சனி, 20 நவம்பர், 2021

நகைச்சுவை நாயகன் சந்திரபாபு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம்பிடித்தவர் சந்திரபாபு. தமிழ் திரைப்பட துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞனாகவும் விளங்கியவர்.

ஜோசப் பிச்சை என்னும் இயற்பெயர் கொண்ட சந்திரபாபு, 1927 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். பெற்றோர் ஜே.பி.ரோட்டரிக்ஸ் - ரோசரின். இவருடைய குடும்பம் சுதந்திரப் போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. அங்கு பள்ளிக் கல்வியை முடித்தார், சந்திரபாபு.

கொழும்பு நகரில் வாழ்க்கை நடத்த முடியாமல் சந்திரபாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். அப்பா பத்திரிகையில் பணிபுரிய தொடங்கினார். திருவல்லிக்கேணியில் வீடு கிடைத்தது. சாந்தோம் கடற்கரையில் வசித்த இசையமைப்பாளர் வேதாவும், தபேலா தாழு ஆகியோரின் அறிமுகம் சந்திரபாபுவுக்கு கிடைத்தது. அவர்களிடம் இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டு சினிமாவில் பாடுவதற்கு முயற்சி செய்தார்.

ஒருநாள் சென்ட்ரல் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் எம். எஸ். சுப்பையா நாயுடுவை சந்தித்து தனது ஆர்வத்தை சொல்லி பாடுவதற்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவரை தனது உதவியாளர் விஸ்வநாதனிடம்தான் அனுப்பி வாய்ஸ் டெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார் சுப்பையா நாயுடு.

விஸ்வநாதன் ஆர்மோனியம் வாசிக்க தனக்குத் தெரிந்த தமிழ்ப் பாடல்களை பாடி இருக்கிறார், சந்திரபாபு. சில வருடங்கள் இலங்கையில் இருந்ததால் சந்திரபாபுவின் தமிழ் உச்சரிப்பில் கொஞ்சம் சிங்களம் கலந்திருந்தது. அதனால் வாய்ப்பு கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டார், சந்திரபாபு.

சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது என்று  சந்திரபாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள் கலைதாகமாகவே இருந்தன. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும், நடனம் ஆட வேண்டும், பாடகராக வேண்டும் என்கிற கொள்கையுடன் பல மாதங்கள் முயற்சி செய்தார். வாய்ப்புகள் அவருக்கு உடனே கிடைக்கவில்லை.

ஒருநாள் ஜெமினி ஸ்டுடியோ சென்று தயாரிப்பாளரும் ஸ்டுடியோ அதிபருமான எஸ். எஸ். வாசனைச் சந்திக்க முயன்றிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வேதனையில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அதனால், இவரை காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. நீதிபதியின் முன்னால் ஒரு தீக்குச்சியைக் கொண்டு தமது கையைச் சுட்டுக் கொண்ட சந்திரபாபு, "உங்களுக்கு நான் சுட்டுக்கொண்டதுதான் தெரியும்; என் காயத்தை உங்களால் உணரமுடியாது. அதுபோலத்தான் என் துயரமும்" என்று கூறி இருக்கிறார்.

சந்திரபாபுவின் பதிலில் இருந்த நகைச்சுவையையும் சோகத்தையும் உணர்ந்த நீதிபதி, அவருக்கு அறிவுரை கூறி விடுதலை செய்தார். இந்த தகவலை அறிந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சந்திரபாபுவை அழைத்ர்ஹ்து

இந்த இவர் கூறிய பதிலில் இருந்த நகைச்சுவையையும் சோகத்தையும் உணர்ந்த நீதிபதி, அறிவுரை கூறி அவரை விடுதலைசெய்தார்.

சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்ட சந்திரபாவுக்கு 1947- ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்கிற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. பி.எஸ்.ராமையா இயக்கிய அந்தப் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது” என்கிற பாடலையும் பாடி இருந்தார்.

அடுத்து டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலட்சுமி நடித்த மோகன சுந்தரம் படத்தில் கோபு என்கிற பாத்திரத்தில் நடித்ததுடன் டி.ஜி.லிங்கப்பா இசையில் இரண்டு பாடல்களை பாடினர். அதில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய இன்பம் பொங்கும் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அந்தமான் கைதி, சின்னதுரை, கண்கள், அழகி, வாழ பிறந்தவள், கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, பெண், குலேபகவாலி என பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடம்பிடித்தார். தூத்துக்குடிகாரரான இவர் பேசிய மெட்ராஸ் பாஷை, அச்சு அசலாக அப்படியே இருந்தது.

மரகதம் படத்தில் குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, புதையல் படத்தில் உனக்காக எல்லாம் உனக்காக, மணமகள் தேவை படத்தில் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, சகோதரி படத்தில் நானொரு முட்டாளுங்க, ஆண்டவன் கட்டளை படத்தில் சிரிப்பு வருது சிரிப்பு வருது, நாடோடி மன்னன் படத்தில் தடுக்காதே என்னை தடுக்காதே, போலீஸ்காரன் மகள் படத்தில் பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது, அன்னை படத்தில் புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை என பல புகழ்பெற்ற பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

நகைச்சுவை நடிப்பில் சார்லி சாப்ளினின் தமிழ்ப் பிரதியாக சந்திரபாபு இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காத்திருந்தது. ஒரு சில நேரங்களில் கதாநாயகர்களின் படங்களே இவரின் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலையும் அப்போது ஏற்பட்டது. ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

தான் சம்பாதித்த அளப்பரிய சொத்துக்களையெல்லாம் சொந்த படத் தயாரிப்பில் மெள்ள மெள்ள இழந்தார். ’கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ’குமார ராஜா’ என்னும் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததும், இனி நகைச்சுவை நடிகராகப்போவதில்லை என்று அறிவித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. மீண்டும் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்.

'தட்டுங்கள் திறக்கப்படும்' அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி, எம்ஜிஆர் இவர்களை சந்திரபாபுவுக்கு ரொம்ப பிடிக்கும். எம். ஜி. ஆர். நடித்த “குலேபகாவலி” படத்தில் எம். ஜி. ஆரின் நண்பராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தார் சந்திரபாபு. அந்தப் படத்தில்  சந்திரபாபுவின்  பாடல் ஒன்று இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய “குலேபகாவலி” படத்தின் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அப்படி ஒரு பாடலுக்கு இசையமைக்கும்படி அப்படத்திற்கு இசையமைப்பாளர்களாகப் பணியாற்றிய   விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகிய இருவரையும் கேட்டுக் கொண்டார். 

அந்தப்பாடலுக்கு அவர்கள் இசையமைத்து முடித்ததும் தான் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை கேட்பதற்காக ராமண்ணாவின் அலுவலகத்திற்கு வந்தார் சந்திரபாபு. அவர் வந்தவுடன் அவர் பாட வேண்டிய பாடலுக்கான டியூனை விஸ்வநாதன் ஹார்மோனியத்தில் வாசித்தார்

முகத்தில் எந்தச்  சலனமும் இன்றி அந்த டியூனை கேட்ட சந்திரபாபு விஸ்வநாதன் வாசித்து முடித்ததும் “என்ன மெட்டு இது?” என்றார்.

அவரது கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் எல்லோரையும் எதிர்ச்சி அடைய வைத்தது.  அதைப்பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ”இந்த காட்சியில நான் பாடி ஆடணும். ஆனா இந்த மெட்டுக்கு நான் எப்படி டான்ஸ் ஆட முடியும்? டான்ஸ் ஆட இந்த மெட்டில் என்ன இருக்கு?” என்று சரமாரியாக படத்தின் இயக்குனரான ராமண்ணாவைப் பார்த்து தொடர்ந்து கேள்விகள்  கேட்டார் சந்திரபாபு.

அந்தப் பாட்டிற்கு மிகவும் அருமையாக மெட்டமைத்திருந்தார் எம் எஸ் விசுவநாதன். அப்படி இருக்கும்போது சந்திரபாபு அந்த பாட்டைப்பற்றி ஏன் அவ்வளவு கேவலமாகப் பேசுகிறார் என்று ஒருவருக்கும் புரியவில்லை . 

சென்ட்ரல் ஸ்டுடியோவில் வாய்ஸ் டெஸ்ட்டுக்காக சந்திரபாபு வந்த போது “எங்கே பாடறாரு? எல்லா பாட்டையும் வசனமா சொல்றாரு” என்று  தான் எஸ் எம் சுப்பையா நாயுடு அவர்களிடம் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு அதற்குப் பழி வாங்குவதற்காகத்தான் சந்திரபாபு தனது மெட்டைக் குறை கூறுகிறார் என்ற விஷயம் விஸ்வநாதனுக்கு மட்டும் தெளிவாகப் புரிந்தது.

எம் எஸ் விஸ்வநாதன், தன்னுடன் பாடல் கம்போசிங்கிற்கு வந்திருந்த வாத்தியக் கலைஞர்களிடம் தான்  போட்டிருந்த டியூனை வாசிக்கச் சொன்னார்.

எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்ட அவர், அந்த டியூனுக்கு ஏற்ப நடனம் ஆடத் தொடங்கினார். வழுவூர் ராமையா பிள்ளையிடம்  நடனம் கற்றுக் கொண்டவர் என்பதால் அந்த மெட்டுக்கு ஏற்ப அமர்க்களமாக அவர் ஆடியதைப் பார்த்து சந்திரபாபு மட்டுமல்ல அந்த கம்போசிங் அறையில் இருந்த அனைவரும் திகைத்துப் போனார்கள்

சந்திரபாபு ஓடிவந்து எம்.எஸ்.விஸ்வநாதனை அப்படியே கட்டிப் பிடித்து “நீ கலைஞன்டா” என்று விஸ்வநாதனின் கன்னத்தைக் கிள்ளியபடி அவரைக்  கொஞ்சித்  தீர்த்துவிட்டார்.

“குலேபகாவலி” படத்திலே  இணைந்த அவர்கள் இருவரும் அதற்குப் பிறகு இணை பிரியா நண்பர்களானார்கள். நாளடைவில் விஸ்வநாதனின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆனார் சந்திரபாபு.

மிக நெருக்கமான நண்பர்களாக இருந்த போதிலும் பாடல் என்று வந்துவிட்டால் விஸ்வநாதனும் விட்டுக் கொடுக்க மாட்டார். சந்திரபாபுவும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

கண்ணதாசன் தயாரித்த “கவலை இல்லாத மனிதன்” படத்திலே தான் பாடுகின்ற மாதிரி ஒரு தத்துவப் பாடல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் சந்திரபாபு. அந்த சந்தர்ப்பத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அகால மரணம் அடைந்திருந்ததால் அவர் மறைவால் மனதளவில் பெரிதாக பாதிக்கப் பட்டிருந்த கண்ணதாசன் பாடல் எழுதுவதிலேயே ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.

பின்னர் சந்திரபாபு வேண்டிக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் எழுதிய பாடல்தான் “பிறக்கும் போதும் அழுகின்றாய், இறக்கும் போதும் அழுகின்றாய்,              ஒரு நாளேனும் கவலையில்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே” என்ற பாடல்

அந்தப் பாடலுக்கு இசையமைத்த விஸ்வநாதன் அந்த மெட்டை சந்திரபாபுவிற்கு சொல்லிக் கொடுத்துவிட்டு பாடல் பதிவிற்குத் தயாரானார்

டேக் ஒன்று, இரண்டு, மூன்று என்று போய்க்கொண்டேயிருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ விஸ்வநாதன் எதிர்பார்த்தபடி சந்திரபாபுவால் அன்று அந்தப் பாடலைப்  பாட முடியவில்லை

சலிப்போடு “இந்த மாதிரி பாட்டுக்கெல்லாம நீ லாயக்கில்லடா” என்றார் விஸ்வநாதன்.

ஆத்திரத்தில் தான் போட்டிருந்த பனியனை கழட்டிப் போட்டுவிட்டு மீண்டும் பாடத் தொடங்கினார் சந்திரபாபு. அந்த டேக்கும் சரியாக வரவில்லை

உடனே “என்னால் இனிமேல் பாட முடியாது” என்று உரக்கச் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஸ்டுடியோவை விட்டுக் கிளம்பி விட்டார் சந்திரபாபு

பின்னர் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்த விஸ்வநாதன். அவரை சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துக் கொண்டு வந்து அந்தப் பாடலைப் பாட வைத்தார்

அந்தப் பாடலை அப்போது நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னாலே பாடக்கூடிய வாய்ப்பு ஒரு முறை சந்திரபாபுவுக்குக் கிடைத்தது

தன்னை மறந்து அந்தப்பாடலை ரசித்த ஜனாதிபதி “பிரமாதம் பிரமாதம்” என்று மனமார அந்தப் பாடலைப் பாராட்டினார்

அவர் அப்படி பாராட்டிய அடுத்த நிமிடம் சந்திரபாபு தனது நாற்காலியில் இருந்து துள்ளிக் குதித்துக் கொண்டு ஜனாதிபதி அருகில் சென்றார்.

ஜனாதிபதியின் பாதுகாவலர்கள்  அவரைத் தடுத்து நிறுத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் மடியில் போய் அமர்ந்து கொண்ட சந்திரபாபு, அவர் தோளில் கையைப் போட்டார். பின்னர் அவரது கன்னத்தைத் தடவியபடி “கண்ணா நீ ரசிகன்டா” என்றார்

ஜனாதிபதி அருகில் செல்வதற்கே பல விதி முறைகள் உண்டு. ஆனால் சந்திரபாபுவோ அவரது மடியிலேயே அமர்ந்திருந்தார். அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை

ஆனால் அவ்வளவு உயரிய பதவியில் இருந்தும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள் சந்திரபாபுவின் செய்கையால் எந்த ஆத்திரமும் அடையாதது மட்டுமல்ல சந்திரபாபுவை தட்டிக் கொடுத்துப் பாராட்டினாராம்.

வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்த  சந்திரபாபு மரணத்தின் பிடியில் இருந்தபோது தன்னுடைய மரணம் பற்றி எம். எஸ். விஸ்வநாதனுக்கு மட்டுமே முதலில் தகவல் தர வேண்டும் என்றும் தன்னைக்  கல்லறையில் புதைப்பதற்கு முன்னாலே விஸ்வநாதன் இல்லத்தில் சில நிமிடங்களாவது தனது உடலை வைத்துவிட்டு பிறகே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டு அதன் பிறகே இறந்தார்.

1974 ஆம் ஆண்டு மார்ச்  8 ஆம் தேதி சந்திரபாபு இறந்த போது சாந்தோம் சர்ச்சிற்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் அவரது விருப்பப்படி விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டு அதற்குப் பிறகே பட்டினப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை மணந்தார் சந்திரபாபு. மணமான சில நாட்களில் கணவன் மனைவிக்கு இடையில் எவ்வித ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மணமாவதற்கு முன் தனக்கிருந்த பெண் சிநேகிதம் பற்றி மனைவியிடம் மனம் திறந்து கூறியிருக்கிறார். கணவனின் பெருந்தன்மையை எண்ணிப் பார்த்து வியந்த ஷீலா, தனக்கும் திருமணத்துக்கு முன் ஒரு ஆண் நண்பர் இருந்ததாகக் கூறினாராம். அவ்வளவுதான் வந்ததாம் கோபம் சந்திரபாபுவுக்கு.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மனைவியை அழைத்துப்போய் வீட்டுக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்திவிட்டாராம். அது இரவு நேரம். ஷீலா எவ்வளவோ மன்றாடியும் சந்திரபாபு கதவைத் திறக்கவில்லை. வேறு வழியில்லாமல் சந்திரபாபு மிகவும் மதிக்கும், ‘தமிழ்ப் பட உலகின் தந்தை’ எனப் போற்றப்படும் கே. சுப்ரமணியம் வீட்டுக்கு போன் செய்து விவரத்தைச் சொல்லியிருக்கிறார் ஷீலா.

அவர் உடனே தனது உதவியாளரை அனுப்பி ஷீலாவைத் தனது வீட்டுக்கு அழைத்துவரச் செய்தார். “கவலைப்படாமல் நீ போய்த் தூங்கு. காலையில் நான் அவனை அழைத்துப் பேசிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மறுநாள் காலை சந்திரபாபுவை அழைத்து சமாதானம் செய்து வைக்க முயன்றார் கே. சுப்ரமணியம். வழக்கமாக அவரது பேச்சைக் கேட்கும் சந்திரபாபு, இந்த விஷயத்தில் மசியவில்லை. “நீங்கள் என்னை வற்புறுத்தினால் நான் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டியிருக்கும்” என்று முடிவாகக் கூறினாராம் சந்திரபாபு.

இனியும் அவரை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்த கே. சுப்ரமணியம் லண்டனில் வாழ்ந்து வந்த ஷீலாவின் தயாருக்குத் தகவல் அனுப்பி அவரை சென்னைக்கு வரச் செய்து அவரிடம் மகளை ஒப்படைத்தாராம் கே. சுப்ரமணியம். தனது மனைவியை அவரது காதலருடன் சந்திரபாபு இணைத்து வைத்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார் சந்திரபாபு. 'சில சமயங்களில்  என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல', அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல' என்று சொல்லி இருக்கிறார்.

1947 ஆம் ஆண்டு 'தன அமராவதி' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து, 1974-ம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளைச் செல்வம்’ வரை ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சந்திரபாபு. இதில்  ‘பிள்ளைச் செல்வம்’ படம் வெளிவருவதற்கு முன்பாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47-வது வயதில் காலமானார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகம் இருந்தாலும் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களை மகிழ்வவிக்கும் கலைஞனாகவே வாழ்ந்து மறைந்தார் சந்திரபாபு.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக