அவரைப் போருத்தவரி மலையாள நடிகை பிரேமா,
கே.பி.மேனன் மகளாக மகாலட்சுமியாகவே அவருக்கு அறிமுகமாமி இருந்தார். பேபி மகாலட்சுமியாக
தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபா, அதன்
பிறகு மலையாளத்தில் உருவான பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் 1967ஆம்
ஆண்டில் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி
ஷோபா என்கிற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டார். அந்தப் படம் பெரும் வெற்றி பெற்று
சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்து. அதன் பிறது
தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான நாணல்,
இருகோடுகள், புன்னகை, அச்சானி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த
ஷோபா, கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நிழல் நிஜமாகிறது’ படம்தான் ஷோபா
தமிழுக்கு அறிமுகமான முதல் படம்.
ஆனால், அந்த முதல் படத்திலேயே தன் நடிப்புத்
திறனை வெளிப்படுத்தியிருப்பார். ’திலகம்’ எனும் கதாபாத்திரத்தில், அந்தக் கேரக்டருக்கே திலகமிட்டு கெளரவப்படுத்திய ஷோபாவை,
மொத்தத் திரையுலகமும் திலகமிட்டு வரவேற்றது. குழந்தை நட்சத்திரமாக
மலையாளத்தில் நடித்தவருக்கு, தமிழில் அட்டகாசமாகத் திறந்தது
கோடம்பாக்க வாசல்.
‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சுமித்ராதான்
நாயகி. கமல்தான் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். ஹனுமந்துவுக்கும் கனமான
கேரக்டர். ஆனாலும் அவர்களையெல்லாம் தாண்டி, நம் மனதுக்குள் வந்து
உட்கார்ந்துகொள்வார் ஷோபா. அந்த யதார்த்தமான நடிப்பும், கள்ளமில்லாச் சிரிப்பும்,
குறும்புப் பார்வையும், யாரைத்தான் ஈர்க்கவில்லை?
மகேந்திரனின் இயக்கத்தில் ‘முள்ளும் மலரும்’ படத்தில், வள்ளி எனும் கேரக்டரில், ரஜினியின் தங்கையாக வாழ்ந்திருப்பார். ரஜினியின் தங்கையாக அவர் நடித்தாலும் ஒட்டுமொத்த தமிழுலகமும் அவரை, தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்தது. ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட முகபாவனைகள் காட்டினார். சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயாவுக்குப் பிறகு அப்படியொரு க்ளோஸப் ஷாட்டுகள் ஷோபாவுக்கு வைக்கப்பட்டன. ‘அடிப்பெண்ணே... பொன்னூஞ்சலாடுது இளமை’பாடலும் அப்படித்தான்!
’மூடுபனி’ படத்தில் சைக்கோ கொலைகார பிரதாப்பிடம்
ஷோபா சிக்கிக் கொண்டதும் பதைபதைத்துப் போனது ரசிகர் கூட்டம். போதாக்குறைக்கு, பிரதாப்பிடம் சிக்கிக்கொண்ட கலக்கத்தையும் நடுக்கத்தையும்
பதட்டத்தையும் பரிதவிப்பையும் தன் முகத்தாலும் கண்களாலும் காட்டியதற்கு இணையாக
இதுவரை எந்த நடிகையும் காட்டவில்லை என்கிறார்கள் எண்பதுகளின் சினிமா ரசிகர்கள். ‘
பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில்
டீச்சர் வேடம். நடிப்பில் ஆகச்சிறந்த பரிணாமம் காட்டி பிரமாதப்படுத்தினார்.
காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டி கொண்டாடினார்கள்.
’நிழல் நிஜமாகிறது’ படத்தில் தாவணி. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் புடவை. ‘மூடுபனி’
படத்தில் மாடர்ன் டிரஸ்.
தியேட்டரில் வேலை பார்க்கும் சாமானியப் பெண், மிகப்பெரிய நடிகையாக உயர்வதை வெகு அழகாக தன் நடிப்பால்
வெளிப்படுத்திய ‘ஏணிப்படிகள்’ படத்தையும் ‘பூந்தேனில் கலந்து’ பாடலையும்
யாரால்தான் மறக்கமுடியும்?
விஜயகாந்தின் ஆரம்பகட்ட ‘அகல்விளக்கு’ படத்தில், ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் ஷோபாவின் நடிப்பும் ஏற்படுத்திய
சலனம், என்றைக்குமாக நம் மனதில் தங்கிவிட்ட ஒன்று.
விஜயகாந்துடன் நடித்த அந்தப் படம் ஓடியதோ இல்லையோ... அந்தப் படம் இன்றைக்கும்
நினைவில் இருப்பதற்கு ‘ஏதோ நினைவுகள்’ பாடலும் இளையராஜாவின் இசையும் விஜயகாந்த் -
ஷோபாவின் இயல்பான நடிப்புமே காரணம்.
’ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’யும் மெச்சூரிட்டியான
நடிப்பால் உள்ளம் கவர்ந்திருப்பார்.
இயக்குநர் துரையின் இயக்கத்தில் ‘பசி’ படம், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்று.
குப்பத்துக் கதாபாத்திரத்தை ஷோபாவை விட வேறு யார் பொருந்தியிருக்கமுடியும்?
நடித்திருக்க முடியும்? ஷோபாவின் தன் மொத்த
நடிப்பையும் மொத்தத் திறமையையும் கொடுத்திருப்பார். ஒரு பக்கம் வறுமை... இன்னொரு
பக்கம் ஊதாரித் தந்தை, நடுவே லாரி டிரைவரின் காமப்பசிக்கு
ஏமாறுவது என அத்தனை துயரங்களையும் நம் கண்முன்னே வாழ்ந்து காட்டியிருப்பார்.
அதனால்தான் அந்தப் படத்துக்காக அவருக்கு ‘ஊர்வசி’ விருது கிடைத்தது. ‘ஊர்வசி’
என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது. நடிகை சாரதாவுக்குப் பிறகு அந்தப் பட்டத்தை
வாங்கிய நடிகை ஷோபாதான்!
பசி படத்திற்காக ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான
தேசிய விருது மட்டுமல்ல, ஃபிலிம் ஃபேர்
விருதும் கிடைத்தது. சிறந்த தேசிய படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மூன்று முறை கேரள
அரசின் விருதுகளை பெற்றுள்ள ஷோபா, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றவர்.
’முள்ளும் மலரும்’ படத்தில் ஷோபா கதாநாயகியாக
நடிக்கும்போது பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவாளராக தமிழில் அதுதான் அவரது
முதல் படம். ஆனால், அதற்குமுன்பே கன்னடத்தில் அவர்
இயக்கிய கோகிலா படத்தில் ஷோபாதான் நாயகி. அடுத்ததாக தமிழில் பாலுமகேந்திரா இயக்கிய
முதல்படம் ’அழியாத கோலங்கள்’.
பாலு மகேந்திராவின், 'அழியாத கோலங்கள்', 'மூடுபனி' ஆகிய படங்களில் தனித்து மிளிர்ந்தார் ஷோபா. அதற்கான காரணமாக, ''கேமிரா, லைட்ஸ் மற்றும் ஃபிலிம் ஆகியவற்றோடு
மற்றவர்கள் ஒளிப்பதிவு செய்வார்கள். பாலுமகேந்திரா அங்கிள் இவற்றோடு நிறையப்
பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார்" எனச் சொன்னவர், ஷோபா.
இவர்களின் உறவு, திருமணம்
செய்துகொள்ளும் அளவுக்கு நீண்டது. தமிழ்த் திரையுலகமே வியந்து பார்த்த நடிகை,
இன்னும் பல விருதுகளும் பாராட்டுகளையும் பெறுவார் எனக்
கணித்துக்கொண்டிருந்த சூழலில், 1980 மே 1-ம் நாள், திடீரென்று தற்கொலை செய்துகொண்டார் ஷோபா. அப்போது, அவருக்கு
வயது 17. ரசிகர்களுக்குத் தாளவே இயலாத பேரிழப்பாக அது அமைந்துவிட்டது.
குறைந்த வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த
சிறந்த கலைஞர்களின் பட்டியலில் ஷோபாவும் இணைந்துவிட்டார். ஷோபாவின் நேசத்தையும்
தாளமுடியாத பிரிவையும்தான், தனது 'மூன்றாம்
பிறை' படத்தில் பதிந்ததாக பாலு மகேந்திரா குறிப்பிடுவார்.
ஷோபா மறைந்த போது இயக்குனர் பாலுமகேந்திரா, இப்படி குறிப்பிட்டிருந்தார். ''தேவலோகத்திலிருந்து
பூமிக்கு வந்து கொஞ்ச காலம் இருந்து பிரிந்து போன அந்த தேவதையைப் பற்றி என்ன
எழுதுவது? எதை எழுதுவது? என்று
ஒரு நிமிடத்தில் ஓராயிரம் எக்ஸ்பிரஷன்களை அள்ளி வீசி ரசிகர்களை திணறடித்தவர்
மறைந்த நடிகை ஷோபா. எத்தனை எத்தனை யுகம் ஆனாலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத
முகம். லட்சணங்களே அசந்துபோகும் அளவிற்கு லட்சணங்கள் பொருந்திய முகம். பெற்றோர் வைத்த பெயர்தான் அவருக்கு
பொருத்தமானது. ஆம்… அவரது இயற்பெயர் மகாலட்சுமி!
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக