காத்தாடி ராமமூர்த்தி, சோ ஆகியோர் இணைந்து
நடத்திய விவேக் பைன் ஆர்ஸ் நாடககுழுவின் நாடத்தில் இன்ஸ்பெக்டராக நகைச்சுவை கலந்த
வேடத்தில் நடித்து அறிமுகமானார்.
கூத்தபிரானின் கல்கி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவிலும்
நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர், திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அதற்காக
முயற்சி செய்தார்.
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு
இயக்கத்தில் பானுமதி நடித்த அன்னை படத்தில் நடிக்க மேக்கப் டெஸ்ட்டுக்கு சென்ற
போது அவரது கண்கள் சிறியதாக இருக்கிறது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
ஜெய்சங்கருக்கு நம்பிக்கையூட்டி அவரை
திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்ய வற்புறுத்தியதுடன், சிட்டாடல் ஜோசப்
தளியத்திடம் சிபாரிசு செய்தவர், ஜெய்சங்கரின் நண்பரான, ராமானுஞ்சம்.
இயக்குநர் ஜோசப் தளியத் ஜெய்சங்கரை மேக்கப்
டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். ‘இந்தப் பையன்கிட்ட ஏதோ இருக்கு’ என்று நம்பினார். தான்
இயக்கிய இரவும் பகலும் படத்தில் கதாநாயகனாக, இரண்டு வேடங்களில் நடிக்க வைத்தார். சங்கர்
என்கிற பெயருடன் ஜெய் சேர்த்து ஜெய்சங்கர் என்று இரவும் பகலும் படத்தில்
அறிமுகபப்டுத்தினார்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல்
நாளில் வெளியான இரவும் பகலும் படம் ஜெய்சங்கருக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.
அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தின் கதவுகள்
கண்களடா’ என்ற பாடலால் பட்டி தொட்டியெல்லாம் ஜெய்சங்கர் பிரபலமானார். ‘இரவும்
வரும் பகலும் வரும்’ என்ற ஆலங்குடி சோமுவின் பாடலும் ஜெய்சங்கர் என்ற நடிகரை வாழ
வைத்தது.
இரவும் பகலும் படத்திற்கு பிறகு இரவும், பகலும் மாற்றி மாற்றித் தேதி கொடுத்து அதே ஆண்டில் எம்.ஆர்.ராதா நடித்த எங்க வீட்டு பெண், முத்துராமன் நடித்த பஞ்சவர்ணக்கிளி, ஜெயலலிதாவுடன் நீ, ஜமுனாவுடன் குழந்தையும் தெய்வமும் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் ஜெய்சங்கருக்கு
வித்தியாசமான வேடம் கொடுத்திருந்தகார், இயக்குநர் சங்கர். அன்னை படத்திற்கு
மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து கண்கள் சிறிதாக இருக்கிறது என்று திருப்பி
அனுப்பிய ஏவி.எம்.நிறுவனமும், இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சுவும், ஜெய்சங்கரின்
திறமையைப் பார்த்து ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் நடிக்க வைத்து பெண்கள் பக்கமும்
அவரை கொண்டு சென்றனர்.
ஜெய்சங்கரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை வைத்துக்கொண்டு,
தொடர்ச்சியாக படங்கள் தயாரித்தது. ‘வல்லவன் ஒருவன்’, ‘சிஐடி.சங்கர்’ அவரை வசூல் சக்கரவர்த்தி ஆக்கியது. கத்திச்சண்டை போட்டு
வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில்,
ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர். ‘தென்னகத்தின்
ஜேம்ஸ்பொண்ட்’ என்றும் அவரை இரசிகர்கள் கொண்டாடினார்கள்.
ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம், ’பஞ்சவர்ணக்கிளி’
மாதிரியான குடும்பக் கதைப் படங்கள், நடுவே ’பொம்மலாட்டம்’,
’வரவேற்பு’, ’பூவா தலையா’, பட்டணத்தில் பூதம் என
காமெடி படங்கள் என ரவுண்டு கட்டி வலம் வந்தார் ஜெய்சங்கர். பாலசந்தரின்
‘நூற்றுக்கு நூறு’ மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி,
எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன் என பலரும்
நடித்துக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர். போல் ஜெய்சங்கர் செல்வாக்கு
இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத்
தொட்டவரில்லை. படங்களில் ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை. ரவிச்சந்திரனைப்
போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. சிவாஜியை இமிடேட் செய்யும்
ஏவிஎம்.ராஜனும் அப்போதுதான் வந்திருந்தார். ஆனால், எவர்
மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார்
ஜெய்சங்கர்.
எம்ஜிஆர், சிவாஜி கால்ஷீட் பெற முடியாத தயாரிப்பாளர்களெல்லாம்
ஜெய்சங்கரை தேடி வந்தனர். குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர்.
கேட்கும் சம்பளமும் குறைவு. அந்தக் குறைவான
சம்பளத்திலும் பாக்கி வைத்தால் அதையும் கேட்பதுமில்லை. கால்ஷீட் சொதப்பமாட்டார், சொன்ன நேரத்துக்கு வந்துவிடுவார். இந்த நடிகையைப் போடுங்கள்
அந்த வில்லனைப் போடுங்கள் என்றெல்லாம் சொல்லமாட்டார். தன்னுடைய வேலையை கண்ணும்
கருத்துமாக இருந்து செய்து கொடுப்பார் என்று அவருக்கு திரையுலகம் அவரை
போற்றுகின்றது.
ஜெய்சங்கரின் படங்கள் முக்கால்வாசி பட்ஜெட்
படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன. யூனிட்டில் உள்ள
எல்லோரிடமும் கனிவாகப் பேசும் பண்பு கொண்டவர். யாரைப் பார்த்தாலும் ‘ஹாய்’ என்று
சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம்.
பின்னாளில், இந்த ‘ஹாய்’ என்ற வார்த்தையே ஜெய்சங்கரின் அடையாளமானது.
ஒரு கதாசிரியன் சிரமப்பட்டால் ஒரு கம்பெனியில்
அவரை எழுதவைப்பார். ஒரு இயக்குநர் சிரமப்பட்டால் ஒரு தயாரிப்பாளரைக் கை
காட்டுவார். ஒரு தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் அவரிடம் அட்வான்ஸ் வாங்காமல் கால்ஷீட்
கொடுப்பார். பலரின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்தவர், மெர்சி ஹோம் போன்ற
இல்லங்களுக்கும் உதவும் குணம் கொண்டவர்.
ஸ்டுடியோ முதலாளிகள், பிரபல இயக்குநர்கள்
மட்டுமே படம் தயாரிக்க முடியும் என்ற நிலையை உடைத்து காஸ்டியூமர், மேக்கப் மென்,
புரொடக்ஷன் மேனேஜர் என எல்லா தரப்பினரையும் தயாராப்பாளர் ஆக்கி அவர்களை உயர்த்தி இருக்கிறார், ஜெய்சங்கர்.
இதனால் பல தயாரிப்பாளர்கள் உருவாகினார்கள். நிறைய படங்களும் தயாராகி, ஒவ்வொரு
வெள்ளிக் கிழமையும் ஜெய்சங்கரின் புதுப்படம் வெளியாகும் நிலை ஏற்பட்டு, அவரை
பிரைடே ஹீரோ என்று கிண்டலாக அழைக்கும் அளவுக்கு பேசப்பட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞரின் கதை
வசனத்தில் அமிர்தம் இயக்கத்தில், `வண்டிக்காரன் மகன்' படத்தில் நடித்தார், ஜெய்சங்கர். அதில் எம்.ஜி.ஆரையும் அவரது ஆட்சியையும்
விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தது, அது அப்போது
பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனால் ஜெய்சங்கர் மீது அழுத்தமாக தி.மு.க முத்திரை
குத்தப்பட்டது.
தொடர்ந்து அவர் நடித்த படங்களில் தி.மு.க ஆதரவு
வசனங்களும், தத்துவப் பாடல்களும் இடம்பெற்றபோதிலும்,
ஏனோ ஜெய்சங்கரால் அரசியலில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போனது. ஆனால்,
கலைஞர் வழங்கிய மக்கள் கலைஞர் என்கிற பட்டம் மட்டும் அவருடன் நிலைத்தது.
வயது கூடிக்கொண்டே வர, படங்கள் குறைந்துகொண்டே வந்தன. இப்போது கமல், ரஜினி காலகட்டம். எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக
நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளை’யில் வில்லனாக நடிக்கக்
கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து
வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
‘ஊமைவிழிகள்’ குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல
கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது.
இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும்
ஜெய்சங்கர், குப்பத்து சாஸ்த்திரிகள் என்கிற தொலைக்காட்சி தொடரிலும்
நடித்திருக்கிறார். இவருக்கு தமிழக அரசி கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பெற்றோர் பார்த்த கீதாவையே மணந்துகொண்டு இரண்டு
ஆண் வாரிசுகள், ஒரு பெண் வாரிசுக்குத் தந்தையானார். இன்று
சென்னையில் விரல் விட்டு எண்ணக்கூடிய புகழ்மிக்க கண் மருத்துவர்களில் இவரது மூத்த
மகன் விஜய் சங்கர் முக்கியமானவர். இரண்டாவது மகன் சஞ்சய் இன்ஜினீயர்.
கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் கவனம் செலுத்துபவர். கடைக்குட்டி சங்கீதா, அவரும் மருத்துவர். இப்படி அழகாக, அருமையாக
குழந்தைகளை வளர்த்து, முறையாகப் படிக்க வைத்து, அவர்கள் வெற்றிகரமாக வாழும் வாழ்க்கையை உடன் இருந்து பார்த்து
சந்தோஷப்படுவதே எந்த மனிதனுக்கும் பிற்கால வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
எதிலும் விரைவும், வேகமும்
காட்டும் ஜெய் சங்கர் இவ்வுலகை விட்டுப் போவதிலும் வேகம் காட்டி 2000-ஆம் ஆண்டு
சூன் 3- ஆம் தேதி தனது 61 வயதில் மாரடைப்பால்
காலமானார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக