வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் வாழ்க்கை வரலாறு

கொஞ்சம் திருட்டுமுழி, வெள்ளந்தியான கிராமத்து முகவெட்டு, கொஞ்சம் கோயமுத்தூர் மண்வாசனைக் கலந்த பேச்சு, ஒரு ஆடு மனிதனைப் போல் மிமிக்கிரி செய்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு தனித்தன்மையான குரலுக்கு சொந்தக்காரர் - கல்லாப்பெட்டி சிங்காரம்.

சொந்த ஊர் கரூர் என்றாலும் அவர் நாடகம் போடாத ஊரே கிடையாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு தமிழகத்தை தாண்டியும் பல இடங்களுக்கு சென்று நாடகம் போட்டவர். நாடக நடிகராக ஆரம்பித்து ஒரு வெற்றிகரமான நாடகக் குழுவுக்கு சொந்தமானவராகவும் திகழ்ந்தார், கல்லாபெட்டி சிங்காரம்.

நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த போது கல்லாபெட்டி சிங்காரமும் சினிமாவில் அறிமுகமானார். 1976 ஆம் ஆண்டு வெளிவந்த 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' படத்தில் நகை திருடும் வியாபாரி வேடத்தில் நாகேஷ் உடன் நடித்திருப்பார், கல்லாபெட்டி சிங்காரம்.

அதன் பிறகு காவல்காரன், அத்தைமகள், சொர்க்கம், மறுபிறவி, எடுப்பார் கைப்பிள்ளை, குமார விஜயம் போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தார். பத்தாண்டுகள் சினிமாவில் நடித்தாலும் தனக்கு ஒரு பெரிய வாய்ப்பு வரவில்லையே என்று அவருக்கு சினிமா மீதே வெறுப்பு வந்துவிட்டதாம்.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் சினிமா பக்கம் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. தனக்கு வருமானமும், பெயரும், புகழும் தரும் நாடகத்தில் மட்டுமே முழுகவனத்தையும் செலுத்தி வந்தார்.

தேனம்பேட்டை பகுதியில் தான் நாடக நடிகர்கள் பெரும்பாலும் வசித்தனர். அதிலும் தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 92 சி என்றொரு மேன்ஷன் இருந்தது. அந்த மேன்ஷனில் பலர் இருந்தனர். அதில் சங்கிலி முருகன், செந்தில், பாக்யராஜ், ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த சின்ன முருகன் என பலரும் தங்கி இருந்தனர். அதில் சின்ன முருகனுடன் கல்லாபெட்டி சிங்காரமும் தங்கி இருந்தார்.

கல்லாபெட்டி சிங்காரம் கரூர்க்காரர். கொங்கு வட்டார மொழியில் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு அவரின் பேச்சு, பாடி லாங்வேஜ் இருக்கும். அப்படி அவருடைய பேச்சு, உடல் மொழியால் ஈர்க்கப்பட்டார், அங்கு தங்கி இருந்த பாக்யராஜ்.

அப்போது பாக்யராஜ் இயக்குநராகவில்லை. நாம் இயக்குநராகும் போது கல்லாப்பெட்டி சிங்காரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டாராம். நினைத்தது போலவே அவருக்கு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ பட வாய்ப்பு கிடைத்ததும், தனது முதல் படத்தில் தனக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பை கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு கொடுத்துள்ளார்.

அதுவரை இரண்டாண்டுகள் சினிமா பக்கமே தலை காட்டாத கல்லாப்பெட்டி சிங்காரம், தனக்கு பெரிய வாய்ப்பை கொடுத்து அங்கீகரித்திருக்கும் பாக்யராஜ் மீது கொண்ட மரியாதையால் அந்த பாத்திரமாகவே மாறிப் போனார்.

அந்தப் படம் வெளியான போது கல்லாபெட்டி சிங்காரத்தின் பிரத்யேகமான அந்த 'வாய்ஸ்' ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

"அடேய்.. அடேய்... அழகப்பா... இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா..." என்று தன் மகன் பாக்யராஜுடன் கோபிப்பதாக இருக்கட்டும், கவுண்டமணியின் தையல்கடையில் உர்கார்ந்துக் கொண்டு "கண்ணடிச்சா வராத பொம்பளை...கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..?" என்று திரும்பத் திரும்ப கேட்டுவிட்டு, பின்னால் நிற்கும் மனைவி காந்திமதியைப் பார்த்தவுடன் வழிவதாக இருக்கட்டும் என முதல்பாதி முழுக்க சிரிக்க வைப்பார். அதிலும் அவர் "லட்சுமி அக்கா"-வின்  கதை சொல்லும் அழகே தனி.

கல்லாப்பெட்டி சிங்காரத்தின் நடிப்பில் மகுடமாய் அமைந்தது அடுத்து வந்த ‘இன்று போய் நாளை வா' திரைப்படம். சராசரியை விட குள்ளம், மெலிந்த தேகம், பார்த்த உடனே 'பக்' என்று சிரிப்பை வரவழைக்கும் முகம், ஆடு அடிதொன்டையில் பேசுவதுபோல் குரல் என நகைச்சுவைப் பாத்திரத்திற்கேற்ற உருவ அமைப்புடைய ஒருவர் பயில்வானாக நடிப்பதென்பது சாத்தியப்படுமா..?. அவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அத்தனை குறைகளையும் ஒட்டு மொத்தமாகத் தூக்கி சாப்பிட்டு விடும்.

காமா பயில்வானின் ஒரே சிஷ்யனான சோமா பயில்வானாக வருவார். "வெரிகுட்..வெரிகுட்......", "கமான்..கமான்.... குயிக்..குயிக்..",  "தேங் யு...தேங் யு...", "ஓக்கே பை.. ஓக்கே பை" என்று ஷோல்டரை உலுக்கி, கண்களை உருட்டி அவர் சொல்லும் ஸ்டைல் அலாதியானது.   

'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் பாக்யராஜுக்கு அப்பா வேடம். பணக்கார வேஷம் போடும் ஏழை வாட்ச்மேன். கேட்கவா வேண்டும்...? ஒரு கட்டத்தில் முதலாளியின் மகள் பூர்ணிமா மனது மாறி பாக்யராஜை திருமணம் செய்ய சம்மதித்து விடுவார். அதை பாக்யராஜின் அப்பாவாகிய கல்லாபெட்டியிடம் தெரியப் படுத்துவது போல் காட்சி. அவரின் காலில் விழுந்து, "என்னை ஆசீர்வாதம் செய்யுங்க மாமா...." என பூர்ணிமா சொல்லும்போது, " மாமா.. நான் மாமா.." என்று வார்த்தைகள் வராமல் சந்தோசத்தில் நெஞ்சுவலியே வந்து சாய்ந்துவிடுவார். இன்னமும் நினைத்துப் பார்த்து சிரிக்கத் தூண்டும் காட்சி அது. அந்தக் காட்சியில் கல்லாபெட்டியைத் தவிர யார் செய்திருந்தாலும் இவ்வளவு அற்புதமாக அமைந்திருக்காது.

ஒரு காட்சியில் பூர்ணிமா அறையில் எதையோ தேடும் பாக்யராஜை அவர் பூர்ணிமாவுடன் சரசத்தில் இருப்பதாக நினைத்து எல்லையில்லா  சந்தோஷமும் பொய்க்கோபமும் கொப்பளிக்க அவர்கள் இருவரையும் கண்டிக்கும் காட்சி அவரது நடிப்புத் திறனுக்கு இன்னொரு சான்று. ஒருபுறம் முதலாளியின் மகள் தன் மகனுக்குத் தான் என்ற குதூகலம்,  அதே சமயம் தான் பொறுப்பான தகப்பன் என்பதைக் காட்ட வேண்டிய ஆர்வம் இரண்டும் கலக்க துள்ளலுடன் முன்னும் பின்னும் நடந்து திட்டிக்கொண்டே இருப்பார்.

அதே போல் "எடுத்து ஊத்திகிட்டா என்ன.. எறங்கி முங்குனா என்ன.. எப்படியும் குளியல் ஒன்னுதானடா..!" என்று இந்தப் படத்தில் கல்லாப்பெட்டி அடிக்கும் பஞ்ச்க்கு தியேட்டரில் அப்படி ஒரு சிரிப்பு மழை.

பாக்யராஜின் வீட்டு ஓனராக நடித்த அந்த ஏழு நாட்ககள் படத்திலும் தன் தனிச் சிறப்பை அவர் பதிவு செய்தார். வீடு பார்க்க பாக்யராஜிடம் அவரது உயர்த்திய வேட்டியை கீழே சொல்லும் காட்சி இயல்பான நகைச்சுவைக்கு ஒரு சான்று. “பொண்ணை மட்டுமில்லாமல் பொண்ணோட அம்மாவையும் சேத்துத் தள்ளிக்கிட்டுப் போய்விடுவானுங்கள்” என்ற பயத்தில்  பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கும் வீடு சொந்தக் காரர் வேடம். சிறிய வேடங்கள் என்றாலும் தனக்குரிய பாணியில் முத்திரை பதிக்க கல்லாபெட்டி தயங்கியதே இல்லை.

மகேந்திரனுக்கு சாமிக்கண்ணு, குமரிமுத்து, வெண்ணிறாடை மூர்த்தி. பாரதிராஜாவின் பல படங்களில் அவரது உதவியாளர்கள் எங்காவது தலைகாட்டிக் கொண்டே இருப்பார்கள். பாலுமஹேந்திரா படங்களில் பெரியவர் சொக்கலிங்க பாகவதர் அடிக்கடி வருவார். அது போல் பாக்யராஜ், சிறு வேடம் என்றாலும் கதையுடன் ஒட்டிய பாத்திரங்களை கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு தன் பல  படங்களில் தந்தார். அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரே இயக்குனர் பாக்யராஜ் தான் என்று சொல்லவேண்டும்.

அவர் இயக்கிய சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, டார்லிங் டார்லிங் டார்லிங், இன்று போய் நாளை வா போன்ற படங்களில் கல்லாப்பெட்டி  ஏற்று நடித்தப் பாத்திரங்கள் தனித்த நகைச்சுவைக்காக இன்றும் பேசப்படுகின்றன.

பாக்யராஜ் காம்பினேசன் தவிர்த்து அவர் நடித்த மற்றப் படங்களிலும் நகைச்சுவையோடுக் கலந்த குணச்சித்திர வேடங்களில் கச்சிதமாகக் கலக்கியிருப்பார்.

காக்கிச்சட்டை படத்தில் கமலைப் போலீஸ் வேலைக்குத் தயார் செய்யும் ஒரு பொறுப்புள்ள அப்பாவாக நடித்திருப்பார். உதயகீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் தந்தையாக வந்து அவரைக் கரித்துக் கொட்டிக்கொண்டே இருப்பார். அப்படி திட்டிய பின்னர், உத்திரத்தில் இருந்து  தொங்கும் கால்களையும் சிந்திக் கிடக்கும் சிவப்பு பெயின்டையும் வைத்து கவுண்டமணி தன் கண்டிப்பால் தற்கொலை செய்துகொண்டு விட்டாரோ என்று அதிர்ச்சியடைவார்.

கவுண்டமணியின் ஜெயில் சிநேகிதத்தை வைத்து செந்தில் கல்லாப்பெட்டி வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் களவாடி சென்ற பின்னர், கட்டிய துண்டுடன்  சிறையில் இருக்கும் மகனை சந்திக்க வருவார் “நல்லவேளை துண்ட விட்டுட்டுப் போய்ட்டான்..இல்லேன்னா என் கதி என்ன?” என்பார்.

அதில் கவுண்டமணியிடம் அவர் பேசும் "டேய் எங்க இனம் இருக்கே.. அது கவரிமான் இனம். ஒரு முடி உதிர்ந்தாலும் உயிரோடு இருக்காது. செத்துப் போகும்." என்று கல்லாப்பெட்டி சிங்காரம் பேச, அதற்கு கவுண்டமணி, "நைனா..கொஞ்சம் குனி.. ம்ஹும்.. தலையைப் பாரு காஞ்சிபோன மைதானம் மாதிரி... ஒரு முடிக்கு ஒரு தடவை நீ செத்திருந்தாலும்.. இந்நேரம் எத்தினியோ தடவை செத்திருக்குனுமே நைனா.." என்று சிரிக்க வைப்பார்.

ஒரு படத்தில் காது கேளாத பாத்திரத்தில் கல்லாப்பெட்டியும் கரிக்கோல் ராஜும் வருவார்கள். சுற்றி பூகம்பமே வந்தாலும் காதுகளுக்கு சத்தம் எட்டாமல் தங்களுக்குள் சந்தோஷமாக உரையாடிக்கொண்டே இருப்பார்கள்.

எங்க ஊருப் பாட்டுக்காரன் படத்தில் அதிர்ஷ்டமற்ற செந்தில் எங்கு வேலைக்கு சென்றாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும். அந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் வரும் கல்லாப்பெட்டி சிங்காரத்திடம் வேலைக்கு சேர்வார் செந்தில். சேர்ந்த முதல் நாளே வாயில் மாங்காயைக் கடித்தபடியே இறந்து விடுவார் கல்லாப்பெட்டி சிங்காரம். அவர் மனைவி செந்திலை ஆத்திரத்தில் அடிபின்னிவிடுவார். அந்த 'மாங்கா' காமெடி இன்றளவும் நினைத்துடனையே சிரிப்பை வரவழைக்கக் கூடியதே..!

பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் இருவரும் நடித்த, மலையாள ரீமேக் படமான கதாநாயகன் என்ற படத்தில் அவர்களின் வீட்டு உரிமையாளராக வருவார். கோனார் வேடத்தில் நடித்த கல்லாப்பெட்டியிடம் சேகர் கேட்பார் ”நீங்க தானே கோனார் நோட்ஸ் எழுதுனீங்க?”. ஏற்கனவே வாடகை தராமல் இழுத்தடிக்கும் அவர்களின் கிண்டலை கேட்டு கடுப்பாகி திட்டுவார் கல்லாப்பெட்டி. இது போன்ற சிறு பாத்திரங்களில் பல படங்களில் நடித்தார் என்றாலும் அவரது பிரத்யேகக் குரல் அந்த சிறு பாத்திரங்களையும் மிளிரச் செய்தது.

எண்பதுகளில் தவிர்க்கமுடியாத நகைச்சுவைக் கலைஞனாக உருவெடுத்த கல்லாப்பெட்டி சிங்காரம் தொன்னூறுகளின் ஆரம்பத்திலே தனது கலையுலகப் பயணத்தோடு தன் வாழ்க்கைப் பயணத்தையும் முடித்துக் கொண்டார்.

நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கல்லாப்பெட்டி சிங்காரத்துக்கு 1990-ல் வெளிவந்த 'கிழக்கு வாசல்', அவரின் கடைசிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் 'அமரர் திரு கல்லாப்பெட்டி சிங்காரம்' என்று தான் டைட்டிலில் கார்டில் பதிவு செய்தனர். 1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 தேதி பிறந்து தனது நடிப்பு மூலம் மக்களை சிரிக்க வைத்த அந்த கலை பொக்கிஷம், மகா கலைஞன் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 தேதி தனது 52 வது வயதில் மறைந்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்


நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் வாழ்க்கை வரலாறு

கரூரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருக்காம்புலியூர் என்ற கிராமத்தில் 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி பிறந்தவர், டி.ஆர்.ராமச்சந்திரன். அப்பா ரங்காராவ் எளிய விவசாயி. இவருக்கு நான்கு வயது இருக்கும் போதே இவருடைய அம்மா ரங்கம்மாள் காலமாகிவிட, இவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் பாட்டியின் ஊரான குளித்தலைக்கு சென்று வளர்ந்தவர் அங்குதான் படித்தார்.

விடுமுறைக்கு அப்பாவை காண திருக்காம்புலியூர் வரும் ராமச்சந்திரனுக்கு அங்கு வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வாய்ப்பாட்டுடன் ஆர்மோனியமும் கற்றுக்கொடுத்தவர் கரூர் ராகவேந்திராவ். இவர் நாடகங்களில் பின்பாட்டுப் பாடும் பாடகர். அவர் நடிப்பது போன்ற பாவனைகளுடன் பாடக் கற்றுக்கொடுக்க, ராமச்சந்திரனுக்கு நடிப்புமீது காதல் வந்துவிட்டது.

அப்பாவின் அனுமதியுடன் ராகவேந்திரராவுடன் ஒட்டிக்கொண்ட ராமச்சந்திரன் திருச்சி, தஞ்சாவூர், மதுரை என்று நாடகக் குழுக்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார்.

பிறகு பள்ளிக் கல்வியைக் கஷ்டப்பட்டு முடித்த ராமச்சந்திரனை திருச்சி நேஷனல் கல்லூரியில் சேர்க்க நினைத்திருக்கிறார் அப்பா. ஆனால், படிப்பு வேண்டாம் எனக்கு நடிப்பு போதும் என்று கூறி, மதுரையில் உள்ள நாடகக் கம்பெனியில் சேர அனுமதி கேட்டார் ராமச்சந்திரன்.

மகனின் விருப்பத்துக்கு அப்பா தடை போடவில்லை. மதுரையின் புகழ்பெற்ற நாடக கம்பெனிகளில் ஒன்றான ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’வில் நடிகராகச் சேர்ந்தார் ராமச்சந்திரன். ஜெகன்நாத ஐயர் வாத்தியாராகவும் முதலாளியாகவும் இருந்து நடத்திவந்த இந்த நாடகக் குழுவில் ஸ்திரீ பார்ட் போடுபவர்களுக்குத் தோழியாக நடிக்க ஆரம்பித்தார், ராமச்சந்திரன். தங்க இடம், மூன்று வேளை சாப்பாடு உட்பட மாதம் 3 ரூபாய் சம்பளத்துடன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவரது நடிப்புத்திறமையைக் கண்ட சக நடிகரான எஸ்.வி. வெங்கடராமன் பின்னாளில் தனியாக நாடக கம்பெனி தொடங்கியபோது 25 ரூபாய் சம்பளத்துடன் ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டார். அவருடைய கம்பெனியில் சேர்ந்தவுடன் ராமச்சந்திரனுக்கு படவாய்ப்பை கிடைத்தது.

காரைக்குடியில் வெங்கட்ராமன் குழுவின் திறமையைக் கண்ட ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், பிரகதி பிக்சர்ஸ் கம்பெனி சார்பில் தயாரித்த ‘நந்தகுமார்’ படத்தில் நடிக்க வெங்கட்ராமன் நாடகக் குழுவில் இருந்த அத்தனை பேரையும் ஒப்பந்தம் செய்தார்.

அந்தப் படத்தில் டி.ஆர். ராமச்சந்திரன், டி. ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார். சின்னக் கதாபாத்திரம் என்றாலும் தனித்துத் திறமையைக் காட்டிய ராமச்சந்திரனை ஏவி.மெய்யப்பச் செட்டியாருக்கு மிகவும் பிடித்துப் போனது. 1938 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தகுமார் படம் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் இரண்டாண்டுகள் எந்த வாய்ப்பும் இல்லாமல் காலத்தைக் கழித்த இராமச்சந்திரனுக்கு, வாயாடி திரைப்படத்தில் மாதுரிதேவியுடன் நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் நவீன மார்க்கண்டேயா, திருவள்ளுவர், வானரசேனை ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மக்கள் மன இறுக்கத்துடன் இருந்தார்கள். இந்த நேரத்தில் நகைச்சுவைப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும் என்று நினைத்த ஏவி.மெய்யப்பச் செட்டியார், பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நகைச்சுவை நாடகமான ‘சபாபதியை’, அதே பெயரில் படமாக்குவது என்று முடிவு செய்தார். ஏற்கனவே சபாபதி நாடகத்தில் நடித்திருந்த ராமச்சந்திரனை நாயகனாக்கினார்.

படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாள்வீச்சு தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுகளை எல்லாம் அந்த கதை உடைத்தது. முழு நீள நகைச்சுவை காவியாமான அந்தப் படத்தில் 5 பாடல்களை சொந்தக் குரலில் பாடினார் டி.ஆர். ராமச்சந்திரன். நாற்பது லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்ததுடன் நூறு நாள் படமாகவும் அமைந்தது.

சபாபதி படத்தின் வெற்றியால் டி.ஆர்.இராமச்சந்திரன் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் செல்லப் பிள்ளையானார். உலக போர் முடிந்த பிறகு சென்னைக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ இடமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஏ.வி.எம் தயாரித்த பெரும்பாலான வெற்றிப் படங்களில் ராமச்சந்திரனுக்காவே ரகளையான காமெடி கதாபாத்திரங்கள் முக்கியவத்துடன் உருவாக்கப்பட்டன.

1940-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் கோலோச்சியவர் டி.ஆர். ராமச்சந்திரன். அதிலும் செல்வந்தர் குடும்ப இளைஞர்களைப் பிரதிபலிக்கும் கேலியான கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். ஒரு விதமான பதற்றம் கலந்த இவரது நகைச்சுவை உணர்ச்சி தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப் போட்டது.

இன்னும் சொல்லப் போனால் காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கி வைத்தவர் இந்த டி.ஆர்-ராமச்சந்திரன் தான். இவர் ஹீரோவாக நடித்த, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் சிவாஜியே செகண்ட் ஹீரோதான். அந்தப் படத்தில் சிவாஜிக்கு ஜோடி பத்மினி என்றால், டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு ஜோடி ராகினி. மேலும் வைஜெயந்திமாலா, அஞ்சலி தேவி, சாவித்ரி எனப் பல முன்னணி கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்தார்கள்.

டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த எத்தனையோ படங்கள் நம் நினைவில் நிற்கக் கூடியவை. அறிவாளி, இருவர் உள்ளம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் கூட வரதன் என்கிற பாத்திரம் ஏற்றிருப்பார். சிறு பாத்திரமானாலும் அவரின் நடிப்பு நினைவில் நிற்கும். ரசிக்கும்படியும் இருக்கும்.

அறிவாளி படத்தில் “ஏக் லவ்” என்ற பெயரில் நடிகர் திலகத்திற்கு நண்பனாய் வருவார். முரட்டு பானுமதியை அடக்கிக் கல்யாணம் பண்ண சிபாரிசு செய்து, அவரது தங்கையான சரோஜாவைத் தான் திருமணம் செய்து கொள்ள ஐடியா பண்ணுவார்.

இருவர் உள்ளம் திரைப்படம் நாம் அனைவரும் அறிந்து, ஒரு முறைக்குப் பலமுறை பார்த்து ரசித்ததே. கடைசிக் கிளைமாக்ஸ் காட்சியில் டி.ஆர்.ராமச்சந்திரனின் அபாரமான நடிப்பு பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும். ஒரு அசடு, ஒரு கொலையையும் பண்ணிட்டு என்ன பாடு படுத்துது எல்லோரையும் என்று வியந்த காலம் அது.

தனக்கு அமைந்த உடலமைப்பு, குரல் வளம், உருவ அமைப்பு, இவற்றையே மூலதனமாக்கிக்கொண்டு ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களிலும் சிறப்புறத் தன் திறமையைக் காட்டிய அற்புதமான நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.

அன்பே வா படத்தில் பாப்பு பாப்பு என்று சரோஜாதேவின் தந்தையாக புண்ணாக்கு வியாபாரி புண்ணியகோடியாக வந்து சிரிக்க வைப்பார்.

அவர் நடித்த சாது மிரண்டால், ஆலயமணி, புனர்ஜென்மம், அடுத்த வீட்டுப் பெண், வண்ணக்கிளி, யார் பையன், மணமகன் தேவை, பாக்தாத் திருடன், கோமதியின் காதலன், கள்வனின் காதலி என்று சொல்வதற்கு இன்னும் பல படங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலு கோஷ்டியோடு சேர்ந்து அஞ்சலிதேவியைக் காதலிக்க அவர் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அந்தக் காலத்திலேயே வந்த மிகச் சிறந்த நகைச்சுவைத் திரைப்படம் அடுத்த வீட்டுப் பெண் இந்தக் கால இளைஞர்கள் அறிந்திருப்பதற்கில்லை.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்களில் இணைந்த சில கலைஞர்களுக்கு, அப்படமே முதல் படமாக அமைந்தது. வாழ்க்கை படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படமாக அமைந்தது. வானம்பாடி படத்தில் "யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம் ஜோதிலட்சுமி, தனது முதல் திரைப்பயணத்தை துவங்கினார்.

வித்யாபதி படத்தில்தான் முதன் முதலாக எம்.என்.நம்பியார் அறிமுகமானார். சகடயோகம் படமே வி.என்.ஜானகி நாயகியாக நடித்த முதல் படம். பொன்வயல் படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் முதன் முதலில் பாடினார். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்கிய முதல் படம் சபாபதி. செட்டியாருடன் சேர்ந்து இயக்கியவர் ஏ.டி.கிருஷ்ணசாமி.

1940 முதல் 1960 காலம்வரை தன்னைத் தமிழ்த் திரையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களுக்கு அலுக்காமல், தோன்றி அவர்களின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர்தான் நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.

டி.ஆர்.ராமச்சந்திரனைப் பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். காரணம் அவரின் அப்பாவித்தனமான முகமும், மேடுதட்டிய அசடு வழியும் சிரிப்பும், முட்டைக் கண்களும், காதில் விழும் வார்த்தைக்கெல்லாம் உடம்போடு ஒரு உதறு உதறிக்கொண்டு பதறியது போலும், நிறையப் புரிந்தது போலும் அவர் பேசும் பேச்சும், நமக்கு விடாத சிரிப்பை வரவழைக்கும் என்றாலும், இந்த அப்பாவி எங்கே போய் ஏமாறப் போகிறானோ, யார் இவனை ஏமாற்றப் போகிறார்களோ என்று அவர் மீது கரிசனம் கொண்டு பயந்தவாறே படம் பார்க்கும் அந்தக் கால ரசிகர்கள்….அவருக்காகப் பரிதாபப் படவும் செய்து, கடைசியில் அது சினிமாதானே என்று உணர்ந்து தங்களைத் தேற்றிக் கொண்டார்கள்.

தொள தொளா பேன்ட் போட்டுக் கொண்டு நிற்பதும், கால்கள் நடுங்கும்போது பேன்ட்டோடு சேர்ந்து வெளிப்படும் அந்த நடுக்கம் நமக்கு அத்தனை சிரிப்பை வரவழைக்கும்.  நடிகனுக்கு காஸ்ட்யூம்ஸ் மிக முக்கியமல்லவா? பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த அதுதானே முக்கியப் பங்கு வகிக்கிறது!

1954 ஆம் ஆண்டு சொந்தமாக படநிறுவனம் தொடங்கி தன்னை சபாபதி படத்தில் நாயகனாக நடிக்க வைக்க உதவியாக இருந்த ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கத்தில் ‘பொன் வயல்’ என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலிதேவி நடித்தார்.

கண்ணால பேசிப் பேசிக் கொல்லாதே...காதால கேட்டுக் கேட்டுச் செல்லாதே...'என்ற பாடலில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனின் உடல் மொழியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. டி.ஆர்.ராமச்சந்திரன் பத்துக்கும் மேற்பட்ட படங்களில்... இருபதுக்கும் அதிகமான பாடல்களை பாடி இருக்கிறார்.

1937 முதல் 1982 ஆம் ஆண்டு வரை எழுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன், ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவரது மகள்கள் ஜெயந்தி, வசந்தி ஆகியோருடன் வசித்து வந்தார். ஒரு நாள் திடீர் என இதயவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 தேதி தனது 73 வது வயதில் மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரது உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் ரசிகர்களால் என்றும் மறக்கவே முடியாது.

தொகுப்பு : ஜி.பாலன்