அப்போது அவரது மாமா மருத்துவத் தொழிலுடன்
சைக்கிள் விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வந்தார். படித்துக் கொண்டே மாமாவுக்கு
வியாபாரத்தில் உதவிய அவர், சைக்கிள் கடையை கார்
உதிரிப்பாகங்கள் விற்கும் கடையாக மாற்ற யோசனை தெரிவித்தார். கார் உதிரிப்பாகங்களை
வாங்கிவர கல்கத்தாவுக்குத் துணிச்சலாகச் சென்று வந்த நடராஜ முதலியார், புகைப்பட கேமரா
ஒன்றையும் அங்கிருந்து வாங்கிவந்தார். ஒளிப்படம் எடுப்பதை விருப்பமான
பொழுதுபோக்காக மாற்றிக்கொண்ட நடராஜ முதலியார், மவுனப் படங்களைப் பார்ப்பதிலும்
ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் நிலச்சுவான்தாராக
இருந்த மூப்பனார் என்பர் இங்கிலாந்திலிருந்து தான் வாங்கி வந்திருந்த 35
எம்.எம்.‘வில்லியம்சன்’ பிராண்ட் சைலண்ட் மூவி கேமராவையும் அதில் பதிவாகும் பிலிம்
சுருள்களைப் பதனிடும் கருவியையும் 1914-ல் பண்டமாற்று முறையில் நடராஜ
முதலியாருக்குக் கொடுத்து அவரிடமிருந்து இரண்டு கார்களை வாங்கிக்கொண்டார்.
மூப்பனாரிடம் ஆவணப் படங்கள் எப்படி உருவாகின்றன
என்பதைக் கற்றுக்கொள்ள விரும்பிய முதலியார் சினிமட்டோகிராஃப் கருவியை இயக்கத்
தெரியாது என்ற நிலையிலும் அவற்றை வாங்கித் தனது கார் ஷோருமில் காட்சிக்கு
வைத்தார். கார்களை வாங்க வந்தவர்கள் அங்கிருந்த கேமரா முன் நின்று ஒளிப்படம்
எடுத்துக்கொண்டனர்.
சென்னையில் 'ஸ்டுட்பேக்கர்'
என்ற மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர்
ஒருவர், நடராஜ முதலியாரின் சினிமா ஆர்வத்தை புரிந்து கொண்டு,
சினிமா பற்றி தெரிந்து கொள்ள பூனாவில் உள்ள ஸ்டூவர்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேயே
புகைப்பட நிபுணரிடம் நடராஜ முதலியாரை 1915-ஆம் ஆண்டு அனுப்பி வைத்தார்.
கையில் மூவி கேமராவுடன் வந்துசேர்ந்த இளைஞன்
ஒருவனைக் கண்டதும் ஸ்மித்துக்கு ஆச்சரியமாகிவிட்டது. நடராஜ முதலியாரின் ஆர்வத்தை
பாராட்டிய ஸ்மித், சினிமா ஒளிப்பதிவு நுணுக்கங்களை
நடராஜ முதலியாருக்கு சொல்லி கொடுத்தார்.
மூவி கேமராவை எப்படி கையால் சுழற்றி சீராக
இயக்குவது என்பது பற்றிய தொழில் நுட்பங்களை, முதலியாருக்கு செயல்விளக்கம்
செய்து காண்பித்தார் ஸ்மித். பின்னர் தனது கேமிராவை முதலியர் கையில் கொடுத்து,
துண்டு படம் ஒன்றை தயாரிக்கும்படி கூறி இருக்கிறார்.
ஸ்மித்திடன் ஆலோசனையுடன் ஒரு துண்டு படத்தை
பூனாவில் இயக்கி தயாரித்த நடராஜ முதலியார், அந்த படத்தை ஸ்மித்திடம்
ஒப்படைத்தார். ஸ்மித்தும் அவரது மனைவியும், முதலியாருடன்
அமர்ந்து அப்படத்தை பார்த்தனர். திரையிடப்பட்ட அப்படத்தில் தோன்றிய நபர்களின்
நடையும், அசைவுகளும் ஒரே சீராக அமையாமல் விந்தையாகவும்,
கோமாளித்தனமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. படத்தை பார்த்த
ஸ்மித் தம்பதியினர், கேலியாக சிரித்து மகிழ்ந்தனர்.
படம் சரியாக அமையாதது கண்டு மனம் தளர்ந்த
முதலியாரை, ஸ்மித் தேற்றி உற்சாகப்படுத்தினார். சில
மாதங்கள் பூனாவில் தங்கி பயிற்சியை தொடரும்படி ஸ்மித், கேட்டுக்கொண்டார்.
முதன்முறை ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியால், கேமிராவை சரியாக
இயக்குவதற்கான பயிற்சியை நடராஜ முதலியார் முழுமையாக கற்றறிந்தார்.
ஆறு மாத பயிற்சிக்கு பிறகு சென்னை திரும்பிய
நடராஜ முதலியார், 1915-ன் இறுதியில் தனது முதல் படமுயற்சியைத் தொடங்கினார்.
இதற்காக, தனது நண்பராக இருந்த தமிழ் நாடக உலகின்
தந்தைகளில் ஒருவர் என வழங்கப்படும் ‘பம்மல்’ கே. சம்பந்த முதலியாரைச் சந்தித்தார்.
அவர், மகாபாரத்தின் கிளைக் கதையான ‘திரௌபதி – கீசகன்’
கதையைப் படமாக்கலாம் என்று ஆலோசனை கூற, அதை ஏற்றுக்கொண்ட முதலியார் தமிழ்
நடிகர்களை உடனடியாகத் தேர்வு செய்தார். அவர்களுக்குப் பயிற்சி அளிக்க, சுகுணவிலாச நாடக சபாவில் பெண் வேடமிட்டு நடித்துவந்த ரங்கவடிவேலு என்ற
புகழ்பெற்ற நாடக நடிகரைப் பணியில் அமர்த்திக்கொண்டார்.
நடிப்புப் பயிற்சிக்காகத் தனது கார் கம்பெனியை
ஒட்டியே மில்லர்ஸ் சாலையில் இருந்த 'டவர் ஹவுஸ்' என்ற பங்களா விட்டையே சினிமா ஸ்டூடியோவாக மாற்றினார். அதற்கு 'இந்தியா பிலிம் கம்பெனி லிமிட்டெட்' என்று பெயர்
வைத்தார். இதுதான் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் சினிமா ஸ்டூடியோ.
பாம்பே கோட்டக் பிலிம் கம்பெனியில் வேலை பார்த்த 'கார்பென்டர்' என்ற ஆங்கிலேயே நண்பர்
உதவியுடன் மௌனப்படம் தயாரிக்க தேவைப்பட்ட கச்சா பிலிமை லண்டனுக்கு தந்தி கொடுத்து,
இறக்குமதி செய்த நடராஜ முதலியார், படப்பிடிப்பு கேமராவை, பூனாவில் ஸ்மித்திடம் இருந்து விலைக்கு வாங்கினார்.
1916- ஆம் ஆண்டு சென்னையில் மௌனப் படமெடுக்கும்
முயற்சியை, நடராஜா முதலியார் தொடங்கினார். தன்னால்
எடுக்கப்பட்ட நெகடிவ் பிலிம் ரோலை டெவலப் செய்து கொள்வதற்கு வசதியாக, பிலிம் லேபாரட்டரி ஒன்றை பெங்களூரில் நிர்மாணித்துக்கொண்டார்.
லேபாரட்டரியில் வேலை செய்வதற்காக நாராயணசாமி என்பவரை பணியில் அமர்த்தினார்.
படப்பிடிப்பின் போது தனக்கு உதவியாளராக பணியாற்ற ஜெகநாத ஆசாரி என்ற நபரையும்
அமர்த்திக் கொண்டார்.
35 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி 35 ஆயிரம்
ரூபாய் செலவில் ஆறாயிரம் அடி நீளம் கொண்ட படமாக ‘கீசக வதம்’ படத்தை இயக்கி
தயாரித்து, 1916-ல் வெளியிட்டு தமிழ் சினிமா வரலாற்றில் முதல் திரைப்பட
இயக்குநராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார், நடராஜ முதலியார்.
சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக அதன் தனது
மோட்டார் கம்பெனியை சென்னை சிம்சன் கம்பெனிக்கு விற்றுவிட்டு, தீவிரமாக இறங்கிய நடராஜ முதலியார், திரௌபதி
வஸ்திராபரணம், லவகுசா, ருக்மணி சத்யமாமா,
மார்கண்டேயா, காளிங்கமர்தனம் ஆகிய ஆறு படங்களை
தயாரித்தார். அந்தப் படங்களின் வடநாட்டு வினியோக உரிமையை கல்கத்தாவுக்கு மதன்
கம்பெனியாருக்கும், பம்பாய் வினியோக உரிமையை ஆதிர்ஷ் ஈரானி
என்பவருக்கும் கொடுத்து அவரது படங்கள் இந்தியா முழுவதும் திரையிட ஏற்பாடு
செய்தார்.
தமிழ் சினிமாவில் முதல் வெளிப்புற
படப்பிடிப்பையும் செய்தவரும் நடராஜா முதலியாரே. மயில்ராவணா, மார்க்கண்டேயா போன்ற படங்களுக்கு தனது சொந்த ஊரான வேலூர்
கோட்டையில் படப்பிடிப்பு நடத்தினார்.
மவுனப்பட தயாரிப்புகளில் நடராஜ முதலியார்
பரபரப்பாக இயங்கிவந்த நேரத்தில், 1923 ஆம் ஆண்டு அவரது சினிமா
ஸ்டுடீயோ எதிர்பாராதவிதமாக தீக்கிரையானது. அதே ஆண்டு அவருடைய மகன் இறந்தார்.
அந்நிய நாட்டு துணி வகைகளை இந்தியாவில் விற்பனை
செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பகிஷ்காரம் செய்வது பற்றி ஒரு துண்டு படம்
எடுக்க விரும்பினார். அந்த துண்டுப்பட தயாரிப்பிற்கு நிதி உதவி வேண்டி பம்பாய்
மில் அதிபர்களின் சங்கத்தில் முக்கிய பொறுப்பாளர்களாக இருந்த 'மோடி', 'மெலோனி' என்ற இரு தொழில் அதிபர்களை பம்பாயில்
சந்தித்து, நிதி உதவி கேட்டிருக்கிறார். படம் எடுக்கும்
அவரது திட்டத்தை புகழ்ந்த அவர்கள், பண உதவி செய்ய
மறுத்துவிட்டார்கள்.
தொடர்ந்து ஸ்டோன் என்ற ஐரோப்பியரிடமும் நிதி உதவி
கேட்டிருக்கிறார். படம் எடுக்கும் முயற்சியை பாராட்டிய ஸ்டோன், அந்தப் படம் தன் தாய் நாட்டிற்கு விரோதமாக அமைய வாய்ப்பு
உள்ளதாக கூறி, பண உதவி செய்ய மறுத்து விட்டாராம்.
அன்னிய துணி பகிஷ்கார போராட்டத்தை சினிமா மூலம்
பிரசாரம் செய்ய திட்டமிட்டு அவரது தொடர் முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால்
அத்துடன் திரைப்படத் தொழிலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.
நடராஜ முதலியாரின் திரைத்துறை சாதனையை
கவுரவித்து, சென்னை ராஜாஜி மண்டபத்தில் 1970-ஆம் ஆண்டு,
அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில், 'தென்னிந்திய சினிமா டெக்னீஷியன்கள் சங்கம்' பாராட்டு
விழா நடத்தியது. இவ்விழாவில் முதலியாரின் சாதனைகளை பாராட்டி வெள்ளி பதக்கம்
பரிசளித்தனர்.
தென்னிந்தியாவின் முதல் சலனப்படத்தை தயாரித்த
தமிழரான ஆர். நடராஜ முதலியார், சினிமா அதிபர் ஏ.வி.மெய்யப்பன்
உட்பட 36 பேர்களுக்கு அன்றைய மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சர் ஒய்.பி.சவான்
வெள்ளிப் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.
1885 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த நடராஜ முதலியார், 87 வயது வரை வாழ்ந்தார். தனது இறுதிக் காலத்தை சென்னை
அயனாவரத்திலிருந்த தன் மகள் ராதாபாய் வீட்டில் தங்கி அமைதியாக கழித்தார். தன்
இறுதி காலத்தில் ரசாயன திரவம் ஒன்றை கண்டுபிடித்து உருவாக்கும் ஆராய்ச்சியிலும்
ஈடுபட்டிருந்தார். ஆனால், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலிவுற்ற அவர், 1971- ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி காலமானார்.
தமிழ் சினிமாவின் தந்தையாக போற்றப்படும் நடராஜ
முதலியார், தமிழ்சினிமா வரலாற்றில் தனிப்பெரும்
சாதனைக்குரிய மனிதரும் கூட...
தொகுப்பு : ஜி.பாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக