1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதுரை
சோழவந்தான் அருகே உள்ள தென்கரை நிலச்சுவான்தார் ராமகிருஷ்ணனின் மூன்றாவது மனைவி
லட்சுமிக்கு பிறந்தவர்தான், மகாலிங்கம். தென்கரை ராமகிருஷ்ண மகாலிங்கம் என்பதன்
சுருக்கமே டி.ஆர். மகாலிங்கம்.
சிறுவயதில் வேதபாட சாலைக்கு அனுப்பப்பட்ட
மகாலிங்கத்துக்கு, பாடம் மனதில் பதியவே இல்லை.
மனசு முழுக்க பாட்டுதான் பரவிக்கிடந்தது. திண்ணை பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு
வரை ஒருவழியாய் நகர்ந்தபின், செல்லூர் சேஷ அய்யங்கார்
கோஷ்டியுடன் பாட்டோடு இணைந்த மகாலிங்கம், பஜனை மடங்களிலும்,
கோயில்களிலும் தன் உரத்த குரலால் பாடி, உள்ளூர்வாசிகளை
ஆனந்தம் அடையச் செய்தார்.
வீட்டில் பள்ளிக் கூடம் அனுப்ப எவ்வளவோ
ஆசைப்பட்டார்கள். மகாலிங்கத்துக்கோ பாட்டு பாடவும் நடிக்கவுமே ஆசையாக இருந்தது.
பள்ளிக்கு போக மறுத்து எங்கோ ஓடிப்போன மகாலிங்கத்தை அவரது விருப்பப்படி
வாய்ப்பாட்டு வகுப்பில் சேர்த்துவிட்டார் அப்பா.
இசை வசமானதும் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய
ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் மகாலிங்கம் சேர்ந்தார். பத்து வயதில்
பலர் பாராட்டும் படி அவரது நடிப்பு அமைந்தது.
அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக
இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அந்த காலத்துப்
பாடகர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, எஸ்.சி.கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், என பலர் தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு
பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. மகாலிங்கமும் உரத்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
சிறு வயதிலேயே கடுமையான பயிற்சி மூலம் உச்ச
ஸ்தாயியில் பாடும் வல்லமை பெற்ற மகாலிங்கத்துக்கு, எஸ்.ஜி.
கிட்டப்பா என்றால் உயிர். எஸ்.ஜி. கிட்டப்பா தனது 28-வது வயதிலேயே காலமானதால், கிட்டப்பாவின்
பாணியில் மிகச் சிறப்பாகப் பாடிய மகாலிங்கம், அவரது இசை
வாரிசு என்ற பெயரைப் பெற்றார்.
12 வயதில், ஒரு நாடகத்தில் பாடி நடித்தபோது,
மகாலிங்கத்தின் பாட்டில் மனம் லயித்த, அப்போதைய
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சத்யமூர்த்தி, மகாலிங்கத்திற்கு
தங்க மோதிரம் பரிசளித்தார். 13 வயதில் ஒரு நாடகத்தில் நடித்த போது அவரின் பாட்டில்
மெய்சிலிர்த்துப் போனார் தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார். அந்த நேரத்தில்
சினிமா தயாரிப்பில் இறங்கிய ஏ.வி. மெய்யப்பச் செட்டியாருக்கு, அழகான தோற்றமும் இனிய குரலும் நடிப்புத் திறனும் கொண்ட சிறுவன்
மகாலிங்கத்தைப் பிடித்துப்போய்விட்டது.
மகாலிங்கத்தை தன் ஸ்டுடியோவுக்கே அழைத்து சென்று
நந்தகுமார் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். எஸ். வி. வெங்கட்ராமன் இசை அமைத்த 'யுக தர்ம முறையே' என்ற பாடலைப் பாடியபடியே
மக்களிடம் திரையில் அறிமுகமானார் மகாலிங்கம்.
மகாலிங்கத்தின் முதல் படமான ‘நந்தகுமார்’
1937-ல் வெளிவந்தது. அதில் சிறு வயது கிருஷ்ணனாக நடித்திருந்தார். தமிழ், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட நந்தகுமார் படத்தின்
பாடல்கள் பிரபலமாயின. அதன் பின்னர் பிரகலாதா, சதிமுரளி,
வாமன அவதாரம், பரசுராமர் போன்ற படங்களில் பாடி
நடித்துப் புகழ் பெற்றார்.
திரைப்படங்களில் நடித்தாலும் நாடகங்களிலும்
தொடர்ந்து நடித்தார். வள்ளி திருமணம், பவளக்கொடி போன்ற நாடகங்கள்
இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
மீண்டும் ஏவி.எம்.மெய்யப்ப செட்டியாரின் ‘ஸ்ரீ
வள்ளி’ என்ற படத்தில் முருகனாக நடித்தார். 1945-ல் வெளிவந்த அந்தப் படம் 52
வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்குக்
கிடைத்த முதல் பெரிய வெற்றி இது.
அடுத்து ஏவிஎம் தயாரிப்பில் நடித்த நாம் இருவர் படமும்
அவருக்கு பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே.
தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில்
தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததார். அவர் திரையில் ஏற்படுத்திய வெற்றிடத்தை
நிரப்பினார் டி.ஆர். மகாலிங்கம்.
1948–ம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாக
வந்த ‘‘ஆதித்தன் கனவு’’, 1949–ம் ஆண்டில் ‘‘பவளக்கொடி’’,
‘‘மாயாவதி’’ மற்றும் ‘‘இன்பவல்லி’’ போன்ற படங்கள் மகாலிங்கத்துக்கு
எதிர்பார்த்த வெற்றியை தேடித்தரவில்லை.
தவிர மகாலிங்கம் நடித்துக் கொண்டிருந்த
சிலபடங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நின்றன. மகாலிங்கமும், பி.பானுமதியும் நடித்த ‘‘புலேந்திரன்’’ திரைப்படம்
தயாரிக்கப்பட்டு விளம் பரங்கள் வெளியிடப்பட்டு, பின்
கைவிடப்பட்டது.
‘‘ஆதித்தன் கனவு’’ திரைப்படத்தில்
மகாலிங்கத்தின் ஜோடியாக நடித்தவர் அஞ்சலிதேவி. அவரை மகாலிங்கத்தின் ஜோடியாகக்
கொண்டு ‘‘தூக்குத்தூக்கி’’ என்ற படமும் ‘‘மங்கையர்க் கரசி’’ என்ற படமும்
தயாரிக்கப்பட்டு பின் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டன.
இந்த சூழ்நிலையில்தான் மகாலிங்கத்தின் மனதில் சொந்த படம் எடுப்பது என்கிற எண்ணம் தோன்றியது.
‘‘நாம் இருவர்’’ திரைப்படத்தில் மகாலிங்கம் ஏற்ற
பாத்திரத்தின் பெயர் ‘சுகுமார்’. அதுவே தனக்கு அதிர்ஷ்டம் தந்த பெயர் என்று கருதி
மகாலிங்கம் தனது மகனுக்கும் சுகுமார் என்று பெயரிட்டிருந்தார். தனது திரைப்பட
நிறுவனத்திற்கும் ‘ஸ்ரீ சுகுமார் புரடெக்ஷன்ஸ்’ என்று பெயரிட்டார்.
இந்தா நிறுவனத்தின் சார்பாக ‘மச்சரேகை’ என்ற
திரைப்படம் 1950–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் மகாலிங்கம்
சர்வாதிகாரியாகவும், மச்சராஜனாகவும் இரட்டை
வேடத்தில் நடித்தார். கதாநாயகி
எஸ்.வரலட்சுமி நடித்தார். சி.ஆர்.சுப்பாராமன் இசையமைக்க பி.புல்லையா இயக்கிய அந்த படம்
தோல்வியடைந்தது.
மகாலிங்கம் நடித்த பாலாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில்
‘‘லைலா–மஜ்னு’’ வெளிவந்து தோல்வி எண்ணிக்கையைக் கூட்டியது. எனினும் சிட்டாடலின்
‘‘இதயகீதம்’’ ஓரளவு ஓடி மகாலிங்கத்திற்கு ஆறுதல் தந்தது.
எனினும் தன் சொந்தப்பட முயற்சியை கைவிடாத
மகாலிங்கம் 1951–ம் ஆண்டில் ‘‘மோகனசுந்தரம்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். அடுத்து எடுத்த படம் ‘‘சின்னதுரை’’. 1952–ம்
ஆண்டில் வெளிவந்தது. இந்தப் படத்தை மகாலிங்கமே இயக்கியிருந்தார். இந்தப் படங்களில்
ஜோடியாக நடித்தவர் எஸ்.வரலட்சுமி. அதே ஆண்டில் ஸ்ரீவள்ளி புரடக்ஷன்ஸ் மகாலிங்கம், மாதுரிதேவி மற்றும் வரலட்சுமியைக் கொண்டு பி.வி.கிருஷ்ணன்
இயக்கத்தில் ‘‘வேலைக்காரன்’’ என்ற படத்தை எடுத்து வெளியிட்டது. இப்படமும் பெரிய
வெற்றியை பெறவில்லை.
எப்படியும் வெற்றித் தயாரிப்பாளராக வேண்டும்
என்ற உணர்வு மகாலிங்கத்துக்கு இருந்து கொண்டேயிருந்தது. 1954–ம் ஆண்டில்
‘‘விளையாட்டு பொம்மை’’ என்ற திரைப்படம் தயாரித்தார். இந்த படத்தில் முந்தைய அவரது
படங்களின் தயாரிப்பிலிருந்து சில மாறுதல்கள் செய்யப்பட்டன. குறிப்பாக இப்படத்தில்
மகாலிங்கத்தின் ஜோடியாக குமாரி கமலா நடித்தார். இயக்கம் டி.ஆர்.ரகுநாத்.
வழக்கம்போல் படத்தில் மகாலிங்கம் பாடிய, ‘தீர்த்தக் கரையினிலே’, ‘மோகத்தைக் கொன்றுவிடு’, ‘விதிக்கு மனிதன்
விளையாட்டு பொம்மை’ போன்ற சிறப்பான பாடல்களை மகாலிங்கம் பாடியிருந்தும் படம்
தோல்வியுற்றது.
அடுத்து ‘‘தெருப்பாடகன்’’ என்ற படத்தை
தயாரித்தார். படம் முடிக்கமுடியாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தப் படத்தில்
நடித்த ஒரு பெரிய நடிகர் கால்ஷீட் ஒழுங்காக கொடுக்காததால் வெறுப்படைந்த மகாலிங்கம்
தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு கம்பெனியை மூடிய மகாலிங்கம் தனது மயிலாப்பூர்
மாளிகையையும் இழக்க வேண்டிவந்தது.
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டார். எல்லாவற்றையும் இழந்தது மகாலிங்கம் என்ற
தயாரிப்பாளர்தான்.
பணத்தையும் மதிப்பையும் இழந்த காலத்தில்
சினிமாவில் அவரது ஆதரவோடு வளர்ந்த பலர் அவரைக் கைவிட்டனர். அந்தக் கோபத்தில்தான், ‘சென்னையும் வேண்டாம், திரையுலகமும்
வேண்டாம்’ என்று தன் சொந்த ஊருக்கே திரும்பினார் மகாலிங்கம்.
ஊருக்கு சென்றாலும் நாடகங்களில் நடிப்பதை அவர்
நிறுத்தவில்லை. மாதம் 25 நாடகங்களுக்கு மேல் நடித்து, தென்மாவட்டங்களில் தன் குரல் ஒலிக்காத மேடையே இல்லை என்கிற
அளவுக்கு நாடகத் துறையில் மீண்டும் உச்சத்தை எட்டினார்.
புராணப் படங்களிலிருந்து விலகி, தமிழ்த் திரையுலகம் சமூகப் படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த
காலகட்டம் அது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்கள் கோலோச்ச
ஆரம்பித்திருந்தனர். பாடல்களை விட வசனங்களுக்கே முக்கியம் என்ற நிலை வந்ததால்,
பாடக நடிகர்களின் தேவையும் குறைந்துபோனது.
அதைப் பற்றிய கவலையின்றி நாடகத்தில் தீவிரமாக
ஈடுபட்டிருந்த மகாலிங்கத்தை, கண்ணதாசன் துணிச்சலாக தன்னுடைய
‘மாலையிட்ட மங்கை’ படத்துக்குக் கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார். மதுரையிலேயே
தங்கிவிட்ட மகாலிங்கத்தை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தவர் கண்ணதாசன்தான்.
17 பாடல்களைக் கொண்ட அந்தப் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்தைத் தாண்டி வேறொருவரை கண்ணதாசனால்
சிந்திக்கக்கூட முடியவில்லை. உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை
மென்மையான குரலில் 'நானன்றி யார் வருவார்?' பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு
விருந்தாக்கிக் காட்டினார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அதில் 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.
1958-ல் வெளியான 'மாலையிட்ட
மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம்
அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் மகாலிங்கம். படத்தின் வெற்றிக்கு முக்கியக்
காரணமாக இருந்த டி.ஆர். மகாலிங்கத்துக்குப் புத்தம் புது காரை பரிசளித்தார் கவிஞர்
கண்ணதாசன்.
1959-ம் ஆண்டு அமுதவல்லியில் விஸ்வநாதன்
ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான இசையில் பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை
ரசிக்காதவர்கள் யார்?
1960-ம் ஆண்டு 'ஆடவந்த
தெய்வம்' படத்தில் 'மழை கொட்டு கொட்டு
கொட்டுது பாரு இங்கே' என்கிற பாடலில் சாதாரண மக்களுக்கும்,
சங்கீதம் பரிமாறியிருப்பார். 'ரத்தினபுரி
இளவரசி'யில், காதலுக்கு நாலு கண்கள்,
கவலையில்லாத மனிதனில், நான் தெய்வமா? இல்லை நீ தெய்வமா? என மகாலிங்கத்தின் பாடல்கள் புகழ்
பரப்பின
1965-ல் A.P. நாகராஜனின் 'திருவிளையாடல்' டி.ஆர். மகாலிங்கத்தின் பெயரைத்
திரும்பிய திசையெல்லாம் மீண்டும் ஒலிக்கச் செய்தது. ‘இசைத் தமிழ் நீ செய்த
அருஞ்சாதனை’ பாடல்...
மகாலிங்கத்தின் குரலுக்கு சினிமாத் துறையில்
நிரந்தர மதிப்பு இருந்தது. வயதான பிறகும் பின்னணி பாட நிறைய வாய்ப்புகள் வந்தன.
ஆனால், பாட மறுத்து மீண்டும் மதுரைக்கு சென்றுவிட்டார்.
நாடகத் துறையில் இருந்தபடியே இடையிடையே, பாடவும் நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்களில் மட்டுமே
நடித்தார். திருவிளையாடல், அகத்தியர், திருநீலகண்டர்,
ராஜராஜசோழன் ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.
டி.ஆர். மகாலிங்கம் எம்.ஜி.ஆருக்கும் நெருக்கம், கருணாநிதிக்கும் நெருக்கம். கண்ணதாசன் வழியாக காமராஜருக்கும்
நெருக்கம். மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்ட இவர் கேட்ட மாத்திரத்தில்
பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி
திரட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிய கருணாநிதி, தென்கரையில் உள்ள இவரது வீட்டுக்கே வந்துள்ளார். ஆனால்,
இறுதிவரை அரசியலை விட்டுத் தள்ளியேதான் இருந்தார் மகாலிங்கம்.
டி.ஆர்.மகாலிங்கத்தின் மனைவி பெயர்
கோமதியம்மாள். இவர்களுக்கு சுகுமாரன் என்கிற மகனும், சாவித்திரி, மகலாட்சுமி என
இரு மகளும் பிறந்தனர்.
சுமார் நாற்பது படங்களுக்கு மேல் நடித்துள்ள
மகாலிங்கம், சினிமா தன்னைக் கைவிடும் முன்பே, சினிமாவைக் கைவிட்ட கலைஞன். வாழ்வின்
இறுதிவரையில் இசை நாடக மேடைகளில் கோலோச்சியாவர். 1978 ஏப்ரல் 21 அன்று மாலையில்
கோவை தண்டு மாரியம்மன் கோயில் கச்சேரியில் பாட வேண்டும். ஆனால், மதியமே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
ஐந்து கட்டையில், ஆயிரம்
ஆயிரம் மேடையில் முழங்கிய இந்த தென்கரையின் பாட்டுப்பறவை, மரணம்
என்னும் கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டது.
சுமார் 45 ஆண்டுகள் கலை உலகைத் தனது கம்பீரக்
குரலால் கட்டுப்படுத்தி வைத்திருந்த இந்த கானப்பறவை, 54-வது
வயதில் மரணத்தைத் தழுவியது.
வாழ்க்கை எவ்வளவு நிஜமோ?. மரணம் அவ்வளவு நிஜம். ஆனால், மரணத்தைப்
பொய்யாக்கி விடுகிறது, மகாலிங்கத்தின் ஒவ்வொரு பாடலும்
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக