அப்படி நடிக்கவில்லை என்றால் அவரும் நடிக்க மாட்டேன் என்பார். பிறகு உனது காட்சிகளை நீக்கிவிட்டு வேறு நடிகையை வைத்து மீண்டும் எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார், இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு. சரி என்று அரை மனதுடன் சம்மதித்த ராஜம், டைரக்டர் டேக் என்றதும் ஓங்கி எட்டி உதைத்து... அவரே விழுந்துவிட்டார். ஆனால், விழ வேண்டிய எம்.ஆர்.ராதா அப்படியே நிற்கிறார்.

“என்னாம்மா இது. நீ உதைத்து நான் விழா வேண்டாமா? நீ போய் விழறே” என்று கேள்வி எழுப்பிய எம்.ஆர்.ராதா, பிறகு “நீ ஓங்கி உதைக்கிற உதையில் நான் விழனும். அடிபடனும். அப்பத்தான் ரசிகர்கள் இந்த காட்சியை ஏத்துக்குவாங்க” என்று கூறியதும், “உங்களை உதைக்க எனக்கு பயமா இருக்கு அண்ணே... கை கால் நடுங்குது அண்ணே” என்று எம்.என்.ராஜம் பதில் கூறி இருக்கிறார்.

“இங்கே நான் மோகனசுந்தரம். நீ காந்தா. அவ்வளவுதான். நீ உதைக்கிற... நான் விழுறேன்... அந்த கேரக்டர் ரெண்டுக்கும் நாம உயிர் கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு எம்.ஆர்.ராதா ஷாட்டுக்கு ரெடியாகிவிட்டார்.

இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு டேக் என்றதும், எம்.என்.ராஜம், ஓங்கி உதைக்க, மாடி படியில் விழுந்து உருண்டு புரண்டு கீழே விழுந்து தலையில் அடிபட்டு வசனம் பேசி நடித்திருக்கிறார், எம்.ஆர்.ராதா.

எம்.ஆர்.ராதா விழுந்ததும் தலையில் ரத்தம் வருவதைக் கண்டு நடுங்கி போய்விட்டாராம் எம்.என்.ராஜம். டேக் ஒகே என்றதும், அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார், எம்.என்.ராஜம். “ஐயோ அப்படி சொல்லாதே... நீ நல்ல ஆக்ட் பண்ணினாய்... நீ அப்படி பண்ணா தான் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்...  நீ நல்லா இருப்ப...” என்று வாழ்த்தி இருக்கிறார், எம்.ஆர்.ராதா.

‘ரத்தக்கண்ணீர்’ படத்திற்கு பிறகு மாடர்ன் தியேட்டர் சுந்தரம் தயாரிக்கும் மூன்று படத்திற்கு ஒப்பந்தமானார் எம்.என்.ராஜம். அதில் முதல் படம் கே.ராம்நாத் இயக்கத்தில் பத்மினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த ‘கதாநாயகி’ படம். இரண்டாவது சாவித்திரி, ஜெமினி கணேசன், தங்கவேலு நடித்த ‘மகேஸ்வரி’. ‘மகேஸ்வரி’ படத்தை டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, மூன்றாவது படத்தில் நாயகி வேடம் கிடைக்கும் என்று எதிர்ப் பார்த்தார், எம்.என்.ராஜம்.

ஆனால், கே.சாரங்கபாணி, எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க நடிகை கிடைக்கவில்லை என்று அந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க சொல்லிவிட்டார், தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம்.

இதை கேள்விப்பட்டதும், முதலில் மேனேஜர் சுலைமானிடம் நகைச்சுவை வேடத்தில் நடிக்க மறுத்த எம்.என்.ராஜம், பிறகு டி.ஆர்.சுந்தரம் அழைத்து பேசி “அடுத்து உனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருகிறேன். இந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடி” என்று கூறியாதும் சம்மதித்திருக்கிறார்.  “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் புல்புல் என்கிற நகைச்சுவை வேடத்தில் முதல் முறையாக நடித்தார், எம்.என்.ராஜம்.

‘மங்கையர் திலகம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். “பெண்ணின் பெருமை” திரைப்படத்திலும் கிட்டத்தட்ட சிவாஜிக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான்.

‘ரங்கோன் ராதா’ படத்தில் கேட்கவே வேண்டாம். பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ‘பாக்கியவதி’ படத்திலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் சிவாஜியை மயக்கும் மோகினி பாத்திரம். அத்தனை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் எம்.என்.ராஜம். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்ணாலே வெட்டாதே” பாடலின் போது, “நடன இயக்குநர் இல்லையா” என்று சிவாஜி கேட்க, “என்னுடைய நாயகனும் நாயகியும் நடனம் ஆடுபவர்கள் கிடையாது. அவர்கள் எப்படி ஆடி பாட வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்” என்று இயக்குநர் எல்.வி.பிரசாத்,  நடித்துக் காட்டி அதைப் போலவே சிவாஜி, ராஜம் நடனம் ஆடி நடிக்க படமாக்கியிருக்கிறார்.

‘மக்களை பெற்ற மகராசி’ படத்தில் சிவாஜிக்கு தங்கையாக கல்லூரியில் படிக்கும் நம்பியாரை காதலிக்கும் வேடம். இருவரும் தனி தனியாக “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா” என்று வயல்வெளியில் பாடிக் கொண்டே கடைசியில் ஒன்று சேர்வார்கள். அவர்களைப் பார்க்கும் அண்ணன் சிவாஜி, தங்கையை பளார் என்று அறைவார். பரணி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட அந்த காட்சின் போது உண்மையிலேயே அறைந்துவிட்டார், நடிகர் திலகம் சிவாஜி.

ராஜமும் உண்மையிலேயே அழுதுவிட்டாராம். அதன் பிறகு சிவாஜி பேசும் வசனங்கள் அவர் காதில் விழவே இல்லையாம். கவுண்டமணி சொல்வது போல “காதில் சொய்ங்” என்கிற சப்தம் மட்டுமே கேட்டதாம். அவரிடம் ‘மக்களைப் பெற்ற மகராசி’ என்று சொன்னால், சிவாஜி அறைந்ததும், காது கேட்காமல் அப்படி ஒரு சத்தம் வந்து மட்டுமே நினைவுக்கு வருமாம்.

‘பதிபக்தி’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதுவும் “கொக்கரக் கொக்கரக்கோ சேவலே” பாடலில் சிவாஜியுடன், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். இந்தப் பாடல் காட்சிகளை இரண்டு நாட்கள் செயற்கை மழையில் நனையவைத்து எடுத்தார்களாம். இரண்டு நாட்களும் காலை முதல் மாலை வரை மழையில் நின்று நடித்ததால் சிவாஜி, ராஜம் இருவருக்குமே ஜுரம் வந்துவிட்டதாம்.

சிவாஜியுடன் நடித்த ‘தெய்வபிறவி’ படத்தில் “காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு” பாடலில் நடித்திருந்தார் ராஜம். அந்தப் பாடலை முதலில் குளிப்பது போல் எடுக்க வேண்டும்மென்று நினைத்தார்கள். பிறகு குளித்துவிட்டு வந்த பிறகு பாடுவது போல எடுத்தார்கள். படம் வெளியான போது ராஜத்தை பார்ப்பவர்கள், காளை  வயசு வருகிறது என்று அவரை கிண்டல் செய்தார்களாம்.

‘பாவை விளக்கு’ திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் சிவாஜியின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான “காவியமா… நெஞ்சின் ஓவியமா” பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் சிவாஜியும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை மறக்கவெ முடியாது. அந்தப் படப்பிடிப்புக்காக அவர்கள் ஆக்ரா, குதுப்மினார் சென்ற அனுபவங்களை சொன்னால் ஒரு நாள் போதாது. அவ்வளவு சுவராஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன.  

‘பாசமலர்’ படத்திலும் ராஜம் அவர்கள் சிவாஜிக்கு ஜோடியாக அருமையான பாத்திரத்தில் நடித்து பரிதாபப்பட வைப்பார். இந்தப் படத்தில் இடம்பெற்ற “பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்” பாடலை எடுக்கும் முன் எதற்காக இந்த பாடல் எடுக்கிறீர்கள் என்று இயக்குநர் பீம்சிங்கிடம் ராஜம் கேட்டிருக்கிறார்.

“உன்னை பெண் பார்க்க வருகிறார்கள். அப்போது நீ பாடி ஆட வேண்டும்” என்று இயக்குநர் பீம்சிங் கூறியதும், “நான் பாடி நடிக்க தயாராக இருக்கிறேன். என்னுடைய வேடம் டாக்டர் என்று சொல்கிறீர்கள். ஒரு டாக்டர்... பெண் பார்க்க வரும் போது ஆடி பாடுகிற மாதிரி அமைந்தால் சரியாக இருக்குமா” என்று தனது கேள்வியை இயக்குநர் பீம்சிங்கிடம் கேட்டிருக்கிறார்.

அமைதியாக கேட்ட இயக்குநர் பீம்சிங், ஈகோ எதுவும் பார்க்காமல் ராஜம் கேட்பதிலும் நியாம் இருக்கிறது என்று சிந்தித்தவர், உடனே “ராஜத்துக்கு ஒரு குளோஸ் வைங்கப்பா. அவர் திங் பண்ணும் போது அப்படியே சாங் கிரியேட் ஆகுற மாதிரி வச்சுக்கலாம்” என்று கூறி படமாக்கி இருக்கிறார். 

நிறையப் படங்களில் சிவாஜியுடன் ராஜம் நடித்திருக்கிறார். ‘புதையல்’, ‘காத்தவராயன்’ படங்களில் நகைச்சுவை வேடம் என்றால், விடிவெள்ளி போன்ற படங்களில் வேறு மாதிரி.

எம்.ஜி.ஆருடன் ‘என் தங்கை’, ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்திற்கு பிறகு ‘நாடோடி மன்னன்’, ‘பாக்தாத் திருடன்’, ‘திருடாதே’, ‘ராணி சம்யுக்தா’ ஆகிய படங்களில் நடித்திருப்பார். அப்போது ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

காலையில் ஒரு படத்தில் நடித்துவிட்டு மதியம் எம்.ஜி.ஆர். நடித்த ‘திருடாதே’ படத்தின் பாடல் காட்சியில் நடிக்க சென்ற போது, முகத்தில் களைப்பு காட்டாமல் சிரித்த முகத்துடன் “ஓ மிஸ்டர் பாலு” என்ற பாடலை பாடி கொண்டே மாடிப் படிகளில் இருந்து இறங்கி ஒடி வந்து சோபாவில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை பார்த்து நடிக்க வேண்டும்.

அப்போது ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று இயக்குநர் நீலகண்டன் கேட்க, பதிமூன்று டேக் வரை பொறுமையாக நடித்தவர், பதினான்காவது ஒன்ஸ்மோர் கேட்ட போது, ஸ்டுடியோவைவிட்டு வெளியேறி தன்னுடைய காரில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் வந்து இறங்கிய போது எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு. “உனக்கு என்ன துணிச்சல் இருக்கும். செட்ல நான் இருக்கேன். என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாமல், நீ பட்டுக்கும் புறப்பட்டு போயிட்ட. எனக்கு என்ன நீ மரியாதை கொடுத்த...” என்று எம்.ஜி.ஆர். ராஜத்தை திட்டி இருக்கிறார்.

“அண்ணே நான் உங்களுக்காக தான் பதிமூன்று டேக் வரை ஒன்றும் சொல்லாமல் நடித்தேன். நான் என்ன தப்பு பண்ணுகிறேன். என்ன வேணும் என்று காரணம் சொன்னால் திருத்திக் கொண்டு நடிப்பேன். இப்படி எதுவுமே சொல்லாமல் ஒன்ஸ் மோர் ஒன்ஸ்மோர்ன்னு சொன்னால் நான் எப்படி புரிஞ்சுக்கிட்டு நடிக்க முடியும். இனிமேல் அவர் டைரக்ட் பண்ணினால் நான் நடிக்க மாட்டேன்” என்று எம்.ஜி.ஆரிடம் பதில் கூறி இருக்கிறார், எம்.என்.ராஜம்.

“அது மாதிரி எல்லாம் பேசாம போனை வை. நாளைக்கு படப்பிடிப்புக்கு வா” என்று கூறி போனை வைத்த எம்.ஜி.ஆர்., மறுநாள் ராஜம் படப்பிடிப்புக்கு சென்ற போது அந்த பாடல் காட்சியை எம்.ஜி.ஆரே இயக்கி நடித்திருக்கிறார்.

கால ஓட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத காலங்களில் ஒருநாள் ஒரு திருமனத்துக்கு சென்ற எம்.என்.ராஜத்தை பார்த்து நலம் விசாரித்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.

“ஒன்னும் இல்லாமல் சும்மாதான் இருக்கேன் அண்ணா” என்று ராஜம் சொன்னதும், “நீ சும்மா இருக்கலாம். ஆனா நீ பேசுற தமிழ் சும்மா இருக்கக்கூடாது” என்று கூறியவர், செய்தித்துறையில் சொல்லி அவருக்கு  தமிழக அரசின் செய்திப் படங்களில் வாய்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவர் வாய்ஸ் கொடுத்ததில் இந்திராகாந்தி இறந்த போது வாய்ஸ் கொடுத்த செய்தி படத்திற்கு பெரிய பெயர் கிடைத்ததாம்.

டி.ஆர்.சுந்தரம் தயாரித்த படங்களில் மேனேஜராக வேலை செய்த எம்.ஏ.வேணு, படத் தயாரிப்பில் இறங்கி ‘டவுன்பஸ்’ என்கிற படத்தை தயாரித்த போது, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு சிறிய வேடத்தில் நடித்த ராஜத்தை, இரண்டு ஆண்டுகள் கழித்து எம்.ஏ.வேணு தயாரித்த ‘முதலாளி’ படத்தில் நாயகியாக நடிக்க அழைத்த போது, அவரால் மொத்தமாக இரண்டு மாதம் கால்ஷீட் கொடுத்து நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால், அந்தப் படத்தில் கதாநாயகியாக தேவிகாவை அறிமுகம் செய்தார்கள். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்திலாவது நீங்கள் நடிக்க வேண்டும் என்று செண்டிமெண்டாக கேட்க, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து வில்லியாக நடித்திருக்கிறார்.

கே.பாலச்சந்தரின் ‘அரங்கேற்றம்’ படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது. அதன் பிறகு அம்மா, அக்கா என்று குணச்சித்திர வேடங்களிலும், பாட்டி வேடங்களிலும் நடித்திருக்கிறார், எம்.என்.ராஜம். 

சினிமா, நாடகம் இரண்டிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போது அவரது இருபதாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தார்களாம். ராஜம் நாடகங்களில் நடிக்கும் போது அந்த நாடகங்களில் பாடகராக இருந்திருக்கிறார், ஏ.எல்.ராகவன். சிறுவயது முதல் நாடகங்களில் நடித்த ராகவன், கிருஷ்ண விஜயம் படத்தில் தொடங்கி வளையாபதி, அம்பிகாபதி என பத்து ஆண்டுகளில் ஐம்பது படங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருந்தார்.

தஞ்சாவூர் அருகே உள்ள அய்யம்பேட்டை லட்சுமண பாகவதர் குடும்பத்து இளைஞரான ஏ.எல்.ராகவனையும், அவரது பாடல்களையும் ராஜத்தின் அம்மாவுக்கு பிடித்திருந்தது. அவரது பெற்றோரிடம் பேசி 1960 ஆம் ஆண்டு மே 2-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு ஏ.எல்.ராகவன் பாடிய ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடல் அவருக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகும் தொடர்ந்து ஏராளமான படங்களில் பாடிக் கொண்டிருந்தார், ஏ.எல்.ராகவன்.

டி.எம்.சௌந்தர்ராஜன் இசையில் நிறைய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஏ.எல்.ராகவனுக்கு ஒரு கட்டத்தில் நடிக்க ஆசை பிறக்க, டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து ‘கல்லும் கனியாகும்’ என்கிற படத்தை தயாரித்து, இருவரும் நடித்தனர். கே.சங்கர் இயக்கிய அந்தப் படத்தில் கதாநாயகியாக எம்.என்.ராஜத்தை நடிக்க கேட்ட போது, நான் சீனியர் நடிகை. புதுமுகத்துக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்ரீயை கதாநாயகியாக நடிக்க வைத்தார்களாம்.

நடிகை ஏ.எல்.ராகவனை திருமணம் செய்துகொண்ட எம்.என்.ராஜத்துக்கு பிரம்மலக்ஷ்மன் என்கிற மகனும், நளினா மீனாட்சி என்கிற மகளும் உள்ளனர்.

நகைச்சுவை வேடத்தில் நடிக்க மறுத்த போது உனக்கு கண்டிப்பாக கதாநாயகி வாய்ப்பு தருகிறேன் என்று கூறிய மாடர்ன் தியேட்டர் அதிபர் சுந்தரம், சொன்னது போலவே ‘பாசவலை’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்பை தந்தார். அந்தப் படத்தில் கதாநாயகனாக எம்.கே.ராதா நடித்தார்.

ஏழு வயதில் நாடகத்தில் நடிக்க எம்.என்.ராஜத்துக்கு கடிதம் கொடுத்து வாய்ப்பு ஏற்பற்றுத்திக் கொடுத்த எம்.கே.ராதாவுடன் பாசவலை படத்தில் கதாநாயகியாக நடித்த ராஜம், அவருடைய பேரன் சரவணனுக்கு தனது மகள் நளினா மீனாட்சியை திருமணம் செய்து கொடுத்தார்.  

எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர். சிவாஜி, என்.டி.ஆர்., பிரேம்நசீர், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.பாலாஜி, எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி.சஹஸ்ரநாமம் என அன்றைய எல்லா கதாநாயகர் நடிகர்களுடன் நடித்த எம்.என்.ராஜம், தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். 1995 க்கு பிறகு சின்னத்திரையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

இவரது கணவர்  பாடகர் ஏ.எல்.ராகவன், சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகும் கூட இசைக் கச்சேரிகள் நடத்திக்கொண்டிருந்தார். இசைக் கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று இசை நிகழ்ச்சிகள் பல செய்தவர்.

1933 ஆம் ஆண்டு பிறந்த பாடகர் ஏ.எல்.ராகவன், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தனது 86வது வயதில் காலமானார்.

அவருடனான அறுபதாண்டுக் கால வாழ்க்கையை பயணத்தை மறக்க முடியாத ஏராளமான நினைவுகளோடு அதை ஞாபகப்படுத்திப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.என்.ராஜம், ஏழு வயதில் நடிக்க ஆரம்பித்து இப்போது தனது எழுபத்தி ஐந்தாவது நடிப்பு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். அவரை வாழ்த்தி வணங்குவோம்....

தொகுப்பு : ஜி.பாலன்


குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சுப்பையா, தமிழ்நாட்டின் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த செங்கோட்டையில் 1920 ஆம் ஆண்டு பிறந்தவர். அங்கு ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனி’ யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நாடகங்களில் சிறுவர் வேடங்களில் நடித்து வந்த சுப்பையா, 18 வயதில் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ‘சிவ லீலா’ நாடகத்தில் அபிஷேகப் பாண்டியன் வேடம் கிடைத்தது. பிறகு மகாபாரத நாடகத்தில் கர்ணன் வேடம். குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் சுப்பையாவின் உணர்ச்சிகரமான நடிப்பை, நாடகம் காண வந்தவர்கள் மட்டுமல்ல, மேடைக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக நடிகர்களும் கண்டு கண்ணீர் பெருக்கினார்கள். சுப்பையாவின் ஆழ்ந்த நடிப்பு பற்றி மற்ற நாடகக் குழுக்களிலும் பேச்சு பரவியது.

அதேசமயம் டி.கே.எஸ். குழுவில் நடித்துவந்த கே.ஆர்.ராமசாமிக்கும் சீனியரான எஸ்.வி.சுப்பையாவுக்கும் மனத்தாங்கல். நகைச்சுவை நடிகர் ‘ப்ரண்ட்’ ராமசாமி, நாடக கம்பெனி முதலாளி டி.கே.சங்கரனிடம் புறங்கூறியதில் சுப்பையாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சங்கரன். அதிர்ந்துபோன சுப்பையா டி.கே.சண்முகத்திடம் முறையிட, சண்முகமோ “டி.கே.பகவதி, சகஸ்ரநாமம் எல்லோரும் அண்ணாவிடம் அடி வாங்கியவர்கள்தான். கவலைப்படாதே” என்று கூறி இருக்கிறார்.

இருப்பினும் சுப்பையாவுக்கு மனம் ஆறுதல் அடையவில்லை. இந்த நிலையில் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில், வாசுதேவர் வேடத்தில் நடிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டார். இதனால், அவருக்கு செலவுக்கு காசு கொடுத்து, ஊருக்கு சென்று வருமாறு அனுப்பி வைத்தார், டி.கே.சங்கரன்.

சுப்பையா ஊருக்கு செல்லவில்லை. நேரேக சேலத்துக்கு சென்று அங்கு சக்தி கிருஷ்ணசாமியை சந்தித்தார். அப்போது சக்தி நாடக சபாவில், கவிஞர் எஸ்.டி.சுந்தரம் எழுதிய ’கவியின் கனவு’ நாடகத்தை அரங்கேற்ற, ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சுப்பையாவின் வசனம் பேசி நடிக்கும் திறமையை அறிந்த சக்தி கிருஷ்ணசாமி, ‘கவியின் கனவு’ நாடகத்தில் மகாகவி ஆனந்தனின் வேடம் கொடுத்து நடிக்க வைத்தார்.

அந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். அந்த நாடகம் தமிழகம் முழுவதும் 1,500 முறை மேடையேறியது.

சக்தி கிருஷ்ணசாமி திரைக்கதை எழுத பி.புல்லையா ‘விஜயலட்சுமி’ என்கிற படத்தை இயக்க, அதில் பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா முக்கிய வேடங்களில் நடித்தனர். அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சுப்பையாவுக்கு கிடைத்தது. இதுதான் சுப்பையா நடித்த முதல் படம். அதன் பிறகு பி.என்.ராவுடன் இணைந்து கிருஷ்ணசாமி இயக்கிய ‘ஏகம்பவாணன்’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவுடன் நடித்த சுப்பையா, அடுத்து ‘கஞ்சன்’ படத்தில் கஞ்சன் கந்தசாமியாக முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தை தயாரித்த ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், அடுத்து தயாரித்த ‘அபிமன்யு’ படத்திலும் சகுனி வேடத்தில் நடிக்க வைத்தது.

மாயாவதி என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் அற்புதமாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் "காமரூபன்" என்ற தெத்துப்பல உடைய நாவிதனாக அவரது சிறப்பான நடிப்பு, எஸ்.வி.சுப்பைய்யா தானா? அவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

டி.ஆர்.மகாலிங்கத்துடன் நடித்த இன்னொரு படமான ‘வேலைக்காரன்’ படத்திலும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. எஸ்.பாலசந்தர் – பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும் கவனம் ஈர்த்தார்.

சிவாஜி நடித்த ‘மங்கையர் திலகம்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணனாகவும், ஜெமினி கணேசன் நடித்த ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் ஜெமினி கணேசனின் அப்பாவாகவும் சுப்பையா நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களும் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.  

அதிலும் ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் கந்துவட்டி மிராசுவிடம் விவசாய நிலத்தை இழக்கும் பாமர விவசாயி வேடத்தில் நடித்து, தனது குணச்சித்திர நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொண்டார்.

‘மங்கையர் திலகத்’தில் நடிகர் திலகத்துக்கு அண்ணனாக நடித்த சுப்பையா, ‘நானே ராஜா’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார். அடுத்து ‘பாகப்பிரிவினை’ படத்தில் நடிகர் திலகத்துக்கு அப்பாவாக நடித்து, திரையில் அவருடன் ஒரு நெருக்கமான இடத்தை எடுத்துக்கொண்ட சுப்பையா, எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நடித்தது ‘பணத்தோட்டம்’ படத்தில். நேர்மறை குணச்சித்திரம் என்றால், அது சுப்பையாதான் என்று மக்கள் தீர்மானித்துவிட்ட வேளையில், வில்லனாக நடிப்பதும் குணச்சித்திரத்தின் ஒரு அங்கம்தான் என்று ‘பணத்தோட்ட’த்தில் காட்டி, நம்மைப் பதற வைத்தார். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார்.

ஜெமினிகணேசனுடன் ‘சவுபாக்கியவதி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந் தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் நடித்தார். பழம் பெரும் நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித் திருக்கிறார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர்.

எஸ்.வி.சுப்பையாவின் முத்திரை நடிப்புக்கு அவர் நடித்த எந்தப் படமும் விதிவிலக்கு அல்ல. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன்ஸ் நிறுவனம் சார்பாக ‘காவல் தெய்வம்’ என்ற படத்தை சுப்பையா தயாரித்தார்.

ஜெயகாந்தனின் ‘கைவிலங்கு’ என்ற குறுநாவலின் உரிமையை வாங்கி அந்தப் படத்தை தயாரித்து, நடித்தார். அதில் சிவக்குமாரும் லட்சுமியும் கதாநாயகன், கதாநாயகி. அந்தப் படத்தில் சுப்பையாவுக்காக ஊதியம் பெற மறுத்து, கவுரவ வேடம் ஏற்றார் சிவாஜி. சிவாஜி தனது பாத்திரத்திற்கான ஊதியத்தை பெற மறுத்துவிட்டார். இதனால், உணர்ச்சி வசப்பட்ட சுப்பையா “எனது அடுத்த பிறப்பில் நான் ஒரு நாயாக மாறி சிவாஜி கணேசனுக்கு சேவை செய்வேன்” என்றார். அவரது தாழ்மையான ஆளுமை இதுதான். ‘காவல் தெய்வம்’ படத்திலும்  சுப்பையாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது.

‘கைதி என்பவன் இதயம் இல்லாதவன் அல்ல; மாறாக இதயம் உடைந்தவன், அவனுக்குத்தான் அதிக அன்பும் கருணையும் தேவைப்படுகிறது’ என்பதை தனது கண்களைக் கொண்டு, வசனமில்லாத நடிப்பால் காட்டினார் எஸ்.வி.சுப்பையா. கைதி சாமுண்டியான சிவாஜியை தன் பார்வையால் அவர் சாந்தப்படுத்தும் காட்சியில், நம் சப்த நாடிகளையும் அடக்கி அமைதியாக அவரை கவனிக்க வைத்தார்.

வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்களில், குறிப்பாக, கவிஞனாக அதுவும் மகா கவிஞனாக நடிக்க நேரும்போது, கவிஞனின் தாய்மொழியே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகனுடையதாகவும் இருந்தால், எத்தனை பெரிய அற்புதம் நிகழும் என்பதற்கு, ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் எஸ்.வி.சுப்பையா ஏற்ற பாரதியின் வேடம் ஓர் உதாரணம். நம் தலைமுறை காணாத பாரதியை, கண்முன் நிறுத்திய நடிப்பு அது. அந்தப் படத்தில் பாரதியின் பாடல்கள் சிலவற்றை திருச்சி லோகநாதன் பாடியிருப்பார். ஆனால், அத்தனையும் பாரதி பாடுவதுபோல் சுப்பையாவின் உயர்ந்த நடிப்பு நம்மை நம்ப வைத்தது.

தேசத்தின் மீது பக்தி கொண்ட பாரதியாக மட்டுமல்ல; தான் வணங்கும் தேவியின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்ட ஒரு சாமானிய பக்தன் அபிராமி பட்டராக வரும் ‘ஆதிபராசக்தி’ படத்தில், சுப்பையாவின் நடிப்பில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்க என்றைக்கும் மனம் ஒப்பாது. ‘சொல்லடி அபிராமி’ என தெய்வத்தின் முன்னால் நின்று உரிமையுடன் கேட்கும் வேடத்துக்கு, ஒரு நடிப்பாளுமை தேவைப்படுகிறது. அது எஸ்.வி. சுப்பையாவிடம் இருந்தது.

சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சுப்பையா, தன்னுடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் வசனம் பேசும் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படி இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடும். அதனாலேயே, இவருடன் சேர்ந்து நடித்த பழம் பெரும் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள்.

இவர் நடித்த ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி, சரியாக வசனம் பேசாததால், அவரை ஓங்கி அறைந்துவிட்டார்.

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைபடத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால், இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான். ஆனால், இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கோபத்தை கட்ட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்படி இருந்தும் ஒரு காட்சியில் திணறிய சரோஜாதேவியின் முதுகில் சுப்பையா அறைந்துவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.

இதே போல் ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரி சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசி வராததால் சாவித்திரியை திட்டி அடித்திருக்கிறார். அந்த அடிகள் எல்லாம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது.

புதுமைகளின் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இசைக் காவியம் ‘கலைக்கோயில்’. அந்தப்படத்தின் கதையைக் கேட்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார். அந்தப் படத்தில், வீணை வித்வான் நித்யானந்தம் படம் முழுவதும் வருகிற வேடம். அதில் நடிக்க எஸ்.வி.ரங்காராவை ஒப்பந்தம் செய்திருந்தார், ஸ்ரீதர்.

ரங்கா ராவ் சொன்ன தேதியில், முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியது. காலை 8 மணிக்கெல்லாம் ரங்காராவைத் தவிர அத்தனை பேரும் வந்துவிட்டார்கள். நேரம் போனது. ரங்கராவ் வருவதாக தெரியவில்லை. முதல் நாள் படப்பிடிப்புக்கே இப்படி பண்றாரே என்று வேதனைப் பட்ட இயக்குநர் ஸ்ரீதர், “ஒரு எஸ்.வி. இல்லையென்றால், இன்னொரு எஸ்.வி.” என்று கூறிவிட்டு, எஸ்.வி.சுப்பையாவை உடனே அழைத்து வர உத்தரவிட்டார்.

சுப்பையா வந்தார். ஸ்ரீதர் கொடுத்த வேடத்தை புரிந்து கொண்டு நடித்தார். ஒரு காட்சியை முடித்துவிட்டு அடுத்த காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு தாமதமாக வந்த ரங்கா ராவ், தனது வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரது முகத்தில் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ துளியுமில்லை. ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி ஸ்ரீதர் அருகில் வந்து, அவருக்கு ஒரு சிகரெட்டை நீட்டினார். “சுப்பையா ஈஸ் குட் ஆல்டர்நேட், ஆல் தி பெஸ்ட் ஸ்ரீதர்” என்று கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.

ரங்காராவ் எனும் மகாநடிகன் தனக்கு மாற்று என மனந்திறந்து கூறிய எஸ்.வி.சுப்பையா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த ‘கண்கண்ட தெய்வம்’ படத்தில், ரங்காராவின் தம்பியாக நடித்திருப்பார். இதில் எஸ்.வி.சுப்பையாவுக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் வி.நாகையாவும் நடித்திருக்கிறார். அண்ணன் - தம்பி பாசக் கதைக்கு பெயர்போன இந்தப்படத்தில், எஸ்.வி.ரங்காராவ் - எஸ்.வி.சுப்பையா இருவரில் யார் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று யாராலும் தீர்ப்பு வழங்க முடியாது.

அப்பா, அண்ணன், தம்பி, பரம ஏழை, பணக்காரர், பாமரர், படித்த அதிகாரி, கிராமவாசி, நகரத்தின் நடுத்தரக் குடும்பத்தில் சிக்கி நசுங்கும் மனிதர், காவலர், கவிஞன் தொடங்கி, வஞ்சகத்தை நெஞ்சுக்குள் வளர்த்து கருவறுக்கும் வில்லன்வரை, தான் ஏற்ற வேடங்கள் அத்தனைக்கும் உயிர் கொடுத்தவர் சுப்பையா.

நடிப்பது போல புத்தகங்கள் படிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. ஜெயகாந்தனின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார். விவசாயம் செய்வதிலும் ஆர்வம் கொண்ட சுப்பையா, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சென்னை செங்குன்றம் அருகிலுள்ள கரணோடையில் நிலம் வாங்கி அதை ஒரு பண்ணையாக மாற்றினார். படப்பிடிப்பு இல்லாதபோது, தனது பண்ணையில் வேலை செய்வார்.

எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.

1946 முதல் 1979 வரை 33 ஆண்டுகளில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ள எஸ்.வி.சுப்பையா,  1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தனது 57 வது வயதில் காலமானார். தமிழகத்தின் தென் கோடியான செங்கோட்டையில் பிறந்து வடகோடியான செங்குன்றத்தில் அடக்கமான எஸ்.வி.சுப்பையா, நடிப்பில் அசைக்கமுடியாத குன்றம்தான்

தொகுப்பு : ஜி.பாலன்