திங்கள், 27 டிசம்பர், 2021

‘கவர்ச்சிக் கன்னி’ ஜோதிலட்சுமி வரலாறு

‘கவர்ச்சிக் கன்னி’ என்ற பட்டத்தை அத்தனை எளிதாக சினிமா ரசிகர்கள் தந்துவிட மாட்டார்கள்.  பளபளக்கும் பப்பாளி கன்னம், குறுகுறுக்கும் திராட்சை கண்கள், செக்கச் சிவந்த கோவைப் பழ இதழ்கள், மாதுளை முத்துக்களாய் பற்கள், வெள்ளரிப் பழம் போன்ற விரல்கள், மொத்தத்தில் பறவைக் கூட்டம் மொய்க்க வரும் ஒரு பழத்தோட்டமாக அந்த நடிகை இருக்க வேண்டும். இத்தனை அம்சங்களும் இருந்தால்தான் கவர்ச்சிக் கன்னியாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி அத்தனை இடுப்பழகும், பின்னழகும் ஆண்கள் நம்ப முடியாத அளவுக்கு ஸ்தம்பிக்க வைத்த கட்டுடல் நாயகியாக விளங்கியவர் ஜோதிலட்சுமி.

“நின்றால் கோயில் சிலையழகு

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு

நடந்தால் அன்னத்தின் நடையழகு

நாடகமாடும் இடைஅழகு”

இது ‘பூவும் பொட்டும்’ படத்திற்காக கவிஞர் கண்ணதாசனின் அழகுரசம் ததும்பும் பாடல்களில் ஒன்று.

இந்த சௌந்தர்ய பூஜைக்குரிய கதாபாத்திரம் யார் என்று தெரிந்தே பாடினாரா என்று தெரியவில்லை. கோயில் சிலைகளின் அழகமைப்பான 36-24-36 அளவுகளைத் தமிழ்த்திரையில் கொண்டவர் ஜோதிலட்சுமி. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஜோதிலட்சுமிக்கு திரையில் முதல் வாய்ப்புக் கிடைத்தது கண்ணதாசனின் சொந்தப்படமான ‘வானம்பாடி’ படத்தில்தான்.

‘யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்....’ என்ற பாடல் ஒன்றிற்கு ஜோதிலட்சுமி ஆடுவார். முதல் படத்திலேயே நடனத்தில் முத்திரை பதித்திருந்தார்.

ஆனாலும் ஜோதிலட்சுமி, டி.ஆர்.ராமண்ணா இயக்கிய பெரிய இடத்துப் பெண் படத்தின் மூலம் தான் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தப் படம்தான் முதலில் வெளியானது.

அந்தப் படத்தில் ‘கட்டோடு குழல் ஆட ஆட..’ பாடலை மறக்க முடியுமா?. அதில் ஜோதிலட்சுமியின் நடனம் அற்புதமானது. அதில் ஒரு அற்புதமான நளினம் இருக்கும். சில நடன அசைவுகளுக்கும் சிலர் திணறுவார்கள். ஆனால், இவர் அநாயாசமாக ஆடுவார்.

‘அடிமைப் பெண்’ படத்தில், ‘காலத்தை வென்றவன் நீயே.....’ பாடலுக்கு தங்கப்பன் மாஸ்டரின் இடுப்பையும் மூட்டுகளையும் ஒடிக்கும் சிக்கலான மூவ்மென்டுகளை ஊதித்தள்ளி இருப்பார், ஜோதிலட்சுமி.

ஊர்த்துவ தாண்டவம் போல தலை வரை கால்களை உயர்த்தி ஆடுவார். உடன் ஆடும் சக நடிகைகள் சற்றே திணறுவார்கள். எம்.ஜி.ஆருக்கு இவர் மேல் நம்பிக்கை அதிகம். தவறாமல் சரியான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கினார்.

அடிமைப் பெண் திரைப்படத்தில் வரும் காலத்தை வென்றவன் நீ என்ற பாடலில், ஜெயலலிதாவும் ஜோதிலட்சுமியும் போட்டி போட்டு ஆடுவார்கள். ரிக்ஷாக்காரன் படத்தில் வரும் பம்பை உடுக்கை கட்டி என்ற பாடலுக்கு,  எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து அத்தனை அனாயசமாக ஆடுவார்.

‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில் கலகலப்பான பிக்பாக்கெட் பெண்ணின் பாத்திரம். இயல்பாகச் செய்திருப்பார். அதில் எம்.ஜி.ஆருடன் ‘ஓடையிலே ஒரு தாமரைப்பூ’ பாடலில் அவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பார்.

‘ரிவால்வர் ரீட்டா’வில் கோல்ட்ஃபிஷ் ஜோதிலட்சுமியாகவும், ‘கன்ஃபைட் காஞ்சனா’வில் டயமண்ட் கிளியோபாட்ராவாகவும் தோன்றி 1970 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் சினிமா ரசிகர்களின் டிலைட்டாக மாறினார்.

‘பட்டணத்தில் பூதம்’ பாடல் காட்சியான, ‘இதழை விரித்தது ரோஜா எடுத்து அனுபவி ராஜா.....’ பாடலில் எகிப்தியப் பின்னணியில் கிளியோபாட்ரா போல அற்புதமான நடனம் ஆடி, அசத்தி இருப்பார்.

அந்தக் கால இளைஞர்களின் சொப்பன சுந்தரி ஜோதிலட்சுமிதான். அவருக்காக ‘சுந்தரமூர்த்தி நாயனார்’ படத்தைப் பொறுமையாகக் கடைசிவரை பார்த்த குரூப் இருக்கிறது. அதில்கூட ‘தலையே நீ வணங்காய்…’ என்ற திருநாவுக்கரசரின் தேவாரத்திற்கு அப்பழுக்கற்ற பரதநாட்டியம் அழகாக ஆடியிருப்பார்.

ஜோதிலட்சுமி, கவர்ச்சியால் மட்டுமே ரசிகர்களைக் கட்டிப்போடவில்லை. ‘கலாட்டா கல்யாணம்’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’, ‘பெரிய இடத்துப் பெண்’ போன்ற படங்களில் நல்ல குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்தவர்.

‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் எம்.ஜி.ஆரிடம் அவரது குழந்தையின் அழகை வர்ணித்து, “ஒங்களுக்கெல்லாம் அவனைப் பார்க்க குடுத்து வைக்கலை அத்தான்..” என்று குழந்தையைப் பார்க்க உசுப்பிவிடும் நடிப்பு, ஒரு அறிமுக நடிகையின் முதிர்ச்சியான நடிப்பு.

சினிமா குடும்பம் என்பதால் சிறு வயதிலேயே நடிப்பு ஆசை வந்துவிட்டது. ஐந்து வயதிலேயே அண்ணனுடன் இணைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அதனால் படிப்பு என்றால் பாகற்காய் கசப்பாகிவிட்டதாம். ஹோலி ஏஞ்சல் பள்ளிக்கு அவரை அடிச்சி அனுப்பி வைப்பார்களாம். அழுது கொண்டே ஏழாம் வகுப்பு வரை போனவர் பாரத நாட்டியம் மற்றும் ஆரவத்துடன் கற்றுக் கொண்டாராம். காரணம் ஆடுறது பாடுறதுல அவருக்கு அதிக ஆசை. அதே மாதிரிதான் பிறகு வாழ்க்கை அமைந்தது.

மலையாளத்தில் முறைப்பொண்ணு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் கேரள அரசின் விருதைப் பெற்றார். அந்தப் படம் தெலுங்கில் உருவான போது கவர்ச்சியாகத்தான் நடிக்க வைத்தார்கள். தமிழில் எப்படி எம்.ஜி.ஆர். படங்களில் கவர்ச்சியாக நடித்தாரோ, அதேபோல தெலுங்கிலும் என்.டி.ராமாராவ் படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி உடை அணிந்து நடித்திருக்கிறார். தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்திருக்கும் அவர் தாசரி நாராயணராவ் இயக்கத்தில் ஒரு படத்தில் மட்டுமே சேலை உடை அணிந்து நடித்திருக்கிறார். மற்ற எல்லாப் படங்களிலும் கவர்ச்சி உடைதான்.

சேலை கட்டினாலும், கவர்ச்சி உடை அணிந்து நடித்தாலும் என்னைப் பொறுத்தவரை கலைதான் அது ரசிகர்களுக்காக நடிப்பதுதான் என்று சொல்லும் ஜோதிலட்சுமி, அப்படி நடிப்பததற்காக நான் கவலைப்படவில்லை. படப்பிடிப்பு தளத்தில் அத்தனை பேர் முன்னிலையில் கவர்ச்சி உடையில் நடிக்கிற போது நான் அதை கலை உணர்ச்சியோடுதான் பார்த்தேன். அதனால் வெட்கமோ, கூச்சமோ எனக்கு வந்ததில்லை.  மக்கள் ரசனைதான் முக்கியம். இயக்குனரும், நடன இயக்குனரும் என்ன விரும்புகிறார்களோ அதை நடித்துக் கொடுப்பதுதான் என் வேலை என்று கருதினேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கும் ஜோதிலட்சுமி, அவரது வருமானத்தைப் பார்த்து வீட்டில் பொறாமைப் பட்டிருக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார்.

சகோதரர் இயக்குனராக இருந்திருக்கிறார். அவர் ஒரு படம் முடிக்க அதற்காக அவர் வாங்கும் சம்பளத்தைவிட இவர் அதிக படங்களில் நடனம் ஆடி அதிக சம்பளம் பெற்றுவிடுவாராம். இதனால், வீட்டில் பொருளாதார ரீதியாக போட்டி மனப்பான்மை இருந்தது என்று தெரிவித்திருக்கும் லட்சுமி தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல படங்களில் பாடல்களுக்கு நடனம் ஆடி பிசியாக இருந்த போது ஒளிப்பதிவாளர் சாய் பிரசாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஜோதி லட்சுமி. தனது காதல் அனுபவங்கள் பற்றி கூறும் போது, நான் பனிரெண்டு வயதில் நடனம் ஆட வந்துவிட்டேன். அம்மா இல்லாமல் நான் படப்பிடிப்புக்கு சென்றது கிடையாது. அதனால், நான் யாரயும் தனியாக சந்திக்கிற வாய்ப்புகளும் அமையவில்லை. கேமிராமேன் சாய் பிரசாத்தை பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. அவரிடம் தனியாக பேசுவதற்கான சூழ்நிலையும் அமையவில்லை. ஒரு படப்பிடிப்பின் இடைவேளையில் அம்மாவுக்கு தெரியாமல் அவரை சந்தித்து பேசினேன். இருவற்றுக்குமே நல்ல புரிதல் இருந்தது.

ஒருமுறை ஆனந்த் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம். அது அம்மாவுக்கு தெரிந்ததும் பிரச்சினை ஆகிவிட்டது. அதனால், அம்மா கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ள மாட்டார் என்று இருவரும் புட்டபர்த்தி சாய்ப்பாபா கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்தோம்.

சாய் பிரசாத் சாய்பாபாவின் தீவிர பக்தர். எங்குதான் எல்லா முடிவுகளையும் எடுப்பார். அதனால் அங்கு செல்வது என்று செலவுக்கு பணம், வைர நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து பெங்களூருக்கு சென்றோம்.

சாய் பாபாவை அன்று பார்க்க முடியவில்லை. அங்கு இரவு தங்குகிற வாய்ப்பும் அமையவில்லை. அதனால், அப்படியே மும்பைக்கு சென்றோம். அங்கு அவருடைய அக்காள் கணவர் எங்களுக்கு ஆலோசனைகள் சொல்லி புரிய வைத்தி தெளிவுப்படுத்தினார்.  

பிறகு என்னை விமானம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். எங்கள் உயிரை எடுக்க எங்களோடு வந்திருந்த வைரநெக்லஸ் எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டது. எங்கள் காதலை புரிந்து கொண்ட எனது அம்மா அப்புறம் அம்மா ஒத்துக் கிட்டங்க... எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. ஜோதிமீனா பிறந்தாள்” என்று தெரிவித்திருக்கிறார், ஜோதிலட்சுமி.

ஜோதிமீனா பத்தாம் வகுப்பு படித்த போது `சிந்துநதி-பூ' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிறு வயதிலிருந்தே அம்மாவின் நடனத்தைப் பார்த்து வளர்ந்தவர், ஜோதிமீனா. அதனால், அம்மா மாதிரியே நடனம் ஆடி புகழ் பெற வேண்டும் என்றே விரும்பி இருக்கிறார்.  தேடிவந்த கதாநாயகி வாய்ப்பை மறுத்தவர், `ரகசிய போலீஸ்' படத்தில் தனது பதினேழு வயதில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.  தொடர்ந்து பல படங்களில் நடனம் ஆடியவர், தாய் ஜோதிலட்சுமியைப் போலவே ஐவரும் காதலில் விழுந்தார்.

முதலில் இரண்டு வீடுகளிலும் எதிர்ப்பும், பிறகு சம்மதமும் கிடைத்ததாம். அலைபாயுதே பாணியில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ஜோதிமீனா, குழந்தை பிறந்ததும் மகனுக்காக நடிப்பதை விட்டுவிட்டாராம்.  

ஜோதிலட்சுமிக்கு பிடித்த கவர்ச்சி நடிகை யார் என்றால் அவரது சகோதரி ஜெயமாலினிதான். எத்தனை பேர் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தாலும் ஜெயமாலினியின் நடனம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கும் ஜோதிலட்சுமி, நடனம் ஆட வந்த ஜெயமாலினியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். அதற்கு தொழில் போட்டிதான் காரணமா என்றால் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் அவர், நான் தமிழ் பொண்ணு. ஆனால், தெலுங்கு பொண்ணு என்று நினைக்கும் அளவுக்கு அதிக தெலுங்கு படங்களில்தான் ஆடினேன். ஜெயமாலினி தமிழில்தான் அதிகம் நடித்தார். எங்களுக்குள் தொழில் போட்டி எதுவும் கிடையாது. ஆனால், பேசிக் கொள்ள மாட்டோம். ஒரே படத்தில் இருவரும் ஆடிய போதும் கூட பேசிக் கொண்டது கிடையாது என்று தெரிவித்திருக்கும் ஜோதிலட்சுமி,  ரசிகர்களை கவர்வதில் போட்டி இருந்திருக்கிறது என்று கூறி இருக்கிறார்.   

இளம் வயதில் மட்டுமல்லாமல் பாலா இயக்கிய சேது படத்தில் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா. வர்றியா’ என்று முதுமையைத் தொட்ட பிறகும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கவர்ந்த ஜோதிலட்சுமி, தமிழில் அந்த ஒரு நிமிடத்தையும், ஹிந்தியில் ஜானி மேரா யாரையும், தெலுங்கில் டொங்கா ராமுடு, பார்ட்டி, காந்தர்வ்ய கன்யாவையும் தனக்கு பிடித்த மறக்க முடியாத படங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

தமிழில் நாகேஷ், தெலுங்கில் அல்லு ராமலிங்கையாவுடன் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கும் ஜோதி லட்சுமி, காமெடியிலும்,  குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தது மறக்க முடியாதவை என்கிறார்.

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஆண் ரசிகர்கள் கவர்ந்த ஜோதிலட்சுமி, சீரியலில் பெண் ரசிகைகளின் மனதில் இடம் பிடித்தார். வள்ளி சீரியலில் அவர் ஏற்றிருந்த பாத்திரம் பெண் ரசிகைகளால் பெரிதும் பேசப்பட்டது.

இளம் நடிகர்களில் அல்லு அர்ஜுனின் நடனம் ஜோதிலட்சுமிக்கு ரோம்பப் பிடிக்குமாம். அவரது நடனத்துக்கு நான் பெரிய ரசிகை என்று தெரிவித்திருக்கும் ஜோதிலட்சுமி, அவருடன் ஒரு படத்தில் போட்டி போட்டு நடனம் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.

சின்னித்திரை சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த போது ஒருநாள் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த போது உடல்நிலை சரியில்லாமல் போனதாம். மகள் ஜோதிமீனாவின் கணவர் டாக்டர் என்பதால் அவர் முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அவருக்கு லுக்கிமியா வகை கேன்சர் இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதைக் கேட்டதும் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சி. டெஸ்ட் எடுத்து அமெரிக்காவுக்கு சோதனைக்கு அனுப்பினார்கள். ரிசல்ட் வருவதற்குள் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி தனது அறுபத்தி எட்டாம் வயதில் காலமானார்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த நோயால் கடைசி நாட்களில் திடீர் என கண்பார்வையை இழந்திருக்கிறார்.

இறந்தும் இறவா புகழ் பெற்றவர்களாக கலைஞர்கள் இருக்கிறார்கள். ரசிகர்களின் மனதில் அந்த அளவுக்கு அவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் ஜோதிலட்சுமியும் இடம் பெற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

 தொகுப்பு : ஜி.பாலன்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக