திங்கள், 27 டிசம்பர், 2021

இயக்குநர் வெற்றிமாறன் வாழ்க்கை வரலாறு

67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது திரையுலகினர் அனைவர் மனதிலும் உச்சரிக்கப்பட்ட வார்த்தை வெற்றிமாறன். அசுரன் படத்திற்கும், நடிகர் தனுஷுக்கும் என இரு விருதுகள் கிடைக்க காரணமாக இருந்தார். எல்லோராலும் மதிக்கப்படும் விரும்பப்படும் இயக்குநராக மாறி இருக்கிறார், வெற்றி மாறன். ஐந்து படங்களின் மூலம் அளப்பரிய புகழையும் அனைவரின் மரியாதையையும் வெற்றிமாறன் பெற்றிருக்கிறார் என்றால், அதற்கு அவருடைய பல்வேறு தனிச் சிறப்புகளும் ஒரு இயக்குநராகவும் படைப்பாளியாகவும் அவருடைய தனித்தன்மை வாய்ந்த பார்வையும் குணநலன்களுமே காரணம். அப்படி திறமையான அந்த இயக்குனரை பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ளும் முயற்சியாக இந்தத் தொகுப்பாக உருவாகியுள்ளது.

வெற்றிமாறன் கடலூரில் பிறந்தவர். அவரது தந்தை சித்ராவேல் கால்நடை மருத்துவர். தாயார் மேகலா சித்ராவேல் ஒரு பிரபல நாவலாசிரியர். வெற்றிமாறனின் பள்ளிக்காலம் வேலூரிலும், ராணிப்பேட்டையிலும் தான். கல்லூரியில் படிக்க சென்னை வந்த போது அவருக்குள் இருந்த சினிமா ஆர்வம் அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. அதற்கு காரணமாக இருந்தவர், லயோலா கல்லூரியில் பேராசிரியராக இருந்த ச. ராஜநாயகம்.

'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகப் படுத்தியதுடன், அவரே இயக்குனர் பாலுமகேந்திராவிடம் 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி உதவி இயக்குநராக சேர்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.  

பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்ததால் வெற்றிமாறனின்  வாசிப்புப் பழக்கம் மேலும் மெருகேறியது. ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளிலும் முக்கியமான நூல்கள் அனைத்தையும் படித்த வெற்றிமாறன்., உலகத் திரைப் படங்களையும் தேடித் தேடிப் பார்த்து தேர்ந்த இயக்குனராவதர்கான திறமைகளை உருவாக்கிக் கொண்டார்.

2000 ஆம் ஆண்டில் கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பாலுமகேந்திராவிடம் முழுநேரமாக பணியாற்ற தொடங்கிய போது கல்லூரி படிப்பை நிறுத்தினார், வெற்றிமாறன். தொடர்ந்து பாலு மகேந்திராவின் தொடர்களில், படங்களில் உதவி இயக்குனராக பயணித்தவர், கதிர் இயக்கிய காதல் வைரஸ் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். பாலு மகேந்திரா இயக்கிய “அது ஒரு கனாக்காலம்” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது அந்தப் படத்தின் நாயகன் தனுஷுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு வெற்றிமாறனுக்கு கிடைத்தது.

வெற்றிமாறன் மீது பெரிய மரியாதையும், அன்பும் தனுஷுக்கு அப்போது ஏற்பட்டது. வெற்றிமாறன் மீது நம்பிக்கை வைத்து சில உதவிகளை செய்த தனுஷ், அவரது இயக்கத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டினார். இவர்கள் கூட்டணியில் படம் ஆரம்பித்து பல முறை நின்று போயிருக்கிறது. ஆனால், வெற்றிமாறனுடன் படம் செய்தே தீருவேன் என உறுதியாக நின்றவர் தனுஷ்.

அந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு கிடைத்த பரிசுதான் பொல்லாதவன்.

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்படமான 'பை சைக்கிள் தீவ்ஸ்' திரைப் படத்தின் பாதிப்பில் உருவானதுதான், பொல்லாதவன். ஒரு சராசரி இளைஞனின் பைக் திருடுபோவது, அதன் பின்னணியில் இருக்கும் கஞ்சா கடத்தல் மாஃபியா அவர்களுக்கும் இந்த இளைஞனுக்கும் நிகழும் மோதல் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கமர்ஷியல் படமாகவே 'பொல்லாதவன்' திரைப்படத்தை உருவாக்கியிருந்தார், வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்தின் வெற்றியும் பாராட்டுகளும் வெற்றிமாறனை கவனிக்க வைத்தது.

அடுத்து மதுரை வட்டாரத்தில் நடக்கும் சேவல் சண்டை பந்தயத்தை மையமாக வைத்து மனிதர்களின் அடி ஆழத்தில் இருக்கும் வன்மத்தையும் பகையையும் சித்தரிக்கும் படமாக 'ஆடுகளம்' படத்தைக் கொடுத்தார் வெற்றி மாறன். இந்தப் படம் அவருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் என இரு விருதுகளும், நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது உட்பட ஆறு தேசிய விருதுகளை பெற்று தந்தது.

 

ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் வேடத்திற்கு பார்த்திபனை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், வெற்றி மாறன். ஆனால், பார்த்திபன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிசியாக இருந்ததால், அவரை பயன்படுத்த முடியாமல் போனதால், ஆடுகளம் படத்திற்கு பிறகு பார்த்திபன் நடிப்பில் ஒரு படத்தை தொடங்கினார். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், ஆடுகளம் பல உலக திரைப்பட விழாக்களுக்கு சென்றது. தேசிய விருதுகள் குவித்தது. அந்த வேலைகளில் பிசி ஆனதால், அந்தப் படத்தை தொடரவே இல்லை.

பிறகு, தனுஷ்-பார்த்திபன் நடிப்பில் சூதாடி என்றொரு படத்தை தொடங்கினார், வெற்றிமாறன். சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின், தனுஷ் ஷமிதாப் படத்தில் நடிக்க இந்திக்கு சென்றதால், அந்த இடைவெளியில் விசாரணை படத்தை தொடங்கினார்.

எம்.சந்திரகுமார் என்னும் ஆட்டோ ஓட்டுநர் தான் தவறுதலாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அனுபவித்த கொடுமைகளை முன்வைத்து 'லாக்கப்' என்கிற நாவலை எழுதி இருந்தார். அதை முதல் பாதியாவும், இரண்டாம் பாதியாக 2012-ல் நிஜத்தில் நடைபெற்ற சில என்கவுன்ட்டர் கொலைகளையும் மையமாக வைத்து இயக்கினார். காவல்துறை வன்முறையை சமரசமின்றி தோலுரித்த படமாக 'விசாரணை' வெளியாகி, 72-ம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டு அங்கு விருதுகளையும் சர்வதேச திரைப்பட ஆர்வலர்களின் பாராட்டையும் பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. தமிழ்நாட்டிலும் விமர்சகர்கள், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்ததாக தன்னுடைய நீண்ட நாள் திட்டமான 'வட சென்னை' திரைப்படத்தை இயக்கினார், வெற்றிமாறன். வடசென்னையில் நிலவும் ரவுடியிசம் அங்கு ரவுடியிசம் உருவாவதன் பின்னால் இருக்கும் சமூக, அரசியல் காரணிகள், அவற்றால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வில் நிகழும் தாக்கங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருந்தார். உண்மையில் வட சென்னையிலிருந்த நிழல் உலகத்தின் 30-40 ஆண்டு வரலாற்றை மூன்று பாகங்கள் கொண்ட திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்த வெற்றிமாறன்.

முதலில் இந்தப் படத்திற்கு நாயகனாக சிம்புவை தேர்வு செய்த வெற்றிமாறன், பிறகு தனுஷ் நடிப்பில் இயக்கினார். இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் திரைப்படமாக்கிய விதம் பெரிய அளவில் பேசப்பட்டது. 

வடசென்னை படத்துக்கு பிறகு எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை மையமாக வைத்து 'அசுரன்' திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். 1980-களிலும் 1960-களிலுமாக இரண்டு தளங்களில் நடக்கும் இந்தக் கதையில் தென் தமிழகப் பகுதிகளில் நிலவும் சாதியக் கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்மத்தை அதிகரிக்கும் காரணியாக இருப்பதையும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான தலித் மக்களின் எழுச்சி எனத் தீவிரமான சமூக அரசியல் பிரச்சினைகளை சொல்லி இருந்தார். 'அசுரன்' படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. மற்ற மொழிகளிலும் படமானது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதும், நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைக்க காரணமாக இருந்தார், வெற்றி மாறன்.

ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த தனுஷ், இரண்டாவது முறையாக இவர் அசுரன் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார். தனுஷ் இருமுறை தேசிய விருது பெற காரணமாக வெற்றிமாறன் இருந்ததால், அவரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் ஆகியோருடன் இணைந்து பாவக் கதைகள் என்கிற படத்தை இயக்கினர் வெற்றிமாறன். இவர் இயக்கிய ஓர் இரவு பகுதியில் சாய் பல்லவி, பிரகாஜ்ராஜ் நடித்திருந்தனர்.

அடுத்து மீரான் மைதீன் எழுதிய 'அஜ்னபி' நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும், ஜல்லிக்கட்டுத் திருவிழாவை முன்வைத்து சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்கு நடிகர் சூர்யாவை தேர்வு செய்திருக்கும் வெற்றிமாறன், 'அஜ்னபி' நாவலுக்கு சூரியை தேர்வு செய்திருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே வெற்றிமாறனின் நெருங்கிய நண்பன் சக்தியும் மணியும். சக்திதான் முதலில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர நினைத்தவர். அது நடக்காமல், பின் வெற்றி மாறன் சேர்ந்தது தனிக்கதை. இவர்களை பார்த்து மணியும் சினிமாவுக்குள் நுழைந்துவிட்டார். அந்த மணிதான் உதயம் என்.எச் 4 படம் இயக்கிய மணிமாறன்.

மணிமாறன் இயக்கத்தில் உதயம் என்.எச் 4 படத்தை தயாரித்த வெற்றி மாறன், மீண்டும் மணிமாறன் இயக்கத்தில் கருணாஸ், சமுத்திரக்கனி நடித்த சங்கத்தலைவன் என்கிற படத்தையும் தயாரித்தார்.

நடிகர் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படத்தை தயாரித்து அந்தப் படத்திற்கு சிறந்த குழந்தைகள் படமாக தேர்வாகி தேசிய விருது பெற்ற வெற்றி மாறன்,  அந்தப் படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைக்கவும் காரணமாக இருந்தார். அதே போல ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கி நடித்த லென்ஸ் படத்தை ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து தயாரித்த வெற்றிமாறன், அந்தப் படத்திற்கு சென்னை, பெங்களூர், புனே என பல இடங்களில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் அந்தப் படம் கலந்து கொண்டு புகழ் பெற, விருது பெற காரணமாக இருந்தார்.

வெற்றிமாறனின் ஹச்.ஓ.டி பெயர் வீ.ஜே. மேத்யூ. வெற்றிமாறனுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் பெயர் ஜோசப் சந்திரா. மிகவும் பிடித்த தோழி பெயர் ரஜினி ஹேமா. அந்த ரஜினி ஹேமா தனது கல்லூரி தோழி ஆர்த்தி என்பவரை வெற்றிமாறனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். வெற்றிமாறன், ஆர்த்தி இருவரும் எட்டு ஆண்டுகள் காதலித்தனர். அவர்கள் இருவரும் சேர்ந்து பார்த்த முதல் படம் கமலின் “காதலா காதலா”.

“முதன் முதலில் நான் தான் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள 10 வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் அவர் உனக்கு திடீரென்று மனசு மாறினால் நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார்.

பின் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். எனக்கு ஹைதராபாதில் வேலை கிடைத்தது. என்னால் அவரை விட்டு பிரியமுடியாமல் வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர் உன்னுடைய கனவையும், என்னுடைய கனவையும் இந்த காதல் கலைப்பதாக இருந்தால் நாம் காதலிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்று கூறினார். உடனே நான் வேலைக்கு சென்று விட்டேன். அவர் அப்படி சொன்னால் தான் இன்று நான் என்னுடைய கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக இருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார், ஆர்த்தி.

ஆர்த்தி 2,000ம் சம்பாதித்த போது அதில் 1,000ம் ரூபாயை பெற்றுக்கொண்ட வெற்றிமாறன், ஆர்த்தி 20,000ம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அதில் 10,000ம் பெற்றுக் கொண்டாராம்.

ஆர்த்தியின் தந்தையிடம் வெற்றிமாறனுக்காக பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தவர் குருநாதர், பாலு மகேந்திரா. “‘வெற்றியை எனக்கு எட்டு வருஷமா தெரியும். ஸ்மோக் பண்ணுவான். மத்த எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருநாள்கூட அவன் மேல ஆல்கஹால் ஸ்மெல் வந்தது இல்லை. ஸ்பாட்ல எந்தப் பொண்ணுகூடவும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி நான் பார்த்தது இல்லை. எட்டு வருஷம்லாம் ஒருத்தன் நல்லவனா நடிக்க முடியாது. அவன் கரியர்லயும் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நம்பி உங்க பொண்ணைக் கொடுக்கலாம். எங்கே தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான் என்று கூறி இருக்கிறார்.

ஆர்த்திக்கும் வெற்றிமாறனுக்கும் செப்டம்பர் 8ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு பூந்தென்றல் என்கிற ஒரு மகள் இருக்கிறார்

“இயக்குநர் பதவி என்பது ஓர் அதிகாரம். ஒவ்வொரு படத்தில் இருந்து அடுத்தப் படத்திற்கு போகும்போது இந்த விஷயத்தில் நான் சரியாக இருந்திருக்கிறேனா என்பதைதான் நான் பார்க்கிறேன்” என்று சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன், ஒரு திரைப்பட இயக்குநராக சினிமா குறித்த ஆழமான புரிதலைப் பெற்றிருப்பவராக படத்துக்குப் படம் தன்னை அடுத்த கட்டத்துக்கு உயரும் படைப்பாளியாக இருக்கிறார்.

சினிமா என்பது கலையும் வணிகமும் மட்டுமல்ல. அது முதலில் ஒரு அறிவியல் என்று அவர் கூறியிருப்பது சினிமா என்னும் வடிவம் குறித்த அவருடைய உன்னதமான புரிதலை வெளிப்படுத்தப் போதுமானது. அதுவே அவருடைய திரைமொழி, உருவாக்கம் ஆகியவற்றில் வெளிப்படும் தனித்தன்மை வாய்ந்த சிறப்புகளுக்குக் காரணமாகவும் அமைகிறது.

அவரிடமிருந்து இன்னும் பல தரமான சிறப்பான திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கிடைக்கவும், இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி விருதுகளைக் குவிக்க அவரை மனதார வாழ்த்துவோம்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக