திங்கள், 27 டிசம்பர், 2021

நடிகை நளினி வாழ்க்கை வரலாறு

திரையுலகில் நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்று பல பேர் தவமிருப்பார்கள். அதற்காக நிறைய முயற்சி... போராட்டம் என்று சவால்களை சந்தித்து திரையுலகில் நுழைவார்கள். அப்படி எந்த கஷ்டமும் இல்லாமல் வந்தவர்தான் நடிகை நளினி.

அதற்கு காரணம் அவருக்குள் இருந்த நடன திறமையும், அவரது குடும்பம் திரையுலகில் பேர் சொல்லும் படி புகழோடு இருந்ததும்தான்.

நளினியின் அப்பா மூர்த்தி நடன இயக்குனராகவும், நளினியின் தயார் பிரேமா நடனக் கலைஞராகவும் இருந்தார்கள். அவர்களுக்கு 1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அன்று பிறந்தார், நளினி. நளினியின் இயற்பெயர் ராணி.... குடும்பம் நடனத்துறையில் இருந்ததால் நளினியும் சிறுவயதிலேயே நடனம் ஆட கற்றுக் கொண்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது உலக தமிழ் மாநாடு நடைபெற்றது. அதில் குமரிகண்டம் என்கிற ஒரு நடனப் படத்தை திரையிட முடிவு செய்து அதற்காக பா.நீலகண்டன் அவர்களை இயக்குனராக நியமித்தார், எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் படங்களை இயக்கிய பா. நீலகண்டன் அந்த நடனப் படத்தையும் சிறப்பாக கொண்டுவர தீர்மானித்து நல்ல இளமையான திறமையான நடன கலைஞரை நடிக்க வைக்க முயற்சி செய்தார்.

நடன இயக்குநர் மூர்த்தியின் மகள் பிரமாதமாக நடனம் ஆடுவாள் என்று அறிந்தவர், நளினியை அந்தப் நடனப் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆறாம் வகுப்பு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நளினி, கலைத் தாய் அழைத்து வந்து மேடை ஏற்றியதும், யார் இவர் யார் இவர் என்று அவரது நடனத்தைப் பற்றியே விசாரிப்புகள்.

அதில் குன்னகுடி வைத்தியநாதன் தான் இசையமைத்த தோடி ராகம் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். 1983 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் அவரது நடனத் திறமையை இன்னும் வெளிக்கொண்டுவர காரணமாக அமைந்தது. அதன் பிறகு தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் அவருக்கு படங்கள் குவிந்தன. இதில் மலையாளத்தில் அவர் அறிமுகமான இடைவேளா படத்தில் அவரது நடிப்பையும் நடனத்தையும் பார்த்த இயக்குநர் டி.ராஜேந்தர், தனது 'உயிருள்ளவரை உஷா' படத்தில் நடிக்க வைத்தார்.

'உயிருள்ளவரை உஷா' படத்தின் வெற்றி நளினியை ஏராளமான படங்களில் நடிக்க வழி வகுத்தது. தங்கைக்கோர் கீதம், உறவைக் காத்த கிளி, நூறாவது நாள், 24 மணி நேரம், பாலைவன ரோஜாக்கள் என தமிழில் அறுபது, மலையாளத்தில் இருபது, கன்னடத்தில் ஏழு, தெலுங்கு மொழியில் ஆறு என நூறு படங்களை நெருங்கியவரை திருமணம் என்கிற திடீர் முடிவு ஒரு சிறிய பிரேக் போட வைத்து.

ராம நாராயணன் படங்களில் நளினி நடிக்கும் போது, அந்தப் படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர், மதுரை மேலுரை சேர்ந்த குமரேசன் என்கிற ராமராஜன். படப்பிடிப்பில் உதவி இயக்குனராக மட்டுமின்றி நளினியுடன் உரிமையுடன் பேசும் அளவுக்கு நல்ல நட்பு வைத்திருந்தார்.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி முடிந்ததும் அந்த காட்சியின் கன்டினியூட்டி எழுத நளினியுடன் பேசிய போது, நீங்கள் இந்த ட்ரெஸ்ஸில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என நளினியிடம் கூறிய ராமராஜன், நாளைக்கும் இதே ட்ரெஸ்ஸில் வாங்க என கேட்டுக் கொண்டாராம்.  

கண்டினியூட்டி உடையில் வரச்சொல்கிறார் என்று நினைத்துக் கொண்ட நளினி, மறுநாள் அதே போல அதே உடையில் சென்றிருக்கிறார். நளினி தான் சொன்ன உடையில் வந்திருப்பதை பார்த்துவிட்டு தான் கேட்டுக் கொண்டபடி நளினி வந்திருக்கிறார் என்று ராமராஜன் நினைத்து கொண்டார். அப்போது மனதுக்குள் காதல் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்திருக்கிறது. 

மனைவி சொல்லே மந்திரம் படத்தின் படப்பிடிப்பின் போது பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்ற போது குங்குமத்தை ராமராஜன் நளினியிடம் கொடுத்தார். அப்பொழுது கையில் மருதாணி இருந்ததால் நீங்களே வைத்து விடுங்கள் என்று நளினி கூறி இருக்கிறார். இந்த சம்பவம் ராமராஜனுக்குள் இன்னும் காதலை தீவிரப்படுத்தியது.

நளினியின் ஒவ்வொரு பேச்சையும், செயலையும் காதலுடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார், ராமராஜன். ஒருமுறை “நீங்க சாப்பீட்டீங்களா” என்று அக்கறையுடன் விசாரித்த ராமராஜனின் குணம் நளினிக்கு பிடித்து விட்டதாம்.

பகல், இரவு என மாறி மாறி படப்பிடிப்புக்கு ஓடிக் கொண்டிருந்த நளினிக்கு அக்கறையாக அனுசரணையாக பேச ஒரு உள்ளம் கிடைக்காதா என்கிற ஏக்கம் இருந்த போது ராமராஜனின் அந்த கனிவான பேச்சு அவர் மனதில் ஆழமாக இறங்கி இருக்கிறது. அதனால் அவரை அன்போடு கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இவர்களின் காதல் மொழிகள் வீட்டுக்கு தெரிந்ததும் பூகம்பம் வெடிக்கிறது.  மலையாளம், தெலுங்கு படப்பிடிப்புக்காக  கேரளா, ஆந்திரா என நளினியை அழைத்து சென்றனர்.

இதனிடையே ராமராஜனுக்கு இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், 'நம்ம ஊரு நல்ல ஊரு' படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. வி.அழகப்பன் இயக்கிய 'நம்ம ஊரு நல்ல ஊரு' படம் ராமராஜனுக்கு வெற்றிப் படமாக அமைய அடுத்து எங்க ஊரு பாட்டுக்காரன் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆகிறது.

வெற்றியுடன் நளினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார், ராமராஜன். இதைக் கேட்ட நளினியின் குடும்பத்தார் அவரை அடித்து அவமதித்து அனுப்பி உள்ளனர்.  

இந்த சம்பவம் நளினிக்கு தெரிந்ததும், நமக்காக ஒருத்தர் அடி வாங்கி விட்டார். நாம் ஏன் அவரையே திருமணம் செய்து கொள்ள கூடாது என்று தோன்றி இருக்கிறது. இதை ராமராஜனுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார்.

ஒரு நாள் சிலரின் துணையோடு படப்பிடிப்பிலிருந்து தப்பிக்க வைத்து, அவரை ஒரு வீட்டில் வைத்து தாலி கட்டுகிறார் ராமராஜன். அது 1987ஆம் ஆண்டு நடந்தது.

இவர்களின் காதல், திருமணம் குறித்த பிரச்சினை எம்.ஜி.ஆர். வரை செல்கிறது. உடனே அவர்களை அழைத்து வாழ்த்திய எம்.ஜி.ஆர். தனது செலவில் திருமண வரவேற்பு விழாவை நடத்துகிறார்.

‘மனைவி வந்த நேரம்’ ராமராஜனுக்கு வெற்றி மேல் வெற்றி. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. நளினிக்கு வாழ்வின் எல்லா சந்தோஷங்களையும் வாரி வழங்குகிறார். அருணா, அருண் என இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன.

கால ஓட்டம் அன்பும் காதலுமாக இருந்தவர்களுக்குள் சில கருத்து முரண்பாடுகள் தோன்றின. 13 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு இருவரும் பிரிய தீர்மானித்துள்ளனர். வீட்டில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எலியும் பூனையுமாக இருப்பதை விட தூரமாக இருந்து காதலுடன் வாழலாமே என்று 2000ம் ஆண்டு சுமுகமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

பிள்ளைகள் படித்து வளர்ந்ததும், நடிக்கவேகூடாதென இருந்த நளினி பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு திரும்பவும் சின்னத்திரையின் மூலம் மக்கள் முன் வந்தார். சினிமாவில் கதாநாயகியாக நடித்த நளினிக்கு சின்னத்திரையில் வில்லி வேடங்களே கிடைத்தன. சில நகைச்சுவை வேடங்களும் அவரது திறமையைக் காட்ட உதவின.

சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் பிசியான நடிகையாக வலம் வரும் நளினி, சட்டம் படித்த மகள் அருணாவை ரமேஷ் சுப்பிரமணியம் என்பவருக்கு 2013ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொடுத்தார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் சி.ஏ. படித்த அருனுக்கு பவித்ரா என்பவரை  2014ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக