பட உலகில் நடிகையாக உயர்ந்து ஒளிர்ந்த நடிகை
ஸ்ரீவித்யா, ஆரம்பத்தில் பாடகியாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். ஆமாம்.
அவரது தாத்தா கூத்தனூர் அய்யாசாமி அய்யர் மிக சிறந்த இசை மேதை. அவருடைய ஆத்தா
லலிதாங்கியும் சிறந்த பாடகி. இசைக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீவித்யாவின் அம்மா எம்.எல்.வாந்தகுமாரி,
முறைப்படி கர்நாடக இசை பயின்று மேடைகளில் பாடி ரசிகர்களை கவர்ந்தவர். இளம்
வயதிலேயே சங்கீத கலாநிதி பட்டம் பெற்றவர்.
1947 ஆம் ஆண்டில் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த
மணமகள் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி, பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே
பாடலை பாடி பெரும் புகழ் பெற்றவர். அதன் பிறகு பல பாடல்களை பாடி புகழ் பெற்ற இவரை 1951-ஆம்
ஆண்டு மதுரையைச் சேர்ந்த விகடக் கச்சேரி கலைஞர், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு
திருப்பதியில் திருமணம் செய்து கொடுத்தனர். விகடம் கிருஷ்ணமூர்த்தி சில படங்களில்
நடித்திருக்கஈறார்.
புகழ்பெற்ற பாடகி எம்.எல்.வசந்தகுமாரி, நடிகர் விகடம்
கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு 1952-ஆம் ஆண்டு மகன் சங்கரும், 1953-ஆம் ஆண்டு மகள்
ஸ்ரீவித்யாவும் பிறந்தனர். ஸ்ரீவித்யாவுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் மீனாட்சி.
நடிப்பு, பாட்டு எனும் குடும்பத்தில் ஸ்ரீவித்யா
பிறந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக அவரது தந்தையார்
நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்தபோது,
தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாகப்
பாடிக்கொண்டிருந்தார் அவரது தாயார், எம்.எல்.வசந்தகுமாரி.
“கைக்குழந்தையான தனக்கு தாய்ப்பால் கொடுக்கக்
கூட அம்மாவுக்கு நேரம் இருக்கவில்லை, அப்படி குடும்பத்துக்காக
உழைத்தார்” என்று பின்னாட்களில் ஒரு
பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீவித்யா.
இந்த பொருளாதாரக் கஷ்டங்களினால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழுந்த போது இசைப்
பிரியரான தாத்தா அய்யாசாமி அய்யர் வீடுதான் ஸ்ரீவித்யாவின் இருப்பிடம் ஆனது.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தாத்தா வீட்டில்
இருந்து தன்னித்துறையில் உள்ள மார்கெட்டுக்கு தாத்தா அய்யாசாமி அய்யருடன் காய்கனி
வாங்க செல்வார், ஸ்ரீவித்யா. போகும் போது தாத்தா அய்யாசாமி அய்யர், கர்நாடக சங்கீத
கீர்த்தனைகளை பாடுவார். திரும்பி வரும் போது ஸ்ரீவித்யா பாடுவார். இப்படி
சிறுவயதிலேயே இசையின் மீது நீந்தினார், ஸ்ரீவித்யா. நாலு வயதிலேயே யாரு என்ன
பாட்டு பாடினாலும் அது என்ன ராகம் என்று சொல்லும் அளவுக்கு அவரது இசை அறிவு
வளர்ந்திருந்தது.
கிருஷ்ணமூர்த்தி என்கிற இசை கலைஞரிடம் முறையாக
கர்நாடக இசை பயிற்சி பெற்ற ஸ்ரீவித்யா, பதினோரு வயதில் பாடுவதற்கான முழு
தகுதியையும் பெற்றார். மிக சிறப்பாக பாட கற்றுக் கொண்ட ஸ்ரீவித்யா, பாடுவதற்கு
பதிலாக நடனத்தை தேர்ந்தெடுத்தார்.... அதற்கு ஆசைப்பட்டார்.
அதற்கு காரணம் இந்தியாவிலே நடனத்துக்குப்
பெயர்பெற்ற திருவாங்கூர் பத்மினி சகோதரிகள் வசித்த வீடும் ஸ்ரீவித்யாவின் வீடும்
பக்கத்துப் பக்கத்து வீடுகள்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் நடனம் ஸ்ரீவித்யாவுக்கு
ரொம்பப் பிடிக்கும். அவர்களைப் போல நடனத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று
ஆசைப்பட்டார். ஸ்ரீவித்யாவின் ஆசையை புரிந்து கொண்ட பத்மினி, தனது குரு
தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை நாட்டியம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
ஒரு வருடம் ஒடி முடிந்த போது நாட்டியத்தில் மெருகேறி இருந்தார், ஸ்ரீவித்யா.
பத்மினி-ராகினி நடத்திய ராமாயணம் நாட்டிய
நாடகத்தில் பாலசீதாவாக நடித்தார் ஸ்ரீவித்யா. அவர்களின் நாட்டிய நாடகங்களில்
தொடர்ந்து பங்கேற்றார். பதினோரு வயதில் நாட்டிய அரங்கேற்றம் கிருஷ்ணகான சபையில் நடந்தது.
குடும்ப வறுமை காரணமாக ஸ்ரீவித்யாவின் அம்மா
எம்.எல்.வசந்தகுமாரி வீட்டை விற்க முடிவு செய்த போது, அந்த வீட்டை வாங்க
வந்திருந்த இயக்குநர் ஏ.பி.நாகராஜன், ஸ்ரீவித்யாவை பார்த்துவிட்டு, அவரது இசை
திறமையையும், நடனத் திறமையையும் அறிந்தவர், அவரை தனது படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்.
ஆனால், அதற்கு உடனே பதில் சொல்லவில்லை எம்.எல்.வசந்தகுமாரி.
அதன் பிறகு ஒரு நாள் பள்ளிக்கு சென்று விட்டு
திரும்பிய ஸ்ரீவித்யாவை உடனே அழகு படுத்தி தனது காரில் அழைத்துக் கொண்டு சென்றார்,
பத்மினி. எம்.ஜி.ஆர் நடிக்க, பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய “ரகசிய போலீஸ் 115”
திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பத்மினியால் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரைக்கப்பட்டார், ஸ்ரீவித்யா.
பதினான்கு வயதில் சேலை கட்டிக் கொண்டு தம்முன்
தோன்றிய ஸ்ரீவித்யாவைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரொம்பவும் சின்னப் பெண்ணாக தெரிகிறார்.
இன்னும் சில வருடங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிவிட்டார்.
அதுவரையில் நடிப்பின் மீது ஆர்வமில்லாமல் இருந்த
ஸ்ரீவித்யா ஏ.பி.நாகராஜன் ஏற்கனவே கேட்டுவந்த “திருவருட்செல்வர்” படத்தில்
நாட்டியமாட சம்மதம் தெரிவித்தார். அந்தப் படத்தில் சிவசக்தி நடனத்தில் அற்புதமாக நாட்டியமாடி
ஏ.பி.நாகராஜனிடம் பாராட்டை பெற்றார்.
அதன் பிறகு எபி.நாகராஜன் இயக்கத்தில் உருவான “காரைக்கால்
அம்மையார்” படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய “தகதகதகவென ஆடவா” பாடலில்
ஸ்ரீவித்யாவின் நாட்டியத்தைப் பார்த்து தமிழ்நாடே கைதட்டிப் பாராட்டியது.
தமிழில் நடனத்திற்காக சில படங்களில் வாய்ப்பு
கிடைத்தாலும், கதாநாயகியாக அவர் அறிமுகமானது சங்கரன் நாயர் இயக்கிய “சட்டம்பிக்காவலா”
என்கிற மலையாள படத்தில். அந்தப் படத்தின் கதாநாயகன் சத்யனுக்கு அப்போது ஐம்பத்தி
ஏழுவயது. நாற்பது வருடம் மூத்த நடிகருடன் துணிச்சலாக நடித்தது பரபரப்பாகப்
பேசப்பட்டது. அதன் பிரக்சு ஆண்டுக்கு இரண்டு படம், மூன்று படம் என மலையாளத்தில்
நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்தது.
சில காட்சிகளுக்கும், பாடலுக்கும் மட்டும் நடித்து
வந்த ஸ்ரீவித்யாவை தான் இயக்கிய நான்கு சுவர்கள் படத்தில் குருட்டு பெண்ணாக ஒரு
கேரக்டரில் நடிக்க வைத்தார் இயக்குநர் கே.பாலசந்தர். அந்தப் படத்தில் ஜெய்சங்கர்,
ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப்
படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அமெரிக்காவில் பணிபுரிந்த விஞ்ஞானி
ஒருவருக்கு ஸ்ரீவித்யாவை பெண் கேட்டனர். அந்த வரன் ஸ்ரீவித்யாவின் அம்மா எம்.எல்.வசந்தகுமாரிக்கும்
பிடித்திருந்தது. ஆனால், பொருளாதார சிக்கல் காரணமாக அந்த திருமணம் கை கூடவில்லை.
இந்த நிலையில் ஜெயசங்கர் கதாநாயகனாக நடிக்கும் டெல்லி
டு மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்தது.
தமிழில் ஸ்ரீவித்யா கதாநாயகியாக நடித்த முதல் படம் அது. ஐ.என்.மூர்த்தி என்பவர்
இயக்கிய அந்தப் படத்தை தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களுக்கு ஆஸ்தான கதாநாயகியாக ஆனார்,
ஸ்ரீவித்யா.
கே.பாலசந்தரின் நான்குசுவர்கள் படத்தை தொடர்ந்து
நூத்துக்கு நூறு, வெள்ளிவிழா, சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவரது படங்களில்
நடித்து வந்தார், ஸ்ரீவித்யா.
‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியரையே காதலிக்கும் கேரக்டர். ஒருபக்கம் குற்ற உணர்ச்சியை
ஒரு கண்ணும், இன்னொரு பக்கம் குறுகுறுப்பை இன்னொரு கண்ணும்
கேரக்டராக மாறி எடுத்துச் சொல்லும்
சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ஸ்ரீவித்யாவையும்
அவர் லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியையும் எவராலும் மறக்கவே முடியாது.
கே.பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்குக்
கொடுத்த அருமையான கதாபாத்திரம். ஒரே நாயகனை, மூன்று
சகோதரிகளும் காதலிக்க, அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை,
அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா. ஸ்ரீவித்யாவும் சிவக்குமாரும் முக அசைவுகளிலே
சொல்லவேண்டிய வசனங்களை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.
ஸ்ரீவித்யாவின் பெரிய கண்களும், அவருடைய நடனமும் அவரை வெறும் கதாநாயகியாக மட்டுல்லாமல்
திறமையான குணச்சித்திர நடிகையாகவும் உருமாற்றியது.
சொல்லத்தான் நினைக்கிறேன் படம் ஸ்ரீவித்யாவுக்கு
மட்டுமல்ல அதில் நடித்த கமல்ஹாசனுக்கும் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது.
அதன் பிறகு கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான “அபூர்வ
ராகங்கள்” திரைப்படத்தில் இருபது வயதுப் பெண்ணுக்கு தாயாக நடிக்க இருபத்தி இரண்டு வயது
ஸ்ரீவித்யா சம்மதித்த போது ஆச்சர்யத்தில் மூழ்காத திரையுலகினரே இல்லை.
நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட
ஜெயசுதாவுக்கு அன்னையாக நடித்தார். தன்னை விட வயது குறைந்த கமலின் விருப்பத்தை
கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி. கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான
குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும்
கொடுமை... என நடிப்பில் புதியதொரு பரிணாமும் உயரமும் அவதாரமும் காட்டினார்
ஸ்ரீவித்யா. பைரவி கதாப்பாத்திரம் தமிழ்சினிமாவின் சாகாவரம் பெற்ற
கதாப்பாத்திரங்களுள் ஒன்று.
ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படத்தின்
அவருடைய நாயகி ஸ்ரீவித்யா தான். இந்தப் படத்தில் இடம்பெற்ற “ஏழு ஸ்வரங்களுக்குள்”
பாடலும் ஸ்ரீவித்யா நடிப்பும், பாவனைகளும் இன்றைக்குப்
பார்த்தாலும் என்ன அற்புதமாக இருக்கும். ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே
சொல்லியிருப்பார்.
‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான்.
படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பாலசந்தர். அபூர்வ
ராகங்கள் படத்தின் வெற்றி ஸ்ரீவித்யாவை முன்னணி நடிகை ஆக்கியது.
வேளங்கண்ணி படத்தில் நடிக்க சென்ற போது
கமல்ஹாசனை நடன உதவியாளராக சந்தித்த ஸ்ரீவித்யா, உணர்ச்சிகள் படத்தில் கமலுடன்
இணைந்த போது காதல் உணர்ச்சிப்பட்டார். அந்த காதலை சொல்லத்தான் நினைக்கிறேன்
படத்தில் சொல்லாமல் தவித்தவர், அபூர்வ ராகங்கள் படம் தொடங்கிய போது தனது காதலை
சொல்லிவிட முடிவு செய்தார்.
தன்னைப் போலவே நன்றாக பாடத் தெரிந்த, தன்னைப்
போலவே நன்றாக நடனம் ஆடத் தெரிந்த, தன்னைப் போலவே நன்றாக நடிக்கத் தெரிந்த தன்னைப்
போலவே ஒரே ரசனையில், ஒரே அலைவரிசையில் உள்ள கமலை ஸ்ரீவித்யாவுக்கு பிடித்துப்
போனது. தன்னுடைய சினிமா வாழ்க்கை அற்புதமாக இருக்கும்போதே திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துவிட
வேண்டும் என்று விரும்பினார்.
அதனால், கமலஹாசனை படப்பிடிப்பில் சந்தித்து பேசி
மகிழ்ந்தார். கமலஹாசனை மனம்முடிக்கக் வேணும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்த சரியான
நேரத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போதுதான்,
வாணி கணபதியை கமல் காதலிப்பதும் அவரை அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்
என்கிற செய்தியையும் அறிந்தது நொறுங்கி போனார்.
அப்போது 23 வயது. ஸ்ரீவித்யாவுக்கு 22 வயது.
கலங்கி போன ஸ்ரீவித்யாவுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை. காதல் தோல்வியால் துவண்டு
போனார், ஸ்ரீவித்யா. ஆத்திரமும் அழுகையும் அவரை வாட்டி வதைத்தது. வேதனையை தாங்கிக்
கொள்ள முடியாமல் வீட்டில் முடங்கக் கிடந்தார்.
மலையாளத்தில் தீக்கனல் படத்தில் நடிக்க சென்ற
போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர், அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் துணை
இயக்குனருமான ஜார்ஜ் தாமஸ். அவரது பேச்சும், அன்பும் ஸ்ரீவித்யாவுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்தியது. அவருக்குள் ஒரு பிடிப்பை உருவாக்கியது.
காதல் தோல்வியின் சோகம் வேதனை எல்லாமுமாக
சேர்ந்து ஜார்ஜ் தாமசை வேகவேகமாக விரும்பத் தூண்டியது. ஜார்ஜ் தாம்சைப் பற்றி அவர்
அவ்வளவாக தெரிந்துகொள்ளவில்லை. அவரது அன்பை மட்டுமே புரிந்திருந்தார். தன்னை
விரும்பும், நேசிக்கும் ஒருத்தரை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்
ஸ்ரீவித்யா.
அந்த முடிவை குடும்பத்தினர் எதிர்த்தார்கள்.
குடும்பத்தினரின் அறிவுரைய கேட்க மனமில்லாமல் இருந்தார், ஸ்ரீவித்யா. காதலுக்காக
மனதை மட்டுமல்ல மதத்தையும் மாற்றிக் கொள்ள முடிவு செய்து கிறிஸ்துவ மதத்துக்கு
மாறினார். 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி அன்று
ஜார்ஜ் தாமசை கிறிஸ்துவ முறைப்படி மணந்து கொண்டார்.
கேரளத் திரையுலகம் விதம்விதமான கதாபாத்திரங்களை
வாரி வாரி வழங்கியது. தமிழில் எந்த கமலுடன் ஜோடியாக நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும்
ரஜினியின் முதல் படத்து நாயகியான நிலையிலும் அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத்
தொடங்கினார். மகிழ்ச்சியான வேடமோ, சோகமான வேதமோ எந்த வேடமாக இருந்தாலும் கிடைத்த
வாய்ப்புகளில் அட்டகாசமாக ஒளிர்ந்தார், குணச்சித்திர நாயகி
என்று பேரெடுத்தார், ஸ்ரீவித்யா.
சிவாஜி கணேசனுடன் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ இமயம் போன்ற
படங்களில் நடித்தவருக்கு எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல்
போனது. எம்.ஜி.ஆர் முதல்வரானதும் கலைமாமணி விருதும், 1977-78ம்
ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.
அஜித், விஜய், சூர்யா
என எல்லா நடிகர்களுக்கும் அம்மா, அக்கா, அத்தை என வலம் வந்தார். எல்லோருக்கும் பிடித்த நடிகர், பிடித்த நடிகை என்று இருப்பது அரிது. அப்படி அரிதான நடிகை ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவை எல்லா இயக்குநர்களுக்கும்
பிடிக்கும். பந்தா இல்லாமல், கெடுபிடிகள் செய்யாமல்
நடித்துக் கொடுத்துவிட்டுப் போவார். எல்லா நடிகர் நடிகையருக்கும் பிடிக்கும்.
சீனியர் நடிகை, சிறந்த நடிகை என்கிற ஈகோ இல்லை. எல்லா
ரசிகர்களுக்கும் பிடிக்கும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் மிகச்சிறந்த
நடிப்பை வழங்குவார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனத்
900படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீவித்யா, 25 தொலைக்காட்சி
தொடர்களிலும் நடித்துள்ளார் கார்த்திக் நடித்த அமரன் படத்தில் ஆத்தியன் இசையில்
டிரிங் டிரிங் என்கிற பாடலை பாடி இருக்கும் ஸ்ரீவித்யா, தமிழக அரசின் சிறந்த
நடிகையாக சிறப்பு பரிசாக மதுரகீதம் படத்திற்காக பெற்றுள்ளார். தமிழக அரசின்
கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர்.விருது பெற்றுள்ள ஸ்ரீவித்யா, கேரளா அரசின் சிறந்த
நடிகைக்கான விருதினை ஐந்து முறை பெற்றிருக்கிறார். சின்னத்திரை நடிக்கான சிறப்பு
பரிசும் கேரள அரசிடம் பெற்றுள்ளார்.
திருமணம் ஆனா சில மாதங்களிலேயே ஜார்ஜ் தாமஸ்
மீது நம்பிக்கை இழந்தார் ஸ்ரீவித்யா. எல்லோரையும் எதிர்த்து திருமணம் செய்து
கொண்டோம். நம்முடைய தேர்வு தவறானது என்று சொன்னால் அது சரியாக இருக்காது என்று
மனதில் உள்ளதைப் பற்றி யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார், ஸ்ரீவித்யா.
மற்றவர்களுக்காக வாழ்ந்தே தீர வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டார்.
ஆனால், தான் சிரமப்பட்டு உழைத்து சம்பாதித்த
பணம் தன கண் முன்னால் காளியாவதையும், தனது பெயரில் நிறைய கடன்கள் உருவாகி வருவதையும்
அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் அநியாயங்களை தட்டி கேட்ட போது
தன்னுடைய வீட்டில் இருந்து கழுத்தைப் பிடித்து நடு இரவில் நடு ரோட்டில்
தள்ளப்பட்டார்.
ஒன்பது ஆண்டுகால வாழ்க்கைக்கு போதும் என்று ஜார்ஜ்
தாமசுடான வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்த ஸ்ரீவித்யா, விவாகரத்து கேட்டு நீதி
மன்றத்துக்கு சென்றார். தன்னுடைய வீட்டையும் கணவர் அபகரித்துக் கொள்ள அதனை நீதி
மன்றத்தில் பல வருடம் போராடித்தான் திரும்ப பெற்றார்.
பிறந்த போது அம்மா பிசியான பாடகியாக இருந்தார்.
அவர் மடியில் தலை வைத்து படுக்க கூட ஸ்ரீவித்யாவுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. அப்பாவின்
அன்பும் கிடைக்கவில்லை. காதலும், தோல்வியும் தவறான கணவர் தேர்விற்கு காரணமாக அமைந்தது.
இதனால் அம்மாவின் மடியில் படுத்த சுகம் அறிய அவருக்கு கிடைக்க 34 வயது ஆனது.
தனது சோகத்தை மறக்க அவருக்கு அருமருந்தாக
இருந்தது, சினிமாதான். எந்த வேடம் கிடைத்தாலும் நடித்தார். சினிமா என்றோ
தொலைக்காட்சி என்றோ வேறுபாடு காட்டியதில்லை. இயக்குநர்கள் என்ன கேட்கிறார்களோ அதை
அப்படியே நடித்துத் தருவது மட்டுமே தனது பணி என்று கருதினார்.
“புகழுக்காகவோ விருதுக்காகவோ பணத்துக்காகவோ
இவ்வளவு கஷ்டங்களைப்பட்டு நான் நடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் யார் என்பதை
நிரூபிக்க விரும்பினேன். அதனால் இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் தொடர்ந்து
நடித்தேன்” என்று தனது நடிப்பார்வத்துக்கு அவர் காரணம் கூறுகிறார்.
வாழ்க்கை அவருக்கு கொடுத்தச் சோதனைகள் அதிகம்.
அதில் 2003ம் ஆண்டு அவருக்கு ‘ஸ்பைன் கேன்சர்’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
வேதனையின் உச்சம். ஆனாலும் ஸ்ரீவித்யா தன்னுடைய இந்த பாதிப்பு யாருக்கும்
தெரியக்கூடாது என்று நண்பர்களையோ, உறவினர்களையோ, பிற பிரபலங்களையோ நேரில் சந்திப்பதையே தவிர்த்துவிட்டார்.
அவரது கடைசி மூன்று ஆண்டுகளில் அவரைச் சந்திக்க
முடிந்தவர் நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. கமல்ஹாசன் - ஸ்ரீவித்யா இருவருக்கும் இடையே
நிகழ்ந்த கடைசி சந்திப்பை அடிப்படையாக வைத்து இயக்குநர் ரஞ்சித் ஸ்ரீவித்யாவின்
கதையைத் திரைப்படமாக எடுத்தார்.
2008ல் இந்தத் திரைப்படம் “திரக்கதா” என்ற
பெயரில் மலையாளத்தில் வெளிவந்தது. ஸ்ரீவித்யாவின் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை
பிரியாமணிக்கு கேரள அரசின் அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது
வழங்கப்பட்டது.
`இளம் வயதில் எங்கள் குடும்பமும், லலிதா-பத்மினி-ராகினி குடும்பமும் அருகருகே வசித்து வந்தோம். ராகினி ஒரு
தங்க சங்கிலி அணிந்து இருந்தார். அதை வாங்கி நானும் அணிந்திருந்தேன். ராகினி
புற்று நோயினால் இறந்து போனார். அதைப்போலவே எனக்கும் புற்றுநோய் வந்துவிட்டது''
என்று இறுதிகாலத்தில் ஸ்ரீவித்யா சொல்லியிருந்தார்.
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி புற்றுநோயின்
தீவிரம் காரணமாக தனது 53ம் வயதில் காலமான ஸ்ரீவித்யாவை தன்னுடைய சொத்தாகவே
பாவித்தது, கேரளா அரசு.
தமிழகத்தில் பிறந்திருந்தாலும் கேரளாவின் மகளாக
இறந்திருக்கிறார் என்று அப்போதைய முதல் அச்சுதானந்தன் கூறியிருக்கிறார். 21
குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஒரு தமிழ் நடிகைக்கு கேரளா அரசு ஸ்ரீவித்யாவை
சகல மரியாதையுடன் தகனம் செய்தது.
ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும்
நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். என்ன நேயர்களே.... பேரழகி ஸ்ரீவித்யாவின்
வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டீர்களா?
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக