இவரது தந்தை அந்தோணி தேவராஜ் இளம் வயதில் அதாவது
36 வயதில் காலமானதால், இவரது தம்பி அமல்ராஜ், தங்கை அஞ்சலி ஆகியோரை வைத்து கொண்டு கஷ்டப்பட்டார்,
இவரது அம்மா ரெஜினா மேரி நிர்மலா.
எழும்பூரில் உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப்
பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்த எல்.ஆர்.ஈஸ்வரி, மேலே படிக்க வைக்க
பொருளாதரீதியாக அம்மா சிரமப்பட்டதால், அம்மாவுக்கு துணையாக இருந்து உழைக்க வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
அவருடைய அம்மா ஜெமினி ஸ்டுடியோவில்
குழுப்பாடகியாக பாடகியாக இருந்தார். அவர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு கோரஸ் பாட
செல்லும் போது ஆவருடன் செல்லும் எல்.ஆர்.ஈஸ்வரி, அம்மாவுடன் மற்ற கோரஸ் பாடகிகள் பாடுவதை
கேட்டு அதே மாதிரி பாடுவார்.
1954 ஆம் ஆண்டு மனோகரா படத்திற்காக எஸ்.வி.வெங்கட்ராமன்
இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழுவினர்
பாடினர். அந்த பாடலில் குழுவினருடன் இணைந்து ஈஸ்வரியும் பாடினார். அன்று முதல்
இவரும் குழுப் பாடகியானார்.
ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த
"வடிவுக்கு வளைகாப்பு'' என்ற படத்திற்கு கோரஸ் பாட அவரது
அம்மா சென்றபோது, அவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி சென்றார். பாடலின்
இடையே "ஹம்மிங்'' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால்,
தற்செயலாக அந்தப் பாட்டுக்கு இவரை "ஹம்மிங்'' கொடுக்க வைத்தார்கள். அதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் "உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது.
நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய்” என்று பாராட்டினார்கள்.
அவர்களின் பாராட்டு எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பெரிய
நம்பிக்கையைக் கொடுத்தது. அதன் பிறகு ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து "லட்சுமி பிக்சர்ஸ்''
என்ற படக் கம்பெனியைத் தொடங்கி, "நல்ல
இடத்து சம்பந்தம்'' என்ற படத்தை எம்.ஆர்.ராதா நடிப்பில் தயாரித்தனர்.
அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எல்.ஆர்.ஈஸ்வரி பாட வாய்ப்பு கிடைத்தது.
"புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து
பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே
நினைத்துப்பாரு.''
"பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு
வண்டியிலே.''
"இவரேதான் அவரு அவரேதான் இவரு''
"துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்'' என்று நான்கு பாடல்கள் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
முதல் படத்திலேயே நான்கு பாடல்களை பாடும்
வாய்ப்பை கொடுத்த ஏபி.நாகராஜன், லூர்து மேரி ராஜேஸ்வரி என்கிற பெயரை சினிமாவுக்காக
சுருக்கமாக "எல்.ஆர்.ஈஸ்வரி'' என்று மாற்றி வைத்தார்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய்
சம்பளம் கிடைக்கும். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை. வறுமையில்
வாடிக்கொண்டிருந்த குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும்
என்ற நம்பிக்கை அந்த நானூறு ரூபாய் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.
நல்ல இடத்து சம்பந்தம் படம் 1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வெளியாகி வெற்றிப் படமாக
அமைந்தது. அதில் பாடல் பாடிய எல்.ஆர்.ஈஸ்வரிக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
இதனையடுத்து 1959 இல் வெளிவந்த நாலு வேலி நிலம்
படத்துக்காக திருச்சி லோகநாதனுடன் இணைந்து ஊரார் உறங்கையிலே என்ற பாடலைப்
பாடினார். இந்தப் பாடலுக்கும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார்.
ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜிகணேசன் - சாவித்திரி
நடித்த "பாசமலர்'' படத்தில் விஸ்வநாதன் -
ராமமூர்த்தி இசையில் "வாராய் என் தோழி வாராயோ...''
என்கிற பாடலை பாடும் வாய்ப்பு ஈஸ்வரிக்கு கிடைத்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்தப் படத்தில்
அந்தப் பாடலும் பெரும் புகழ் பெற்றது.
1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி
வாழ்க்கையில் அந்தப் பாடல் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திது.
அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த
எல்.ஆர்.ஈஸ்வரி, "பாசமலர்'' வெற்றியைத்
தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத் தொடங்கினார்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த
"பணமா பாசமா'' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும். அந்தப் படத்தில், `எலந்த
பயம்... எலந்த பயம்'' என்ற கிராமியப் பாடலை விஜய
நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில்
விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
இயக்குநர் ஸ்ரீதர், "சிவந்த மண்'' படத்தை
வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார். அதில் சிவாஜிகணேசனும்,
காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி. "பட்டத்து
ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்''
என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய
பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார்.
அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த "ஹம்மிங்'', பாடலுக்கு
மேலும் மெருகேற்றியது.
‘கறுப்புப் பணம்’ படத்தில் இடம்பெற்ற 'ஆடவரெல்லாம் ஆட வரலாம்' பாடல் அவரது
குரலின் வேறொரு வலுவைக் காட்டியது. பின்னாளில் கேபரே வகை நடனத்துக்கான பாடல்கள்
என்றாலே ஈஸ்வரிதான் என்றாயிற்று.
வல்லவன் ஒருவன் படத்தில் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’
கௌரவம் படத்தில் ‘அதிசய உலகம்’ என்று போகும் வரிசையில் அவருடைய குரல்களில் இழையும்
பரவசமும், கொண்டாட்டமும் புதிதான இழைகளில்
நெய்யப்பட்டிருக்கும்.
வசந்த மாளிகை படத்தில் 'குடி மகனே' பாடலில் ‘கடலென்ன ஆழமோ... கருவிழி
ஆழமோ..’ என்ற ஏற்ற இறக்கங்களும் சேர, கொஞ்சுதலும்
கெஞ்சுதலும் சொற்களில் போதையூட்டும் வண்ணம் குழைத்தலுமாக உயிர்த்தெழும் குரல் அது.
தொடக்கத்திலோ, இடையிலோ,
நிறைவிலோ ஹம்மிங் கலந்த அவரது பாடல்கள் வேறு உலகத்தில் கொண்டு
சேர்க்க வல்லவை. பற்றைத் துறக்கத் துடிக்கும் ஆடவனை இவ்வுலக வாழ்க்கைக்கு
ஈர்க்கும் 'இது மாலை நேரத்து மயக்கம்' பாடலில்
மோக மயக்கத்தின் பாவங்களைக் கொட்டி நிரப்பி இருப்பார் ஈஸ்வரி.
பணம் படைத்தவன் படத்தில் ‘மாணிக்கத் தொட்டில்
இங்கிருக்க' பாடலில் ஒரு விதம் என்றால், ‘பவளக்கொடியிலே முத்துக்கள்' பாடலில் வேறொரு விதமாக
உருக்கி வார்த்திருப்பார் ஹம்மிங்கை.
ராமன் தேடிய சீதை படத்தில் ‘என் உள்ளம் உந்தன்
ஆராதனை' குமரிக்கோட்டம் படத்தில் ‘நாம் ஒருவரை
ஒருவர்' பாடல்களை எல்லாம் எழுத்தில் வடித்துவிட முடியுமா
என்ன?
யேசுதாஸ் குரலின் பதத்திற்கேற்பவும் பாட
முடியும் அவருக்கு! மன்மதலீலை படத்தில் ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ என்று அதிரடி
பாடலையும் அவரால் கொடுக்க முடிந்தது. ‘காதோடு தான் நான் பாடுவேன்' என்ற அற்புதமான மென்குரலை வழங்கிய அவரால், ‘அடி என்னடி உலகம்' என்று உரத்துக் கேட்கவும்
சாத்தியமாயிற்று.
பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை
பாடல்கள் ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’,
‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’. சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும் ஆம்பளையா', எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின்
மயக்கக் குரலோடு ‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கஜன்’,
‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’,
பி.சுசீலாவோடு இணைந்து ‘கட்டோடு குழலாட’, ‘அடி போடி’ ‘உனது மலர்க்கொடியிலே’, ‘மலருக்குத் தென்றல்’, ‘கடவுள் தந்த’ என்று வெவ்வேறு
மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில.
டி.எம்.சவுந்திரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி இணை
குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை. ‘கேட்டுக்கோடி
உறுமி மேளம்', 'சிலர் குடிப்பது போலே',
‘மின்மினியைக் கண்மணியாய்', ‘உன் விழியும் என்
வாளும்;, ‘அவளுக்கென்ன' என்ற பாடல்
வரிசைக்கும் முடிவில்லை.
ஆண், பெண் என இணைக் குரல்களின்
தனித்தன்மை எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து
பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.
பரிதவிப்பின் வேதனையை, தாபத்தைச் சித்தரிக்கும் ‘எல்லோரும் பார்க்க' பாடல் உயிரும் உணர்ச்சியும் ஊட்டிய குரல் ஈஸ்வரியுடையது. ஆர்ப்பாட்டமான
களியாட்டத்தை ‘இனிமை நிறைந்த’, ‘வாடியம்மா வாடி’, ‘கண்ணில் தெரிகின்ற வானம்’, ‘ர்ர்ர்ர்ர்ருக்கு
மணியே..’, என்று அவரால் இலகுவாக வெளிப்படுத்த முடிந்தது.
மனோரமாவுக்காக அவர் பாடிய 'பாண்டியன் நானிருக்க...' என்ற அற்புதப் பாடல் அந்தக் கதாபாத்திரத்தோடே ஐக்கியமாகிப் போன ஒன்று.
மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ‘குபு குபு
குபு குபு நான் எஞ்சின்’ என ஏ.எல்.ராகவனோடு இணைந்து அவர் ஓட்டிய ரயிலின் வேகம்
இளமையின் வேகம். ஜெயச்சந்திரனோடு இசைத்த 'மந்தார மலரே' காதலின் தாகம். ஒரு சாதாரணப் பூக்காரியின் அசல் குரலாகவே ஒலிக்கும்,
உருட்டி எடுக்கும் ‘முப்பது பைசா மூணு முழம்'!.
பல்வேறு இசையமைப்பாளர்களுடைய இசையின் பொழிவில்
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் தனித்தும், இணைந்தும் கொடிகட்டிப் பறந்த
அந்த ஆண்டுகள், ரசிக உள்ளத்தின் விழாக் காலங்கள்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி
இருக்கும், பாடும் முறையில் "கிக்'' இருக்கும். துள்ளிசைப் பாடல்களையே நிறையப் பாடினார். அதனால், லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான
இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக்
காலங்களுக்குமானவர்.
1961ஆம் ஆண்டு திரை உலகில் உயர்வை பெற்ற ஈஸ்வரி,
1985-ம் ஆண்டில் பக்தி உலகில் கவனிக்கப்பட்டார். அவரது குரலில் பதிவான கற்பூர
நாயகியேவும், மாரியம்மாவும், செல்லாத்தாவும்
இப்போதும் எண்ணற்ற சாதாரண மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்களாகத் திகழ்கின்றன.
கடவுள் நம்பிக்கை அற்றோரையும் ஈர்க்கும் விதமாக
அந்தப் பாடல்கள் அமைந்தன. இதனால், தமிழ்நாட்டில் அவர் சென்று பாடாத கோவில்களே
இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகளில் பாடி
இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் குன்றி
மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய
வேண்டி விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்த பிரார்த்தனைகளில் எல்லாம் அவர் பாடிய
அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாநாயகியாக
அறிமுகமான முதல் படம் "வெண்ணிற ஆடை.'' அதில் அவர் பாடும் முதல்
பாடலான "நீ என்பதென்ன... நான் என்பதென்ன...'' என்ற
பாடலை பாடும் வாய்ப்பு ஈஸ்வரிக்கு கிடைத்தது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2011 ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடித்த ஒஸ்தி திரைப்படத்தில்
"கலசலா கலசலா" என்ற குத்துப்பாடல் மூலம் மீண்டும் நுழைந்தார். டி.ராஜேந்தருடன்
சேர்ந்து பாடிய அந்த பாடல் வெளியான சில நாட்களில், பெரும்
புகழ் பெற்று மியூசிக் பாக்ஸ் ஆபிஸின் சிறந்த மதிப்பீடுகளை எட்டியது.
அடுத்த ஆண்டு தடையறத் தாக்க திரைப்படத்தில் அவர்
"நான் பூந்தமல்லி" என்ற பாடலைப் பாடினார்.
2013 ஆம் ஆண்டில், ஆர்யா
சூர்யா படத்தில் மீண்டும் டி.ராஜேந்தருடன் சேர்ந்து "தகடு தகடு" என்ற
டூயட் பாடலைப் பாடினார். 2014 இல் அவர் அதிதி திரைப்படத்தில் பரத்வாஜ் இசையில்
"ஜெய்ப்பூரில் ஜெய்ப்பூரில்" பாடலைப் பாடினார் 2020 ஆம் ஆண்டில்,
நயன்தாரா நடித்த திரைப்படமான "மூக்குத்தி அம்மன்" ஆடி
குத்து என்ற பாடலைப் பாடியிருந்தார். அவரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து, உற்சாக
வரவேற்பு கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி, அந்தப் படத்தில் நடிக்கவும் வைத்தார்.
கன்னடத்தில் கைலாஷ் கெருடன் "யக்கா நின்
மாகலு நானகே" என்கிற பாடலை விக்டரி படத்திற்காக பாடியுள்ளார். அந்தப் பாடல்
கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி,
ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை
பாடியுள்ள எல்.ஆர்.ஈஸ்வரி, தமிழக அரசின் "கலைமாமணி'' விருது,
ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்
வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த தனது
குடும்பத்தை முன்னேறச் செய்யவும், தனது தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் கவனம் செலுத்திய
எல்.ஆர்.ஈஸ்வரி, அவருக்கான திருமண வாழ்க்கையைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை.
அதற்காக நான் வருத்தப்படவில்லை என்கிறார், அவர்.
அவரது தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் அவர்
மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதாக
தெரிவித்திருக்கிறார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக