புதன், 2 மார்ச், 2022

குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான எஸ்.வி.சுப்பையா, தமிழ்நாட்டின் அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த செங்கோட்டையில் 1920 ஆம் ஆண்டு பிறந்தவர். அங்கு ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் நடிப்பில் ஆர்வம் மேலிட, ‘செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனி’ யில் 11-வது வயதில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நாடகங்களில் சிறுவர் வேடங்களில் நடித்து வந்த சுப்பையா, 18 வயதில் டி.கே.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கே அவருக்கு ‘சிவ லீலா’ நாடகத்தில் அபிஷேகப் பாண்டியன் வேடம் கிடைத்தது. பிறகு மகாபாரத நாடகத்தில் கர்ணன் வேடம். குந்தியும் கர்ணனும் சந்திக்கும் காட்சியில் சுப்பையாவின் உணர்ச்சிகரமான நடிப்பை, நாடகம் காண வந்தவர்கள் மட்டுமல்ல, மேடைக்கு உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக நடிகர்களும் கண்டு கண்ணீர் பெருக்கினார்கள். சுப்பையாவின் ஆழ்ந்த நடிப்பு பற்றி மற்ற நாடகக் குழுக்களிலும் பேச்சு பரவியது.

அதேசமயம் டி.கே.எஸ். குழுவில் நடித்துவந்த கே.ஆர்.ராமசாமிக்கும் சீனியரான எஸ்.வி.சுப்பையாவுக்கும் மனத்தாங்கல். நகைச்சுவை நடிகர் ‘ப்ரண்ட்’ ராமசாமி, நாடக கம்பெனி முதலாளி டி.கே.சங்கரனிடம் புறங்கூறியதில் சுப்பையாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சங்கரன். அதிர்ந்துபோன சுப்பையா டி.கே.சண்முகத்திடம் முறையிட, சண்முகமோ “டி.கே.பகவதி, சகஸ்ரநாமம் எல்லோரும் அண்ணாவிடம் அடி வாங்கியவர்கள்தான். கவலைப்படாதே” என்று கூறி இருக்கிறார்.

இருப்பினும் சுப்பையாவுக்கு மனம் ஆறுதல் அடையவில்லை. இந்த நிலையில் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தில், வாசுதேவர் வேடத்தில் நடிக்கச் சொன்னபோது மறுத்துவிட்டார். இதனால், அவருக்கு செலவுக்கு காசு கொடுத்து, ஊருக்கு சென்று வருமாறு அனுப்பி வைத்தார், டி.கே.சங்கரன்.

சுப்பையா ஊருக்கு செல்லவில்லை. நேரேக சேலத்துக்கு சென்று அங்கு சக்தி கிருஷ்ணசாமியை சந்தித்தார். அப்போது சக்தி நாடக சபாவில், கவிஞர் எஸ்.டி.சுந்தரம் எழுதிய ’கவியின் கனவு’ நாடகத்தை அரங்கேற்ற, ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. சுப்பையாவின் வசனம் பேசி நடிக்கும் திறமையை அறிந்த சக்தி கிருஷ்ணசாமி, ‘கவியின் கனவு’ நாடகத்தில் மகாகவி ஆனந்தனின் வேடம் கொடுத்து நடிக்க வைத்தார்.

அந்த நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். அந்த நாடகம் தமிழகம் முழுவதும் 1,500 முறை மேடையேறியது.

சக்தி கிருஷ்ணசாமி திரைக்கதை எழுத பி.புல்லையா ‘விஜயலட்சுமி’ என்கிற படத்தை இயக்க, அதில் பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா முக்கிய வேடங்களில் நடித்தனர். அந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு சுப்பையாவுக்கு கிடைத்தது. இதுதான் சுப்பையா நடித்த முதல் படம். அதன் பிறகு பி.என்.ராவுடன் இணைந்து கிருஷ்ணசாமி இயக்கிய ‘ஏகம்பவாணன்’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவுடன் நடித்த சுப்பையா, அடுத்து ‘கஞ்சன்’ படத்தில் கஞ்சன் கந்தசாமியாக முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தை தயாரித்த ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம், அடுத்து தயாரித்த ‘அபிமன்யு’ படத்திலும் சகுனி வேடத்தில் நடிக்க வைத்தது.

மாயாவதி என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் அற்புதமாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் "காமரூபன்" என்ற தெத்துப்பல உடைய நாவிதனாக அவரது சிறப்பான நடிப்பு, எஸ்.வி.சுப்பைய்யா தானா? அவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

டி.ஆர்.மகாலிங்கத்துடன் நடித்த இன்னொரு படமான ‘வேலைக்காரன்’ படத்திலும் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. எஸ்.பாலசந்தர் – பானுமதி நடித்த ‘ராணி’ படத்திலும் கவனம் ஈர்த்தார்.

சிவாஜி நடித்த ‘மங்கையர் திலகம்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணனாகவும், ஜெமினி கணேசன் நடித்த ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் ஜெமினி கணேசனின் அப்பாவாகவும் சுப்பையா நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களும் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.  

அதிலும் ‘காலம் மாறிப் போச்சு’ படத்தில் கந்துவட்டி மிராசுவிடம் விவசாய நிலத்தை இழக்கும் பாமர விவசாயி வேடத்தில் நடித்து, தனது குணச்சித்திர நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் ஆழமான அஸ்திவாரம் போட்டுக்கொண்டார்.

‘மங்கையர் திலகத்’தில் நடிகர் திலகத்துக்கு அண்ணனாக நடித்த சுப்பையா, ‘நானே ராஜா’ படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார். அடுத்து ‘பாகப்பிரிவினை’ படத்தில் நடிகர் திலகத்துக்கு அப்பாவாக நடித்து, திரையில் அவருடன் ஒரு நெருக்கமான இடத்தை எடுத்துக்கொண்ட சுப்பையா, எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நடித்தது ‘பணத்தோட்டம்’ படத்தில். நேர்மறை குணச்சித்திரம் என்றால், அது சுப்பையாதான் என்று மக்கள் தீர்மானித்துவிட்ட வேளையில், வில்லனாக நடிப்பதும் குணச்சித்திரத்தின் ஒரு அங்கம்தான் என்று ‘பணத்தோட்ட’த்தில் காட்டி, நம்மைப் பதற வைத்தார். எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படத்திலும், ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற சூப்பர் ஹிட் பாடல் காட்சியில் தோன்றினார்.

ஜெமினிகணேசனுடன் ‘சவுபாக்கியவதி’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’, ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ ஆகிய படங்களிலும், ‘கூடி வாழ்ந் தால் கோடி நன்மை’ என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் நடித்தார். பழம் பெரும் நடிகர்கள் கே.ஆர். ராமசாமி, எம்.கே.ராதா ஆகியோருடனும் சேர்ந்து நடித் திருக்கிறார். 1955-ல் வெளிவந்த ‘வள்ளியின் செல்வன்’ என்ற படத்தில் எஸ்.வி.சுப்பையா முக்கிய ரோலில் நடித்தார். அவருடன் சகஸ்ரநாமம், டி.எஸ்.துரைராஜ், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர்.

எஸ்.வி.சுப்பையாவின் முத்திரை நடிப்புக்கு அவர் நடித்த எந்தப் படமும் விதிவிலக்கு அல்ல. படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அம்பாள் புரொடசன்ஸ் நிறுவனம் சார்பாக ‘காவல் தெய்வம்’ என்ற படத்தை சுப்பையா தயாரித்தார்.

ஜெயகாந்தனின் ‘கைவிலங்கு’ என்ற குறுநாவலின் உரிமையை வாங்கி அந்தப் படத்தை தயாரித்து, நடித்தார். அதில் சிவக்குமாரும் லட்சுமியும் கதாநாயகன், கதாநாயகி. அந்தப் படத்தில் சுப்பையாவுக்காக ஊதியம் பெற மறுத்து, கவுரவ வேடம் ஏற்றார் சிவாஜி. சிவாஜி தனது பாத்திரத்திற்கான ஊதியத்தை பெற மறுத்துவிட்டார். இதனால், உணர்ச்சி வசப்பட்ட சுப்பையா “எனது அடுத்த பிறப்பில் நான் ஒரு நாயாக மாறி சிவாஜி கணேசனுக்கு சேவை செய்வேன்” என்றார். அவரது தாழ்மையான ஆளுமை இதுதான். ‘காவல் தெய்வம்’ படத்திலும்  சுப்பையாவின் நடிப்பு உலகத் தரத்தில் இருந்தது.

‘கைதி என்பவன் இதயம் இல்லாதவன் அல்ல; மாறாக இதயம் உடைந்தவன், அவனுக்குத்தான் அதிக அன்பும் கருணையும் தேவைப்படுகிறது’ என்பதை தனது கண்களைக் கொண்டு, வசனமில்லாத நடிப்பால் காட்டினார் எஸ்.வி.சுப்பையா. கைதி சாமுண்டியான சிவாஜியை தன் பார்வையால் அவர் சாந்தப்படுத்தும் காட்சியில், நம் சப்த நாடிகளையும் அடக்கி அமைதியாக அவரை கவனிக்க வைத்தார்.

வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்களில், குறிப்பாக, கவிஞனாக அதுவும் மகா கவிஞனாக நடிக்க நேரும்போது, கவிஞனின் தாய்மொழியே அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கும் நடிகனுடையதாகவும் இருந்தால், எத்தனை பெரிய அற்புதம் நிகழும் என்பதற்கு, ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் எஸ்.வி.சுப்பையா ஏற்ற பாரதியின் வேடம் ஓர் உதாரணம். நம் தலைமுறை காணாத பாரதியை, கண்முன் நிறுத்திய நடிப்பு அது. அந்தப் படத்தில் பாரதியின் பாடல்கள் சிலவற்றை திருச்சி லோகநாதன் பாடியிருப்பார். ஆனால், அத்தனையும் பாரதி பாடுவதுபோல் சுப்பையாவின் உயர்ந்த நடிப்பு நம்மை நம்ப வைத்தது.

தேசத்தின் மீது பக்தி கொண்ட பாரதியாக மட்டுமல்ல; தான் வணங்கும் தேவியின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்ட ஒரு சாமானிய பக்தன் அபிராமி பட்டராக வரும் ‘ஆதிபராசக்தி’ படத்தில், சுப்பையாவின் நடிப்பில் வேறொருவரைப் பொருத்திப் பார்க்க என்றைக்கும் மனம் ஒப்பாது. ‘சொல்லடி அபிராமி’ என தெய்வத்தின் முன்னால் நின்று உரிமையுடன் கேட்கும் வேடத்துக்கு, ஒரு நடிப்பாளுமை தேவைப்படுகிறது. அது எஸ்.வி. சுப்பையாவிடம் இருந்தது.

சுப்பையா அவர்கள் சற்று வயோதிக கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும். அவர் அப்போது தமிழ் திரைப்படங்களில் முன்னனி நடிகையாக இருந்த பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி ஆகியோருடன் ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள சுப்பையா, தன்னுடன் சேர்ந்து நடிக்கும் கதாநாயகிகள் வசனம் பேசும் காட்சியில் சரியாக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அப்படி இல்லை என்றால் அந்த கதாநாயகிகளின் கண்ணம் இவர் கையால் வீங்கி விடும். அதனாலேயே, இவருடன் சேர்ந்து நடித்த பழம் பெரும் நடிகைகள் சரியாக நடித்து விடுவார்கள்.

இவர் நடித்த ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த நடிகை பத்மினி, சரியாக வசனம் பேசாததால், அவரை ஓங்கி அறைந்துவிட்டார்.

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான குலவிளக்கு திரைபடத்தில் நடிகை சரோஜாதேவி வசன காட்சியில் அந்த தவறை செய்ததால். சுப்பையாவுக்கு கோபம் வந்ததது. ஆனால், இயக்குனர் கோபாலகிருஷ்ணன் அப்போது சரோஜாதேவி செய்தது தவறுதான். ஆனால், இப்போது சரோஜாதேவி பிரசவ நிலையில் உள்ளார். நீங்கள் கோபத்தை கட்ட வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்படி இருந்தும் ஒரு காட்சியில் திணறிய சரோஜாதேவியின் முதுகில் சுப்பையா அறைந்துவிட்டார். அதன் பிறகு அந்த காட்சியில் சரியாக நடித்தார் சரோஜாதேவி.

இதே போல் ஜக்கம்மா என்ற படத்தில் நடிகை சாவித்திரி சரியாகவே சுப்பையாவுடன் சேர்ந்து பேசி வராததால் சாவித்திரியை திட்டி அடித்திருக்கிறார். அந்த அடிகள் எல்லாம் அவர்களின் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது.

புதுமைகளின் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இசைக் காவியம் ‘கலைக்கோயில்’. அந்தப்படத்தின் கதையைக் கேட்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தானே அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்தார். அந்தப் படத்தில், வீணை வித்வான் நித்யானந்தம் படம் முழுவதும் வருகிற வேடம். அதில் நடிக்க எஸ்.வி.ரங்காராவை ஒப்பந்தம் செய்திருந்தார், ஸ்ரீதர்.

ரங்கா ராவ் சொன்ன தேதியில், முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியது. காலை 8 மணிக்கெல்லாம் ரங்காராவைத் தவிர அத்தனை பேரும் வந்துவிட்டார்கள். நேரம் போனது. ரங்கராவ் வருவதாக தெரியவில்லை. முதல் நாள் படப்பிடிப்புக்கே இப்படி பண்றாரே என்று வேதனைப் பட்ட இயக்குநர் ஸ்ரீதர், “ஒரு எஸ்.வி. இல்லையென்றால், இன்னொரு எஸ்.வி.” என்று கூறிவிட்டு, எஸ்.வி.சுப்பையாவை உடனே அழைத்து வர உத்தரவிட்டார்.

சுப்பையா வந்தார். ஸ்ரீதர் கொடுத்த வேடத்தை புரிந்து கொண்டு நடித்தார். ஒரு காட்சியை முடித்துவிட்டு அடுத்த காட்சியை எடுத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு தாமதமாக வந்த ரங்கா ராவ், தனது வேடத்தில் எஸ்.வி.சுப்பையா நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரது முகத்தில் அதிர்ச்சியோ ஆச்சர்யமோ துளியுமில்லை. ஒரு சிகரெட்டை பற்றவைத்து இழுத்தபடி ஸ்ரீதர் அருகில் வந்து, அவருக்கு ஒரு சிகரெட்டை நீட்டினார். “சுப்பையா ஈஸ் குட் ஆல்டர்நேட், ஆல் தி பெஸ்ட் ஸ்ரீதர்” என்று கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.

ரங்காராவ் எனும் மகாநடிகன் தனக்கு மாற்று என மனந்திறந்து கூறிய எஸ்.வி.சுப்பையா, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1967-ல் வெளிவந்த ‘கண்கண்ட தெய்வம்’ படத்தில், ரங்காராவின் தம்பியாக நடித்திருப்பார். இதில் எஸ்.வி.சுப்பையாவுக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் வி.நாகையாவும் நடித்திருக்கிறார். அண்ணன் - தம்பி பாசக் கதைக்கு பெயர்போன இந்தப்படத்தில், எஸ்.வி.ரங்காராவ் - எஸ்.வி.சுப்பையா இருவரில் யார் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று யாராலும் தீர்ப்பு வழங்க முடியாது.

அப்பா, அண்ணன், தம்பி, பரம ஏழை, பணக்காரர், பாமரர், படித்த அதிகாரி, கிராமவாசி, நகரத்தின் நடுத்தரக் குடும்பத்தில் சிக்கி நசுங்கும் மனிதர், காவலர், கவிஞன் தொடங்கி, வஞ்சகத்தை நெஞ்சுக்குள் வளர்த்து கருவறுக்கும் வில்லன்வரை, தான் ஏற்ற வேடங்கள் அத்தனைக்கும் உயிர் கொடுத்தவர் சுப்பையா.

நடிப்பது போல புத்தகங்கள் படிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. ஜெயகாந்தனின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார். விவசாயம் செய்வதிலும் ஆர்வம் கொண்ட சுப்பையா, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சென்னை செங்குன்றம் அருகிலுள்ள கரணோடையில் நிலம் வாங்கி அதை ஒரு பண்ணையாக மாற்றினார். படப்பிடிப்பு இல்லாதபோது, தனது பண்ணையில் வேலை செய்வார்.

எஸ்.வி.சுப்பையாவின் மனைவி பெயர் கோமதி அம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள். ஒரு மகன் உள்ளனர்.

1946 முதல் 1979 வரை 33 ஆண்டுகளில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ள எஸ்.வி.சுப்பையா,  1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் தனது 57 வது வயதில் காலமானார். தமிழகத்தின் தென் கோடியான செங்கோட்டையில் பிறந்து வடகோடியான செங்குன்றத்தில் அடக்கமான எஸ்.வி.சுப்பையா, நடிப்பில் அசைக்கமுடியாத குன்றம்தான்

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக