சனி, 20 நவம்பர், 2021

நடிகை ஷோபா வாழ்க்கை வரலாறு

ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் சந்திரபாபு. அவர் ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் தட்டுங்கள் திறக்கப்படும். அந்தப் படத்தில் நடிக்க ஒரு சிறுமி தேவைப்பட்டார். அதற்காக பலரை அழைத்துப் பார்த்தவர் இறுதியாக மகாலட்சுமி என்கிற சிறுமியை தேர்வு செய்தார். இவர்தான் பிறகாலத்தில் ஷோபா என்கிற நடிகையாக எல்லோர் மனதிலும் இருக்கப்போகிறார் என்பது அப்போது அவருக்கு தெரியாது.

அவரைப் போருத்தவரி மலையாள நடிகை பிரேமா, கே.பி.மேனன் மகளாக மகாலட்சுமியாகவே அவருக்கு அறிமுகமாமி இருந்தார். பேபி மகாலட்சுமியாக தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபா, அதன் பிறகு மலையாளத்தில் உருவான பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் 1967ஆம் ஆண்டில் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்கிற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்து. அதன் பிறது தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான நாணல், இருகோடுகள், புன்னகை, அச்சானி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா, கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’ படம்தான் ஷோபா தமிழுக்கு அறிமுகமான முதல் படம்.

ஆனால், அந்த முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பார். ’திலகம்’ எனும் கதாபாத்திரத்தில், அந்தக் கேரக்டருக்கே திலகமிட்டு கெளரவப்படுத்திய ஷோபாவை, மொத்தத் திரையுலகமும் திலகமிட்டு வரவேற்றது. குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் நடித்தவருக்கு, தமிழில் அட்டகாசமாகத் திறந்தது கோடம்பாக்க வாசல்.

‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சுமித்ராதான் நாயகி. கமல்தான் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். ஹனுமந்துவுக்கும் கனமான கேரக்டர். ஆனாலும் அவர்களையெல்லாம் தாண்டி, நம் மனதுக்குள் வந்து உட்கார்ந்துகொள்வார் ஷோபா. அந்த யதார்த்தமான நடிப்பும், கள்ளமில்லாச் சிரிப்பும், குறும்புப் பார்வையும், யாரைத்தான் ஈர்க்கவில்லை?

மகேந்திரனின் இயக்கத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தில், வள்ளி எனும் கேரக்டரில், ரஜினியின் தங்கையாக வாழ்ந்திருப்பார். ரஜினியின் தங்கையாக அவர் நடித்தாலும் ஒட்டுமொத்த தமிழுலகமும் அவரை, தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்தது. ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட முகபாவனைகள் காட்டினார். சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அப்படியொரு க்ளோஸப் ஷாட்டுகள் ஷோபாவுக்கு வைக்கப்பட்டன. ‘அடிப்பெண்ணே... பொன்னூஞ்சலாடுது இளமை’பாடலும் அப்படித்தான்!

’மூடுபனி’ படத்தில் சைக்கோ கொலைகார பிரதாப்பிடம் ஷோபா சிக்கிக் கொண்டதும் பதைபதைத்துப் போனது ரசிகர் கூட்டம். போதாக்குறைக்கு, பிரதாப்பிடம் சிக்கிக்கொண்ட கலக்கத்தையும் நடுக்கத்தையும் பதட்டத்தையும் பரிதவிப்பையும் தன் முகத்தாலும் கண்களாலும் காட்டியதற்கு இணையாக இதுவரை எந்த நடிகையும் காட்டவில்லை என்கிறார்கள் எண்பதுகளின் சினிமா ரசிகர்கள். ‘

பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் ஆகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார். காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டி கொண்டாடினார்கள். ’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை. ‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ்.

தியேட்டரில் வேலை பார்க்கும் சாமானியப் பெண், மிகப்பெரிய நடிகையாக உயர்வதை வெகு அழகாக தன் நடிப்பால் வெளிப்படுத்திய ‘ஏணிப்படிகள்’ படத்தையும் ‘பூந்தேனில் கலந்து’ பாடலையும் யாரால்தான் மறக்கமுடியும்?

விஜயகாந்தின் ஆரம்பகட்ட ‘அகல்விளக்கு’ படத்தில், ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் ஷோபாவின் நடிப்பும் ஏற்படுத்திய சலனம், என்றைக்குமாக நம் மனதில் தங்கிவிட்ட ஒன்று. விஜயகாந்துடன் நடித்த அந்தப் படம் ஓடியதோ இல்லையோ... அந்தப் படம் இன்றைக்கும் நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் - ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம்.

’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’யும் மெச்சூரிட்டியான நடிப்பால் உள்ளம் கவர்ந்திருப்பார்.

இயக்குநர் துரையின் இயக்கத்தில் ‘பசி’ படம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று. குப்பத்துக் கதாபாத்திரத்தை ஷோபாவை விட வேறு யார் பொருந்தியிருக்கமுடியும்? நடித்திருக்க முடியும்? ஷோபாவின் தன் மொத்த நடிப்பையும் மொத்தத் திறமையையும் கொடுத்திருப்பார். ஒரு பக்கம் வறுமை... இன்னொரு பக்கம் ஊதாரித் தந்தை, நடுவே லாரி டிரைவரின் காமப்பசிக்கு ஏமாறுவது என அத்தனை துயரங்களையும் நம் கண்முன்னே வாழ்ந்து காட்டியிருப்பார். அதனால்தான் அந்தப் படத்துக்காக அவருக்கு ‘ஊர்வசி’ விருது கிடைத்தது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை வாங்கிய நடிகை ஷோபாதான்!

பசி படத்திற்காக ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது மட்டுமல்ல,  ஃபிலிம் ஃபேர் விருதும் கிடைத்தது. சிறந்த தேசிய படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்று முறை கேரள அரசின் விருதுகளை பெற்றுள்ள ஷோபா, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றவர்.

’முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபா கதாநாயகியாக நடிக்கும்போது பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளராக தமிழில் அதுதான் அவரது முதல் படம். ஆனால், அதற்குமுன்பே கன்னடத்தில் அவர் இயக்கிய கோகிலா படத்தில் ஷோபாதான் நாயகி. அடுத்ததாக தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய முதல்படம் ’அழியாத கோலங்கள்’.

பாலு மகேந்திராவின், 'அழியாத கோலங்கள்', 'மூடுபனி' ஆகிய படங்களில் தனித்து மிளிர்ந்தார் ஷோபா. அதற்கான காரணமாக, ''கேமிரா, லைட்ஸ் மற்றும் ஃபிலிம் ஆகியவற்றோடு மற்றவர்கள் ஒளிப்பதிவு செய்வார்கள். பாலுமகேந்திரா அங்கிள் இவற்றோடு நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார்" எனச் சொன்னவர், ஷோபா.

இவர்களின் உறவு, திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு நீண்டது. தமிழ்த் திரையுலகமே வியந்து பார்த்த நடிகை, இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளையும் பெறுவார் எனக் கணித்துக்கொண்டிருந்த சூழலில், 1980 மே 1-ம் நாள், திடீரென்று தற்கொலை செய்துகொண்டார் ஷோபா. அப்போது, அவருக்கு வயது 17. ரசிகர்களுக்குத் தாளவே இயலாத பேரிழப்பாக அது அமைந்துவிட்டது.

குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த சிறந்த கலைஞர்களின் பட்டியலில் ஷோபாவும் இணைந்துவிட்டார். ஷோபாவின் நேசத்தையும் தாளமுடியாத பிரிவையும்தான், தனது 'மூன்றாம் பிறை' படத்தில் பதிந்ததாக பாலு மகேந்திரா குறிப்பிடுவார்.

ஷோபா மறைந்த போது இயக்குனர் பாலுமகேந்திரா, இப்படி குறிப்பிட்டிருந்தார். ''தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்த தேவதையைப் பற்றி என்ன எழுதுவது? எதை எழுதுவது? என்று

ஒரு நிமிடத்தில் ஓராயிரம்  எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசி ரசிகர்களை திணறடித்தவர் மறைந்த நடிகை ஷோபா. எத்தனை எத்தனை யுகம் ஆனாலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முகம். லட்சணங்களே அசந்துபோகும் அளவிற்கு லட்சணங்கள் பொருந்திய முகம்.  பெற்றோர் வைத்த பெயர்தான் அவருக்கு பொருத்தமானது. ஆம்… அவரது  இயற்பெயர்  மகாலட்சுமி!  

தொகுப்பு : ஜி.பாலன்


'மக்கள் கலைஞர்' ஜெய்சங்கர் வாழ்க்கை வரலாறு

`தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் கும்பகோணத்தை சேர்ந்த சுப்பிரமணிய ஐயர் - யோகாம்பாள் தம்பதியினருக்கு 1938 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பிறந்தவர் ஜெய்சங்கர். இவரது இயற்பெயர் சங்கர். அவரது தந்தை நீதிபதியாக இருந்தார். அதனால், ஜெய்சங்கரும் சட்டம் பயில வேண்டி இருந்தது. ஆனால், கலை மீது கொண்ட காதலால் கோர்ட்டுக்கு போவதை விட நாடக அரங்குகளுக்கு சென்றார்.

காத்தாடி ராமமூர்த்தி, சோ ஆகியோர் இணைந்து நடத்திய விவேக் பைன் ஆர்ஸ் நாடககுழுவின் நாடத்தில் இன்ஸ்பெக்டராக நகைச்சுவை கலந்த வேடத்தில் நடித்து அறிமுகமானார். 

கூத்தபிரானின் கல்கி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவிலும் நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சி செய்தார்.

ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் பானுமதி நடித்த அன்னை படத்தில் நடிக்க மேக்கப் டெஸ்ட்டுக்கு சென்ற போது அவரது கண்கள் சிறியதாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ஜெய்சங்கருக்கு நம்பிக்கையூட்டி அவரை திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்ய வற்புறுத்தியதுடன், சிட்டாடல் ஜோசப் தளியத்திடம் சிபாரிசு செய்தவர், ஜெய்சங்கரின் நண்பரான, ராமானுஞ்சம்.

இயக்குநர் ஜோசப் தளியத் ஜெய்சங்கரை மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ என்று நம்பினார். தான் இயக்கிய இரவும் பகலும் படத்தில் கதாநாயகனாக, இரண்டு வேடங்களில் நடிக்க வைத்தார். சங்கர் என்கிற பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று இரவும் பகலும் படத்தில் அறிமுகபப்டுத்தினார்.

1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் வெளியான இரவும் பகலும் படம் ஜெய்சங்கருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.

அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தின் கதவுகள் கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார். ‘இரவும் வரும் பகலும் வரும்’ என்ற ஆலங்குடி சோமுவின் பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ வைத்தது.

இரவும் பகலும் படத்திற்கு பிறகு இரவும், பகலும் மாற்றி மாற்றித் தேதி கொடுத்து அதே ஆண்டில் எம்.ஆர்.ராதா நடித்த எங்க வீட்டு பெண், முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக்கிளி, ஜெயலலிதாவுடன் நீ, ஜமுனாவுடன் குழந்தையும் தெய்வமும் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் ஜெய்சங்கருக்கு வித்தியாசமான வேடம் கொடுத்திருந்தகார், இயக்குநர் சங்கர். அன்னை படத்திற்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து கண்கள் சிறிதாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பிய ஏவி.எம்.நிறுவனமும், இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சுவும், ஜெய்சங்கரின் திறமையைப் பார்த்து ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் நடிக்க வைத்து பெண்கள் பக்கமும் அவரை கொண்டு சென்றனர்.

ஜெய்சங்கரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை வைத்துக்கொண்டு, தொடர்ச்சியாக படங்கள் தயாரித்தது. ‘வல்லவன் ஒருவன்’, ‘சிஐடி.சங்கர்’ அவரை வசூல் சக்கரவர்த்தி ஆக்கியது. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர். ‘தென்னகத்தின் ஜேம்ஸ்பொண்ட்’ என்றும் அவரை இரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம், ’பஞ்சவர்ணக்கிளி’ மாதிரியான குடும்பக் கதைப் படங்கள், நடுவே ’பொம்மலாட்டம்’, ’வரவேற்பு’, ’பூவா தலையா’, பட்டணத்தில் பூதம் என காமெடி படங்கள் என ரவுண்டு கட்டி வலம் வந்தார் ஜெய்சங்கர். பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் என பலரும் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர். போல் ஜெய்சங்கர் செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. படங்களில் ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை. ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. சிவாஜியை இமிடேட் செய்யும் ஏவிஎம்.ராஜனும் அப்போதுதான் வந்திருந்தார். ஆனால், எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர்.

எம்ஜிஆர், சிவாஜி கால்ஷீட் பெற முடியாத தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரை தேடி வந்தனர். குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர்.

கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைவான சம்பளத்திலும் பாக்கி வைத்தால் அதையும் கேட்பதுமில்லை. கால்ஷீட் சொதப்பமாட்டார், சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவார். இந்த நடிகையைப் போடுங்கள் அந்த வில்லனைப் போடுங்கள் என்றெல்லாம் சொல்லமாட்டார். தன்னுடைய வேலையை கண்ணும் கருத்துமாக இருந்து செய்து கொடுப்பார் என்று அவருக்கு திரையுலகம் அவரை போற்றுகின்றது.

ஜெய்சங்கரின் படங்கள் முக்கால்வாசி பட்ஜெட் படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன. யூனிட்டில் உள்ள எல்லோரிடமும் கனிவாகப் பேசும் பண்பு கொண்டவர். யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ என்று சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம். பின்னாளில், இந்த ‘ஹாய்’ என்ற வார்த்தையே ஜெய்சங்கரின் அடையாளமானது.

ஒரு கதாசிரியன் சிரமப்பட்டால் ஒரு கம்பெனியில் அவரை எழுதவைப்பார். ஒரு இயக்குநர் சிரமப்பட்டால் ஒரு தயாரிப்பாளரைக் கை காட்டுவார். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் அவரிடம் அட்வான்ஸ் வாங்காமல் கால்ஷீட் கொடுப்பார். பலரின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தவர், மெர்சி ஹோம் போன்ற இல்லங்களுக்கும் உதவும் குணம் கொண்டவர். 

ஸ்டுடியோ முதலாளிகள், பிரபல இயக்குநர்கள் மட்டுமே படம் தயாரிக்க முடியும் என்ற நிலையை உடைத்து காஸ்டியூமர், மேக்கப் மென், புரொடக்ஷன் மேனேஜர் என எல்லா தரப்பினரையும் தயாராப்பாளர் ஆக்கி  அவர்களை உயர்த்தி இருக்கிறார், ஜெய்சங்கர். இதனால் பல தயாரிப்பாளர்கள் உருவாகினார்கள். நிறைய படங்களும் தயாராகி, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜெய்சங்கரின் புதுப்படம் வெளியாகும் நிலை ஏற்பட்டு, அவரை பிரைடே ஹீரோ என்று கிண்டலாக அழைக்கும் அளவுக்கு பேசப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் கதை வசனத்தில் அமிர்தம் இயக்கத்தில், `வண்டிக்காரன் மகன்' படத்தில் நடித்தார், ஜெய்சங்கர். அதில் எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது, அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் ஜெய்சங்கர் மீது அழுத்தமாக தி.மு.க முத்திரை குத்தப்பட்டது.

தொடர்ந்து அவர் நடித்த படங்களில் தி.மு.க ஆதரவு வசனங்களும், தத்துவப் பாடல்களும் இடம்பெற்றபோதிலும், ஏனோ ஜெய்சங்கரால் அரசியலில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது. ஆனால், கலைஞர் வழங்கிய மக்கள் கலைஞர் என்கிற பட்டம் மட்டும் அவருடன் நிலைத்தது.

வயது கூடிக்கொண்டே வர, படங்கள் குறைந்துகொண்டே வந்தன. இப்போது கமல், ரஜினி காலகட்டம். எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளை’யில் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘ஊமைவிழிகள்’ குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது.

இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ஜெய்சங்கர், குப்பத்து சாஸ்த்திரிகள் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழக அரசி கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

பெற்றோர் பார்த்த கீதாவையே மணந்துகொண்டு இரண்டு ஆண் வாரிசுகள், ஒரு பெண் வாரிசுக்குத் தந்தையானார். இன்று சென்னையில் விரல் விட்டு எண்ணக்கூடிய புகழ்மிக்க கண் மருத்துவர்களில் இவரது மூத்த மகன் விஜய் சங்கர் முக்கியமானவர். இரண்டாவது மகன் சஞ்சய் இன்ஜினீயர். கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் கவனம் செலுத்துபவர். கடைக்குட்டி சங்கீதா, அவரும் மருத்துவர். இப்படி அழகாக, அருமையாக குழந்தைகளை வளர்த்து, முறையாகப் படிக்க வைத்து, அவர்கள் வெற்றிகரமாக வாழும் வாழ்க்கையை உடன் இருந்து பார்த்து சந்தோஷப்படுவதே எந்த மனிதனுக்கும் பிற்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

எதிலும் விரைவும், வேகமும் காட்டும் ஜெய் சங்கர் இவ்வுலகை விட்டுப் போவதிலும் வேகம் காட்டி 2000-ஆம் ஆண்டு சூன் 3- ஆம் தேதி தனது 61 வயதில் மாரடைப்பால்  காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி வரலாறு

ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரியின் பூர்வீகம் பரமக்குடி அருகே உள்ள இளையன்குடி. பெற்றோர் சென்னையில் உள்ள புத்துப்பெட்டையில் வசித்த போது எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் 1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லூர்து மேரி ராஜேஸ்வரி.

இவரது தந்தை அந்தோணி தேவராஜ் இளம் வயதில் அதாவது 36 வயதில் காலமானதால், இவரது தம்பி அமல்ராஜ், தங்கை அஞ்சலி ஆகியோரை வைத்து கொண்டு கஷ்டப்பட்டார், இவரது அம்மா ரெஜினா மேரி நிர்மலா.

எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்த எல்.ஆர்.ஈஸ்வரி, மேலே படிக்க வைக்க பொருளாதரீதியாக அம்மா சிரமப்பட்டதால், அம்மாவுக்கு துணையாக இருந்து உழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

அவருடைய அம்மா ஜெமினி ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக பாடகியாக இருந்தார். அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு கோரஸ் பாட செல்லும் போது ஆவருடன் செல்லும் எல்.ஆர்.ஈஸ்வரி, அம்மாவுடன் மற்ற கோரஸ் பாடகிகள் பாடுவதை கேட்டு அதே மாதிரி பாடுவார்.

1954 ஆம் ஆண்டு மனோகரா படத்திற்காக எஸ்.வி.வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அந்த பாடலில் குழுவினருடன் இணைந்து ஈஸ்வரியும் பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார்.

ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த "வடிவுக்கு வளைகாப்பு'' என்ற படத்திற்கு கோரஸ் பாட அவரது அம்மா சென்றபோது, அவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி சென்றார். பாடலின் இடையே "ஹம்மிங்'' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக அந்தப் பாட்டுக்கு இவரை "ஹம்மிங்'' கொடுக்க வைத்தார்கள். அதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய்” என்று பாராட்டினார்கள்.

அவர்களின் பாராட்டு எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்'' என்ற படக் கம்பெனியைத் தொடங்கி, "நல்ல இடத்து சம்பந்தம்'' என்ற படத்தை எம்.ஆர்.ராதா நடிப்பில் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எல்.ஆர்.ஈஸ்வரி பாட வாய்ப்பு கிடைத்தது.

"புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.''

"பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.''

"இவரேதான் அவரு அவரேதான் இவரு''

"துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்'' என்று நான்கு  பாடல்கள் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முதல் படத்திலேயே நான்கு பாடல்களை பாடும் வாய்ப்பை கொடுத்த ஏபி.நாகராஜன், லூர்து மேரி ராஜேஸ்வரி என்கிற பெயரை சினிமாவுக்காக சுருக்கமாக "எல்.ஆர்.ஈஸ்வரி'' என்று மாற்றி வைத்தார்.

அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த நானூறு ரூபாய் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

நல்ல இடத்து சம்பந்தம் படம் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வெளியாகி வெற்றிப் படமாக அமைந்தது. அதில் பாடல் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரிக்கும் நல்ல பெயர் கிடைத்தது.

இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம் படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலுக்கும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.

ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜிகணேசன் - சாவித்திரி நடித்த "பாசமலர்'' படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் "வாராய் என் தோழி வாராயோ...'' என்கிற பாடலை பாடும் வாய்ப்பு ஈஸ்வரிக்கு கிடைத்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்தப் படத்தில் அந்தப் பாடலும் பெரும் புகழ் பெற்றது.

1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் அந்தப் பாடல் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திது.

அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, "பாசமலர்'' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத் தொடங்கினார்.

இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "பணமா பாசமா'' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும். அந்தப் படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்'' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

இயக்குநர் ஸ்ரீதர், "சிவந்த மண்'' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார். அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி. "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்'' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த "ஹம்மிங்'', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' பாடல் அவரது குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள் என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று.

வல்லவன் ஒருவன் படத்தில் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ கௌரவம் படத்தில் ‘அதிசய உலகம்’ என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும் பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில் நெய்யப்பட்டிருக்கும்.

வசந்த மாளிகை படத்தில் 'குடி மகனே' பாடலில் ‘கடலென்ன ஆழமோ... கருவிழி ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும் கெஞ்சுதலும் சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக உயிர்த்தெழும் குரல் அது.

தொடக்கத்திலோ, இடையிலோ, நிறைவிலோ ஹம்மிங் கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு சேர்க்க வல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும் ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு ஈர்க்கும் 'இது மாலை நேரத்து மயக்கம்' பாடலில் மோக மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார் ஈஸ்வரி.

பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க' பாடலில் ஒரு விதம் என்றால், ‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலில் வேறொரு விதமாக உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.

ராமன் தேடிய சீதை படத்தில் ‘என் உள்ளம் உந்தன் ஆராதனை' குமரிக்கோட்டம் படத்தில் ‘நாம் ஒருவரை ஒருவர்' பாடல்களை எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா என்ன?

யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட முடியும் அவருக்கு! மன்மதலீலை படத்தில் ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ என்று அதிரடி பாடலையும் அவரால் கொடுக்க முடிந்தது. ‘காதோடு தான் நான் பாடுவேன்' என்ற அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால், ‘அடி என்னடி உலகம்' என்று உரத்துக் கேட்கவும் சாத்தியமாயிற்று.

பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை பாடல்கள் ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’. சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும் ஆம்பளையா', எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மயக்கக் குரலோடு ‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கஜன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’, பி.சுசீலாவோடு இணைந்து ‘கட்டோடு குழலாட’, ‘அடி போடி’ ‘உனது மலர்க்கொடியிலே’,  ‘மலருக்குத் தென்றல்’, ‘கடவுள் தந்த’ என்று வெவ்வேறு மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில.

டி.எம்.சவுந்திரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி இணை குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை. ‘கேட்டுக்கோடி உறுமி மேளம்', 'சிலர் குடிப்பது போலே', ‘மின்மினியைக் கண்மணியாய்', ‘உன் விழியும் என் வாளும்;, ‘அவளுக்கென்ன' என்ற பாடல் வரிசைக்கும் முடிவில்லை.

ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.

பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும் ‘எல்லோரும் பார்க்க' பாடல் உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல் ஈஸ்வரியுடையது. ஆர்ப்பாட்டமான களியாட்டத்தை ‘இனிமை நிறைந்த’, ‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’, ‘ர்ர்ர்ர்ர்ருக்கு மணியே..’, என்று அவரால் இலகுவாக வெளிப்படுத்த முடிந்தது. மனோரமாவுக்காக அவர் பாடிய 'பாண்டியன் நானிருக்க...' என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே ஐக்கியமாகிப் போன ஒன்று.

மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ‘குபு குபு குபு குபு நான் எஞ்சின்’ என ஏ.எல்.ராகவனோடு இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம் இளமையின் வேகம். ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே' காதலின் தாகம். ஒரு சாதாரணப் பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும், உருட்டி எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'!.

பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின் பொழிவில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் தனித்தும், இணைந்தும் கொடிகட்டிப் பறந்த அந்த ஆண்டுகள், ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள்.

எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் "கிக்'' இருக்கும். துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். அதனால், லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.

முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர்.

1961ஆம் ஆண்டு திரை உலகில் உயர்வை பெற்ற ஈஸ்வரி, 1985-ம் ஆண்டில் பக்தி உலகில் கவனிக்கப்பட்டார். அவரது குரலில் பதிவான கற்பூர நாயகியேவும், மாரியம்மாவும், செல்லாத்தாவும் இப்போதும் எண்ணற்ற சாதாரண மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன.

கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் விதமாக அந்தப் பாடல்கள் அமைந்தன. இதனால், தமிழ்நாட்டில் அவர் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் அவர் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் "வெண்ணிற ஆடை.'' அதில் அவர் பாடும் முதல் பாடலான "நீ என்பதென்ன... நான் என்பதென்ன...'' என்ற பாடலை பாடும் வாய்ப்பு ஈஸ்வரிக்கு கிடைத்தது.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடித்த ஒஸ்தி திரைப்படத்தில் "கலசலா கலசலா" என்ற குத்துப்பாடல் மூலம் மீண்டும் நுழைந்தார். டி.ராஜேந்தருடன் சேர்ந்து பாடிய அந்த பாடல் வெளியான சில நாட்களில், பெரும் புகழ் பெற்று மியூசிக் பாக்ஸ் ஆபிஸின் சிறந்த மதிப்பீடுகளை எட்டியது.

அடுத்த ஆண்டு தடையறத் தாக்க திரைப்படத்தில் அவர் "நான் பூந்தமல்லி" என்ற பாடலைப் பாடினார்.

2013 ஆம் ஆண்டில், ஆர்யா சூர்யா படத்தில் மீண்டும் டி.ராஜேந்தருடன் சேர்ந்து "தகடு தகடு" என்ற டூயட் பாடலைப் பாடினார். 2014 இல் அவர் அதிதி திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில் "ஜெய்ப்பூரில் ஜெய்ப்பூரில்" பாடலைப் பாடினார் 2020 ஆம் ஆண்டில், நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" ஆடி குத்து என்ற பாடலைப் பாடியிருந்தார். அவரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து, உற்சாக வரவேற்பு கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி, அந்தப் படத்தில் நடிக்கவும் வைத்தார்.

கன்னடத்தில் கைலாஷ் கெருடன் "யக்கா நின் மாகலு நானகே" என்கிற பாடலை விக்டரி படத்திற்காக பாடியுள்ளார். அந்தப் பாடல் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்

வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த தனது குடும்பத்தை முன்னேறச் செய்யவும், தனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் கவனம் செலுத்திய எல்.ஆர்.ஈஸ்வரி, அவருக்கான திருமண வாழ்க்கையைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை என்கிறார், அவர்.

அவரது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் அவர் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தொகுப்பு : ஜி.பாலன் 


நகைச்சுவை நாயகன் சந்திரபாபு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம்பிடித்தவர் சந்திரபாபு. தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர்.

ஜோசப் பிச்சை என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின். இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. அங்கு பள்ளிக் கல்வியை முடித்தார், சந்திரபாபு.

கொழும்பு நகரில் வாழ்க்கை நடத்த முடியாமல் சந்திரபாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். அப்பா பத்திரிகையில் பணிபுரிய தொடங்கினார். திருவல்லிக்கேணியில் வீடு கிடைத்தது. சாந்தோம் கடற்கரையில் வசித்த இசையமைப்பாளர் வேதாவும், தபேலா தாழு ஆகியோரின் அறிமுகம் சந்திரபாபுவுக்கு கிடைத்தது. அவர்களிடம் இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டு சினிமாவில் பாடுவதற்கு முயற்சி செய்தார்.

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் எம். எஸ். சுப்பையா நாயுடுவை சந்தித்து தனது ஆர்வத்தை சொல்லி பாடுவதற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவரை தனது உதவியாளர் விஸ்வநாதனிடம்தான் அனுப்பி வாய்ஸ் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார் சுப்பையா நாயுடு.

விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசிக்க தனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்களை பாடி இருக்கிறார், சந்திரபாபு. சில வருடங்கள் இலங்கையில் இருந்ததால் சந்திரபாபுவின் தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் சிங்களம் கலந்திருந்தது. அதனால் வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டார், சந்திரபாபு.

சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது என்று  சந்திரபாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள் கலைதாகமாகவே இருந்தன. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும், நடனம் ஆட வேண்டும், பாடகராக வேண்டும் என்கிற கொள்கையுடன் பல மாதங்கள் முயற்சி செய்தார். வாய்ப்புகள் அவருக்கு உடனே கிடைக்கவில்லை.

ஒருநாள் ஜெமினி ஸ்டுடியோ சென்று தயாரிப்பாளரும் ஸ்டுடியோ அதிபருமான எஸ். எஸ். வாசனைச் சந்திக்க முயன்றிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வேதனையில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதனால், இவரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சியைக் கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்ட சந்திரபாபு, "உங்களுக்கு நான் சுட்டுக்கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணரமுடியாது. அதுபோலத்தான் என் துயரமும்" என்று கூறி இருக்கிறார்.

சந்திரபாபுவின் பதிலில் இருந்த நகைச்சுவையையும் சோகத்தையும் உணர்ந்த நீதிபதி, அவருக்கு அறிவுரை கூறி விடுதலை செய்தார். இந்த தகவலை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சந்திரபாபுவை அழைத்ர்ஹ்து

இந்த இவர் கூறிய பதிலில் இருந்த நகைச்சுவையையும் சோகத்தையும் உணர்ந்த நீதிபதி, அறிவுரை கூறி அவரை விடுதலைசெய்தார்.

சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்ட சந்திரபாவுக்கு 1947- ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்கிற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. பி.எஸ்.ராமையா இயக்கிய அந்தப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது” என்கிற பாடலையும் பாடி இருந்தார்.

அடுத்து டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலட்சுமி நடித்த மோகன சுந்தரம் படத்தில் கோபு என்கிற பாத்திரத்தில் நடித்ததுடன் டி.ஜி.லிங்கப்பா இசையில் இரண்டு பாடல்களை பாடினர். அதில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய இன்பம் பொங்கும் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அந்தமான் கைதி, சின்னதுரை, கண்கள், அழகி, வாழ பிறந்தவள், கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, பெண், குலேபகவாலி என பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடம்பிடித்தார். தூத்துக்குடிகாரரான இவர் பேசிய மெட்ராஸ் பாஷை, அச்சு அசலாக அப்படியே இருந்தது.

மரகதம் படத்தில் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, புதையல் படத்தில் உனக்காக எல்லாம் உனக்காக, மணமகள் தேவை படத்தில் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, சகோதரி படத்தில் நானொரு முட்டாளுங்க, ஆண்டவன் கட்டளை படத்தில் சிரிப்பு வருது சிரிப்பு வருது, நாடோடி மன்னன் படத்தில் தடுக்காதே என்னை தடுக்காதே, போலீஸ்காரன் மகள் படத்தில் பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது, அன்னை படத்தில் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என பல புகழ்பெற்ற பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

நகைச்சுவை நடிப்பில் சார்லி சாப்ளினின் தமிழ்ப் பிரதியாக சந்திரபாபு இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காத்திருந்தது. ஒரு சில நேரங்களில் கதாநாயகர்களின் படங்களே இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டது. ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

தான் சம்பாதித்த அளப்பரிய சொத்துக்களையெல்லாம் சொந்த படத் தயாரிப்பில் மெள்ள மெள்ள இழந்தார். ’கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ’குமார ராஜா’ என்னும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும், இனி நகைச்சுவை நடிகராகப்போவதில்லை என்று அறிவித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. மீண்டும் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்.

'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி, எம்ஜிஆர் இவர்களை சந்திரபாபுவுக்கு ரொம்ப பிடிக்கும். எம். ஜி. ஆர். நடித்த “குலேபகாவலி” படத்தில் எம். ஜி. ஆரின் நண்பராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார் சந்திரபாபு. அந்தப் படத்தில்  சந்திரபாபுவின்  பாடல் ஒன்று இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய “குலேபகாவலி” படத்தின் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கும்படி அப்படத்திற்கு இசையமைப்பாளர்களாகப் பணியாற்றிய   விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கேட்டுக் கொண்டார். 

அந்தப்பாடலுக்கு அவர்கள் இசையமைத்து முடித்ததும் தான் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை கேட்பதற்காக ராமண்ணாவின் அலுவலகத்திற்கு வந்தார் சந்திரபாபு. அவர் வந்தவுடன் அவர் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை விஸ்வநாதன் ஹார்மோனியத்தில் வாசித்தார்

முகத்தில் எந்தச்  சலனமும் இன்றி அந்த டியூனை கேட்ட சந்திரபாபு விஸ்வநாதன் வாசித்து முடித்ததும் “என்ன மெட்டு இது?” என்றார்.

அவரது கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் எல்லோரையும் எதிர்ச்சி அடைய வைத்தது.  அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ”இந்த காட்சியில நான் பாடி ஆடணும். ஆனா இந்த மெட்டுக்கு நான் எப்படி டான்ஸ் ஆட முடியும்? டான்ஸ் ஆட இந்த மெட்டில் என்ன இருக்கு?” என்று சரமாரியாக படத்தின் இயக்குனரான ராமண்ணாவைப் பார்த்து தொடர்ந்து கேள்விகள்  கேட்டார் சந்திரபாபு.

அந்தப் பாட்டிற்கு மிகவும் அருமையாக மெட்டமைத்திருந்தார் எம் எஸ் விசுவநாதன். அப்படி இருக்கும்போது சந்திரபாபு அந்த பாட்டைப்பற்றி ஏன் அவ்வளவு கேவலமாகப் பேசுகிறார் என்று ஒருவருக்கும் புரியவில்லை . 

சென்ட்ரல் ஸ்டுடியோவில் வாய்ஸ் டெஸ்ட்டுக்காக சந்திரபாபு வந்த போது “எங்கே பாடறாரு? எல்லா பாட்டையும் வசனமா சொல்றாரு” என்று  தான் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அதற்குப் பழி வாங்குவதற்காகத்தான் சந்திரபாபு தனது மெட்டைக் குறை கூறுகிறார் என்ற விஷயம் விஸ்வநாதனுக்கு மட்டும் தெளிவாகப் புரிந்தது.

எம் எஸ் விஸ்வநாதன், தன்னுடன் பாடல் கம்போசிங்கிற்கு வந்திருந்த வாத்தியக் கலைஞர்களிடம் தான்  போட்டிருந்த டியூனை வாசிக்கச் சொன்னார்.

எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்ட அவர், அந்த டியூனுக்கு ஏற்ப நடனம் ஆடத் தொடங்கினார். வழுவூர் ராமையா பிள்ளையிடம்  நடனம் கற்றுக் கொண்டவர் என்பதால் அந்த மெட்டுக்கு ஏற்ப அமர்க்களமாக அவர் ஆடியதைப் பார்த்து சந்திரபாபு மட்டுமல்ல அந்த கம்போசிங் அறையில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்

சந்திரபாபு ஓடிவந்து எம்.எஸ்.விஸ்வநாதனை அப்படியே கட்டிப் பிடித்து “நீ கலைஞன்டா” என்று விஸ்வநாதனின் கன்னத்தைக் கிள்ளியபடி அவரைக்  கொஞ்சித்  தீர்த்துவிட்டார்.

“குலேபகாவலி” படத்திலே  இணைந்த அவர்கள் இருவரும் அதற்குப் பிறகு இணை பிரியா நண்பர்களானார்கள். நாளடைவில் விஸ்வநாதனின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆனார் சந்திரபாபு.

மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த போதிலும் பாடல் என்று வந்துவிட்டால் விஸ்வநாதனும் விட்டுக் கொடுக்க மாட்டார். சந்திரபாபுவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

கண்ணதாசன் தயாரித்த “கவலை இல்லாத மனிதன்” படத்திலே தான் பாடுகின்ற மாதிரி ஒரு தத்துவப் பாடல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் சந்திரபாபு. அந்த சந்தர்ப்பத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அகால மரணம் அடைந்திருந்ததால் அவர் மறைவால் மனதளவில் பெரிதாக பாதிக்கப் பட்டிருந்த கண்ணதாசன் பாடல் எழுதுவதிலேயே ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.

பின்னர் சந்திரபாபு வேண்டிக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் எழுதிய பாடல்தான் “பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்,              ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே” என்ற பாடல்

அந்தப் பாடலுக்கு இசையமைத்த விஸ்வநாதன் அந்த மெட்டை சந்திரபாபுவிற்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பாடல் பதிவிற்குத் தயாரானார்

டேக் ஒன்று, இரண்டு, மூன்று என்று போய்க்கொண்டேயிருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ விஸ்வநாதன் எதிர்பார்த்தபடி சந்திரபாபுவால் அன்று அந்தப் பாடலைப்  பாட முடியவில்லை

சலிப்போடு “இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம நீ லாயக்கில்லடா” என்றார் விஸ்வநாதன்.

ஆத்திரத்தில் தான் போட்டிருந்த பனியனை கழட்டிப் போட்டுவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார் சந்திரபாபு. அந்த டேக்கும் சரியாக வரவில்லை

உடனே “என்னால் இனிமேல் பாட முடியாது” என்று உரக்கச் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பி விட்டார் சந்திரபாபு

பின்னர் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்த விஸ்வநாதன். அவரை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துக் கொண்டு வந்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்

அந்தப் பாடலை அப்போது நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னாலே பாடக்கூடிய வாய்ப்பு ஒரு முறை சந்திரபாபுவுக்குக் கிடைத்தது

தன்னை மறந்து அந்தப்பாடலை ரசித்த ஜனாதிபதி “பிரமாதம் பிரமாதம்” என்று மனமார அந்தப் பாடலைப் பாராட்டினார்

அவர் அப்படி பாராட்டிய அடுத்த நிமிடம் சந்திரபாபு தனது நாற்காலியில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஜனாதிபதி அருகில் சென்றார்.

ஜனாதிபதியின் பாதுகாவலர்கள்  அவரைத் தடுத்து நிறுத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் மடியில் போய் அமர்ந்து கொண்ட சந்திரபாபு, அவர் தோளில் கையைப் போட்டார். பின்னர் அவரது கன்னத்தைத் தடவியபடி “கண்ணா நீ ரசிகன்டா” என்றார்

ஜனாதிபதி அருகில் செல்வதற்கே பல விதி முறைகள் உண்டு. ஆனால் சந்திரபாபுவோ அவரது மடியிலேயே அமர்ந்திருந்தார். அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை

ஆனால் அவ்வளவு உயரிய பதவியில் இருந்தும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் சந்திரபாபுவின் செய்கையால் எந்த ஆத்திரமும் அடையாதது மட்டுமல்ல சந்திரபாபுவை தட்டிக் கொடுத்துப் பாராட்டினாராம்.

வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்த  சந்திரபாபு மரணத்தின் பிடியில் இருந்தபோது தன்னுடைய மரணம் பற்றி எம். எஸ். விஸ்வநாதனுக்கு மட்டுமே முதலில் தகவல் தர வேண்டும் என்றும் தன்னைக்  கல்லறையில் புதைப்பதற்கு முன்னாலே விஸ்வநாதன் இல்லத்தில் சில நிமிடங்களாவது தனது உடலை வைத்துவிட்டு பிறகே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு அதன் பிறகே இறந்தார்.

1974 ஆம் ஆண்டு மார்ச்  8 ஆம் தேதி சந்திரபாபு இறந்த போது சாந்தோம் சர்ச்சிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரது விருப்பப்படி விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டு அதற்குப் பிறகே பட்டினப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார் சந்திரபாபு. மணமான சில நாட்களில் கணவன் மனைவிக்கு இடையில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மணமாவதற்கு முன் தனக்கிருந்த பெண் சிநேகிதம் பற்றி மனைவியிடம் மனம் திறந்து கூறியிருக்கிறார். கணவனின் பெருந்தன்மையை எண்ணிப் பார்த்து வியந்த ஷீலா, தனக்கும் திருமணத்துக்கு முன் ஒரு ஆண் நண்பர் இருந்ததாகக் கூறினாராம். அவ்வளவுதான் வந்ததாம் கோபம் சந்திரபாபுவுக்கு.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மனைவியை அழைத்துப்போய் வீட்டுக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டாராம். அது இரவு நேரம். ஷீலா எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்கவில்லை. வேறு வழியில்லாமல் சந்திரபாபு மிகவும் மதிக்கும், ‘தமிழ்ப் பட உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் கே. சுப்ரமணியம் வீட்டுக்கு போன் செய்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார் ஷீலா.

அவர் உடனே தனது உதவியாளரை அனுப்பி ஷீலாவைத் தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார். “கவலைப்படாமல் நீ போய்த் தூங்கு. காலையில் நான் அவனை அழைத்துப் பேசிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் காலை சந்திரபாபுவை அழைத்து சமாதானம் செய்து வைக்க முயன்றார் கே. சுப்ரமணியம். வழக்கமாக அவரது பேச்சைக் கேட்கும் சந்திரபாபு, இந்த விஷயத்தில் மசியவில்லை. “நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டியிருக்கும்” என்று முடிவாகக் கூறினாராம் சந்திரபாபு.

இனியும் அவரை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்த கே. சுப்ரமணியம் லண்டனில் வாழ்ந்து வந்த ஷீலாவின் தயாருக்குத் தகவல் அனுப்பி அவரை சென்னைக்கு வரச் செய்து அவரிடம் மகளை ஒப்படைத்தாராம் கே. சுப்ரமணியம். தனது மனைவியை அவரது காதலருடன் சந்திரபாபு இணைத்து வைத்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார் சந்திரபாபு. 'சில சமயங்களில்  என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல', அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல' என்று சொல்லி இருக்கிறார்.

1947 ஆம் ஆண்டு 'தன அமராவதி' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து, 1974-ம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளைச் செல்வம்’ வரை ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சந்திரபாபு. இதில்  ‘பிள்ளைச் செல்வம்’ படம் வெளிவருவதற்கு முன்பாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47-வது வயதில் காலமானார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகம் இருந்தாலும் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வவிக்கும் கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தார் சந்திரபாபு.

தொகுப்பு : ஜி.பாலன்