திங்கள், 27 டிசம்பர், 2021

புரட்சி தலைவி டாக்டர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி டாக்டர் ஜெயலலிதா அவர்களின் முதல் வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு, அவருடைய குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த குடும்பத்தில் இருந்து மூன்றாவதாக நடிக்க வந்தவர்தான் ஜெயலலிதா. அதற்கு முன் அவரது குடும்பத்தி இருந்து இரண்டு பேர் நடிக்க வந்தார்கள். 

ஜெயலலிதாவின் தாத்தா ரங்கஸ்வாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராக வேலை செய்து வந்தார். அவருக்கு சந்தியா என்கிற வேதவல்லி, அம்புஜா என்கிற வித்யாவதி, பத்மா ஆகிய மூன்று பெண்கள். இதில் மூத்த மகள் சந்தியாவுக்கு 14 வயது இருக்கும் போது அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமுக்கு பெண் கேட்டு வந்தனர். ஜெயராமை பார்த்ததுமே ரங்கஸ்வாமி ஐயங்காருக்கும், அவரது மனைவி கமலம்மாளுக்கும் பிடித்து விட்டது.

திருமணத்திற்கு உடனே சம்மதித்தனர். வசதியான வீட்டில் வாழப் போன சந்தியாவுக்கு அடுத்த இரண்டாண்டுகளில் மகன் ஜெயக்குமார் பிறந்தார். அதே ஆண்டில் மாமனார் ரங்காச்சாரி மறைந்தார். செல்வா செழிப்பில் வாழ்ந்த கணவர் ஜெயராம் தனது சுக போக வாழ்க்கைக்கு சொத்துக்களை பத்துக்களாக்கினார். அடுத்து மகள் ஜெயலலிதா பிறந்த போது அவருக்கு கோமளவல்லி என்று பெயர் வைத்து கொண்டாடினார். அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கணவர் ஜெயராமும் காலமானார்.

இதனால், தனது இரு குழந்தைகளுடன் மீண்டும் தந்தை வீட்டுக்கே திரும்பினார் சந்தியா. குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார், சந்தியா. ஒருமுறை அவரை சந்தித்த  கெம்பராஜ் என்கிற தயாரிப்பாளர், என்னுடைய படத்துக்கு கதாநாயகி தேடிக் கொண்டிருக்கிறேன். நீ நடிக்கிறயா என்று கேட்டிருக்கிறார்?

`வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்' என்று பதில் சொல்லிவிட்டு வந்த சந்தியா, தந்தையிடம் அந்த தகவலைச் சொன்னதும், அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அதற்கு காரணம், சந்தியாவின் தங்கை வித்யாவாதி.

வித்யாவதி படித்து விமானப் பணிப் பெண் வேலைக்கு சென்றுவிட்டார். பாப் தலை, முழங்கால் வரை ஏறிய உடை, நுனிநாக்கு ஆங்கிலம் என்று குடும்பத்துக்கு விரோதமான தோற்றத்தில் இருந்ததால், கோபமடைந்த அப்பா ரங்கஸ்வாமி, அவரை வீட்டிலேயே சேர்க்க மறுத்து விட்டார்.

அதனால், அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதும், திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்வதும் அறிந்து அப்பா அறிந்ததுதான். அதனால், தான் சந்தியாவையும் அப்பா ரங்கஸ்வாமி, திட்டினார்.

மகனையும், மகளை படிக்க வைக்க செலவுக்கு பணம் வேண்டுமே? என்ன செய்வது? ஜெயலிதாவுக்கு அப்போது மூன்றரை வயது. வீட்டுக்கு அருகிலிருந்த பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்பில் சேர்த்தார். தங்கை வித்யாதி பெங்களூர் வரும் தகவல் கிடைத்தால் அவருக்கு வீட்டில் உணவு சமைத்து விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லும் சந்தியா. கூடவே ஜெயலளிதாவியும் அழைத்து செல்வார்.

அப்படி போகும் போது ஒரு முறை ‘அம்முவை என்னோடு அனுப்பி வையேன்’. மெட்ராசை சுத்திக் காட்டி கொண்டுவந்து விடுகிறேன் என்று கூறி இருக்கிறார். தங்கையின் ஆசைக்கு தடை போடவில்லை சந்தியா. ஜெயலலிதாவி வித்யாவதியுடன் அனுப்பி வைத்தார்.

சென்னையை சுற்றிப் பார்த்து வந்த ஜெயலலிதா சென்னையில்தான் தங்கப் போகிறோம். படிக்கப் போகிறோம் என்றே தெரியாமல், சென்னையை பிரிய மனமில்லாமல் பெங்களூரு புறப்பட்டார்.

விதயாவதியுடன் சந்தியா பழகுவது அப்பா ரங்கசுவாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் கருத்து மோதல் இருந்தது. இப்போது ஜெயலலிதாவையும் அனுப்பி வைத்தது இன்னும் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதனால், சந்தியாவிடம் பேசாமல் இருந்தார்.

விமானப் பணிப்பெண் வேலையைவிட்டுவிட்டு நடிப்பதில் தீவிராமாக இருப்பதையும், சிறுசிறு வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் நல்ல வருமானம் கிடைப்பதாகவும்,  சித்தூர் வி.நாகையா இயக்கி நடித்த `என் வீடு’ திரைப்படம் தனக்கு பெரும் புகழை அளித்ததுள்ளது என்றும் தெரிவித்த வியாவதி, எனக்கு துணையா சென்னைக்கு நீ வந்துவிடு. அங்கு ஜெயலலிதாவையும், ஜெயக்குமாரையும் நல்லா படிக்க வைக்கலாம் என்றும் கூறி இருக்கிறார். .

காலத்தை புரிந்து கொள்ளாத அப்பாவிடம் இருந்து போராடுவதைவிட, ஜெயித்து அவர்களை தங்களுடன் அழைத்துக் கொள்வதுதான் சரி என்று முடிவு செய்து தங்கையுடன் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்க் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார், சந்தியா.

வித்யாவதியின் வீட்டுக்குப் வந்த தயாரிப்பாளர்களில் சிலரது பார்வை, சந்தியாவின் மீதும் பட்டது. சந்தியாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கினார், சந்தியா. இருவரும் தொடர்ந்து நடிப்பதால், பொருளாதார ரீதியாக குடும்பம் உயர்ந்தது. சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துவந்த ஜெயலலிதாவுக்கும், ஜெயக்குமாருக்கும் தாயைப் பார்ப்பதும் கொஞ்சி மகிழ்வதும்கூட அரிதான சந்தர்ப்பங்களாகின.  

தொடர்ந்து பட வாய்ப்புகள் இருப்பதும், பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முடியாத சூழல் இருப்பதையும் உணர்ந்த சந்தியா, பிள்ளைகளுக்காக சினிமா வாய்ப்புகளைக் கைகழுவ முடியாது என்று சினிமா வாய்ப்புகளுக்காக பிள்ளைகளையும் விட்டுவிட முடியாது என்று முன்பின் தெரியாத யாரிடமோ குழந்தைகள் வளர்வதைவிட, உறவுகளிடம் வளரட்டும் என ஒருநாள் பெங்கலூருக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

ஆறு வயதில் பெங்களூரு சென்ற ஜெயலலிதா, பத்து வயது வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தார். ஒருமுறை விடுமுறையில் பெங்களூரில் இருந்து பிள்ளைகள் சென்னை வந்தபோது, சந்தியா விடியவிடிய படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய சூழல். அதேநேரம், அரிதான இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகளைப் பிரிந்திருக்கவும் விருப்பமில்லை சந்தியாவுக்கு.

“தனியாக இருக்க வேண்டாம். என்னுடன் ஸ்டூடியோவுக்கு வாங்க” என்று அன்றைய தினம் படப்பிடிப்புக்கு இருவரையும் அழைத்து சென்றார்.

அன்றைய படப்பிடிப்பில் சந்தியாவுடன் சிறுவயது பார்வதியாக ஒரு குழந்தை நடிக்க வேண்டியிருந்தது. `அந்தச் சிறுமிக்குக் கடும் காய்ச்சல், இன்று அவள் படப்பிடிப்புக்கு வரமாட்டாள்' என்று தகவல் வந்துந்தது. இயக்குனருக்கு என்ன செய்வதேரே தெரியவில்லை. குழப்பத்துடன் அமர்ந்திருந்தவர், எதிரே அமர்ந்திருந்த ஜெயலலிதாவைப் பார்த்ததும், உடனே சந்தியாவிடம் சென்று, ‘உங்கள் மகள் அழகாக இருக்கிறாள். அவள் வேண்டுமானால் இந்த வேடத்தில் நடிக்கட்டுமே!’ என்று கேட்டிருக்கிறார்.

முதலில் தயங்கிய சந்தியா, பிறகு ஜெயலலிதாவைப் பார்த்து நடிக்கிறாயா என்று கேட்டார். ஜெயலலிதா ம் என்று சொன்னதும் சந்தியாவுக்கே அது வியப்பாக இருந்திருக்கிறது.

எந்தவிதக் கூச்சமோ, பயமோ இல்லாமல், ஒரே தடவையிலேயே திருப்தி கரமாக எடுத்து முடிக்கும்படியாக ஜெயலலிதா நடித்துக் கொடுத்திருக்கிறார். அவரது திறமையை புரிந்து கொண்ட இயக்குநர் அவரது பாத்திரத்தை மேலும் சில காட்சிகளில் வரும் படி உருவாக்கி, ஒரு தனிப் பாடலிலும் நடிக்க வைத்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் சினிமா உலகப் பிரவேசம், முதல் வாய்ப்பு நட்ட நடு நிசியில், யாரும் எதிர்பாராத வகையில் நடந்திருக்கிறது. அந்த கன்னடப் படத்தின் பெயர், ஸ்ரீ ஷைலா மகாத்மே”.  இந்தப் படம் 1961 ஆம் ஆண்டு வெளியானது.

விடுமுறை முடிந்து பெங்களூரு சென்ற போது, “இதுங்கதான் சினிமா பித்து பிடிச்சு அலையுதுன்னா, இப்போ அம்முவையும் அப்படி ஆக்கப் பார்க்கிறாளே.. வேதா... இனி சென்னைக்கு அழைச்சிட்டுப்போக விடக்கூடாது...'' என்று தாத்தா ரங்கஸ்வாமி அன்று கறார் உத்தரவு போட்டிருக்கிறார்.

ஜெயலலிதா – திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று சந்தியா விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே ஜெயலலிதா எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருதார். படிப்பில் ஆர்வமும், வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்தார். படித்துப் பட்டம் பெற வேண்டும் என்றே சந்தியா விரும்பினார்.

ஸ்ரீரத்னா என்கிற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள். தாத்தாவுக்கு பயந்து அந்த படத்தை வேண்டாம் என்று சொல்ல வைத்துவிட்டார், ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு பத்து வயதான போது சித்தி பத்மாவுக்கு திருமணம் ஆனது. குழந்தைகளோடு அம்மா, அப்பா மட்டும் எதற்காக பெங்களூரில் தனியாக இருக்கவேண்டும் என்று நினைத்த சந்தியா, எல்லோரையும் சென்னைக்கு அழைத்து வந்தார்.

ஜெயலலிதாவை சர்ச் பார்க் கான்வெண்டில் சேர்த்தார். சிறு வயதில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசையைக் கேட்டு அதற்கேற்ப நடனமாடத் தொடங்குவார் ஜெயலலிதா. மேலும் தத்தா பாடும் பாடலுக்கும் நடனம் ஆடுவார். இதப் பார்த்து, மகளுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்ட சந்தியா, நடன ஆசிரியை கே.ஜே.சரசாவிடம் நடனம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

1960 ஆம் ஆண்டு மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் ஜெயலலிதாவின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.  விழாவில் கலந்து கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன், “பிற்காலத்தில் சினிமாவில் நடிக்க வரணும். நிச்சயம் வருவாள். வந்து பெரிய நடிகை என்கிற பெயரெடுப்பாள் ’ என்று வாழ்த்தினார்.  அப்போது ஜெயலலிதாவுக்கு பன்னிரெண்டு  வயது.

ஜெயலலிதாவுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. படித்துவிட்டு பெரிய வக்கீலாக வரவேண்டும் என்றுதான் ஆசை.

ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக் குழுவில் சந்தியாவும், வித்யாவதியும் ஆரம்ப கால உறுப்பினர்கள். நாடகத்திற்கான ஒத்திகை நடக்கும் போது ஜெயலலிதாவையும் அங்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒருமுறை செல்லும் போது ஜெயலலிதாவைப் பார்த்த, ஒய்.ஜிபார்த்தசாரதி, அடுத்து ஒரு ஆங்கில நாடகம் அரங்கேற்றப் போவதாகவும், அதில் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்த நடிகை தேவைப்படுகிறார் என்றும், நான் எதிர்ப்பார்ப்பது போல பெண் கிடைக்கவில்லை என்றும் உன் மகள் ஜெயலலிதாவை நடிக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அவரது பேச்சை தட்ட முடியாமல் ஒத்துக் கொண்டார், சந்தியா.

ஜெயலலிதா நடித்த அந்த நாடகத்தை பார்த்த முன்னாள் ஜனாதிபதியின் மகன் சங்கர் கிரி, தான் பிரிட்டிஷ் கவுன்சில் உதவியோடு ஒரு டாக்குமெண்டரி எடுக்கப் போவதாகவும், அதில் நடிக்க ஜெயலலிதாவின் உதவி தேவை என்றும் கூறி இருக்கிறார். நாடகத்தில் வில்லனாக நடித்த நடிகர் சோ, ஒய்.ஜி.பாரத்தசாரதி இருவரும் சந்தியாவிடம் பேசி ஜெயலலிதா நடிக்க சம்மதம் வாங்கி கொடுத்தனர். விடுமுறை நாட்களில் மட்டுமே எபிஸில் டாக்குமெண்டரி படத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெயலலிதா.

அப்போது சந்தியா ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தார். அதில் அவருக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க களை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர். அவர்கள் தேடிய வண்ணம் கதாநாயகி கிடைக்காததால் அந்தப் பாத்திரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை விட்டுவைத்து விட்டு படத்தில் வரும் மற்ற காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் சந்தியாவிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்தபோது தற்செயலாக ஜெயலலிதாவை பார்த்து விட்டனர். ‘‘நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்று கூறியதும், சந்தியா அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.

ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் சந்தியாவிடம் சென்று  ‘‘இன்னும் எங்கள் படத்திற்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டனர்.

நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்த சந்தியா, ‘‘அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். ஜெயலலிதாவுடன் நடித்த படமாக ‘நன்ன கர்த்தவ்யா’ அமைந்தது. வேதாந்தம் ராகவைய்யா இயக்கிய இந்தப் படத்தில் கல்யாண்குமார் நாயகனாக நடிக்க ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நாயகியாக நடித்தார்.

அதன் பிறகு ஏவி.எம். தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் இந்தியில் உருவான மான்மௌஜி படத்தில் மூன்று நிமிட நடனக் காட்சியில் கிருஷ்ணராக நடித்தார், ஜெயலலிதா. மேடையில் அவர் ஆடுகின்ற நடனத்தை நாயகன் கிஷோர்குமார், நாயகி சாதனா பார்ப்பது போல காட்சி அமைத்து படமாக்கி இருந்தனர்.

கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய படங்களில் நடித்த ஜெயலலிதா, தெலுங்கில் உருவான கான்ஸ்டபிள் கூத்துரு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு கன்னடம், தெலுங்கு இரு மொழிகளில் வெளியான அமரா சில்பி ஜக்கண்ணா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார், ஜெயலலிதா.

அந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே இரண்டாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார், ஜெயலலிதா. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர பணமும் கட்டினார். அம்மா நடித்திருந்த கர்ணன் படத்தின் நூறாவது நாள் விழா உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்ததால், அந்த விழாவுக்கு அம்மாவுடன் சென்றார், ஜெயலலிதா.

விழா முடிந்து வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் படத்தின் டைரக்டர் பி.ஆர். பந்தலு, சந்தியாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று அருகே வந்தவர், அடுத்த வாரம் ஒரு கன்னடப் படத்துக்குப் பூஜை போடப் போறேன். கல்யான்குமார்தான் ஹீரோ. அதுல உன் பொண்ணுதான் ஹீரோயினி என்று சொன்னதும் சந்தியாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

பி.ஆர்.பந்துலுவையும், ஜெயலலிதாவையும் பார்த்தவர்,  பிறகு ஜெயலலிதா கல்லூரியில் படிக்கப் போவதைப் பற்றி கூறி இருக்கிறார். ஆனால், அவர் விடுவதாக இல்லை. விடுமுறை முடிவதற்குள் அவரது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுகிறேன் என்று சம்மதிக்க வைத்தார்.

சொன்னது போலவே மறு வாரமே பூஜையை போட்டு மைசூரில் படப்பிடிப்பையும் தொடங்கி விடுமுறைக்குள் படப்பிடிப்பையும் முடித்தார், பி.ஆர். பந்துலு.

வெண்ணிற ஆடை படத்திற்காக ஒரு நடிகையை தேர்வு செய்து அவர் நடிப்பு மீது திருப்தி இல்லாமல் இருந்த இயக்குநர் ஸ்ரீதர், வேறு புதுமுகத்தை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணத்துடன் இருந்த போது ஜெயலலிதாவின் நடிப்பு குறித்து கேள்விப்பட்டு, இயக்குநர் பந்துலுவிடம் பேசி, அவருடன் சேர்ந்து சின்னத கொம்பேபடத்தின் ரஷ் போட்டு பார்த்திருக்கிறார்.  ஜெயலலிதாவை ஸ்ரீதருக்கு பிடித்துவிட்டது. அவரை தமிழில் நடிக்க வைப்பது என்று முடிவு செய்தார். பந்துலு மூலமாக தகவல் சந்தியாவுக்கு சென்றது.

ஸ்ரீதரிடமிருந்து சினிமா சான்ஸ் என்பதை சந்தியாவால் நம்பவே முடியவில்லை.

படிப்பா? நடிப்பா? இதில் எதை முடிவு செய்வது என்று பெரும் குழப்பமான நிலையில் இருந்த சந்தியா, கடைசியில் என் மகள் அகில உலக நட்சத்திரமாக வளர வேண்டும். அதுதான் என் ஆசை என்று குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திற்காக மதுரைக்கு சென்றார் ஜெயலலிதா. கன்னடத்தில் வெளியான சின்னத கொம்பே பெரும் வெற்றிப் படமாக அமைந்து ஜெயலலிதாவுக்கு பெரும் புகழ் கிடைத்திருந்தது. இந்த நிலையில் சின்னத கொம்பே படத்தின் இயக்குனரும், சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உட்பட பல படங்களை இயக்கியவருமான பி.ஆர்.பந்துலு, மீண்டும் தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டார். அந்தப் படம்தான் எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்த ஆயிரத்தில் ஒருவன்.

அதன் பிறகு தொடர்ந்து 16 ஆண்டுகள் படங்களில் நடித்தார், ஜெயலலிதா. 1980-ல் வெளியான "நதியைத்தேடி வந்த கடல்" படம் அவரது கடைசி படமாக அமைந்தது. எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்திருக்கிறார், ஜெயலலிதா.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக