திங்கள், 27 டிசம்பர், 2021

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு

திறமையை மட்டுமே வழிச்செலவிற்கு வைத்துக்கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலைத்துறையில் வெற்றிபெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ். குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கி இருக்கிறார். ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கிய ரஜினி, ஒன்பது வயதில் தனது தாயாரை இழந்தார்.

பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்த ரஜினியை கல்லூரியில் "பி.யு.சி'' வகுப்பில் சேர்த்துவிட்டார், தந்தை. ஆனால், மனம் என்னவோ படிக்க விருப்பம் இல்லாமல் வேறு எதையோ தேட வைத்தது. அது எது என்று புரிந்து கொள்ள முடியாமல், சென்னைக்கு வந்தார், ரஜினி. கையில் இருந்த பணம் முடியும்வரை சென்னையை சுற்றிப் பார்த்தார். திரைப்படங்கள் பார்த்தார். எல்லாம் புதிதாக பரவசமாக இருந்தது.

பிறகு பல இடங்களில் வேலை தேடினார். கடைசியில் ஒரு தச்சுப் பட்டறையில் வேலை கிடைத்தது. ஆனால், அதில் வேலை செய்ய விருப்பமில்லை. அதனால், பெங்களூருக்குத் திரும்பிச் சென்றார்.

பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் சில நாட்கள் வேலை செய்தார். பிறகு அந்த வேலையும் பிடிக்காமல் மீண்டும் சென்னைக்கு வந்தார். சென்னையில் வேலை தேடி அலைந்து கலைத்து போன போது மிட்லண்ட் தியேட்டரில் கே.பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடித்த "எதிர்நீச்சல்'' படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

பிறகு கட்டிட காண்டிராக்டரிடம் சித்தாள் வேலை பார்த்தவர், கிடைக்கும் சம்பளத்தில் நிறைய திரைப்படங்கள் பார்த்தார். சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

படம் பார்க்க செல்வதால் சில நேரங்களில் வேலையை இழந்திருக்கிறார். ஒர்க்ஷாப், மூட்டை சுமப்பது என்று சில வேலைகளைப் பார்த்தவர், மறுபடியும் பெங்களூர் சென்றார். .குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடகா போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது.

சிவாஜி நகர் - சாம்ராஜ்பேட்டை ரூட்டில், 134-ம் நெம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை. பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு `டிப்டாப்' ஆக உடை அணிவார். பயணிகளுக்கு `டிக்கெட்' கிழித்துக் கொடுப்பதும், "ரைட்... ரைட்'' என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.

ஒரு முறை நாடக நண்பரின் தொடர்பு கிடைக்க அவர் மூலமாக நாடகத்திற்கு சென்றிருக்கிறார். பிறகு அவருடன் இணைந்து நாடகங்கள் போட்டிருக்கிறார். அவர் நடிப்புக்கு ஏக வரவேற்பு.

ஒருமுறை நாடகம் முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடகா போக்கு வரத்து அதிகாரி, "நம்முடைய சிவாஜிராவ் பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்!'' என்று புகழ்ந்தார்.

அன்று முதல் தொடர்ந்து சக ஊழியர்கள் சினிமாவுக்கு எப்போது போகப் போகிறாய் என்று கேட்கத் தொடங்கினார்கள். அந்த ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களிடம் பேச ஆரம்பித்தார் ரஜினி.

ரஜினியின் அப்பாவுக்கு ரஜினி, நாடகத்தில் நடிப்பது பிடிக்கவில்லை. "மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. போலீசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்!'' என்று கூறிக் கொண்டிருந்தார்

புட்ராஜ் என்கிற நண்பர், "சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்'' என்று உசுப்பேத்த, சினிமா வாய்ப்பை எப்படி பெறுவது என்று சதா யோசித்தபடி இருந்தார், ரஜினி.

சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைக் கண்டு, அதற்கு விண்ணப்பித்தார்.

நேர்காணலில் தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்த ரஜினி, நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார். கண்டக்டர் வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு நடிப்பி பயிற்சி பெற்றார்.

அமிஞ்சிகரையில் தங்கி தினமும் அண்ணாசாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பஸ்ஸில் செல்லும் ரஜினி, சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேசவேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி பெற்றார். அவருடன் 36 மாணவர்கள் பயிற்சிபெற்றனர்.

அங்கு, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் - நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பயிற்சி நிலையத்திற்கு வந்து கலந்துரையாடுவார்கள். இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.

அப்படி ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் வருகை தந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரஜினியும் அவரிடம் கேள்வி எழுப்பினார். "ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில்  வேகமாகக் கேட்டதால், கே.பாலசந்தருக்கு புரியவில்லை.

பிறகு நிறுத்தி - நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

பாலசந்தர் சிரித்துக்கொண்டே, "நடிகன் வெளியே நடிக்கக்கூடாது'' என்று கூறியாவர், உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்.  "சிவாஜிராவ்'' என்று பதில் சொல்லி இருக்கிறார், ரஜினி.

நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பாலசந்தர், ரஜினியை நோக்கி கையை நீட்டினார். ரஜினியும் கை நீட்ட, கை குலுக்கி இருக்கிறார்.

பயிற்சி ஆசிரியர் அருகே வந்து யங்களை இவனுக்கு ரொம்பப் பிடிக்கும் "சார்! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர்கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!'' என்று பாலசந்தரிடம் கூறி இருக்கிறார்.

பாலசந்தர் சிரித்தபடி, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று ரஜினியிடம் கேட்க, "கொஞ்சம் கொஞ்சம் தெரியும்'' என்று சொல்லி இருக்கிறார்.

"உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!'' என்று சொன்ன பாலசந்தர், பிறகு, "நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக்கொண்டு ஆசிரியருடன் கார் வரை பேசிக் கொண்டே சென்றார்.

கே.பாலசந்தர் சென்ற பிறகு, திரும்பி வந்த ஆசிரியர், "பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார். நீ போய் அவரை ஒரு நாள் அவருடைய ஆபிசில் பாரு என்று கூறி இருக்கிறார்.

ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் நம்மை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறது என்று நெகிழ்ந்து போனார்.

ஆனால், ஊரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வா!'' என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று உன்னை கண்டக்டர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

பஸ் டெப்போவுக்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் ரஜினியை பரிதாபமாகப் பார்த்தார்கள். "கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது'' என்று நண்பர் புட்ராஜ் ஆறுதல் கூறினார்,

முன்பு ரஜினியை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, "நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் - யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!'' என்று ரஜினியின் காதுபடவே பேசினார்கள்.

ரஜினி அப்போது ஒரு உறுதியான முடிவை எடுத்தார். நடிகனாகாமல் இனி பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!' என்று. அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினார்.

திரைப்பட பயிற்சி பெற்றால் தேடி வந்து வாய்ப்பு தரமாட்டார்கள். நாம் தான் சினிமா உலகை தேடிப் போக வேண்டும் என்று படக் கம்பெனிகளுக்கு செல்ல முடிவு செய்தார்.  ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் நண்பன் சதீஸ் ஒடி வந்து, "சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!'' என்று கூறி இருக்கிறார்.

கே.பாலசந்தரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த ரஜினி, அவர் முன் அமர தயங்கி இருக்கிறார்.

என்ன படிச்சிருக்கீங்க?' என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார். `எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!'' என்றதும், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!' என்று கூறி இருக்கிறார்.

`எனக்குத் தமிழ் தெரியாதே!' என்று ரஜினி சொன்னதும், பரவாயில்லை. கன்னடத்தில் பண்ணுங்க!' என்று பாலசந்தர் கூறி இருக்கிறார்.

கிரீஷ்கர்னாட் எழுதிய "துக்ளக்'' நாடகத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டி இருக்கிறார், ரஜினி. பாலசந்தருக்கு பிடித்திருந்தது. `ரொம்ப நல்லா இருக்கு' என்று பாராட்டி இருக்கிறார்.

`இப்போது, அபூர்வ ராகங்கள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன். அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை' படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!'' என்று சொன்ன பாலசந்தர், "உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?'' என்று கேட்டிருக்கிறார்.

தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றதும், "மூன்றாவது ஒரு கதை இருக்கு. அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று நண்பர்களை அழைத்து சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்து கொண்டதை இருக்கிறார்.

"அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார். ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

அவர்கள் சொன்னபடியே ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்றார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட அவருக்கு படப்பிடிப்பு இல்லை. நான்காவது நாள் அவருக்கான காட்சிகளை படமாக்கினார் பாலசந்தர்.

ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.

"பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!'' என்று கமலஹாசனிடம் கூறுகிறார். ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.

படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை பல தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார், ரஜினி.

"கிளாப்!'' என்று இயக்குநர் கூறியதும், பதற்றத்தில் வசனத்தை உளறி இருக்கிறார், ரஜினி. தான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, பாலசந்தர் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட ரஜினி, அடுத்த காட்சியில் பாராட்டும் படி நடித்திருக்கிறார்.

அபூர்வராகங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச சென்ற ரஜினி,  ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்' பேசிக்கொண்டிருபாதை கண்டு, தன்னுடைய என்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தார்.

திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். ரஜினியால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது - அது தான்தான் என்று! தன்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார்.

தன் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நின்று கொண்டிருந்த ரஜினியை கவனித்த கே.பாலசந்தர், "என்ன! சிவாஜி டப்பிங் போகலாமா என்று கேட்டிருக்கிறார்.

ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்' என்று கூறி ரஜினிய பேச அழைத்திருந்தார். ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பேசினார் ரஜினி.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்கிற புகழ் பெற்ற நடிகர் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம். `ராவ்' என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. `டைட்டிலில் எப்படி பெயர் போட வேண்டும் என்று பாலசந்தர் கேட்ட போது, நண்பர்களை கலந்து கொண்டு, `சரத்', `ஆர்.எஸ்.கெய்க்வாட்' என்ற இரண்டு பெயர்களை தெரிவித்திருக்கிறார். நண்பர்களுக்கு அந்த பெயர்கள் பிடிக்கவில்லை. அதனால், "நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!'' என்று ராஜி கூறி இருக்கிறார்.

"என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். என்று கூறியவர், ரஜினிகாந்த் என்று கூறியதும், ரஜினி, பாலசந்தரின் காலைத் தொட்டுக் கும்பிட, நல்ல வரணும் என்று வாழ்த்தி இருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு சென்றார். டிக்கெட் கிடைக்கவில்லை.

தியேட்டர் மானேஜரை சந்தித்து, தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதை தெரிவித்து அவரிடம் டிக்கெட் பெற்று அபூரவராகங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார், ரஜினி.

படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து அபூர்வ ராகங்கள் படம் ஓடியது. முதல் படமே நூறு நாள் படமாக அமைந்தது ரஜினிக்கு பெருமையாக இருந்தது.

அதன் பிறகு ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து "மூன்று முடிச்சு'' படத்தை இயக்க முடிவு செய்தார், கே.பாலசந்தர். இந்தப் படத்தில் கமலஹாசன் இடம் பெற்றார் என்றாலும், அது கவுரவ வேடம் போன்றதுதான். படத்தின் தொடக்கத்திலேயே அவர் இறந்து விடுவார். படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்த அவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு, வாய்க்கு கொண்டு வரும் ஸ்டைலை இந்தப் படத்தில்தான் ரஜினி அறிமுகம் செய்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், "கதா சங்கமா'' என்ற கன்னடப் படத்திலும், "அந்துலேனி கதா'' என்ற தெலுங்குப் படத்திலும் ரஜினி நடித்தார். "அவள் ஒரு தொடர்கதை'' படத்தின் தெலுங்குப் பதிப்புதான் "அந்துலேனி கதா.''

"கதாசங்கமா'' படத்தை புட்டண்ணாவும், "அந்துலேனி கதா'' படத்தை கே.பாலசந்தரும் இயக்கி இருந்தனர்.

1977-ம் ஆண்டில் மொத்தம் 15 படங்களில் ரஜினிகாந்த் நடித்தார். அவற்றில், "புவனா ஒரு கேள்விக்குறி'' பெரும் திருப்பம் ஏற்படுத்திய படமாகும்.

புவனா ஒரு கேள்விக்குறி'யைத் தொடர்ந்து, ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் "16 வயதினிலே.'' இது, பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம்.

"புவனா ஒரு கேள்விக்குறி'' வெளிவந்து 2 வாரம் கழித்து வெளிவந்த இப்படம், ரஜினியின் புகழை மேலும் உயர்த்தியது.

ரஜினியின் கலைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் "பைரவி''. அதுவரை பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினி நடித்திருந்தாலும், தனி ஹீரோவாக நடித்த முதல் படம் "பைரவி''.

ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று, "நான் முதன் முறையாக தயாரிக்க இருக்கும் படத்தில், நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கதாசிரியர் கலைஞானம் கூற, மகிழ்ச்சி அடைந்த ரஜினி, `கதை என்ன?' என்று கேட்டிருக்கிறார். கதையை சொன்னதும் உடனே ஒத்துக் கொண்டார்.

எம்.பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, பாடல்களை கண்ணதாசனும், சிதம்பரநாதனும் எழுதினர். ரஜினியுடன் ஸ்ரீபிரியா, ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா, ஒய்.விஜயா நடித்தனர்.

1978 ஜனவரி 14-ந்தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகி, 1978 ஜுன் 2-ந்தேதி வெளியானது. "பைரவி'' படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை கலைப்புலி எஸ்.தாணு வாங்கி இருந்தர்.

அண்ணா சாலையில் "பைரவி'' படம் திரையிடப்பட்ட பிளாசா திரையரங்கில், ரஜினியின் 35 அடி உயர `கட் அவுட்' வைத்தார். தியேட்டர் உயரத்துக்கு மேலே, அந்த `கட் அவுட்' நிமிர்ந்து நின்றது. இத்துடன் 3 விதமான போஸ்டர்களை அச்சடித்து, சென்னை நகரம் முழுவதும் ஒட்டினார். அதில், படமெடுத்தாடும் நல்ல பாம்பை கையில் பிடித்தபடி ரஜினி தோன்றும் போஸ்டர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

போஸ்டர்களில் ரஜினிகாந்தை `சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த் முதன் முதலாக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டது அப்போதுதான்.

சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்'' என்று ரஜினிகாந்த் கூறினார். ஆனால் ரசிகர்கள் விடாப்பிடியாக `சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கவே, அவர் பெயருடன் அந்தப் பட்டம் இரண்டறக் கலந்து விட்டது.

ரஜினியின் முத்து படம் இந்தியாவைத் தாண்டி ஜப்பானிலும் அமோக வெற்றி. இந்திய மொழிப் படம் முதன் முறையாக ஜப்பானிய மொழிமாற்றம் செய்யப்பட்டு ஹிட் அடித்தது என்றால் அது முத்து தான்.

சந்திரமுகி படம் 820 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்தியாவைத் தாண்டி டர்கிஷ் மொழியிலும், ஜெர்மன் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டும் ஹிட் அடித்தது.

மத்திய அரசின் பத்பூசன், பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே விருதுகள் பெற்றுள்ள ரஜினி, தமிழக அரசின் கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர். சிவாஜி விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர்.விருது, மகாராஷ்டிரா அரசின் ராஜ்கபூர் விருது உட்பட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். 

பெங்களூரில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி, ராமோஜி ராவ் – ராமாபாய் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர் ரஜினி இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக