நடிப்பாற்றலின் திறனால், உலகமெங்கும் வியாபித்திருக்கும் தமிழரின் மனங்களில் வாழும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா
மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக
விழுப்புரத்தில் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். அவரது இயற்பெயர்
கணேசமூர்த்தி.
சிவாஜி கணேசனின் அப்பா சின்னய்யா மன்றாயருக்கு பூர்வீகம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். சிவாஜியின் அம்மா
ராஜாமணியின் ஊர் விழுப்புரம்.
சிவாஜியின் அப்பா சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்
ராணுவம் சென்ற ரயிலுக்கு வெடிகுண்டு வைத்து கைதான அன்று சிவாஜி கணேசன் பிறந்தார்.
சிவாஜியின் அப்பாவுக்கு ஏழு ஆண்டுகள் வெள்ளையர் அரசு ஜெயில் தண்டனை வழங்கியது.
கணவர் சிறைக்கு சென்றதும், அவரை நினைத்து
கவலைப்பட்டு இறந்த அப்பாவின் மரணமும், ராஜாமணி அம்மாளுக்கு வேதனையை அதிகரித்தது.
இதனால், விழுபுரத்தில் இருந்து திருச்சி அருகே, பொன்மலைக்குப்
பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் இருந்த வீட்டுக்கு மகன்கள் திருஞான சம்பந்த
மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன்,
கைக்குழந்தை சிவாஜி கணேசன் ஆகியாரை அழைத்துக் கொண்டு சென்றார்.
அங்கு கறவை மாடு வாங்கி, பால் விற்று பிள்ளைகளை வளர்த்தார், ராஜாமணி அம்மாள். வீட்டுக்கு
அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு பிள்ளைகளை சேர்த்து படிக்க
வைத்தார். சிவாஜிக்கு நான்கு வயது இருக்கும் போது அவரையும் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
சிவாஜியின் அப்பா சின்னய்யா மன்றாயரின் நன்னடத்தை
காரணமாக, ஏழு ஆண்டு தண்டனை நான்கு ஆண்டு தண்டனையாகக்
குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.
விடுத்தலை ஆனதும் மகன் சிவாஜியை பார்க்க ஓட்டோடி
வந்தார். வீட்டில் மகன் இல்லை என்று தெரிந்ததும் அவர் விளையாடும் உடையார்
தெருவுக்கு சென்று அவரை அடையாளம் கண்டு தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
பள்ளியில் படிக்கும் போது பாடுவதிலும்
நடிப்பதிலும் சிவாஜிக்கு ஆர்வம் இருந்துள்ளது. நாடகங்களை பார்த்துவிட்டு அதே போல
நடித்துக் காட்டுவார். ஒருமுறை, “வீரபாண்டிய கட்டபொம்மன்”
நாடகத்தைப் பார்க்க அப்பாவுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன
வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும்
சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி
விடுவார்கள்.
``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார
சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த
சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார். அதுதான் சிவாஜி முதல் முறையாக
நடித்த நாடகம்.
அந்த நாடகத்தில் நடித்தது முதல் ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்"
என்ற எண்ணம், சிவாஜியின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
இந்த நேரத்தில், யதார்த்தம்
பொன்னுசாமிப் பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற
நாடகக் கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. இந்த நாடகக்
குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார்.
நாடகக் குழுவினர், திருச்சியில்
நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல
ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சென்ற சிவாஜி, ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா- அம்மா இல்லாத அனாதை.
நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறி இருக்கிறார்.
சிவாஜியை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். அந்த
பாடல் நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே சிவாஜியை கம்பெனியில்
சேர்த்துக் கொண்டார்கள்.
அப்போது, அந்தக் கம்பெனியில் திருச்சி சங்கிலியாண்டபுரம்
காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர் சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர்.
நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு
சென்று முகாமிட்டது.
அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன
பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி
கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர்.
அங்கு ``ராமாயணம்" நாடகத்தில் சீதை
வேஷம் போட்ட சிவாஜி, ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்"
என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி
நடித்தார். முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை
கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர்
முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்"
என்று பாராட்டினார்.
நாட்கள் ஆக ஆக, புதுப்புது
வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர்,
பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை
மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார்.
ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு
கிடைத்தது. இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்த
போதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார்.
பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும்,
அவர் ஏற்று நடித்தார். அந்தக் காலத்தில், நாடகத்தில்
நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே
அடைந்து கிடக்க வேண்டும்.
``ஊருக்கு வா"என்று பெற்றோர் கடிதம்
எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்
பிரித்து படித்துப் பார்த்துவிட்டு, கொடுக்கக் கூடியதாக
இருந்தால் மட்டும் கொடுப்பார்கள்.
ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக்
கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு
வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா?
எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி
விசாரித்தார். உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று
கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.
ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி
கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி
தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு
அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக
முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு
நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
5 ஆண்டுகளுக்குப்பின் பெற்றோரை சந்தித்த சிவாஜி,
அதன்பிறகு, எம்.ஆர்.ராதாவுடன் ``பதி பக்தி" நாடகத்தில்
சரஸ்வதி என்ற பெண் வேடத்தில் நடித்தார்.
நாடகக் குழுவினர் கோவைக்கு சென்ற போது, அங்கே உள்ள ஸ்டூடியோவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ``சந்திரஹரி" என்ற நகைச்சுவை திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
அதில் என்.எஸ்.கே.யின் மகனாக காமெடி வேடத்தில் நடிப்பதற்கு ஒரு பையன்
தேவைப்பட்டான். படக்கம்பெனியைப் சேர்ந்தவர்கள், சிவாஜியையும்,
காக்கா ராதாகிருஷ்ணனையும் அழைத்துச் சென்றனர். இந்த இருவரில்
அவர்கள் தேர்வு செய்தது, காக்கா ராதாகிருஷ்ணனைத்தான்.
சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று
முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.
தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி
நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை
அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப் போனதும், சிவாஜி முதலில்
பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான்.
சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக்
கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர்.
அவர்களில் 2 பேர் இறந்து போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு
பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்
அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். அந்த தீபாவளியை பெற்றோருடனும்,
அண்ணன், தம்பி, தங்கையுடனும்
கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.
எம்.ஆர்.ராதா``சரஸ்வதி
கான சபா" என்ற பெயரில் நாடகக் கம்பெனியைத் தொடங்கி ``லட்சுமி
காந்தன்", ``விமலா அல்லது விதவையின் கண்ணீர்" ஆகிய
நாடகங்களை நடத்தினார். திராவிட கழகத்தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரின் வீட்டுக்குப்
பக்கத்தில்தான் ராதாவின் நாடகக் கம்பெனி இருந்தது. பெரியார் வீட்டுக்கு பேரறிஞர்
அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் அடிக்கடி வருவார்கள்.
அவர்களுடன் சிவாஜிக்கு அறிமுகம் ஏற்பட்டது. பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு
கொண்டார்.
சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த ``சரஸ்வதிகான சபா" கொல்லங்கோட்டில் முகாமிட்டிருந்தபோது,
குடும்பத்தை நடத்துவதற்கு பெற்றோர் படும் கஷ்டத்தை கேள்விப்பட்ட
சிவாஜி, ஏதாவது வேலைக்குப் போனால், அம்மாவுக்கு உதவியாக
இருக்குமே என்று நினைத்தார்.
``திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்"
என்ற பஸ் கம்பெனியில் மெக்கானிக் வேலைக்கு சேர்ந்தார். ஆனாலும், மனம் நாடகத்தைச்
சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அப்போது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கிருஷ்ணன்
சிறை சென்றிருந்தார். என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் இருந்து வெளியே வந்து
நாடகம் நடத்திய கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்தார் சிவாஜி கணேசன்
பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்
கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும்
அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற
பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும்,
மற்றவர்களும் தங்கினார்கள்.
சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை
நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா
எழுதியிருந்தார். இந்த நாடகத்தில், சிவாஜியாக எம்.ஜி.ஆரும்,
காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு
முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது.
ஆனால், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்க
விரும்பவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி மூலமாக
அண்ணாவிடம் தெரிவித்தார், எம்.ஜி.ஆர்.
இதனால், ``திராவிட நாடு"
அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜியை அழைத்து, ``கணேசா! என்
நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்காணும் என்று கூறிய அண்ணா, ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகத்தில் சிவாஜியாக நடிக்க வைத்தார்.
3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார்.
``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே
நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.
அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக நடித்தானே,
அவன் யார்?" என்று கேட்டார்.
சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப்
பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.
``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று
முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார்
வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று
முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.
பிறகு கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவில் மனோகரா மனோகரனின்
தாயார் பத்மாவதியாக நடித்த சிவாஜி, அண்ணாவின் உதவியால் சக்தி நாடக சபாவுக்கு சென்று
``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக
நடித்தார்.
வேலூரில் நாடக் குழு முகாமிட்ட போது ``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், நூர்ஜகான
நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த சமயத்தில், தேவி நாடக
சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர்.
அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு
மிகவும் பிடித்துப் போய்விட்டது.
``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும்.
அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று விரும்பினார். ஏவி.எம்.
நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்களை விநியோகம் செய்த பி.ஏ.பெருமாள், ஏவி.மெய்யப்ப செட்டியாரோடு இணைந்து அந்த படத்தைத் தயாரிக்க முடிவு
செய்தார். ஆனால் மெய்யப்ப செட்டியாரோ கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாகப் போட்டு அந்தப் படத்தை எடுக்கலாமே
என்றார்.
“டிராமாவில் நடிப்பது என்பது வேறு. சினிமாவில்
நடிப்பது என்பது வேறு. இதுவரை கணேசன் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை.
அப்படியிருக்கும்போது முதன் முறையாக மெயின் ரோலில் அந்தப் பையனை நடிக்க
வைத்துவிட்டு அந்தப் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது? இந்தப் படம் நீங்கள் என்னோடு சேர்ந்து எடுக்கின்ற முதல் படம்.
ஆகவே ரிஸ்க் எடுக்க வேண்டாம்…” என்றார்
ஏவி.எம்.
ஆனால், சிவாஜிதான் நடிக்க வேண்டும்
என்று பிடிவாதமாக இருந்தார், பெருமாள் முதலியார். அரை மனதுடன் ஒப்புக் கொண்ட ஏவி
எம் மெய்யப்ப செட்டியார், பட வேலைகளை தொடங்கினார்.
‘பராசக்தி’
படத்திற்கு வசனம் எழுத அந்த நாடகத்தை எழுதிய பாலசுந்தரம்தான் முதலில்
ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு அவரை
மாற்றி விட்டு திருவாரூர் தங்கராஜை ஒப்பந்தம் செய்தனர். பின்னர் சில காரணங்களால்
அவரும் மாற்றப்பட… அதற்குப் பிறகு அந்த
இடத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி வந்தார்.
மேக்கப் டெஸ்டுக்காகத் திருச்சியிலிருந்து
சென்னைக்கு விமானத்தில் சிவாஜியை அழைத்து வந்து திரைப்படத்தில் வரும் ‘சக்ஸஸ்!’
என்ற வசனத்தைப் பேச சொல்லி பார்த்தனர்.
‘சக்ஸஸ்’ என்பது ‘சத்தத்’ என்று கேட்பதாகப்
பலரும் குறை சொன்னார்கள். அடுத்து இன்னொரு காட்சியையும் அவரை வைத்துப்
படமாக்கினார்கள். அந்த காட்சியை போட்டுப் பார்த்தபோது அப்போது ஏவி. எம்.மில்
சவுண்ட் இஞ்சினியராக இருந்த ஜீவா என்பவர் சிவாஜியை தொடர்ந்து நடிக்க வைக்க தனது
முழு எதிர்ப்பையும் தெரிவித்தார்.
சிவாஜி ஒல்லியாக இருப்பதும் அவரது பல்வரிசை
சரியாக இல்லாததும் சிறு குறைகளாகத் தென்பட்டாலும், அவருடைய
நடிப்புத் திறனுக்கு முன்னால் இதெல்லாம் மிகச் சிறிய குறைகள் என்றே கிருஷ்ணன் – பஞ்சு ஆகிய இருவரும் எண்ணினார்கள்.
பெருமாள் முதலியாருக்கோ சிவாஜியின் நடிப்பு பூரண திருப்தியைத் தந்தது.
டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் சிவாஜிக்கு
முழு ஆதரவாக இருப்பதைத் தெரிந்து கொண்ட
ஏவி. மெய்யப்ப செட்டியார் “முதலில் ஒரு ஐயாயிரம் அடி எடுத்துப் பார்ப்போம்.
அதற்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்…” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்டமாக ஆயிரம்
அடிவரை எடுத்து படத்தைப் போட்டுப்
பார்த்தபோது படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் மாமனாரே, “சிவாஜி கணேசனை மாற்றிவிட்டு வேறு ஒரு நடிகரைப் போட்டு
எடுத்தால்தான் படம் படமாக இருக்கும். என்றார்.
இப்படி பல எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில் பராசக்தி
படத்தின் படப்பிடிப்பு நிற்கவில்லை. படம் எட்டாயிரம் அடி வளர்ந்த
போது அதை மீண்டும் எல்லோரும் போட்டுப் பார்த்தார்கள்.
“இந்தப் படத்தில் கண்ணை மூடிக் கொண்டு
வசனங்களைக் கேட்டு ரசிக்கலாம். ஆனால் படத்தையோ, இந்த
புதுமுகங்களையோ கண்ணால் பார்க்க முடியவில்லை” என்றார் , ஏவி.
மெய்யப்ப செட்டியார்.
அப்போது ஏவி.எம்.மில் பணியாற்றியவர்களில்
சிவாஜியை மாற்றிவிட்டு வேறு கதாநாயகனைப் போட்டு எடுத்தால்தான் ‘பராசக்தி’ படம்
மக்கள் மத்தியில் எடுபடும் என்று யோசனை
சொல்லாதவர்கள் மிகச் சிலரே. ஆனால், அத்தனை எதிர்ப்புகள் வந்த
போதிலும் பெருமாள் முதலியார் மட்டும் அசையாமல் சிவாஜி கணேசன்தான் ‘பராசக்தி’
படத்தின் நாயகன் என்று துணிந்து நின்றார்.
பலரது எதிர்ப்புகளையும் மீறி பத்தாயிரம் அடி வரை
எடுத்து விட்டு படத்தைப் போட்டு பார்த்தபோது மெய்யப்பச் செட்டியாருக்கு சிவாஜி
மீது முதல்முறையாக நம்பிக்கை ஏற்பட்டது. சிவாஜியின் நடிப்பில் முன்னேற்றம்
இருப்பது தெரிந்ததும், ஆரம்பத்தில் எந்தெந்த
காட்சிகளில் சிவாஜி சுமாராக நடித்திருந்தாரோ அந்தக் காட்சிகளை எல்லாம் மீண்டும்
படமாக்கச் சொன்னார்
ஏவி.எம். ஸ்டுடியோவின் எல்லா அரங்குகளிலும்
‘பராசக்தி’ படத்துக்காக போடப்பட்ட செட்டுகளை எல்லாம் திரும்பவும் போட்டு பதினைந்து
நாட்கள் தொடர்ந்து சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார்கள். அதைத்
தொடர்ந்து 1952 தீபாவளியன்று வெளியான ‘பராசக்தி’ வசூலில் புதியதொரு சாதனையைப் படைத்தது
என்றால்.., அதிலே நாயகனாக நடித்த சிவாஜி உலகம் போற்றுகின்ற ஒரு நடிகராக உயர்ந்தார்.
பராசக்தி படத்தை பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன்,
சிவாஜி கணேசனை மனதார பாராட்டியதுடன், அடுத்து தனது பணம் படத்தில் சிவாஜியை நாயகன்
ஆக்கி அவருக்கு ஜோடியாக பதிமினியை நடிக்க வைத்தார்.
``பணம்" படத்தில் நடித்துக் கொண்டிருந்த
போதே, அக்காள் மகள் கமலாவை 1952 ஆம் ஆண்டு மே மாதம் 1-ந்
தேதி மணந்து கொண்டார், சிவாஜி. சுவாமிமலையில் நடைபெற்ற அந்த திருமண விழாவில் பெருமாள்
முதலியார், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,
கவிஞர் கண்ணதாசன், ராம.அரங்கண்ணல், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
அவரின் கல்யாணச் செலவு அன்று 500 ரூபாயாம். இந்த தகவலை சிவாஜியே கூறி இருக்கிறார்.
புராண படங்கள், மன்னர் கால படங்கள், சமூக
படங்கள், விடுதலை வீர்களின் படங்கள் என எல்லாவிதமான கதாப்பத்திரங்களிலும் நடித்து
அந்த பாத்திரமாகவே தெரிந்தவர் சிவாஜி கணேசன்.
'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான
முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
சின்சியாரிட்டி, ஒழுங்கு,
நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால்,
ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு
நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை.
சிவாஜி புரொடக் ஷன்ஸ் பட நிறுவனத்தை தொடங்கி
படங்கள் தயாரித்தவர், 1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது
ஆசைப்படியே ஒரு தியேட்டரை வாங்கி 'சாந்தி' என பெயர் சூட்டி அப்போதைய முதல்வர் காமராஜ்
கையால் திறக்க வைத்தார்.
தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த
நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை
வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்தார். தேசத்தந்தை காந்திக்கு
சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா
காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, அம்பேத்காருக்கு
சிலை, முத்துராமலிங்க தேவருக்கு நேசமணிக்கு சிலை, காமராஜருக்கு சிலை என
நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி.
தமிழில் 270, தெலுங்கில் 9, ஹிந்தியில் 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள் என சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301.
சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே
படம் கூண்டுக்கிளி. தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை
அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான்
ஆகிய நாடுகளுக்கு 1962-ல் இரண்டு மாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார் சிவாஜி. அப்போது
நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
பிரஞ்சு அரசியின் உயரிய விருதான செவாலியே
விருது, ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கி
கௌரவிக்கப்பட்ட சிவாஜி, இந்திய அரசியின் தாதா சாகிப் பால்கே விருது, பத்மஸ்ரீ,
பத்மபூஷன் விருதுகள் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, தமிழக அரசின்
எம்.ஜி.ஆர். விருது, ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது பெற்றுள்ள அவர், தேவர்மகன்,
வியட்நாம் வீடு ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும்
பெற்றிருக்கிறார்.
சிவாஜியின் தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை
பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு
கொண்டிருந்த சிவாஜி, 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து
செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு 'தமிழக முன்னேற்ற முண்ணனி' என்ற புதிய
கட்சியை ஆரம்பித்து, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிஅம்மாளின் தலைமையிலான அதிமுகவுடன்
இணைந்து தேர்தலை சந்தித்தார்.
அதன் பிறகு முன்னாள் பிரதமர் வி.பி.சிங், தனது ஜனதா தளம் கட்சியின் தலைவராகப் பணியாற்றும்படி கேட்டுக்
கொண்டதால், கொஞ்ச நாள் ஜனதா தளத்தில் இருந்தவர், பிறகு, அந்தக் கட்சியை விட்டு
விலகி, அரசியலில் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, அனுபவங்களாகக்
கற்றுக் கொண்ட பாடங்களை தனது கலையுலக நண்பர்களுக்குத் தெரிவித்தார்.
தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக
இறுதிவரை வாழ்ந்த சிவாஜி கணேசன், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி தனது 74வது வயதில் காலமானார்.
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக