திங்கள், 27 டிசம்பர், 2021

எம்.கே.தியாகராஜா பாகவதர் வாழ்க்கை வரலாறு

அற்புதமான குரல் வளம். தங்கத்தை ஒத்த நிறம். காந்த கண்கள் என தங்க விகரகம் போல இருக்கும் தியாகராஜா பாகவதர் தங்க தட்டில் தான் சாப்பிடுவாராம். பன்னீரில் தான் வாய் கொப்பளிப்பாராம்... அரேபியா சென்ட் போடுவாராம்... காஷ்மீர் குங்குமப் பூவில் தான் தூங்குவாராம்... அவரை பட்டு வேஷ்ட்டியிலும் ஜரிகை துண்டிலும்... பார்க்க நமக்கு இரண்டு கண்கள் போதாது என்று சொல்லி அவரது ரசிகர்கள் உருகுவார்கள்...

அப்படி திரையுலகம், நாடக உலகம், இசை உலகம் என மூன்று உலகையும் ஆண்ட மகா கலைஞன் தியாகராஜா பாகவதர்.

பாகவதர் கட்டிங்தான் எனக்கு வெட்டனும் என்று முடிவெட்டும் நிலை அப்போது இருந்தது. அந்தளவுக்கு அவரது சிகையலங்காரம் ‘பாகவதர் கிராப்’ என்று புகழ்பெற்றிருந்தது.

பாகவதரை போல மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்ன பெண்களும் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... அந்தளவுக்கு அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக இருந்தார்கள்.

பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், மனதை மயக்கும் குரலும் ஒருங்கே அமையப் பெற்ற மன்மதனாகவே அவர் வர்ணிக்கப்பட்டார். அவரின் மன்மத லீலை பாடலை கேட்காத ரசிகைகள் உண்டோ...

திரைப்படத்தில் இருபது அடிக்கு தள்ளி நிற்கும் காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியில் கூட தியேட்டரில் ஆரவாரம் அடங்க அரை மணிநேரமாகும்... அந்த கலைஞனின் வாழ்க்கை துளிகள் சிலவற்றை இன்று தெரிந்து கொள்வோமா....  

‘எம்.கே.டி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். இன்றைய மயிலாடுதுறையான அன்றைய மாயவரத்தில் 1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி – மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு இளைய மகனாக பிறந்தவர்.

கிருஷ்ணமூர்த்தி தன் குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்று அங்கு உய்யக்கொண்டான் திருமலை என்னும் இடத்தில் நகைவேலை செய்துவந்தார். அங்குள்ள பள்ளியில் தியாகராஜை சேர்த்துவிட்டார். ஆனால், தியாகராஜனுக்கு படிப்பில் நாட்டம் இல்லை. பாட்டு பாடுவதில் ஆர்வம்  ஏற்பட்டது. எங்கு யார் பாடினாலும், இசைக் கச்சேரி நடத்தினாலும் அங்கு முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். அந்த பாடல்களை ஒழுங்காகக் கேட்பதுடன், மற்றவர்கள் வியக்கும் வகையில் அந்தப் பாடலை திரும்ப அவர் பாடிக்காட்டுவாராம்.

அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் இரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டர் ஆக பணியாற்றி வந்த எப்.ஜி.நடேசன் அய்யர் என்பவர், சொந்தமாக ரசிக ரஞ்சன சபா என்கிற நாடக குழுவை நடத்தி வந்தார். அவர் தியாராஜானின் பாடும் திறமையைக் கண்டு அவரது நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டு அரிச்சந்திரா நாடகத்தில் அரிசந்திரனின் மகன் லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜனை நடிக்க வைத்தார். பத்து வயதில் நாடகத்தில் நடிக்க மேடை ஏறினார் தியாகராஜன்.  

அந்த அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன். அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர ஆர்வம் காட்டினார்.

தியாகராஜர், பொன்னுவய்யங்கார், திருவையாறு ராமசாமி பத்தர் ஆகியோரிடம் இசை பயில சென்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டது.  தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன.

கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். அன்று முதல் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக மக்களிடம் பதிவாகிப் போனது.

கச்சேரிகளில் பாடிக் கொண்டே 1926ஆம் ஆண்டு திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு நடந்த பவளக்கொடி நாடகங்களில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

திரையரங்குகளில் மௌன படங்கள் மறைந்து பேசும் படம் தொடங்கிய போது, திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர்.  நாடகக் கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கலைஞர்களை நாடினார்கள்.

தியாகராஜா பாகவதரும் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் தேர்ச்சி பெற்றவர். அவர் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக நடித்ததை பார்த்த தொழிலதிபர் லட்சுமணன் செட்டியார், அழகப்ப செட்டியார், திரைப்பட இயக்குநர் கே.சுப்ரமணியம் ஆகியோர், அந்த நாடகத்தைப் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

மீனாக்சி சினிடோன் நிறுவனம் தயாரிப்பில் கே.சுப்பிரமணியம் இயக்கிய பவளக்கொடி படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், எஸ்.எஸ்.மணி பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி, கே.கே.பார்வதிபாய் உட்பட பலர் நடிக்க பாபாநாசம் சிவன் எழுதி இசையமைத்த 55 பாடல்களுடன் 1934ம் ஆண்டு பவளக்கொடி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் 22 பாடல்களை தியாகராஜா பாகவதர் பாடியிருந்தார். இந்தப் படம் 9 மாதங்கள் ஓடியது. முதல் படத்திலேயே பாகவதர் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்.

மீண்டும் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் நவீன சாரங்கதரா படத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன் நடித்தார். இந்தப் படம் 1936 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெறறது. இந்தப் படத்தில் பாபநாசம் சிவன் எழுதி இசையமைத்த 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி பாடி இருந்தனர். சிவபெருமான் கிருபை வேண்டும், ஞானகுமாரி நடன சிங்காரி, அபராதம் செய்தறியே போன்ற பாடல்கள் அக்காலத்தில் பிரபலமான பாடல்களாக அமைந்தன.

அடுத்து, அதே ஆண்டில் அவர் அரசனாகவும் மேடைபாடகனாகவும் நடித்து தயாரித்த சத்தியசீலன் படம் வெளியானது. இதில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு ஜோடியாக தேவசேனா நடித்திருந்தார். ராஜமாணிக்கம் கதை வசனம் எழுத, ஜானகி கவி குஞ்சரம் பாடல்கள் எழுத பி.சம்பத்குமார் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அடுத்து தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்தாமணி படத்தில் அவருக்கு ஜோடியாக அசுவத்தம்மா நடிக்க சேர்களத்தூர் சாமா உட்பட பலர் நடித்த அந்தப் படத்தை கதை எழுதி இயக்கினார், ஒய்.வி.ராவ்.

சிந்தாமணி படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலிலும் சாதனைப் படைத்தது. சிந்தாமணி படத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு படத் தயாரிப்பாளர்கள் மதுரையில் ஒரு தியேட்டர் கட்டி அடஹ்ர்கு சிந்தாமணி என்று பெர்யரும் வைத்தனர்.

அதற்கு பிறகு அவர் நடித்த  படமும் சூப்பார் ஹிட். சிவகவி படம் ஒரு அன்டுக்குமேல் ஒடி சாதனைப் படைத்தது.

திருநீலகண்டர், அசோக்குமார் படங்களைத் தொடர்ந்து அவர் நடித்து 1944-ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, ‘3 தீபாவளி கண்ட திரைப்படம்’ என்ற சாதனையைப் படைத்தது.

இதில் என்ன கொடுமை என்றால் இந்த மூன்று ஆண்டுகளையும் அவரால் நிம்மதியாக கொண்டாட முடியவில்லை. ஹரிதாஸ் படம் வெளியான அடுத்த மாதமே பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் தியாகராஜா பாகவதரும், அவரது நண்பர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றார்கள். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டிருந்தது.

தண்டனைக் காலத்திலேயே வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர்.

சிறைக்கு செல்வதற்கு முன் அவர் நடிக்க முன்பணம் வாங்கி இருந்த பல படங்களின் முன் பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார், தியாகராஜா பாகவதர். திரும்பி வந்த பிறகு ராஜமுக்தி என்கிற படத்தில் நடித்தார். தொடர்ந்து நடித்த அமரகவி, சியாமளா, புது வாழ்வு, சிவகாமி ஆகிய படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. இதனால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனால் அந்தப்படங்களில் எப்போதும்போல் அவரது பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

அவரது பாடல்கள், பாமரர்களும் ரசிக்கும் விதமாக இருந்தன. பல கோடி மக்களின் இதயங்களில் அப்பாடல்கள் இன்னமும் எதிரொலிக்கின்றன.

தியாகராஜ பாகவதரின் மனைவி பெயர் கமலம். அவருக்கு சுசீலா என்கிற மகள் இருக்கிறார். அவர் வில்லிவாக்கத்தில் வசிக்கிறார். அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். சுசீலா தனது தந்தையைப் பற்றி நினைவு கூறுவதை கேட்போமா...

தமிழ்த் திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டவர். தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர் என்றும், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சர்க்கரை நோயின் தீவிரம் காரணமாக கண் பார்வை இழந்தார். அந்தப் படம் முடிவதற்குள் தனது 49 வயதில் 1959 ஆம் ஆண்டு நவம்பர் 1, தேதி மாலை 4.30 மணிக்கு அரசு மருத்துவமனையில் காலமானார்.

 

1940க்கும் 1955க்கும் இடைப்பட்ட காலங்களை ஆட்டி வைத்தவர். தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். நாடக் மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும் போது ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் அப்போது அப்படிக் கிடைத்ததில்லை. 

பாமரர்களுக்கும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா,  இசை என்று மூன்று குதிரைகளில் ராஜபவனி வந்த பெருமைக்கு சொந்தக்காரர். 

தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை. ஒரு நொடியில் மாறுவதுதானே... வாழ்க்கை.

சினிமா கலைஞர்கள் கோடிகளில் புரளமுடியும் என்பதை முதலில் நிருபித்துக் காட்டியவர். பெரும் ரசிகர் பட்டாளமும், அரசனுக்கு உண்டான வாழ்வும் வாழ்ந்த பாகவதரின் கல்லறை... பரபரப்பு மிகுந்த திருச்சி சங்கிலியாண்டவர் புரத்தில் அவரது இருப்பை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது...

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக