திங்கள், 27 டிசம்பர், 2021

கலைமாமணி வி.கே.ராமசாமி வரலாறு

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகரான வி.கே.ராமசாமி வித்தியாசமான குரலுக்கு சொந்தக்காரர். வசனங்களைப்  பேசுவதில் தனக்கென ஒரு தனி பாணியைக் கையாண்டவர்.

இவர் 1926 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தவர். இவருடைய அப்பா கந்தன் செட்டியார், எண்ணெய் வியாபாரி. நல்ல வருமானமும், அந்த பகுதியில் பெரும் புகழும் பெற்றவர். தனது மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய அதிகாரியாக உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், அவரது அண்ணன் மகன் மாரியப்பன், நாடக நடிகர் என்பதால், அவர் நடித்த நாடகத்தை பார்க்க தனது மகன் வி.கே.ராமசாமியை அழைத்து சென்ற கந்தன் செட்டியார், அந்த நாடகம் மூலம் தனது மகனின் வாழ்க்கையும் மாறப்போகிறது என்று தெரியாமல் இருந்தார்.

விருதுநகரில் யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளை நடத்திய நாடகமும், அதில் மாரியப்பனின் நடிப்பும், பாட்டும் பாடிய விதமும் கந்தன் செட்டியாருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்துப் போனது. மாரியப்பனின் திறமையை ஊரார் மெச்சினார்கள். குடும்பத்தினர் கொண்டாடினார்கள். அது வி.கே.ராமசாமி என்கிற இளைஞருக்குள் தூங்கிக் கொண்டிருந்த கலைஞனை தட்டி எழுப்பியது.

மாரியப்பனை போல நாமும் நடிக்கலாமே? மக்களிடம் நமது நடிப்புக்கும்  கைதட்டல் பெறலாமே? என்று சிந்திக்க ஆரம்பித்தார், வி.கே.ராமசாமி. தன்னுடைய ஆசையை தனது மாரியப்பனிடம் சென்று தெரிவித்திருக்கிறார்.

உங்க அப்பா பணக்காரர். வியாபாரம், தொழில் என்று உன்னை வளர்க்க ஆசைப்படுவார். கூத்து பாட்டு நாடகம் என்று சொன்னால் உன்னை மட்டுமல்ல என்னையும் அடிப்பார். போப்பா போ என்று வி.கே.ராமசாமியை திருப்பி அனுப்பி இருக்கிறார், மாரியப்பன்.

அப்பாவுக்கு பயந்து நாடகக் குழுவில் சேர மாரியப்பன் உதவி செய்ய வில்லை என்று வேதனைபட்ட வி.கே.ராமசாமி, எட்டாம் வகுப்பு தேர்வு வரை காத்திருந்தார். அதன் பிறகு, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடக்குழு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பொன்னமராவதியில் நாடகம் போடுவதை அறிந்து அங்கு சென்றார்.

வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் திடீரென்று புறப்பட்டு வந்த வி.கே.ராமசாமியைப் பார்த்த மாரியப்பன் அதிர்ச்சி அடைந்தார். பிறகு நாடகக் குழுவில் வி.கே.ராமசாமியின் ஆசையைப் பற்றி கூறியதும், அவர்கள் சேர்த்துக் கொள்வதாக கூறி உள்ளனர்.

மகனை காணமல் தேடிய கந்தன் செட்டியார் கடைசியில், பொன்னமராவதியில் நாடக் குழுவில் வி.கே.ராமசாமி இருப்பதை கேள்விப்பட்டு அழைக்க வந்தார். இனிமே படிக்க மாட்டேன். நடிப்புதான் எனக்கு பிடிச்சிருக்கு என்று ஊருக்கு செல்ல மறுத்து அடம் பிடித்தார், வி.கே.ராமசாமி. பிறகு சமாதனப் படுத்தி நாடகக் குழுவின் ஒத்துழைப்புடன் மகன் வி.கே.ராமசாமியை அப்பா கந்தன் செட்டியார் விருதுநகருக்கு அழைத்து சென்றார்.

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு என்பது போல போன வேகத்திலே திரும்பி வந்துவிட்டார், வி.கே.ராமசாமி. நாடக எண்ணங்கள் என்னை அங்கு இருக்கவிடவில்லை. அதனால் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறி இருக்கிறார். நடிக்க வேண்டும் என்கிற வி.கே.ராமசாமியின் ஆர்வத்தை புரிந்து கொண்ட நாடகக் குழு அவரை சேர்த்துக் கொண்டது.

அந்த காலத்தில் சிவாஜி கணேசன், டி.ஆர்.மகாலிங்கம், கே.ஆர்.ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சாரங்கபாணி, எஸ்.ஏ. நடராஜன், ஈ.ஆர்.சகாதேவன், ஏ.பி.நாகராஜன், இசை மேதை எஸ்.வி.வெங்கட்ராமன் போன்ற பல கலைச் சிற்பிகளை உருவாக்கிய கலைக்கூடமாக யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் குழு திகழ்ந்தது.

அந்த நாடகக் குழுவிலே இருந்தபோது அங்கே நடிகராக இருந்த ஏபி.நாகராஜனுக்கும், வி.கே.ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு உருவாகியது.

 

சின்னச் சின்ன வேடங்களை ஏற்று நடித்த வி.கே.ராமசாமி, அந்த நாடகக் குழுவில் அடுத்தக் கட்டத்துக்கு வந்தபோது மகனின் பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட வி.கே.ராமசாமியின் தந்தை அவரைப் பார்க்க வந்தார். தனது உடல்நிலையைக் காரணமாகக் காட்டி ராமசாமியை விருதுநகருக்கு மீண்டும் அழைத்துச் சென்றார்.

குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு அறிவுரை கூறி வாழ்க்கைக்கு ஒரு தொழில் வேண்டும். கூத்தாடுவது தொழில் இல்லை என்று புத்திமதி கூறியும் அவர் கேட்பதாக இல்லை. கடை வைத்து தருவதாக சொல்லியும் அவர் கேட்கவில்லை. அப்பா போட்ட சண்டையால் இனி யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடக்குழுவில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் வேறு நடக்குழுவில் சேர்வது குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடக குழுவைவிட்டு பிரிந்து தனியாக வந்த மாரியப்பன், டி.கே.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ண பாகவதர் ஆகியோர் இணைந்து ‘ஸ்ரீலஷ்மி பால கான  சபா’ என்ற பெயரிலே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவிடம் சென்று வாய்ப்பு கேட்டார், வி.கே.ராமசாமி. உடனே வி.கே.ராமசாமியை இணைத்துக் கொண்டார், மாரியப்பன். லட்மி காந்தன், இழந்த காதல், பம்பாய் மெயில், கிருஷ்ண லீலா, கண்டிராஜா என பல நாடங்களில் வெவ்வேறுவிதமான வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார், வி.கே.ராமசாமி.  

நிதி நிலையின் காரணமாக அந்த நாடக குழுவால் தொடர்ந்து நாடகம் நடத்த முடியவில்லை. பிறகு அந்த நாடகக் குழுவைக் கலைத்துவிட்டு அதில் நடித்துக் கொண்டிருந்த கலைஞர்கள் அனைவரும் நடிகர் எஸ்.வி.சஹஸ்ரநாமத்தின் நிர்வாகத்தில்  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம் நடத்திக் கொண்டிருந்த நாடகக் குழுவில் இணைந்தனர்.

எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்ற இயக்குநரான ப.நீலகண்டன் எழுதிய ‘தியாக உள்ளம்’ என்ற நாடகத்தை கலைவாணரின் நாடகக் குழுவினர் நடத்தியபோது அந்த நாடகத்தில் ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பிள்ளை என்கிற அறுபது வயது கிழவனின் வேடத்தில் நடித்தார் விகே.ராமசாமி.

அந்த நாடகத்தைப் பார்க்கும் எவரும் ராமசாமியின் நடிப்பை பாராட்டாமல் இருந்ததே இல்லை. தியாக உள்ளம்’ நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவே அதைப் படமாக்கும் உரிமையை வாங்குவதற்காக ஏவி.எம். ஸ்டுடியோ அதிபரான ஏவி.மெய்யப்ப செட்டியார் ஒரு நாள் அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார்.

நாடகத்தைப் பார்த்துவிட்டு எல்லோரையும்  பாராட்டிய மெய்யப்ப செட்டியார் “அந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடம் போட்ட பெரியவர் ரொம்பவும் சிறப்பாக நடித்தார். அவரைக் கூப்பிடுங்கள். நான் அவரைப் பார்க்க வேண்டும்” என்றார்.

அவர் அப்படி சொன்னவுடன் செட்டியாருக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த வி.கே.ராமசாமியை அழைத்த எஸ்.வி.சஹஸ்ரநாமம் “இவர்தான் அந்த வேடம் ஏற்ற நடிகர்” என்று மெய்யப்ப செட்டியாருக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது வி.கே.ராமசாமிக்கு இருபது வயதுதான் என்பதால் எஸ்.வி. சஹஸ்ரநாமம் சொன்னதை செட்டியார் நம்பவில்லை. “பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடத்திலே நடித்த பெரியவரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னால் இந்தப் பையனை எதற்கு கூப்பிட்டீர்கள்?” என்று செட்டியார் கேட்டபோது அங்கேயிருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஏனென்றால் அவர்களுக்கு அது புது அனுபவம் இல்லை. ராமசாமிதான் அந்த பிளாக் மார்க்கெட் சண்முகம் என்பதை முதல்முறையாக அந்த நாடகத்தைப் பார்த்த எவருமே அதுவரை நம்பியதில்லை.

“இந்தப் பையன்தான் அந்த வேடம் போட்ட நடிகர்” என்று திரும்ப மெய்யப்ப செட்டியாரிடம் சொன்ன எஸ்.வி.சஹஸ்ரநாமம் “நீங்கள் அதை நம்பாததில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் வேறு ஒரு நாடகக் குழுவில் இவன் நடித்த ‘பம்பாய் மெயில்’, ‘இழந்த காதல்’ ஆகிய நாடகங்களைப் பார்த்துவிட்டு அந்த நாடகத்தில் நடித்தவருக்கு குறைந்தது ஐம்பது வயதாவது இருக்கும் என்ற எண்ணத்தில் நீங்கள் கூப்பிட்டது போல ‘அந்தப் பெரியவரைக் கூப்பிடுங்கள்’ என்றுதான் நாங்களும் சொன்னோம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை என்றால் கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த நாடகத்தின் வசனங்களைப பேசிக் காட்டும்படி வி.கே.ராமசாமியிடம் கூறினார்.

வி.கே.ராமசாமி அந்த வசங்களைப் பேசிக் காட்டியதும் அசந்து போன மெய்யப்ப செட்டியார் “நான் மட்டுமில்லை. யாராலும் இவர்தான் அந்த வேடத்தில் நடித்தவர் என்பதை அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. முக்கியமாக இவரது குரல் தனித்தன்மை வாய்ந்த வித்தியாசமான குரல். இவருக்கு அடையாளமாக அந்தக் குரல்தான் அமையப் போகிறது…” என்று வி.கே.ராமசாமியைப் பாராட்டினார்.

மூவாயிரம் ரூபாய் கொடுத்து அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையை ப.நீலகண்டனிடமிருந்து வாங்கிய மெய்யப்ப செட்டியார், அந்தப் படத்திலே உதவி இயக்குநராகத் தன்னுடன் பணியாற்றும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.   ப.நீலகண்டன் பணியாற்றிய முதல் திரைப்படமாக அந்தப் படம் அமைந்தது

‘நாம் இருவர்’ என்று அந்தப் படத்துக்கு பெயர் சூட்டிய மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தில் நடித்த சில கலைஞர்களை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொண்டார்.

ஆரம்பத்தில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான  எஸ்வி.சஹஸ்ரநாமம், என்.எஸ்.கிருஷ்ணனின் வழக்கு சம்பந்தமான பணிகளைக் கவனிக்க வேண்டியிருந்ததால் அந்தப் படத்திலிருந்து ஒரு கட்டத்தில் விலகிவிடவே பிரபல பாடகரான டி.ஆர்.மகாலிங்கத்தை அந்தப் படத்திலே நாயகனாக்கிய மெய்யப்ப செட்டியார், நாடகத்தில் வி.கே.ராமசாமி ஏற்ற அதே ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் வேடத்தை அவருக்கு வழங்கினார்,

காரைக்குடிக்கு அருகே தேவகோட்டை ராஸ்தாவிலே அமைக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடியோவிலே உருவான அந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

நாம் இருவர்’ படம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை,

‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் அவரது ‘நல்ல தம்பி’ திரைப்படத்தில் வாய்ப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து ‘கிருஷ்ணபக்தி’, ‘வன சுந்தரி’, ’லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்த வி.கே.ராமசாமிக்கு, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான ‘திகம்பர சாமியார்’ படத்திலும் ‘சர்வாதிகாரி’ படத்திலும் நல்ல வேடங்கள் அமைந்தன. அதற்குப் பிறகு அவரது திரையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே அமைந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி படத்தில் சர்ப்ரைஸ் வில்லன் வி.கே ராமசாமி. என்றும் மறக்க முடியாத 'பராசகதி'யின் க்ளைமாக்ஸ் கோர்ட் சீனில் 'என் தங்கை கல்யாணியின் வாழ்க்கையில் குறுக்கிட்ட கயவன் ' என்று சிவாஜி மூச்சுவிடாமல் பேசும் வசனத்தில் வரும் கயவன் வேறு யாரும் இல்லை. வி. கே.ராமசாமிதான். சிவாஜியின் முதல் படத்தில் முக்கியமான வில்லன் இவர் என்பது ஓர் அழகான ஆச்சரியம்.

சிவாஜியின் இரண்டாவது படமான பணம் படத்திலும் வில்லனாக நடித்தவர், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் எட்டையப்பனாக நடித்து கவனிக்கப்பட்டார். தொடர்ந்து சிவாஜியின் பல படங்களில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் காவல்காரன், விவசாயி, குடியிருந்த கோயில், குமரிக்கோட்டம், ராமன் தேடிய சீதை, சங்கே முழுங்கு, உரிமைக்குரல் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

முதல் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்ததால் தொடர்ந்து எல்லா படங்களிலும் வி.கே.ராமசாமிக்கு வயதான வேடங்களே அவருக்குக் கிடைத்தன.

1960-களிலும் 1970-களிலும் முன்னணியில் இருந்த டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், கமலஹாசன், ரஜனிகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார்.

அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் மறக்கவியலாதவை.

மலையாள இயக்குநர் ஃபாசிலின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்ற வேளை படத்தில் மிக அற்புதமான கதாபாத்திரம் வி கே ராமசாமிக்கு. நம்பிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நொடித்துப்போன சக்தி நாடக சபா என்ற நாடகக் குழுவை வைத்துக்கொண்டு பிரபு, ரேவதியுடன் காமெடி செய்தாலும் சரிவர இயங்காமல் போன தன் நாடகக் குழுவின் வலியையும் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

இயக்குநர் ஃபாசிலின் ஃபேவரைட் வி.கே. ராமசாமி. வருசம் 16 படத்தின் நாயகன் கார்த்திக்கின் தாத்தா கதாபாத்திரத்தில் ப்ரமாதப்படுத்தினார் மனிதர். வேலைக்காரராக வரும் ஜனகராஜும் இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் தியேட்டர் கலகலத்தது உண்மை. வருசங்கள் கடந்தாலும் மறக்க முடியாத படமும் தாத்தாவும்.

மணிரத்னத்தின் இயக்கத்தில் அக்னி நட்சத்திரம் படத்தில் படத்துடன் சேராத தனி காமெடி என்றாலும் குத்தாட்டம் பார்க்கப்போய் போலீஸிடம் மாட்டுவதும், ஆபாசப்படம் பார்த்து வீட்டில் எல்லோரிடமும் சிக்குவதும், மனைவியிடம், டிஸ்கோ சாந்தியிடமும் ஒரே சமயம் சிக்கி சின்னா பின்னமாவதும் என சிரிக்க வைத்திருப்பார் வி. கே. ராமசாமி.

வி.கே.ராமசாமியின் திரை வாழ்க்கையில் ஆண்பாவம் படத்தில் பாண்டியன், பாண்டியராஜனுக்கு அப்பாவாக வந்து படம் முழுவதிலும் நடிப்பில் ரகளை செய்திருப்பார். ராமசாமி டூரிங் டாக்கீஸின் முதலாளியாகவும், அவர் அம்மாவாக நடித்திருக்கும் கொல்லங்குடி கருப்பாயி உடனான அவரின் உரையாடல்களும் என்றும் நினைவில் நிற்பவை.

ரெட்டை வால் குருவி படத்தின் செகண்ட் ஹீரோ இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் ஆரம்பம் முதல் கடைசிக் காட்சி வரை வரும் கதாபாத்திரம். நாயகன் மோகனுக்கு அட்வைஸ் தந்து பல்ப் வாங்குவதாகட்டும், நல்லது செய்யப்போய் அது திரும்பி அவருக்கே வினையாக மாறப் பதறுவதாகட்டும் காமெடியிலும் குண்சித்திரத்திலும் வெளுத்திருந்தார் வி.கே.ராமசாமி.

சில இயக்குநர்களுக்கு சில நடிகர்களை மிகவும் பிடித்துவிடும். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் விருப்ப நடிகர் லிஸ்ட்டில் வி.கே.ராமசாமிக்கு எப்போதும் இடமுண்டு. தனது பல படங்களில் அவருக்கு தனி கதாபாத்திரம் தந்து சிறப்பித்தவர். 'மெளன ராகம்' படத்தில் மிகச்சிறு கேரக்டர்தான். இடைவேளைக்குப் பிறகு வரும் இறுக்கமான பகுதியை ரிலாக்ஸ் செய்வது வி. கே. ராமசாமிக்கும் இந்தி பேசும் மெக்கானிக் கடைக்காரருக்குமான காமெடி சீன்களே.

1947 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகராக அறிமுகமான வி.கே.ராமசாமி, பத்து ஆண்டுகள் கழித்து 1957 ஆம் ஆண்டு தனது நண்பர் ஏ.பி.நாகராஜனுடன் இணைந்து ஸ்ரீலஷ்மி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி ‘மக்களை பெற்ற மகராசி’ என்கிற படத்தை தயாரித்தார். அவரது நண்பர் சிவாஜி கணேசன் நடித்த அந்தப் படத்தை கே.சோமு இயக்கினார். அடுத்து வடிவுக்கு வளைகாப்பு, நல்ல இடத்து சம்பந்தம் போன்ற படங்களை தயாரித்தனர். இதில் வடிவுக்கு வலைக்கப்பு படம் மூலம் ஏ.பி.நாகராஜன் இயக்குனராகவும், நல்ல இடத்து சமபந்தம் படம் மூலம் வி.கே.ராமசாமி கதை ஆசிரியராகவும் உயர்ந்தனர்.

அதன் பிறகு இருவரும் பிரிந்து தனித்தனியாக படம் எடுத்தனர். வி.கே.ராமசாமி தனது மனைவி ரமணி பெயரில் பதினோரு படங்களை தயாரித்திருக்கிறார். சில படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் நஷ்டத்தை சந்தித்தார். இந்த தகவலை அறிந்த எம்.ஜி.ஆர்., நான் ஒரு படத்தில் நடித்து தருகிறேன். அதன் மூலம் உனது கடன்கள் அடைந்துவிடும் என்று நம்பிக்கை தந்திருக்கிறார். ஆனால், காலம் உடனே அவரை அரசியலுக்கு அழைத்து கொண்டதாள் எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்தை வி.கே.ராமசாமியால் தயாரிக்க முடியாமல் போனது. அதன் பிறகு ரஜினி நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்க விரும்பி ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு கடிதம் எழுதினர். 

ரஜினியிடம் தொடர்ந்து பலர் படம் தயாரிக்க கால்ஷீட் கேட்டிருந்ததால் வருஷத்துக்கு ஒரு படம் தான் நடிக்கிறோம். யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த ரஜினி, ஒரு நாள் எல்லோருக்குமாக சேர்த்து ஒரு படம் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து சிலரை அழைத்து கருத்துக் கேட்டிருக்கிறார். அதில் வி.கே.ராமசாமியும் ஒருவர்.

ஒரு தயாரிப்பாளர் கதாநாயகனுக்கு பணம் கொடுத்து படத்திற்கு நிறைய செலவு செய்து படம் தயாரித்து வியாபாரம் செய்து லாபம் பார்ப்பார்கள். ஆனால், அருணாசலம் படத்தில் ஒரு பைசா கூட வாங்காமல் தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து, மாறாக லாபத்தில் ஒரு பகுதியை சமமாக பிரித்து தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதாக கூறியதும், யார்தான் மறுப்பார்கள். ரஜினியின் தேர்வும், உதவியும், உயர்ந்த மனசும் வி.கே.ராமசாமியை நெகிழ வைத்தது. வாழ்த்தி ஒப்புக் கொண்டதுடன், அந்தப் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பும் பெற்று திரும்பினார்.

நடிகர் சங்கத்தில் போட்டியே வேண்டாம் என்று சொல்லி நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்வர் எம்.ஜி.ஆர். தலைவராக கொண்டுவந்த போது வி.கே.ராமசாமியை பொருளாளராக கொண்டு வந்தார். அதன் பிறகு பல ஆண்டுகள் பொருளாளர் பதவி வகித்தார், வி.கே.ராமசாமி. பிறகு துணைத்தலைவராகவும் பல ஆண்டுகள் பதவியில் இருந்தார். 1970ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.

1969 ஆம் ஆண்டு நடிகை ரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார், வி.கே.ராமசாமி. இவர்களுக்கு மூன்று மகள்களும், நன்கு மகன்களும் உள்ளனர். அதில் வி.கே.ஆர்.ரகு என்ற மகன் சில படங்களில் நடித்துள்ளார். கார்த்திக் நடித்த கட்டப்பஞ்சாயத்து, சின்ன கண்ணம்மா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

எட்டாவது படிக்கும் போது, அதாவது, பதினைந்தாவது வயதில் நாடகக்குழுவில் சேர்ந்த, வி.கே.ராமசாமி, 1947 ஆம் ஆண்டில் நாம் இருவர் படத்தின் மூலம் இருபதாவது வயதில் நடிகராக சினிமாவில் நுழைந்தார். அதன் பிறகு 54 ஆண்டுகள் சினிமாவில் நடித்தவர், 2002 ஆம் ஆண்டு சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை படம் அவருக்கு  கடைசிப்படமாக அமைந்தது. 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தனது 76 வது வயதில் காலமானார்.

வில்லன், அப்பாவி, கண்ணியம் மிகுந்தவன், பொறுப்பற்றவன், பணக்காரன், பரதேசி, முன்கோபி, சாது என்று பலதரப்பட்ட பாத்திரங்களை தனது இயல்பான நடிப்பினால் ஒளிரச்செய்தவர் வி.கே.ராமசாமி. தலைமுறைகள் கடந்து, ரசனை மாற்றத்தை கடந்து நின்ற சாதனையாளர். அத்தனை சாதனையிலும், புகழிலும் கூட, ஒரு துளி கூட கர்வம் இல்லாமல், எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுகிற சுபாவம் கொண்டராக திகழ்ந்தவர். அதுதான் அவரது வெற்றியும் கூட...

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக