புதன், 5 ஜனவரி, 2022

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு வாழ்க்கை வரலாறு

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அருணாசலம் – கருமாம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். அவருக்கு ஆறுவயது ஆனா போது தாய் கருமாம்மாள் காலமனாதால், தந்தை அருணாசலம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூர் சென்றுவிட, சித்தியிடம் வாழ பிடிக்காமல் திருமலைராயன் பட்டினம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் வளர்ந்தார், தங்கவேலு. அங்கும் அன்பும் மரியாதையும் கிடைக்காமல் தவித்தவர், நாடகங்கள் பார்த்து மனதை தேற்றினார்.

பிறகு நாடகத்தில் நடித்து தன் வாழ்க்கை பயணத்தை தொடர்வது என்று முடிவு செய்தவர், ஆரம்பத்தில் ராஜாம்பாள் நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சிறிய சிறிய வேடங்களில் நடித்து கவனிக்க வைத்தவர், அதன் பிறகு ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் சேர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கந்தசாமி முதலியாரின் நாடக்குழுவிலும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தவர், கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம் ‘சதி லீலாவதி’ என்கிற படமாக உருவான போது அதில் ஒரு சிறிய வேடத்தில் தங்கவேலுவும் நடித்தார்.

பத்து வயதில் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த தங்கவேலு, இருபது வயதில் திரைபாடத்தில் நடித்து 1936ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருடன் எம்.கே.ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன் என பலரும் அறிமுகமாகி இருந்தனர்.

‘சதி லீலாவதி’ படத்திற்கு பிறகு படவாய்ப்பு எதுவும் தங்கவேலுவுக்கு கிடைக்கவில்லை. தங்கவேலுவும் என்.எஸ்.கிருஷ்ணனும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். அதனால் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவில் தன்னை அழைத்த போது, மறுப்பேதும் சொல்லமால் அவருடன் சேர்ந்து கொண்டார்.

நாடகங்கள் நடத்திக் கொண்டே திரையுலகிலும் புகழ்பெற்று விளங்கிய என்.எஸ்.கிருஷ்ணன், 1951 ஆம் ஆண்டு மணமகள் என்கிற படத்தை தயாரித்து இயக்கிய போது அந்தப் படத்தில் பத்மினியின் உதவியாளராக தங்கவேலுவை நடிக்க வைத்தார்.

அந்தப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ‘சிங்காரி’ என்ற படத்திலும் நடித்தார் தங்கவேலு. இந்த ‘சிங்காரி’ படத்தின் கதை ஏற்கனவே நாடகமாக நடிக்கப்பட்ட கதை. நாடகத்தில் தான் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் ஏற்றார் தங்கவேலு.

‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயருக்கு முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.

‘சிங்காரி’ படத்திற்குப் பிறகு பல திரைப்படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்த தங்கவேலுவுக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்த படம் ‘பணம்’.

தங்கவேலுவின் நண்பர் என்.எஸ்.கிருஷ்ணன், இரண்டாவதாக இயக்கிய அந்தப் படத்தில் அவருக்கு ஆடியபாதம் என்கிற பாத்திரம் கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இரண்டாவது படமாக வெளியான அந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார் தங்கவேலு. அதன் பிறகு, சிவாஜிகணேசனுடன் மட்டும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவரது திரைப்பயணம் தொடர்ந்தது.

“என்னுடைய வாழ்க்கை கலைவாணர் எனக்கு போட்ட பிச்சை. ஆரம்பத்தில் ஒரு நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்தது மட்டுமின்றி… தொடர்ந்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் கலைவாணர்தான்” என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார் தங்கவேலு.

அதன் பிறகு எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று தங்கவேலு இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம். அவருடைய கால்ஷீட்டுக்காக சில கதாநாயகர்களின் படங்கள் காத்திருந்தது உண்டு. சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டர்களில் மூன்று படங்கள் வெளியானால், ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு காதாநாயகர்கள் நடித்திருப்பார்கள். ஆனால், தங்கவேலு அந்த மூன்று படங்களிலும் நடித்திருப்பார்.

காமெடி நடிகர்களால்  கதாநாயகனாகவும் நடிக்க முடியும் என்று   நாகேஷ், தொடங்கி கவுண்டமணி, விவேக், சந்தானம், கருணாஸ், என்று பல பேர் இன்று நிரூபித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பெருமை தங்கவேலுவையே சேரும்.

சாதாரணமாக பெரிய, பெரிய கதாநாயகர்களே  ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு   பயப்பட்ட பானுமதியுடன் ‘ரம்பையின் காதல்’ படத்தில் நாயகனாக நடித்தார் தங்கவேலு.

தங்கவேலுவுடன் படங்களில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஜோடியான எம்.சரோஜாவுடன் தங்கவேலு நடித்த படங்களில் மறக்க முடியாத  படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான ‘கல்யாணப் பரிசு.’

நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம்.

வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம் ரொம்ப பிரபலம்.

“தங்கவேலு, சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி கலகலப்பு!

‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’ என்பதும், ‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்”, என்பதும், “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம் எல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்!

வடிவேலுவின் வசனங்களையும், கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் கொண்டாட்டமாக இருப்பது போல, அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.

சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான்.

தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன். சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’ படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’ சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி. பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம்.

கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார். பாகவதரின் கடைசி மூன்று ஆண்டுகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கவனித்து வந்தவர் தங்கவேலு. 

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.

1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 1994ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு கேடயங்கள் வழங்கி கௌரவித்தார்.

தமிழ்த் திரையுலகில் சரித்திர கால பாத்திரங்கள், புராண பாத்திரங்கள் என்று எல்லா பாத்திரங்களையும் ஏற்று நடிக்கக் கூடிய நாயகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி,  எஸ்.எஸ்.ராஜேந்திரன் என மிகச் சிலரே. இந்த கதாநாயகர்களைப் போல எல்லா பாத்திரங்களுக்கும் பொருந்தக் கூடியவராக இருந்த  ஒரே நகைச்சுவை நடிகர் தங்கவேலு.

நேரிலே பேசும்போதும், சரி படங்களில் நடிக்கும்போதும், அறச் சொற்களை பயன்படுத்துவதை அறவே தவிர்த்த கலைஞர் தங்கவேலு. அதுபோன்று தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக் கொண்டு அதிலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்க்கை நடத்தியவர் அவர்.

தமிழ் தவிர பிற மொழிப்படங்கள் எதிலும் நடிப்பதில்லை என்பதை இறுதி மூச்சுவரை கடைப்பிடித்தார் அவர்.

தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.

சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.

1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைவாணர் விருது பெற்றுள்ள தங்கவேலு, தனது நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களுக்கும் வடபழனியில் இடம் வாங்கி வீடு கட்டி கொடுத்துள்ளார்.

1953 ஆம் ஆண்டு தி.நகர் ராஜபாதர் தெருவில் தனக்கு வீடு கட்டிய தங்கவேலு, அங்கு தனது இரண்டு மனைவிகளுடன் கடைசி காலம் வரை வசித்து வந்தார். முதல் மனைவி ராஜாமணிக்கு குழந்தை செல்வம் கிடைக்க வெகுநாட்கள் ஆகின. அதன் பிறகு விஜயா, வளர்மதி என இரண்டு மகள்கள் பிறந்தனர். கல்யாண பரிசு படத்தின் நூறாவது நாளில் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடிகை சரோஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுமதி என்கிற மகள் இருக்கிறார்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக, கலைவாணர் மறைந்த பிறகு, அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தர் தங்கவேலு, 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு தனது 77 வது வயதில் காலமானார்.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக