வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் வாழ்க்கை வரலாறு

கொஞ்சம் திருட்டுமுழி, வெள்ளந்தியான கிராமத்து முகவெட்டு, கொஞ்சம் கோயமுத்தூர் மண்வாசனைக் கலந்த பேச்சு, ஒரு ஆடு மனிதனைப் போல் மிமிக்கிரி செய்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு தனித்தன்மையான குரலுக்கு சொந்தக்காரர் - கல்லாப்பெட்டி சிங்காரம்.

சொந்த ஊர் கரூர் என்றாலும் அவர் நாடகம் போடாத ஊரே கிடையாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு தமிழகத்தை தாண்டியும் பல இடங்களுக்கு சென்று நாடகம் போட்டவர். நாடக நடிகராக ஆரம்பித்து ஒரு வெற்றிகரமான நாடகக் குழுவுக்கு சொந்தமானவராகவும் திகழ்ந்தார், கல்லாபெட்டி சிங்காரம்.

நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த போது கல்லாபெட்டி சிங்காரமும் சினிமாவில் அறிமுகமானார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' படத்தில் நகை திருடும் வியாபாரி வேடத்தில் நாகேஷ் உடன் நடித்திருப்பார், கல்லாபெட்டி சிங்காரம்.

அதன் பிறகு காவல்காரன், அத்தைமகள், சொர்க்கம், மறுபிறவி, எடுப்பார் கைப்பிள்ளை, குமார விஜயம் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். பத்தாண்டுகள் சினிமாவில் நடித்தாலும் தனக்கு ஒரு பெரிய வாய்ப்பு வரவில்லையே என்று அவருக்கு சினிமா மீதே வெறுப்பு வந்துவிட்டதாம்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமா பக்கம் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. தனக்கு வருமானமும், பெயரும், புகழும் தரும் நாடகத்தில் மட்டுமே முழுகவனத்தையும் செலுத்தி வந்தார்.

தேனம்பேட்டை பகுதியில் தான் நாடக நடிகர்கள் பெரும்பாலும் வசித்தனர். அதிலும் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 92 சி என்றொரு மேன்ஷன் இருந்தது. அந்த மேன்ஷனில் பலர் இருந்தனர். அதில் சங்கிலி முருகன், செந்தில், பாக்யராஜ், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த சின்ன முருகன் என பலரும் தங்கி இருந்தனர். அதில் சின்ன முருகனுடன் கல்லாபெட்டி சிங்காரமும் தங்கி இருந்தார்.

கல்லாபெட்டி சிங்காரம் கரூர்க்காரர். கொங்கு வட்டார மொழியில் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு அவரின் பேச்சு, பாடி லாங்வேஜ் இருக்கும். அப்படி அவருடைய பேச்சு, உடல் மொழியால் ஈர்க்கப்பட்டார், அங்கு தங்கி இருந்த பாக்யராஜ்.

அப்போது பாக்யராஜ் இயக்குநராகவில்லை. நாம் இயக்குநராகும் போது கல்லாப்பெட்டி சிங்காரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாராம். நினைத்தது போலவே அவருக்கு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பட வாய்ப்பு கிடைத்ததும், தனது முதல் படத்தில் தனக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பை கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு கொடுத்துள்ளார்.

அதுவரை இரண்டாண்டுகள் சினிமா பக்கமே தலை காட்டாத கல்லாப்பெட்டி சிங்காரம், தனக்கு பெரிய வாய்ப்பை கொடுத்து அங்கீகரித்திருக்கும் பாக்யராஜ் மீது கொண்ட மரியாதையால் அந்த பாத்திரமாகவே மாறிப் போனார்.

அந்தப் படம் வெளியான போது கல்லாபெட்டி சிங்காரத்தின் பிரத்யேகமான அந்த 'வாய்ஸ்' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

"அடேய்.. அடேய்... அழகப்பா... இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா..." என்று தன் மகன் பாக்யராஜுடன் கோபிப்பதாக இருக்கட்டும், கவுண்டமணியின் தையல்கடையில் உர்கார்ந்துக் கொண்டு "கண்ணடிச்சா வராத பொம்பளை...கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..?" என்று திரும்பத் திரும்ப கேட்டுவிட்டு, பின்னால் நிற்கும் மனைவி காந்திமதியைப் பார்த்தவுடன் வழிவதாக இருக்கட்டும் என முதல்பாதி முழுக்க சிரிக்க வைப்பார். அதிலும் அவர் "லட்சுமி அக்கா"-வின்  கதை சொல்லும் அழகே தனி.

கல்லாப்பெட்டி சிங்காரத்தின் நடிப்பில் மகுடமாய் அமைந்தது அடுத்து வந்த ‘இன்று போய் நாளை வா' திரைப்படம். சராசரியை விட குள்ளம், மெலிந்த தேகம், பார்த்த உடனே 'பக்' என்று சிரிப்பை வரவழைக்கும் முகம், ஆடு அடிதொன்டையில் பேசுவதுபோல் குரல் என நகைச்சுவைப் பாத்திரத்திற்கேற்ற உருவ அமைப்புடைய ஒருவர் பயில்வானாக நடிப்பதென்பது சாத்தியப்படுமா..?. அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அத்தனை குறைகளையும் ஒட்டு மொத்தமாகத் தூக்கி சாப்பிட்டு விடும்.

காமா பயில்வானின் ஒரே சிஷ்யனான சோமா பயில்வானாக வருவார். "வெரிகுட்..வெரிகுட்......", "கமான்..கமான்.... குயிக்..குயிக்..",  "தேங் யு...தேங் யு...", "ஓக்கே பை.. ஓக்கே பை" என்று ஷோல்டரை உலுக்கி, கண்களை உருட்டி அவர் சொல்லும் ஸ்டைல் அலாதியானது.   

'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பாக்யராஜுக்கு அப்பா வேடம். பணக்கார வேஷம் போடும் ஏழை வாட்ச்மேன். கேட்கவா வேண்டும்...? ஒரு கட்டத்தில் முதலாளியின் மகள் பூர்ணிமா மனது மாறி பாக்யராஜை திருமணம் செய்ய சம்மதித்து விடுவார். அதை பாக்யராஜின் அப்பாவாகிய கல்லாபெட்டியிடம் தெரியப் படுத்துவது போல் காட்சி. அவரின் காலில் விழுந்து, "என்னை ஆசீர்வாதம் செய்யுங்க மாமா...." என பூர்ணிமா சொல்லும்போது, " மாமா.. நான் மாமா.." என்று வார்த்தைகள் வராமல் சந்தோசத்தில் நெஞ்சுவலியே வந்து சாய்ந்துவிடுவார். இன்னமும் நினைத்துப் பார்த்து சிரிக்கத் தூண்டும் காட்சி அது. அந்தக் காட்சியில் கல்லாபெட்டியைத் தவிர யார் செய்திருந்தாலும் இவ்வளவு அற்புதமாக அமைந்திருக்காது.

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு இன்னொரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார்.

அதே போல் "எடுத்து ஊத்திகிட்டா என்ன.. எறங்கி முங்குனா என்ன.. எப்படியும் குளியல் ஒன்னுதானடா..!" என்று இந்தப் படத்தில் கல்லாப்பெட்டி அடிக்கும் பஞ்ச்க்கு தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பு மழை.

பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்ககள் படத்திலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. “பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்” என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை.

மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும்.

அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.

பாக்யராஜ் காம்பினேசன் தவிர்த்து அவர் நடித்த மற்றப் படங்களிலும் நகைச்சுவையோடுக் கலந்த குணச்சித்திர வேடங்களில் கச்சிதமாகக் கலக்கியிருப்பார்.

காக்கிச்சட்டை படத்தில் கமலைப் போலீஸ் வேலைக்குத் தயார் செய்யும் ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நடித்திருப்பார். உதயகீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர், உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார்.

கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் “நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?” என்பார்.

அதில் கவுண்டமணியிடம் அவர் பேசும் "டேய் எங்க இனம் இருக்கே.. அது கவரிமான் இனம். ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரோடு இருக்காது. செத்துப் போகும்." என்று கல்லாப்பெட்டி சிங்காரம் பேச, அதற்கு கவுண்டமணி, "நைனா..கொஞ்சம் குனி.. ம்ஹும்.. தலையைப் பாரு காஞ்சிபோன மைதானம் மாதிரி... ஒரு முடிக்கு ஒரு தடவை நீ செத்திருந்தாலும்.. இந்நேரம் எத்தினியோ தடவை செத்திருக்குனுமே நைனா.." என்று சிரிக்க வைப்பார்.

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும் காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள்.

எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். அந்த 'மாங்கா' காமெடி இன்றளவும் நினைத்துடனையே சிரிப்பை வரவழைக்கக் கூடியதே..!

பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் ”நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?”. ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார் என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது.

எண்பதுகளில் தவிர்க்கமுடியாத நகைச்சுவைக் கலைஞனாக உருவெடுத்த கல்லாப்பெட்டி சிங்காரம் தொன்னூறுகளின் ஆரம்பத்திலே தனது கலையுலகப் பயணத்தோடு தன் வாழ்க்கைப் பயணத்தையும் முடித்துக் கொண்டார்.

நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு 1990-ல் வெளிவந்த 'கிழக்கு வாசல்', அவரின் கடைசிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் 'அமரர் திரு கல்லாப்பெட்டி சிங்காரம்' என்று தான் டைட்டிலில் கார்டில் பதிவு செய்தனர். 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 தேதி பிறந்து தனது நடிப்பு மூலம் மக்களை சிரிக்க வைத்த அந்த கலை பொக்கிஷம், மகா கலைஞன் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 தேதி தனது 52 வது வயதில் மறைந்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக