சனி, 12 பிப்ரவரி, 2022

சிவகங்கை ஏ.நாராயணன் வாழ்க்கை வரலாறு

சிவகங்கை ஏ.நாராயணன்

சிவகங்கையில் 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவர், ஏ.நாராயணன். சென்னை கல்லூரியில் பி. ஏ. படித்து பட்டம் பெற்று ஆயுள் காப்பீட்டு முகவராக பம்பாயில் பணியில் சேர்ந்தார். அங்கே ஹாலிவுட்டிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் வரும் அந்நிய மவுனப் படங்களை வாங்கி இந்தியா முழுவதும் விநியோகித்துவந்த கே.டி.பிரதர்ஸ் & கோவுடன் நாராயணனுக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நட்பைப் பயன்படுத்திப் பல மவுனப் படங்களை வாங்கி கல்கத்தாவில் விநியோகிக்கத் தொடங்கினார்.

பிறகு கல்கத்தாவின் பிரபலமான திரையரங்காக விளங்கிய ‘க்வின்ஸ் சினிமா’வைக் குத்தகைக்கு எடுத்து நடத்தினார். பின்னர் மதராஸ் திரும்பி ‘எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ்’ என்ற தென்னிந்தியாவின் முதல் பட விநியோக நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மவுனப் படங்களை வாங்கித் தென்னகமெங்கும் திரையரங்குகளுக்கு விநியோகித்தார்.பின்னர் திருவல்லிக்கேணியில் பாப்புலர் திரையரங்கை நடத்தினார். அதுவே பின்னாளில் ஸ்டார் டாக்கீஸ் திரையரங்காக மாறியது.

பட விநியோகம் லாபம் தந்தாலும் படங்களைத் தயாரிக்க வேண்டும், அவற்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் சுழலத் தொடங்கியது.

1928-ம் ஆண்டு ஹாலிவுட் சென்ற நாராயணன் அங்கே ஓராண்டு காலம் தங்கி சினிமா தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்படக் கற்றுக்கொண்டார்.

ஹாலிவுட்டிலிருந்து திரும்பி வந்த கையோடு 1929-ம் ஆண்டு சென்னை தண்டையார்பேட்டையில், ‘ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் பிரமாண்டமான சினிமா ஸ்டுடியோவை தொடங்கினார்.

அப்போது தமிழ்நாட்டில் நடராஜ முதலியாரும், ரகுபதி வெங்கைய்யா நாயுடுவும் படத்தயாரிப்பில் நஷ்டம் ஏற்பட்டு கஷ்டத்தில் இருந்தனர். இருவருமே தங்களது ஸ்டுடியோவை கடனில் இழந்து படத் தயாரிப்பைவிட்டே விலகி இருந்தனர்.

இதனால், 1924 முதல் 1929 வரை வேறு எந்த மௌனப் பட தயாரிப்பு நிறுவனமும் சென்னையில் தோன்றவில்லை. மௌனப் படத் தொழிலே இங்கிருந்து மறைந்து போய் விடக்கூடிய நிலை உருவானது.

1927-ல் சென்னையில் நிரந்தர சினிமா கொட்டகைகள் 9, சென்னை மாகாணம் முழுவதும் 34, டூரிங் சினிமாக்கள் 26ம் என இயங்கிக் கொண்டிருந்தன.

சென்னையிலும், பம்பாயிலும் மௌன படங்கள் தயாரிக்கப்பட்டாலும் அமெரிக்க ஆங்கில படங்கள்தான் பெருவாரியாக இங்கிருந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டன.

அமெரிக்க படங்களின் ஆக்கிரமிப்பால் நம்மூர் சினிமா நலிவுற்றது. ஏராளமான பிரதிகள் எடுத்து உலகமெங்கும் பெறப்பட்டதால் அமெரிக்க படங்களின் வாடகை குறைந்ததாக இருந்தது. இதனால், தியேட்டர் முதலாளிகள் அந்த படங்களையே நாடினார்கள்.

மேலும் ஸ்டண்ட் காட்சிகளில் அந்த படங்களின் தரம் உயர்ந்து இருந்தது. அவற்றுடன் போட்டிபோட முடியாமல் நமது தயாரிப்பாளர்கள் போராடினார்கள். தென்னிந்திய சினிமா நலிவடைவதை பிரிட்டிஷ் அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக நலிவுற்றிருந்த தென்னிந்திய சினிமா உலகை தூக்கி நிறுத்தி ஓரளவு தலை நிமிரச் செய்த மாமனிதராக வந்தார், சிவகங்கை ஏ.நாராயணன்.

தனது 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற பெயரில் ஒரு சினிமா ஸ்டுடியோவை தொடங்கி தர்மபத்தினி என்கிற படத்தை தயாரித்து, இயக்கிய ஏ.நாராயணன், தொடர்ந்து ஞானசௌந்தரி, கோவலன், கருட கர்வபங்கம் ஆகிய படங்களை இயக்கியவர், ஆர்.பிரகாஷா இயக்கத்தில் லங்கா தகனம், கஜேந்திர மோட்சம், காந்தாரி வதம், ராஜஸ்தான் ரோஜா, நரநாராயணன், பவழராணி, பீஷ்மர் பிரதிக்ஞை, மிங்கிரேல்லியத்தாரகை அல்லது லைலா, மச்சாவதாரம் ஆகிய படங்களை தயாரித்தார்.

மேலும் ஆர்.பிரகாஷாவின் உதவியாளர் ஒய்.வி.ராவ் இயக்கத்தில் பாண்டவ நிர்வாகன், சாரங்கதாரா, போஜராஜன், பாண்டவ அஞ்ஞான வாசம், தனது உதவியாளர் ஜித்தன் பானர்ஜி இயக்கத்தில் விசவாமித்ரா, மாயா மதுசூதனன், எஸ்.கோபாலன் இயக்கத்தில் பிரமீளா அர்ஜூனன் என இருபதுக்கும் மேற்பட்ட மௌனப் படங்களை நான்கு ஆண்டுகளில் தயாரித்தார். இதனால்தான் அவரை தென்னிந்திய சினிமா தொழிலின் தந்தை என்று அழைகிறார்கள்.

சிவகங்கை ஏ.நாராயணன் தமது படங்களை, தம் சொந்தக் கம்பெனியான எக்ஸிபிடர்ஸ் பிலிம் சர்வீஸ் மூலமாகவும், அதன் பம்பாய், டில்லி, ரங்கூன், சிங்கப்பூர் கிளைகள் மூலமாகவும் விநியோகம் செய்தார். கல்கத்தாவில் அரோரா பிலிம் கார்ப்பரேஷன், வங்காள விநியோகத்தை மேற்கொண்டது.

மௌனப் படங்கள் தயாரிக்கப்பட்டு வந்த அக்காலத்தில், ஒரு முழு நீள மௌன படத்தை தயாரிப்பதற்கான அன்றைய செலவு, அதிகபட்சம் ரூ.5000 முதல் 6000/- வரை. ஆனால் திரைப்படங்களின் மீது காதல் கொண்ட ஏ.நாராயணன், 'ஜி.டபிள்யூ.எம்.ரேனால்டு எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா என்ற 20 ரீல்கள் கொண்ட திரைப்படம் தயாரிக்க ரூ.75,000/- செலவழித்தார்.

இந்தியாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட மௌனப் படம், மிங்கிரேலியத் தாரகை அல்லது லைலா. இந்தப் படம் ஒரே நேரத்தில் சென்னை வெலிங்டன் தியேட்டரிலும், பம்பாய் சூப்பர் சினிமாவிலும், ரங்கூன் சினிமா டி-பாரிஸ் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு 6 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்த வெற்றி படமாகும்.நேர்த்தியான இதன் தயாரிப்பிற்காக நாராயணன், பத்திரிக்கைகளால் அந்நாளில் பெரிதும் பாராட்டப்பட்டார்.

1929-ல் நாராயணன் கோவலனும் காற்சிலம்பும் என்ற ஒரு மௌனப் படத்தை இயக்கினார். இப்படத்திற்கான வெளிப்புறக் காட்சிகள் சென்னை துறைமுகத்தில் படமாக்கப்பட்டன.

விவசாய உணர்வு என்ற 8000 அடி துண்டு படத்தை, இம்பீரியல் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டிற்காக இவர் தயாரித்தார். பிரசவமும குழந்தை நலனும், மேக நோய் (பால்வினை நோய்) ஆகிய டாக்குமென்ட்ரி படங்களை சென்னை பொது சுகாதார இலாகாவிற்காக தயாரித்து கொடுத்தார்.

1929-ல் சென்னையில் செயல்பட்டுவந்த வர்மா எண்ணெய் கம்பெனிக் கிடங்கு தீப்பற்றி பலமணிநேரம் எரிந்தது. இதை டாகுமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டார் ஏ.நாராயணன்.

1930களில் தென்னிந்தியர்கள் தங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க பம்பாய்க்கும், கோலாப்பூருக்கும், கல்கத்தாவுக்கும், நடிக நடிகையர்கள், பாடகர்கள் உள்ளிட்ட அத்தனை கலைஞர்களோடும், பல மாதங்கள் தங்கி படத்தை முடித்துக் கொண்டு வரத் தேவையான மூட்டை முடிச்சுகளோடு போய்க் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையைப் போக்க எண்ணிய நாராயணன், ஹாலிவுட் சென்று சினிமா சவுன்ட் தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு திரும்பியவர், 'சீனிவாஸ் ஸினிடோன்' என்ற தென்னகத்தின் முதல்பேசும் பட ஸ்டுடியோவை 1934-ல் சென்னையில் உருவாக்கினார். சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட அந்த ஸ்டுடியோவுக்கு 'சப்த நகரம்', சவுண்ட் சிட்டி என்கிற பெயர்களும் கூட உண்டு.

நாராயணன் துணிச்சலுடன் பாதை அமைத்ததைக் கண்ட தென்னகப் பட முதலாளிகள், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மதராஸிலும் தமிழகத்தின் வேறுபல ஊர்களிலும் பல ஸ்டுடியோக்களைத் திறந்தனர். அவற்றில் மதராஸில் அமைக்கப்பட்ட வேல் பிக்ஸர்ஸ், நேஷனல் மூவி ஸ்டோன், மீனாட்சி மூவிடோன், நேஷனல் மூவிடோன், மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆகியவையும், மதராஸுக்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் ஸ்டுடியோ என்ற பெருமைபெற்ற வேலூர் சத்துவாச்சாரி சுந்தரபாரதி ஸ்டுடியோவும், சேலத்தின் மார்டன் தியேட்டரும், கோம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோவும் முக்கியமானவை.

இப்படி தென்னிந்திய சினிமா உலகம் மதராஸைத் தலைமையிடமாகக் கொண்டதுடன், லாபம் கொழிக்கும் பொழுதுபோக்கு வர்த்தகத் தொழிலாகத் திரைப்படத் தயாரிப்பு ஏற்றம்பெற்றது. இதற்கு சீனிவாஸ் சினிடோன் மூலம் சிவகங்கை ஏ. நாராயணன் வழிவகுத்த தன்னம்பிக்கை மிகுந்த தற்சார்பு நிலையே காரணம்.

வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் இயக்குனர் என்ற அளவில் தன் சினிமா ஆர்வத்தை நிறுத்திக்கொள்ளாத ஏ. நாராயணன், 'ஹிந்து' நாளேட்டில் சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டு, மக்கள் மத்தியில் மௌனப் படத்தின் கலை நுணுக்கங்களை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியவர்.

முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை வெளிநாட்டில் திரையிட்ட பெருமையும் ஏ.நாராயணனையே சாரும். அனார்கலி என்ற மௌனப் படத்தை எடுத்து சென்று அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் அமெரிக்கர்களுக்கு திரையிட்டு காட்டினார்.

1931-க்கு பின் பேசும் படங்கள் சென்னையில் வெளிவர ஆரம்பித்தன. இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'சவுண்ட் சிட்டி ஸ்டுடியோ' வில் சென்னையில் தயாரிக்கப்பட்ட தமிழின் முதல் பேசும் படமான சீனிவாச கல்யாணம் 1934 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து "தூக்கு தூக்கி", "தாராசசாங்கம்", "ஞானசுந்தரி", "துளசிபிருந்தா", "விக்கிரமாதித்தன்", "ராஜாம்பாள்", "விசுவாமித்ரா", "சிப்பாய் மனைவி", "விப்ரநாராயணா", "கிருஷ்ண துலாபாரம்", "ராமானுஜர்", ஆகிய படங்களை தயாரித்தார். மட சாம்பிராணி என்ற பெயரில் ஒரு நகைச்சுவை துண்டுப் படமும் இவரால் தயாரிக்கப்பட்டது.

சினிமா ஆர்வம் கொண்ட தன் மனைவி மீனாம்பாளின் திறமையைக் கண்டு அவரையும் திரைப்படத் துறையில் ஈடுபடச் செய்தார். நாராயணன் இயக்கித் தயாரித்த ‘சீனிவாச கல்யாணம்’ உட்பட ஐந்து பேசும் படங்களுக்கு மீனாம்பாள் ஒலிப்பதிவு செய்தார். திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த முதல் இந்தியப் பெண் ஆடியோகிராபிஸ்ட் என்ற பெருமை மீனாம்பாளுக்குக் கிடைத்தது.

சிறந்த இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கிய ஏ.நாராயணனிடம் பயிற்சி பெற்று பின்னாளில் பிரபல இயக்குனர்களாக உருவெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஆர்.பிரகாஷ், ஜித்தன் பானர்ஜி, பி.சி.புல்லையா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

தேர்ந்த பட விநியோகஸ்தர், திரையரங்க நிர்வாகி, இயக்குநர், தயாரிப்பாளர், சினிமாவை ஒரு தொழில்துறையாக உயர்த்த வழிகாட்டியாக விளங்கியவர் என்று பல சாதனைகளைச் செய்த சிவகங்கை ஏ.நாராயணன், 1939-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ல் மறைந்தார். ஆனால் அவர் பதித்துச்சென்ற அடிக்கற்கள் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறையாதவை.

தொகுப்பு : ஜி.பாலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக