செவ்வாய், 29 ஜூலை, 2014

பாடும் நிலா பாலு



பாடும் நிலா என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் நாள் ஆந்திராவில் உள்ள கொகேணட்டாம் பேட்டை என்ற ஊரில் பிறந்தார் 

இவரது தந்தை ஹரி கதா காலட்சேபம் நடத்துபவர். அது மட்டுமின்றி நாடக நடிகரும் கூட.  இசையில் நாட்டம் கொண்டவராக விளங்கிய பாலசுப்ரமணியம் புல்லாங்குழல் ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க இளம் வயதிலேயே  பயிற்சி பெற்றார்

கல்லூரியில் படிக்கும்போது பல பாடல் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகள் வாங்கிய  பாலு சென்னை வந்து ஒரு இசைக் குழுவை ஆரம்பித்தார் இன்று தலை சிறந்த இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா, அவரது சகோதரர்களான பாஸ்கர் கங்கை அமரன் ஆகியோர்  அந்த இசைக்குழுவில்  பாலுவோடு இணைந்திருந்தனர்

இசையமைப்பாளர் கோதண்டபாணி பாடகர் கண்டசாலா ஆகியோர் தலைமையில் நடந்த ஒரு இசைப்போட்டியில் கலந்து கொண்டு பாடி முதல் பரிசு பெற்றது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது  இவரது இசைத் திறனால் ஈர்க்கப்பட்ட கோதண்டபாணி அவரது இசையில் ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் படும் வாய்ப்பை பாலுவிற்கு வழங்கினார்  இது நடந்தது 1966 ஆம் ஆண்டில் .

தெலுங்கு பட வாய்ப்பைத் தொடர்ந்து கன்னடத்தில் படும் வாய்ப்பைப் பெற்ற பாலசுப்பிரமணியம் தமிழில் முதன் முதலாக பாடியது `சாந்தி நிலையம்படத்திற்காக . இப்படத்தில்  இடம் பெற்ற `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணிபாடல்தான் இவர் பாடிய முதல் தமிழ்ப்  பாடல்  ஆனால் இவர் பாடி முதலில் திரைக்கு வந்த படம் `அடிமைப் பெண். இப்படத்தில் `ஆயிரம் நிலவே வா! என்று தொடங்கும் பாடலை எம்.ஜி.ஆருக்காக பாடியிருந்தார் இவர் 

இதைத் தொடர்ந்து மலையாளத்தில் பாடுகின்ற வாய்ப்பை இவருக்குத் தந்தவர் இசையமைப்பாளர் தேவராஜன். கடல் பாலம் என்ற படத்தில் இவர் பாடிய முதல் மலையாளப் பாடல் இடம் பெற்றது

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி எனஒரு டஜன்  இந்திய மொழிகளில் இதுவரை 42,000 பாடல்களுக்கு மேல் பாடிய பெருமை இவருக்கு மட்டுமே சொந்தமானது

கன்னட இசையமைப்பாளர் உபேந்திராவின் இசையில் காலை 9 லிருந்து இரவு 9 க்குள் 12 மணி நேரத்தில்  21 பாடலைப்பாடி அசுர சாதனை புரிந்த இவர்  ஒரே நாளில் 19 தமிழ்ப்பாடல்களைப்பாடியும்  சாதனை புரிந்திருக்கிறார்

`கேளடி கண்மணி படத்தில் `மண்ணில் இந்தக் காதல் இன்றி  என்ற பாடலையும் `அமர்க்களம்படத்தில் `சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்என்று தொடங்கும் பாடலையும  மூச்சுவிடாமல் பாடியது இவரது இன்னொரு சாதனை  .

முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்ற போதிலும் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை அற்புதமாகப் பாடி உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற இவர் அப்படத்திற்காக தேசிய விருதினையும் வென்றார் தமிழ், தெலுங்கு கன்னடம் இந்தி என நான்கு மொழிகளில் சிறந்த பாடகராகத் தேர்ந்தேடுக்கப்பட்டு    தேசிய விருதினை பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்ற இவருக்கு  2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது. சிறந்த பாடகர்களுக்காக ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதினை 25 முறை பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமையும் இவருக்குண்டு   

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் இவர் பெற்ற பிலிம்பேர் விருதுகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. தமிழக  மற்றும் கர்நாடக அரசுகளின்  விருதுகளும் பல முறை இவரைத் தேடி வந்துள்ளன

எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி, ஜேசுதாஸ். .ஆர்.ரஹ்மானின் இசை மீது இவருக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், இளையராஜாவை இவருக்கு ரொம்பவும் பிடிக்கும் 

இளையராஜா-எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்துள்ளன. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும் போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று பாடும்போது பல ஜாலங்களை பாட்டில் வெளிப்படுத்தக் கூடியவர் எஸ்.பி.பி.

இவர் இணைந்து பாடாத பாடகர் பாடகிகளே இல்லை என்கின்ற அளவிற்கு எல்லா பின்னணிப் படகர்களோடும் பாடியுள்ள இவர் அதிகமாக இணைந்து  பாடியது    எஸ் .ஜானகியோடுதான்

தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் இவர் மேற்கொள்வது இல்லை.  ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார். சுத்தமான சைவ உணவுப் பழக்கம் உள்ளவர். இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள்தானாம்  இவருக்குப் பிடித்த உணவுதயிர் சாதம்!

`துடிக்கும் கரங்கள்படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கும் இவர். தெலுங்குப் படங்களில் நிறைய `ராப்பாடல்களும் எழுதி இருக்கிறார்

இவர் சிறந்த பின்னணிப்பாடகர் மட்டுமல்ல –சிறந்த பின்னணிப் பேச்சுக் கலைஞரும் கூட. கமல்ஹாசன் தமிழில் நடித்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படும் எல்லா  படங்களிலும் கமல்ஹாசனுக்கு குரல் கொடுப்பவர் இவரே  கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்பத்தின் தெலுங்குப் பதிப்பில் கமல்ஹாசன் ஏற்ற பத்து வேடங்களில் ஏழு வேடங்களுக்குக் குரல்கொடுத்த இவர்  அப்படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான   ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றார்  

பாடலைத் தவிர, நடிப்பிலும் தன் திறமையை நிருபித்துள்ள இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் தீவிர  வெறியரான  இவரது கிரிக்கெட் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் தன் கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்குப் பரிசாக  அளித்திருக்கிறார்.  

இவர் பிரமாதமாக ஓவியம் வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். கடந்த 20 வருடங்களில் மிக அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்ட இவர்  போகாத நாடுகளே  இல்லை எனலாம்

ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி சாவித்திரி என்பவரை காதலித்து மணந்தவர். இவர்களுக்கு பல்லவி என்கிற மகளும், சரண் என்கிற மகனும் உள்ளனர். பல்லவி ஒரு பாடகியும் கூட  . சரண் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இன்னும் இரண்டாண்டுகளில் திரையுலகில் பொன்விழாக் காண இருக்கும் கலைஞரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் எண்ணற்ற சாதனைகளை  முறியடிக்கக் கூட ஒருவர் வரக்கூடும். ஆனால் இத்தனை சாதனைகளைச் சாதித்த பின்னரும் அடக்கத்தின் மறு உருவமாக இருக்கிறாரே அந்தச்  சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான்.