வியாழன், 10 பிப்ரவரி, 2022

'கலைமாமணி' பிலிம் நியூஸ் ஆனந்தன் வாழ்க்கை வரலாறு

தமிழ்த் திரையுலகில் மக்கள் தொடர்பு கலையை முதன் முதலில் துவங்கி வைத்த பெருமகன், எங்கள் பிதாமகன், ஐயா பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள். அவர் 1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் ஞானசாகரம். தாயார் பெயர் சாரதாம்பாள்.

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த இவரது பாட்டனார் கிருஷ்ணசாமி, தனது மகன்களுக்கு ஞானசாகரம், குணசாகரம், அமுதசாகரம் என்று பெயர் வைத்தார். அதே போல தனது பேரன்களுக்கு ராமகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் என்று பெயர் வைத்தார். ஆனால், கலாம் சிறு வயதிலேயே கோபாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணணன் இருவரையும் எடுத்துக் கொண்டது.

அதன் பிறகு பிறந்த எங்கள் ஐயா, பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு அந்த கிருஷ்ணன் பெயர் வைக்க விரும்பவில்லை குடும்பத்தார். என்பது வயது வரை நீண்ட ஆயுளுடன் ஜாதகம் கணிக்கப்பட்ட இரண்டு பேரன்களும் அம்மை நோயால் தவறிப் போனதால், அந்த கிருஷ்ண கடவுளின் பெயரின் ஞாபகமாக வைத்த பெயர்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டனர்.

அழும் போதும், அள்ளி கொஞ்சும் போதும் பிலிம் நியூஸ் ஆனந்தனை செல்லமாக ,மணி என்று அழைத்தார்கள். ஆனால், ஐந்து வயதில் அவரை பள்ளியில் சேர்க்க அழைத்து சென்ற போது, ஆசிரியர் செல்லமாக கன்னத்தை கிள்ளி, உன் பெயர் என்ன என்று கேட்க, ஆனந்த கிருஷ்ணன் என்று பதில் சொல்லி இருக்கிறார், இவர்.

எந்த பெயர் வேண்டாம் என்று நினைத்தாரோ, அந்த பெயரை மகன் சொன்னதை கேட்டுஆனந்த அதிர்ச்சி அடைந்தார் ஞானசாகரம். தனக்குதானே பெயர் வைத்துக் கொண்ட மகனை பெருமையாக பார்த்தார்.

திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூல் அவருக்கு கல்வியை மட்டுமல்ல, நல்ல கலைகளைளையும் வளர்த்துக்கொள்ள உதவியது. கட்டுரை போட்டி,கவிதை போட்டி, விளையாட்டு போட்டி என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார், ஆனந்தன். 

ஆனந்தனின் தந்தை ஞானசாகரம், ஏஜி.எஸ் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். அங்கு உள்ள பணியாளர்கள் வாரம் தோறும் நடத்தும் நாடகங்களுக்கு, தனது மகனையும் அழைத்து செல்வார். பெரிய அதிகாரியின் மகனாச்சே. முன் வரிசையில் அமர்ந்து நாடகங்களை பார்த்து மகிழ்வார், ஆனந்தன்.

அந்த நாடகங்கள் அவரது உள்ளத்துக்குள் வந்தன. தானும் அப்படி நடிக்க வேண்டும், நாடகம் போட வேண்டும் என்கிற எண்ணத்தை அவருக்குள் விதைத்தது. தன்னுடைய நண்பர்களை சேர்த்துக் கொண்டு விளையாட்டாக நாடகம் நடத்தினார்,பிறகு முறையாக செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தார்.

தந்தைக்கு தெரியாமலே நாடக ஒத்திக்கை நடக்குமிடத்திற்கு சென்று கவனிக்க ஆரம்பித்தார். வேறு நாடக அரங்குகளுக்கு சென்று நாடகங்களை விரும்பிப் பார்த்தார். ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த போது சொந்தமாக கதை வசனம் எழுதும் அளவிற்கு தன்னை வளர்துக் கொண்டார்.

நண்பர்கள் வட்டத்தை பெரிதாக்கி நாடகங்கள் போட ஆரம்பித்தார். பள்ளியில் நடந்த நாடக போட்டிகளில் பரிசுகளை வென்றார்.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பரிசு பொருள் வாங்கி கொடுக்கும் தந்தை ஞானசாகரம், ஒரு பிறந்த நாளுக்கு புகைப்பட காமிரா ஒன்றை பரிசாக கொடுத்தார். அந்த காமிராதான் அவரை திரையுலகிற்கு அழைத்து வந்தது.

ஆரம்பத்தில் வீட்டில் உள்ளவர்களை படமெடுத்து மகிழ்ந்த ஆனந்தன், பள்ளி, கோவில் என எங்கு விழாக்கள் நடந்தாலும் அங்கு சென்று புகைப்படம் எடுத்து அவர்களுக்கு படங்களை பரிசாக வழங்கினார்.

புகைப்படங்களை பிரிண்ட் போட சென்ற இடத்தில் ஜெமினி ஸ்டூடியோவில் ஒளிப்பதிவுக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விபட்டதும், அதற்கு முயற்சி செய்திருக்கிறார். கேமரா உதவியாளராக சேர வேண்டும் என்றால், முதலில் கேமராவைத் தூக்கவேண்டும். இதற்கு உனக்கு வயது போதாது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

எப்படியும் ஒளிப்பதிவாளர் ஆவது என்கிற கொள்கையுடன் வெளியே வந்தவர், தந்தையிடம் சென்று அப்போது புதிதாக வந்திருந்த புகைப்பட கேமிராவை வாங்கிதர சொல்லி கேட்டிருக்கிறார். செல்ல மகனாச்சே!. அவர் கேட்ட அந்த புதிய கேமிராவையும் வாங்கி கொடுத்தார்.

தந்தையை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் இறக்கிவிட்டு, திரும்ப அவரை அழைக்க செல்லும் வரை,காரை தானே பயன் படுத்திக் கொண்டார் ஆனந்தன். ஒவ்வொரு நாளும் ஸ்டூடியோகளுக்கு சென்று படப்பிடிப்பு தளங்களில் புகைப்படம் எடுக்கத் துவங்கினார்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் - நடிகருடன் பேசிக்கொண்டிருப்பது, தயாரிப்பாளர் - நடிகருடன் பேசிக் கொண்டிருப்பது, கதாநாயகனும் -  கதாநாயகியும் பேசிக் கொண்டிருப்பது, ஒளிப்பதிவாளருடன் - இயக்குனர் பேசிக் கொண்டிருப்பது என்று, படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சம்பவங்களை புகைப்படங்களாக எடுத்தார்.

அந்த படங்களை பிரிண்ட் போட்டு மறுநாள் சம்பந்தப்பட்டவர்களிடம்சென்று கொடுப்பார். அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த திரைக்கலைஞர்கள் அவர் மீது மரியாதை காட்டினார்கள். அதன் மூலம் ஆனந்தனுக்கு நட்பு வட்டம் திரையுலகில் கிடைத்தது.

நாயகன், நாயகி படத்தில் நடிக்கும் காட்சிகளை மட்டுமே அதுவரை புகைப்படங்களாக பார்த்த பத்திரிகையாளர்கள், படப்பிடிப்பு தளத்தில் நாயகன் நாயகி பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, அந்தப் படங்களை வெளியிட்டதுடன், படப்பிடிப்பு சம்பவங்களையும் கேட்டு, சுவராஸ்யமாக எழுதினார்கள். அதைப் பார்த்து, நடிகர்கள் ஆனந்தனை பாராட்டினார்கள்.

எங்கெங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள தினம் தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்திற்கு செல்வார் ஆனந்தன்.

அப்போது அவர்கள் ஆனந்தனின் ஆர்வத்தையும், திறமையையும் தெரிந்து கொண்டு, அவரிடமிருந்தே ஒவ்வொரு படத்தின் தகவல்களையும், புகைப்படங்களையும் பெற்றனர். அந்த தகவல்கள் அவர்கள் நடத்திய மாத இதழில் வெளியிட்டனர்.

அப்படி தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்களைப் பற்றிய தகவல்களை சேகரித்தவர்,திரைக்கலை எப்படி உருவானது?, இந்தியாவுக்கு எப்படி திரைப்படம் வந்தது?, யார் காட்டினார்கள்?, இந்தியாவில் எப்போது படம் தயாரானது?, ஊமைப்படங்கள் எத்தனை?, பேசும் படங்கள் எத்தனை? என்று தென்னிந்திய திரையுலகம் பற்றியமொத்த புள்ளி விபரங்களை சேகரிக்க துவங்கினார் ஆனந்தன். அந்த தகவல்கள் இன்று பொக்கிஷமாக திரையுலகினருக்கு கிடைத்திருக்கிறது.

சி.டி.தேவராஜ் என்பவர் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் புகைப்பட கலைஞராகவும், நிருபராகவும் பணியாற்றிய போது,ஆனந்தனுடைய பெயருக்கு முன்னால் பிலிம் நியூஸ் என்கிற அடை மொழி சேர்ந்து கொண்டது.

எம்.ஜி.ஆர். நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கம் சார்பில் நடிகன் குரல் என்கிற பத்திரிகை வெளியானது. அந்த பத்திரிகையின் ஆசிரியராக வித்வான் வே.லட்சுமணன் இருந்தார். படப்பிடிப்பு தகவல்களை சேகரிக்க செல்லும் போது, அவருடன் ஆனந்தனுக்கு நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, இருவரும் ஒன்றாகவே ஸ்டூடியோக்களுக்கு செல்வார்கள்.

ஒரு முறை எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்கு வித்வான் லட்சுமணனுடன் சென்ற போது, அங்கு நாடோடி மன்னன் படத்தின் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தார், ஆர்.எம்.வீரப்பன். அதை ஆர்வத்துடன் தானும் பார்த்தார் ஆனந்தன்.

விளம்பரம் வரும் பத்திரிகைகளுக்கு மட்டும், விளம்பர ஏஜென்சி மூலமாக படத்தின் பட செய்திகளையும், புகைப்படங்களையும் வழங்குவார்கள் தயாரிப்பாளர்கள். அப்படி விளம்பர நிறுவனத்து செல்ல இருந்த நாடோடி மன்னன் புகைப்படங்களை,தேர்வு செய்து வைத்திருந்தார் ஆர்.எம்.வீர்ப்பன்.

எனக்கு எல்லா பத்திரிகை நண்பர்களுடன் பழக்கம் இருக்கிறது. என்னிடம் தருகிறீர்களா? நான் கொடுக்கிறேன் என்று ஆர்வத்துடன் கேட்டார் ஆனந்தன். தாராளமாக கொடுங்கள் என்றார் ஆர்.எம்.வீர்ப்பான்.

மறு வாரம் தமிழ், தெலுங்கு என அனைத்து பத்திரிகைகளிலும் நாடோடி மன்னன் புகைப்படங்களையும், செய்திகளையும் பார்த்து ஆச்சர்யப்பட்ட எம்.ஜி.ஆர்., தனது மேனேஜர் ஆர்.எம்.வீர்ப்பனிடம் தொடர்பு கொண்டு விபரம் கேட்டிருக்கிறார்.

தவறாக ஏதும் நடந்திருக்குமோ என்று தயங்கியபடி,ஆனந்தன் மூலமாக புகைப்படங்கள் அனுப்பிய தகவலை சொல்லி இருக்கிறார்,ஆர்.எம்.வீர்ப்பன். 

நாளைக்கு அவரை நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறிய எம்.ஜி.ஆர்., மறு நாள் சந்தித்த போது, ஆனந்தனை பாராட்டியதுடன்,இனிமேல் பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்ளவும், புகைப்படங்களை வெளியிடவும் ஆனந்தனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று ஆர்.எம்.வீரப்பனிடம் கூறி இருக்கிறார்.

திரைப்படத் துறையில் முதன் முறையாக மக்கள் தொடர்பு கலை அப்போதுதான் துவங்குகிறது என்பது அப்போது ஆனந்தனுக்கு தெரியவில்லை. பப்ளிசிட்டி ஏஜென்சி வேலையை தாமும் பகிர்ந்து கொண்டு செய்கிறேம் என்று மட்டுமே நினைத்தார்.

படப்பிடிப்பு தளத்திற்கு பத்திரிகையாளர்களை அழைத்து வந்து படப்பிடிப்பு அனுபவத்தை புகைப்படங்களுடன் எழுத வைத்தார். திரைப்படம் சம்பந்தமமான செய்திகள், உபரி தகவல்கள் என படம் பற்றிய செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்கினார். அந்த செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின.

நாடோடி மன்னன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வந்த போது,எம்.ஜி.ஆரிடம் ஆலோசனை பெற்று, பத்திரிகையாளர்களுக்கு என்று ஒரு பிரத்யேகமாக சிறப்பு காட்சியை பிரிவியூ திரையரங்கில் ஏற்பாடு செய்தார் ஆனந்தன். அதுவரை பொது மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்து, விமர்சனங்கள் எழுதிய பத்திரிகையாளர்கள், தங்களுக்காக சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த பிலிம் நியூஸ் ஆனந்தனையும், எம்.ஜி.ஆரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

பத்திரிகையாளர் காட்சி துவங்கிய போது, பத்திரிகையாளர்களை வரவேற்ற எம்.ஜி.ஆர்., படம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் என்ன சொன்னார்கள் என்கிற விபரங்களை ஆனந்தனிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

நாடோடி மன்னன் படம் நூறு நாள் ஓடி சாதனை படைத்தது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக விழா எடுத்த எம்.ஜி.ஆர்.. படத்தில் நடித்த நடிகர்கள், முக்கிய தொழில் நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கு பரிசு கேடயங்கள் வழங்க ஏற்பாடு செய்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அறிஞர் அண்ணாதுரை கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டி பரிசு கேடயங்களை வழங்கினார். வழக்கமாக நாற்பது கலைஞர்களுக்கு மட்டுமே பரிசு கேடயங்கள் வழங்குவார்கள். ஆனால், உதவி இயக்குனர்கள், உதவி கேமிராமேன்களுக்கும் பரிசு கேடயங்கள் வழங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கூரி இருந்ததால், அன்று அறுபத்தி நான்கு பேர்களுக்கு பரிசு கேடயங்கள்கொடுத்திருக்கிறார்கள்.

விழா முடிந்த பிறகு, பெரும் நிம்மதியுடன் அங்கு பேசிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம்,‘’எல்லோருக்கும் பரிசு கேடயங்கள் கொடுத்தீர்கள். ஓடி ஓடி வேலை செய்த ஆனந்தனுக்கு மட்டும் கொடுக்கவில்லை’’ என்று வித்வான் வே லட்சுமணன் தெரிவித்ததும் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்..

ஐயோ தப்பு செய்து விட்டேனே. முதல் பரிசு கேடயம் உனக்குத்தானே கொடுத்திருக்க வேண்டும் என்று வேதனையுடன் ஆனந்தனை பார்த்து கூறியவர், ஆனந்தனின் கையை பிடித்துக் கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இவருக்கு என்ன தொழில் என்று டைட்டில் கார்டில் பெயர் போடாததால், அவர் பட்டியலில் இடம்பெறாமல் போய்விட்டார். நம்முடைய கவனத்துக்கும் வராமல் போனது தவறுதான். இனிமேல் அடுத்தப் படத்திலிருந்து,‘பொதுஜன தொடர்புபிலிம் நியூஸ் ஆனந்தன் என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று தெரிவித்தார், எம்.ஜி.ஆர்.

மறு வாரம் படப்பிடிப்பு தளத்திற்கு ஆனந்தனை அழைத்து, படக்குழுவினர் முன்னிலையில் பொன்னாடை அணிவித்து, நாடோடி மன்னன் பட பரிசு கேடயத்தை வழங்கினார் எம்.ஜி.ஆர்.

1958-ஆம் ஆண்டு நாடோடி மன்னன் படத்தில் பத்திரிகை தொடர்பு பணியை துவங்கினார் பிலிம் நியூஸ் ஆனந்தன். பொதுஜன தொடர்பு என்று முதன் முதலாக டைட்டில் கார்டில் அவரது பெயர் இடம்பெற்ற படம்,நாட்டுக்கு ஒரு நல்லவன். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி நடித்த அந்தப் படம் 1959-ஆம் ஆண்டு வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ஆயிரம் படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு,கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது,கலைஞர் தலைமையிலான தமிழக அரசு.

1931 முதல் வெளியான தமிழ் படங்களின் புள்ளி விபரங்களை தொகுத்து சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறுஎன்கிற புத்தகமாக வெளியிட உதவியது, செல்வி ஜெயலலிதா தலைமையிளில் இருந்த தமிழக அரசு.

பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றவிருதுகள்,எழுதிய புத்தகங்கள் ஏராளம். அவற்றை தனி கட்டுரையில் தொகுத்திருக்கிறேன்.

பூவிருந்தவல்லியை பூர்வீகமாக கொண்ட பிலிம் நியூஸ் ஆனந்தன்,மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்தார். மயிலாபூரில் வசித்த பொழிச்சலூரை பூர்வீகமாக கொண்ட சம்பந்தம் – சகுந்தலா தம்பதியரின் மகள் சிவகாமியை திருமணம் செய்து கொண்டு இராயப்பேட்டையில் குடியேறினார்.

இவர்களுக்கு கீதா,  விஜயலட்சுமி என்கிற இரு மகள்களும், ஞானசகாரம் (டைமண்ட் பாபு), குணசாகரம் (ரவி) என இரு மகன்களும் உள்ளனர்.

மூத்த மகன் ஞானசாகரம் (டைமண்ட் பாபு),வங்கி பணிக்கு சென்றவர், பிறகு ஊமை விழிகள் படத்தின் மூலம் மக்கள் தொடர்பாளராக திரையுலகில் அறிமுகமானார்.தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ஏராளமான படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றி உள்ளார்.

இவர் மயிலாப்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம்சாகர் என்கிற மகன் உள்ளார். மருத்துவரான விக்ரம்சாகர், சக மருத்துவரான ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்கிற மகள் உள்ளார்.

இளைய மகன் குணசாகரம், சாந்தி என்பவரை திருமண செய்து கொண்டார். இவர்களுக்கு அஸ்வினி என்கிற மகள் உள்ளார். தருண் என்பவருக்கு அஸ்வினியை திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு ஆரவ் என்கிற மகன் இருக்கிறார்.

மூத்த மகள் கீதாவை, தரணிபதி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஸ்வாதி லட்சுமி என்கிற மகள் உள்ளார். பாஸ்கரன் என்பவருக்கு ஸ்வாதி லட்சுமியை திருமணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மாளவிகா, ஹரிதா என இரு மகள்கள் உள்ளனர்.

பாட்டியின் பெயரை தனது இளைய மகளுக்கு விஜயலட்சுமி என்று பெயராக வைத்தார் ஆனந்தன். பாஸ்கர் என்பவருக்கு விஜயலட்சுமியை திருமணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு கோகுல் என்கிற ஒரு மகனும், பவித்ரா என்கிற மகளும் உள்ளனர். கோகுல், பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அபினா என்கிற மகளும்,ஆதித்யா என்கிற மகனும் உள்ளனர். சுனில் என்பவருக்கு பவித்ராவை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு வேதா என்கிற மகள் இருக்கிறார்.

ஆயிரம் பிறை கண்ட பிலிம் நியூஸ் ஆனந்தன்,ஐந்து பேரன்,பேத்திகள்,ஏழு கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என வாழ்வாங்கு வாழ்ந்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் தேதி மறைந்தார்.

நெஞ்சில் நிலைத்து நின்று நினைவை விட்டு அகலாதவை. அவரது ஞாபகங்கள்.

திரையுலகின் தகவல் களஞ்சியம் என்றும், திரையுலகின் பொக்கிஷம் என்றும், திரையுலகினார் எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆனந்தன், எழுபது ஆண்டுகளாக திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்துடன் நிலைத்து நிற்பது தனிப்பட்ட சாதனை. இனி யாரும் முந்திடாத சாதனையும் கூட!.

 

பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்து

1) எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜ் நடத்திய பிலிம் நியூஸ் பத்திரிகையில் நிருபராகவும் புகைப்பட கலைஞராகவும் பணிபுரிந்தது(1954) ஆனந்தன் – பிலிம் நியூஸ் ஆனந்தனாக மாறியதற்கு காரணமானவர்.

2) ஸ்டார் வாய்ஸ்(வார இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் மயிலை குருபாதம் (தயாரிப்பாளர்).

3)பிலிம் நியூஸ் (மாத இதழ்) ஆசிரியராக பணிபுரிந்தது. வெளியிட்டவர் : டைமண்ட் பாபு (2006).

4)பிலிம் சேம்பர் – பத்திரிகையில் பணிபுரிந்து வருவது.

 

தயாரித்த புத்தகங்கள் பற்றி சொல்லுங்களேன்

1) மாண்புமிகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” நூல் தயாரித்தது(2004)

2) சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது “சாதனை மலர்” தயாரித்தது (1995).

3) திரைக்கலைஞர்கள் விலாசங்கள் கொண்ட ‘திரைக்கலை தொகுப்பு’ – நூல் தயாரித்தது(1978).

4) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று ‘திரைப்பட புள்ளி விபரம்’ – என்ற பெயரில் திரைஉலகினருக்கும், பத்திரிகைகளுக்கு உபயோகப்படும் வகையில், 1954 முதல் ஆண்டு அறிக்கை நூல் இலவசமாக தொடர்ந்து வழங்கி வருவது

5) திரை நட்சத்திரங்களின் 100-வது படம் வெளிவரும்போது, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, கமல்ஹாசன் சிவக்குமார் ஆகியோருக்கு ஆல்பம் தயாரித்தது.

6) கமலின் 200வது படமான ஆளவந்தான் படம் வெளியிட்ட அன்று படஆல்பம் நூல் தயாரித்தது(2001).

7) சிவாஜியின் 150 படமான சவாலே சமாளி படம் வெளியான போது மலர் வெளியிட்டது(1971).

8) கலைஞர் சின்ன அண்ணாமலை அவர்களுக்காக ‘நடிகர் திலகம்’ – என்ற பெயரில் புகைப்பட ஆல்பம் நூல் தயாரித்தது. காங்கிரஸ் தலைவர் திரு.காமராஜ நாடார் அவர்களால் வெளியிடப்பட்டது(1969).

9) “நெஞ்சில் நிலைத்து நின்று, நினைவை விட்டு அகலாத கவிஞர்களின் திரை இசைப்பாடல்கள்” – என்ற பெயரில் கவிஞர்களின் ஒரு பாடல் தொகுப்பு நூல் தயாரிக்கப்பட்டது(2008).

 

கண்காட்சிகள் அமைத்தது பற்றி சொல்ல முடியுமா?

திரை உலகம் 50 ஆண்டை முன்னிட்டு, கண்காட்சி 10 நாட்கள் நடத்தப்பட்டது. சாதனைகள் செய்த கலைஞர் 10 பேரை கௌரவப்படுத்தப்பட்டனர்.(1981)

தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சியில், சினிமா உலக கண்காட்சி தொடர்ந்து மூன்று முறை சென்னையில் நடத்தப்பட்டு மூன்றாண்டும் சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

மதுரை சுற்றுலா பொருட்காட்சியில் சினிமா உலக கண்காட்சி நடத்தி சிறந்த அரங்கு விருது கிடைத்தது.

உலகப் படவிழாவின் போது தெலுங்கு, மலையாளப்பட கண்காட்சி முறையே ஹைதராபாத்திலும் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டது.

என்.டி.ஆரின் படகண்காட்சி ஹைதராபத்தில் ஆந்திரா பிலிம் சேம்பர் சார்பாக நடத்தப்பட்டது.

கமல்ஹாசன் பிறந்த நாளில் மூன்று முறை கண்காட்சி நடத்தப்பட்டது.

தெலுங்கு திரைப்பட வைர விழாவின் போது தெலுங்கு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக சென்னையில் நடத்தப்பட்டது.

திரைப்பட நடிகைகள் அஞ்சலி தேவி, ஜமுனா-வாணிஸ்ரீ ஆகியோரில் வெள்ளி விழாவின் போது ஹைதராபாத்தில கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

CINEMA TODAY சார்பில் “78 ஆண்டு தமிழ் சினிமா கண்காட்சி(2009)

 

பட்டங்கள்?

1) ‘கலைமாமணி – தமிழக அரசு (1991)

2) ‘கலைச் செல்வம் – நடிகர் சங்கம்(1997)

3) ‘திரைத்துறை அகராதி’ – கண்ணதாசன் மையம்

4) ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ – ராஜபாளையம் ரசிகர் மன்றம்

5) ‘1997- ம் ஆண்டின் சிறந்த மனிதர்’விருது அமெரிக்காவில், வடக்கு கெரோலினா சர்வகலாசாலை வாழ்க்கை வரலாறு கழகம் – வழங்கியது.

6) தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கண்ணசௌத்ரி “கலா பீடம்” விருது(1986)

7) காமராஜர் தேசிய சங்கம் “செய்தி சிகரம்”

8) “கலை மூதறிஞர்” – விருது (ராஜ்கதிரின் கலாலயா)

9) தென்னிந்திய திரைப்பட இயக்குனர்கள் சங்கம் “கௌரவ இயக்குனர்” விருதினை வழங்கி கௌரவித்தனர் (1989).

10) ‘நடமாடும் திரையுலகக் கலைக்களஞ்சியம்’ – சிவக்குமார்

11) ‘சினிமா செய்தி தந்தை’ – மௌலி

12) திரையுலக உ.வே.சா. – யூகி சேது

 

விருதுகள்

1. அஞ்சலி தேவியை தலைவராகக் கொண்ட வி.நாகையா நினைவு சாதனையாளர் விருது(2008).

2. லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல் விருது

3. சென்னை மவுண்ட் ரோட்டரி கிளப் சிவாஜி விருது

4. புதுக்கோட்டை ரோட்டரி கிளப்

Vocational Award ”2003

5. எனது 61-வது பிறந்த நாளை திரைஉலகம் சிறப்பாக நடத்தியது (1990)

6. தமிழக அரசு நடத்திய “நட்சத்திர இரவு” சிறப்பாக நடைபெற உதவியதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் மோதிரம் அணிவிக்கப்பட்டது.

7. சிறந்த பி.ஆர்..ஓ விருது – தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கம்.

* 1989 -ல் திரைஉலக 75 ஆண்டு வைர விழவில் “அகில இந்திய சாதனை புரிந்தவர்கள் ” என்ற முறையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 75 பேரில் ஒருவராக தேர்ந்தெடுத்து கௌரவித்தது.

* 2002 -ல் பிலிம்நியூஸ் ஆனந்தன் 52 ஆண்டுகளாக சேகரித்து வைத்திருந்த திரைசம்மந்தப்பட்ட கலை பொக்கிஷங்களை தமிழக அரசு அரசுடமை ஆக்கிக் கொண்டது, அவைகளை வைத்து நிரந்தர கண்காட்சி ஒன்றினை அமைக்க திட்டம் வகுத்துள்ளது.

 

சாதனையாளர் விருதுகள்

1. எஸ்.எஸ்.வாசன் விருது – எல்.வி.பிரசாத் விருது

2. சிவாஜி விருது – எம்.ஜி.ஆர்.சிவாஜி அகாடமி விருது(2003)

3. மெகா பைன் ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர் விருது

4. மதி ஆர்ட்ஸ் அகாடமி காமராஜர் விருது

5. ஃttN விருது(2004)

6. வெரைட்டி பிலிம் விருது(2008)

7. சினிமா ரசிகர் சங்கம்- விருது மூன்று முறை 1980; 1988; பொன் விழாவில் 1995.

8. வல்லமை தாராயோ- இயக்குனர் மதுமிதா நடத்திய பாராட்டு விழா(2008)

9. ஸ்ரீ ராமானுஜர் டிரஸ்ட் விருது (2008)

10. வி.4 விருது

11. ஓம் சக்தி அகாடமி (பொன் விழாவில் விருது)

12. தமிழக அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட “சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு ” தயாரித்தற்காக, சென்னை சினிமாரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு திரைப்பட வரலாறு” தயாரித்தற்காக, சென்னை சினிமா ரசிகர்கள் சங்கமும், தமிழ்நாடு டி.வி.பார்வையாளர் சங்கமும் இணைந்து, விழா எடுத்து கௌரவித்தது.

13. ஜெய்சங்கர் அவர்களால் கீழ்பாக்கம் உடல் ஊனமுற்றவர்கள் இல்லத்தில் கௌரவிக்கப்பட்டார்.

14. வி.ஜி.பி.- தம்ஸ் அப் – அஜந்தா

15 அம்பத்தூர் கலைக்கழகம்

16. ரைசிங் ஸ்டார் பிலிம் விருது(2008).

17. சிவாஜி – பிரபு அறக்கட்டளை சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளில் கௌரவிக்கப்பட்டார் (2008).

18. CINEMA TODAY சார்பாக விருது (2007)

 

பத்திரிகைகள் விருது

1. சினிமா எக்ஸ்பிரஸ் விருது

2. தமிழ் மூவிஸ் விருது

3 தினகரன் விருது

4. விக்டரி சினிமா டைரி விருது

5. ரைசிங் ஸ்டார் விருது

6. ஹதராபாத் பிலிம் கிளப் வெள்ளி விழா ஆண்டு விருது

7. தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்றதர்க்கு பாராட்டு விழா

8. சென்னையில் 75 ஆண்டு தெலுங்கு சினிமா கண்காட்சி நடத்தியமைக்கு, தெலுங்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் பாராட்டு விழா

9 சூப்பர் சினிமா – வெரைட்டி சினிமா விருது(2008).

 

டி.வி.சேனல் விருது

1) விஜய் டி.வி.(சாதனையாளர் விருது) (2008)

2) ராஜ் டி.வி.“75 ஆண்டு திரை உலகம் விருது (2008)

3) இந்து டி.வி.(2008)

 

 

 

 

 

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக